இன்று (17.09.2012) சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில், எழுத்தாளர்கள், கலைஞர்கள், பத்திரிக்கையாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இப்பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது பேசிய கற்றது தமிழ் படத்தின் இயக்குநர் ராம், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் தொடர்பாக ஒரு கேள்விக்கு பதிலளிக்கையில், அப்துல் கலாமுக்கும் ஹிட்லருக்கும் பெரிய வேறுபாடு இல்லை என்று கூறினார்.
இன்று நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில், பேராசிரியர் கல்யாணி என்ற பிரபா கல்விமணி, எழுத்தாளர் பா.செயப்பிரகாசம், சமூக ஆர்வலர் வ.கீதா, குறும்பட இயக்குநர் ஆர்.ஆர்.சீனிவாசன், திரைப்பட இயக்குநர்கள் ராம், தாமிரா மற்றும் வெற்றிமாறன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
வ.கீதா பேசுகையில், கூடங்குளம் பகுதியைச் சேர்ந்த நான்கு சிறுவர்கள் காணாமல் போய் விட்டார்கள். அந்தச் சிறுவர்களைத் தேடி அலைந்தபோதுதான் அந்த நான்கு சிறுவர்கள் மீதும், தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்கள் சிறுவர் சிறையில் அடைக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல்துறை, சட்டத்தை காற்றில் பறக்கவிட்டு விட்டு, மனித உரிமை மீறலில் ஈடுபட்டு வருகிறது. தங்களைக் கண்டிக்க யாருமே இல்லை என்ற அடிப்படையில் காவல்துறை செயல்பட்டு வருகிறது. இதை ஜனநாயக உணர்வுள்ளவர்கள் அனைவரும் கண்டிக்க வேண்டும்.
கூடங்குளம் போராட்டத்தில் பெண்களையும் குழந்தைகளையும் ஈடுபடுத்துகிறார்கள் என்ற குற்றச்சாட்டு பரவலாக கூறப்படுகிறது. உலகெங்கும் போராட்டம் நடைபெறும் இடங்களிலெல்லாம் பெண்களின் பங்களிப்பு பெரும் அளவில் நடந்திருக்கிறது. பெண்கள் பங்கெடுக்காத போராட்டங்கள் வெற்றி பெற்றதில்லை. இன்று சிறுவர்களைப் பற்றிக் கவலையோடு பேசுபவர்கள், இந்தச் சிறுவர்கள் வன்முறைக் காட்சிகளைப் பார்ப்பதையோ, மோசமான கருத்துருவாக்கத்திற்கு ஆட்படுவதையோ பற்றிக் கவலைப்பட்டதில்லை. இந்தச் சிறுவர்கள் மிரட்டி இந்தப் போராட்டத்தில் ஈடுபடுத்தப்படவில்லை. அந்தச் சிறுவர்கள் அனைவருக்கும், கூடங்குளம் அணு உலை என்றால் என்ன, அதன் தீமைகள் என்ன என்பதைப் பற்றி நன்கு புரிய வைக்கப்பட்டிருக்கிறது. அப்படிக் கற்றறிந்த அவர்கள் இப்போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள் அதைத் தவறு என்று எப்படிச் சொல்ல முடியும் என்றார்.
குறும்பட இயக்குநர் ஆர்.ஆர்.சீனிவாசன் பேசுகையில், இந்தக் கூடங்குளப் போராட்டம் இன்று நேற்று தொடங்கியதல்ல.. 25 ஆண்டு கால போராட்டம் இது. ஏற்கனவே கூடங்குளம் போராட்டத்துக்கு எதிராக நடத்தப்பட்ட கையெழுத்து இயக்கத்தில் இயக்குநர் பாலச்சந்தர், இளையராஜா, நாசர் ஆகியோர் கையெழுத்திட்டிருக்கின்றனர்.
தொடர்ந்து இப்போராட்டம் நடைபெற்று வந்தாலும், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை இந்த அணு உலைக்கு ஆதரவாக களம் இறக்கியதன் மூலம் அரசு இப்போராட்டத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தியது என்பது ஒப்புக் கொள்ள வேண்டிய உண்மை. சென்னை உயர்நீதிமன்றம் கூட தனது தீர்ப்பில், அப்துல் கலாமே.. ஆதரவு தரும் திட்டம் என்று குறிப்பிட்டிருக்கிறது. இரண்டாவது பின்னடைவு, தமிழகத்தில் நிலவும் மின் பற்றாக்குறையை கூடங்குளம் அணு உலையோடு அரசாங்கம் வெற்றிகரமாக இணைத்தது.
தமிழகத்தில் உள்ள மின் பற்றாக்குறை என்பது செயற்கையானது. தமிழக மின் விநியோகத்தை தனியாருக்குத் தாரை வார்த்த காரணத்தாலேயே இந்த செயற்கை மின் பற்றாக்குறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. 1993ம் ஆண்டில் தமிழக அரசு கொண்டு வந்த சட்டம், ஏறக்குறைய தமிழகத்தின் மின் விநியோகத்தை தனியார்மயப்படுத்தி விட்டது. தனியார் மேலும் லாபம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கில், மின் பற்றாக்குறை செயற்கையாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.
காற்றாலை மூலமாகவும் மின் பற்றாக்குறையை சரி செய்யலாம் என்ற திட்டமும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை ஏற்படவில்லை. அதற்கு முக்கியமான காரணம், காற்றாலை மூலம் மின் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் அனைத்தும் தனியார் வசம் இருப்பதே காரணம்.
இயக்குநர் சீனு ராமசாமி பேசுகையில், இந்தியக் கடல்களுக்கும், உலகத்தில் மற்ற நாடுகளில் உள்ள கடல்களுக்கும் பெரிய வேறுபாடு உண்டு. பெரும்பாலான மற்ற கடல்கள், வருடத்தில் பாதி நாட்கள் உறை நிலையில் இருப்பதால், அவற்றில் உள்ள மீன்வளங்களை பயன்படுத்த முடியாத சூழல் உள்ளது. ஆனால், இந்தியக் கடற்பகுதியை நாம் ஆண்டு முழுவதும் பயன்படுத்த முடியும். இதன் காரணமாக நம் கடலில் வாழும் உயிரினங்களை காக்கும் பொறுப்பு நமக்கு மிக மிக அதிகமாக உள்ளது. கூடங்குளம் அணு உலை ரஷ்யா உருவாக்கியது அதனால், இந்தப் போராட்டத்துக்கு அமெரிக்கா ஆதரவு தருகிறது என்ற கூற்றெல்லாம் பொய். அணு உலை உலகின் எந்த மூலையில் இருந்தாலும், அதற்கெதிராக போராட வேண்டியது நமது கடமை. சுனாமி வரவே வராது என்று கூறினார்கள். ஆனால் சுனாமி வந்து நம்மை புரட்டிப் போட்டது. மீண்டும் ஒரு சுனாமி வராது என்பதை யாராவது உறுதியாகச் சொல்ல முடியுமா என்று கேள்வி எழுப்பினார்.
இயக்குநர் தாமிரா பேசுகையில் உணர்வுபூர்வமாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் கூடங்குளம் மக்களோடு அரசு நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை நடத்த முன் வர வேண்டும். அம்மக்களின் போராட்டத்தில் உள்ள நேர்மையை புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.
பேராசிரியர் கல்யாணி என்ற பிரபா.கல்விமணி பேசுகையில், நான் ஒரு இயற்பியல் பேராசிரியர். இயற்பியல் பேராசிரியர் என்பதால், அணு மற்றும் அதன் விளைவுகள் என்ன என்பது குறித்து எனக்கு நன்றாகத் தெரியும். அணு அறிவியலே இயற்கைக்கும் உயிரினங்களுக்கும் எதிரானது. அணு அறிவியலை நாம் முழுமையாக எதிர்க்க வேண்டும். அணு சக்தி நமது மின் தேவையில் 2.7 சதவிகிதத்தை மட்டுமே பூர்த்தி செய்யும் எனும் போது, எதற்காக நாம் இப்படி ஒரு ஆபத்தை விலை கொடுத்து வாங்க வேண்டும் ? அணு சக்தி நமது மின் தேவைகளை ஒரு நாளும் பூர்த்தி செய்யாது. கூடங்குளம் மக்களின் போராட்டம் நாளுக்கு நாள் வலுப்பெற்றுக் கொண்டு வருகிறது. அம்மக்களின் மீது காவல்துறை நடத்திய தாக்குதல் கண்டிக்கத்தக்கது.
கூடங்குளம் மக்கள் அவர்களுக்காக மட்டும் போராடவில்லை. தமிழக மக்கள் அனைவருக்காகவும் போராடுகின்றனர். தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களும், கூடங்குளம் மக்களிடம் கடமைப்பட்டுள்ளனர் என்றார்.
பா.செயப்பிரகாசம் பேசுகையில், கூடங்குளத்தில் பெண்களையும் குழந்தைகளையும் போராட்டத்தில் ஈடுபடுத்துகிறார்கள் என்ற குற்றச்சாட்டைக் கூறுகின்றனர். 1942ம் ஆண்டு, மும்பையில் கப்பற்படைக் கலகம் நடைபெற்றது. அந்தக் கப்பற்படைக் கலகத்தில் ஈடுபட்ட போராளிகளுக்கு ஆதரவாக ஒரு கூட்டம் நடைபெற்றது. எந்த நேரத்திலும் பிரிட்டிஷ் படைகள், அந்தப் போராளிகளைத் தாக்கி கைது செய்து விடுவார்களோ என்ற அச்சம் நிலவியது. அந்தப் போராளிகளைச் சுற்றி இரண்டு அரண்கள் அமைக்கப்பட்டன. முதல் அரணாக நின்றது பெண்களே. பிரிட்டிஷ் போலீஸ், அந்தப் போராளிகளைக் கைது செய்ய வேண்டும் என்றால், அந்த பெண்கள் அரணைத் தாண்டித்தான் கைது செய்ய வேண்டும் என்ற நிலை. ஆகையால், பெண்கள் போராட்டத்தில் தேவையின்றி ஈடுபடுத்தப்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு தவறு என்றார்.
இயக்குநர் வெற்றிமாறன், போராடும் கூடங்குளம் மக்களுக்கு எமது ஆதரவு எப்போதும் உண்டு என்று சுருக்கமாக முடித்துக் கொண்டார்.
இயக்குநர் ராம் பேசுகையில், உதயக்குமாரைப் போன்ற ஒரு அற்புதமான தலைவனை நான் பார்த்ததில்லை என்றார். மக்கள் போராட்டத்தை நெறியோடு வழிநடத்திக் கொண்டிருக்கும் அற்புதமான தலைவன் உதயக்குமார் என்றார். எல்லா அதிகாரங்களும் உடைய தமிழக முதல்வர் ஜெயலலிதா, அம்மக்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை வாபஸ் வாங்கி, அம்மக்களோடு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றார்.
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமே அணு உலைத் திட்டம் சிறப்பானது என்று சொல்லி விட்டாரே என்று ஒரு நிருபர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த ராம், அப்துல் கலாமை ஒரு விஞ்ஞானி என்று சொல்வதை விட, ஒரு டெக்னோக்ராட் என்று சொல்வதுதான் பொறுத்தமாக இருக்கும் என்றார். இரண்டாம் உலகப்போரில், உலகையே கைப்பற்ற வேண்டும் என்று துடித்த ஹிட்லரின் கரத்தை விஞ்ஞானிகள் வலுப்படுத்தினர். ஹிட்லருக்கு உலகையே கைப்பற்றி வல்லரசாக வேண்டும் என்பதுதான் ஆசை. வல்லரசாக வேண்டும் என்று நினைக்கும் நாடுகள் அடுத்த நாடுகளை ஆக்ரமிப்பதையே குறிக்கோளாக கொண்டிருக்கின்றன. குடியரசுத் தலைவராக இருக்கும்போதும் சரி, அதற்குப் பிறகும் சரி, இந்தியா வல்லரசாக வேண்டும், வேண்டும் என்று தொடர்ந்து பேசியும் எழுதியும் வரும் அப்துல் கலாமுக்கும், ஹிட்லருக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்றார்.
இரண்டாம் உலகப்போரில் பயன்பாட்டுக்குப் பிறகு மீதமான அம்மோனியம்தான் இந்தியாவில் உரமாக மாறி, பசுமைப் புரட்சிக்கு காரணமாக அமைந்தது. பசுமைப் புரட்சியின் தந்தை என்று அழைக்கப்படும் எம்.எஸ்.சுவாமிநாதனே இதை ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால் அவர் ஒப்புக் கொண்டபோது, நமது நிலங்கள் அனைத்தும் பாழ்பட்டு முடிந்தது. இன்று போராட்டத்தில் ஈடுபடுபவர்களை தேசத்துரோகிகள் என்கிறார்கள். யார் தேசத்துரோகிகள்… ? ஒரு நல்ல நோக்கத்துக்காக, க்வார்டர், பிரியாணி எதுவும் இல்லாமல் வருடக்கணக்கில் போராட்டம் நடத்தும் மக்களா தேசத்துரோகிகள்… ? கோடிக்கணக்கில் ஊழல் செய்து, இந்நாட்டையே கொள்ளையடித்தவர்கள் தேசத்துரோகிகளா, கூடங்கும் மக்கள் தேசத்துரோகிகளா ? அணு உலைக்கு எதிராக குரல் கொடுத்தால் தங்கள் வாக்கு வங்கிக்கு ஆபத்து என்பதால், அணு உலைக்கு ஆதரவாகப் பேசும் சிபிஐ, சிபிஎம் கட்சிகள் தேசத் துரோகிகளா… கூடங்குளம் மக்கள் தேசத்துரோகிகளா ? நாடும் இயற்கை வளமும் அழிந்து விடக் கூடாதே என்று தங்கள் உயிரைப் பணயம் வைத்துப் போராடும் கூடங்குளம் மக்கள் மட்டுமே உண்மையான தேசபக்தர்கள்.
80 வயதுக் கிழவியையும், எஸ்எம்எஸ்ஸையும், ட்விட்டரையும் பார்த்து அஞ்சும் அரசாங்கம் அரசாங்கம் அல்ல… அது மாபியா. மாபியா எப்படிச் செயல்படுமோ அப்படித்தான் அரசாங்கம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
பரமக்குடியில் ஆறு உயிர்கள் கொல்லப்படுவதற்குக் காரணமாக இருந்த ராஜேஷ் தாஸை வைத்து, கூடங்குளம் போராட்டத்தை ஒடுக்க நினைக்கும் அரசு அரசே அல்ல. மக்களை ஒடுக்கி, ஒடுக்கி அரசாங்கம் பழக்கப்பட்டுப் போய் விட்டது.
இறுதியாக மீண்டும் பேசிய கீதா, எங்களது கோரிக்கை, கூடங்குளத்தில் போடப்பட்டள்ள 144 தடைச் சட்டம் உடனடியாக வாபஸ் பெறப்பட வேண்டும், சிறை வைக்கப்பட்டுள்ள மக்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும், போராடும் மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளான, குடிநீர் உள்ளிட்ட வசதிகளைச் செய்து தர வேண்டும் என்று கூறினார்.