மருத்துவத்தைப் போன்ற புனிதமான தொழில் உலகில் வேறு எதுவுமே கிடையாது. வேறு எந்தத் தொழிலுக்கும் இல்லாத ஒரு பெருமை மருத்துவத் தொழிலுக்கு உண்டு. உயிரைக் காப்பாற்றும் வல்லமை படைத்தவர்கள் மருத்துவர்கள் என்பதாலேயே மருத்துவர்களை கடவுளாகவே பார்க்கிறார்கள். அறுவை சிசிச்சை செய்து உயிரைக் காப்பபாற்றும் மருத்துவர்களை, சம்பந்தப்பட்ட நோயாளிகளின் உறவினர்கள் கையெடுத்துக் கும்பிடும் காட்சியை பல முறை பார்த்திருப்பீர்கள். இந்தியா மட்டுமல்லாமல் உலகெங்கிலுமே மருத்துவர்களுக்கு தனி மரியாதை உண்டு. மற்ற தொழிலில் ஈடுபடுபவர்களிடம் ஏராளமான வரி வசூலிக்கும் அமெரிக்கா, இங்கிலாந்து ஐரோப்பா போன்ற நாடுகள், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் எவ்வித வரியும் வசூலிப்பதில்லை என்பதே, அச்சமூகம் மருத்துவர்களுக்கு எந்த அளவு மரியாதை தருகிறது என்பதை விளக்கும். சமூகத்தில் சாதனை செய்தவர்களுக்கு பல்கலைக்கழகங்கள் டாக்டர் என்ற பட்டத்தை வழங்குவதன் காரணமே, டாக்டர் என்ற வார்த்தையோடு சேர்ந்திருக்கும் மரியாதைதான்.
அப்படிப்பட்ட டாக்டர்கள் பணத்துக்காக சோரம் போவதை விட ஒரு சோகம் எங்காவது இருக்க முடியுமா ? அப்படிப்பட்ட ஒரு சோகத்தைப் பற்றிப் பேசத்தான் இக்கட்டுரை. தமிழகத்தைப் பொறுத்தவரை, கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தனியார் வசம் இருந்து வந்துள்ளது. பொறியியல், மருத்துவம், வேளாண்மை, சட்டம் போன்ற படிப்புகள் அரசு வசம் மட்டுமே இருந்தது. தொண்ணூறுகளில் பொறியியல் கல்லூரிகளைத் தொடங்க தனியாருக்கு அனுமதி அளிக்கப்பட்டவுடன், புற்றீசல் போல தனியார் மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டன. தமிழகத்தில் அது வரை சாராயம் காய்ச்சிக் கொண்டு, சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த பலர் பொறியியல் கல்லூரிகளைத் தொடங்கியதன் மூலம் கல்வித்தந்தைகளாக வலம் வரத் தொடங்கினர். கணிப்பொறியியலில் திடீரென்று ஏற்பட்ட வளர்ச்சி, பொறியியல் கல்லூரிகளுக்கான, தேவையை அபாயகரமாக அதிகரித்தது. பொறியியல் கல்லூரிகள் புற்றீசல் போல வளரத் தொடங்கின. ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை அரசியல் வாதிகள் வளைத்துப் போடத் தொடங்கினர். எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் சாராயம் காய்ச்சி விற்றுக் கொண்டிருந்த ஜேப்பியார் என்ற காவல்துறையில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட ஏட்டையா, பின்னாளில் சென்னை மெட்ரோ வாட்டர் நிறுவனத்தின் சேர்மேனாக நியமிக்கப்பட்டார். எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு ஜானகி அணியில் சேர்ந்தார் ஜேப்பியார். இரட்டைப் புறா, சேவல் என்று ஜானகியும், ஜெயலலிதாவும், நான்தான் எம்ஜிஆரின் வாரிசு என்று போட்டி போட்டுக் கொண்டிருந்த நேரத்தில் ஜேப்பியார் சத்யபாமா என்ற பொறியியல் கல்லூரியை தொடங்கினார். சென்னை நெல்சன் மாணிக்கம் சாலையில், பழனியப்பா தியேட்டர் எதிரே ஒரு சிறிய சந்தில், உள்ள கட்டிடத்தில் சத்யபாமா பொறியியல் கல்லூரி தொடங்கப்பட்டது.
1989-90 கருணாநிதி ஆட்சிக் காலத்தில், சத்யபாமா பொறியியல் கல்லூரிக்கு போதுமான உட்கட்டமைப்பு வசதிகள் இல்லையென்று காரணம் கூறி, 1990ல் அக்கல்லூரிக்கான அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது. 1991ல் மே மாதத்தில் ஜேப்பியார் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆணை பெற்று, சோழிங்கநல்லூரில் சத்யபாமா பொறியியல் கல்லூரியை தொடங்கினார். சத்யபாமா பொறியியல் கல்லூரி, தமிழகத்தில் உள்ள மற்ற தனியார் கல்லூரிகளுக்கெல்லாம் முன்னோடி. தற்போது ஓல்ட் மகாபலிபுரம் ரோடு என்று அழைக்கப்படும் இடம் அப்போதெல்லாம் பொட்டல் காடாக இருக்கும். அந்த இடத்தில் பிரம்மாண்டமான கல்லூரியை தொடங்கினார் ஜேப்பியார்.
சத்யபாமா கல்லூரி தந்த வருமானமும் வெற்றியும், ஜேப்பியாரை மேலும் ஐந்து பொறியியல் கல்லூரிகளைத் தொடங்க வைத்தன. தமிழகமெங்கும் நூற்றுக்கணக்கான கல்லூரிகள் தொடங்கப் பட்டன. பொறியியல் கல்வி, முற்றிலும் வணிக மயமாகி, வியாபாரமயமாகிப் போனது. வேளாண் கல்லூரியைத் தொடங்க இந்தக் கல்வித் தந்தைகள் பெரிதும் ஆர்வம் காட்டவில்லை. மருத்துவக் கல்லூரி தொடங்குவதில் பல்வேறு சிக்கல்கள் இருந்தன. மருத்துவக் கவுன்சிலின் கடுமையான கட்டுப்பாடுகள் இதற்கு ஒரு காரணம். மேலும், அரசு மருத்துவக் கல்லூரியில் பயிலும் மருத்துவர்களுக்கு ஆராய்ச்சிக்காக பிணங்கள் கிடைப்பதில் சிரமம் இருக்காது. ஆனால் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு இந்தச் சிரமம் உண்டு. தமிழகத்தில் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கெல்லாம் முன்னோடியாக விளங்கும் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி ஆரம்ப நாட்களில் இந்த சிரமத்தை சந்தித்தது. பின்னாளில் பல தனியார் மருத்துவக் கல்லூரியோடு இணைந்த மருத்துவமனைகளில் வரும் பெரும்பாலான நோயாளிகளே பிண ஆராய்ச்சி உள்ளிட்ட ஆராய்ச்சிகளுக்கு பயன்பட்டார்கள் என்பது தனிக்கதை. ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியைத் தொடர்ந்து சேலம் வினாயகா, எஸ்.ஆர்.எம் என வரிசையாக மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டன. வழக்கமாக பொறியியல் கல்லூரிகளில் ஒரு இடம் 2 லட்சம் முதல் 6 லட்சம் வரை விற்பனை செய்வது வழக்கம். ஆனால் ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியில் தொண்ணூறுகளின் இறுதியிலேயே ஒரு மருத்துவக் கல்லூரி இடம் 15 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்வதை அறிந்த கல்வித் தந்தைகள், நாமும் மருத்துவக் கல்லூரி தொடங்கினால் என்ன என்று ஆர்வத்தோடு இறங்கினர்.
பொறியியல் கல்லூரி தொடங்குவது என்பது எளிது. ஒரு இரண்டு அல்லது மூன்று மாடிக் கட்டிடம். அந்தக் கட்டிடத்தில் ஒரு அறை வகுப்பறை, ஒரு அறை சோதனைக் கூடம், என்று எளிதாக தொடங்கிவிடலாம். அக்கல்லூரியில் மாணவர்களை பயிற்றுவிக்க பேராசிரியர்களுக்காகவும் சிரமப்பட வேண்டியதில்லை. பொறியியல் படித்து விட்டு வேலையில்லாத மாணவர்களை பகுதி நேர முழுநேர பேராசிரியர்களாக எளிதாக பணியமர்த்தி விட முடியும். ஏஐசிடிஇ எனப்படும் அகில இந்திய தொழில் நுட்பக் கல்விக் கழகத்தின் ஆய்வு சமயத்தில் முழு நேரப் பேராசிரியர்கள் என அனைவரையும் காண்பித்து கல்லூரிக்கு ஒப்புதல் பெற்று விட முடியும். ஆனால், மருத்துவக் கல்வி என்பது அப்படி எளிதானதல்ல.
மருத்துவக் கல்வியில் பேராசிரியர்களாக இருக்க வேண்டுமென்றால் வெரும் எம்.பி.பி.எஸ் போதாது. ஏதாவது ஒரு துறையில் முதுகலை ஆராய்ச்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும். சிறப்புப் படிப்பு படித்திருக்க வேண்டும். சிறப்புப் படிப்பு படித்த பெரும்பாலான மருத்துவர்கள், 98 சதவிகிதம் அரசு மருத்துவமனைகளிலோ, அல்லது பெரிய தனியார் மருத்துவமனைகளிலோ முழு நேர ஊழியர்களாக இருப்பார்கள். அவர்கள், சமூக அந்தஸ்து உள்ள அந்தப் பதவியை விட்டு விட்டு, ஜெகதரட்சகன் போன்ற திருடர்கள் தொடங்கும் மருத்துவக் கல்லூரியில் பேராசிரியர்களாக இருப்பதை விரும்ப மாட்டார்கள். இந்தப் பேராசிரியர்கள் பற்றாக்குறை மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவதில் பெரும் சிக்கலை ஏற்படுத்தியது. அகில இந்திய மருத்துவக் கழகமும், மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி அளிப்பதில் கறாராக இருந்தது.
பொறியியல் துறையிலோ மற்ற துறைகளிலோ, தரமற்ற கல்வி கொடுத்தால் விளையும் ஆபத்தை விட, மருத்துவக் கல்லூரிகள் தரமற்ற மருத்துவர்களை உற்பத்தி செய்தால், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும், சமூகச் சிக்கல்களும், மருத்துவத் துறைக்கே பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்தே மருத்துவக் கழகம் கறாரான கட்டுப்பாடுகளை விதித்து வந்தது. இப்படிப்பட்ட கட்டுப்பாடுகளையெல்லாம் உடைத்தெரிய வந்தவர்தான் வாராது வந்த மாமணியாக வந்தவர்தான் கேத்தன் தேசாய். நாட்டில் தொழில் என்பது பாரபட்சமின்றி சமமான முறையில் நடைபெற வேண்டும் என்ற நம்பிக்கை கொண்டவர் கேதன். அரசு மட்டும் மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்கி நடத்தும் போது, தனியார் கல்லூரிகளை பாரபட்சமாக நடத்துவது தவறு என்று பொங்கியெழுந்தார். யாருக்கு மருத்துவக் கல்லூரி நடத்த அனுமதி வேண்டுமோ எங்களிடம் வாருங்கள். தாராளமாக அனுமதி தருகிறேன் என்று ஏலம் விடாத குறையாக அறிவித்தார்.
இதையடுத்து தமிழகத்தில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரி, ஏ.சி.சண்முகம் மருத்துவக் கல்லூரி, மீனாட்சி மருத்துவக் கல்லூரி, தீனதயாள் நாயுடு மருத்துவக் கல்லூரி, கற்பக விநாயகா மருத்துவக் கல்லூரி, சத்ய சாய் மருத்துவக் கல்லூரி, ஜெகதரட்சகனின் பாலாஜி மருத்துவக் கல்லூரி, பாண்டிச்சேரியில் ஜெகதரட்சகனின் லட்சுமி நாராயணா மருத்துவக் கல்லூரி என்று சராமாரியாக மருத்துவக் கல்லூரிகள் பெருகின. இந்தக் கல்லூரிகளிலும் ஏற்கனவே விவாதித்தது போல பேராசிரியர்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்தத் தட்டுப்பாட்டைப் போக்க, இந்தக் கல்லூரிகள் அகில இந்திய மருத்துவக் கழகம் ஆய்வுக்கு வரும் நாட்களில் மட்டும் பேராசிரியர்களாக நடிக்க, தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் உள்ள பிரபல மருத்துவர்களை அழைத்தது. ஒரு நாள் பேராசிரியர்களாக நடிப்பதற்கு 20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை இந்தப் பேராசிரியர்களுக்கு வழங்கப்பட்டதும், அகமகிழ்ந்த கடவுளர்கள் சோரம் போகத் தொடங்கினர்.
அகில இந்திய மருத்துவக் கல்லூரியின் நிபுணர்கள் ஆய்வுக்கு வரும் அந்த ஒரு நாள் மட்டும், பேராசிரியர்களாக தமிழகத்தின் பிரபல மருத்துவர்கள் நடித்தனர்.
2004ல் சின்ன அய்யா என்று அன்போடு அழைக்கப்படும் அன்புமணி ராமதாஸ் மத்திய சுகாதாரத் துறை அமைச்சராகிறார். அமைச்சரானதும், இவருக்கு கேதன் தேசாய் மீது கடுமையான பொறாமை ஏற்படுகிறது. நான் அமைச்சராக இருக்கிறேன்.. இவன் என்ன புடலங்காய்.. நம்மை விட அதிகமாக பணம் வாங்குவது. நாமளும் வாங்குவோம்… நாலு வாங்குவோம் என்று அவர் பங்குக்கு களத்தில் இறங்குகிறார். கேத்தன் தேசாயின் கீழ் பணியாற்றும் மருத்துவர்கள் ஆய்வு செய்து, அனுமதி மறுத்த கல்லூரிகளுக்குக் கூட, அன்புமணி அனுமதி வழங்கினார்.
எல்லாம் சீராகவும் சிறப்பாகவும்தான் போய்க் கொண்டிருந்தது. இந்த கேத்தன் தேசாய் கவனமாக இல்லாமல், பொறுப்பற்ற முறையிலும், கவனக் குறைவோடும் லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாக மத்திய புலனாய்வுத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்படுகிறார். அப்புறம்தான் ஆரம்பித்தது சனி…
கேத்தன் தேசாய் மீது வழக்கு பதிவு செய்ததோடல்லாமல், சிபிஐ அதிகாரிகள், கேத்தன் தேசாய் மருத்துவக் கழகத்தின் தலைவராக இருந்து கடைசி இரண்டு ஆண்டுகளில் அனுமதி வழங்கிய அனைத்து மருத்துவக் கல்லூரிகளின் அனுமதிகளையும் மறு பரிசீலனை செய்யத் தொடங்கினர். தமிழகத்தைப் பொறுத்தவரை, இந்த விசாரணையில் சிக்கிய கல்லூரிகள் மூன்று. ஜெகதரட்சகனின் லட்சுமி நாராயணா மருத்துவக் கல்லூரி, சத்ய சாய் மருத்துவக் கல்லூரி மற்றும் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரி ஆகிய கல்லூரிகளுக்கு வழங்கப்பட்ட அனுமதி குறித்து, சிபிஐ விசாரணை மேற்கொண்டது.
இந்த விசாரணையில் ஜெகதரட்சகன், அந்த விசாரணையை முடக்க மேற்கொண்ட முயற்சிகள் குறித்து சவுக்கில் விரிவாக கீழ்கண்ட கட்டுரைகளில் எழுதப்பட்டிருந்தது.
இதே போல மோசடியில் சிக்கி இன்று விசாரணையில் உள்ள சத்யா சாய் மருத்துவக் கல்லூரி செய்த சதிகளைப் பற்றி உதாரணத்துக்காகப் பார்ப்போம். காஞ்சிபுரம் மாவட்டம், நெல்லிக்குப்பம் தாலுகா அம்மாப்பேட்டையில் உள்ளது ஸ்ரீ சத்ய சாய் மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம். இந்த கல்வி நிறுவனத்தின் தலைவர் எம்.கே.ராஜகோபாலன் மற்றும் ஸ்ரீ பாலாஜி வித்யாபீடத்தின் துணை வேந்தர் டாக்டர் டி.ஆர்.குணசேகரன் ஆகிய இருவரும் சத்ய சாய் மருத்துவக் கல்லூரியின் உட்கட்டமைப்பு வசதிகள், பேராசிரியர்கள் விபரம் ஆகியவற்றை ஆய்வு செய்வதற்காக வருகை தரும் அகில இந்திய மருத்துவக் கழகத்தின் ஆய்வாளர்களை ஏமாற்றி மோசடியாக அனுமதி பெற வேண்டும் என்று கூட்டுச் சதியில் ஈடுபடுகின்றனர். இதன் அடிப்படையில் 16 மற்றும் 17 பிப்ரவரி 2010ல் ஆய்வுக்காக வரும் நிபுணர் குழுவை ஏமாற்றுவதற்காக மோசடி வேலையில் ஈடுபட முடிவு செய்கின்றனர்.
Establishment of Medical Colleges Regulations, 1999 என்ற சட்டத்தின் படி ஒரு மருத்துவக் கல்லூரி முழு நேரப் பேராசிரியர்கள், ஆராய்ச்சிக் கூடங்கள், மருத்துவப் பரிசோதனைக் கூடங்கள் போன்றவற்றை முழு அளவில் கொண்டிருக்க வேண்டும். இந்த வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றனவா என்பதை மருத்துவக் கழகத்தின் நிபுணர் குழு ஆண்டுதோறும் ஆய்வு செய்ய வேண்டும். முதலாண்டு இக்கல்லூரி தொடங்கப்பட்ட போது 31.05.2008 அன்று இக்கல்லூரியை ஆய்வு செய்த நிபுணர் குழு, இக்கல்லூரியில் போதுமான வசதிகள் இல்லை என்பதையும், பேராசிரியர்கள் இல்லை என்பதையும் சுட்டிக் காட்டியது. குறைகள் அனைத்தையும் சரி செய்து விட்டோம் என்று கல்லூரி நிர்வாகம் பதிலளித்ததையடுத்து, மீண்டும் ஒரு முறை ஆய்வு நடத்தியதன் பேரில் 2008-2009 கல்வி ஆண்டுக்கு மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். அதன் பிறகு 1 மற்றும் 2 மே 2009 ஆகிய நாட்களில் அனுமதியை புதுப்பிப்பதற்காக நடத்தப்பட்ட ஆய்வில், இக்கல்லூரியில் பேராசிரியர்கள் உட்பட அனைத்து வசதிகளும் சிறப்பான முறையில் இருப்பதாக நிபுணர் குழு சான்றளித்தது. இதே போல 16 மற்றும் 17 பிப்ரவரி 2010ல் நடந்த ஆய்விலும் நிபுணர் குழு இதே சான்றை அளித்தது.
என்னடா இது… இவ்வளவு சிறப்பான கல்லூரியாக இருக்கிறதே… நேரில் சென்றுதான் பார்ப்போமே என்று சிபிஐ அதிகாரிகள் 26 ஜுலை 2010 அன்று இக்கல்லூரியில் ஆய்வு நடத்துகிறார்கள். ஆய்வு நடத்தினால் நிபுணர் குழு ஆய்வின் போது பேராசிரியர்களாக இருப்பதாகச் சான்றளித்துள்ள பலர் அக்கல்லூரியில் பணியாற்றவேயில்லை என்பது தெரிய வந்தது. அதாவது 26 பேராசிரியர்கள், வேறு கல்லூரியில் பேராசிரியர்களாகவோ, முழு நேர மருத்துவர்களாகவோ பணியாற்றிக் கொண்டு, நிபுணர் குழு ஆய்வு நடத்தும் ஒரு நாள் அன்று மட்டும் பேராசிரியர்களாக நடித்துள்ளனர் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது. இதில் பல பேராசிரியர்கள், ஆல் இந்தியா ரேடியோவின் நிலைய வித்வான்கள் போல, 2008, 2009, 2010 ஆகிய மூன்று ஆண்டுகளிலும் பேராசிரியர்களாக நடித்துள்ளனர் என்பதும் தெரிய வந்தது. இதில் மூன்று நடிகர்கள், மன்னிக்கவும் மருத்துவர்கள் சென்னை துறைமுகக் கழகத்தின் மருத்துவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இக்கல்லூரியின் நிறுவனர் எம்.கே.ராஜகோபாலன், இந்த 26 மருத்துவர்களும், சத்ய சாய் மருத்துவக் கல்லூரியில் தொடர்ந்து பேராசிரியர்களாக பணியாற்றுவது போல, சான்றிதழ் மற்றும் அவர்களுக்கு ஆண்டுதோறும் ஊதியத்திலிருந்து வருமான வரி பிடித்தம் செய்தது போலவும் சான்றிதழ் அளித்துள்ளார்.
ஒரு மருத்துவக் கல்லூரியில் போலியாகப் பணியாற்றிய இந்த 26 டாக்டர்களும், மத்திய நிபுணர் குழுவின் ஆய்வு முடிந்ததும் தங்கள் பணியைப் பார்க்க சென்றிருப்பார்கள். அதன் பிறகு அந்த மாணவர்களுக்கு அந்தப் பாடங்களை யார் சொல்லிக் கொடுப்பது.. ? அப்படி அரை குறையாக படித்து மருத்துவர்களாகி வெளிவரும் மருத்துவர்கள் இந்த சமூகத்துக்கு என்ன தீங்கு விளைவிப்பார்கள் என்பது யாருக்குத் தெரியும் ? சிறிய வயதில், அரசுப் பள்ளிகளில் படித்தவர்களுக்கு, ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக கணிதம் எடுக்கும் ஆசிரியரை அறிவியல் வகுப்புக்கும், சமூக அறிவியல் எடுக்கும் ஆசிரியர் தமிழ் வகுப்புக்கும் பாடம் எடுப்பதைப் பார்த்திருப்போம். அந்த வகுப்புக்களில் இது போல மாற்றிப் பாடம் எடுப்பதால் சிறிய வகுப்பில் படிப்பவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படப்போவதில்லை. அந்த வகுப்புக்களில் மாற்றிப் பாடம் எடுப்பதால் ஆசிரியர்களுக்கும் பெரிய சிரமம் இருக்காது.
ஆனால் இந்த 26 பேராசிரியர்களும் எந்தத் துறையைச் சேர்ந்தவர்கள் தெரியுமா ?
உடற்கூறியல் (Anatomy)
நுண்ணுயிரியில் (Micro Biology)
தடய அறிவியல் (Forensic Medicine)
குழந்தைகள் நல மருத்துவம் (Paedeatrics)
பொது மருத்துவம் (General Medicine)
ஊடுகதிரியல் (Radiology)
மயக்கமருந்தியல் (Anaesthesiology)
பல்மருத்துவம் (Dentistry)
மகப்பேறு மருத்துவம் (Obsteritics & Gynaecology)
காது மூக்கு தொண்டை மருத்துவம் (Ear, Nose & Throat)
அன்பார்ந்த தோழர்களே… மருத்துவத்தைப் பொறுத்தவரை ஒவ்வொரு பிரிவும் மிக மிக முக்கியமானது. மற்ற படிப்புகள் நான்கு வருடம் இருக்கையில் மருத்துவம் மட்டும் ஐந்தரை வருடங்கள் இருப்பது, அனைத்தையும் இந்த மாணவர்கள் கற்று சிறந்த மருத்துவர்களாக உருவாக வேண்டும் என்பதற்காகவே.. ஒருவர் எம்.பி.பி.எஸ் முடித்து மருத்துவராகி தொழில் செய்து கொண்டிருக்கும் போது, காது வலி என்று போனால், எங்கள் கல்லூரியில் காது மூக்கு தொண்டை மருத்துவத்துக்கு முழு நேர பேராசிரியர்கள் இல்லை அதனால், வேறு எங்காவது வலிக்கிறதா என்று சொல்லுங்கள் என்று சொன்னால் எப்படி இருக்கும் ? இப்படி அரை குறையாக மருத்துவம் படித்தவன் வைத்தியம் பார்த்தால் எப்படி இருக்கும் என்பதை, எழுத்தாளர் சுஜாதா அரை வைத்தியன் என்ற சிறுகதையில் அருமையாக எழுதியிருப்பார்.
இப்படி அரைகுறையான மருத்துவர்கள் சமூகத்துக்கு எப்படிப்பட்ட ஆபத்து தெரியுமா ? மருத்துவர்கள் பணத்துக்காக இப்படி சோரம் போவது, கடவுள்களாக நினைக்கப்படும் மருத்துவர்கள் இறந்து போனதற்கு ஒப்பாகவே கருத வேண்டும்.
இதில் ஆறுதலான ஒரு விஷயம் நடந்துள்ளது. அகில இந்திய மருத்துவ கவுன்சில், நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி மருத்துவக் கல்லூரியில் போலிப் பேராசிரியர்களாக பணியாற்றிய 25 மருத்துவர்களை 3 ஆண்டு முதல் 5 ஆண்டுகள் வரை மருத்துவர்களாக பணியாற்றக் கூடாது என்று தடை விதித்துள்ளது.
அந்தச் செய்திக் குறிப்பில் ஒரு மருத்துவர் எப்படிப் பணியாற்ற வேண்டும் என்ற Indian Medical Council (Professional Conduct, Etiquette and Ethics) Regulations, 2002 விதிகளில் குறிப்பிட்டுள்ள விதியை சுட்டிக் காட்டியுள்ளது.
The prime object of the medical profession is to render service to humanity; reward or
financial gain is a subordinate consideration. Who- so-ever chooses his profession,
assumes the obligation to conduct himself in accordance with its ideals. A physician
should be an upright man, instructed in the art of healings. He shall keep himself pure
in character and be diligent in caring for the sick; he should be modest, sober, patient,
prompt in discharging his duty without anxiety; conducting himself with propriety in
his profession and in all the actions of his life.
இப்படி ஒரு உன்னதமான தொழிலில் ஈடுபடும் இந்தக் கடவுளர்களே மரித்துப் போனால் ?