கூடங்குளம் அணு உலை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் புதிய வழக்கு. மத்திய அரசின் முன்னாள் செயலரான ஈ.ஏ.சர்மா, பொதுநல வழக்குகளுக்கான மையம் மற்றும் சுந்தரராஜன் ஆகியோர் இந்த வழக்கினை தொடர்ந்திருக்கிறார்கள்.
அந்த மனுவில், கூடங்குளம் அணு உலையில் ஏதாவது விபத்து ஏற்பட்டால் முழுமையான நஷ்ட ஈடு தர இயலாது என்று ரஷ்யாவோடு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்திலும், பல்வேறு தீர்ப்புகளிலும் சுற்றுச்சூழல் சேதம் அல்லது விபத்து காரணமாக ஏற்படும் சேதங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. ஆனால் கூடங்குளம் விவகாரத்தைப் பொறுத்தவரையில், விபத்து ஏற்பட்டால் அதற்கு ரஷ்யா பொறுப்பல்ல என்ற தொனியில் ஒப்பந்தம் உள்ளது.
யார் சுற்றுச் சூழலுக்கு சேதம் ஏற்படுத்துகிறார்களோ, அவர்களே முழுப் பொறுப்பு என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பு கூடங்குளம் அணு உலைக்கும் பொருந்தும் ஆனால் அதை மத்திய அரசு கவனத்தில் கொள்ளத் தவறி விட்டது. அணு உலை விபத்து தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டம், விபத்துக்கு காரணமானவர்கள் வெறும் 1500 கோடி கொடுத்தால் போதும் என்று கூறுகிறது. இதன் மூலம், ரஷ்யாவை எந்த விதமான கட்டுப்பாட்டுக்கும் ஆளாக்காமல், இந்தியா காப்பாற்றியுள்ளது. இது அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரானது.
அணு உலை விபத்து ஏற்பட்டால் அரசு பல லட்சம் கோடி இழப்பீடாக வழங்க வேண்டி வரும். அவ்வாறு வழங்குகையில் பாராளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற வேண்டும். அப்படி ஒப்புதலைப் பெறுவதற்கான வழிவகை கூடங்குளம் ஒப்பந்தத்தில் இல்லை. ரஷ்யாவைப் பாதுகாத்து, அதற்கு நிதி இழப்பீடு ஏற்படாமல், இந்திய அரசின் மீது நிதிச் சுமையை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஒப்பந்தம் மக்களுக்கு எதிரானது என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனு, வரும் வியாழனன்று ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவோடு சேர்த்து விசாரணைக்கு வரும் என்று எதிர்ப்பார்க்கப் படுகிறது.