அதிர்ச்சியாக இருக்கிறதா… இப்படி ஒரு செய்தியை ஊடகங்களில் விரைவில் பார்த்தால் அதிர்ச்சியடையாதீர்கள். அதற்கான வேலையை உளவு நிறுவனங்கள் செய்து கொண்டிருப்பதாகத் தகவல்கள் வருகின்றன.
இன்றைய செய்தித்தாள்களில் பெரிய அளவில் வந்திருக்கக் கூடிய ஒரு செய்தி பாகிஸ்தானுக்கு ராணுவ ரகசியங்களை கடத்த முயன்ற தீவிரவாதி திருச்சியில் கைது என்பது. அச்செய்தி என்னவென்றால் 35 வயதான தமீம் அன்சாரி என்பவர் தஞ்சாவூர் மாவட்டம் அதிராமபப்பட்டினத்தைச் சேர்ந்தவர். திருச்சி விமான நிலையம் வழியாக கொழும்பு செல்ல இருந்தபோது தமீம் அன்சாரியை திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே க்யூ பிரிவு போலீசாரும், மாநில உளவுப் பிரிவு காவல்துறையினரும் சுற்றி வளைத்துப் பிடித்தனர்.
கைதான தமீம் அன்சாரி ஊட்டியில் உள்ள வெலிங்டன் ராணுவ பயிற்சி மையம், நாகப்பட்டினம் துறைமுகம், பாராச்சூட்டிலிருந்து குதித்து ராணுவத்தினர் பயிற்சி எடுப்பது ஆகியவற்றின் வீடியோக்களை வைத்திருந்தார்.
அவர் விசாகப்பட்டினத்தில் உள்ள இந்தியக் கடற்படைத் தளத்தையும் படமெடுக்கத் திட்டமிட்டிருந்தார். இது குறித்துப் பேசிய க்யூ பிரிவு எஸ்.பி சம்பத் குமார், இந்தியாவின் முக்கிய ராணுவத் தளங்கள் இருக்கும் இடத்தின் விபரங்களை தெரிந்து கொள்ள முயற்சித்துள்ளார். இது மிக மிக ஆபத்தானது. கைதான தமீம் அன்சாரி, இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் மூலமாக இவர் ரகசியங்களை கடத்த முயற்சி செய்துள்ளார் என்று கூறியுள்ளார்.
மற்றொரு உயர் அதிகாரி பேசுகையில், இவரை டிவிடியோடு கையும் களவுமாக பிடித்துள்ளோம். இந்திய ராணுவ அதிகாரிகளின் பதவிகளின் சின்னங்களை இவர் வைத்துள்ளார் என்று தெரிவித்துள்ளார்.
இந்த மற்றொரு உயர் அதிகாரி வேறு யாருமல்ல. ஆபாஷ் குமார் ஐபிஎஸ். அவர்தான் உள்நாட்டுப் பாதுகாப்பு உளவுப் பிரிவுக்கு ஐஜி.
இவர்கள் இந்த உளவாளியிடமிருந்து பிடித்ததாகக் கூறப்படும் வீடியோக்கள் மற்றும் ராணுவ அதிகாரிகளின் பதவிகளின் சின்னங்கள், கூகிளில் தேடினாலே கிடைக்கும். வெலிங்டன் ராணுவ பயிற்சி மையம் ஒன்றும் அப்படி ரகசியமான இடம் அல்ல. பாராசூட்டிலிருந்து குதிக்கும் ராணுவ வீரர்களை ஊட்டிக்கு சுற்றுலா செல்லும் பயணி கூட படமெடுக்கலாம்.
ராணுவ உளவாளிகள் இந்தியாவில் கைது செய்யப்படுவது ஒன்றும் புதிதல்ல. உளவாளிகள் எப்போதும் இந்த வேலைகளைத்தான் செய்வார்கள். அவர்கள் இந்திய கவுன்டர் இன்டெலிஜென்ஸ் யூனிட்களால் பிடிக்கப்படவும் செய்வார்கள். ஆனால் அவ்வாறு பிடிக்கப்படும்போது, அது குறித்த எந்தத் தகவலையும் வெளியிட மாட்டார்கள். செய்தித்தாளில் பணியாற்றுபவர்களும், தொலைக்காட்சி சேனல்களின் நிருபர்களும் இந்த அதிகாரிகளிடம் கெஞ்ச வேண்டும்.. போனில் பேசினால், நான் இப்போது பிசி, அப்புறம் பேசுங்கள் என்று கூறி விடுவார்கள்.
அடிக்கடி இது போல உளவு பார்ப்பவர்கள் பிடிபடுவது வழக்கமே என்றாலும், அந்த விஷயங்கள் நமது கவனத்திற்கு வராமலேயே மறைக்கப்படும். இரவோடு இரவாக விஷயத்தை முடித்து விடுவார்கள்.
ஆனால், இந்த விவகாரத்தில் விசித்திரமான அம்சம் என்னவென்றால், காவல்துறை அதிகாரிகள் கேட்காமலேயே விபரங்களைத் தருகிறார்கள். புகைப்படங்களை சம்பந்தப்பட்ட நிருபர்களின் ஈமெயில் முகவரிகளுக்கு அனுப்பி வைக்கிறார்கள்.
ஒரு நாளும் போனை எடுத்த பத்திரிக்கையாளர்களிடம் பேசாத, ஆபாஷ் குமார், வள வளவென்று பேசுகிறார்.
விபரம் என்னவென்று தஞ்சை மாவட்டத்தில் விசாரித்தபோது, இந்த தமீம் அன்சாரியை ஒரு வாரத்திற்கு முன்பாகவே டெல்லி உளவுத்துறையினர் பிடித்து விசாரித்து வருகின்றனர். ஒரு வாரத்துக்கு முன்பே கைது செய்யப்பட்டாலும், அன்சாரியை நேற்று இரவு திருச்சி டோல்கேட்டில் வைத்து கைது செய்ததாக தகவல் வெளியிட்டுள்ளனர்.
புதுதில்லியில் உள்ள மத்திய உளவுப் பிரிவு (Intelligence Bureau) அதிகாரிகள், டெல்லியில் உள்ள தொலைக்காட்சிச் சேனல்களை அழைத்து, கைதான பாகிஸ்தான் உளவாளிக்கும், உதயக்குமாருக்கும் தொடர்பிருப்பதாக செய்திகளைப் பரப்பிக் கொண்டிருக்கின்றனர். இது டெல்லி வட்டாரத்தில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெளிநாட்டிலிருந்து உதயக்குமார் பணம் வாங்கினார், கூடங்குளம் போராட்டத்துக்கு தொடர்ந்து வெளிநாட்டிலிருந்து பணம் வருகிறது என்று மத்திய உளவுப்பிரிவாலும், காவல்துறையாலும் கிளப்பி விடப்பட்ட பல்வேறு வதந்திகளை மக்கள் நம்பாத காரணத்தாலும், உதயக்குமாருக்கும், கூடங்குளம் அணு உலைக்கெதிரான போராட்டத்திற்கும் ஆதரவு தொடர்ந்து பெருகி வரும் நிலையில், அந்தப் போராட்டத்திற்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்துவதற்காகவே, மத்திய உளவுப் பிரிவு தமீம் அன்சாரியைக் கைது செய்து, அவரை கூடங்குளம் போராட்டத்தோடு தொடர்புப் படுத்த முயற்சி செய்து வருவதாகத் தெரிகிறது.
கூடங்குளம் அணு உலைக்கெதிரான போராட்டத்தை முறியடிக்க, ஆளும் வர்க்கம் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் இறங்கும் என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம்.