உயர்நீதிமன்ற நீதிபதி பதவி என்பது ஏறக்குறைய சர்வ வல்லமை படைத்தது. இந்திய அரசியலமைப்பின் பிரிவு 226 என்பது, அத்தனை அதிகாரங்களையும் உயர்நீதிமன்றத்துக்கு வழங்குகிறது.
நீதிபதிகள் என்பவர்கள் பாரபட்ச மற்றவர்களாக நேர்மையானவர்களாக இருக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்ப்பார்ப்பு. அதனால்தான், ஆங்கிலேயர் காலம் முதல், பிரபுவே என்று பொருள்படும், மை லார்ட் என்று நீதிபதிகளை அழைக்கிறார்கள். இந்த நீதிபதிகளுக்கு சட்டத்தின் மாட்சிமையை தூக்கிப் பிடிக்கும் பொறுப்பு உண்டு. அதனால்தான் இன்று எல்லா விழுமியங்களையும் இழந்து நம்பிக்கை இன்றி நிற்கும் சமூகம், நீதிமன்றத்தை இன்னும் நம்புகிறது.
இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகள் சமூகத்தில் சிறப்பு வாய்ந்தவர்கள் என்ற பிரிவின் கீழ் அரசு சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் கருணாநிதியிடமிருந்து வீட்டு மனை பெற்றிருக்கிறார்கள் என்ற விபரம் வெளி வந்துள்ளது. இந்த செய்தி மிக மிக வருத்தமளிப்பதாக உள்ளது.
அந்த நீதிபதிகள் ராஜா இளங்கோ, கே.என்.பாஷா, எஸ்.கே.கிருஷ்ணன் மற்றும் ஆறுமுகப் பெருமாள் ஆதித்தன். இதில் எஸ்.கே.கிருஷ்ணன் மற்றும் ஆறுமுகப் பெருமாள் ஆதித்தன் ஆகியோர் ஓய்வு பெற்று விட்டார்கள். ஆறுமுகப் பெருமாள் ஆதித்தன் தற்போது ராணுவத்தினருக்கான தீர்ப்பாயத்தில் நீதிபதியாக உள்ளார்.
ராஜா இளங்கோ, நீதிபதியாவதற்கு முன்பே ஒதுக்கீடு பெற்றுள்ளார். அவருக்கு ஒதுக்கப் பட்ட பிரிவு “சமூகத்தில் சிறப்பு வாய்ந்தவர்“ என்ற பிரிவு. இவருக்கு சென்னை நொளம்பூர் திட்டத்தில் D.269, D.270 மற்றும் D.271 என மூன்று மனைகள். மற்ற நீதிபதிகளான ஆறுமுகப் பெருமாள் ஆதித்தனுக்கு திருவான்மியூரில் A.16 என்ற மனை. நீதியரசர் எஸ்.கே.கிருஷ்ணனுக்கு திருவான்மியூரில் A.4 என்ற மனை. அனைத்து நீதியரசர்களுமே, சமூகத்தில் சிறப்பு வாய்ந்தவர் என்ற பிரிவின் கீழ் ஒதுக்கீடு பெற்றுள்ளார்கள்.
விருப்புரிமை ஒதுக்கீடு என்பது சும்மா வந்து விடாது. இதற்காக நீங்கள் தமிழக அரசுக்கு நான் சமூகத்தில் சிறப்பு வாய்ந்தவன் என்றோ, சமூக சேவகர் என்றோ மனு ஒன்றை அனுப்ப வேண்டும்.
அந்த மனுவில் கருணாநிதி உத்தரவுக்குப் பின் வீட்டு மனையோ, அடுக்கு மாடி வீடோ ஒதுக்கப் படும். இவ்வாறு ஒதுக்கப் படும் மனை உங்களுக்கு அரசு வழங்கும் சலுகையே அன்றி வேறு இல்லை.
கருணாநிதியின் கேவலமான புத்தியை இந்த நீதிபதிகள் அறிந்திருப்பார்களா என்று தெரியவில்லை.
ஒரு சில பத்திரிக்கையாளர்கள் கருணாநிதியிடம் கையேந்தி வீட்டு மனை பெற்று விட்டதால், ஒட்டு மொத்த பத்திரிக்கை சமூகத்தையும் இழிவு படுத்தி நேற்று கருணாநிதி வெளியிட்டிருக்கும் அறிக்கையை பாருங்கள்.
“வீட்டு வசதி வாரியத்தின் சார்பில் இது போல வாடகை வீடுகளே கூட விருப்புரிமை அடிப்படையில் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட அரசியல் கட்சிகளைச் சார்ந்த சிலருக்கே ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. இன்னும் சொல்லப் போனால் எந்தவிதமான முக்கியத்துவமும் இல்லாத இந்த தகவலை பெரிதாக்கி, உள்நோக்கத்தோடு, செய்திகளை சில பத்திரிக்கையாளர்கள் வெளியிட்ட போதிலும், அனைத்துப் பத்திரிக்கையாளர்களும் வீட்டு வசதி பெற வேண்டுமென்ற எண்ணத்தோடு கழக அரசு எவ்வப்போதெல்லாம் பொறுப்புக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் பத்திரிக்கையாளர்களுக்கே என்று சலுகை விலையில் சென்னை, திருச்சி, சேலம், கோவை, மதுரை போன்ற முக்கிய நகரங்களில் வீட்டு மனைகள் அரசின் சார்பில் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளன.”
நேரடியாக நடைபெறாவிடினும், மறைமுகமாக இது போல நீதிபதிகளையும், கருணாநிதி சுட்டிக் காட்ட வாய்ப்பு உள்ளதா இல்லையா ? இதற்கு நீதியரசர்கள் இடம் தரலாமா ?
நீதியரசர் கே.என்.பாட்சா, தனது மனையை திருப்பித் தந்திருந்தாலும் கூட, அரசுக்கு விருப்புரிமை ஒதுக்கீட்டில் மனை ஒதுக்கீடு செய்யுங்கள் என்று கேட்டதே, தவறு என்று சவுக்கு பார்க்கிறது.
இந்த நீதியரசர்களுக்கு, இரண்டு க்ரவுண்டு நிலத்தில் அழகாக கட்டப் பட்ட பங்களாக்கள், நீதிபதியாக இருக்கும் வரை குடியிருக்க வழங்கப் படும் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
தங்கள் மீது உள்ள இந்த களங்கம் மறைய, இந்த நீதியரசர்கள், தங்களுக்கு விருப்புரிமை அடிப்படையில் ஊழல் மன்னன் கருணாநிதியால் ஒதுக்கப் பட்ட வீட்டு மனைகளை அரசிடம் திருப்பி அளிக்குமாறு, சவுக்கு பணிவுடன் கேட்டுக் கொள்கிறது.