ஆவின் என்ற பிரபலமாக அழைக்கப் படும் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைமை அலுவலகம், மாதவரம் பால்பண்ணையில் இருக்கிறது.
குஜராத்தில் ஆனந் போல லாபம் ஈட்டக் கூடிய வகையில் வளர்ந்திருக்க வேண்டிய ஆவின், நிர்வாகச் சீர்கேட்டாலும், ஊழலாலும், தள்ளாடிக் கொண்டிருக்கிறது.
1958ம் ஆண்டு ஆவின் உருவானது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பால் உற்பத்தியாளர்களை ஒருங்கிணைத்து, அவர்களுக்கு ஒரு சந்தையை ஏற்படுத்தித் தர வேண்டும் என்ற உன்னத நோக்கத்துக்காக உருவாக்கப் பட்டதுதான் ஆவின்.
ஆவின் நிறுவனம் பால் தவிரவும், பாலில் உருவாகும் பால் பவுடர், வெண்ணை, நெய், ஐஸ் க்ரீம், இனிப்புகள் போன்ற பல்வேறு பொருட்களை தயார் செய்கிறது.
தமிழகத்தில் மொத்தம் 17 மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் இணையங்கள் இருக்கின்றன. அவை அனைத்தும் சென்னையில் உள்ள ஆவின் தலைமையகத்தின் கட்டுப் பாட்டிலேயே இயங்கும்.
ஆவின் தயாரிக்கும் நெய் மிக மிக தரமானதும், மிகப் பிரசித்தி பெற்றதும் ஆகும். இந்த நெய் மூன்று வகையாக ஆவினால் வியாபாரம் செய்யப் படுகிறது. ஒன்று உற்பத்தியாகும் இடத்தின் அருகிலேயே விற்பனை செய்வது. இரண்டாவது, சென்னை நகரில் விற்பனை செய்யப் படுவது. மூன்றாவது தமிழகம் அல்லாத பிற மாநிலங்களில் விற்பனை செய்வது.
வெளி மாநில விற்பனைக்கு மட்டும் ஆவின் தலைமையகம் தான் பொறுப்பு. மாவட்ட கூட்டுறவு இணையங்கள் விற்பனை செய்வது தடை செய்யப் பட்டுள்ளது.
ஆவின் நிறுவனம், வெளி மாநிலங்களுக்கு நெய்யை விற்பனை செய்வதற்காக ஏஜென்ட்டுகளை நியமித்துள்ளது. இந்த ஏஜென்ட்டுகளையும் மாவட்ட கூட்டுறவு இணையங்கள் தொடர்பு கொள்ளக் கூடாது. இந்த விற்பனையில் ஆவின் நிறுவனத்துக்கு மொத்தம் 6 சதவிகிதம் கமிஷன். இந்த ஆறு சதவிகிதத்தில் 2 சதவிகிதம் ஏஜென்ட்டுகளுக்கு.
ஆவின் நெய், வெண்ணை மற்றும் இதர பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்ய Product Pricing Committee PPC எனும் ஒரு குழு உண்டு. இந்தக் குழுவில், ஆவின் நிர்வாக இயக்குநர், ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, மதுரை, கோவை மற்றும் உதகமண்டல மாவட்ட பால் உற்பத்தியாளர் இணையத்தின் பொது மேலாளர்கள், ஆவின் தலைமையகத்தில் உள்ள மேலாளர் (திட்டங்கள்), மேலாளர் (விற்பனை) மேலாளர் (பால் உற்பத்தி), நிதி மேலாளர் மற்றும் பொது மேலாளர் ஆகியோர் உறுப்பினர்கள். இந்தக் கமிட்டியின் வேலை சந்தை நிலவரத்துக்கு ஏற்ப ஆவின் பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்வதுதான்.
1983ம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கச் சட்டம் பிரிவு 181ன் படி, விலை நிர்ணயக் குழு நிர்ணயம் செய்த விலைக்கு குறைவாக விற்பனை செய்வது தடை செய்யப் பட்டுள்ளது.
இந்த விலை நிர்ணயக் குழு மாதந்தோறும் கூடி சந்தை நிலவரத்துக்கு ஏற்பவும், ஆவின் நிறுவனத்தின் லாபத்தை கருத்தில் கொண்டும், ஆவின் பொருட்களின் விலையை கூட்டவோ குறைக்கவோ முடிவெடுக்க வேண்டும். ஆனால் இந்தக் குழு பல ஆண்டுகளாக கூடவேயில்லை என்பதும், ஆவின் நிர்வாக இயக்குநர் எடுத்த முடிவுகளை பின்னேற்பு செய்வதற்காக மட்டுமே கூடுகிறது என்றும் தகவல்கள் கூறுகின்றன.
மேலும் இந்தக் குழு எடுத்துள்ள பல்வேறு முடிவுகள், ஏஜென்ட்டுகளுக்கு சாதகமாக இருக்கின்றன என்றும் தெரிகிறது. விலை நிர்ணயக் குழுவில் உள்ள அனைவருமே ஆவின் நிர்வாக இயக்குநருக்கு கீழ் பணி புரிபவர்கள் என்பதால், ஒருவர் கூட எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காமல், நிர்வாக இயக்குநரின் ஊழல் போக்குக்கு துணை போகிறார்கள்.
ஏஜென்ட்டுகள் தேர்வு டெண்டர் மூலம் விளம்பரம் கொடுத்து தேர்ந்தெடுக்கப் பட வேண்டும். 1993க்குப் பிறகு புதிதாக ஏஜென்ட்டுகள் நியமிக்கப் படவே இல்லை. அப்போது இருந்த ஏஜென்ட்டுகளே ஆண்டுதோறும் புதுப்பிக்கப் பட்டு வருகின்றனர்.
2007—2008ம் ஆண்டில் தீபாவளி சமயத்தில், சென்னை நகரில் ஆவின் நெய்க்கு கடும் தட்டுப் பாடு ஏற்பட்டது. உள்ளுர் தேவைகளை பூர்த்தி செய்த பிறகே வெளி மாநிலங்களுக்கு அனுப்ப வேண்டும் என்ற அடிப்படை விதியை மீறி வெளி மாநிலங்களுக்கு நெய் அனுப்பப் பட்டது.
அந்த ஆண்டு ஈரோடு பால் உற்பத்தியாளர் இணையத்தின் சார்பாக வெளி மாநிலங்களுக்கு விற்பனை செய்யப் பட்ட நெய் 1,60,375 கிலோ. ஒரு கிலோ நெய்க்கு விலை நிர்ணயக்குழு நிர்ணயம் செய்த விலை ரூபாய் 135.30. ஆனால் வெளி மாநிலத்திற்கு விற்கப் பட்ட விலை ரூபாய் 126.24. இதனால் ஈரோடு மாவட்ட பால் உற்பத்தியாளர் இணையத்திற்கு ஏற்பட்ட இழப்பு 15 லட்சம்.
2007-2008 ஆண்டில் சேலம் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் இணையம் விற்பனை செய்த மொத்த நெய்யின் அளவு 2,18,505 கிலோ. இந்த விற்பனைக்கு விலை நிர்ணயக் குழு நிர்ணயித்த விலை ஒரு கிலோ ரூபாய் 132.20. ஒரு கிலோ நெய் தயாரிக்க ஆகும் செலவு ரூபாய் 125.53. சேலம் இணையம் விற்பனை செய்த விலை ஒரு கிலோ ரூபாய் 123.35. அதாவது அடக்க விலையை விடக் குறைவாக விற்பனை செய்திருக்கிறார்கள். இந்த வகையில் ஆவினுக்கு ஏற்பட்ட இழப்பு 20 லட்சம்.
இதே போல கோவை மாவட்ட இணையம் 2007-2008 ஆண்டில் விற்பனை செய்த நெய்யின் மொத்த அளவு 89,901 கிலோ. விலை நிர்ணயக் குழு நிர்ணயம் செய்த விலை ஒரு கிலோ 136.71. விற்பனை செய்யப் பட்ட விலை 129.88. அரசுக்கு ஏற்பட்ட இழப்பு 7 லட்சம்.
இது ஆவின் நெய் மட்டுமே. இதே போல பால் பவுடர், வெண்ணை, மைசூர்பாகு, போன்ற பல்வேறு பொருட்களின் விற்பனையிலும் இதே போன்ற முறைகேடுகள் நடந்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
ஆவின் வட்டாரங்களில் விசாரித்த போது இந்த அத்தனை முறைகேடுகளும் அதன் நிர்வாக இயக்குநர் அபூர்வா வர்மா,ஐஏஎஸ் அவர்களின் உத்தரவின் படியே நடைபெறுவதாக தெரிகிறது.
ஆவின் நிறுவனம் அனைத்து மாவட்ட பால் உற்பத்தியாளர் இணையங்களுக்கும் 2407/2001-N2 என்ற எண்ணில் 16.03.2001 நாளிட்ட சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அச்சுற்றறிக்கையின் படி, விலை நிர்ணயக்குழு நிர்ணயம்செய்த விலைக்கு குறைவாக, எக்காரணம் கொண்டும் ஆவின் நெய் மற்றும் பால் பவுடர் விற்பனை செய்யக் கூடாது என்று உத்தரவிடப் பட்டுள்ளது. ஆனால், இந்த உத்தரவு காற்றில் பறக்க விடப் பட்டு ஆவினுக்கு நஷ்டம் ஏற்படுத்தும் அளவுக்கு ஊழல் நடைபெற்றுள்ளது.
இந்த விபரங்கள் எல்லாம் ஆதாரங்களோடு, ஒரு புகாராக தயாரிக்கப் பட்டு, ஒரு வழக்கறிஞர் மூலமாக லஞ்ச ஒழிப்புத் துறையின் முன்னால் இயக்குநர் ராமானுஜம் அவர்களிடம் நேரடியாக வழங்கப் பட்டது.
ராமானுஜம் இந்தப் புகார் உண்மையா என்று விசாரிக்க உத்தரவிடுகிறார். விசாரித்த அதிகாரி இந்தப் புகார்கள் உண்மை என்றும், இதை விட அதிகமாக ஊழல்கள் நடைபெற்றுள்ளன என்றும், இப்போதும் இந்த ஊழல் நடைபெற்று வருகின்றன என்றும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரிக்கலாம் என்றும் பரிந்துரை செய்கிறார்.
ராமானுஜம் என்ன செய்கிறார் தெரியுமா ? ஜுலை 2009ல் இந்தப் புகாரை துறை ரீதியான விசாரணை நடத்துமாறு அனுப்பி வைக்கிறார். எங்கே தெரியுமா ?
எந்த ஐஏஎஸ் அதிகாரி ஊழல் புரிந்திருக்கிறாரோ, யார் மீது குற்றச் சாட்டோ, அதே அபூர்வா வர்மாவிடம் இதை அனுப்பி வைக்கிறார் ராமானுஜம்.
இப்படி அனுப்புவதற்காக ராமானுஜம் ஆபூர்வா வர்மாவிடம் பணம் பெற்றுக் கொண்டார் என்று சவுக்கு குற்றம் சாட்டவில்லை.
ஆனால் இத்தனை பெரிய ஊழல் நடைபெற்றிருக்கிறது. அதை முறைப்படி விசாரிக்காமல் குற்றம் சாட்டப் பட்டவருக்கே அனுப்பி வைப்பதற்கான காரணம் தான் என்ன ?
சவுக்கின் முந்தைய பதிவுகளில் ராமானுஜத்தைப் பற்றி எழுதியிருந்ததை பார்த்த பல பத்திரிக்கையாளர்களும், சில மூத்த அதிகாரிகளும், சவுக்கு தவறாக எழுதியிருக்கிறது என்றும், ராமானுஜம் மீதான குற்றச் சாட்டுகளில் உண்மை இல்லை என்றும் சவுக்கை கடிந்து கொண்டனர்.
சவுக்கு விசாரிக்காமல், எழுதுவதில்லை என்பதை எடுத்துரைத்தும், அவர்கள் நம்ப மறுத்தனர். இப்போது ராமானுஜம் எடுத்த இந்த முடிவுக்கான காரணம் என்ன என்பதை அவர்கள் தான் விளக்க வேண்டும்.
ராமானுஜத்தின் பலமே, பசுத்தோலை போர்த்திக் கொண்டு நடமாடுவதுதான். அந்த பசுத் தோலை பார்த்து பல பேர் “நம்பி” ஏமாந்துள்ளனர். ராமானுஜம் நாயுடு இனத்தைச் சேர்ந்தவர். நாயுடு இனத்தைச் சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்திற்காக சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி ராதாகிருஷ்ணன் மீது வந்த பல புகார்களை நடவடிக்கை எடுக்காமல் மூடி மறைத்துள்ளார் என்று தகவல்கள் கூறுகின்றன.
தண்ணீரை விட ரத்தம் அடர்த்தியானது அல்லவா ?