அடக்கம் அமரருள் உய்க்கும், அடங்காமை ஆரிருள் உய்த்து விடும் என்றார் வள்ளுவர். இந்தக் குறளைப் படித்து பின்பற்ற வேண்டியவர் சென்னை மாநகர ஆணையாளராக இருக்கும் ஜார்ஜ்.
ஜார்ஜ் சென்னை மாநகர காவல் ஆணையாளராக பொறுப்பேற்றதில் பலருக்கு வருத்தம். சிலருக்கு மகிழ்ச்சி. மகிழ்ச்சியடையும் சிலர் யாரென்றால், சென்னை பத்திரிக்கை உலகில் இருக்கக் கூடிய மலையாளிகள். ஜார்ஜ் கமிஷனராக ஆனதும், ஏதோ தாங்களே கமிஷனராக ஆனது போல அகமகிழ்கிறார்கள். வருத்தமடையும் பலர் யாரென்றால், கமிஷனர் அலுவலகத்தில் கட்டப்பஞ்சாயத்து செய்பவர்கள், மத்தியக் குற்றப்பிரிவில் நடக்கும் பஞ்சாயத்துக்களில் கலந்து கொண்டு, ஒரு தரப்பிலோ, இரு தரப்பிலுமோ பணத்தை வசூல் செய்பவர்கள், கமிஷனர் பெயரைச் சொல்லி சென்னை நகரில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் பேரம் நடத்துபவர்கள் போன்றவர்கள் வருத்தமடைந்துள்ளனர்.
இவர்கள் வருத்தமடைவதற்கான முதல் காரணம், ஜார்ஜ் அப்பழுக்கற்ற நேர்மையானவர் என்பதல்ல.. அவ்வளவு எளிதாக ஜார்ஜை பார்க்க முடியாது என்பதே. எளிதில் அணுக முடியாத அதிகாரியாக ஜார்ஜ் இருப்பதால், இது போன்ற பேரங்களை நடத்துவதில் சிரமம் உள்ளது. உயர் அதிகாரிகளின் பெயரைச் சொல்லி பேரம் நடத்துபவர்கள், கட்டப்பஞ்சாயத்து செய்பவர்களில் பெரும்பாலானோர் கையாளும் உத்தி என்ன தெரியுமா ? ஒரு அதிகாரியின் அறைக்குள்ளே சென்று, “இன்னைக்கு பயங்கர வெயில் சார்” என்று பேசி விட்டு, வெளியே வந்து “அய்யா கிட்ட உங்க மேட்டர்தான் பேசிட்டு வந்துருக்கேன்… முடிச்சு தர்றேன்னு சொல்லியிருக்காரு“ என்று பீலா விடுபவர்களே அதிகம். இது போன்ற வேலைகள் ஜார்ஜிடம் எடுபடாது. யாரையாவது ஜார்ஜ் பார்த்தால்தானே பீலா விடுவதற்கு. யாரையுமே பார்க்கவில்லை என்றால்… ?
சவுக்கு பல முறை சொல்லியுள்ளது போல, சென்னை மாநகர ஆணையாளராக வேண்டும் என்பது, ஒவ்வொரு ஐபிஎஸ் அதிகாரியின் கனவு. இந்தக் கனவை நிறைவேற்றுவதற்காக, அரசியல்வாதிகளின் செருப்பைத் துடைக்கக் கூட இந்த அதிகாரிகள் தயங்க மாட்டார்கள் என்பது முகத்தில் அறையும் உண்மை. அப்படியே கமிஷனராகி விட்டாலும் அந்தப் பதவியை தக்கவைத்துக் கொள்வதற்கு அவர்கள் எந்த விதமான கீழ்த்தரமான காரியத்தையும் செய்யத் தயங்க மாட்டார்கள். சென்னை மாநகர கமிஷனர் பதவி தரும் புகழும், பணமும் அப்படிப்பட்ட போதை. அந்தப் போதைக்கு அடிமையான அதிகாரிகள் ஏராளம்.
இந்தப் போதையில் நிரந்தரமாக மயங்கிக் கிடப்பதற்கு ஒரு அதிகாரிக்கு பெரிதும் உதவுவது பத்திரிக்கையாளர்கள். பத்திரிக்கைகளில் வரும் சின்ன செய்தி முதல், பெரிய செய்தி வரை தங்கள் பதவியை தக்கவைத்துக் கொள்வதில் பெரிய அளவு காரணியாக இருக்கும் என்பதால், வழக்கமாக கமிஷனராக இருக்கும் அனைத்து அதிகாரிகளும், அனைவரும் படிக்கும் இந்து மற்றும் தினத்தந்தி முதல், யாருமே படிக்காத பத்திரிக்கையின் செய்தியாளர்கள் உட்பட அனைவரையும் அப்படிக் கவனிப்பார்கள். அவர்களுக்கு என்ன வேண்டுமென்றாலும் செய்து தரப்படும். அவர்கள் பரிந்துரையில் வரும் புகார்கள் மீது சட்டம் தன் கடமையை வேக வேகமாகச் செய்யும். அவர்களுக்கு வேண்டப்பட்ட நபர்களின் மீது சட்டம் புறமுதுகு காட்டி ஒளிந்து கொள்ளும். சென்னையில் க்ரைம் பீட் பார்க்கும் பத்திரிக்கையாளர்களுக்கு அவர்கள் அலுவலகங்களில் உள்ள மரியாதையே தனி. இரவு 12 மணிக்கு எங்காவது பத்திரிக்கையாளர்களின் நண்பர்கள் குடித்து விட்டு காவல்துறையிடம் மாட்டினால் காப்பாற்றுவது முதற்கொண்டு, பத்திரிக்கை முதலாளிகளின் சொத்துத் தகராறுகளை தீர்த்து வைப்பது வரை இந்தக் க்ரைம் பீட் பார்க்கும் பத்திரிக்கையாளர்கள் தலையிட்டு தரகு வேலை பார்ப்பதால் இவர்களுக்கான சிறப்பான அந்தஸ்து உண்டு.
பத்திரிக்கையாளர்களோடு நல்ல உறவைப் பேணவில்லை என்றால், ஒரு நபர் கமிஷனராக நீண்ட நாள் நீடிக்க முடியாது என்பது ஒரு விதியாகவே மாறி விட்டது. இது போன்ற காரணங்களால், சென்னை மாநகர காவல் ஆணையாளர்களாக நியமிக்கப்பட்ட அனைவரும், பத்திரிக்கையாளர்களை நேரடியாகவும், மறைமுகமாகவும் காக்காய் பிடிக்கும் வேலைகளில் பலே கில்லாடிகளாக திகழ்ந்து வந்துள்ளனர். இதற்கு ஒருவரும் விதிவிலக்கு கிடையாது. கமிஷனரை பார்க்க யார் போனாலும் காத்திருக்காமல் சந்திக்க முடியாத என்ற நிலை இருக்கும்போது, பத்திரிக்கையாளர்கள் யார் வந்தாலும் நேரடியாக சந்திக்கலாம் என்ற நிலை எப்போதும் உண்டு. இதைத் தவிர வாரந்தோறும் நடக்கும் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பைத் தொடர்ந்து வெளிவரும் செய்திகளில் கமிஷனரை ஆகா ஓகோ என்று புகழ்வது கமிஷனரோடு நெருக்கமாவதற்கான ஒரு வழி.
ஜார்ஜ் கமிஷனராக நியமிக்கப்பட்டதுமே, இது போன்ற தரகு வேலை பார்க்கும் பத்திரிக்கையாளர்களின் வயிற்றில் புளி கரைத்து விட்டது. என்னடா இந்த ஆள் நம் பிழைப்புக்கே உலை வைத்து விட்டாரே என்று கவலைப்பட ஆரம்பித்து விட்டார்கள்.
சென்னை மாநகர கமிஷனராகும் அதிகாரிகள், பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தி, பத்திரிக்கையாளர்களோடு தனிப்பட்ட முறையில் அறிமுகம் ஏற்படுத்திக் கொண்டு நட்பு பாராட்டுவது என்பது காலங்காலமாக சென்னை மாநகர காவல்துறையில் நடைமுறையில் உள்ள ஒரு வழக்கம். இந்த வழக்கத்தை முதன் முறையாக உடைத்து எறிந்திருக்கிறார் ஜார்ஜ். கமிஷனராக பதவியேற்றதும் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு எதையும் ஜார்ஜ் நடத்தவில்லை. இவரைச் சந்திப்பதும் அவ்வளவு எளிதான காரியம் இல்லை. ஜார்ஜை தனிப்பட்ட முறையில் சந்திக்க விரும்பும் பத்திரிக்கையாளர்களையும், அப்பாயின்ட்மென்ட் வாங்கி விட்டு வருமாறு அறிவுறுத்தியிருக்கிறார் ஜார்ஜ்.
இது வரை எல்லாம் சரியாகத்தான் போகிறது. ஆனால், பத்திரிக்கையாளர்கள் மத்தியில் உள்ள முணுமுணுப்பு என்னவென்றால், இந்து, டைம்ஸ் ஆப் இந்தியா, டெக்கான் க்ரானிக்கிள் போன்ற ஆங்கிலப் பத்திரிக்கைகளைச் சேர்ந்த பத்திரிக்கையாளர்களை மட்டும் ஜார்ஜ் சந்திக்கிறார் என்பதே. ஆங்கிலப் பத்திரிக்கைகளில் மட்டும் தன்னைப் பற்றிய செய்திகள் வந்தால் போதும், ஜெயலலிதா ஆங்கிலப் பத்திரிக்கைகளை மட்டுமே படிப்பார் என்ற அடிப்படையிலேயே ஜார்ஜ் இது போன்ற வழக்கத்தை கையாளக் கூடும். இது ஜார்ஜ் தன்னை ஜார்ஜ் மன்னராகவே கருதிக் கொள்கிறார் என்பதையே காட்டுகிறது.
ஒன்று ஜார்ஜ் அங்கீகரிக்கப்பட்ட பத்திரிக்கையின் எந்தப் பத்திரிக்கையாளர்கள் வந்தாலும் சந்திக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் ஒட்டுமொத்தமாக தனிப்பட்ட முறையில் சந்திப்பதைக் கூட தவிர்க்க வேண்டும். ஒரு சில பத்திரிக்கைகளைச் சேர்ந்த பத்திரிக்கையாளர்களை மட்டும் சந்திப்பது, மற்றவர்களைத் தவிர்ப்பது என்பது நியாயமற்றது.
இன்று ஒரு சம்பவம் நடந்தது. ஜேக்கப் சுதீர் என்ற 14 வயதுச் சிறுவன் சென்னை அயனாவரத்திலிருந்து நேற்று கடத்தப்பட்டான். கடத்தி ஆந்திராவுக்கு எடுத்துச் செல்லப்பட்ட அந்தச் சிறுவனை இன்று அதிகாலை 3 மணிக்கு சென்னை காவல்துறையினர் மீட்டனர். இது தொடர்பாக பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெறும் என்று காலை முதலே தகவல் வெளியானது. காலை 11 மணி முதல் பத்திரிக்கையார்களும், தொலைக்காட்சி சேனல்களைச் சேர்ந்த நிருபர்களும் சென்னை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் காத்திருந்தனர். பிற்பகல் மூன்று மணிக்கு பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெறும் என்று சொல்லப்பட்டது. மூன்று மணிக்கும் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெறவில்லை. மாலை ஐந்தரை மணிக்கு பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெறும் என்று சொல்லப்பட்டது. மாலை தொலைக்காட்சி செய்தியாளர்கள் மைக்கை போட்டு, கேமராவை தயார் செய்து காத்திருந்தால், கமிஷனர் அலுவலக அதிகாரிகள் அந்த மைக்கையும் கேமராவையும் அப்புறப்படுத்துமாறு உத்தரவிட்டனர். அச்சு ஊடகத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளே சென்று தேவையான செய்திகளை சேகரித்துக் கொண்டு சென்று விட்டார்கள். ஆனா காட்சி ஊடகத்தினர் அனுமதிக்கப்படவில்லை.
என்னவென்று புரியாத பத்திரிக்கையாளர்கள் எரிச்சலடைந்து வெளியே வந்து, இந்த பத்திரிக்கை சந்திப்பை நடத்தவே வேண்டாம், இதைப் புறக்கணிப்பது என்று முடிவெடுத்தனர். புறக்கணிப்பு முடிவை அறிவித்து விட்டு, காட்சி ஊடக செய்தியாளர்கள் அனைவரும் வெளியேறிய பிறகு, கமிஷனர் அலுவலக மக்கள் தொடர்பு அதிகாரி, ஒவ்வொரு செய்திச் சேனலின் தலைமை அலுவலகத்தை தொடர்பு கொண்டு பத்திரிக்கையாளர் சந்திப்பு நடக்கிறது, உங்கள் செய்தியாளர்களை அனுப்புங்கள் எனறு கோருகிறார்கள்.
ஜெயா தொலைக்காட்சி, ஜி டிவி மற்றும் புதிய தலைமுறை சேனல்கள் மட்டும் தனித்தனியே சென்று இது தொடர்பான வீடியோ பதிவை செய்தன.
செய்திகளை புறக்கணிப்புச் செய்த மற்ற ஊடகங்களின் நிருபர்கள், சென்னை மாநகர ஆணையாளர் அலுவலகத்தில் உள்ள பத்திரிக்கையாளர் அறையில் கூடி, அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து விவாதித்தனர். பத்திரிக்கையாளர் சங்க நிர்வாகிகளுக்குத் தகவல் தெரிந்ததும், அவர்களும் வருகை தந்தனர். இதன் நடுவே கமிஷனர் அலுவலக மக்கள் தொடர்பு அதிகாரி கூடுதல் கமிஷனர் தாமரைக் கண்ணனை பாருங்கள். அவர் பேட்டி தரத் தயாராக இருக்கிறார் என்று அழைத்தவண்ணம் இருந்தார்.
இறுதியாக, கூடுதல் ஆணையரைச் சென்று பார்ப்பது. அவரிடம் பத்திரிக்கையாளர்களிடம் தவறான தகவலைச் சொல்லி காலை முதல் காக்க வைத்து அலைக்கழித்ததற்கு அவரிடம் தங்கள் முறையீட்டைச் சொல்லி இது தொடரக் கூடாது என்பதை தெரிவிக்க வேண்டும் என்று முடிவெடுத்தனர்.
தாமரைக்கண்ணனைச் சந்திக்க பத்திரிக்கையாளர் சென்று கொண்டிருந்தபோது வழியிலேயே வீட்டுக்குக் கிளம்பிக் கொண்டிருந்த ஜார்ஜை சந்திக்க நேர்ந்தது.
அவரிடம் கமிஷனர் அலுவலக பி.ஆர்.ஓ பத்திரிக்கையாளர்களை அறிமுகப்படுத்தினார். விண் டிவி நிருபரை அறிமுகப்படுத்தியதும் ஜார்ஜ், “ஓ அத்தனை பேரும் விண் டிவியா ?” என்று கேட்டார். (என்ன அறிவு பாருங்க… ஒரே டிவி சேனலைச் சேர்ந்த அத்தனை பேர் எதற்காக வர வேண்டும்… ?) பிறகு பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடந்த குளறுபடிகளைச் சொன்னதும், அச்சு ஊடக நிருபர்களுக்கு தரும் முன்னுரிமை குறித்தும் அவரிடம் சுட்டிக்காட்டப்பட்டது.
“அச்சு ஊடகமோ… காட்சி ஊடகமோ… எந்தவிதமான பாகுபாடும் நான் பார்ப்பது கிடையாது. இன்று நடந்த குற்றம் பெரிய அளவு செய்தி மதிப்பு உள்ள குற்றம் கிடையாது. அதனால் நான் பத்திரிக்கையாளர்களைச் சந்திக்கவில்லை. ஆனால் இது குறித்து பேசுமாறு கூடுதல் கமிஷனரிடம் சொல்லியுள்ளேன். பெரிய அளவிலான குற்றங்கள் நடந்தால் நானே பேசுவேன். மற்றபடி உங்களுக்கு காட்சி ஊடகங்களுக்கு பேட்டி தேவைப்பட்டால், கூடுதல் கமிஷனர் பேசுவார்“ என்று கூறினார்.
அப்போது ஒரு தேசிய ஊடகத்தைச் சேர்ந்த ஒரு பத்திரிக்கையாளர் அவரிடம் அறிமுகப்படுத்தப்பட்டார். அந்தப் பத்திரிக்கையாளர் பேட்டிக்காக காக்கவைக்கப்பட்டது குறித்து ஜார்ஜிடம் சுட்டிக் காட்டினார். உடனே ஜார்ஜ் அறிவாளி போல கேள்வி கேட்டார். “இன்று நடந்த சம்பவம் என்ன அவ்வளவு பெரிய சம்பவமா.. இதை உங்கள் சேனலில் போடுவீர்களா “ என்று கேட்டார். உடனே அந்தப் பத்திரிக்கையாளர், செய்தி போடுவதா வேண்டாமா என்பதை நான் முடிவு செய்ய இயலாது, டெல்லி அலுவலகம்தான் முடிவுசெய்யும். என் வேலை செய்தி சேகரிப்பது என்றார். அத்தோடு ஜார்ஜ் அதைப்பற்றிப் பேசவில்லை.
ஜார்ஜ் பேசிக் கொண்டிருந்ததை ஒரு தொலைக்காட்சி கேமரா மேன், படமெடுக்க முயன்றார். உடனே ஜார்ஜ், கேமராவை ஆஃப் பண்ணுப்பா என்று அவரைத் தடுத்தார். உங்களுக்கு ஏதாவது தேவையென்றால் கூடுதல் கமிஷனரை அணுகுங்கள் என்று கூறி விட்டு கிளம்பி விட்டார் ஜார்ஜ்.
சென்னை மாநகரத்தின் ஆணையாளராக இருக்கும் ஒரு அதிகாரி, தேவையற்ற முறையில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்து அளவளாவிக் கொண்டிருப்பது எப்படித் தவிர்க்க வேண்டியதோ, அதே போல தேவையான நேரத்தில் சந்திப்பதும் அவசியமானது. ஒரு 14 வயதுச் சிறுவன் கடத்தப்பட்டு, உடனடியாக அவன் மீட்கப்பட்டது ஆங்கில ஊடகங்களுக்கு பெரிய செய்தியாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், தமிழ் ஊடகங்களுக்கு அது பெரிய செய்தி. எது பெரிய செய்தி, எது சிறிய செய்தி என்பதை முடிவு செய்ய வேண்டியது, ஊடகங்களும் ஊடகவியலாளர்களும்தானே தவிர ஜார்ஜ் அல்ல.
ஒரு மாநகர ஆணையாளரின் பணி, சென்னை மாநகரத்தில் குற்றங்களைக் கண்டுபிடிப்பது, சட்டம் ஒழுங்கு மட்டும் போக்குவரத்தைப் பராமரிப்பது மட்டுமல்ல. பத்திரிக்கையாளர்களைச் சந்தித்து தேவையான செய்திகளை வழங்குவதுமே. பத்திரிக்கையாளர்களிடம், கேமரா முன்பாக ஜார்ஜ் பேச வேண்டும் என்று அவர்கள் விரும்புவது, ஜார்ஜ் லியனார்டோ டி கேப்ரியோ போல அழகாக இருக்கிறார் என்பதால் அல்ல… இத்தனை நாட்களாக ஒரு பெரிய குற்றம் கண்டுபிடிக்கப்பட்டால் கமிஷனர்கள் பேட்டியளிப்பதே வழக்கமாக இருந்து வந்தது. அந்த வழக்கத்தின் அடிப்படையிலேயே பத்திரிக்கையாளர்கள் ஜார்ஜை சந்திக்க காத்திருந்தார்கள்.
இந்த வழக்கத்தை மாற்ற வேண்டும் என்று ஜார்ஜ் விரும்பினால் இன்று இரவு பத்திரிக்கையாளர்கள் மத்தியில் செய்த அறிவிப்பைப் போல, இனி பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கூடுதல் ஆணையாளர்தான் பேட்டியளிப்பார் என்று வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். பத்திரிக்கையாளர்கள் தேவையில்லாமல் காக்க வைப்பதை தவிர்க்க வேண்டும். ஏதாவது பெரிய குற்றம் கண்டுபிடிக்கப்பட்டால் உடனடியாக அறிக்கை வெளியிட ஏற்பாடு செய்ய வேண்டும். அறிக்கையோடு சம்பந்தப்பட்டவர்களின் புகைப்படங்களையும் பத்திரிக்கை அலுவலகத்துக்கு அனுப்பி வைத்தால் அவர்கள் எதற்காக வந்து காத்துக் கிடக்கப் போகிறார்கள் ?
இந்து, டைம்ஸ் ஆப் இந்தியா மற்றும் டெக்கான் க்ரானிக்கிள் எப்படி ஊடகங்களோ அதே போல காட்சி ஊடகங்களும் ஊடகங்களே. ஜெயலலிதா விண் டிவி பார்க்க மாட்டார் என்பதற்காக விண் டிவியை யாருமே பார்க்க மாட்டார்கள் என்று ஜார்ஜ் நினைத்துக் கொள்ளக் கூடாது. ஜெயலலிதா பார்க்கும் செய்தியில் வரவேண்டும் என்று ஜார்ஜ் நினைத்தால், இரவு 10.30 மணிக்கு ஜெயா டிவியில் ஆங்கில செய்தி வாசிக்கத்தான் ஜார்ஜ் செல்ல வேண்டும். ஒரு காவல் துறை அதிகாரியாக ஜார்ஜ் எப்படி தன் கடமையைச் செய்கிறாரோ, அதே போலத்தான் ஊடகவியலாளர்களும் தங்கள் கடமையைச் செய்கிறார்கள். செய்தி சேகரிப்பது அவர்கள் கடமை மட்டுமல்ல… உரிமை. மக்கள் வரிப்பணத்தில் ஊதியம் வாங்கும் ஜார்ஜ் போன்ற அதிகாரிகள், ஊடகங்கள் வாயிலாக மக்களுக்கு பதில் சொல்லக் கடமைப் பட்டிருக்கிறார்கள். இந்தப் பத்திரிக்கையை சந்திக்க மாட்டேன்… அந்தப் பத்திரிக்கையைச் சந்திக்க மாட்டேன் என்று சொல்வது முறையற்ற செயல் மட்டுமல்ல.. ஜார்ஜின் அழிவுக்கும் வழி வகுக்கும் செயல்.
ஜார்ஜை சென்னை மாநகர ஆணையாளர் பதவியிலிருந்து தூக்குவதற்காக வல்லூறுகள் போல மற்ற அதிகாரிகள் காத்துக் கொண்டிருக்கின்றனர். இது ஜார்ஜுக்கும் நன்றாகவே தெரியும். இருந்தும் யாரையும் மதிக்காமல், ஐ யம் அன் அப்பாடக்கர் என்று ஜார்ஜ் இருப்பதற்குக் காரணம், ஜெயலலிதாவின் நேரடிப் பார்வையில் இருக்கிறோம்… ஜெயலலிதாவின் ஆசி நமக்கு உண்டு என்ற இறுமாப்பே. ஜெயலலிதாவை நம்பி இதே போல இறுமாப்பாக இருந்த பல அதிகாரிகள் இருந்த இடம் தெரியாமல் போயிருக்கிறார்கள். ஜெயலலிதாவின் ஆசியோடு டிஜிபி ஆன ரவீந்திரநாத், அதே ஜெயலலிதாவால் ஆறே மாதத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஜெயலலிதாவை நம்பி சென்னை மாநகர ஆணையாளராக பொறுப்பேற்ற முத்துக் கருப்பனைக் கேட்டுப்பாருங்கள். அவர் சஸ்பெண்ட் ஆன கதையைச் சொல்வார். ஜெயலலிதாவின் கடைக்கண் பார்வை இருக்கிறது என்பதற்காக தமிழ்ப் பத்திரிக்கையாளர்களை ஜார்ஜ் இப்படி தொடர்ந்து புறக்கணித்து மரியாதைக் குறைவாக நடத்துவாரேயானால், அதற்குரிய விலையை அவர் விரைவில் கொடுக்க நேரும்.
அவர் அவ்வாறு அதற்குரிய விலையைக் கொடுக்கும்போது, “சாரே ஞான் நிங்களிடம் சம்சாரிக்கணும்“ என்று மலையாள பத்திரிக்கையாளர்கள் அவருக்கு உதவ மாட்டார்கள். ஜார்ஜ் அநியாயமாக பழிவாங்கப்பட்டாரென்றால், அந்த அநியாயத்தின் பின்னணியை வெளிக் கொணர்வது தமிழ் ஊடகங்களாக மட்டுமே இருக்கும்.
நடந்த இந்த சம்பவத்தில் குறிப்பிட வேண்டிய முக்கிய விஷயம், புதிய தலைமுறை சேனலின் நடத்தை. ஜெயா டிவியை கணக்கில் சேர்க்க வேண்டாம். அது அடிமைகளின் சேனல். ஜி டிவியின் நிருபர், கூடுதல் கமிஷனர் கேட்டுக் கொண்டதற்கிணங்க அவர் பேட்டியை எடுத்திருந்தாலும், அது ஒளிபரப்பப் பட மாட்டாது என்று அவர் தலைமை அலுவலகத்தில் கேட்டுக் கொண்டு உறுதி படுத்தினார். ஆனால் இந்த புதிய தலைமுறை சேனல் இருக்கிறதே… பத்திரிக்கையாளர் சங்க நிர்வாகிகள் அந்தச் சேனலின் செய்திக்குப் பொறுப்பாக இருக்கும் ப்ரேம் சங்கர் என்பவரிடம் பேசினார்கள். அவரோ பருப்பு போலவே பேசினார். அதாவது, பத்திரிக்கையாளர்களை காவல்துறை அவமானப்படுத்தியது வருத்தத்திற்குரிய விஷயமே என்றாலும், மக்களுக்கு செய்தி வழங்காமல் அவரால் இருக்க முடியாதாம். அந்த செய்தியை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டியது அவரது கடமையாம். மிஸ்டர் ப்ரேம் சங்கர், எஸ்.ஆர்.எம் கல்லூரியின் மருத்துவக் கல்லூரியில் ஒரு இடத்துக்கு லட்சக்கணக்கில் பணம் வாங்கிக் கொண்டு சீட் வாங்கிக் கொடுக்கும் ப்ரோக்கரை சவுக்குக்குத் தெரியும். நாளை உங்கள் நிருபரை அனுப்பி ஸ்டிங் ஆபரேஷன் பண்ண முடியுமா உங்களால் ? ஜார்ஜ் அப்பாடக்கர் போலப் பேசுகிறார் என்றால், ப்ரேம் சங்கர் அப்பாடக்கரின் அப்பா போல பேசுகிறார். ஜார்ஜ் என்ற மலையாளியைப் பாதுகாக்க, ப்ரேம் சங்கர் என்ற மலையாளி முயல்கிறாரோ என்ற சந்தேகம் வரத்தான் செய்கிறது. ஆனால் எல்லாவற்றையும் நிறக்கண்ணாடி போட்டுப் பார்க்க விரும்பவில்லை.
ப்ரேம் சங்கர்
உங்கள் சேனலின் செய்தியாளர்கள் திரிசூலத்தில் தாக்கப்பட்ட போது, அவர்களுக்காக குரல் கொடுத்ததும், காவல்துறையை நடவடிக்கை எடுக்க அழுத்தம் கொடுத்ததும் இதே பத்திரிக்கையாளர்கள் மற்றும் பத்திரிக்கையாளர் மன்றம்தான் என்பதை மறந்து விடாதீர்கள். உங்கள் செய்தியாளர்கள் யாராவது நாளை தாக்கப்பட்டால் அவர்களுக்கா குரல் கொடுக்க இந்தப் பத்திரிக்கையாளர் கூட்டம்தான் வரும். இந்த ஜார்ஜ் வரமாட்டார் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
திரு.ஜார்ஜ் அவர்களுக்கு. வள்ளுவர்,
அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்
மக்கட்பண்பு இல்லா தவர் என்கிறார். அரம் போன்ற கூர்மையான அறிவுடைய மேதையாக இருந்தாலும், மக்களுக்குரிய பண்பு இல்லாதவர் மரத்துக்கு ஒப்பானவரேயாவார்.
நீங்கள் மெத்தப் படித்தவர். அமெரிக்காவெல்லாம் சென்று படித்தவர். மிகுந்த அறிவாளி என்பதில் சந்தேகம் இல்லை. நீங்கள் அறிவாளியாக இருக்கலாம். ஆனால் மற்றவர்கள் அனைவரும் முட்டாள் என்று மட்டும் எண்ணி விடாதீர்கள். அப்படி எண்ணினால், உங்களை விட பெரிய முட்டாள் வேறு யாரும் இல்லை.