அதிமுக அரசைப் போன்ற முட்டாள்த்தனமான அரசை இந்தியாவில் எங்குமே பார்க்க முடியாது.
நந்தவனத்தில் ஓர் ஆண்டி
அவன் நாலாறு மாதமாய்
குயவனை வேண்டி
கொண்டு வந்தானொரு தோண்டி
அதைக் கூத்தாடிக் கூத்தாடி
போட்டுடைத்தாண்டி
என்ற பாடல் யாருக்குப் பொருந்துமோ இல்லையோ. ஜெயலலிதாவுக்கு நிச்சயமாகப் பொருந்தும். 2006-2011 கருணாநிதி ஆட்சியின் மீது கடுமையான அதிருப்தியிலும், கோபத்திலும் இருந்த மக்கள், வேறு வழியே இல்லாமல், இந்தச் சின்னக் கொள்ளியை எடுத்து தலையை சொறியலாம் என்று எடுத்த முடிவு இன்று அவர்கள் தலையைப் பதம் பார்த்துக் கொண்டிருக்கிறது. அரசு என்ற ஒன்று இருக்கிறதா இல்லையா என்பது தெரியாமல் மக்களும், அரசு அதிகாரிகளும், அமைச்சர்களும் தலையைப் பிய்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.
அமைந்தகரையை அடுத்துள்ள நெல்சன் மாணிக்கம் சாலையையும், அண்ணா நகர் ரவுண்டானாவே நோக்கிச் செல்லும் சாலையை இணைப்பதற்காக, ஒரு மேம்பாலம் அமைக்க 2010ல் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் திட்டமிடப்பட்டது. வழக்கமாகவே போக்குவரத்து நெரிசல் மிகுந்த நெல்சன் மாணிக்கம் சாலை – பூந்தமல்லி நெடுஞ்சாலை இணைப்பு, கூடுதல் நெரிசலானதற்கு காரணம், அந்த இணைப்பில் அமைந்துள்ள ஸ்கைவாக் என்ற மால். அந்த மால், செல்வந்தர்களுக்கும் பணம் படைத்தவர்களுக்காகவுமே அமைக்கப்பட்டது. அந்த மாலில் பிவிஆர் சினிமாவின் ஏழு தியேட்டர்கள் உள்ளன. அப்படிப்பட்ட ஒரு நெருக்கடியான சந்திப்பில் ஏழு தியேட்டர்களோடு கூடிய ஒரு மாலுக்கு அனுமதி கொடுத்தால் அது எத்தகைய போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும் என்பதற்கு ஐஐடியில் படிக்க வேண்டியதில்லை. ஆனாலும், அதற்கு, போக்குவரத்து இணை ஆணையராக இருந்தபொழுது அனுமதி கொடுத்தவர்தான், ஜாபர்சேட்டின் இணைபிரியா நண்பர் சுனில் குமார்.
அந்த மால் செயல்படத் தொடங்கியதையடுத்து போக்குவரத்து நெரிசல் அதிகமானதும், அந்த இடம் முதல், அண்ணா வளைவு வரை, ஒரு மேம்பாலம் கட்டுவதென முடிவெடுக்கப்பட்டு, பிப்ரவரி 2011ல் இதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இத்திட்டம் உருவாகி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது அனைத்தும் கருணாநிதி ஆட்சிக் காலத்தில். இத்திட்டம் முழுமையான செயல்பாட்டுக்கு வந்தது, ஜெயலலிதா பதவியேற்ற பிறகு. நெல்சன் மாணிக்கம் ரோட்டிலிருந்து பூந்தமல்லி நெடுஞ்சாலை சந்திக்கும் இடம் ஒரு வழிச்சாலையாக மாற்றப்பட்டு, பாலத்துக்கான தூண்கள் நிறுவும் வேலை தொடங்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக அண்ணா பவள விழா வளைவை இடிக்கும் பணி தொடங்கியதும் தனது குயுக்தி வேலையை தொடங்கினார் கருணாநிதி.
கருணாநிதி எப்போதும் விரிக்கும் வலையில் விழுவதுதான் ஜெயலலிதாவின் வேலை. ஆங்கிலத்தில், Kneejerk reaction என்று சொல்வார்கள். அதே போல கருணாநிதி எது சொன்னாலும் தடாலடியாக ரியாக்ட் செய்து, கருணாநிதியை விட நான் நல்லவள் என்று நிரூபிப்பதில் ஜெயலலிதா தன் அறிவீனத்தை பல முறை வெளிப்படுத்தியிருக்கிறார்.
‘கூடங்குளம் அணு உலை ஏன் இன்னும் செயல்படவில்லை. கூடங்குளம் அணு உலை செயல்படத் தொடங்கினால் தமிழகத்தில் மின் தட்டுப்பாடு நீங்கும் என்று கருணாநிதி அறிக்கை வெளியிட்டதும் ஜெயலலிதா காவல்துறையை ஆயிரக்கணக்கில் இறக்கினார். ஜெயலலிதா எதிர்க்கட்சித் தலைவராக இருந்து, கருணாநிதி முதலமைச்சராகவும் மத்திய அரசிலும் எதிர்க்கட்சியில் இருந்தால் கருணாநிதி என்ன சொல்லியிருப்பார் தெரியுமா ?
“அணு உலை என்பது மத்திய அரசின் திட்டம். தமிழகத்தில் மின் தட்டுப்பாடு நிலவினாலும், அப்பகுதி மக்கள் தெரிவிக்கும் எதிர்ப்பை புறந்தள்ளி விட முடியாது. அப்பகுதி மக்களின் அச்சத்தை போக்க வேண்டியது மத்திய அரசின் பொறுப்பு. அப்பகுதி மக்களின் சம்மதத்தோடு மத்திய அரசு அணு உலையை தொடங்குமேயானால், தமிழக அரசு அந்த அணு உலைக்கு முழு ஒத்துழைப்பை நல்கும்” என்று ஒரே கல்லில் பல மாங்காய்களை அடித்திருப்பார் கருணாநிதி. எதிர்க்கட்சியாக இருக்கும் மத்திய அரசுக்கு செக் வைத்தாயிற்று. அப்பகுதி மக்களின் ஆதரவையும் பெற்றாயிற்று. இதுதான் கருணாநிதியின் சாமர்த்தியம். ஆனால், இந்த சாமர்த்தியத்தில் ஒரு துளி கூட ஜெயலலிதாவுக்குக் கிடையாது.
15 பிப்ரவரி 2011 அன்று டைம்ஸ் ஆப் இந்தியாவில் வந்த செய்தியில் 117 கோடி ரூபாய் செலவில் 24 மாதத்தில் அண்ணா ஆர்ச் அருகே மேம்பாலம் கட்டப்படும் என்று செய்தி வெளியாகியுள்ளது. ஆக இத்திட்டம் கருணாநிதிக்குத் தெரியாமல் ஒப்புதலாக வாய்ப்பே இல்லை. இத்திட்டம் செயலாக்கம் பெற்று, அண்ணா வளைவை இடிப்பதற்காக பணிகள் தொடங்கியதும் அந்த ஒப்பந்தக்காரருக்கு கொடுக்கப்பட்ட உத்தரவு என்ன தெரியுமா ? அந்த வளைவை அப்படியே பெயர்த்து மற்றொரு இடத்தில் வைக்க ஏதுவாக உடையாமல் எடுக்க வேண்டும். அவ்வளவு பெரிய வளைவை உடைக்காமல் எடுப்பது என்ன எளிதான காரியமா ? அதுவும் சமீபத்தில் ஜேப்பியார் கல்லூரி மற்றும் மெட்ரோ ரயில் க்ரேன் விபத்து ஆகியவற்றில், காண்ட்ராக்டர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் ரிஸ்க் எடுக்க எந்த கான்ட்ராக்டர் துணிவார் ? முதல் இரண்டு நாளைக்கு அந்த அண்ணா வளைவை இடிக்காமல் முத்தம் கொடுப்பது போல கொத்திக் கொண்டிருந்தார்கள்.
அவ்வளவுதான் கருணாநிதிக்கு வந்ததே அக்கறை… இவ்வளவு வலுவாக இருக்கும் தூணை இடிக்கத்தான் வேண்டுமா என்று துடித்தார். அதுவும் கருணாநிதி எம்.ஜி.ஆர் கட்டிய நினைவுத்தூண் என்று சுட்டிக்காட்டியதும் ஜெயலலிதாவுக்கு பொத்துக் கொண்டு வந்து விட்டது. உடனடியாக வளைவை இடிக்கக் கூடாது என்று உத்தரவிட்டார்.
விடுவாரா கருணாநிதி. அவரே கேள்வி கேட்டு அவரே பதில் சொன்னார்.
“கேள்வி: அண்ணா நகரிலே உள்ள நீண்ட கால நினைவுச் சின்னமான அண்ணா வளைவினை அகற்றத் தேவையில்லை என்று முதல்வர் ஆணை பிறப்பித்திருப்பதாக அனைத்து ஏடுகளிலும் செய்தி வந்திருக்கிறதே?
பதில்: நீண்டகால நினைவுச் சின்னமான, அண்ணா பெயரால் அமைந்துள்ள அந்த வளைவினை அகற்ற முதலிலே உத்தரவு பிறப்பித்தது யார்? யாரோ ஒரு அமைச்சர் உத்தரவு பிறப்பித்து அந்த வளைவினை அகற்றுவதற்கு யாருக்கும் துணிச்சல் வராது. அந்த வளைவினை அகற்ற முடியவில்லை என்றதும், தற்போது வளைவு அகற்றத் தேவையில்லை என்று உத்தரவு போட்டு ஊரை ஏமாற்ற நினைக்கிறார்கள். ஆனால் வளைவு தற்போது பாதி உடைபட்ட நிலையில், எந்த நேரத்தில் கீழே விழுமோ என்ற ஆபத்தான கட்டத்தில் இருப்பதாகவும், பொது மக்கள் அந்த வழியாகச் செல்லவே அஞ்சுவதாகவும் செய்திகள் வருகின்றன. இதற்கு பொறுப்பானவர்கள் யார் ? அவர்கள் மீது இந்த அரசு எடுக்கப் போகிற நடவடிக்கை என்ன? மக்கள் இதைத் தான் எதிர்பார்க்கிறார்கள். அரசு என்ன பதில் கூறப் போகிறது ?
அதிகாரிகள் மட்டத்தில் முடிவு செய்து அண்ணா வளைவினை அகற்ற முடிவு செய்திருக்க முடியாது. அகற்ற முடிவு செய்தது மட்டுமல்ல; அகற்றுகின்ற செயல்பாடு 70 சதவிகிதம் நடைபெற்றுள்ள நிலையில் முதல்வர் திடீரென்று அதனை அகற்றத் தேவையில்லை என்றும், அது நீண்ட நாள் நினைவுச் சின்னம் என்றும் சொல்லியிருக்கிறார். அது நீண்ட நாள் நினைவுச் சின்னம் என்பது அந்த நினைவுச் சின்னத்தை அகற்ற முடிவெடுத்தபோது தோன்றவில்லையா? ஏடுகளில் எல்லாம் பலமுறை அந்த நினைவுச் சின்னத்தை அகற்றப் போகிறார்கள் என்று வந்ததே? அப்போதே முதல்வர் அதனை அகற்றத் தேவையில்லை என்று அறிவிக்காமல், பல லட்சம் ரூபாய் அரசு பணத்தைச் செலவிட்டு, அந்த நினைவுச் சின்னத்தை அகற்றுகின்ற செயல் பாடுகள் நடைபெற்ற பிறகு, அந்தப் பணியை நிறுத்துங்கள் என்று அறிவித்ததால், அரசுக்கு எவ்வளவு ரூபாய் இழப்பு? இழப்பு மாத்திரமல்லாமல், அந்த வளைவு தற்போது மிகவும் ஆபத்தான நிலையில் முக்கால் பகுதி இடிக்கப்பட்டு, தானாகவே விழுந்து விடுமோ என்று பொதுமக்கள் அந்த வழியாக நடப்பதற்கே அஞ்சுகின்ற நிலைமை உள்ளது.
அந்த வளைவினை தற்போது மீண்டும் பழைய நிலைக்கே கொண்டுவர வேண்டுமென்றால், அதற்காகவும் செலவழிக்க நேரிடும். அப்படியே மீண்டும் அதை முன்னர் இருந்த நிலைக்கே கொண்டு வந்தாலும் அது பழைய உறுதிப்பாட்டோடு இருக்குமா என்பதும் சந்தேகம். அண்ணா வளைவு விவகாரத்தில் திட்டச் செலவு உயரும் என்றும், அதற்கு யார் பொறுப்பு என்றும் இன்றைக்கும் ஒரு பெரிய செய்தி வந்துள்ளது. தமிழக அரசின் சார்பில் இதற்கு நல்ல விளக்கமான பதில் அளிப்பார்களா என்று எதிர்பார்ப்போம்.”
இதுதான் கருணாநிதியின் அறிக்கை. எத்தனை கயமை பார்த்தீர்களா ? அண்ணா வளைவை இடிப்பதற்குப் பொறுப்பானவர்கள யாராம் ? எத்தனை அயோக்கியத்தமான கேள்வி இது ? கருணாநிதிக்கு ஜெயலலிதா சளைத்தவரா என்ன…? அவர் பதில் அறிக்கை வெளியிட்டார்.
ஜெயலலிதா அறிக்கை
“ஏமாற்றுவதையே தொழிலாகக் கொண்டிருப்பவரும், கபட நாடகங்களை நடத்துவதில் கைதேர்ந்தவருமான திமுக தலைவர் கருணாநிதி, “பேரறிஞர் அண்ணா பவள விழா நினைவு வளைவு” அகற்றும் பிரச்சினையில் நான் ஊரை ஏமாற்ற நினைப்பதாக அறிவித்து இருப்பது சாத்தான் வேதம் ஓதுவது போல் அமைந்துள்ளது.
தனக்குத் தானே கேள்வி கேட்டுக் கொண்டு பதிலளிப்பதை வாடிக்கையாகக் கொண்டிருக்கும் திமுக தலைவர் கருணாநிதி, அண்ணா வளைவினை அகற்றத் தேவையில்லை என்று நான் உத்தரவிட்டது குறித்து, “… அதிகாரிகள் மட்டத்தில் முடிவு செய்து அண்ணா வளைவினை அகற்ற முடிவு செய்திருக்க முடியாது. அகற்ற முடிவு செய்தது மட்டுமல்ல; அகற்றுகின்ற செயல்பாடு 70 சதவீதம் நடைபெற்றுள்ள நிலையில், முதல்வர் திடீரென்று அதனை அகற்றத் தேவையில்லை என்றும், அது நீண்டநாள் நினைவுச் சின்னம் என்றும் சொல்லியிருக்கிறார்.
அது நீண்ட நாள் நினைவுச் சின்னம் என்பது, அந்த நினைவுச் சின்னத்தை அகற்ற முடிவெடுத்த போது தோன்றவில்லையா?…” என்று வினவியிருக்கிறார்.
அதாவது சென்னையில் அண்ணா வளைவை அகற்ற முதலில் அனுமதி அளித்துவிட்டு, இடிப்புப் பணிகள் பாதியளவு முடிந்த பின்னர், இடிக்கக் கூடாது என நான் திடீர் என்று உத்தரவிட்டுள்ளதாக கருணாநிதி கூறியிருக்கிறார். இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது.
2010ம் ஆண்டு முந்தைய திமுக ஆட்சியின்போது தான் 117 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நெல்சன் மாணிக்கம் சாலை மற்றும் அண்ணா நகர் மூன்றாவது நிழற்சாலை சந்திப்பு ஆகியவற்றினை இணைக்கும் வண்ணம் மேம்பாலம் அமைக்க அனுமதிக்கப்பட்டது.
இதனையடுத்து 2011ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்று நான் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக் கொண்டேன். ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு முந்தைய அரசால் விட்டுச் செல்லப்பட்ட பணிகள் வழக்கமாக மேற்கொள்ளப்படுவது போல் இந்த மேம்பாலப் பணியும் மேற்கொள்ளப்பட்டது. இந்த மேம்பாலப் பணி குறித்தோ அல்லது அண்ணா வளைவு அகற்றப்படுவது குறித்தோ என்னிடம் யாரும் கலந்தாலோசிக்கவில்லை. நான் எந்த விதமான உத்தரவையும் இது தொடர்பாக பிறப்பிக்கவில்லை.
அரசின் அனைத்து முடிவுகளும் முதல்வர் ஒப்புதல் பெற்று வெளியிடப்படுவதில்லை என்பது 5 முறை முதல்வராக இருந்த கருணாநிதிக்கு தெரியாதா?. அரசின் அலுவல் விதிகளின்படி பல்வேறு மட்டங்களில் அரசு முடிவுகள் எடுக்கப்படுகின்றன என்பது கருணாநிதிக்கு தெரியாதா? இல்லை, தெரிந்து கொண்டே, வேண்டுமென்றே, “அதிகாரிகள் மட்டத்தில் முடிவு செய்து அண்ணா வளைவினை அகற்ற முடிவு செய்திருக்க முடியாது” என்று கூறியுள்ளாரா?
மேம்பாலம் அமைத்திட முந்தைய திமுக ஆட்சியில் முடிவெடுக்கப்பட்டபோதே, அந்தப் பாலம் பேரறிஞர் அண்ணா பவள விழா நினைவு வளைவு வழியாகத்தான் செல்லும் என்பதும், அதனை அகற்ற வேண்டும் என்பதும் கருணாநிதிக்கு தெரியாதா? ஒரு வேளை பேரறிஞர் அண்ணா மற்றும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். புகழ்பாடும் வகையில் சென்னையின் அடையாளச் சின்னமாக அமைந்துள்ள இந்த அண்ணா வளைவை அகற்றிட வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த மேம்பாலப் பணிக்கு தான் வழங்கிய உத்தரவு இன்று எனது முடிவால் தடைபட்டுவிட்டதே என்ற கோபத்தில் என் மீது அவதூறுகளை அள்ளி வீசுகிறார் போலும் !
எது எப்படியோ, முந்தைய திமுக ஆட்சியில் எடுக்கப்பட்ட இந்த முடிவு எனது கவனத்திற்கு முன்பே கொண்டுவரப்பட்டு இருந்தால், அண்ணா வளைவினை இடிக்காமல் மேம்பாலப் பணிகளை மேற்கொள்ளுமாறு நிச்சயம் நான் உத்தரவிட்டு இருப்பேன்.
அண்ணா வளைவு அகற்றப்படுவது குறித்து பத்திரிக்கைகளில் வந்த செய்தியின்மூலம்தான் நான் அறிந்து கொண்டேன். இந்தச் செய்தியை அறிந்தவுடன், சென்னை மாநகரின் அடையாளச் சின்னமாக விளங்கும் அண்ணா வளைவினை அகற்றும் பணியினை உடனடியாக நிறுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டேன். மேலும், அண்ணா வளைவை அகற்றாமல் மேம்பாலப் பணியினை நிறைவேற்றிட ஆய்வு செய்யுமாறும், அது குறித்து விரிவாக விவாதிக்கப்படலாம் என்றும் நான் உத்தரவிட்டேன்.
அதன் அடிப்படையில், மூத்த அமைச்சர்களுடனும், அரசு அதிகாரிகளுடனும் விரிவான ஆய்வு நடத்தி ஈ.வெ.ரா. சாலையில் இருந்து அண்ணா நகர் நோக்கி செல்லும் மேம்பாலத்தை சிறிதளவு கிழக்குப் புறமாக மாற்றி அமைத்து மேம்பாலப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று நான் அறிவித்தேன்.
எனது அரசின் இந்த நடவடிக்கையின் மூலம், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால் கட்டப்பட்டு, சென்னையின் அடையாளச் சின்னமாக விளங்கும் `பேரறிஞர் அண்ணா பவள விழா நினைவு வளைவு’ அகற்றப்படுவது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
எனது அரசின் இந்த நடவடிக்கை மூலம், சென்னையின் அடையாளச் சின்னமாக விளங்கும் `பேரறிஞர் அண்ணா பவள விழா நினைவு வளைவு’ காக்கப்பட்டது என்ற மன நிம்மதி எங்களுக்கு உள்ளது.
உண்மை நிலை இவ்வாறிருக்க, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக என் மீதும், எனது தலைமையிலான அரசு மீதும் களங்கம் கற்பிக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன், இது போன்ற அவதூறுகளை, அபாண்டமான குற்றச்சாட்டுகளைச் சுமத்துகிறாரா? அல்லது புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால் கட்டப்பட்டு, சென்னையின் அடையாளச் சின்னமாக விளங்கும் பேரறிஞர் அண்ணா பவள விழா நினைவு வளைவு அங்கு இருக்கக் கூடாது என்ற தனது தந்திர எண்ணம் ஈடேறவில்லையே என்ற ஆதங்கத்தில் கூடுதல் செலவு என்று நீலிக்கண்ணீர் வடிக்கிறாரா என்பதை கருணாநிதி தான் தெளிவுபடுத்த வேண்டும்,”
ஜெயலலிதா, கருணாநிதியை விமர்சிக்கும்போது அடிக்கடி கருணாநிதி ஒரு தீயசக்தி என்று குறிப்பிடுவார். கருணாநிதி எந்த அளவு தீயசக்தியோ, அதில் கொஞ்சமும், இம்மியளவும் குறையாத மற்றொரு தீயசக்தி யாரென்றால் அது ஜெயலலிதாதான். இல்லையென்றால், ஒரு சாதாரண சிமிண்டால் கட்டப்பட்ட வளைவை இடிப்பது தெரியாமல் இருந்து விட்டு, இடிக்கும் பணி தொடங்கிய பிறகு, அதை நிறுத்தி வைப்பதற்காக ஒரு நாளைக்கு 4 லட்ச ரூபாய் செலவில் கிரேனை வாடகைக்கு எடுத்து, வாடகையாக மட்டும் 2 கோடி ரூபாய் மக்கள் வரிப்பணத்தை செலவிடுவாரா ? இப்படி மக்கள் வரிப்பணத்தை விரயமாக்கும் ஒரு முதலமைச்சர் தீயசக்தியல்லாமல் வேறு என்ன சக்தி ?
கருணாநிதி மற்றும் ஜெயலலிதாவின் அறிக்கைகளைக் கூட ஒரு பக்கத்தில் வைத்து விடலாம். இந்த மேயர் சைதை துரைசாமி என்ற அயோக்கியனின் அறிக்கை இருக்கிறதே…. கருணாநிதி ஜெயலலிதா ஆகிய இருவரையும் தூக்கிச் சாப்பிட்டு விடுவார் போலிருக்கிறது.
“அண்ணா வளைவை அகற்றும் திட்டம் கடந்த ஆட்சியின்போது கொண்டு வரப்பட்டது. அந்த திட்டத்தில்தான் எம்.ஜி.ஆரால் திறந்து வைக்கப்பட்ட அண்ணா வளைவை அகற்ற மறைமுகமாக சதி செய்து இருக்கின்றனர். இதில் முந்தைய ஆட்சியாளர்களின் சதி இருப்பதே முதல்வர் ஆய்வு நடத்தியபோதுதான் கண்டுபிடிக்கப்பட்டது. அண்ணா வளைவை அப்புறப்படுத்தும் தீர்மானத்தை சென்னை மாநகராட்சி நிறைவேற்றியதற்காக நான் வெட்கப்படுகிறேன், வேதனைப்படுகிறேன். அனைவரும் வருந்துகிறோம். அண்ணா வளைவை அகற்ற அளிக்கப்பட்ட அனுமதி தீர்மானத்தை ரத்து செய்கிறோம்.”
சைதை துரைசாமி அவர்களே.. அந்தத் திட்டத்திற்கு பெயர் அண்ணா வளைவை அகற்றும் திட்டம் அல்ல. மேம்பாலம் கட்டும் திட்டம். மேம்பாலம் வர வேண்டும் என்றால் அண்ணா வளைவு இடிக்கப்பட வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியாதா ? அது தெரியாமல்தான் அந்த வளைவை இடிக்க பணி வழங்கப்பட்ட ஒப்பந்தக்காரர்களிடம் வளைவுக்கு சேதம் வராமல் அகற்ற வேண்டும் என்று உத்தரவிட்டீர்களா ? எவ்வளவு பெரிய அயோக்கியன் பாருங்கள் இந்த நபர் ? வளைவை அகற்ற ஒப்பந்தம் வழங்கி, அது இடியாமல் வேறு ஒரு இடத்தில் நிறுவப்படும் என்று பகிரங்கமாக அறிவித்து விட்டு, பின்னர் இது சதிச் செயல் என்று பச்சையாகப் போய்பேசும் இந்த நபர் கல்வித் தந்தையாம்.
அந்த அண்ணா பவள விழா நினைவு வளைவு என்பது ராஜராஜன் காலத்துக் கல்வெட்டு அல்ல. தாஜ்மஹால் போன்ற புராதான கலைச் சொத்து அல்ல. சிமென்டால் கட்டப்பட்ட ஒரு சாதாரண தூண். தற்போது உள்ள தொழில்நுட்பத்தால் அதை விட பல மடங்கு சிறப்பாக ஒரு நினைவுச் சின்னத்தை அமைக்க முடியும். அப்படியே இல்லையென்றாலும், புதிதாக கட்டப்படும் பாலத்துக்கு அறிஞர் அண்ணா பவள விழா பாலம் என்று வைத்து விட்டால் போகிறது. ஒரு தலைவரின் நினைவைப் போற்றிப் பாதுகாப்பது, அவர் கொள்கைகளைப் பின்பற்றுவதில் இருக்கிறதா… அலங்காரத் தூண்கள் அமைப்பதில் இருக்கிறதா ? அறிஞர் அண்ணாவின் கொள்கைகள் அனைத்தையும் ஜெயலலிதா பின்பற்றுகிறாரா ? அறிஞர் அண்ணாதான் நூற்றுக்கணக்கான மக்கள் நெறிசலில் மிதிபட்டுக் கிடக்க, தோழியோடு மகாமகக் குளத்தில் குளிக்கச் சொன்னாரா ? அறிஞர் அண்ணாதான் கோயில்களில் சோம்பேறிகளை உட்கார வைத்து சோறிடச் சொன்னாரா ? எப்படி ஒரு சம்பிரதாயமான அடையாள அரசியல் நடத்துகிறார்கள் பாருங்கள்… ?
நேற்று டைம்ஸ் ஆப் இந்தியாவில் ஒரு செய்தி வெளியாகியுள்ளது. ஜெயலலிதாவின் உத்தரவுப்படி இடிக்காமல் நிறுத்தப்பட்ட அண்ணா வளைவுக்கு பதிலாக தற்போது இடிக்கப்படப் போவது எது தெரியுமா ? அந்த வளைவின் அருகிலேயே உள்ள சித்த மருத்துவமனை.
ஆங்கில அலோபதி மருத்துவத்தின் வளர்ச்சி, சித்தா, யுனானி, ஆயுர்வேதம், நேச்சுரோபதி போன்ற மாற்று மருத்துவங்களை ஏறக்குறைய அழித்தே விட்டது. இன்று இந்த மாற்று மருத்துவங்கள் தழைத்து இருப்பதற்கு காரணமே, அரசு இந்த மருத்துவத்தை ஊக்கப்படுத்தி நடத்துவதே. அப்படி அரசு நடத்தி வரும் மருத்துவமனைதான் இன்று ஜெயலலிதாவின் முட்டாள்த்தனத்தால் பாதிக்கப்படப்போவது. அந்த மருத்துவமனையின் பெயரும் அண்ணா மருத்துவமனைதான். அந்த மருத்துவமனை இந்திய மருத்துவத்துக்கான மத்திய கவுன்சிலின் கீழ் செயல்படுகிறது. இந்தக் கவுன்சிலின் மேற்பார்வையில் தமிழகத்தில் BSMS எனப்படும் சித்த மருத்துவப் படிப்பு, BAMS எனப்படும் ஆயுர்வேதப் படிப்பு. BUMS எனப்படும் யுனானிப் படிப்பு மற்றும் BNYS எனப்படும் நேச்சுரோப்பதி படிப்பு ஆகியவை நடைபெற்று வருகின்றன. மற்ற கல்லூரிகள் சென்னையில் உள்ளன. ஆயுர்வேதக் கல்லூரி மட்டும் நாகர்கோவிலில் உள்ளது. இந்திய மருத்துவக் கவுன்சிலின் விதிப்படி, ஒரு இளநிலை மருத்துவருக்கு மூன்று உள்நோயாளிகள் வேண்டும். ஒரு முதுகலை மாணவருக்கு ஐந்து உள்நோயாளிகள் வேண்டும். தற்போது இந்த மாணவர்கள் அனைவரும், இந்த அண்ணா மருத்துவமனையில்தான் பயிற்சி எடுக்கிறார்கள். இந்த வளாகத்தில் மொத்தம் 360 உள் நோயாளிகள் தங்கி சிசிக்சை பெறும் வசதி உள்ளது.
தற்போது தமிழக அரசின் இந்த முட்டாள்த்தனமான முடிவால் பெரும் பாதிப்ப்புக்கு உள்ளாகப்போவது இந்த மருத்துவமனைதான். டைம்ஸ் ஆப் இந்தியா செய்திப்படி கன்சல்டன்ட் வில்பர் ஸ்மித் நான்கு யோசனைகளைத் தெரிவித்திருந்தாலும், இந்த யோசனையைத் தேர்ந்தெடுத்ததற்கு காரணம், இந்த வடிவமைப்பு அரசு சித்த மருத்துவமனைக்கு மேலே செல்வதால் புதிதாக அரசு நிலம் வாங்க வேண்டியதில்லை என்பதால் வேலை எளிதாக முடியும்.
அந்த மருத்துவமனையின் உள்ளே சென்று உள் நோயாளிகளாக சிகிச்சை எடுத்து வருபவர்களிடம் பேசியபோது, அவர்களெல்லாம் அலோபதி மருத்துவத்தில் நம்பிக்கையிழந்தே அங்கே சிகிச்சைக்கு வருகிறார்கள் என்பது தெரிய வந்தது.
அங்கே சிகிச்சை எடுத்து வரும் குமார் என்பவரின் கதை பரிதாபமானது. சில ஆண்டுகளுக்கு முன் இவர் சாலையைக் கடந்து கொண்டிருக்கிறார். அப்போது சிக்னலை மீறி பைக்கில் வேகமாக வந்த ஒருவரை போக்குவரத்துக் காவலர் பிடிக்க முயல்கிறார். அவரிடமிருந்து தப்பிப்பதற்காக அவரைப் பார்த்துக் கொண்டே வாகனத்தை வேகமாக ஓட்டிய அந்த நபர், சாலையைக் கடந்து கொண்டிருந்த குமாரைப் பார்க்காமல் வேகமாக மோதி விடுகிறார். காலில் பலமாக அடிபட்டு மயக்கமடைகிறார் குமார். அவரை அரசுப் பொது மருத்துவமனையில் சேர்க்கிறார்கள்.
அங்கே அவருக்கு ஆபரேஷன் நடக்கிறது. முதல் நாள் ஒரு ஆபரேஷன் செய்து விட்டு நான்கு நாட்கள் கழித்து இரண்டாவது ஆபரேஷன் செய்கிறார்கள். அந்த இரண்டாவது அறுவை சிகிச்சையில் மருத்துவர்கள் செய்த தவறால், இவரால் நடக்கவே முடியாமல் போனது. தொடர்ந்து இவருக்கு மேலும் சில அறுவை சிகிச்சைகள் செய்தும் எந்தப் பலனும் இல்லாமல், இவர் காலின் அளவே குறைந்து போனது. நடக்க முடியாமல் வாக்கர் என்ற கருவியின் துணையோடுதான் இவரால் நடக்க முடியும். யாருடைய துணையும் இல்லாமல் இவரால் நிற்க முடியாது. அனைத்து மருத்துவர்களும் இனி எங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்று கை விரிக்க, இவர் அண்ணா மருத்துவமனை வளாகத்தில் உள்ள வர்மா சிகிச்சைக்காக வருகிறார்.
இவரை சந்தித்தபோது கிட்டத்தட்ட ஒரு வருட சிகிச்சை முடிந்திருந்தது. “சார்.. என்னால் நடக்கவே முடியாமல் இருந்தேன். தற்போது என்னால் யார் உதவியும் இல்லாமல் எழுந்து நிற்க முடியும் பாருங்கள் என்று பெருமையாக எழுந்து நின்று காண்பித்தார். என்னைப் போலவே நம்பிக்கை இழந்த பலர் இங்கே வந்து சிகிச்சை பெறுகிறார்கள் சார். மருத்துவர்களும், செவிலியர்களும் ரொம்பவும் அன்பாய் நடந்து கொள்கிறார்கள். தினந்தோறும் யோகா சொல்லிக் கொடுக்கிறார்கள் என்ற சொல்கிறார். இப்படி ஒரு சிறப்பான அரசு மருத்துவமனையை நாம் கண்ணின் மணி போல காப்பாற்ற வேண்டுமா இல்லையா ? இந்த மருத்துவமனையைத்தான் இன்று இடிக்கப்போகிறார் ஜெயலலிதா. இந்த மருத்தவமனையின் பெரும்பாலான கட்டிடங்கள் இந்த பாலத்தால் இடிக்கப்பட உள்ளன.
இந்த மருத்துவமனையை திறந்து வைத்தவர் கருணாநிதி என்பது குறிப்பிடத் தக்கது. தான் திறந்து வைத்த மருத்துவமனை இடிக்கப்பட்டாலும் பரவாயில்லை, தனக்கு அரசியல்தான் முக்கியம் என்று அண்ணா வளைவில் அரசியல் செய்த கருணாநிதி எப்படிப்பட்ட கயமை உள்ளம் படைத்தவர் என்பதை எண்ணிப் பாருங்கள்.
ஒரு சிமென்ட் தூணுக்காக, 42 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் ஒரு மருத்துவமனையை இடிக்க உத்தரவிடும் ஜெயலலிதா எப்படிப்பட்ட முட்டாள் என்பதை எண்ணிப்பாருங்கள்… இந்த முட்டாள்களால் ஆட்சி செய்யப்படும் நம் விதியை நினைத்தால் வேதனையாக இருக்கிறது.
அன்பார்ந்த தோழர்களே.. இந்த அரசியல்வாதிகளின் முட்டாள்த்தனத்தை ஒரு புறம் வைப்போம். இந்த மருத்துவமனை எவ்வித சேதாரமும் இல்லாமல் காக்கப்பட வேண்டியது மிக மிக அவசியம் தோழர்களே. மாற்று மருத்துவம் அருகி, தனியார் ஆங்கில மருத்துவக் கல்லூரிகள் புற்றீசல் போலப் பெருகி வருகின்றன. இந்த தனியார் மருத்துவக் கல்லூரிகளின் படித்து வெளி வரும் பல பணக்கார டாக்டர்களின் வாரிசுகள், தனியார் மருத்துவமனைகளை கட்டித் தள்ளி வருகின்றனர். கோடிக்கணக்கில் பணத்தை முதலீடு செய்து கட்டப்படும் இந்தத் தனியார் மருத்துவமனைகளில் போதுமான நோயாளிகள் வராவிட்டால் போட்ட முதலீட்டை எடுக்க முடியாது. அப்படி ஏடாகூடமாக சிக்கும் நோயாளிகளை இந்த தனியார் மருத்துவமனைகள் எப்படி பட்டாபட்டி அண்டர்வேராடு அனுப்பும் என்பதை சவுக்கு மருத்துவமனையில் ஒரு நாள் என்ற கட்டுரையில் எழுதியிருந்தது.
அண்ணா வளைவைக் காப்பாற்றுகிறேன் என்று மருத்துவமனையை இடிக்கும் இந்தத் திட்டம் மாற்று மருத்துவத்தை சுத்தமாக அழித்து விட வேண்டும் என்ற மிகப் பெரிய சதியின் ஒரு பகுதியோ என்ற சந்தேகம் எழுகிறது.
அன்பார்ந்த தோழர்களே… இந்த முட்டாள் அரசிடமிருந்து இந்த மருத்துவமனையைக் காப்பாற்ற வேண்டிய கடமை நமக்கு உள்ளது. இதற்கான நடவடிக்கைகளை தமிழறிஞர்கள், சித்த மருத்துவர்கள், சமூக ஆர்வலர்கள், பத்திரிக்கையாளர்கள் ஆகிய அனைவரும் ஒன்று சேர்ந்து எடுக்க வேண்டிய நேரம் இது. இந்த மருத்துவமனை இடிக்கப்படுவதை நாம் வேடிக்கைப் பார்த்தோமென்றால் நம் வருங்கால சந்ததியினர் மாற்று மருத்தவத்தை அழிப்பதற்கு துணை போனோம் என்றே நம்மை ஏசுவர்.


