நாடகக் கலை உலகில் தோன்றி ஏறக்குறைய 2500 ஆண்டுகளாகின்றது. கிறிஸ்து பிறப்பதற்கு முன்பு ஆறாம் நூற்றாண்டிலேயே ஏதென்ஸ் நகரில் நாடகக் கலை உருவானதற்கான வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. சாக்ரடீஸ் தனது பொயடிக்ஸ் என்ற நூலில் நாடக்கலை பற்றிக் குறிப்பிடுகிறார். தொடக்க காலத்தில் சடங்குகளாக உருவான நாடகமே பின்னாளில் நாடகக் கலையாக உருவானதாக வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.
ரோமானிய சாம்ராஜ்யத்தில் நாடகக்கலை பெருமளவில் வளர்ச்சி அடைந்துள்ளது. கிரேக்கம், ஆசியா, சீனா என்று நாடகக்கலை பல்வேறு வளர்ச்சிகளை அடைந்து தற்போது நாகரீக உலகில் இன்னும் செழிப்போடு திகழ்கிறது.
கிரேக்கத்தில் கிறித்துவுக்கு முன் நாலாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட எபிடாரஸ் அரங்கம்
திரைப்படக் கலை வளர்ந்து பெரும் வெற்றியடைந்ததும், நாடகக்கலை சரிவை சந்திக்கத் தொடங்கியது. இருப்பினும் நாடகக்கலையின் அசல்தன்மை (Originality) காரணமாகவும், அதில் உள்ள சிறப்புத் தன்மை மற்றும், தன்னிச்சையான (spontaneity) காரணமாகவும் அந்தக் கலை அழியாமல் பாதுகாக்கப்பட்டு வருகிறது. உலகில் பல பாகங்களில் நாடகக்கலை புத்துயிரோடு இருந்து வந்தாலும், இந்தியாவில் நாடகக்கலை ஏறக்குறைய சாகும் தருவாயிலேயே இருக்கிறது எனலாம்.
இந்தக் கலையை புத்துயிரூட்டி வளர்த்தெடுக்க மத்திய அரசு யாருக்கும் தெரியாத வகையில் ஒரு அற்புதமான திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அரசு கொண்டு வரும் திட்டங்கள் என்றாலே இளக்காரமாகப் பார்ப்பதும், அவநம்பிக்கையோடு நோக்குவதும் வழக்கமாக உள்ளதால், அது அரசுத் திட்டம் என்ற அறிவிப்பு ஏதுமின்றி ரகசியமாக இந்த நாடக வளர்ப்புத் திட்டத்தை மத்திய அரசும் மாநில அரசுகளும் அரங்கேற்றி வருகின்றன.
தொடக்கத்தில் மத்திய அரசு, இத்திட்டத்தை செயல்படுத்தவதற்கு தேர்ந்தெடுத்த இடம் தமிழகம் என்றால் உங்களுக்கெல்லாம் மிகவும் ஆச்சர்யமாக இருக்கும். ஆம் தோழர்களே… மத்திய அரசு தமிழகத்தைத் தேர்ந்தெடுத்ததற்கு முக்கிய காரணம், மற்ற மாநிலம் எங்கேயும் இல்லாத சிறப்பு தமிழகத்திற்கு உண்டு. ஒரு மாநிலத்தை ஆளும் முதலமைச்சரும் சரி, எதிர்க்கட்சித் தலைவரும் சரி, அடுத்து முதல்வராகும் கனவோடு இருப்பவரும் சரி.. அத்தனை பேரும் நாடகத்துறையிலிருந்து வந்தவர்கள் என்பது மற்ற மாநிலங்களுக்கெல்லாம் வாய்க்காத சிறப்பு அல்லவா ? அதனால்தான் மத்திய அரசு, இந்நாடகத்தை அரங்கேற்ற தமிழத்தைத் தேர்ந்தெடுத்தது.
மத்திய அரசின் முடிவு சரியானதே என்பதை நிரூபிக்கும் வகையில் இந்த நாடக வளர்ச்சித் திட்டம் அரங்கேற்றப் பட்ட இரண்டு முறையும் முதல்வர்களாக இருந்த கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆகிய இருவரும் இத்திட்டத்திற்கு சிறப்பான ஒத்துழைப்பை அளித்தார்கள்.
மத்திய அரசு எந்த அளவுக்கு இத்திட்டம் வெற்றி பெற வேண்டும் என்பதில் முனைப்பாக இருக்கிறது என்றால், இத்திட்டத்தின் கீழ் நடைபெறும் நாடகங்களில் உயர்நீதிமன்ற நீதிபதிகளையும், காவல்துறை உயர் அதிகாரிகளையும், மூத்த வழக்கறிஞர்களையும் நடிக்க உத்தரவிட்டிருந்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்..
2010ல் இந்நாடகம் சென்னையில் நடந்தபோது அந்நாடகத்தில் முக்கிய வேடமேற்று நடித்தவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்த நீதிபதி விக்ரம்ஜித் சென். இவர் தற்போது கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உள்ளார்.
நீதிபதி விக்ரம்ஜித் சென்
இந்த முறையும் இந்த நாடகம் சிறப்பாக அரங்கேறி வருகிறது. நாடகத்தில் தலைப்பு “விடுதலைப்புலிகள் மீதான தடை.“ 2010ல் நடந்த நாடகம் குறித்த செய்திகளுக்கு சவுக்கில் வெளி வந்த விக்கிலீக்கும் விடுதலைப் புலிகளும் மற்றும் முதலை வடிக்கும் கண்ணீர் ஆகிய கட்டுரைகளைப் படியுங்கள்.
அந்த நாடகத்தில் நடித்த நீதியரசர் விக்ரம்ஜித் சென் மிகச் சிறப்பாக நடித்தார் என்றே சொல்ல வேண்டும். மற்றவர்களும் தங்கள் பாத்திரத்தை செவ்வனே உணர்ந்து நடித்தனர். அந்த நாடகத்தின் இறுதிக் காட்சி சென்னை உயர்நீதிமன்றம் வரை தொடர்ந்தது.
விடுதலைப்புலிகள் மீதான தடையை நீட்டித்து 1992 முதலே உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வந்தாலும், 2010ல் இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்ட போதுதான் முதன் முதலில் இந்த உத்தரவை எதிர்க்க வேண்டும் என்று முடிவெடுக்கப்படுகிறது. 2010ல் டெல்லியில் உள்ள தீர்ப்பாயத்தில் முதல் விசாரணை நடந்தபோது வைகோ அவ்விசாரணையில் கலந்து கொண்டு புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என்று வாதிட்டார். அவர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனாலும் வைகோ மனம் தளராமல் தொடர்ந்து தீர்ப்பாயத்தின் அனைத்து அமர்வுகளிலும் வந்து கலந்து கொண்டார்.
ஒரே இடத்தில் நாடகத்தை நடத்தினால் சிறப்பாக இராது என்று, நாடகத்தின் அடுத்த காட்சி ஊட்டியில் நடைபெற்றது. விடுதலைப் புலிகள் மீதான தடையை நீட்டிப்பதா வேண்டாமா என்று வெப்பப் பிரதேசத்தில் நடத்தினால் சரி வர விசாரிக்க முடியாது என்று குளு குளு ஊட்டியில் நடைபெற்றது. ஊட்டியில் விசாரித்து முடித்ததும் அடுத்த காட்சி டெல்லியில். டெல்லியிலும் விசாரித்து முடித்தவுடன், கடைசியாக நாடகத்தில் நீண்ட வசனம் பேசுவார்களே… அது போல நீதிபதி விக்ரம்ஜித் சென் ஒரு நீண்ட வசனத்தை உத்தரவாகப் பிறப்பித்தார்.
அந்த உத்தரவின்படி, விடுதலைப் புலிகள் இந்தியாவின் ஒரு பகுதியாக உள்ள தமிழகத்தை இணைத்து தனி ஈழம் அமைக்க வேண்டும் என்ற திட்டத்தில் உள்ளார்கள். புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டு விட்டதாகக் கூறினாலும், அந்த இயக்கத்தின் ஆதரவாளர்கள் தொடர்ந்து இந்தியாவின் நலனுக்கு எதிராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று அறிவிக்கப்பட்டது.
2010ல் நடந்த நாடகத்தின் இறுதிக் காட்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தவர்கள் நீதியரசர் எலிப்பி தர்மாராவ் மற்றும் வேணுகோபால். தில்லு முல்லு படத்தில் இறுதிக் காட்சியில் கமலஹாசன் கெஸ்ட் ரோலில் வருவார். அது போல உயர்நீதிமன்ற நீதிபதிகள் இருவரும் கெஸ்ட் ரோலில் வந்தனர்.அந்த நீதிபதிகள் இருவரும் எந்த அளவுக்கு தங்கள் பாத்திரத்தில் ஒன்றி நடித்தனர் என்றால், இந்நாள் வரை அந்த நாடகத்தை முடிவுக்கு கொண்டு வராமல் தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கின்றனர்.
நீதிபதி எலிப்பி தர்மா ராவ்
சிறைக்கைதிகள் உரிமை மையத்தின் சார்பில், சட்டவிரோத நடவடிக்கைகள் தீர்ப்பாயத்தின் முடிவை எதிர்த்து ஒரு வழக்கு நீண்ட விசாரணைக்குப் பிறகு இந்த இரு நீதிபதிகளும், இவ்வழக்கின் தீர்ப்பை 11 ஏப்ரல் 2012 அன்று ஒத்தி வைத்தனர். இந்த வழக்கில் இந்நாள் வரை தீர்ப்பு வழங்கப்படவில்லை. ஒரு அமைப்பின் மீது ஒரு தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. அத்தடை உத்தரவு இரண்டு வருடங்களுக்கு பிறப்பிக்கப்படுகிறது. இரண்டு வருடங்கள் கழித்து அந்த அமைப்பின் மீது மீண்டும் தடை உத்தரவு பிறப்பிக்கப்படும். முதலில் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு செல்லாது என்று அதை எதிர்த்து வழக்கு தொடுத்தால் அதன் தீர்ப்பை எப்போது வழங்க வேண்டும் ? அடுத்த தடை உத்தரவு பிறப்பிக்கப் படும் முன்பல்லவா வழங்க வேண்டும் ?
அடுத்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அது அமலுக்கும் வந்த பிறகு முந்தைய தடை உத்தரவு தவறு என்றே தீர்ப்பளித்தாலும் கூட, அது எதற்குப் பயன்படப் போகிறது ? 2010 தடையாணை செல்லுமா செல்லாதா என்ற வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் நகல், உயர்நீதிமன்றத்தின் உள்ளே அமைந்திருக்கும் டீக்கடையில் போண்டா கட்டுவதைத் தவிர வேறு எதற்கும் பயன்படாது. அதனால்தான் இந்த நாடகம் மிகுந்த சிறப்பு பெறுகிறது.
2010ம் ஆண்டு தொடங்கிய நாடகமே முடிவு பெறாத நிலையில் இந்த ஆண்டு அடுத்த நாடகம் தொடங்கியது. 2012 மே 14 அன்று மத்திய அரசு விடுதலைப் புலிகளின் அமைப்பை தடை செய்து, மீண்டும் ஒரு தடை உத்தரவை பிறப்பித்தது.
இந்த உத்தரவை எதிர்த்து வைகோ டெல்லியில் நடந்த தீர்ப்பாயத்தின் அமர்வில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவும் கடந்த முறையைப் போலவே தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனாலும் தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத வைகோ சென்னையில் நடந்த தீர்ப்பாயத்திலும் பங்கு கொண்டார்.
சென்னையில் உள்ள இமேஜ் ஆடிட்டோரியத்தில் சென்னை அமர்வின் முதல் நாள் கூட்டம் நடைபெற்றது. மத்திய அரசுத் தரப்பில் மத்திய உள்துறையின் உள்நாட்டுப் பாதுகாப்பின் இயக்குநராக இருந்த ரமேஷ் சுமன் என்பவர் சாட்சி சொன்னார்.
ரமேஷ் சுமன் சாட்சி சொல்ல வந்ததும் அவருக்கு வழக்கமாக சாட்சிகளிடம் வாங்கப்படும் உறுதி மொழி வாங்கப்பட்டது. நான் சொல்வதெல்லாம் உண்மை, உண்மையைத் தவிர வேறில்லை என்றார். இது நாடகத்தின் முக்கியமான காட்சி. முழுக்க முழுக்க பொய்யைப் பேசும் ஒரு பாத்திரம், நாடகத்தில் உண்மை சொல்லுவதாக அமைக்கப்பட்டிருந்தது இந்நாடகத்தை சிறப்பானதாக்கியது.
வழக்கமாக நீதிமன்றத்தில் சாட்சி சொல்லும் சாட்சிகள் தங்களுக்குத் தெரிந்ததை சொல்லுவார்கள், நீதிபதிகள் சந்தேகம் இருந்தால் கேட்பார்கள். ஆனால் இந்த ரமேஷ் சுமன் என்ற பாத்திரத்திற்கு டயலாக் பேச வராது போல. அதனால் அவருக்கு பதிலாக நீதிபதியே டயலாக் பேசினார். சாட்சி ஒரு வார்த்தை கூட பேசாமல் அமைதியாக நின்று கொண்டிருந்த நிலையில் நீதிபதி சாட்சி சொல்ல வேண்டியதையெல்லாம் அவரே டிக்டேட் செய்தார்.
“மத்திய அரசு, மாநில அரசு மற்றும் உளவு நிறுவனங்களில் இருந்து கிடைக்கப் பெற்ற தகவல்களை வைத்து இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. விடுதலைப் புலிகள் அமைப்பு தமிழகத்தில் பெரும் ஆதரவோடு உள்ளது. (ஃபேஸ் புக்கில் என்று சொன்னாலாவது பொருத்தமாக இருக்கும்) இந்த ஆதரவு மொழி மற்றும் கலாச்சார ரீதியிலான உறவின் அடிப்படையில் அமைந்தது. இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைளில் ஈடுபட தமிழகத்தை விடுதலைப் புலிகள் ஒரு தளமாக பயன்படுத்தி வருகின்றனர். இந்திய ஒருமைப்பாட்டுக்கும் இறையாண்மைக்கும் எதிராக விடுதலைப் புலிகள் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர் (கர்நாடகாவை விடவா ?) விடுதலைப் புலிகள் மற்றும் அதன் ஆதரவு அமைப்புகளின் தொடர்ந்த செயல்பாடுகள் இந்தியாவின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் எதிரானவை என்று மத்திய அரசு கண்டறிந்துள்ளது.
விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் மீது பதியப்பட்ட வழக்குகளின் விபரங்களை எனது பிரமாண வாக்குமூலத்தில் அளித்துள்ளேன். ராணுவ ரீதியாக விடுதலைப் புலிகள் தோல்வியடைந்தாலும் தங்கள் நோக்கமான தனி ஈழத்தை அவர்கள் கைவிடவில்லை. தங்களின் தனி ஈழ லட்சியத்தை அடைய அவர்கள் தங்கள் ஆதரவு அமைப்புகளின் மூலம் இந்திய அளவிலும் சர்வதேச அளவிலும் தொடர்ந்து முயற்சி எடுத்து வருகிறார்கள்.
புலம் பெயர் தமிழர்கள் தொடர்ந்து தனி ஈழக் கோரிக்கையை வலியுறுத்துவதோடு அல்லாமல், புலிகளின் ராணுவத் தோல்விக்கு இந்தியாவே காரணம் என்று பிரச்சாரம் செய்வதோடு அல்லாமல் இந்திய அரசியல் தலைவர்களுக்கு எதிராகவும் பிரச்சாரம் செய்து வருவதால், இந்திய அரசியல் தலைவர்களுக்கு ஆபத்து ஏற்படுகிறது.
விடுதலைப் புலிகள் அமைப்புக்கு இந்தியாவுக்கு எதிரான வெறுப்புணர்வு இருக்கிறது. இந்தியாவும் இலங்கையும் உளவுத் தகவல்கள், ராணுவ தளவாடங்கள் ஆகியவற்றை பகிர்ந்து கொண்டதாலும், விமானப்படை மூலமாக பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியதை இந்தியா கண்டிக்கவில்லை என்பதாலும் புலிகள் அமைப்புக்கு இந்தியா மீது கடும் வெறுப்புணர்வு இருக்கிறது. புலிகள் அமைப்பின் ஆதரவாளர்கள் சர்வதேச புலம்பெயர் தமிழர்கள் மத்தியிலும் மற்ற தமிழர்கள் மத்தியிலும் ஆதரவை பெருக்கி வருகிறார்கள். இந்தியா செய்த துரோகத்துக்காக இந்தியாவை பழி வாங்க வேண்டும் என்ற உணர்வு அவர்களிடம் இருக்கிறது.
தமிழகத்தில் சில அரசியல் கட்சிகள் புலிகள் அமைப்புக்கு ஆதரவாக, செயல்பட்டு வருகின்றன. போரில் புலிகள் அமைப்புகு ஏற்பட்ட தோல்விக்கு இந்தியா ராணுவ ரீதியாக செய்த உதவிகளே காரணம் என்று மத்திய அரசை குற்றம் சாட்டுகின்றன. ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தொடர்ந்து இந்த உணர்வை பேணிப் பாதுகாப்பதில் இந்தக் கட்சிகள் தீவிரமாக உள்ளன.
விடுதலைப் புலிகளின் போர் இலங்கை அரசுக்கு எதிராக இருந்தாலும் அவர்களின் நீண்ட நாள் திட்டம் தமிழகத்தை ஈழத்தோடு இணைத்துக் கொள்வதுதான். புலிகள் அமைப்பின் மீதான தடை உத்தரவு அமலில் இருந்தாலும் தனி ஈழம் என்ற கோரிக்கையை அவர்கள் கைவிடவில்லை. புலிகள் அமைப்பின் ஆதரவாளர்கள், அகதிகள் என்ற போர்வையில் தமிழகத்தில் ஊடுருவுகிறார்கள். இவ்வாறு ஊடுருவும் நபர்களால் தமிழகம் மற்றும் இந்தியாவில் உள்ள முக்கியப் பிரமுகர்களுக்கு கடும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.”
இவ்வளவு பெரிய டயலாக்கை ரமேஷ் சுமன் என்ற அந்த பாத்திரத்தால் சிறப்பாக பேச முடியாத காரணத்தால் நீதிபதி வி.கே. ஜெயினே அந்த பாத்திரத்துக்காக பேசினார்.
நீதிபதி வி.கே.ஜெயின்
ஒரு வேடத்தில் நடிப்பது என்று முடிவெடுத்து விட்டு அந்தப் பாத்திரம் டயலாக்கே பேசாமல் இருந்தால் நன்றாக இருக்காது என்று நீதிபதி வி.கே.ஜெயின் ரமேஷ் சுமனிடம் நீங்கள் தாக்கல் செய்த ஆவங்கள் குறித்தும், விபரங்கள் குறித்தும் உங்களுக்கு பர்சனல் நாலேட்ஜ் இருக்கிறதா என்றார். எனக்குக் கிடைத்த உளவுப் பிரிவின் தகவல்கள் மற்றும் ரகசிய தகவல்கள் அடிப்படையில் இதைத் தாக்கல் செய்துள்ளேன். எனக்கு தனிப்பட்ட பர்சனல் நாலேட்ஜ் கிடையாது என்றார் (ஜெனரல் நாலேட்ஜாவது இருக்கா ?)
அடுத்து வைகோ அந்த சாட்சியை குறுக்கு விசாரணை செய்யத் தொடங்கினார். சிலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறினீர்கள். அது என்ன வழக்கு என்று கூற முடியுமா என்று கேட்டார். அவர் நான் ஆவணங்களை சரிபார்க்க வேண்டும் என்று கூறினார். புலிகள் அமைப்பு தமிழகத்தை இணைப்பதற்கு திட்டமிட்டுள்ளது என்று கூறினீர்களே அதற்கு என்ன ஆதாரம் என்று கேட்டார். அதற்கும் அவர் ஆவணங்களை சரிபார்க்க வேண்டும் என்று கூறினார். பாலஸ்தீனத்தின் சுயநிர்ணய உரிமை தொடர்பாக ஐக்கிய நாடுகள் அவை ஒரு முடிவெடுத்திருக்கிறதே.. என்று வைகோ தொடங்கியதும், நீதிபதி மிஸ்டர் வைகோ சம்பந்தம் இல்லாத கேள்விகளைக் கேட்காதீர்கள் என்று கூறினார்.
புலிகள் அமைப்பை ஆதரிக்கும் அரசியல் கட்சிகள் தமிழகத்தில் உள்ளது என்று கூறினீர்களே, அந்தப் பட்டியலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் இருக்கிறதா என்று கேட்டார். அவர் இருக்கிறது என்றார்.
உடனே நீதிபதி, மிஸ்டர் வைகோ… நீங்கள் வந்த வேலை முடிந்து விட்டது என்று நினைக்கிறேன் என்று கூறினார்.
அடுத்து சிறைக்கைதிகள் உரிமை மையத்தின் சார்பாக பேசிய ராதாகிருஷ்ணன், பல அகதிகள் விடுதலை புலிகள் என்ற குற்றச்சாட்டின் பேரில் சிறையிலும், சிறப்பு முகாம்களிலும் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்கள். அவர்களை விசாரணை செய்ய தீர்ப்பாயம் நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்றார். செய்தித்தாளில் கொடுத்துள்ள விளம்பரமே போதுமானது என்றார் நீதிபதி. கடந்த முறை விசாரணை நடந்தபோதே சிறைக் கைதிகள் உரிமை மையம் இவ்விசாரணையில் பங்கு கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. அதனால் இம்முறையும் அனுமதிக்க வேண்டும். இது தொடர்பாக ஒரு மனுவை தாக்கல் செய்கிறோம் என்றார். அந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டதாக உத்தரவு பிறப்பித்தார் நீதிபதி.
இந்தக் காட்சி முடிந்ததும் இடைவேளை. அடுத்த காட்சி தொடங்கியது.
விசாரணை முடிந்ததும் வைகோ அந்த உள்துறை அமைச்சக அதிகாரியிடம் சென்று பேசினார். நீங்கள் எங்கே படித்தீர்கள் என்றார். அவர் நான் ஐஐடி கான்பூரில் படித்தேன் என்றார். வைகோ அவரிடம் நீங்கள் ஐஏஎஸ்ஸா ஐபிஎஸ்ஸா என்றார். நான் ஐஎப்எஸ் என்றார் அந்த அதிகாரி. எந்த மாநில கேடர் நீங்கள் என்றார் வைகோ. அவர் நான் ஜார்கண்ட் மாநில கேடர் என்றார். அந்த அதிகாரியிடம் சிறப்பாக பணியாற்றுகிறீர்கள் என்றார் வைகோ.
வெளியே வந்ததும் செய்தியாளர்களைச் சந்தித்தார் வைகோ. “உள்துறை அமைச்சக அதிகாரியை எனது கேள்விக்கணைகளால் துளைத்தேன். அவர் பதில் சொல்ல முடியாமல் திணறினார். என் பல கேள்விகளுக்கு அவரிடம் விடையில்லை. விசாரணை முடிந்ததும் அந்த உள்துறை அமைச்சக அதிகாரியிடம் பேசினேன். அப்போது அவர் மிகவும் புத்திசாலித்தனமாக கேள்வி கேட்டீர்கள். நானே திணறிப்போனேன் என்று அவரே ஆச்சர்யமைடந்தார்” என்று பேட்டியளித்தார்.
இத்தோடு முதல் நாள் நாடகம் முடிந்தது.
மறுநாளும் அதே இமேஜ் ஆடிட்டோரியத்தில் நாடகம் தொடங்கியது. காலை விசாரணை தொடங்கியதும், சிறைக் கைதிகள் உரிமை மையத்தின் வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் ஒரு மனுவை தாக்கல் செய்தார். அந்த மனு மீது தனது வாதத்தை எடுத்து வைத்தார் ராதாகிருஷ்ணன்.
“நேற்று மத்திய அரசு, சார்பில் உள்துறை அதிகாரி ரமேஷ் சுமன் சில ஆவணங்களையும் பிரமாண வாக்குமூலங்களையும் தாக்கல் செய்துள்ளார். இந்த தீர்ப்பாயம் புலிகள் மீதான தடை நியாயமா இல்லையா என்பதைக் கண்டறியவே அமைக்கப்பட்டுள்ளது. தீர்ப்பாயத்தின் இந்தப் பணிக்கு உதவுவதற்காகவே நாங்கள் வந்துள்ளோம். அதற்கு அந்த அதிகாரி தாக்கல் செய்துள்ள ஆவணங்களின் நகல்களை எங்களுக்கு வழங்க வேண்டும்.
அப்படி ஆவணங்களை வழங்காமல் தீர்ப்பாயம் விசாரணை நடத்துமேயானால், இந்த விசாரணை மக்களின் வரிப்பணத்தை வீணடிப்பதையும், நேர விரயம் செய்வதையும் தவிர வேறு எதுவும் செய்ய முடியாது. இந்தத் தீர்ப்பாயம் தனது விசாரணையை ஒரு தரப்பு விசாரணையாக நடத்தி வருகிறது. விடுதலை புலிகள் அமைப்பின் பொறுப்பாளர்களோ, உறுப்பினர்களோ, இத்தீர்ப்பாயத்தின் முன் ஆஜராகவில்லை. அவர்கள் ஆஜராகாத பட்சத்தில் இத்தடை உத்தரவை எதிர்த்து வாதிடுவதற்காக வந்திருக்கும் எங்களுக்கு அந்த ஆவணங்களின் நகல்களை வழங்குவதன் மூலம் உரிய வாய்ப்பை வழங்க வேண்டும்.
இந்தத் தீர்ப்பாயம் விசாரணையை எப்படி நடத்துகிறதென்றால் சாட்சிகள் சொல்ல வேண்டிய வாக்குமூலத்தை தீர்ப்பாயமே பதிவு செய்கிறது. நான்கு வார்த்தைகள் ஆங்கிலத்தில் தொடர்ந்தார்ப் போல பேச முடியாத ஒரு அதிகாரிக்கு உதவி செய்வதற்காக தீர்ப்பாயமே வாக்குமூலத்தை பதிவு செய்கிறது. இப்படி நடக்கும் விசாரணை ஒரு முழுமையான விசாரணையாக அமையாமல், மத்திய அரசின் தடையாணைக்கு சான்றளிக்கும் விசாரணையாகவே அமையும்.
மேலும் இது ஒரு பொது விசாரணை. இந்த விசாரணையை பொதுமக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட இந்த விசாரணை வெளிப்படையான விசாரணையாக நடைபெற வேண்டும். எந்த ஆவணத்தையும் வழங்காமல், யாருடைய வாதங்களையும் கேட்காமல் இத்தீர்ப்பாயம் விசாரணை நடத்துமேயானால் அது ஒரு வெற்று சடங்காகவே அமையும் என்றார்.
சாட்சியின் வாக்குமூலத்திற்கு பதிலாக தானே பேசியது அம்பலமானதன் சங்கடம் அவர் முகத்தில் தெரிந்தது
ராதாகிருஷ்ணன் பேசி முடித்ததும் வைகோ எழுந்தார். “எனது நண்பர், இத்தீர்ப்பாயத்தின் விசாரணை மக்களின் வரிப்பண விரயம், கால விரயம் என்று வாதிட்டார். அவர் கருத்திலிருந்து நான் மாறுபடுகிறேன். இத்தீர்ப்பாயம் மிகச் சிறப்பான பணியை செய்து வருகிறது“ என்றார்.
இறுதியாக தீர்ப்பளித்த நீதிபதி, தடை செய்யப்பட்ட அமைப்பு இத்தீர்ப்பாயத்தின் விசாரணையில் பங்கு கொள்ளவில்லை என்ற ஒரே காரணத்துக்காவே இத்தீர்ப்பாயம் ஒருதலைபட்சமாக மத்திய அரசின் முடிவை அங்கீகரிக்கும் வகையில் முடிவெடுக்கும் என்று கூற முடியாது. (பாக்கத்தானே போறோம்) இத்தீர்ப்பாயம் தனக்கு முன்னால் சமர்ப்பிக்கப் பட்ட ஆதாரங்களை தீர ஆராய்ந்து ஒரு சுதந்திரமான முடிவை பாரபட்சமின்றி எடுக்கும். ஆவணங்களின் நகல்களை வழங்க வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கையை இறுதி விசாரணையின் போது தீர்ப்பாயம் பரிசீலிக்கும். “ என்று நீதிபதி உத்தரவை வாசித்து முடித்த போது வைகோ எழுந்தார்.
நான் இது தொடர்பாக வாதிட்டதையும் தீர்ப்பில் சேர்க்க வேண்டும் என்றார்.
உடனே நீதிபதி (அவருக்கு ஆதரவு கிடைத்து விட்டதே…) Presenting his viewpoint on the applicationof Mr.Radhakrishnan, Mr.Vaiko has submitted ad in my opinion rightly too, that even in the absence of representation from LTTE, the hearing before the Tribunal serve a very useful public interest since the Tribunal will have to apply its own judicial mind to such evidence which is produced before it and then make an adjudication as to whether there are sufficient grounds and material which would justify the ban imposed upon the organization.
அதன் பிறகு, க்யூ பிரிவின் எஸ்.பியாக இருக்கும் சம்பத் குமார் இரண்டாவது சாட்சியாக விசாரிக்கப் பட்டார். இந்த முறை நீதிபதி கவனமாக சம்பத் குமாரையே பேச விட்டார். நேற்று போல, நீதிபதியே எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார் என்று தயாரிப்பு இல்லாமல் தீர்ப்பாயத்திற்கு வந்திருந்த சம்பத் குமாருக்கு அதிர்ச்சி.
நீதிபதி கேள்விகள் கேட்கக் கேட்க சம்பத் குமாரே பதிலளித்தார்.
“நான் பிரமாண வாக்குமூலத்தை 24.09.2012 அன்று தாக்கல் செய்தேன். என் வாக்குமூலத்தோடு இரண்டு தொகுதி ஆவணங்களை தாக்கல் செய்துள்ளேன். முதல் தொகுதியில் பல்வேறு அமைப்புகள் தடை செய்யப்பட்ட அறிவிக்கைகள் உள்ளன. இரண்டாவது தொகுதியில் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்கள் மீது பதிவு செய்யப்பட்ட பல்வேறு வழக்குகள் குறித்த விபரங்கள் உள்ளன. தமிழ்நாடு விடுதலைப் படை மற்றும் தமிழ்நாடு மீட்சிப் படை ஆகிய இரண்டு இயக்கங்கள் தடை செய்யப்பட்டவை. இந்த இரண்டு இயக்கங்களின் கொள்கை அறிக்கைகளை நான் தாக்கல் செய்யவில்லை.
தமிழ்நாட்டை ஈழத்தோடு இணைத்து உள்ள ஒரு வரைபடத்தை தாக்கல் செய்துள்ளேன். அது இணையத்திலிருந்து எடுக்கப்பட்டது. தமிழ்நாட்டோடு ஈழத்தை இணைப்பதற்கு புலிகள் அமைப்பு திட்டமிட்டிருந்தனர் என்பதற்கு இது மட்டுமே ஆதாரம். இந்தியாவுக்கான அச்சுறுத்தல் இன்னும் இருக்கிறது என்பதற்கு, அந்த இணையதளம் இன்னும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பது மட்டுமே ஆதாரம் என்றார்.
ஃபோட்டோ ஷாப்பில் அடிப்படை அறிவு உள்ள ஒரு சிறுவன் கூட இப்படிப்பட்ட வரைபடத்தை தயாரிக்க முடியும். ஆனால் இந்த வரைபடத்தையே ஆதாரமாக வைத்து, புலிகள் அமைப்பை தடை செய்ய வேண்டும் என்று வாதிட்டார் க்யூ பிரிவு எஸ்.பி சம்பத் குமார். என்னா ஒரு அறிவு.. தெறமை… (சம்பத் குமார் சார்… நெற்குன்றம் வீடு அலாட்மென்டை ஏன் சார் திருப்பிக் குடுத்தீங்க… க்யூ ப்ரான்ச்ல வசூல் பத்தலையா… ?)
அடுத்த விசாரணை அக்டோபர் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் கொடைக்கானலிலும் 22 அன்று மதுரையிலும் நடக்கும் என்று நீதிபதி அறிவித்தார்.
வாக்குமூலம் பதிவு செய்து முடித்ததும் எழுந்த வைகோ… “மை லார்ட்… நான் வெளிநாடு செல்கிறேன். 20, 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் எனக்குப் பதிலாக எனது வழக்கறிஞர் ஆஜராவார். நான் வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்ததும் இறுதி விசாரணையை வைத்துக் கொண்டால் எனக்கு வசதியாக இருக்கும் என்றார். அதை பார்த்துக் கொள்ளலாம் மிஸ்டர் வைகோ என்ற நீதிபதி, எழுந்து ஒரு பெரிய கும்பிடாகப் போட்டு விட்டு எழுந்து சென்று விட்டார்.
இத்தோடு நாடகத்தின் இரண்டாவது காட்சி முடிந்தது. நாடகத்தின் அடுத்த காட்சி குறித்த விரிவான வர்ணனைகளுக்கு சவுக்கு தளத்தை தொடர்ந்து பாருங்கள்.
அதெல்லாம் சரி….. கொடைக்கானலில் எதற்கு விசாரணை… ? எவண்டா அது…. அதிகப்பிரசங்கித் தனமா கேள்வி கேக்கறது… நீதிபதி விக்ரம்ஜித் சென் ஊட்டியை சுத்திப் பாக்கலாம், வி.கே.ஜெயின் கொடைக்கானலை சுத்திப் பாக்கக் கூடாதா…. இந்த மாதிரியெல்லாம் கேள்வி கேட்டா நீதிமன்ற அவமதிப்பு வழக்கு வரும். It would amount intereference in the administration of justice.
You have come from a long way sir. Proud of you.at the same time very inspiring personality..