கேடி சகோதரர்கள் கேடி சகோதரர்கள் என்று தமிழகத்தின் முக்கியமான பெரும்புள்ளிகளைப் பற்றி சவுக்கு வாசர்கள் நன்கு அறிவீர்கள். அவர்கள் யார், அவர்களால் தமிழகத்துக்கு விளையும் ஆபத்து என்ன என்பது குறித்து, சவுக்கில் கருணாநிதியை விட மிகப் பெரிய தீய சக்தி எது ? என்று ஒரு கட்டுரை 11 ஏப்ரல் 2011 அன்று வெளி வந்திருந்ததை வாசர்கள் படித்திருப்பீர்கள். 2ஜி ஊழலின் முன்னோடி, 2ஜி ஊழலின் தந்தை என்றால் அது கேடி சகோதரர்கள்தான் என்று உறுதியாகச் சொல்லலாம்.
கேடி சகோதரர்கள் முன்னால், ஆ.ராசாவெல்லாம் கத்துக் குட்டி. 2ஜி ஊழல் குறித்த செய்திகள் வெளியாகத் தொடங்கியதிலிருந்து வட இந்திய ஊடகங்களும், தென்னிந்திய ஊடகங்களும், ஆ.ராசாவை எப்படி வறுத்து எடுத்து உரித்து ஊறவைத்து உப்புக் கண்டம் போட்டன என்பது நம் அனைவருக்கும் தெரியும். ராசாவுக்கு அடுத்தபடியாக ஊடகங்களிடம் சிக்கியவர் கனிமொழி. கனிமொழியும், ராசாவும் சிறைக்குச் செல்லும் வரை, ஊடகங்கள் ஓயவே இல்லை. இதைத் தவறு என்று சொல்ல முடியாது. ராசாவும், கனிமொழியும் தங்கள் செய்த தவறுக்காக சிறை சென்றார்கள். ஆனால், அவர்கள் இருவருக்கு முன்பாகவே ஸ்பெக்ட்ரத்தில் பல கோடி ரூபாய் வருமானம் பார்த்த கேடி சகோதரர்களைப் பற்றி ஏன் ஊடகங்கள் வாய்த் திறக்க மறுக்கின்றன ? ராசா சிறை செல்வது வரை, தன்னை இந்தியாவின் மனசாட்சி என்று அழைத்துக் கொண்ட சுப்ரமணியன் சுவாமி, கேடி சகோதரர்களின் வழக்கைப் பற்றி ஏன் வாய்த் திறக்க மறுக்கிறார் ? கேடி சகோதரர்களின் உடம்பில் கலந்திருக்கும் பார்ப்பன ரத்தத்தின் காரணமாகவா என்பது சுவாமிக்கே வெளிச்சம்.
ஆனால், இந்தக் கேடி சகோதரர்கள் சிபிஐ பிடியிலிருந்து தப்பிப்பதற்கு எல்லா வேலைகளையும் பார்த்து வருகிறார்கள் என்றே தகவல்கள் கூறுகின்றன.
தீட்டிய மரத்திலேயே கூர்பார்க்கத் தயங்காத கேடி சகோதரர்கள், கருணாநிதியின் பிள்ளைகளை விட, தாங்கள்தான் உயர்ந்தவர்கள் என்பதை நிரூபிப்பதற்காகவே 2007ல் கருத்துக் கணிப்பை வெளியிட்டார்கள். எந்த அளவுக்கு கேடி சகோதரர்களுக்கு அளவில்லாத ஆசை என்றால், தமிழகத்தில் உள்ள மத்திய அமைச்சர்களிலேயே சிறந்தவர் சின்னக்கேடி தயாநிதிதானாம். ப.சிதம்பரத்திற்கு 24 மதிப்பெண்ணாம். தயாநிதிக்கு 66 மதிப்பெண்ணாம். தயாநிதிக்கு கிடைத்த எம்.பி. பதவியும், மந்திரி பதவியும், கனிமொழி போட்ட பிச்சை என்பதை கேடி சகோதரர்கள் வசதியாக மறந்தார்கள். 2004 தேர்தலில் முரசொலி மாறன் ஆக்ரமித்திருந்த மத்திய சென்னை தொகுதிக்கு யாரை நிறுத்துவது என்ற கேள்வி வரும்போது, இப்போது இருப்பது போல அறிவோடு இருந்திருந்தால், கனிமொழி எடுத்த எடுப்பிலேயே சரி என்று சொல்லியிருப்பார். ஆனால், அனுபவம் இல்லாத கனிமொழி, எனக்கு பதவி வேண்டாம் என்று சொன்னதால், அந்த வாய்ப்பு சின்னக் கேடி தயாநிதிக்கு கிடைத்தது. அந்த வாய்ப்பை எப்படியெல்லாம் பயன்படுத்தினார்கள் என்பது உலகறிந்தது. அது குறித்து பின்னால் பார்ப்போம்.
கேடி சகோதரர்களின் வளர்ச்சியே, பொய், புனைசுருட்டு, சூது, வஞ்சகம், துரோகம் இவை எல்லாவற்றாலும் ஆனது. ஆங்கிலத்தில் Putting the cart before the horse என்று சொல்லுவார்கள். அது போல திமுக என்ற கட்சியைக் கைப்பற்ற கேடி சகோதரர்கள் எடுத்த அவசர நடவடிக்கையே அந்த கருத்துக் கணிப்பு. கருணாநிதிக்கு அடுத்த வாரிசு யார் என்ற கருத்துக் கணிப்பில், முதலிடத்தில் ஸ்டாலினுக்கு 70 சதவிகிதமும், கனிமொழிக்கும், அழகிரிக்கும் தலா 2 சதவிகிதமும், மற்றவர்கள் என்று 20 சதவிகிதமும் என்று முடிவு வெளியிட்டார்கள். மற்றவர்கள் என்றால் யார்… அறிவாலயத்தின் வாட்ச்மேனா… ? அந்த மற்றவர்கள் யார் என்பது ஊருக்குத் தெரியாதா ? இன்று கல்லால் அடிபட்ட நாய், வாலை இரண்டு கால்களுக்கிடையே சுருட்டிக் கொண்டு ஓடுவது போல ஓடிக்கொண்டிருக்கும் முன்னாள் அஞ்சா நெஞ்சன் அழகிரி, அன்று தனது அடியாட்களை விட்டு, தயாநிதி மற்றும் கலாநிதி மாறன்களின் வீட்டை அடித்து நொறுக்கியிருந்தால் அவரை வீரன் என்று சொல்லலாம். தினகரன் அலுவலகத்தை அடித்து, அப்பாவி ஊழியர்களை கொலை செய்தார் அஞ்சா நெஞ்சன். அந்த மூன்று ஊழியர்கள் இறந்த அன்று, பெரிய கேடி கலாநிதி நடித்த நடிப்பை பார்க்க வேண்டுமே… செவாலியே சிவாஜி தோற்று விடுவார். அப்படி ஒரு நடிப்பு. பாதிக்கப்பட்ட ஊழியர்களிடம், உங்களுக்கு நியாயம் கிடைக்கும். அதற்கு நான் உத்தரவாதம் தருகிறேன். இதைச் சும்மா விடமாட்டேன் என்று நடித்தாரே பாருங்கள் ஒரு நடிப்பு… இதயம் இனித்து, கண்கள் பனித்ததும், தன் மேக்கப்பை கலைத்து விட்டு, யதார்த்த நிலைமைக்கு வந்தார் கலாநிதி.
கேடி சகோதரர்களின் ஆக்டோபஸ் வளர்ச்சி ஒரே நாளில் ஏற்பட்டதல்ல. படிப்படியாக, திமுக தொண்டனின் ரத்தத்தில் ஏற்பட்ட வளர்ச்சி அது. அதிமுக இரட்டைப் புறா (ஜானகி), சேவல் (ஜெயலலிதா) என்று பிரிந்து கிடந்த நிலையில், மக்கள் தற்போது கருணாநிதிக்கு மாற்றாக ஜெயலலிதாவைத் தேர்ந்தெடுத்தது போலவே 1989ல் எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு கருணாநிதியைத் தேர்ந்தெடுத்தார்கள்.
அப்போதெல்லாம் கேபிள் டிவி என்பது உருவாகாத காலம். வீடு வீடாக வீடியோ, டெக் எனப்படும் வீடியோ கேசட் ப்ளேயர்கள் வலம் வந்து கொண்டிருக்கும். தூர்தர்ஷனில், The World This Week என்று முதன் முதலாக ஒரு நிகழ்ச்சியை பிரணாய் ராய் தொகுத்து வழங்குகிறார். ஏஷியா நெட்டின் சஷிகுமார் மேனன் அதன் தயாரிப்பாளர் என்று நினைவு. அந்த The World This Week நிகழ்ச்சி, வீடியோ ஜர்னலிசத்தின் மைல்கல் என்று தாராளாக சொல்லாம். அப்படி ஒரு தரமான நிகழ்ச்சியாக அது வந்து கொண்டிருந்தது. அந்நிகழ்ச்சியின் வெற்றியைப் பார்த்து, வீடு வீடாக மாதப்பத்திரிக்கைகள் போடுவது போல, வீடியோ கேசட்டுகளை போடலாம் என்று ஒரு புதிய திட்டம் உருவாகுகிறது. இந்தியா டுடே குழுமம் என்று நினைவு. ஆங்கிலத்தில் நியூஸ்ட்ராக் என்ற வீடியோ இதழை வெளியிடுகிறது. அந்த வீடியோ கேசட், பரவலான வரவேற்பை பெறுகிறது. இந்த திட்டத்தை அப்படியே காப்பியடித்த கேடி சகோதரர்கள் பூமாலை என்று தமிழில் ஒரு வீடியோ மேகஸின் தொடங்குகிறார்கள். வீடியோ ஷுட் செய்வதற்கெல்லாம் அப்போது விலையுயர்ந்த கேமரா வேண்டும். படம் பிடிக்க கேமராமேன்களின் ஊதியம் மிக அதிகம். அதற்கு வேறு வழியின்றி செலவு செய்த கேடி சகோதரர்கள் செய்தி சேகரிப்பதற்கென தனியே ஊழியர்களை நியமிக்கவில்லை. அப்போது கேடி சகோதரர்கள் நடத்திக் கொண்டிருந்த வண்ணத்திரை, முத்தாரம், குங்குமம் போன்ற இதழ்களின் ஊழியர்கள் இந்தப் பணியையும் சேர்த்துச் செய்யச் சொல்லிக் கட்டாயப்படுத்தப் பட்டனர். சம்பளம் கொடுக்கும் விஷயத்தில் கேடி சகோதரர்கள் எவ்வளவு கப்பித்தனமானவர்கள் என்பதை உங்கள் நண்பர்கள் சன் டிவியில் பணியாற்றினால் கேட்டுப் பாருங்கள். கப்பி என்றால் கப்பி… அவ்வளவு கப்பி.
பூமாலை வீடியோ மேகசின் 1990ல் வெளியானதும், யாரும் அதைச் சீண்டவில்லை. விலை கொடுத்து கேசட்டுகள் தயாரித்து அதை யாருமே வாங்கவில்லை என்றால் நஷ்டத்தை எப்படி பொறுத்துக் கொள்வார்கள் கேடி சகோதரர்கள் ? இருக்கவே இருக்கிறது தாத்தாவின் காவல்துறை. அப்போது தொழிலில் கொடிகட்டிப் பறந்தவை வீடியோ கேசட்டுகளை வாடகைக்கு விடும் கடைகள். அந்தக் கடைகளில் பூமாலை கேசட்டுகளை வாங்கி விற்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டது. மறுக்கும் வீடியோ கடைகாரர்களின் கடைகளில் நீலப்படம் வைத்திருந்ததாக காவல்துறையின் திடீர் சோதனைகள் நடைபெற்றன.
1991ல் ராஜீவ் மரணத்தில் ஏற்பட்ட அனுதாப அலையால் பதவிக்கு வந்த ஜெயலலிதா ஆட்சியில், பூமாலை வாடி வதங்கி உதிர்ந்து போனது. ஜெயலலிதா ஆட்சியில் கேடி சகோதரர்களின் திட்டங்கள் எடுபடவில்லை.
வட இந்தியாவில் சுபாஷ் சந்திரா ஜீ தொலைக்காட்சியைத் தொடங்குகிறார். சஷிகுமார் மேனன், வெளிநாட்டு வாழ் மலையாளிகளுக்காக நான்கு மணி நேர மலையாள நிகழ்ச்சியை தயாரிக்கும் வாய்ப்பு கிடைக்கப் பெறுகிறார். இதே போல தமிழில் நான்கு மணி நேர நிகழ்ச்சி தயாரித்துத் தருமாறு, ஏற்கனவே பூமாலை நடத்திய அனுபவம் இருந்ததால் கேடி சகோதரர்களை நிகழ்ச்சித் தயாரித்துத் தருமாறு கேடி சகோதரர்களின் டாடி முரசொலி மாறனிடம் கேட்கிறார். முரசொலி மாறனோ… நான் என்ன உனக்கு நிகழ்ச்சி தயாரித்துத் தருவது…. நான் நேரடியாகவே பேசிக் கொள்கிறேன் என்று சம்பந்தப்பட்ட வெளிநாட்டு தயாரிப்பு நிறுவனத்திடம் பேசி, புதிய தொலைக்காட்சிச் சேனலைத் தொடங்குவதற்கே வாய்ப்பு ஏற்படுத்துகிறார்.
சன் டிவி ஏப்ரல் 1993ல் உருவாகிறது. சேனல் உருவானாலும், மாதற்தோறும் கொடுக்க வேண்டிய ட்ரான்ஸ்பாண்டர் வாடகையை சன் நிறுவனத்துக்கு வரும் வருமானத்தால் ஈடுகொடுக்க முடியவில்லை. விளம்பரங்களும் போதிய அளவில் வரவில்லை. கடன் வாங்கித்தான் சேனலை நடத்த வேண்டிய நிலை. இந்தியன் வங்கியை அணுகினால், அவர்கள் அப்போது புதிதாக தொடங்கப்பட்ட சன் டிவிக்கு கடன் தர மறுத்து விட்டார்கள்.
கழகம் ஒரு குடும்பம் போன்றது என்று கருணாநிதி அடிக்கடி சொல்வது கருணாநிதியின் மனசாட்சியான முரசொலி மாறனுக்குத் தெரியாதா ? திமுக உடன்பிறப்புக்கள் கட்சிக்காக கொடுத்த பல கோடி ரூபாய் நிதியை, மந்தைவெளியில் உள்ள கும்பகோணம் சிட்டி யூனியன் வங்கியில் முதலீடு செய்கிறார்கள். அந்த முதலீட்டின் பேரில் வாங்கிய கடனில்தான் சன் டிவி நடைபெற்றது.
வி.பி.சிங் அரசில் அமைச்சராக இருந்த முரசொலி மாறனுக்கு பல்வேறு தொழில் அதிபர்களோடு நெருக்கமான நட்பு ஏற்பட்டது. அந்த நட்பை பலமாகப் பயன்படுத்திக் கொண்ட மாறன், ஒரு தொழில் அதிபருக்கு பரிசாகக் கிடைத்த ட்ரான்ஸ்பாண்டரை தனக்குத் தரும்படி கேட்டுப் பெற்றுக் கொள்கிறார். அந்த ட்ரான்ஸ்பான்டர் மூலமாகத்தான் சன் ஒளிபரப்பப் பட்டது. அப்போது இருந்த ஜெ.ஜெ டிவி இது போன்ற தில்லாலங்கடி வேலைகள் தெரியாததன் காரணமாகத்தான் அந்நியச் செலாவணி மோசடியில் சிக்கினர். சன் டிவியின் பங்குதாரர்களாக தயாளு அம்மாள், முரசொலி மாறன், மல்லிகா மாறன், கேடி சகோதரர்கள் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். சன் டிவியின் அலுவலகம், முரசொலி அலுவலக வளாகத்திலேயே செயல்பட்டது.
சன் டிவி தொடங்கப்பட்ட பிறகு பெரிய அளவில் பிரகாசிக்க முடியாவிட்டாலும், தமிழில் தொடங்கப்பட்ட முதல் சேனல் என்பதால், அது ஓரளவுக்கு வரவேற்பைப் பெற்றது. தூர்தர்ஷனை விட்டால் வேறு சேனலே இல்லை என்பதால், அந்த இடத்தை சன் டிவி ஆக்ரமித்தது. 1991-1996 ஜெயலலிதா ஆட்சி, சன் டிவியின் வளர்ச்சிக்கு பெரிய அளவில் உதவியது. நீதிபதி மருமகன் மீது கஞ்சா வழக்குப் போட்டது, சந்திரலேகா ஐஏஎஸ் முகத்தில் ஆசிட் வீசியது, 100 கோடி ரூபாய் வளர்ப்பு மகன் திருமணம் போன்ற செய்திகளை தூர்தர்ஷன் கவல் செய்யாத காரணத்தால் சன் டிவியின் பக்கம் மக்கள் திரும்பினர். வளர்ப்பு மகன் திருமணத்தில் வீடியோ எடுத்தார் என்ற காரணத்தால், சன் டிவியின் கேமராமேன் கண்ணன் என்பவரை, ஜெயலலிதாவின் விசுவாசமான அடிமை விஜயக்குமார் ஐபிஎஸ் கைது செய்தார். இந்த விவகாரத்தை சன் டிவி பெரிய அளவில் எடுத்தச் சென்றதும் சன் டிவியின் வளர்ச்சிக்கு உதவியாக அமைந்தது. தற்போது அதிமுகவின் அடிமைகள் சங்கத்தில் உறுப்பினராகி ராஜ்ய சபை எம்.பியாக இருக்கும் ரபி பெர்நார்ட், அப்போது சன் டிவியின் மிகப் பிரபலமான நிகழ்ச்சி நடத்துபவர்.
மத்திய அரசின் தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சராக கேடி சகோதரர்களின் டாடி நியமிக்கப்பட்டதும், சன் டிவியின் விளம்பர வருவாய் பல மடங்கு பெருகியது. தொழில் அதிபர்களை மிரட்டி, சன் டிவிக்கு விளம்பரம் தருமாறு நெருக்கடி தரப்பட்டது.
சன் டிவி தொடங்கிய ஒரு சில ஆண்டுகளிலேயே பல்வேறு திரைப்படங்களின் உரிமையை வைத்திருந்த ராஜ் வீடியோ விஷன், ராஜ் டிவியை தொடங்கியது. அப்போதெல்லாம் கேபிள் டிவி ஒளிபரப்புவதென்றால் வடை சுடும் சட்டியைப் போன்ற பெரிய டிஷ்களை வீட்டின் மாடியில் வைத்து, அதிலிருந்து கேபிளில் ஒளிபரப்ப வேண்டும். இலவசமாக பல்வேறு சேனல்களைக் கொடுத்துக் கொண்டிருந்த ஸ்டார் குழுமம், தங்கள் சேனல்களைப் பெறுவதற்கு பணம் கட்ட வேண்டும் என்ற பே சேனல் முறையைக் கொண்டு வருகிறது. இந்த பே சேனல் முறை அமலுக்கு வந்ததும், வெறும் தொலைக்காட்சிச் சேனலை மட்டும் வைத்தால் போணியாகாது என்பது புரிந்த கேடி சகோதரர்கள், 2000 ஆண்டில் சுமங்கலி கேபிள் விஷன் என்ற கேபிள் விநியோக நிறுவனத்தை தொடங்குகிறார்கள். அது வரை தமிழகத்தில் கேபிள் விநியோகம் ஆங்காங்கே இருந்த சிறு சிறு ஆபரேட்டர்களால் தனித்தனியாக நடத்தப்பட்டுக் கொண்டிருந்தது. இதை ஒருமுகப்படுத்தி சென்னை நகரில் பெரும்பாலான பகுதிகளில் கேபிள் டிவி சேவையை வழங்கிக் கொண்டிருந்தது ஹாத்வே என்ற நிறுவனம். ஹாத்வே நிறுவனம் தொடர்ந்து செயல்பட்டால், தங்கள் தொழிலுக்கு ஆபத்து என்பதைப் புரிந்த கேடி சகோதரர்கள், தமிழகமெங்கும் உள்ள கேபிள் டிவி ஆபரேட்டர்களை அழைத்து, தனித்தனியே தொழில் நடத்த வேண்டாம் எங்களோடு இணைந்து தொழில் நடத்துங்கள் என்று மிரட்டுகிறார்கள். கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு வேறு வழியே இல்லை. தனித்தனியே அவர்களால் ஸ்டார் குழுமத்துக்கு பணம் கொடுக்க முடியாது. இணைய மறுத்தால் தொழிலை மூடி விட்டுப் போக வேண்டும்.
இணைய மறுக்கும் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் காவல்துறையால் மிரட்டப்பட்டார்கள். தாத்தாவின் காவல்துறை கேடி சகோதரர்களின் சேவைக்கில்லாமல் வேறு எதற்கு ? ஹாத்வே நிறுவனத்தினர் உயர் அழுத்தக் கம்பி வட இணைப்பின் மூலம், கேபிள் மற்றும் இன்டெர்னெட் இணைப்பு கொடுக்க உத்தேசித்து அதற்கான வேலைகளில் இறங்கிய போது, அப்போது சென்னை மாநகராட்சியின் மேயராக இருந்த தங்கள் மாமா ஸ்டாலினை வைத்து, அனுமதி மறுத்தனர். மீறி கேபிள் இணைப்பு கொடுக்கப்பட்ட இடங்களில் இணைப்புகள் அறுத்தெறியப் பட்டன. ஒரு சில ஆண்டுகளில், ஹாத்வே மொத்த கூடாரத்தையும் காலி செய்து விட்டு, சென்னையை விட்டே ஓடியது.
எஸ்.சி.வி மூலமாக தமிழகத்தின் ஒட்டுமொத்த கேபிள் சாம்ராஜ்யத்தையும் தங்கள் வலைக்குள் கொண்டு வந்தார்கள் கேடி சகோதரர்கள். தமிழில் சேனல் தொடங்க வேண்டுமென்றால் எஸ்.சி.வி நிர்ணயித்ததுதான் விலை. அவர்கள் வைத்ததுதான் சட்டம். அதை மீறினால் சேனலுக்கு பெரிய பூட்டு போட வேண்டியதுதான். இவர்களின் அதிகாரத்தின் காரணமாக, தமிழில் தொலைக்காட்சிச் சேனல் தொடங்க முடியாமல் ஓடியவர்களின் பட்டியல் பெரியது.
முரசொலி மாறன் மறைவுக்குப் பிறகு 2004ல் மத்திய சென்னை பாராளுமன்றத் தொகுதியில் யாரை நிறுத்தலாம் என்ற விவாதம் நடக்கிறது. கருணாநிதி மத்திய சென்னைத் தொகுதியில் நிறுத்த விரும்பியது, கனிமொழியைத்தான். இரண்டாவது குடும்பத்தின் தொடர்ந்த நச்சரிப்புகள் காரணமாகவும், கனிமொழிக்கு அரசியல் ரீதியாக ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காகவுமே, கனிமொழியை அந்த இடத்தில் போட்டியிடச் சொன்னார். கனிமொழிக்கு அப்போது அரசியலில் ஆர்வம் இல்லை. இலக்கிய உலகில், ஒரு பெரிய இடத்துக்கு வரவேண்டும் என்பதையே தன் வாழ்வின் லட்சியமாகக் கொண்டிருந்தார். தன் தந்தையைப் போல, தமிழ் பேசியே தமிழ்நாட்டை சூறையாடலாம் என்று திட்டமிட்டிருந்தாரோ என்னவோ தெரியவில்லை. மத்திய சென்னைத் தொகுதியில் போட்டியிட விருப்பமில்லை என்று தெரிவித்து விட்டார். அந்த இடத்தை சின்னக் கேடி தயாநிதிக்குத் தர வேண்டும் என்று, சிஐடி காலனியிலேயே கேடி சகோதரர்கள் தவமாய்த் தவமிருந்தார்கள். அவர்கள் தவத்தின் பலனாக, ராசாத்தி அம்மாள் கேடி சகோதரர்களின் விஷத்தன்மை அறியாமல் அந்தப் பாம்புகளுக்கு பால் வார்த்தார்.
2004 பாராளுமன்றத் தேர்தலும் வந்தது. ஜெயலலிதா “மிகச் சிறப்பான முறையில்” நடத்திய ஆட்சியால் தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியின் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. குறைவான சீட்டுகளையே பெற்று காங்கிரஸ் ஆட்சி அமைத்திருந்ததால், ஆட்சி அமைப்பதற்கும், தொடர்ந்து பதவியில் நீடிப்பதற்கும் திமுகவின் தயவிலேயே இருந்தது காங்கிரஸ். தனது எம்.பிக்கள் எண்ணிக்கையால், மத்திய அரசையே தன் விரலசைவில் வைத்தார் கருணாநிதி. கருணாநிதி சொன்னவர்தான் மந்திரி. கருணாநிதி வேண்டிய இலாக்கா கொடுக்கப்பட வேண்டும். நினைத்ததை நடத்தினார் கருணாநிதி.
மத்திய மந்திரியாக தன் ரத்த சொந்தம் யாராவது ஆக வேண்டும் என்பதற்காக கருணாநிதி தேர்ந்தெடுத்த நபர்தான் தயாநிதி மாறன். கட்சியில் எவ்வளவோ மூத்தவர்கள் இருக்க, இப்போதுதான் கட்சியில் சேர்ந்த தயாநிதி மாறனை கேபினெட் மந்திரியாக்க பரிந்துரைக்கிறீர்களே என்று பத்திரிக்கையாளர்கள் கேட்டபோது, கருணாநிதி சொன்ன பதில் “விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதற்கேற்ப தயாநிதியின் திறமையை நான் சிறு வயதிலேயே பார்த்திருக்கிறேன் என்பதுதான்.”
சிறிய வயதில் கருணாநிதி பார்த்த அந்த திறமை, சவுக்கு கண்களுக்குத் தென்படவில்லை. உங்களுக்குத் தெரிகிறதா என்று பார்த்துச் சொல்லுங்கள் வாசகர்களே…
கருணாநிதி தான் ஒரு வரலாற்றுத் தவறைச் செய்கிறோம் என்பதை அப்போது உணரவில்லை.
தொடரும்.
1 Response
[…] கால வரலாற்றை சவுக்கு தளத்தில் கேடி சரித்திரம் என்ற கட்டுரையில் படித்துத் தெரிந்து […]