It is best to be both feared and loved, however, if one cannot be both it is better to be feared than loved.”
By suggesting this, he is saying that this is because a ruler that is well-loved is not always well-respected and is at risk of losing control, especially because of the devices of others. By instilling fear while at the same time avoiding unnecessary cruelty, the ruler is able to maintain power and perhaps at the same time still have the respect of his constituents.
அரசனுக்கான தகுதிகளாக மாக்கியவல்லி தி ப்ரின்ஸ் நூலில் சொல்வது இது. ஒரு அரசன், அன்பால் ஆள்வதை விட பயத்தால் ஆள்வதே சாலச் சிறந்தது என்று சொல்கிறார்.
இன்னொசென்ஸ் ஆஃப் முஸ்லீம்ஸ் என்று ஒரு திரைப்படம் உலகெங்கும் ஏற்படுத்தி வரும் சர்ச்சைகளை நாம் கடந்த சில நாட்களாக கவனித்து வருகிறோம். லிபியாவில் உள்ள பெங்காஸியில் நடந்த தாக்குதலில், லிபியாவுக்கான அமெரிக்க தூதர் உள்ளிட்ட நான்கு அமெரிக்கர்கள் கொல்லப்பட்டனர்.
சென்னையில் தமிழக முஸ்லீம் முன்னேற்றக் கழகம் நடத்திய ஆர்ப்பாட்டத்தில், அமெரிக்கத் துணைத் தூதரகம் தாக்கப்பட்டது. வரலாறு காணாத அளவுக்கு பாதுகாப்போடு இருக்கும் அமெரிக்கத் தூதரகம் தாக்கப்பட்டது, சென்னை மாநகர ஆணையாளர் திரிபாதி தன் பதவியை இழக்கும் சூழலுக்கு இட்டுச் சென்றது.
அந்தப் படத்தில் என்னதான் உள்ளது ? இசுலாமியர்கள் என்று இல்லாமல், பொதுவாகவே, உலகத்தில் படைப்பாளிகள் மத அடிப்படைவாதிகளால் எப்போதுமே அச்சுறுத்தலுக்கு ஆளாகி உள்ளனர். சல்மான் ருஷ்டி, தஸ்லீமா நஸ் ரீன் போன்றோர்கள் இதற்கு உதாரணம். எம்.எஃப் ஹுசைன் சரஸ்வதி தேவியின் படத்தை நிர்வாணமாக வரைந்ததற்காக, இந்து மதத் தீவிரவாதிகளால் தாக்கப்படும்போது அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் இஸ்லாமியர்கள், தஸ்லீமா நஸ்ரினுக்கு எதிராக இஸ்லாமியர்கள் வன்முறையில் இருந்தபோது அதைக் கண்டிக்கத் தவறும் இரட்டை நிலைபாடும் உள்ளது.
ஒரு படைப்பாளியின் சுதந்திரத்தை எந்த மத அடிப்படைவாதம் தடுத்தாலும் அல்லது முடக்கினாலும், அதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டியது, கருத்துச் சுதந்திரத்தை ஆதரிக்கும் ஜனாயகவாதிகளின் கடமை.
அதே நேரத்தில் அந்தப் படைப்பில் மத உணர்வுகளை புண்படுத்தவேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் ஒரு படைப்பை உருவாக்கினால்…. ?
இன்னசென்ஸ் ஆஃப் முஸ்லீம்ஸ் என்ற திரைப்படம் இந்த இரண்டாவது வகையைச் சேர்ந்தது.
அந்தத் திரைப்படத்தை சமீபத்தில் பார்க்க நேர்ந்தது. அந்தத் திரைப்படத்தை ஒரே வார்த்தையில் வர்ணிக்க வேண்டும் என்றால் “குப்பை.” குப்பை என்றால் ஒதுக்கித் தள்ளி விடலாம். ஆனால் இது விஷம் கலந்த குப்பை. அதுதான் சிக்கலை ஏற்படுத்துகிறது. ஆனாலும் இதை ஒதுக்கித் தள்ளத்தான் வேண்டும்.
ஒரே ஒரு அறையில் எடுக்கப்பட்ட படம் இது. எடிட்டிங் என்றால் என்னவென்றே தெரியாத ஒருவரை எடிட்டிங் செய்யச் சொன்னால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது இந்தப் படத்தின் எடிட்டிங். அந்தக் காலத்துப் படங்களில் வெளியூர்களுக்குச் சென்று ஷுட்டிங் எடுக்காமல், செட்டுக்குள்ளேயே பின்னால் வரைந்த திரைச்சீலைகளை வைத்துப் படம் எடுப்பது போல அனைத்துக் காட்சிகளும் எடுக்கப்பட்டுள்ளன.
பாலைவனத்தில் கதை நடப்பதாக அறிவித்து விட்டு, பாலைவனத்தையே திரையில் வரைந்து படம் எடுத்துள்ளார்கள். இந்தக் குறைகளை, Unprofessional என்று எடுத்துக் கொள்ளலாம். ஆனால், வசனங்கள் அனைத்தும் விஷத்தைக் கக்கம் வகையில் விஷமத்தனமாக உள்ளன.
எடுத்தவுடன், எகிப்திய இஸ்லாமியர்கள் எகிப்திய கிறித்துவர்களை தக்குவது போல அமைந்துள்ளது. இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகும் ஒரு டாக்டர் தாக்குதலிலிருந்து தப்பித்து தன் வீட்டுக்குச் செல்கிறார்.
அங்கே ஒரு பலகையில், ஒரு பார்முலாவை எழுதுகிறார். Man + X = BT என்று படிக்கிறார். படிக்கும்போது BT என்ற இடத்தில் BTக்கு பதிலாக “இஸ்லாமிக் டெர்ரரிஸம்“ என்று படிக்கிறார். இவர் இவ்வாறு படிப்பது, ஒரிஜினல் இல்லை. படத்தில் வரும் கேரக்டர் வேறு ஏதோ சொல்லுவார். வாய்ஸ் ஓவரில் இஸ்லாமிக் டெர்ரரிஸம் என்று வருகிறது. அடுத்த காட்சியில் ஒரு கேரக்டரை இவர்தான் முகம்மது நபி என்று இதே போல வாய்ஸ் ஓவரில் சொல்லுகிறார்கள். ஒரு கழுதையைக் காண்பித்து, இதுதான் முதல் முஸ்லீம் கழுதை என்று சொல்லுகிறார்கள்.
மற்றொரு காட்சியில் வயதான ஒரு பெண், எனது 110 வருட வாழ்க்கையில், முகம்மது போல ஒரு கொலைகாரனைப் பார்த்ததில்லை என்று சொல்லுகிறார். இதற்குப் பிறகு வரும் பெரும்பாலான காட்சிகள் விவரிக்க முடியாத வகையில் உள்ளது. ஆனால், சர்ச்சையான வசனங்கள் அனைத்தும் வாய்ஸ் ஓவரில் டப்பிங்கில் சேர்க்கப்பட்டுள்ளன என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது.
இந்தப் படத்தில் பணியாற்றிய 80க்கும் மேற்பட்ட அனைத்து தொழிலாளர்களும், இந்தப் படம் ஷுட்டிங் நடக்கையில் இது போன்ற வசனங்கள் இல்லை என்று உறுதிபடக் கூறுகிறார்கள். இதில் நடித்துள்ள சின்டி லீ கார்சியா என்ற பெண்மணி, தன்னை இந்தப் படத்திற்காக நடிக்க அழைக்கையில், “டெசர்ட் வாரியர்” என்ற பெயரில் உள்ள படத்துக்காக நடிக்க அழைத்ததாகவும், முகம்மதுவாக நடிப்பவரின் கேரக்டர் ஷுட்டிங் எடுத்தபோது மாஸ்டர் ஜார்ஜ் என்று அழைக்கப்பட்டதாகவும் கூறுகிறார்.
சின்டி லீ கார்சியா இத்திரைப்படம் பற்றிக் கூறுகையில், இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் சாம் பசில் என்பவர், தன்னை இஸ்ரேலைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டதாகவும், இஸ்ரெலில் இருந்து அமெரிக்கா வந்து கலிபோர்னியாவில் தங்கியிருப்பதாகவும், கூறியுள்ளார். ஆனால், கலிபோர்னியாவில் அது போல ரியல் எஸ்டேட் தொழிலதிபர் யாருமே இல்லை என்பது தெரிய வந்துள்ளது.
யார் இந்த சாம் பசில் என்பது சில நாட்களிலேயே தெரிய வந்தது. நகுல்லா பஸ்ஸேலி நகுல்லா என்பது இவர் பெயர். எகிப்திலிருந்து அகதியாக வந்து லாஸ் ஏஞ்சல்ஸ் அருகே தங்கியுள்ளார். 1990ல் மெத்தாபீட்டாமைன் என்ற போதை மருந்தைக் கடத்தியதற்காக சிறையில் இருந்துள்ளார். 2010ல் வங்கி மோசடியில் ஈடுபட்டதற்காக அவருக்கு 21 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. காவல்துறை நகுல்லாவை விசாரித்தபோது, இந்தத் திரைப்படத்திற்கான ஸ்க்ரிப்டை அவர் சிறையில் இருந்தபோது தயாரித்ததாகவும், கூறியுள்ளார்.
தனது திரைப்படத்தை தயாரிப்பதற்கு இஸ்ரேலில் உள்ள யூதர்கள் நிதியுதவி செய்ததாக தெரிவித்துள்ளார். இந்தச் செய்தி அசோசியேட்டட் ப்ரெஸ் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தி மூலமாக வெளி வந்தது. ஆனால், இஸ்ரேலைச் சேர்ந்த யூத மத குர ரப்பாய் ஆப்ரஹாம் கூப்பர், நகுல்லா திரைப்படம் எடுக்க யூதர்கள் உதவி செய்தார்கள் என்ற கூற்றை முற்றிலும் மறுத்துள்ளார்.
இத்திரைப்படம் முதன் முதலாக 23 ஜுன் 2012 அன்று கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள வைன் என்ற தியேட்டரில் திரையிடப்பட்டுள்ளது. அத்திரைப்படத்துக்கான போஸ்டர்கள் அனைத்தும் உருது மொழியிழ் அச்சிடப்பட்டுள்ளன. அன்று அத்திரைப்படத்தைப் பார்த்தவர்கள் மொத்தம் 10 பேர். அன்று அந்த போஸ்டரில் அந்தத் திரைப்படத்தின் பெயர் இன்னொசென்ஸ் ஆப் பின் லேடன் என்று அச்சிடப்பட்டிருந்தது.
வைன் தியேட்டர்
மீண்டும் இரண்டாவது முறை இத்திரைப்படம் 30 ஜுன் 2012 அன்று அதே தியேட்டரில் திரையிடப்படுவதாக வெளியிடப்பட்டிருந்த அறிவிப்பைத் தொடர்ந்து, ஜான் வால்ஷ் என்ற ப்ளாக் எழுத்தாளர், லாஸ் ஏஞ்சல்ஸ் மாநகராட்சிக் கூட்டத்தில் இத்திரைப்படம் திரையிடப்படுவதற்கு எதிராகப் பேசினார். பின்லேடன் போன்ற ஒரு நபரை பெருமைப்படுத்துவது போல, இத்திரைப்படத்தின் தலைப்பு உள்ளது. அதனால், இத்திரைப்படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று பேசியதை அடுத்து, இரண்டாவது முறை திரையிடப்படுவது தடுக்கப்பட்டது.
1 ஜுலை 2012 அன்று The Real Life of Muhammed முகம்மதின் உண்மை வாழ்க்கை என்ற பெயரில் இத்திரைப்படத்தின் இரண்டு காட்சிகள் மட்டும் யு ட்யூபில் பதிவேற்றப்படுகின்றன. ஆனால், ஜுலை மாதம் முழுக்க இத்திரைப்படத்தின் காட்சிகள் யு ட்யூபில் இருந்தும், யாருமே இதைக் கண்டுகொள்ளவில்லை. மாரிஸ் சதக் என்ற எகிப்து நாட்டிலிருந்து அமெரிக்காவில் தஞ்சம் புகுந்த ஒருவர், அந்தக் காட்சிகளை அரபி மொழியில் மொழிபெயர்த்து, யு ட்யூபில் ஏற்றுகிறார். ஆனால், எகிப்தின் அல் நாஸ் என்ற தொலைக்காட்சி இத்திரைப்படத்தின் அரேபிய மொழியிலான இரண்டு நிமிடக் காட்சிகளை ஒளிபரப்பிய பிறகுதான், பெரிய அளவில் உலகெங்கும் கிளர்ச்சிகள் தொடங்குகின்றன.
எகிப்திய தொலைக்காட்சிகளில் இத்திரைப்படத்தின் இரண்டு நிமிடக் காட்சி ஒளிபரப்பானவுடன், அத்தொலைக்காட்சியின் அறிவிப்பாளர் அத்திரைப்படத்தை விமர்சித்துப் பேசுகிறார். எகிப்து அதிபர் அமெரிக்க அதிபர், இத்திரைப்படத்தை எடுத்தவர்கள் “பைத்தியக்காரர்கள்” என்று வர்ணிக்கிறார். விசித்திரமாக, எகிப்தில் உள்ள அமெரிக்கத் தூதரகம், இத்திரைப்படத்தை கண்டித்தது.
ஆனால், இத்திரைப்படத்தைப் தொடர்பான போராட்டங்கள் பற்றிக் கொண்டன. இஸ்லாமிய நாடுகள் முழுக்க போராட்டங்கள் வலுத்தன. லிபியாவில் உள்ள பெங்காசியில் நடந்த தாக்குதலில் அமெரிக்க தூதர் உள்ளிட்டோர் கொல்லப்பட்டனர். இத்தாக்குதலுக்கு அல் கொய்தா பொறுப்பேற்றது. லிபியாவுக்கான அமெரிக்கத் தூதர் இறந்தது குறித்து கருத்து தெரிவித்த குப்பையின் இயக்குநர் பசில், தூதரகப் பாதுகாப்பு ஏற்பாடுகள் சரியில்லை என்று கருத்து தெரிவித்தார்.
யு ட்யூப் தற்காலிகமாக எகிப்து மற்றும் லிபியாவில் இத்திரைப்படம் தெரிவதை தடை செய்தது. இந்தியாவின் வேண்டுகோளுக்கிணங்க, இந்தியாவிலும் இத்திரைப்படம் யு ட்யூபில் தடை செய்யப்பட்டது.
18 செப்டம்பர் அன்று வெடிகுண்டு உடையணிந்த பெண் ஒருவர், ஒரு பிரிட்டிஷ் பெண்மணியும், எட்டு தென் ஆப்ரிக்கர்களும் பயணித்த ஒரு வாகனத்தை காரில் சென்று மோதி அனைவரையும் கொன்றார்.
சென்னையில் முஸ்லீம் அமைப்புகள் தனித்தனியாக போராட்டம் நடத்தின. தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் நடத்திய போராட்டத்தில், சென்னையில் உள்ள அமெரிக்கத் துணைத் தூதரகம் தாக்கப்பட்டது. தொடர்ந்து இதற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
பாகிஸ்தானில் நடைபெற்ற வன்முறையில் மட்டும் 23 பேர் இறந்துள்ளார்கள்.
இத்திரைப்படம் வெளியான சூழல், பரபரப்பை ஏற்படுத்திய விதம் ஆகியவற்றை நாம் ஆராய வேண்டும். இத்திரைப்படத்தை எடுத்ததாக கூறப்படும் நகுல்லா என்ற நபர், போதை மருந்து கடத்தியதற்காக தண்டிக்கப்பட்டவர். வங்கி மோசடி குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டு சிறைந்த சென்றவர்.
இத்திரைப்படத்தை எடுத்ததில் துளியும் நேர்மை இல்லை. வங்கியில் நடந்த மோசடியைப் போலவே, திரைப்படத்திலும் மோசடி நடந்துள்ளது. இத்திரைப்படத்தில் நடித்தவர்கள் பேசிய வசனங்கள் எதுவுமே ஒரிஜினல் ஸ்க்ரிப்டில் இல்லை. மோசடியாக டப்பிங்கின் போது, இஸ்லாம் மதத்துக்கு எதிரான வசனங்கள் வேண்டுமென்றே சேர்க்கப்பட்டுள்ளன. இத்திரைப்படம் வெளியாகி, பெரிய லாபம் சம்பாதித்து பாக்ஸ் ஆபீஸ் ஹிட் ஆகாது என்பது, இந்தப் படத்தை எடுத்த மோசடிப் பேர்வழிக்கு நன்றாகத் தெரியும். பிறகு ஏன் இந்தப் படம் எடுத்து வெளியிடப்பட்டுள்ளது ? இந்த நேரத்தில் ஏன் வெளியிடப்பட்டுள்ளது ?
2001 செப்டம்பர் 11ல் அமெரிக்க இரட்டைக் கோபுரத் தாக்குதல் நடந்தவுடன் அமெரிக்காவில் பேட்ரியாட் என்று ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டது. PATRIOT என்றால், Providing Appropriate Tools Required (to) Intercept (and) Obstruct Terrorism Act of 2001 என்று பொருள். இந்தச் சட்டத்தின் மூலமாக, யாருடைய போனையும் ஒட்டுக் கேட்கலாம். எங்கே வேண்டுமானாலும் புகுந்து சோதனையிடலாம். யாரை வேண்டுமானாலும் கைது செய்து விசாரிக்கலாம்.
அமெரிக்க நாட்டைப் பொறுத்தவரை, அங்கே எது மதிக்கப்படுகிறதோ இல்லையோ.. தனி மனித சுதந்திரத்திற்கு அங்கே மிகப்பெரிய அளவில் மரியாதை உண்டு. காவல்துறை அதிகாரிகள் யாருடைய போனையும் நீதிபதியின் அனுமதியின்றி ஒட்டுக் கேட்க முடியாது. எந்த ஒரு இடத்திலும், வாரண்ட் இன்றி சோதனையிட முடியாது. வாரண்ட் இன்றி சோதனையிட்டு, முக்கிய ஆதாரங்கள் சிக்கினாலும், அவற்றை குற்றவாளிக்கு எதிராக நீதிமன்றத்தில் பயன்படுத்த முடியாது.
இப்படிப்பட்ட சூழலில்தான் இந்த அடிப்படை உரிமைகளையெல்லாம் பறிக்கும் பேட்ரியாட் சட்டம் ஜார்ஜ் புஷ்ஷால் கொண்டு வரப்படுகிறது. அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டால் கடுமையாக போராடும் அமெரிக்க மக்கள் இந்தச் சட்டத்தை வாய் மூடி மவுனமாக ஏற்றுக் கொண்டதற்கு காரணம், அமெரிக்க இரட்டைக் கோபுரத் தாக்குதல். இத்தாக்குதல் காரணமாக அமெரிக்க மக்களுக்கு ஏற்பட்ட அச்சம் சொல்லில் விவரிக்க முடியாதது. இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பிறகு, கொஞ்ச காலத்திற்கு ஆந்த்ராக்ஸ் என்ற வைரஸ் தாக்குதல் என்று அமெரிக்க மக்களிடம் நிலவிய வதந்தியையும் நாம் மறந்து விடக் கூடாது.
ஜார்ஜ் புஷ் இரண்டாவது முறை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு காரணமே இந்த பயம்தான். அமெரிக்க குடிமக்களை தாக்குவதற்காக உலகெங்கும் அல் கொய்தா தீவிரவாதிகள் மாறுவேடத்தில் சுற்றுகிறார்கள் என்று உறுதியாக நம்பினார்கள். ஈராக்கில் ரசாயன ஆயுதங்கள் இருக்கின்றன என்று ஜார்ஜ் புஷ் சொன்னால், விசாரணையின்றி நம்பினார்கள். அந்த ரசாயன ஆயுதங்கள் அமெரிக்காவின் மீது தாக்குதல் நடத்துவதற்காகவே என்று பயந்தார்கள். அல் கொய்தா தீவிரவாதிகளிடம் அணு ஆயுதங்கள் இருக்கின்றன என்று புஷ் கிளப்பி விட்ட வதந்தியையும் நம்பினார்கள்.
இரண்டு முறைக்கு மேல் அதிபராக இருக்க முடியாது என்ற விதியின் காரணமாக, ஜார்ஜ் புஷ், ஓய்வு பெற்றார். அந்த விதி மட்டும் இல்லையன்றால், ஜார்ஜ் புஷ், அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளரைப் போல, நிரந்தர அமெரிக்க அதிபராக இருந்திருப்பார்.
மாற்றம் என்ற ஒற்றை மந்திரத்தை வைத்துக் கொண்டு ஆட்சியைப் பிடித்தார் ஓபாமா. ஓபாமா அதிபரானவுடன் அவர் மீது உலகெங்கும் பெருத்த எதிர்ப்பார்ப்பு உருவானது. ஜார்ஜ் புஷ் போல இவர் கொடுங்கோலனாக இருக்க மாட்டார். க்வென்டனாமோ பே போன்ற கொடுஞ்சிறைகளை மூடுவார். மனித உரிமைகளை மதிப்பார் என்றெல்லாம் நம்பினார்கள். ஆனால் எல்லா அமெரிக்க அதிபர்களையும் போல, ஏகாதிபத்திய மமதையோடே ஓபாமாவும் ஆட்சி நடத்தினார்.
தீவிரவாதத்திற்கெதிரான போர் (War on Terror) வெளிநாட்டில் நடக்கும் ஆபரேஷன் (Overseas Contingency Operation) என்று பெயர் மாற்றம் தொடர்ந்தார். க்வென்டனாமோ பே சிறையில் இனி சித்திரவதைகள் நடக்காது என்று ஓபாமா உத்தரவிட்டார். ஆனால், ஓபாமா பதவியேற்ற பிறகு விடுதலையான பின்யாம் முகம்மது என்ற க்வென்டனாமோ பே சிறைவாசி, ஓபாமா பதவியேற்ற பிறகு சிறையில் நிலைமை மோசமானதாக குறிப்பிடுகிறார். சிறை மூடப்படுவதை தெரிந்து சிறைக் கைதிகளை கடைசியாக சித்திரவதை செய்தார்கள் ராணுவத்தினர் என்று கூறுகிறார்.
பின்யாம் முகம்மது
ஸ்டக்ஸ்நெட் என்ற வைரஸை உருவாக்கி எதிரி நாடுகளுக்கு அனுப்பி அவற்றின் கம்ப்யூட்டர்களை சிதைக்கும் திட்டத்தை ஜார்ஜ் புஷ் உருவாக்கினார். ஓபாமா அத்திட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகிறார். பொருளாதாரம் மோசமான சூழலில் இருக்கிறது. ஓபாமா பதவியேற்ற பிறகு ஏற்பட்ட தேக்கநிலை இன்னும் நீங்கவில்லை.
2009ல் ஓபாமா பதவியேற்ற பிறகு நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு முடிவுகள் 89 சதவிகிதத்தினரின் ஒப்புதலைப் பெற்றது. இந்த ஒப்புதல், 2010ல் 58 சதவிகிதமாக குறைந்தது.
இந்த நிலையில் வரும் நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிறது. அத்தேர்தலில் போட்டியிடுவதாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதமே ஓபாமா அறிவித்து விட்டார். அமெரிக்கர்களை பயமுறுத்துவதற்காக இருந்த ஒரே எதிரி ஓசாமா பின் லேடன் கொல்லப்பட்டு விட்டார். ஓசாமா கொல்லப்பட்ட பின்னர், அமெரிக்க மக்களை பயமுறுத்துவதற்கு எந்த எதிரியும் இல்லை. அல் கொய்தாவின் தளபதிகள் என்று அறியப்பட்டவர்களும், அமெரிக்கா அனுப்பிய ஆளிள்ளா (Drones) விமானங்களால் கொல்லப்பட்டு விட்டனர்.
இப்படி இருக்கையில், எதைச் சொல்லி ஓபாமா அதிபர் தேர்தலில் வெற்றி பெற முடியும் ? ஓபாமா தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு முந்தைய தேர்தலில், நூலிழையில்தான் ஜார்ஜ் புஷ் வெற்றி பெற்றார் என்பதை மறந்து விடக் கூடாது.
இந்த அத்தனை விஷயங்களையும் கருத்தில் கொண்டு பார்க்கையில், ஓபாமா மீண்டும் அதிபராவதற்காகவே உருவாக்கப்பட்டதுதான் இந்த இன்னசென்ஸ் ஆப் முஸ்லீம்ஸ் என்ற திரைப்படம் என்று எண்ணத் தோன்றுகிறது.
இக்கட்டுரையின் முதல் பத்தியில் உள்ள மாக்கியவல்லியின் கருத்தை ஒரு முறை படித்துப் பாருங்கள்.
இத்திரைப்படத்தை எடுத்த நபரின் பின்னணியையும் மறந்து விடக் கூடாது. அமெரிக்காவின் எஃப்.பி.ஐ, மற்றும் சிஐஏ உளவு நிறுவனங்கள், இந்த பசில் எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை என்று தெரிவித்துள்ளது, இந்த சந்தேகத்தை வலுப்படுத்துகிறது. அமெரிக்கா நினைத்திருந்தால், இந்த நபரை ஒரே நாளில் கைது செய்து சிறையில் அடைத்திருக்க முடியும். கருத்துச் சுதந்திரத்துக்காக இவரைக் கைது செய்யாவிட்டாலும், திரைப்படத்தின் ஸ்க்ரிப்டாக ஒன்றை எடுத்து, அதன் அடிப்படையில் ஷுட்டிங் செய்து விட்டு, வசனங்களை வேறு மாதிரி டப்பிங் செய்ததற்காக மோசடி குற்றத்திலாவது இந்நபரை எளிதில் கைது செய்ய முடியும். இஸ்லாமியப் பெயரோடு ஒருவன் அமெரிக்காவில் இருந்தாலே அவனை சந்தேகத்தோடு பார்த்து 24 மணி நேரமும் அவனைக் கைது செய்யும் அமெரிக்கா, ஷா ரூக் கான் மற்றும் கமல் ஹாசன் என்ற பெயர் வைத்திருக்கிறார்கள் என்ற ஒரே காரணத்துக்காக, அவர்கள் டவுசரை அவிழ்த்து சோதனை செய்யும் அமெரிக்கா, இந்த மோசடிப் பேர்விழியைக் கைது செய்யாமல் அமைதிக் காப்பது உள்நோக்கத்தோடே என்று எண்ண வேண்டியிருக்கிறது.
இத்திரைப்படம் பற்றிய செய்திகள் வெளியானால், நிச்சயம் அரபு நாடுகளில் கலவரம் வெடிக்கும், அதனால் அமெரிக்கர்கள் அச்சமடைவார்கள், அதனால் எளிதாக தேர்தலில் வெற்றி பெற்று விடலாம் என்று ஓபாமா திட்டமிட்டு உருவாக்கிய சதி வலையாகவே இது தோன்றுகிறது. வழக்கமாக அமெரிக்க தூதரக அதிகாரிகளோ, தூதரகமோ தாக்கப்பட்டால், குய்யோ முறையோ என்று கூப்பாடு போடும் அமெரிக்கா, சென்னையில் உள்ள அதன் அலுவலகம் தாக்கப்பட்ட பிறகும், பம்மிக் கொண்டு இருப்பதை நாம் மறந்து விடக்கூடாது.
பாகிஸ்தானில் டானியல் பேர்ள் என்ற ஒரு பத்திரிக்கையாளரை தீவிரவாதிகள் கடத்திக் கொலை செய்ததற்கு, அலறிய அமெரிக்கா, லிபிய நாட்டுத் தாக்குதலில் தூதர் கொல்லப்பட்டதற்கு ஒப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து விட்டு, அமைதியானதையும் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.
இஸ்லாமிய சகோதரர்களுக்கு சவுக்கு ஒன்றைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறது. நீங்கள் நடத்தும் போராட்டம் நியாயமாக இருக்க வேண்டும். திரையுலகத்தால் மதிக்கப்படும் ஒரு ஜாம்பவான் இப்படிப்பட்ட ஒரு திரைப்படத்தை எடுத்திருந்தால் நீங்கள் போராட்டம் நடத்தலாம். குப்பைக்கு எதிராக போராட்டம் நடத்தாதீர்கள். அந்தக் குப்பைக்கு எதிராக போராட்டம் நடத்தி, நாம் அமெரிக்கா விரித்துள்ள சதி வலையில் விழுந்து விடக் கூடாது.
நீங்கள் உண்மையில் போராடியிருக்க வேண்டியது கமலஹாசன் எடுத்த உன்னைப் போல் ஒருவன் என்ற திரைப்படத்திற்கு எதிராகத்தான். இஸ்லாமியர்கள் அனைவரும் தீவிரவாதிகள் என்று கலைநயத்தோடு சொல்லியிருந்தார் கலைஞானி. டைம் பாமில் வயரை அறுக்கும் நேரத்தில், பச்சையை அறுத்து விடு, என்று இஸ்லாத்தை குறி வைத்து, படம் நெடுக வன்மத்தை புகுத்தியிருந்தார் கமலஹாசன். அது போன்ற விஷமத்துக்கு எதிராக நீங்கள் போராட்டம் நடத்தியிருந்தால் புரிந்து கொள்ளலாம். ஆனால், இது குப்பை. குப்பையை ஒதுக்கித் தள்ள வேண்டும். கோபுரத்தில் வைக்கக் கூடாது.