சவுக்குக்கு தனது வாசகர்களைக் கண்டால் மிகவும் பயமாக இருக்கிறது. நீங்களே சொல்லுங்கள். பாதுகாப்பு அதிகாரிகளின் உதவி இல்லாமல், தானாக வரிசையில் நின்று, டிக்கெட் வாங்கி, குடும்பத்தோடு சொந்தக் காசில் ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி சினிமா பார்க்கிறார் என்று எழுதினால், ஏன் ஒரு தெலுங்கரைப் பற்றி எழுதுகிறாய், தமிழனைப் பற்றி ஏன் எழுதவில்லை, இதில் உள்நோக்கம் இருக்கிறது என்று பின்னூட்டம் போடுகிறார்கள்.
தமிழர்களைப் பற்றி எழுத வேண்டாம் என்ற ஆசையா ? சவுக்கு தமிழின விரோதியா ? நல்ல நீதிபதிகள் நல்ல காரியங்களைச் செய்யும் போது, அதை வாழ்த்துவது நமது கடமையா இல்லையா ? அவர் எந்த மாநிலத்தைச் சேர்தவராக இருந்தால் என்ன ? எந்த மொழியைப் பேசினால் என்ன ? வட இந்தியரான நீதியரசர் மிஷ்ராவை, சென்னை உயர்நீதிமன்றத்தின் மனசாட்சி உள்ள வழக்கறிஞர்கள் காதலித்து உருகவில்லையா ? அவர் என்ன தமிழரா ?
நல்ல நீதிபதிகளைப் பார்ப்பது அரிதிலும் அரிதாக ஆகிக் கொண்டு வரும் ஒரு சூழலில், நல்ல காரியங்களை பாராட்டுவது நமது கடமை இல்லையா தோழர்களே…
அதனால்தான், “உலகின் மிகச் சிறந்த மனித உரிமைப் போராளி“ என்று வைக்க வேண்டிய தலைப்பை சவுக்குக்கு தெரிந்த என்று மாற்றி வைக்கப் பட்டுள்ளது.
திரு.ராதாகிருஷ்ணன் என்ற வழக்கறிஞர் யார் என்றால், உலகின் மிகச் சிறந்த வழக்கறிஞர் என்று சவுக்கு சந்தேகமற சொல்லும். அந்த ராதாகிருஷ்ணனின் பிறந்த நாள் இன்று. மனித உரிமை நாளில் பிறந்த ராதாகிருஷ்ணன் மனித உரிமைகளுக்காகவே தனது அறிவை பயன்படுத்துபவர்.
சவுக்கின் அத்தனை வழக்குகளையும் ராதாகிருஷ்ணன் கவனித்து வருகிறார் என்றாலும், ராதாகிருஷ்ணன் மீது, சவுக்குக்கு அபரிதமான மரியாதையும், வியப்பும் வந்தது எப்போதென்றால் விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க ராதாகிருஷ்ணன் ஆஜராகிய போதுதான்.
சவுக்குக்கும், அதன் வாசகர்களின் சிலருக்கும், விடுதலைப் புலிகள் மீது அபரிதமான மரியாதை இருக்கலாம். காதல் இருக்கலாம். ஆனால், தமிழ்நாட்டில் எல்லோரும் அப்படி இருக்க வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பது அறிவீனம்.
மிகச் சிறந்த வழக்கறிஞரும், மிக மிக நுண்ணிய உணர்வுகளையும் (Very Sensitive) கொண்ட ராதாகிருஷ்ணன் விடுதலைப் புலிகளுக்காக, சென்னை, ஊட்டி, மற்றும் டெல்லியில் ஆஜரானது, சவுக்குக்கு ஒரு இன்ப அதிர்ச்சி.
புலிகளுக்காகவே ஆஜராகிரார் என்றால், விளிம்பு நிலை மக்களுக்கு ஒரு கஷ்டம் என்றால் அவர் எப்படி துடிப்பார் என்பதை புரிந்து கொள்ளுங்கள். ராதாகிருஷ்ணன் யார் என்பதற்கு ஒரே ஒரு உதாரணம் சொல்கிறேன்.
ஒரு நான்கு மாதங்களுக்கு முன், காலை பத்து மணிக்கு ராதாகிருஷ்ணனிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு. “எங்கே இருக்கிறீர்கள்…. ? பத்து நிமிடங்களுக்குள் தேவி தியேட்டருக்கு வாருங்கள்…..“ என்றார். “என்ன சார்… என்ன விஷயம்…. நான் மதுரவாயலில் இருக்கிறேன்….. எவ்வளவு வேகமாக வந்தாலும் 45 நிமிடங்கள் ஆகும்“ என்றால் அதைக் காதிலேயே வாங்கிக் கொள்ளவில்லை. “எனக்குத் தெரியாது…. உடனடியாக வாருங்கள்“ என்று சொன்னார். என்னதான் சார் விஷயம் என்று கேட்டதும், “நான் தேவி திரையரங்கில் இருக்கிறேன். இங்கே சில நரிக்குறவர்கள் சினிமா பார்க்க வந்திருக்கிறார்கள். அவர்களை தியேட்டர் நிர்வாகம் காசு கொடுத்து டிக்கெட் வாங்கியும், உள்ளே அனுமதிக்க மறுக்கிறது. உடனடியாக கிளம்பு வாருங்கள்“ என்று, கடுமையான குரலில் சொன்னார்.
சவுக்கு, அப்போது, தனது தாய்க்கு, மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் இருந்தததால், அவரிடம் ஒன்றுமே சொல்ல முடியவில்லை. உடனடியாக, சவுக்குக்கு தெரிந்து பத்திரிக்கையாளர்களிடமும் ஒரே ஒரு காவல்துறை உயர் அதிகாரியிடமும் இந்த தகவலை பகிர்ந்து கொண்டதால் வந்த விளைவு, 30 நிமிடங்களில் பத்திரிக்கையாளர்கள் அந்த இடத்தில் குழுமினர். D.2 திருவெல்லிக்கேணி காவல் நிலையத்திலிருந்து ஏட்டையா வந்தார். அந்த நரிக்குறவத் தோழர்கள் 70 ரூபாய் டிக்கெட் கொடுங்கள் என்று கேட்டாலும், ஏட்டையா தியேட்டர் நிர்வாகத்தோடு சமரசம் செய்து, 10 ரூபாய் வாங்கிக் கொடுத்து படம் பார்க்கச் செய்தார்.
நாங்கள் அனைவரும் அன்போடு சிங்கம் என்று அழைக்கும் ராதாகிருஷ்ணன் அந்த நரிக்குறவத் தோழர்களிடம் சொன்னது என்ன தெரியுமா ? “சினிமா பார்க்காமல் நீங்கள் இந்த இடத்தை விட்டு போக மாட்டீர்கள். அதற்கு நான் பொறுப்பு“
இதுதான் ராதாகிருஷ்ணன். இன்று இவர் பிறந்த நாள். மனித உரிமை நாளில் பிறந்திருக்கிறார்.
சவுக்கோடு அன்போடு உரையாடும் அன்பு நெஞ்சங்களே.. சவுக்கை உரிமையோடு கடிந்து கொள்ளும் உறவுகளே….
சவுக்கோடு சேர்ந்து ராதாகிருஷ்ணனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவியுங்கள், அன்பு உறவுகளே…..