சமீபத்தில் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதியின் முன் ஜாமீன் மனு, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் விசாரணைக்கு வந்தது. அந்த விசாரணையில் அரசுத் தரப்பு வழக்கறிஞராக ஆஜரானார் வண்டு முருகன். அப்போது அழகிரியின் மகன் துரை தயாநிதி, க்ரானைட் விவகாரத்தில் ஏராளமான ஊழல் புரிந்துள்ளார் என்றும் அவரால் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும், அவரை கைது செய்து விசாரிக்க வேண்டியது, காவல்துறைக்கு அவசியம் என்றும் வாதிட்டார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி, நீங்கள் சொல்லும் இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இருக்கிறதா என்று கேட்டார்…
அப்போது வண்டு முருகன் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த ஆதாரத்தைப் பார்த்து நீதிபதி மட்டுமல்ல…. அங்கே இருந்தவர்கள் அனைவருமே அதிர்ந்து போனார்கள். அந்த வாரம் வெளி வந்திருந்த ஜுனியர் விகடனை எடுத்து நீதிபதியிடம் கொடுத்து விட்டு, ஒரு அற்புதமான ஆதாரத்தை சமர்ப்பித்தது போல பெருமையாக ஒரு பார்வையை வேறு பார்த்தார். துரை தயாநிதி தரப்பு வழக்கறிஞர் இதற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்தார். பத்திரிக்கைகளில் வரும் செய்தியை ஆதாரமாகக் கொண்டால் யார் மீது வேண்டுமானாலும் வழக்கு பதிவு செய்யலாம் என்று எதிர்ப்புக் குரல் எழுந்ததும், மதுரை காவல்துறையினர், அது வரை செய்திருந்த விசாரணையின் முன்னேற்றம் குறித்த அறிக்கையை கொடுத்தனர். அதை நீதிமன்றத்தில் சமர்ப்பித்ததும்தான், துரை தயாநிதியின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இது ஒரு புறம் இருக்கட்டும். ஜெயலலிதா ஜுனியர் விகடன் மீது கடும் கோபம் கொண்டு, ஜுனியர் விகடன் மீது அவதூறு வழக்கு மேல் வழக்காகப் போட்டுக் கொண்டு இருக்கிறார். இந்நிலையில், நவநீதகிருஷ்ணன் ஜுனியர் விகடனைப் போய் ஆதாரமாகக் கொடுக்கிறாரே… என்று அதிமுக வழக்கறிஞர்கள் ஒரு புறம் வியந்து போய் இருக்கிறார்கள்.
வண்டு முருகனின் வாதத்திறமையைப் பார்த்து, நீதிமன்றமே அதிர்ந்து போனதாமே… அப்படியா ?