சல்யூட்டெல்லாம் நல்லாத்தான் அடிக்கறாரு… துக்கையாண்டி குடும்பம் மேல போட்ட எப்ஐஆர்லதான் நடவடிக்கை எடுக்க மாட்றாரு…
நில அபகரிப்புப் பிரிவு என ஒரு பிரிவை உருவாக்கினாலும் உருவாக்கினார்கள்.. வசூல் வேட்டை கொடிகட்டிப் பறக்கிறது. குறிப்பாக சென்னை மாநகரக் காவல்துறையில் நில அபகரிப்புப் பிரிவில் வசூல் வேட்டையில் பின்னி எடுப்பதாகச் சொல்கிறார்கள். சென்னை மாநகரக் காவல்துறையின் மத்தியக் குற்றப்பிரிவில், டீம் 15ல் பார்த்திபன், டீம் 18ல் கனகசபாபதி மற்றும் டீம் 17ல் தேவக்குமார் என்ற மூன்று ஸ்பெஷல் சப் இன்ஸ்பெக்டர்கள் பணியாற்றுகிறார்கள். இந்த மூன்று டீம்களிலும் இவர்கள் வைத்ததுதான் சட்டம். இவர்கள் மத்தியக் குற்றப்பிரிவில் கடந்த மூன்று ஆண்டுகளாக வேலை பார்க்கிறார்கள். இடியே விழுந்தாலும் இவர்களுக்கு மட்டும் மாறுதல் வராது.
நில அபகரிப்பு என்று புகார் வந்தால், புகார் வந்ததும் நில அபகரிப்புப் புகாருக்குள்ளான நபரை தொடர்பு கொள்வது. இதோ பார் உன் மீது புகார் வந்துள்ளது, எப்ஐஆர் போட்டால் உடனே அரெஸ்ட்தான். என்ன சொல்கிறாய் என்று பேரம் தொடங்கும். நிலத்தை அபகரித்த நபர், சிறைக்குச் செல்ல பயந்து கொண்டு, பணத்தை கொடுப்பார். அப்படிப் பணத்தை வாங்கியதும், எப்ஐஆர் போட வேண்டியது இருந்தால், எப்ஐஆர் போட்டாகி விட்டது… உடனே முன்ஜாமீன் வாங்கி விடு என்று அறிவுரை கொடுப்பார்கள். இந்தத் தகவலைச் சொல்வதற்கு தனி கட்டணம். முன் ஜாமீன் ஒரு வேளை தள்ளுபடி செய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட நபர் கைதுக்குப் பயந்து, புகார் கொடுத்தவரோடு சமாதானமாகப் போக விருப்பம் தெரிவிப்பார். அப்படி விருப்பம் தெரிவித்தால், இதோ பார்… சமாதானமாகப் போனால், ஒன்று பணம் கொடுக்க வேண்டும், அல்லது நிலத்தை இழக்க வேண்டும். ஒரு பத்து நாள் சிறையில் இருந்து விட்டு, உயர் நீதிமன்றத்தில் எப்ஐஆரை ரத்து செய்ய வழக்கு போட்டால், எப்ஐஆரும் ரத்தாகி விடும், நிலமும் உனக்கு சொந்தமாகி விடும் என்று ஐடியா கொடுத்து, அந்த நபரிடம் உள்ள எல்லாவற்றையும் கறந்து விடுவார்களாம்…. இந்த மூவர் கூட்டணியை மீறி, மத்தியக் குற்றப்பிரிவில் எதுவுமே நடக்காது என்று புலம்புகிறார்கள் வசூலில் பங்கு கிடைக்காத மற்றவர்கள்… அப்படியா ?