சவுக்கு தளத்தின் ஹிட்டுகள் ஒரு கோடியைத் தொட்டு விட்டன. இது கொண்டாட வேண்டிய தருணமா… பெரிய சாதனை எதையாவது செய்து விட்டோமா என்ற சுயபரிசோதனைக் கேள்விகளுக்கு பதில் நிச்சயம் கொண்டாட வேண்டிய தருணமே. கடந்த திமுக ஆட்சியைப் போலவே, தற்போதைய ஆட்சியிலும் உண்மையான, மக்களுக்குத் தேவையான செய்திகளை எழுத முடியாத கடும் நெருக்கடி இருக்கும் சூழலில், பெரும் ஊடகங்களுக்கு இருக்கும் பண பலமும், ஆள் பலமும் இல்லாமல் நாம் ஒரு கோடி ஹிட்டுகளை அடைந்திருப்பது நிச்சயம் எளிதான காரியம் அல்ல.
சவுக்கு தளம் ஒரு கோடி ஹிட்டுகளை தொட்டிருக்கும் அதே நாளில் சவுக்கு அரசுப் பணியில் சேர்ந்து 21 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது.
நினைத்துப் பார்த்தால் மலைப்பாக இருக்கிறது… 21 ஆண்டுகளா கடந்து விட்டது ? இரண்டுக்கும் தனித்தனியாக கட்டுரை எழுதலாம் என்று உத்தேசித்திருந்தால், இரண்டும் ஒரே நாளில் நடந்ததால், ஒரே கட்டுரையாக எழுத நேரிட்டுள்ளது. பெரிய கட்டுரையாக இருப்பதால், சிரமம் பாராமல் படியுங்கள்.
1991ம் ஆண்டு அக்டோபர் 21 அன்று சவுக்கு அரசுப் பணியில் சேர வேண்டிய சூழல், தந்தையின் மறைவு காரணமாக ஏற்பட்டது. பத்தாவது தேர்வு எழுதி விடுமுறையில் இருந்தபோது தந்தை இறந்தார். ப்ளஸ் ஒன் சேரலாம் என்றால் அலுவலகத்தில் சேர வேண்டாம், வேலை விரைவில் கிடைத்து விடும் என்று சொல்லி விட்டார்கள். நான்கே மாதங்களில் வேலையும் கிடைத்தது. லஞ்ச ஒழிப்புத் துறையில் அரசு அலுவலகத்துக்குள் இள நிலை உதவியாளராக வேலையில் சேர்ந்த அன்று சரியாக 16 வயது. வேறு எந்த அரசு அலுவலகத்துக்குள்ளும் அது வரை நுழைவதற்கான தேவை ஏற்பட்டதே இல்லை. அந்த அலுவலகத்தில் இருந்த ஊழியர்களின் சராசரி வயது 40. இவர்களோடுதான் இன்னும் 42 வருட வாழ்க்கை என்ற விஷயம் கலக்கத்தையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியது. 16 வயது என்பது பரபரப்பான வயது. தேடல் ஏற்படும் வயது. அறிவை விசாலமாக்கி ஒரு மனிதன் எப்படிப்பட்ட மனிதனாக எதிர்காலத்தில் இருப்பான் என்பதை தீர்மானிக்கும் வயது. அந்த வயதில் அழுக்கு கோப்புகளோடு, மூளையை மழுங்கச் செய்யும் வேலையை செய்யத் தொடங்கினால் என்ன ஆகும் ?
இருந்தாலும், அந்த வயதில் அந்த அரசு வேலை புதிதாக இருந்தது. கூடப் படித்த மாணவர்கள் ஸ்டைலாக ஒரு நோட்டை சுற்றிக் கொண்டு பஸ்ஸில் போகையில், சாப்பாட்டுப் பையோடு அலுவலகம் செல்வதை நினைத்தால் அழுகையாக வரும். அவர்களைப் போல ஜாலியாக இருக்க முடியவில்லையே என்று மனவருத்தம் ஏற்படும். முதன் முதலாக இளநிலை உதவியாளராக வாங்கிய சம்பளம் 1785 ரூபாய். 91ல் இந்தத் தொகையே பெரிய தொகை.
அண்ணா சாலையில் உள்ள பழைய லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகம்
சென்னையில் ஜெமினி மேம்பாலம் அருகே உள்ள பிலிம் சேம்பர் இருக்கும் சாலையின் இறுதியில்தான் லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகம் இருந்தது. அது ஒரு தனியார் கட்டிடம். மவுன்ட் ரோடுக்கு அருகிலேயே இருந்ததால் எப்போது பார்த்தாலும் சினிமா பார்ப்பதுதான் வேலை. இப்போது இருக்கும் சத்யம் தியேட்டர் அப்போது இது போன்ற மல்ட்டிப்ளெக்ஸாக வில்லை. சத்யம், சாந்தம் சுபம் என்று மூன்று தியேட்டர்கள் இருக்கும். அப்போது சென்னையில் உள்ள திரையரங்குகளில் நல்ல ஒலி அமைப்போடு இருப்பது இந்த தியேட்டர் தான். முதலில் 30 ரூபாய் இருந்த பால்க்கனி டிக்கெட் பிறகு 40 ரூபாய் ஆனது. வேலை முடிந்ததும், சத்யம் தியேட்டரில் எந்த ஆங்கிலப் படம் போட்டாலும், புரிந்தாலும் புரியாவிட்டாலும் சென்று பார்ப்பது. புதிய படங்கள் இல்லாவிட்டால் பார்த்த படங்களையே மீண்டும் பார்ப்பது.
அமேரிக்கத் துணைத்தூதரகத்தில் இப்போது உள்ள கட்டுப்பாடுகள் எல்லாம் அப்போது கிடையாது. அங்கே பிலிம் ஃபெஸ்டிவல் நடக்கும் போது, அலுவலக நேரத்திலேயே செக்ரடேரியட் போகிறேன் என்று சொல்லி விட்டு திருட்டுத்தனமாக சினிமா பார்த்து விட்டு வருவது என்று கல்லூரியை கட்டடித்து விட்டு சினிமா பார்க்க முடியாததை இப்படி சரி செய்து கொள்வது பழக்கமாகியது. பிலிம் சேம்பரில், திரைப்பட நிகழ்ச்சிகள் தவிர்த்து, இலக்கியக் கூட்டங்களும் நடைபெறும். ஒரு கூட்டம் தவறாமல் அந்தக் கூட்டங்களுக்கு செல்வதும் வாடிக்கையானது.
பரபரவென்று இருந்த அந்த வயதில் இருந்த தேடல் காரணமாக ஆர்வமாக சென்று சேர்ந்த இடம் அரசு ஊழியர் சங்கம். சிபிஎம் கட்சியின் பின்புலத்தோடு இருக்கும் அந்த சங்கமே தமிழக அரசு ஊழியர்கள் மத்தியில் பெரிய சங்கம். மற்ற அல்லு சில்லு சங்கங்கள் இச்சங்கத்தின் முன் ஒன்றுமே இல்லை. 1984ல் உருவாகி, 1988 மற்றும் 2002 வேலை நிறுத்தங்களை வெற்றிகரமாக நடத்திய சங்கம். சவுக்கு சங்கத்தில் சேர்ந்தபோது, எம்.ஆர்.அப்பன் பொதுச் செயலாளராக இருந்தார். கே.கங்காதரன் என்பவர் தலைவராக இருந்தார். கே.கங்காதரன் போன்ற அற்புதமான பேச்சாளரை இது வரை சவுக்கு பார்த்தது கிடையாது. அப்படி அற்புதமாகப் பேசுவார். அரசு ஊழியர் சங்க வரலாறாகட்டும், மனித குல தோற்றம் வளர்ச்சியாகட்டும் மணிக்கணக்கில் பேசுவார். சிறிய வயதில் துறு துறுவென்று இருந்ததால் எப்போது பார்த்தாலும் சங்கத்திலேதான் வேலை. டிஎம்எஸ் வளாகத்தில் பகுதிக்குழு அலுவலகம் உள்ளது. அங்கே கால்நடைப் பராமரிப்புத் துறையில் சந்திரசேகரன் என்று ஒரு தோழர் பணியாற்றி வந்தார். அவரைப் போல சங்க வேலைகளை சுறுசுறுப்பாக செய்யும் ஒரு தோழரைப் பார்க்கவே முடியாது. அப்படி ஒரு சுறுசுறுப்பு. அவர் சுறுசுறுப்பாக இருப்பதோடு அல்லாமல், மற்றவர்களையும் அப்படி வேலை வாங்குவார். மாநாடு, கருத்தரங்கம் என்றால், இரவு முழுவதும் உட்கார்ந்து, சைக்கிள் டயர்களில் வெள்ளைப் பேப்பர்களை ஒட்டி, தட்டி எழுதுவது, சுவர் விளம்பரங்கள் செய்வது, மாநாட்டுக்காக, அரசு அலுவலகங்களில் சென்று போஸ்டர் ஒட்டுவது என்று எப்போதும் வேலை இருந்து கொண்டு இருக்கும்.
சிபிஎம்மில் அறிமுகப்படுத்தப்படுபவர்களுக்கு தவறாமல் படிக்கச் சொல்லும் புத்தகங்கள், நிரஞ்சனாவின் நினைவுகள் அழிவதில்லை, மக்சிம் கார்க்கியின் தாய், ராகுல சங்கிருத்தியாயனின் வால்கா முதல் கங்கை வரை. அவற்றை படித்து முடித்ததும் அப்போது சோவியத் யூனியனிலிருந்து வரும் பல்வேறு மார்க்சிய நூல்களை படிக்க நேர்ந்தது. கட்சியின் இலக்கியப் பத்திரிக்கையான செம்மலர், பீப்பிள்ஸ் டெமாக்ரசி, அப்போது வெளி வந்து கொண்டிருந்த மார்க்சிஸ்ட் ஆகியவற்றை தொடர்ந்து படிக்கும் வழக்கம் ஏற்பட்டது.
1991 ஆண்டில் தான் தாராளமயமாக்கல் கொள்கையை நரசிம்மராவ் அமல்படுத்துகிறார். அந்த முதல் ஐந்து ஆண்டுகளில் இடதுசாரிகள் அந்தப் பொருளாதாரக் கொள்கையை எதிர்த்து நடத்திய போராட்டங்கள் காலத்தால் அழியாதவை. புதிய பொருளாதாரக் கொள்கையின் தீமைகளை விளக்கி, டங்கல் ஒப்பந்தம், காட் ஒப்பந்தம் ஆகியவற்றை விளக்கி துண்டுப்பிரசுரங்கள், சிறு வெளியீடுகள் ஆகியவற்றை வினியோகித்துக் கொண்டே இருப்பார்கள். ஒரு நாள் வங்கி ஊழியர் சங்கம் கருத்தரங்கம் நடத்தும். மற்றொரு நாள் இன்ஷ்யூரன்ஸ் ஊழியர் சங்கம் கருத்தரங்கம் நடத்தும். மற்றொரு நாள் ரயில்வே சங்கம் கூட்டம் நடத்தும். இவை போக ஆண்டுதோறும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் கலை இரவை நடத்தும். ஒவ்வொரு ஆண்டும், புதிய பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்து, பாராளுமன்றம் நோக்கி இந்தியாவெங்கும் இருந்து வரும் தொழிற்சங்கத் தோழர்களின் பேரணி நடக்கும். இரண்டு முறை கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. புதிய பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்து இடதுசாரிகள் நடத்திய பிரச்சாரங்களைப் பார்த்தால், உண்மையிலேயே இந்தியாவை விற்று விடப்போகிறார்கள் என்ற பயம் ஏற்படும். அப்படி ஒரு வீச்சான பிரச்சாரம் அது.
அந்தப் பிரச்சாரத்திலெல்லாம் பங்கெடுத்து இந்த மோசடியான பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்து தொடர்ந்து பேசியும், வாதாடியும் வந்தவர்களை, அதே கொள்கைகளை இடது சாரிகள் ஆளும் மேற்கு வங்கத்தில் அமல்படுத்தி, அதை நியாயப்படுத்திப் பேசச் சொன்னால் எப்படி இருக்கும்… அப்படி ஒரு அதிர்ச்சியை பின்னாளில் சிபிஎம் அதன் தொண்டர்களுக்கு ஏற்படுத்திய சோகமும் நிகழ்ந்தது. சிபிஎம் நடத்தும் பொதுக்கூட்டங்களுக்குச் செல்வது, இலக்கியக் கூட்டங்களுக்குச் செல்வது என்பதைத் தாண்டி, ஏராளமாக படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கையில் காசு இருந்ததால், லைப்ரரியைத் தேடிப் போகும் பழக்கம் தொடக்கத்தில் கிடையாது. மாதந்தோறும், குறைந்தது ஆயிரம் ரூபாய்க்காவது புத்தகங்களை வாங்கி படிப்பது, படித்து விட்டு விவாதத்தில் ஈடுபடுடவது என்றே வாழ்க்கை ஓடியது.
ஊழல் என்பதை ஒரு தவறான விஷயமாக அரசு ஊழியர் சங்கமும் பார்த்ததில்லை என்பது நாளாவட்டத்தில் தெரிய வந்தபோது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சங்கத்திலேயே லஞ்சம் வாங்கும் பலர் முக்கிய பொறுப்புகளில் இருந்தாலும், மாநாட்டுக்கு நன்கொடை வசூல் செய்ய அவர்களை சங்கம் பயன்படுத்திக் கொண்டது அதிர்ச்சியையும் ஆயாசத்தையும் ஏற்படுத்தியது.
லஞ்ச ஒழிப்புத் துறையில் இருந்த அரசு ஊழியர்கள் மற்ற துறையில் உள்ள ஊழியர்களைப் போன்றவர்களே. அவர்களின் உலகம், நான், என் குடும்பம், என் வீடு, என்பதைத் தாண்டி வேறு சிந்தனைகளே இவர்களுக்கு இருக்காது. மாதந்தோறும் எப்படி பொய் மெடிக்கல் பில் போட்டு பணம் வாங்குவது, வருமான வரியிலிருந்து எப்படி தப்பிப்பது, எங்கே அரை கிரவுன்ட் நிலம் மலிவாக கிடைக்கிறது, அதிகாரியிடம் திட்டு வாங்காமல் எப்படி வேலை செய்வது என்பதுதான் அவர்கள் உலகம். அதைத்தாண்டி எந்த சிந்தனையும் இருக்காது.
வீட்டில் உள்ள வயதானவர்கள் யாருக்காவது, தீராத நோய் இருந்து அதற்கு சிகிக்சை பெற்றால், வருமான வரி விலக்கு கொடுக்கும் வழக்கம் இருந்தது. பிப்ரவரி மாதத்தில் அனைத்து ஊழியர்களும் சிவில் சர்ஜன்களிடம் கையெழுத்து வாங்க வரிசையில் நின்று, சான்றிதழ் பெற்று, நன்றாக இருக்கும் பெற்றோர் தீராத வியாதியில் சிக்கி சிகிச்சை பெறுவதாக கூச்சமேயின்றி சான்றிதழ் பெற்று, வருமான வரியிலிருந்து தள்ளுபடி பெறுவார்கள். ஒரு முறை, வருமான வரி கணக்கு அளிக்க கடைசி நாளன்று, சம்பளக் கணக்கு அலுவலகத்தில், வருமான வரித்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டபோது, ஒரே மருத்துவர், பல குடும்பங்களுக்கு தீராத வியாதியை தீர்த்து வைத்த விபரம் அம்பலமானதும், அந்த சலுகையையே ரத்து செய்தது வருமானவரித் துறை. இதைத் தவிர்த்து, நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை வழங்கப்படும் விடுப்பு காலப் பயணச் சலுகையில் போலி பில்களைக் கொடுத்து, எப்படி பணம் பெறுவது, இத்துறையில் லஞ்சம் வாங்குவதற்கு வசதி வாய்ப்புகள் இல்லாததால், எந்த வங்கியில் கடன் கொடுப்பார்கள், என்று எப்போது பார்த்தாலும் இதே வேலையாக அலைந்து கொண்டிருப்பார்கள். இப்போது போல லட்சக்கணக்கிலெல்லாம் லோன் கொடுக்க மாட்டார்கள். வங்கியில் அரசு ஊழியர்களுக்கு கொடுக்கும் அதிகபட்ச கடன் தொகை 10 ஆயிரம் ரூபாய்தான். இதற்கே ஆலாய்ப் பறப்பார்கள். பணியில் இருந்த 18 ஆண்டுகளில் ஒரு முறை கூட சவுக்கு விடுப்பு கால பயணச்சலுகையை அனுபவித்தது கிடையாது. மருத்துவப் பட்டியல் ஆரம்ப காலத்தில் வாங்கியிருந்தாலும், அது தவறு என்று தெரிய வந்த பிறகு பெற்றதேயில்லை. இதற்காக சக ஊழியர்கள் திமிர் பிடித்தவன் என்றும் முட்டாள் என்றும் திட்டுவார்கள்.
லஞ்ச ஒழிப்புத் துறையில் அதிகாரிகள் பெருமளவில் முறைகேட்டில் ஈடுபடுவது அங்கே வழங்கப்படும் ரகசிய நிதியில். ரகசிய நிதி மாதந்தோறும், இன்ஸ்பெக்டர்கள், டிஎஸ்பிக்களுக்கு வழங்கப்படும். அது அவர்கள் தகவல் சேகரித்து புதிய வழக்குகளை பதிவு செய்வதற்காக வழங்கப்படுவது. ஆனால், அதை மாதந்தோறும் பெறப்படும் அலவன்சாகவே கருதி வந்தார்கள். அத்துறையில் அமைச்சுப் பணியாளர்களாக பணியாற்றியவர்களுக்கு இந்தத் தொகை வழங்கப்படுவதில்லை. என்னடா இது இவர்கள் மட்டும் கொள்ளையடிக்கிறார்களே என்று அமைச்சுப் பணியாளர்களுக்கு நீண்ட நாளாக மனக்குறை. அந்தக் குறையையும் தீர்க்க மாதந்தோறும் அனைவருக்கும் 100 ரூபாய் என்று வழங்கப்பட்டது. இந்த 100 ரூபாயைப் பெறுவதற்கு அந்த ஊழியர்கள் ஆலாய்ப் பறப்பதைப் பார்த்தால் அருவருப்பாக இருக்கும். எஸ்.பி., டிஐஜி, ஐ.ஜி, கூடுதல் டிஜிபி என்று அதிகாரிகள் தங்கள் பதவிக்கேற்றவாறு, இத்தொகையை பங்கிட்டுக் கொள்வார்கள். இந்தத் தொகைக்கு கணக்கு வழக்கே கிடையாது என்பதால், இஷ்டத்திற்கு கொள்ளையடிப்பார்கள்.
லஞ்ச ஒழிப்புத் துறையிலேயே 16 வயது முதல் வளர்ந்ததால், ஊழியர்கள் அனைவருக்கும் செல்லப்பிள்ளை. அனைவரும் அன்போடு பழகுவார்கள். பேச்சிலராக இருந்து, வாகனமும் வைத்திருந்ததால், யாருக்கு எந்த வேலை என்றாலும், சவுக்கையே அழைப்பார்கள். ஒரு குடும்பத்தில் வளர்ந்த உணர்வே இருந்தது. அப்படிப் பழகிய ஊழியர்கள், கைதான பிறகு நேரில் பார்த்தால் கூட முகத்தைத் திருப்பிக் கொண்டு சென்றது ஏற்படுத்திய வேதனையை வார்த்தையில் வடிக்க முடியாது.
அந்த அலுவலகத்திலேயே பல்வேறு அதிகாரிகள் மாறுதலில் வந்து சென்ற வண்ணம் இருப்பார்கள். 1991ல், சவுக்கு வேலையில் சேர்ந்தபோது இயக்குநராக இருந்தவர் சி.எல்.ராமகிருஷ்ணன் என்ற டிஜிபி. அவரைப் போன்ற அதிகாரிகளை இன்று கடவுளாக வணங்கலாம். அவருக்கு 100 ரூபாய் லஞ்சமும், லஞ்சமே, லட்ச ரூபாய் லஞ்சமும் லஞ்சமே. யாராவது அதிகாரி என்ன சார் வெறும் 100 ரூபாய்தானே வாங்குகிறான் என்று சொல்லி விட்டால், அவன் 100 ரூபாய் வாங்குவது ஒரு ஏழையிடமிருந்து. அந்த ஏழைக்கு அந்த 100 ரூபாய் பெரிய தொகை. லஞ்சத்தில் சின்னது, பெரியது என்று எதுவும் இல்லை என்பார். அவர் பணியிலிருந்து ஓய்வு பெற்று, பல ஆண்டுகள் கழித்து, வாகனம் கூட இல்லாமல் சாலையில் ஒரு சூட்கேசோடு அண்ணா இன்ஸ்ட்டியூட் ஆப் மேனேஜ்மென்டில் ஒரு வகுப்பு எடுப்பதற்காக நடந்து சென்றதைப் பார்த்தபோது ஆச்சர்யமாக இருந்தது. எந்த விதமான ஆடம்பரமும் இல்லாமல், நான் ஒரு ரிட்டயர்ட் டிஜிபி என்ற பந்தா இல்லாமல், எளிமையாக நடந்து சென்று கொண்டிருந்தார். நான் உங்களை அங்கே இறக்கி விடவா என்று கேட்டபோது, கொஞ்சமும் தயங்காமல் வண்டியில் ஏறிக் கொண்டு வந்து இறங்கிய பின், யார் என்ன என்பதை விசாரித்தார். அய்யா நான் உங்களிடம்தான் பணியில் சேர்ந்தேன் என்று சொன்னதும் ரொம்ப மகிழ்ச்சியடைந்தார். “பரவாயில்லப்பா… என்னை இவ்வளவு நாள் ஞாபகம் வச்சுருக்க” என்று தலையில் கை வைத்து ஆசிர்வதித்தார். அவர் இயக்குநராக இருந்தபோது, அவரின் உதவியாளரிடம் மாதந்தோறும் 50 ரூபாய் கொடுத்து விடுவார். அவரைப் பார்க்க வரும் விருந்தினர்களுக்கு வழங்கப்படும் டீ, காபி முதலியவை அந்தப் பணத்தில்தான் வாங்கித் தர வேண்டும். அலுவலகப் பணத்திலிருந்து ஒரு ரூபாயைக் கூட எடுக்க மாட்டார்.
அவருக்குப் பிறகு இயக்குநரான ஆர்.கே.ராகவன் இதே வழக்கத்தை பின்பற்றினார். அதற்குப் பிறகு…. என்னத்தை சொல்ல… ஆர்.கே.ராகவன் இயக்குநரான போதுதான் ஜெயலலிதா உள்ளிட்டோர் மீது சராமாரியான புகார்கள். ஏராளமான வழக்குகள். அது வரை தூங்கி வழிந்து கொண்டிருந்த லஞ்ச ஒழிப்புத் துறைக்கு திடீரென்று முக்கியத்துவம். பத்திரிக்கைகள் லஞ்ச ஒழிப்புத் துறையைப் பற்றிய செய்திகளை வளைத்து வளைத்து எழுதி வந்தன.
அந்த நேரத்தில் சவுக்குக்கு உதவியாளராக பதவி உயர்வும், லஞ்ச ஒழிப்புத் துறையிலேயே மற்றொரு பிரிவுக்கு மாறுதலும் வந்தது. இத்தனை நாள் நிர்வாகப் பிரிவில், மாக்கு மாக்கென்று பில் போடும் வேலை. புதிய வேலை டிஎஸ்பியின் முகாம் உதவியாளர் வேலை. அந்த பிரிவில்தான் நேரடியான விறுவிறுப்பான நடவடிக்கைகள் இருக்கும். பொறி வைத்து லஞ்சம் வாங்குபவர்களைப் பிடிப்பார்கள் இல்லையா.. அந்த சம்பவங்களை நேரடியாக பார்க்கும் வாய்ப்பு இருக்கும் வேலை.
இப்போது மணி மஹால் என்று அழைக்கப்பட்டு, சினிமா ஷுட்டிங்குகளுக்கு வாடகைக்கு விடப்படும் கட்டிடத்தில்தான் அந்த நகரப் பிரிவு இயங்கியது. வெள்ளைக்காரன் கட்டிய பங்களா அது. தரை முழுவதும், மரத்தில் அமைக்கப்பட்டிருக்கும். அப்போல்லோ மருத்துவமனைக்கு அருகில், வாலஸ் தோட்டத்தில் அமைந்துள்ளது அந்த பங்களா. அந்த அலுவலகத்தில் பணியாற்றியபோதுதான், ஒரு தனியார் முதலாளி, அரசு நிர்வாகத்தையே தன்னுடைய வசதிக்காக வளைத்ததைப் பார்க்க முடிந்தது. அப்போல்லோ மருத்துவமனைக்கு வருபவர்களின் கார்களை நிறுத்த இட வசதி கிடையாது. அப்போல்லோ மருத்துவமனைக்கு எதிரே இருக்கும் பங்களாக்காரர் ஒருவரிடம் அந்த இடத்தை விலைக்குத் தரச் சொல்லி, அப்போல்லோ ரெட்டி கெஞ்சி, மிரட்டி, என்னென்னவோ செய்து பார்த்தார். ஒன்றும் நடக்கவில்லை. அந்த நபர் இன்று வரை அந்த இடத்தை விற்கவில்லை. அப்போல்லோ மருத்துவமனை வசதிக்காக, அந்த சாலையையே ஒரு வழிச்சாலையாக மாற்றி, அங்கே ஓடும் கூவம் நதிக்கரையில் பார்க்கிங் வசதி கட்டப்பட்டு வருகிறது. தற்போது அப்போல்லோ அருகே இருந்த சிந்தூரி ஹோட்டலையும் மருத்துவமனையாக மாற்றி விட்டதால், இன்னும் இட நெருக்கடி கூடியிருக்கிறது.
அப்போது சென்னை நகரப் பிரிவில், சி.பி.விஸ்வநாதன் என்று ஒரு டி.எஸ்.பி இருப்பார். அவருக்கு குழந்தைகள் கிடையாது. அவர் சவுக்கை ஒரு சொந்த மகன் போல நடத்துவார். பொறி வைத்துப் பிடிக்க லஞ்ச ஒழிப்புத் துறை குழு எங்கே சென்றாலும், கூடவே அழைத்துச் செல்வார். 1996ல், லஞ்ச ஒழிப்புத் துறையால் முதன் முதலாக கைது செய்யப்பட்டவர், இன்று திமுகவின் முக்கியப் பிரமுகராக இருக்கும் டி.எம்.செல்வகணபதி. அவர் ஏற்காடு எக்ஸ்பிரஸ்ஸில் காலை 5 மணிக்கு வருகிறார் என்று தகவல் வந்ததும், இரவு அலுவலகத்திலேயே தங்கி விடியற்காலை 5 மணிக்கு செல்வகணபதி ரயிலில் இருந்து இறங்கியதும், உங்களைக் கைது செய்கிறோம் என்று டிஎஸ்பி செல்வகணபதியிடம் சொன்னார். அப்போது செல்வகணபதி முகம் போன போக்கைப் பார்க்க வேண்டுமே… உடனே சுதாரித்த செல்வகணபதி, தன் உதவியாளரிடம், தன் சூட்கேஸை கொடுத்து விட்டு, போகலாம் சார் என்றார். மேத்யூஸ் என்ற மற்றொரு டிஎஸ்பி, கவனமாக அந்த சூட்கேஸை பின்தொடர்ந்து சென்று உதவியாளரிடமிருந்து அதைக் கைப்பற்றினால், அந்த சூட்கேசுக்குள் ஒரு லட்ச ரூபாய் இருந்தது. அதுவும் கைப்பற்றப்பட்டது. பொறி வைத்துப் பிடிக்கும் பல வழக்குகளில் அருகே இருந்து பணியாற்றியது ஒரு புதிய அனுபவமாக இருந்தது.
1996ல், திமுக அரசு பதவியேற்றதும் ஜெயலலிதா மீது சொத்துக் குவிப்புப் புகாரை அளித்திருந்த சுப்ரமணிய சுவாமி அந்த அலுவலகத்துக்கு வாக்குமூலம் அளிப்பதற்காக வந்திருந்தார். அவர் வந்ததைத் தொடர்ந்து அதிமுக அமைச்சர்கள் வீட்டில் பல்வேறு சோதனைகள் நடந்தன. அப்படி ஒரு சோதனைக்கு விஸ்வநாதன் டிஎஸ்பி, சசிகலாவின் அண்ணன் சுந்தரவதனம் வீட்டில் சோதனையிட அனுப்பப்பட்டார். அந்தக் குழுவோடு ஒன்றாகச் செல்ல நேர்ந்தது. அப்போது டிடிவி.தினகரன் காபிபோசா சட்டத்தில் சிறையில் இருந்தார். இளவரசி அந்த வீட்டில்தான் இருந்தார். தினகரனின் மனைவி அனுராதாவும் அந்த வீட்டில்தான் இருந்தார். அதிகாரிகள் சோதனையிட்டுக் கொண்டிருந்தார்கள். லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைக்கு செல்வதற்கு முன்பே, வருமான வரித்துறை, அமலாக்கப்பிரிவு போன்ற துறைகள் சோதனை நடத்தி முடித்திருந்தன. டிஎஸ்பி, சவுக்கையும் மற்றொரு காவலரையும் அவர்கள் வீட்டிலிருந்த வெள்ளி நகைகள் மற்றும் தங்க நகைகள் ஆகியவற்றின் எடையை கணக்கெடுக்கச் சொன்னார். அனுராதாதான் ஒவ்வொரு நகையும் எவ்வளவு இருக்கும் என்று கணக்கிட்டுச் சொன்னார். அப்போது அனுராதா அவரது விசிட்டிங் கார்டை கொடுத்தார். அனுராதா யார் என்பது தெரியாமல், நீங்கள் இந்த கம்பேனியில்தான் வேலை பார்க்கிறீர்களா என்று கேட்டதும், கேவலமாக ஒரு பார்வை பார்த்து விட்டு, அது என்னுடைய சொந்தக் கம்பெனி என்றார்.
எதையும் கைப்பற்றாமல், இரண்டு கைத்துப்பாக்கிகளை மட்டும் கைப்பற்றப்பட்டு, சோதனை முடிந்து சோதனை மகஜர் தயாரித்துக் கொண்டிருக்கும்போது, படுக்கையறையில் உள்ள கட்டிலுக்குக் கீழே பார்த்தபோது ஒரு பை இருந்தது. அதை எடுத்துப் பார்த்தால் அதன் உள்ளே ஒரு லட்ச ரூபாய் இருந்தது. “சார் இங்கே ஒரு லட்ச ரூபாய் இருக்கிறது சார்” என்று அதை எடுத்து டிஎஸ்பியிடம் கொடுத்ததும், அந்தப் பணம் கைப்பற்றப்பட்டது. சசிகலாவின் அண்ணி சந்தானலட்சுமியின் வீடு அது. அந்தப் பணத்தை எடுத்துக் கொடுத்ததும், அவர் முறைத்த முறைப்பு இருக்கிறதே… அப்படி ஒரு பார்வை பார்த்தார். சற்று நேரத்தில் சகஜமான அவர், தம்பி உனக்கு சொந்த ஊர் எங்கப்பா என்றார். தஞ்சாவூர் என்றதும், நாங்க எல்லாருமே தஞ்சாவூர்தாம்பா என்றார். அங்கே உங்களுக்கு நிலபுலன் சொந்த வீடெல்லாம் இருக்கிறதா என்றதற்கு இந்த இடத்தில் வீடு இருக்கிறது என்று சொன்னதும், நல்லா படிச்சு, உங்க டிஎஸ்பி மாதிரி பெரிய அதிகாரியா வரணும் என்று சொன்னார். பரவாயில்லையே… இந்த அம்மாள் பணத்தை பறிகொடுத்தாலும் நம்மை வாழ்த்துகிறார்களே என்று நினைத்தால், 2001ல் அந்த அம்மாள் வாழ்த்தியதற்கான அர்த்தம் புரிந்தது.
2001ல் மீண்டும் அதிமுக ஆட்சி வந்ததும், தஞ்சாவூரில் உள்ள சொந்த வீட்டுக்கு சென்று ஒரு வாரம் தேடியிருக்கிறார்கள். சிக்கியிருந்தால் அடி வெளுத்திருப்பார்கள் என்று தோன்றுகிறது. இங்கேயிருந்து தஞ்சாவூர் சென்று தேடுவதற்கு பதிலாக, லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்துக்கு வந்திருந்தால் கோழி மாதிரி அமுக்கியிருக்கலாம் என்பது தெரியாத பதர்கள்.
அந்த வாலஸ் தோட்ட அலுவலகத்தில் உள்ள வசதி என்னவென்றால், டிஎஸ்பி வெளியூருக்கோ, விடுப்பிலோ சென்றிருந்தால், அவருக்குக் கீழ் பணியாற்றும் சவுக்குக்கும் மற்றவர்களுக்கும் எவ்வித வேலையும் கிடையாது. லீவ் எடுத்தால் போர் அடிக்கும் என்பதால், அலுவலகத்துக்கு டேப் ரெக்கார்டர் எடுத்து வந்து பாட்டு கேட்டுக் கொண்டு கூடப் பணியாற்றிய மற்றொரு நண்பரோடு ஒரே டான்ஸ்தான். அப்போது அங்கேயே இருந்த இன்னொரு பிரிவில், க்ரூப் 1 தேர்வெழுதி தேர்ச்சியடைந்த ஒரு இளம் அதிகாரி கூடுதல் எஸ்.பியாக சேர்ந்திருந்தார். அவர் மதியம் உணவருந்தி விட்டு, அந்த காரிடாரில் நடந்து கொண்டிருந்தார். அவர் வருவது தெரியாமல் டான்ஸ் ஆடிக் கொண்டிருந்ததைப் பார்த்து விட்டார். அய்யய்யோ என்ன செய்யப் போகிறாரோ என்று பயந்து கொண்டிருந்ததும், கான்ஸ்டபிளை விட்டு அழைத்தார். யாருடைய வீட்டிலிருந்தோ கைப்பற்றப்பட்ட ஒரு வங்கிக் கணக்கு விபரத்தை அப்படியே டைப் அடிக்கச் சொன்னார். அதை அடித்து முடிக்க ஒரு வாரம் ஆகும். வேறு வழி… நல்ல வேளையாக மாலை அதை திருப்பி வாங்கிக் கொண்டார். அந்த அதிகாரி சவுக்கின் வாழ்வில் பல திருப்பங்களை ஏற்படுத்துவார் என்பது அப்போது தெரியாது.
அந்த இளம் அதிகாரியிடம், ஜெயலலிதா மீதான ஊழல் வழக்கு ஒன்று விசாரணைக்காக கொடுக்கப்பட்டது. இரண்டு மாதத்தில் சிறப்பாக விசாரணையை முடித்த அவர், அந்த இறுதி அறிக்கையை தயாரிக்க நல்ல உதவியாளர் இல்லாமல் அவஸ்தை பட்டுக் கொண்டிருந்தார். திடீரென்று ஒரு நாள் அவர் டிஎஸ்பி விஸ்வநாதனிடம் அந்த இறுதி அறிக்கையை தயாரிக்க நன்றாக வேலை செய்யும் ஒரு ஆள் வேண்டும் என்றதும், விஸ்வநாதன் இவரை அழைத்துக் கொள்ளுங்கள் என்று அனுப்பி வைத்தார். அந்த அதிகாரியிடம் வேலை எப்போது தொடங்கும் என்றால், மாலை 7 மணிக்குத்தான். மாலை 7 மணிக்குத் தொடங்கும் வேலை காலை 5 மணி வரை நடக்கும். 5 மணிக்கு கிளம்பி வீட்டுக்கு சென்று விட்டு, மீண்டும் காலை 10 மணிக்கு அலுவலகம் வந்து, விஸ்வநாதன் டிஎஸ்பியின் வேலைகளைப் பார்க்க வேண்டும். இது போல இரண்டு மாதங்கள் தொடர்ந்து நடந்தது. அப்போது இயக்குநராக இருந்த ஆர்.கே.ராகவனுக்கு கருணாநிதியை நினைத்தாலே பயம். அப்போது லஞ்ச ஒழிப்புத் துறையில் துணை இயக்குநராக இருந்த ரமணி என்ற அதிகாரி, ஊழல் வழக்கில் சிக்கிய மற்றொரு பிராமண அதிகாரியான எல்.என்.விஜயராகவன் என்ற அதிகாரியைக் காப்பாற்ற அவரோடு பேரம் பேசிக்கொண்டிருந்தார். கூடங்குளம் விவகாரத்தில் தமிழக அரசு அமைத்த குழுவில் இருந்த அதே விஜயராகவன்தான். இந்த விவகாரத்தை அறிந்த கருணாநிதி ஒரே நாளில் ரமணியை மாற்றினார். இதையடுத்து ராகவன் கருணாநிதியைக் கண்டு கூடுதலாகப் பயந்தார். ஆகையால் அந்த அதிகாரி தயாரித்து அனுப்பிய இறுதி அறிக்கையில் தினம் தினம், மாறுதல்களைச் சொல்வார் ராகவன். அந்த அதிகாரியும் சளைக்காமல் அத்தனை மாறுதல்களையும் செய்வார். இது போல இரண்டு மாதங்கள் அந்த வேலை நடந்தது. இரண்டு மாதங்களாக ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று மணி நேரம்தான் உறக்கம். பிறகு அந்த இளம் அதிகாரி, பதவி உயர்வில் வேறு துறைக்குச் சென்று விட்டார். இரண்டு மாதங்கள் இரவு பகலாக வேலை பார்த்த அந்த வழக்கு, பின்னாளில் மண்ணோடு மண்ணாகப் போனது.
அப்படி அந்த அலுவலகத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது லஞ்ச ஒழிப்புத் துறையில் கம்ப்யூட்டர் அறிமுகப்படுத்தப்பட்டது. லஞ்ச ஒழிப்புத் துறையில் ரகசியப் பிரிவில்தான் முக்கிய பணிகள் செய்யப்படும் என்பதால், அந்தப் பிரிவுக்குத்தான் முதலில் கம்ப்யூட்டர் வழங்கப்பட்டது. கம்ப்யூட்டரைப் பார்க்கப் பார்க்க ஆசையாக இருக்கும். ரகசியப்பிரிவு பணியார்களைத் தவிர வேறு யாரையும் ரகசியப் பிரிவுக்குள் அனுப்ப மாட்டார்கள். அது எப்படித்தான் இருக்கிறது என்று பார்க்கலாம் என்று சென்றால், அந்தத் துறையின் பணியாளரேயானாலும் உள்ளே அனுமதிக்க மாட்டார்கள். ஒரு முறை அப்படி சென்று பார்க்க முயன்றபோது, உதவி மேலாளர் ஒருவர், “தம்பி நீயெல்லாம் இங்க வரக்கூடாதுப்பா… இது சீக்ரெட் ப்ரான்ச்” என்று விரட்டி விட்டார். அப்போது விஜயன் என்ற ஒரு தனியார் மென்பொறியாளரை மற்ற ஊழியர்களுக்கு கம்ப்யூட்டர் சொல்லிக் கொடுப்பதற்காக நியமித்திருந்தார்கள். அவர் இயக்குநர் ஆர்.கே.ராகவனுக்கு ரொம்ப நெருக்கம். அவர் ப்ரோக்ராம் எழுதிக் கொண்டிருப்பார். அவரிடம் எப்படியாவது கம்ப்யூட்டரைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று அவர் கூடவே சுற்றுவது வழக்கமானது. அவர் அவ்வப்பொழுது சரக்கடிப்பார். பெரிய பாரில்தான் சரக்கடிப்பார். அவருக்கு சரக்கெல்லாம் வாங்கிக் கொடுத்தாலும் கம்ப்யூட்டரை மட்டும் தொட விட மாட்டார். ஒரு நாள் வெளிப்படையாகவே சார் சொல்லிக் கொடுங்கள் என்று கேட்டதற்கு, “உனக்கெல்லாம் இது வராதுப்பா” என்று சொல்லி விட்டார். ங்கொய்யால எனக்கா வராதுன்ற என்று ஒரு தனியார் கம்ப்யூட்டர் கல்வி நிறுவனத்தில் மறுநாளே சேர்ந்து கம்ப்யூட்டரை வெறி பிடித்தார்ப் போல கற்றதனால், பின்னாளில், ஒட்டு மொத்த லஞ்ச ஒழிப்புத் துறை ஊழியர்களுக்கும் கம்ப்யூட்டர் வகுப்பு எடுக்கும் அளவுக்கு வளர முடிந்தது.
அடுத்த பதவி உயர்வில் ரகசியப் பிரிவுக்கு வர நேர்ந்ததும், சங்க நடவடிக்கைகளில் ஈடுபட இருந்த தடை காரணமாக, சங்கத்தோடு தொடர்பு அறுந்தது. அதற்கு முன்பாகவே, மேற்கு வங்கத்தில் புதிய பொருளாதாரக் கொள்கைகள் அமல்படுத்தப்பட்டதன் காரணமாகவும், விடுதலைப் புலிகள் மீதான சிபிஎம்மின் கொள்கை காரணமாகவும் ஏற்பட்டிருந்த விரிசல், நிரந்தரப் பிரிவை ஏற்படுத்தியது.
பதவி உயர்வில் ரகசியப் பிரிவுக்குச் சென்றதும், வேலைகள் வித்தியாசமாக இருந்தன. இது வரை பார்த்த வேலைகளுக்கும் இந்த வேலைக்கும் ஏராளமான வித்தியாசங்கள் இருந்தாலும், மனிதர்கள் அதே மனிதர்கள்தான். திமுக ஆட்சிக் காலத்தில் பரபரப்பாக இயங்கிய லஞ்ச ஒழிப்புத் துறை, 2001ல் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் தலைகீழாக மாறியது. எந்த வழக்குகளுக்காக திமுக ஆட்சியில் இரவு பகலாக லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளும், ஊழியர்களும் பணியாற்றினார்களோ, அந்த வழக்குகளை ஒவ்வொன்றாக மூடும் பணி நடைபெற்றது.
அந்த நாள் வரை, லஞ்ச ஒழிப்புத் துறையில் பணியாற்றிய அதிகாரிகள் மீது மிகப் பெரிய மரியாதை இருக்கும். மெத்தப் படித்தவர்கள். அறிவாளிகள். அவர்களுக்குத் தெரியாத தர்ம நியாயங்கள் இல்லை என்று அவர்கள் மீது இருந்த மதிப்பும் மரியாதையும், 2001ல் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும் இடிந்து தரை மட்டமானது. அதில் விதிவிலக்கான அதிகாரி ஒருவர் உண்டென்றால் அது பி.பி.நெய்ல்வால். ஜெயலலிதா அரசு பதவியேற்றதும் 2001ல் லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநராக நியமிக்கப்பட்டார். அப்போது அதிமுக அமைச்சர்கள் மீதான வழக்குகளை ஆய்வு செய்தார். ஒவ்வொரு வழக்காக ஆய்வு செய்து, அத்தனை வழக்கிலும், சட்டபூர்வமான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு அந்தந்தக் கோப்பிலேயே உத்தரவிட்டார். அவருக்குப் பிறகு வந்த அதிகாரிகள், அதிமுக அமைச்சர்களை விட மோசமானவர்களாக இருந்தனர்.
குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய அதிகாரிகள், ராதாகிருஷ்ண நாயுடு மற்றும், நாஞ்சில் குமரன். அமைச்சர்களாக இருக்கும் அதிமுக அடிமைகளிடம், ஜெமினி மேம்பாலத்தின் மீது, பட்டாபட்டி அண்டர்வேரோடு டான்ஸ் ஆட வேண்டும் என்று உத்தரவிட்டால், மற்ற அமைச்சர்களுக்கு இந்த உத்தரவை வழங்காமல், நமக்கு இந்த உத்தரவை வழங்கியிருக்கிறாரே என்று பெருமையோடு ஆடுவார்கள். அந்த அடிமைகளுக்கு எந்த விதத்திலும் சளைக்காத அதிகாரிகள் இந்த இருவரும்.
மேம்பாலம் கட்டியதிலும், மாநகராட்சி செய்த பல்வேறு பணிகளிலும் ஏராளமான ஊழல் என்று ஆறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அத்தனை வழக்குகளும் மு.க.ஸ்டாலினுக்கு எதிரானவை. அதில் ஒரு வழக்கைத் தவிர, மற்ற வழக்குகளில் ஸ்டாலினுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை என்று சம்பந்தப்பட்ட புலனாய்வு அதிகாரிகள் அறிக்கை அளித்தார்கள். அத்தனை அறிக்கைகளையும் ராதாகிருஷ்ணனும், நாஞ்சில் குமரனும் சேர்ந்து கொண்டு, அரசுக்கு அனுப்பாமலேயே நிறுத்தி வைத்தார்கள். என்ன காரணம் என்றால், ஸ்டாலினுக்கு எதிராக ஆதாரம் இல்லை என்று அறிக்கை அனுப்பினால் அம்மா கோபித்துக் கொள்வார்களாம். திமுக ஆட்சிக்கு வந்ததும், இந்த அத்தனை வழக்குகளிலும் ஸ்டாலினைக் காப்பாற்றியது தான்தான் என்று ஒரே நாளில் அறிக்கை அனுப்பி, திமுக ஆட்சியில் நல்ல பதவியை பெற்றதும் இந்த இருவர்தான். ஜெயலலிதா ராஜ்யசபா எம்.பியாக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு ஒன்று பதியப்பட்டது. அந்த வழக்கை இழுத்து மூடியவர் இந்த ராதாகிருஷ்ணன்தான். அதே ராதாகிருஷ்ணன், ஜெயலலிதாவின் சிறப்பு உத்தரவின் பேரில், தன் மகன் சந்தீப்புக்கு அண்ணா பல்கலைகழகத்தில் என்ஜினியரிங் சீட் வாங்கினார். இதே போல, ராமானுஜத்தின் ஓய்வுக்குப் பிறகு அடுத்து டிஜிபியாகும் கனவில் இருக்கும் நரேந்திரபால் சிங், வளர்மதி மற்றும் செங்கோட்டையன் மீதான வழக்குளை இழுத்து மூடி விட்டு, தன் மகள் குர்பானி சிங்குக்கு அண்ணா பல்கலைகழகத்தில் சீட் வாங்கினார்.
ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும், இது போன்ற அதிகாரிகளின் நடத்தை அருவருப்பை ஏற்படுத்தியது. ரகசியப் பிரிவில் பணியாற்றுகையில், 500 ரூபாய், 1000 ரூபாய் லஞ்சம் வாங்கும் விஏஓ போன்ற கடைமட்ட ஊழியர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் கடுமையாக இருக்கிறது என்பது தெரிய வந்தது. வழக்கில் சிக்கினால் அந்த நபரின் கதி அதோகதிதான். ராதாகிருஷ்ணன் போன்ற அதிகாரிகள் ஊழல் குறித்து கொடுக்கும் லெக்சர் இருக்கிறதே… அப்பப்பா… கேட்டாலே புல்லரிக்கும் அப்படிப் பேசுவார்கள். கட்டிங் எட்ஜ் லெவலில் இருக்கும் கரப்ஷனை முழுமையா ஒழித்தால்தான் ஏழை மக்கள் பயனடைவார்கள் என்பார் ராதாகிருஷ்ணன். ஊழல் இந்த நாட்டின் மிகப்பெரிய வியாதி என்பார். அவ்வப்போது தத்துவங்களை அள்ளி விடுவார். அந்த ஆளை நினைத்தாலே வாயில் கெட்ட வார்த்தைதான் வருகிறது. அப்படிப் பேசுவார். உலகத்தில் தனக்குத் தெரியாதது எதுவுமே இல்லை என்பது போலப் பேசுவார். இப்படி 500 ரூபாய் லஞ்சம் வாங்கும் கடை நிலை ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் ராதாகிருஷ்ணன் வீட்டில் மட்டும் 6 அரசு வாகனங்கள் ஓடும். ஒரு அதிகாரிக்கு ஒரு வாகனம் மட்டுமே பயன்படுத்த உரிமை உண்டு. ஒரு வாகனத்துக்கு மாதத்துக்கு 160 லிட்டர் பெட்ரோல். 2003ல் ஒரு லிட்டர் 50 ரூபாய் என்று வைத்துக் கொண்டாலும், ராதாகிருஷ்ணன் மாதந்தோறும், அரசுக்கு ஏற்படுத்தும் நஷ்டம் 48 ஆயிரம் ரூபாய். இப்படிக் கொள்ளையடித்து விட்டு, மகாத்மா காந்தி போல லெக்சர் கொடுத்தால் வாயில் கெட்ட வார்த்தை வருமா வராதா.. ?
இவர் ஒரு புறம் என்றால், இந்த நாஞ்சில் குமரன் இருக்கிறாரே… அந்த ஜெமினி மேம்பால டான்ஸ் படித்தீர்கள் அல்லவா… அது முழுமையாக நாஞ்சில் குமரனுக்குப் பொருந்தும். ஜெயலலிதா ஆட்சி என்றதும், தன் அறையின் கண்ணாடிகள் அனைத்துக்கும் பச்சை நிற ஸ்டிக்கர் ஒட்டச் சொன்னார். லஞ்ச ஒழிப்புத் துறை என்ற பெயர்ப்பலகையை பச்சை நிறத்தில் எழுதச் சொன்னார். தமிழக அரசுத் துறைகளில், வனத்துறை அலுவலகத்தின் பெயர்ப்பலகைகள் மட்டுமே பச்சை நிறத்தில் இருக்கும். டேபிளில் அனைவரும் பார்க்கும் வகையில் நமது எம்.ஜி.ஆர் பேப்பரை வைத்திருப்பார். மூளை வளர்ச்சி குன்றியவன் கூட நமது எம்.ஜி.ஆரை படிக்க மாட்டான். அதை பெருமையாக டேபிளில் வைத்திருப்பார் குமரன். முதல்வர் அலுவலகத்துக்கு ஏதாவது குறிப்புகள் அனுப்ப வேண்டுமென்றால் ஸ்டிக் பைலில் போட்டு அனுப்புவார்கள். அந்த ஸ்டிக்கின் நிறம் பச்சையில் இல்லையென்றால், நாஞ்சில் குமரன் திட்டுவார் பாருங்கள்… அப்படித் திட்டுவார். அப்படி ஜெயலலிதாவின் அடிமையாக இருக்க நாஞ்சில் குமரனுக்கு எல்லா உரிமைகளும் உண்டு. ஆனால் அதில் நிரந்தரமாக இருக்க வேண்டுமா இல்லையா ? 2006ல் திமுக ஆட்சிக்கு வந்ததும், இரவோடு இரவாக லஞ்ச ஒழிப்புத் துறை பெயர்ப்பலகை நீல நிறத்தில் மாற்றப்பட்டது. மற்ற அதிகாரிகளிடம் பேசிக் கொண்டிருந்தபோது, என் உடம்பில் ஓடுவதே திமுக ரத்தம். எங்கள் குடும்பமே திமுக குடும்பம் என்றார் நாஞ்சில் குமரன்.
நாஞ்சில் குமரன்
அதிமுக ஆட்சியில் ஆற்காடு வீராச்சாமி மீது சொத்துக் குவிப்பு வழக்கு பதியப்பட்டது. அந்த வழக்கின் விசாரணை அதிகாரி, ஆற்காடு வீராச்சாமி மீது குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி வந்தார். அவர் பெயர் பி.வி.தாமஸ். ஆனால் அவரை இந்த ராதாகிருஷ்ணனும், நாஞ்சில் குமரனும் சேர்ந்து மிரட்டு மிரட்டு என்று மிரட்டி, ஆற்காடு வீராச்சாமி மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப் பரிந்துரைத்து அறிக்கை பெற்றார்கள். 2006ல் திமுக ஆட்சிக்கு வந்ததும், அப்படி தலைமைச் செயலகத்துக்கு அனுப்பப்பட்ட அறிக்கையை இந்த இரண்டு அதிகாரிகளும் திரும்ப எடுத்து வந்து திருத்தினார்கள்.
1996ல், அப்போதைய நிதிச் செயலராக இருந்த நாராயணன் ஐஏஎஸ் மீது ஸ்பிக் நிறுவனத்தின் பங்குகளை விற்றது தொடர்பாக ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கின் இறுதி அறிக்கை அரசுக்கு அனுப்பப் பட்டது. அதில் இறுதி ஆணை பிறப்பிக்கப்படாமலேயே நிலுவையில் இருந்தது. 2001ல் நாராயணன் தலைமைச் செயலாளரானார். அவர் தலைமைச் செயலாளர் ஆனதும், தன் மீதான வழக்கில் தானே நடவடிக்கையை கை விட்டு, ஒரு ஆணை பிறப்பித்தார். அந்த ஆணை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு பிறப்பிக்கப் பட்டது. இந்த ஆணையை நாஞ்சில் குமரன் பெற்று, அலுவலகத்துக்கு அனுப்பாமல் கையிலேயே வைத்துக் கொண்டார். திமுக ஆட்சிக்கு வந்ததும், இந்த ஆணையை கொடுத்து பழைய தேதியில் வந்தது போல கோப்பில் எழுதி எடுத்து வருமாறு, அலுவலக மேலாளராக இருந்த ஜெயஸ்ரீ என்ற பெண்மணியிடம் சொன்னார். அந்த கோப்பு பராமரிக்கப்படும் சீட்டைப் பார்த்துக் கொண்டிருந்தது சவுக்கு. இது போல இயக்குநர் கேட்கிறார் என்றதும் கையெழுத்திட மறுத்ததோடு, அந்த ஜெயஸ்ரீ என்ற மேலாளரிடம், நீங்களும் கையெழுத்துப் போடாதீர்கள் இது தவறு என்று சொல்லப்பட்டது. இவர்கள் செய்யும் திருட்டுத்தனம் முதல்வர் அலுவலகத்தில் உரிய அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டது.
மறுநாள் காலை 6 மணிக்கு அந்தக் கோப்பை எடுத்துக் கொண்டு வருமாறு, நாஞ்சில் குமரனுக்கும், ராதாகிருஷ்ணனுக்கும் தலைமைச் செயலகத்திலிருந்து அழைப்பு. கோப்பை எடுத்துச் சென்று, நன்றாக டோஸ் வாங்கிக் கொண்டு நாஞ்சில் குமரனும், ராதாகிருஷ்ணனும் லஞ்ச ஒழிப்புத் துறைக்குத் திரும்பி விவாதிக்கிறார்கள். இந்த விஷயம் எப்படி முதல்வர் அலுவலகத்துக்குத் தெரிந்தது என்று தீவிரமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது ராதாகிருஷ்ணன், “சார் சங்கர்தான் இதைச் சொல்லியிருக்க வேண்டும்” என்கிறார். ராதாகிருஷ்ணன், சங்கர் என்ற டிஎஸ்பியை மனதில் வைத்துச் சொன்னார். உடனே அந்த இடத்தில் இருந்த ஜெயஸ்ரீ என்ற மேலாளர், “சார்.. சங்கர் என்னைக் கூட கையெழுத்துப் போட வேண்டாம் என்று சொன்னார் சார்.. இந்த அதிகாரிகள் கவிழும் கப்பல். அவர்களோடு சேர்ந்து நீங்களும் கவிழாதீர்கள் (These officers are sinking ships. You don’t sink with them) என்று சொன்னார் சார்“ என்று சொன்னதும்.. சங்கர் எப்போது உங்களிடம் சொன்னார் என்று கேட்டதும், என்கிட்டதான் சார் சங்கர் வேலை செய்கிறார் என்று சொல்கிறார் ஜெயஸ்ரீ. உடனே, நீங்கள் போங்கள்.. அவனை அனுப்புங்கள் என்றார் நாஞ்சில் குமரன்.
இயக்குநர் அழைக்கிறார் என்றதும் சுருக்கென்றது. சாதாரணமாக இயக்குநர்கள் நேரடியாக ஊழியர்களை அழைப்பதில்லை. உள்ளே சென்றதும், நாஞ்சில் குமரன், “என்னய்யா நெனச்சுக்கிட்டு இருக்க உன் மனசுல… மேனேஜரையே மெரட்ற அளவுக்கு பெரிய ஆளா நீ… நான் நெனச்சா உன்னை தொலைச்சுடுவேன் தெரியுமா…” என்று தொடங்கி ஒரு 15 நிமிடம் அர்ச்சனை செய்தார். “போய் ஐஜியப் பாருய்யா“ என்றார்.
வடிவேலு கிரி படத்தில் சொல்வாரே… மச்சான் ஒருத்தன் சிக்கியிருக்கான். ஃப்ரீயா இருந்தா சொல்லு அனுப்பி வைக்கிறேன் என்று…. அது போல.
நேராக ராதாகிருஷ்ணன் அலுவலகம் சென்றதும், அரை மணி நேரம் காக்க வைத்தார். அது எதற்கென்றால் ஐஜி அவ்வளவு பிசியாம். உள்ளே சென்றதும் அவரும் அதே தொனியில் ஆரம்பித்தார். “என்னய்யா நெனச்சுக்கிட்டு இருக்க… மத்த ஸ்டாஃபுக்கெல்லாம் கம்ப்யூட்டர் ட்ரெயினிங் குடுக்க உன்னை எதுக்குக் கூப்பிட்டேன். ஏதோ நல்ல பையன் நல்லா வேலை செய்யுறன்னு பாத்தா மேனேஜரையே மெரட்றியே… அவ்ளோ தைரியம் ஆயிடுச்சா உனக்கு.. “
“இல்லை சார். மனசாட்சிப் படி நடந்துக்கங்கன்னு சொன்னேன்“ என்றதும் இன்னும் கோபம் ராதாகிருஷ்ணனுக்கு…. “என்னய்யா நெனச்சுக்கிட்டு இருக்க… உனக்குத்தான் எல்லாம் தெரியுமா… என்னய்யா மனசாட்சி… எங்களுக்கெல்லாம் மனசாட்சி கிடையாதா..“ என்று அவர் ஒரு 15 நிமிடம்.
அந்த இரண்டு அதிகாரிகளும் சவுக்கை விட பல பதவி உயர்ந்த அதிகாரிகள். அவர்கள் இருவரும் நினைத்தால், ஒரே நாளில் சவுக்கை பணி நீக்கம் செய்ய முடியும். ஆனால் என்னதான் அவர்கள் திட்டினாலும், நேர்மை தவறி, தவறு செய்து மாட்டிக் கொண்ட நெருடலை இருவரிடமும் காண முடிந்தது. எத்தனை பெரிய அதிகாரத்தோடு இருந்தாலும், நேர்மை தவறினால் ஒரு சாதாரண க்ளெர்க்கிடம் கூட, அவர்கள் வீராப்போடு இருக்க முடியவில்லை என்பது புரிந்தது.
காதில் ரத்தம் வழிய வெளியே வந்ததும், அவர்கள் திட்டியதை விட, அந்த மேலாளர் ஜெயஸ்ரீ செய்த துரோகம் பெரிய வலியை ஏற்படுத்தியது. அந்த பெண்மணி நாளை வம்பில் சிக்கிக் கொள்ளக் கூடாது என்பதற்காக சொன்ன ஆலோசனையை இப்படியா போட்டுக் கொடுப்பார் ?
திமுக அரசிடம் ஏடாகூடமாக சிக்கிய அந்த அதிகாரிகள் அடுத்து என்ன செய்தார்கள் தெரியுமா ? எந்த டிஎஸ்பி தாமஸை அவர்கள் ஆற்காடு வீராச்சாமி மீது நடவடிக்கை எடுக்குமாறு அறிக்கை கொடுக்கச் சொன்னார்களோ, அதே அதிகாரியை அணுகி, ஆற்காட்டாரிடம் சொல்லி, தங்கள் இருவருக்கும் நல்ல பதவி பெற்றுத் தருமாறு கேட்டார்கள். ராதாகிருஷ்ணன் மற்றும் நாஞ்சில் குமரன் இருவரும், திமுக அரசில் சென்னை மாநகர ஆணையாளர்களாக ஆனார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ராதாகிருஷ்ணன், ஆற்காட்டாரிடம் நாயுடு லாபியைப் பயன்படுத்தியே இந்தச் சலுகையைப் பெற்றார் என்பதும் குறிப்பிடத் தக்கது.
இது போன்ற மோசமான அதிகாரிகளைப் பார்த்ததும், மணியான அதிகாரிகளைச் சந்தித்ததும் இதே துறையில்தான்.
திமுக ஆட்சியின் இறுதிக் காலத்தில், ஜெயலலிதா மீது லண்டனில் ஓட்டல் வாங்கியதாக ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஓட்டலை வாங்கியது டிடிவி.தினகரன். அது ஜெயலலிதாவின் பினாமி சொத்து என்று வழக்கு போடப்பட்டது. ஏற்கனவே ஒரு இளம் அதிகாரி பற்றிக் குறிப்பிடப்பட்டிருந்தது அல்லவா, அந்த அதிகாரி பதவி உயர்வில் எஸ்.பியாக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு மீண்டும் வந்தார். அவரிடம் அந்த வழக்கு ஒப்படைக்கப்பட்டது. அப்போது 2001 தேர்தல் நெருங்கிக் கொண்டிருந்தது. உடனடியாக ஜெயலலிதா மீது லண்டன் ஹோட்டல் வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கடும் நெருக்கடி. எந்த அதிகாரி இரவும் பகலும் உறங்காமல், ஜெயலலிதாவுக்கு எதிராக ஒரு வழக்கை விசாரித்தாரோ, அதே அதிகாரி, இந்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு எதிராக ஆதாரங்கள் இல்லை என்றார். ஆனாலும் அவருக்கு நெருக்கடி தொடர்ந்தது. அவரும் தீவிரமாக அனைத்து ஆவணங்களையும் பரிசீலித்தார். எந்த அமலாக்கப் பிரிவு டிடிவி.தினகரன் லண்டனில் ஹோட்டல் வாங்கியதைக் கண்டுபிடித்ததோ, அந்த அமலாக்கப்பிரிவு அதிகாரியிடமே சென்று விவாதித்தார். அந்த அமலாக்கப் பிரிவு அதிகாரியும், இந்த ஹோட்டல், ஜெயலலிதாவின் பினாமி சொத்து என்று நிரூபிப்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றார். அந்த காவல்துறை அதிகாரி, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய முடியாது, ஜெயலலிதா குற்றம் செய்தார் என்பதற்கு ஆதாரங்கள் இல்லை என்று உறுதிபடத் தெரிவித்தார்.
தினமும், காலை மாலை இரண்டு வேளை, அப்போது முதல்வரின் செயலாளராக இருந்த டி.ஆர்.ராமசாமி அந்த அதிகாரியிடம் போன் பேசுவார். தொடக்கத்தில் அவரிடம் பதில் சொல்லிக் கொண்டிருந்த அதிகாரி, ஒரு கட்டத்தில், அவரிடமிருந்து போன் வந்தால், சவுக்கை எடுக்கச் சொல்லி, சார் இல்லை என்று பதில் சொல்லச் சொல்வார். இப்படி கோரிக்கையாக வந்து கொண்டிருந்தவை ஒரு கட்டத்தில் மிரட்டலாக மாறின. ஆனாலும் அந்த அதிகாரி சளைக்கவில்லை. இந்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு எதிராக ஆதாரங்கள் இல்லை. ஆகையால் முடியாது என்று தீர்மானமாகச் சொன்னார். அவர் பணிக்கு உலை வைக்கும் காரியத்தில் அரசு இறங்கியது. சளைக்கவில்லை அந்த அதிகாரி. அவர் டிஎஸ்பியாக பணியில் சேர்வதற்கு முன், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பணியாற்றிக் கொண்டிருந்தார். அவருக்கு இருந்த சொந்த நிலத்தில் இறங்கி விவசாயம் பார்த்த அனுபவம் அவருக்கு உண்டு. அரசு அதிகாரிகள் அவரை மிரட்டுவதைக் கண்ட அவர் திமிறினார். “என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்… இந்த வேலை இல்லையென்றால் நான் செத்து விடுவேன் என்றா… அரிவாளை இடுப்பில் சொருகிக் கொண்டு வயலில் வேலை பார்த்தவன் நான். இந்த வேலை இல்லையென்றால், மீண்டும் என் ஊரில் சென்று விவசாயம் பார்க்கத் தயங்க மாட்டேன். நான் இந்த வேலையை நம்பி இல்லை. என்னையா மிரட்டுகிறார்கள்… வேலையே போனாலும் சரி… மனசாட்சிக்கு விரோதமாக ஒரு காலமும் நடக்க மாட்டேன்“ என்றார்
அடுத்ததாக கருணாநிதியே நேரடியாக களத்தில் இறங்கினார். ஸ்டாலின், காலஞ்சென்ற தா.கிருஷ்ணன், துரை முருகன், அப்போதைய தலைமைச் செயலாளர் ஏ.பி.முத்துசாமி, லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் கணபதி, ஆகியோர் முன்னிலையில் விவாதம். எடுத்த எடுப்பில் கருணாநிதி கணபதியைப் பார்த்துக் கேட்டார்…. “என்னய்யா சொல்றாரு உங்க எஸ்.பி… சார்ஜ் ஷீட் போட முடியுமா முடியாதா… போலீஸ்ல பொய்க் கேஸ் போட்டதேயில்லையாய்யா…. எல்லாரும் பயப்பட்றீங்களா அந்த அம்மா ஆட்சிக்கு வந்துடும்னு….“ என்று அனைத்து அதிகாரிகளையும் ஒரு பிடி பிடித்தார். மீட்டிங் முடிந்து வெளியில் வந்ததும், இயக்குநர் கணபதி, அந்த அதிகாரியிடம் கேட்டார்.. பார்த்தீர்களா.. சி.எம் எப்படி கோபப்பட்றாருன்னு… என்ன சொல்றீங்க“ என்றார். அந்த அதிகாரி அமைதியாக, சார் நான் இப்போதும் அதேதான் சொல்கிறேன். ஜெயலலிதாவுக்கு எதிராக இவ்வழக்கில் ஆதாரங்கள் இல்லை என்றார். அன்று இரவே, அந்த வழக்கு அவரிடமிருந்து, மற்றொரு அதிகாரிக்கு மாற்றப்பட்டு, மறுநாள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அந்த லண்டன் ஹோட்டல் வழக்கு, ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்குக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. சொத்துக் குவிப்பு வழக்கையும், லண்டன் ஹோட்டல் வழக்கையும் ஒன்றாகத்தான் விசாரிக்க வேண்டும் என்று ஜெயலலிதா மனுத்தாக்கல் செய்ய, தனித்தனியாக விசாரிக்க வேண்டும் என்று திமுக மனுத்தாக்கல் செய்ய, இறுதியாக லண்டன் ஹோட்டல் வழக்கை திமுக அரசு வாபஸ் வாங்கியது. இந்த லண்டன் ஹோட்டல் வழக்கு இல்லையென்றால், பெங்களுரு சொத்துக் குவிப்பு வழக்கு 2006லேயே முடிந்திருக்கும்.
2002ல் மற்றொரு அதிகாரியோடு அறிமுகம் ஏற்பட்டது. வழக்கமாக, அமைச்சுப் பணியாளர்களிடம், அதிகாரிகள் நெருங்கிப் பழக மாட்டார்கள். என்ன வேலையோ, அது வரைதான் பேச்சு. அதைத் தாண்டிப் பேச மாட்டார்கள். இந்த அதிகாரிக்கு என்னமோ சவுக்கை பிடித்து விட்டது. அலுவலக வேலைகள் தாண்டி, இலக்கியம் பேசுவார் அந்த அதிகாரி. அவர் பணியில் சேர்வதற்கு முன், சினிமாவில் உதவி இயக்குநராகவும், மிக மிக வெற்றிகரமான பங்குச் சந்தை நிபுணராகவும் பணியாற்றியவர். அவரையும் ஒரு முறை மனசாட்சிக்கு விரோதமான காரியத்தைச் செய்ய பணித்தபோது, ராஜினாமா கடிதத்தை எழுதி உயர் அதிகாரிக்கு அனுப்பினார். உயர் அதிகாரி அவரை அழைத்து, அந்த வேலையைச் செய்ய முடியுமா முடியாதா என்று மிரட்டியபோது, “சார்.. நான் ஒரு வெற்றி இயக்குநரிடம் உதவி இயக்குநராக பணியாற்றினேன். ஷேர் மார்கெட்டில் பல லட்சங்களை சம்பாதித்துக் கொடுத்திருக்கிறேன். மீண்டும் அந்த இரண்டு துறைகளிலும் என்னால் வெற்றிகரமாக பணியாற்ற முடியும். ஏதோ சமூகத்துக்கு நல்ல பணியாற்ற வேண்டும் என்பதற்காக இத்துறைக்கு வந்தேன். என்னை இப்படி மனசாட்சிக்கு விரோதமாக வேலை செய்யச் சொன்னால் என்னால் முடியாது. தயவு செய்து என் ராஜினாமாவை ஏற்றுக் கொள்ளுங்கள்” என்றார். அதற்குப் பிறகு அவர் ராஜினாமா கடிதத்தை கிழித்துப் போட்ட அதிகாரி, உங்களிடம் இனி இது போன்ற கட்டளைகள் பிறப்பிக்கப்பட மாட்டாது என்று உறுதி கூறினார்.
காவல்துறையில் ஒன்றாக பணியில் சேர்ந்தவர்களுடனான நட்பு (batchmate loyalty) என்பது சக்தி வாய்ந்தது. ஒன்றாக பணியில் சேர்ந்தவர்களுக்காக எல்லா விதத்திலும் வளைந்து கொடுப்பார்கள் அதிகாரிகள். ஒரு ஐபிஎஸ் அதிகாரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்தார். அவருக்கு பணி மாறுதல் வந்த பிறகு, புதிய கண்காணிப்பாளர் பதவியேற்ற பிறகு, ட்ராவலர்ஸ் பங்களாவில் அமர்ந்து, அந்த மாவட்டத்தில் உள்ள காவலர்கள், தலைமைக் காவலர்கள், உதவி ஆய்வாளர்கள் என்று யார் யாரெல்லாம் ட்ரான்ஸ்பர் கேட்கிறார்களோ, அத்தனை பேருக்கும் முன் தேதியிட்டு மாறுதல் உத்தரவு வழங்கினார். ஒவ்வொரு உத்தரவுக்கும் தலா 10 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை லஞ்சம். இது போல 250 மாறுதல் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. அவர் மீதான வழக்கு லஞ்ச ஒழிப்புத் துறையின் விசாரணைக்கு வந்தது. அந்த விசாரணை அறிக்கையை இந்த லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரி முடிவெடுக்க வேண்டும். அவரும் இவரும் ஒரே பேட்ச். தன்னுடைய சொந்த பேட்ச் மேட் என்று பார்க்காமல், தவறாக மாறுதல் உத்தரவு வழங்கிய அந்த அதிகாரி மீது எப்ஐஆர் பதிவு செய்ய பரிந்துரைத்தார். பாதிக்கப்பட்ட அதிகாரி, இயக்குநர் நாஞ்சில் குமரனை வந்து பார்த்தார். அந்தக் கோப்பை வரவழைத்த நாஞ்சில் குமரன், பாத்தியா உன் பேட்ச் மேட் எப்படி எழுதியிருக்கான்னு…. என்று சம்பந்தப்பட்ட ஆளிடமே கோப்பை காண்பித்தார். பிறகு நாஞ்சில் குமரனால் அந்த லஞ்ச அதிகாரி காப்பாற்றப்பட்டார். பேட்ச் மேட்டுகள் இருவரும், இன்று வரை பேசிக்கொள்வதில்லை.
அந்த அதிகாரி ஒரு சிறந்த அதிகாரி மட்டுமல்ல. நல்ல தமிழார்வம் கொண்டவர். இளங்கலை மற்றும் முதுகலை தமிழ் படித்தவர். இளங்கலை, முதுகலை இரண்டிலும், பல்கலைக்கழகத்தில் தங்கப் பதக்கம் வென்றவர். அவரோடு கல்யாண்ஜி கவிதைகள், ஜெயகாந்தன் கதைகள் என்று மணிக்கணக்கில் விவாதிப்பதுண்டு. ஓஷோ, ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி போன்றவர்களை அந்த அதிகாரிதான் அறிமுகப்படுத்தினார். தீவிரமான கடவுள் மறுப்புக் கொள்கைகள் காரணமாக, ஓஷோ போன்றவர்களின் நூல்களைப் படித்ததேயில்லை. அந்த அதிகாரிதான், அவர்கள் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்பதை தெரிந்துகொள் என்று கூறுவார். ஓஷோ, ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி, ஜி.கிருஷ்ணமூர்த்தி ஆகியோரின் நூல்களைப் படித்ததும் ஒரு புதிய கதவு திறந்தது போலிருந்தது. அதே அதிகாரி, 48 Laws of Power மற்றும் Rich Dad Poor Dad ஆகிய நூல்களையும் படிக்கச் சொன்னார். 48 Laws of Power என்ற நூல், மாக்கியவல்லியின் தத்துவங்களின் சாரம். ஓஷோ மற்றும் ஜிட்டு கிருஷ்ணமூர்த்திக்கு நேரெதிரான நூல்கள். என்னடா இந்த ஆள் நம்மை லூசாக்கப் பார்க்கிறாரா என்று “சார்.. ரெண்டும் நேரெதிராக இருக்கிறது“ என்று சொன்னால், தெரியும், இரண்டையும் தெரிந்து வைத்துக் கொள்வது உன் வாழ்க்கைக்கு உதவும் என்றார். இரண்டும் வாழ்க்கைக்கு உதவியதை அனுபவத்தில் காண முடிந்தது.
இப்படிப்பட்ட அதிகாரிகளையும் அதே லஞ்ச ஒழிப்புத் துறையில்தான் சந்திக்க நேர்ந்தது. இது போன்ற அதிகாரிகளையெல்லாம் பார்த்துதான் சவுக்கின் ஆளுமை உருவானது என்றால் அது மிகைச் சொல் அல்ல.
அதிமுக அரசில், இந்த அதிகாரிகள் அடித்த கூத்து நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போனது. இதையெல்லாம் பார்த்து மனப்புழுக்கம் நாளுக்கு நாள் அதிகமானது. மற்ற ஊழியர்களைப் போல, நான் என் குடும்பம் என்று இருக்கப் பழகியிருந்தால், எதுவுமே பாதித்திருக்காது. ஆனால், 500 ரூபாய் லஞ்சம் வாங்குபவனின் வாழ்க்கையை அழிக்கும் முடிவை எடுப்பவன், மாதத்துக்கு ஒரு லட்ச ரூபாய்க்கு மேல், அரசு சொத்தை கொள்ளையடிப்பவனாக இருக்கிறானே என்ற ஆத்திரம் அதிகமாகிக் கொண்டே வந்தது. ஏதாவது செய்ய வேண்டும் என்று மனதுக்குள் புழுங்கிக் கொண்டிருந்தபோதுதான், தகவல் அறியும் உரிமைச் சட்டம் அமலுக்கு வந்தது. அந்தச் சட்டத்தை வைத்து, ராதாகிருஷ்ணன் மற்றும், நரேந்திர பால் சிங் ஆகிய இருவரின் பிள்ளைகளுக்கு அண்ணா பல்கலைகழகத்தில் சீட் வாங்கியது தொடர்பாக ஆதாரங்களைத் திரட்டி, பொது நல வழக்கு தொடுக்கலாம் என்று 2007ல் முயற்சிகள் எடுக்கப்பட்டது. சவுக்கின் நண்பர் பெயரில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் விண்ணப்பங்கள் அனுப்பி, தகவல்கள் சேகரிக்கப்பட்டன. டெகல்கா இதழில் இந்த ஊழல் குறித்து விரிவான செய்திகள் வெளியாயின. அன்புத் தோழர் வினோஜ் குமார், அந்த செய்தியை வெளியிட்டார். அதன் பிறகு, இந்த இரண்டு அதிகாரிகள் மீதும் புகார் அனுப்பி, பொது நல வழக்கு தொடுக்கலாம் என்று திண்டிவனம் பேராசிரியர் கல்யாணியை அணுகி, அது தொடர்பான வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோதுதான், தொலைபேசி ஒட்டுக் கேட்பு வழக்கில், கைதாக நேர்ந்தது.
இரண்டு மாதங்கள் சிறையிலிருந்த பிறகு, வெளியே வந்ததும் என்ன செய்வதென்றே புரியவில்லை. தினமும் காலை முதல் மாலை வரை தொடர்ச்சியாக ஏதாவதொரு வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தவனிடம், நாளை முதல் உனக்கு எந்த வேலையும் இல்லையென்றால்…..
சவுக்கு கைது செய்யப்பட்டபோது, அந்த வழக்கு, பிணை ஆகிய விவகாரங்களைப் பார்த்தவர் தோழர் புகழேந்தி. அவர் 2008லும் பல்வேறு வேலைகளைச் செய்து கொண்டுதான் இருந்தார் என்றாலும் அப்படி ஒரு நபர் இருப்பதே வெளி உலகிற்கு தெரியாது. அவரும் அதைப்பற்றி எவ்வித அக்கறையும் இல்லாமல் அவர் பாட்டுக்கு வேலை பார்த்துக் கொண்டிருப்பார். அவருக்கு உதவிக்கு யாரும் ஆட்கள் கிடையாது. அவரே எல்லா வேலைகளையும் பார்ப்பார். மனித உரிமைகளுக்காக, நேர்மையாக, சமரசம் இல்லாமல் போராடும் ஒரு மனிதரைப் பார்ப்பது அரிதிலும் அரிது. அப்படிப்பட்ட நபராக தோழர் புகழேந்தி இருந்தபோது, அவரோடு சேர்ந்து பணியாற்றுவது இயல்புதானே. குறிப்பாக காவல்துறையின் அராஜகங்களுக்கு எதிராக அவர் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, காவல்துறையிடம் கடுமையான சித்திரவதைக்கு ஆளாகி சிறையிலிருந்து வெளி வந்த ஒரு நபருக்கு புகழேந்தியோடு இணைந்து பணியாற்ற கசக்குமா என்ன. பிறகென்ன… புகழேந்தியோடு இணைந்து வேலைகளைத் தொடங்கியாயிற்று… தினமும் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு செல்வது போல, தினமும் புகழேந்தி அலுவலகம். ஜனவரி 2009 முதல், ஈழப் போரை நிறுத்து என்ற போராட்டங்கள் தமிழகமெங்கும் தீவிரமடைந்திருந்த காலத்தில், வழக்கறிஞர்கள், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு, மிகச் சிறப்பான போராட்டங்களை நடத்தி வந்தார்கள். அவர்களோடு இணைந்து அவர்களுக்கு உதவியாக பணியாற்றிக் கொண்டிருந்தபோதுதான், காவல்துறை பிப்ரவரி 19, 2009 அன்று வழக்கறிஞர்கள் மீது நடத்திய கொடூரமான தாக்குதல் அரங்கேறியது. அதைத் தொடர்ந்து நடந்த வேலை நிறுத்தங்களும், போராட்டங்களும் அனைவரும் அறிந்ததே.
2009 முதலாகவே, ஜாபர் சேட் என்ற அதிகாரியின் கொடூர தாண்டவம் தமிழகத்தில் அரங்கேறியது. ஏறக்குறைய தமிழகத்தை ஆட்சி செய்த ப்ராக்ஸி முதலமைச்சர் என்றால், அது ஜாபர் சேட்தான். அவரை எதிர்க்க தமிழகத்தில் ஆளே இல்லை. யாராவது எதிர்த்தால், அவர் மீது வழக்கு, தாக்குதல், சிறை என்று நடக்காத கொடுமைகளே இல்லை. யாராலும் அசைக்க முடியாத சக்ரவர்த்தியாகவே இருந்தார் ஜாபர் சேட். அவர் வீட்டு வசதி வாரியத்தில் செய்த ஊழல்கள் குறித்த ஆதாரங்கள் கிடைத்ததும், சவுக்குக்கு தெரிந்த அனைத்துப் பத்திரிக்கையாளர்களிடமும், அந்தச் செய்தியை வெளியிட முயன்றபோது, ஜாபர் சேட்டுக்கு அஞ்சி எந்த ஊடகமும், அச்செய்தியை வெளியிட முன்வரவில்லை.
அதற்கு சற்று முன்பாகத்தான் வழக்கறிஞர் சுந்தரராஜன், ப்ளாக் என்றால் என்ன, எப்படி தமிழில் தட்டச்சு செய்வது என்று சொல்லிக் கொடுத்திருந்தார். (காவல் துறை அதிகாரிகள் கவனத்துக்கு. சுந்தரராஜன் சொல்லிக் கொடுக்கவில்லையென்றால், சவுக்கு உருவாகியிருக்காது. அடுத்த முறை வழக்கு போடும்போது அவர் மீது போடவும்) ப்ளாக் ஒன்று தொடங்கப்பட்டு, புகழேந்தியின் தமிழக மக்கள் உரிமைக் கழகச் செய்திகள், வழக்கறிஞர் போராட்டம் குறித்த செய்திகள் என்று அதில் எழுதப் பட்டுக் கொண்டிருந்தது. காவல்துறை குறித்த செய்திகள் அதிகமாக எழுதப்பட்டதால், ஓரளவு கவனம் பெற்றிருந்தது. தொடக்க காலத்தில் ஒரு நாளைக்கு 10 பேர் படித்தாலே அதிகம். ஏதாவது எழுதியதும், ஒவ்வொருவராக தொலைபேசியில் அழைத்து, படியுங்கள் என்று சொல்ல வேண்டும். அந்த நேரத்தில் ஜாபர் சேட்டுக்கு எதிரான ஆதாரங்களை வெளியிட யாருமே முன் வராதபோது, ஏன் இந்த ப்ளாக்கிலேயே ஜாபர் சேட் குறித்த ஆதாரங்களை வெளியிடக் கூடாது என்று தோன்றியது. அப்படி சவுக்கில் அந்த ஆதாரங்கள் வெளியான கட்டுரைதான் ஒரு மகிழ்ச்சி ஒரு சோகம் என்ற கட்டுரை. அந்தக் கட்டுரை வெளியான அடுத்த நாளே எதிர்ப்பார்த்தது போலவே, சாலையில் சென்று கொண்டிருந்த ஒருவரை செங்கலால் அடித்ததாக வழக்கு பதிவு செய்து மதுரவாயல் காவல் நிலையத்தில் கைது செய்தனர். சிறையில் சவுக்கு என்ற கட்டுரையில் இது குறித்து விரிவாக எழுதப்பட்டுள்ளது. அதன் பிறகுதான் சவுக்கு தளம் பரவலாக கவனம் பெறத் தொடங்கியது.
தளத்துக்கு வந்து படிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக, அதிகமாக, பத்திரிக்கையாளர்களிடம் செய்திகளைக் கொடுப்பதை விட, நாமே செய்திகளை வெளியிடலாம் என்று திமுக அரசின் பல்வேறு ஊழல்கள் குறித்த செய்திகள் வெளியிடப்பட்டன. பொதுவாக ஊடகங்கள் செய்யும் ஊழல்கள் குறித்து எந்த செய்தியும் வெளி வராத நிலையில், ஊடகங்களின் தவறுகள் குறித்தும், கட்டுரைகள் எழுதப்பட்டன. இது போன்ற கட்டுரைகள் வாசகர்களிடம் பரவலான வரவேற்பைப் பெற்றன. ஜுலை 2010 முதல், தேர்தல் முடிந்த ஏப்ரல் 2011 வரை, இரவு பகல் பாராமல், ஆதாரங்களோடு கட்டுரைகள் வெளியிடப்பட்டன. கருணாநிதி அரசு பதவியிழக்க இன்னும் இத்தனை நாட்கள் என்று ஒரு வருடத்திற்கு முன்பாகவே போடப்பட்ட கவுன்ட்டவுன், வாசகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.
அதன் பிறகு ஆட்சி மாற்றத்துக்குப் பிறகும், ஜெயலலிதா அரசின் தவறான நடவடிக்கைகளைக் கண்டித்தும், விமர்சித்தும், சவுக்கில் தொடர்ந்து எழுதப்பட்டே வருகிறது. திமுகவையும், கருணாநிதியையும் விமர்சித்து, தொடர்ந்து எழுதியதால், பல வாசகர்கள் சவுக்கை அதிமுக அனுதாபி என்றே நினைத்துக் கொண்டார்கள். சமீப காலமாக அந்தக் கருத்து மாற்றம் அடைந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
திமுக ஆட்சிக் காலத்தில் சவுக்கு நடத்துவதற்காக சந்தித்த நெருக்கடிகளை விட, அதிமுக ஆட்சி காலத்தில் சந்தித்த நெருக்கடிகள்தான் அதிகம் என்றால் வாசகர்கள் பலருக்கு வியப்பாக இருக்கும். சர்வ வல்லமையோடு ஜாபர் சேட் கோலோச்சிக் கொண்டிருந்தபோது கூட, இத்தனை நெருக்கடிகள் இல்லை. ஆனால் இந்த அதிமுக ஆட்சிக் காலத்தில், சவுக்கு மீதான தொலைபேசி ஒட்டுக் கேட்பு வழக்கை இந்த அரசு மிக மிக தீவிரமாக நடத்தி வருகிறது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளில் சிலர் குறித்து, சவுக்கு தளத்தில் விமர்சித்து எழுதியதால், அந்த நீதிபதிகள், சவுக்கின் மீதான வழக்கை விசாரித்து வரும் விசாரணை நீதிபதி ரவீந்திர போஸ் என்பவரிடம் பேசி, எப்படியாவது சவுக்கை தண்டிக்குமாறு கேட்டுக் கொண்டார்கள் என்று தகவல் கிடைத்தது. இந்தத் தகவலை உறுதி செய்ய முடியாவிட்டாலும், நீதிபதி ரவீந்திரபோஸின் நடவடிக்கைகள், இந்தத் தகவல் உண்மையாக இருக்கக் கூடும் என்று எண்ண வைத்தன.
வழக்கு விசாரணை தினந்தோறும் நடைபெற வேண்டும் என்று உயர்நீதிமன்ற உத்தரவு இருக்கிறது என்பதால், தினமும் நீதிமன்றத்துக்கு வரவேண்டும் என்று உத்தரவிடுவார். ஒரு குற்றவாளி எப்போது நீதிமன்றம் செல்லவேண்டுமென்றால், சாட்சிகளை விசாரிக்கும்போதோ, வேறு ஏதாவது மனு தொடர்பான விசாரணையின் போதோ செல்ல வேண்டும். தினந்தோறும் நீதிமன்றத்துக்கு வரவேண்டும் என்ற உத்தரவிடுவது குற்றவாளியை அலைக்கழிப்பதற்காகவேயன்றி வேறு எதற்காகவும் இல்லை. நாளை வெளியூர் செல்ல வேண்டும், நாளை மறுநாள் வழக்கை தள்ளி வையுங்கள் என்றால் கூட கேட்கமாட்டார் ரவீந்திரபோஸ். உயர்நீதிமன்ற உத்தரவு இருக்கிறது. நான் தினந்தோறும்தான் வழக்கை தள்ளி வைப்பேன் என்பார்.
தினந்தோறும் வழக்கு விசாரணை நடைபெற வேண்டும் என்ற உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் நவம்பர் 2010ல் பிறப்பித்தது. அப்போதெல்லாம் அவசரம் காட்டாத அரசுத் தரப்பு, 17 மாதங்கள் எந்த விசாரணையும் நடத்தாமல் தாமதித்து விட்டு, திடீரென்று வேக வேகமாக வழக்கை நடத்தினர்.
அதிமுக அரசு பதவியேற்றதும், இந்த வழக்குக்காக நியமிக்கப்பட்ட சிறப்பு அரசு வழக்குரைஞர் தம்பிதுரை என்பவர், அடிக்கடி நீதிபதி ரவீந்திரபோஸின் அறைக்குச் சென்று தனியாக பேசிவிட்டு வருவார். இப்படிப் பேசுவது, முறையற்ற செயல். குற்றவாளிக்கு நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை இழக்க வைக்கும் செயல். ஆவணங்களின் நகல் வேண்டும் என்று மனுத்தாக்கல் செய்தாலோ, வேறு ஏதாவது மனுவின் மீது உத்தரவு பிறப்பிக்கும் நிலை இருந்தாலோ, அன்று தவறாமல் நீதிபதி அறைக்குள் சென்று பேசி வருவார். இப்படிப் இவர் பேசி விட்டு வந்ததும், நீதிபதி ரவீந்திர போஸ், நியாயமான முறையிலேயே அந்த மனுவை தள்ளுபடி செய்தாலும், குற்றவாளியின் மனதில் என்ன தோன்றும் ?
திமுக ஆட்சிக் காலத்தில் சிறப்பு வழக்குரைஞராக இருந்த மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, ஒரு நாளும் இது போன்ற முறையற்ற செயல்களில் ஈடுபட்டதில்லை. இதனால்தான் இன்று வரை அவரோடு நட்பாக இருக்க முடிகிறது. ஆனால், ஜெயலலிதா மீது பொய் வழக்கு பதிவு செய்யச் சொல்லி தலைமைச் செயலாளர் அறிவுறுத்திய அந்த ஒலிநாடா வெளியானதால் மிகப்பெரிய பயனை அடைந்த அதிமுக அரசு, அந்த உரையாடலை வெளியிட்டதாகச் சொல்லப்படும் ஒருநபரின் மீதான வழக்கை இவ்வளவு தீவிரமாக நடத்துகிறார்கள் என்றால் அது எத்தனை பெரிய முரண் ?
இப்படி வழக்கறிஞர் தம்பிதுரை ஒரு நாள் நீதிபதியிடம் சென்று தனியாகப் பேசி விட்டு வந்ததும், அந்த சம்பவத்தையே ஒரு புகாராக எழுதி நீதிபதியிடம் கொடுத்து, உங்கள் மீது நம்பிக்கை இல்லை, வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்றுங்கள் என்றதும், அவர் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யச் சொல்லி உத்தரவிட்டார். அந்த மனு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும்போது, தம்பிதுரையே ஆஜராகி வாதாடுகிறார். தம்பிதுரை மீதுதான் புகாரே… அவரே ஆஜராகி வாதாடுகிறார் என்றால் அவர் எப்படிப்பட்ட வழக்கறிஞர் பாருங்கள்… எப்படியாவது தண்டனை வாங்கிக் குடுத்துடணும்னு அவ்வளவு ஆர்வம்… இந்த தம்பிதுரையை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்ற வட்டாரங்களில் பேச்சு… வௌங்கிடும்.
எப்படியாவது தண்டனை வாங்கிக் கொடுத்து விட வேண்டும் என்று இவர்கள் கடுமையாக முயற்சித்ததன் காரணம், இந்த வழக்கில் அதிகபட்ச தண்டனை 10 ஆண்டுகள். 10 ஆண்டுகள் தண்டனை என்றால், நீதிமன்றத்திலிருந்து நேரடியாக சிறைக்கு செல்ல வேண்டும். சிறைக்கு சென்று விட்டால், மேல் முறையீடு செய்து, அதில் பிணை கிடைத்து வெளியே வருவதற்கு குறைந்தது ஆறு மாதங்கள் ஆகும். அந்த ஆறு மாதங்களுக்குள் சவுக்கு தளத்தை முடக்கி விடலாம் என்ற திட்டமே….
உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து அந்த வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்றி உத்தரவு பெற்ற பிறகே, அரசுத் தரப்பின் வேகம் சற்று குறைந்துள்ளது. இன்னும் தொல்லைகள் முழுமையாக ஓயவில்லை என்றாலும், தொடர்ந்து பணியாற்ற முடிகிறது. சவுக்கு தளம் தொடர்ந்து நடத்தாமல் இருந்திருந்தால், இது போன்ற தொல்லைகள் இருக்காது. பொழச்சுப் போறான் என்று விட்டிருப்பார்கள். அப்படியே இல்லாவிட்டாலும், புரட்சித் தலைவி அம்மா வாழ்க, அம்மாவின் அம்மா சந்தியா தேவி வாழ்க, என்றாவது எழுத வேண்டும். அதுவும் இல்லை. அப்புறம் சும்மாவா விடுவார்கள்… ?
சரி.. அம்மாவைத்தான் புகழவில்லை. தற்போது அதிகாரத்தில் இருக்கும் அதிகாரிகளையாவது புகழ்ந்து எழுதலாம்.. அதுவும் எழுதுவதில்லை. பிறகு என்ன செய்வார்கள்… சுளுக்குதான் எடுப்பார்கள்.
அன்பார்ந்த உறவுகளே… இந்த சவுக்கு தளம் நடத்துவதால் கிடைத்திருக்கும் பெரிய பயன் என்ன தெரியுமா…. வாசர்களாகிய லட்சக்கணக்கான அன்பு உறவுகள். இரண்டு மாதங்களுக்கு முன், தொடர்ச்சியாக எழுத முடியாத அளவுக்கு நெருக்கடி அதிகமானபோது ஏறக்குறைய ஒரு மாதத்துக்கு எழுத முடியவில்லை. அப்போது தளத்தை திறந்து பார்த்தால் அன்று 8 ஆயிரம் பேர் பார்த்திருப்பார்கள். பகீரென்று இருக்கும். வேலை வெட்டியெல்லாம் விட்டு விட்டு, எதற்காக சவுக்கு தளத்திற்கு வர வேண்டும்… ஏதாவது எழுதியிருப்பான்…. பிடிக்காத விஷயத்தை எழுதினாலும் பொய் எழுத மாட்டான் என்ற நம்பிக்கைதானே… ? அப்படி வாசகர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையும், அன்புமே தொடர்ந்து எழுதத் தூண்டுகிறது.
லஞ்ச ஒழிப்புத் துறையிலிருந்து இன்னும் முழுமையாக பணி நீக்கம் செய்யப்படாமல், இடை நீக்கம் செய்யப்பட்டிருப்பதால், பாதி சம்பளம் வந்து கொண்டிருக்கிறது. அதில் ஒவ்வொரு பைசாவும், மக்களுடைய வரிப்பணம் என்ற பிரக்ஞை இருக்கிறது. மக்களின் வரிப்பணத்தில் ஊதியம் பெற்றுக் கொண்டு, இந்த மக்களுக்காக அதைச் செலவிடுகிறேன் என்பதில் முழுமையான நிறைவு இருக்கிறது. இத்தளத்துக்கு விளம்பர வருமானம் இல்லை. மறைமுக நிதி ஆதரவுகளும் இல்லை. அப்படி இல்லாமல் இத்தளத்தை தொடர்ந்து நடத்த வேண்டுமென்ற உத்வேகத்திற்கு காரணம் வாசகர்களின் அன்பும் ஆதரவுமே.
இது ஒரு தனி மனிதனின் உழைப்பால் விளைந்தது என்று சொல்லவே முடியாது. சவுக்கு தளம் என்பது ஊர் கூடி இழுத்த தேர். அந்தத் தேர், இத்தனை பேர் இழுப்பதாலேயே வெற்றிகரமாக பவனி வருகிறது. இத்தளத்தை இத்தனை நாட்களாக தொடர்ந்து நடத்தி வருவதால் கிடைத்த பெரிய சொத்து எது தெரியுமா ? நம்பிக்கை. பொய் எழுத மாட்டான். தகவல் சொல்பவர்களை ஒரு காலத்திலும் காட்டிக் கொடுக்க மாட்டான். சமரசம் செய்து கொள்ள மாட்டான் என்பது போன்ற நம்பிக்கைகளே… இன்று தங்கள் பிரச்சினைகளை எழுதுங்கள் என்ற அன்போடும், நம்பிக்கையோடும் பல தோழர்கள் அணுகுகிறார்கள். பல்வேறு ஊழல் குறித்த விவகாரங்களை நம்பிக்கையோடு பகிர்கிறார்கள். அரசு அதிகாரிகள் தகவல்களை பகிர்ந்து கொள்கிறார்கள். இவை எல்லாவற்றுக்கும் காரணம், நாம் இந்நாள் வரை சேர்த்து வைத்த நம்பிக்கையே… அந்த நம்பிக்கையே இந்த தளத்தின் வெற்றி…
நாம் திமுகவோ, அதிமுகவோ அல்ல. யார் மீதும் தனிப்பட்ட துவேஷம் கொண்டவர்கள் அல்ல. ஏழை உழைப்பாளி மக்களின் நலனுக்காகவே நாம் பாடுபடுகிறோம். பரந்துபட்ட இந்த சமூகத்தின் நன்மைக்காகவே உழைக்கிறோம். இந்த ஒரு கோடி என்பது ஒரு மைல்கல். நாம் கடந்து செல்ல வேண்டிய தூரம் நிறைய உள்ளது. இச்சமூகத்தின் நலனைக் கருத்தில் கொண்டு தொடர்ந்து பயணிப்போம். நம்மிடம் இழப்பதற்கு எதுவுமில்லை. வெல்வதற்கு இந்த உலகே இருக்கிறது.
நன்றிகள்.
முதல் நன்றிகள் சவுக்கின் தாய் மற்றும் தங்கைக்கு. “நம்ப குடும்பத்துல யாருமே ஜெயிலுக்குப் போனதில்லையே.. குடும்ப மானத்தையே கெடுத்துட்டியே… கட்டையில போறவனே..” என்றெல்லாம் திட்டாமல், சவுக்கின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பக்கபலமாக இருந்து சிறைப்பட்ட காலத்தில் வழக்கறிஞர்கள் அலுவலகத்துக்கு அலைந்து, ஜாமீன் கொடுத்து, அந்த ஜாமீனை ரத்து செய்வதற்காக காவல்துறை எடுத்த முயற்சிகளின் காரணமாக, மீண்டும் நீதிமன்றத்துக்கு அலைந்து, என்னென்னவெல்லாம் துன்பம் வருமோ அத்தனை துன்பங்களையும் அனுபவித்தும், இன்றும் இவர்கள் கொடுக்கும் ஆதரவு சவுக்குக்கும், சவுக்கு தளத்திற்கும் மிகப் பெரிய பலம். சவுக்கு தளத்தை முதன் முதலாக ஊக்கப்படுத்தியவர்கள் இவர்கள் இருவரும்தான்.
வழக்கறிஞர் விஜயக்குமார்.
சவுக்குக்கு முதன் முதலாக அறிமுகமான வழக்கறிஞர் இவர்தான். தொலைபேசி ஒட்டுக் கேட்பு வழக்கு தொடர்பாக சண்முகம் விசாரணை ஆணையத்தின் முன் சவுக்கு சார்பில் ஆஜரானார். சண்முகம் ஒரு அயோக்கியத்தனமான நீதிபதி என்றாலும், இவர் தன் பணியை திறம்படச் செய்தார். முன்னாள் தலைமைச் செயலாளர் திரிபாதியை குறுக்கு விசாரணைக்கு அழைக்காதீர்கள், நான் உங்கள் கட்சிக்காரரைக் காப்பாற்றுகிறேன் என்று சண்முகம் இவரை நம்பவைத்து ஏமாற்றினார். சவுக்கு கைது செய்யப்பட்டவுடன், பிணை கோருவது, நார்கோ அனாலிசிஸ் சோதனையிலிருந்து காப்பாற்றியது உள்ளிட்ட வழக்குகளை இவர்தான் கவனித்தார்.
வழக்கறிஞர் புகழேந்தி
புகழேந்தியின் க்ளையன்டாகத்தான் அவரோடு அறிமுகம். ஆரம்ப காலத்தில் லேப்டாப்பெல்லாம் கிடையாது. முதலில் வீட்டிலிருந்த கம்ப்யூட்டரை சண்முகம் கமிஷனில் பறிமுதல் செய்தார்கள். சரி.. அடுத்து ஒரு கம்ப்யூட்டர் வாங்கி வைக்கலாம் என்று வைத்தால், அதை சிபி.சிஐடி போலீசார் பறிமுதல் செய்தார்கள். அதற்கு மேல் கம்ப்யூட்டர் வாங்க பணமில்லாமல் இருந்தபோது, தன் அலுவலகத்தைக் கொடுத்து, கம்ப்யூட்டரையும் பயன்படுத்திக் கொள்ள அனுமதித்து, சவுக்கு தளம் தொடங்குவதற்கு அன்பையும் ஆதரவையும் அளித்து, கைது செய்யப்பட்ட போதெல்லாம் சட்ட உதவியையும் அளித்து, நெருக்கடியான நேரங்களில் உதவியாக நின்று இவர் செய்த உதவிகள் கணக்கிலடங்கா.
வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன்.
இன்று சவுக்குக்கு பாதி சம்பளம் வந்து கொண்டிருக்கிறதென்றால், அதற்கு முழுக் காரணமும் ராதாகிருஷ்ணன்தான். இவரைப் போன்ற திறமையான வழக்கறிஞரைப் பார்ததேயில்லை. இவர் வாதாடத் தொடங்கினாரென்றால், நீதிபதிகளின் கவனம் வேறெங்கும் செல்லாது. சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களில் சிறந்த வழக்கறிஞர்களில் முதல் மூன்று இடத்திற்குள் நிச்சயம் இடம் பிடிப்பவர். சவுக்கின் வேலையைக் காப்பாற்றுவதற்காகவும், கிரிமினல் வழக்கு குறித்தும், இது வரை குறைந்தது 15 வழக்குகள் போட்டிருப்பார். அந்த 15 வழக்குகள் காரணமாகவே இன்று பாதி சம்பளம் வாங்க முடிகிறது. சவுக்கு சார்பாகவும், தமிழக மக்கள் உரிமைக் கழகம் சார்பாகவும், பல்வேறு வழக்குகளை நீதிமன்றத்தில் தொடர்ந்தவர். விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குவது உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் பின்னிப் பெடலெடுத்துக் கொண்டிருக்கிறார். சவுக்குக்காக எவ்விதக் கட்டணமும் வாங்காமல் வாதாடுவதோடு மட்டுமல்லாமல், லேப்டாப்பும் வாங்கிக் கொடுத்தார். சவுக்கு தளத்தின் முதல் ரசிகர். ஒவ்வொரு கட்டுரையையும் படித்து சிலாகித்துப் பாராட்டுவார். மிகச் சிறந்த மனித உரிமைப் போராளி. சிறந்த இலக்கிய ஆர்வலர்.
வழக்கறிஞர் ராஜா செந்தூர்ப் பாண்டியன்.
தொலைபேசி ஒட்டுக் கேட்பு வழக்கில் சவுக்கு சார்பாக வழக்கை நடத்தி வருபவர். குற்ற வழக்கு விசாரணையில் மிகத் திறமையானவர். இவர் இல்லையென்றால், எப்போதோ சவுக்கின் டவுசரை கழற்றி, புழல் சிறையில் அமர வைத்திருப்பார்கள். கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த வழக்கை தொடர்ந்து நடத்தி வருபவர். இந்த வழக்கு மட்டுமல்லாமல், சாலையில் சென்று கொண்டிருந்தவரை செங்கலால் அடித்ததாக, மதுரவாயல் காவல் நிலையத்தில் தொடர்ந்த வழக்கையும் இவரே நடத்தி வருகிறார். சவுக்கின் வழக்குக்காக இவர் இது வரை செலவு செய்த தொகை மட்டும் ஒரு லட்சத்தைத் தாண்டியிருக்கும். இவர் மட்டுமல்லாமல், இவர் அலுவலகத்தில் இருக்கும் அத்தனை பேரும், ஒரு க்ளையன்ட் என்பதைத் தாண்டி, சவுக்கின் மீது செலுத்தும் அன்பு வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதது. அதிமுக அரசு வந்ததும், சவுக்கு மீதான வழக்கு வாபஸ் பெறப்படும் என்று நம்பி ஏமாந்தவர். ஆட்சி மாற்றத்திற்கு ஒரு சிறு அளவு காரணியாக சவுக்கு இருந்திருக்கிறதே… அதற்காகவாவது இந்த அரசு ஏதாவது செய்யாதா என்று இன்னும் நம்பிக் கொண்டிருப்பவர். ஜெயலலிதா ஒரு புடவை கட்டிய கருணாநிதி என்பதை நம்ப மறுப்பவர். இந்த அரசு இன்னும் இந்த வழக்கை நடத்துகிறதே என்பதில் இவருக்கு ஏராளமான வருத்தம். தன்னிடம் க்ளையன்ட் என்று ஒருவன் வந்து விட்டால், அவனைக் காப்பாற்றுவதற்காக இறுதி வரை சளைக்காமல் போராடக் கூடியவர். எந்த வழக்கை எடுத்துக் கொண்டாலும், அதற்காக முழுமையாக ஆராய்ச்சியில் ஈடுபட்டு, மன நிறைவு அடையும் வரை விடாமல் முயலும் வழக்கம் கொண்டவர்.
வழக்கறிஞர் விஜேந்திரன்.
இரண்டு மாதங்களுக்கு முன்னால், இன்னும் பத்து நாட்களில் வழக்கை முடித்து தண்டனை தரப்போகிறார்கள் என்ற நிலையில் தலையிட்டு அந்த பெரும் ஆபத்திலிருந்து காப்பாற்றினார். தூக்குக் கயிற்றை கழுத்தில் மாட்டி, காலுக்குக் கீழே உள்ள நாற்காலியை எடுக்கப் போகும் நேரத்தில், வாள் வீசி கயிற்றை அறுத்ததற்கு இணையானது இவர் செய்த உதவி. தலித்துகளுக்கான பிரச்சினைகளைக் கையிலெடுத்து தொடர்ந்து வழக்காடக் கூடியவர். சமீபத்தில் கூட, தமிழக அரசுத் துறைகளில், ப்யூன் போன்ற நான்காம் பிரிவுகளில் தலித்துகள் தேவைக்கதிகமாக இருக்கிறார்கள், ஆனால் க்ரூப் 1, க்ரூப் 2 போன்ற பிரிவுகளில், பத்தாண்டுகளுக்கு மேலாக நிரப்பப்படாத காலியிடங்கள் ஆயிரக்கணக்கில் இருக்கின்றன என்று பொதுநல வழக்கு தொடர்ந்தார். இது போல தலித் நலன்களுக்காக சமரசம் செய்து கொள்ளாமல் போராடி வருபவர். இவர் மட்டும் உரிய நேரத்தில் தலையிடவில்லையென்றால், சவுக்கு இந்நேரம் புழல் சிறையில் கைதி சீருடை அணிந்து கத்தரிக்காய் குழம்பு தின்று கொண்டிருக்கும்.
பத்திரிக்கையாளர்கள்.
பல்வேறு பத்திரிக்கைகளையும் விமர்சித்து சவுக்கு பல முறை எழுதியிருப்பதால் அந்த நண்பர்களின் பெயரைக் குறிப்பிட்டு நன்றி தெரிவித்தால் அவர்கள் வேலைக்கு உலை வைப்பதில் போய் முடியும். ஆரம்ப காலம் முதல் சவுக்குக்கு உற்ற துணையாக இருந்து, சவுக்கின் எழுத்துக்களை விமர்சித்து, திருத்தி, வழி நடத்தி, கண்டித்து, செழுமைப் படுத்தி, பல்வேறு தகவல்கள் அளித்து, பத்திரிக்கையாளர்களுக்கு சவுக்கு ஏராளமாய் கடமைப் பட்டுள்ளது.
அதிகாரிகள்
சவுக்கு வாசகர்களில் பலர், ஏன் நல்ல அதிகாரிகளின் பெயரைக் குறிப்பிட மாட்டேன்கிறாய்.. அவர்களைப் பற்றியும் எழுத வேண்டியதுதானே என்று பல முறை கேட்டிருக்கிறார்கள். இன்று காலம் மாறி விட்டது தோழர்களே.. ஊழல் அதிகாரிகள் சிறுபான்மையாக இருந்த காலம் போய், இன்று நேர்மையான அதிகாரிகள் சிறுபான்மையாகக் கூட இல்லை… அறுகியே போய் விட்டார்கள். வெள்ளைப் புலி, சிங்கம் போல அரிய வகை மனிதர்களாக ஆகி விட்டார்கள். அந்த அரிய வகை மனிதர்களைக் காக்க வேண்டியது நமது கடமை மட்டுமல்ல. காலத்தின் தேவை. அவர்கள் பெயரை வெளிப்படையாக எழுதவதற்கு ஒரு நிமிடம் கூட ஆகாது. ஆனால், அதற்குப் பிறகு, அவர்கள் சவுக்கு போல டுபுக்கு என்று ஒரு தளத்தை நடத்திக் கொண்டிருக்க வேண்டியதுதான். அதிகாரிகளாக அவர்கள் தொடர, இந்த அமைப்பு அனுமதிக்காது. ஆகையால்தான் நல்ல அதிகாரிகளின் பெயர்கள் வெளியிடப்படுவதேயில்லை. ஆனால், இந்த நேரத்தில் அன்புள்ளம் கொண்ட அந்த நல்ல அதிகாரிகளுக்கு சவுக்கு நன்றி கூற கடமைப் பட்டுள்ளது. எவ்வளவோ வேலைகள் இருந்தாலும், சவுக்கு அவர்களைப் பார்ப்பதற்குச் சென்றால், அன்போடு நேரம் கொடுத்து, உரையாடி அவர்கள் தரும் ஆதரவுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.
தள வடிவமைப்பாளர்
சவுக்கு தளத்தை வடிவமைத்து, தொடர்ந்து பின்புலமாக இருந்து வரும் தோழர் முருகையனின் பங்கு இத்தளம் நடத்துவதில் மிகப்பெரியது. சவுக்கு அவருக்கு எவ்வித கட்டணமும் தர இயலாத நிலையில், ஏதோ தன்னுடைய சொந்த இணையதளம் போலவே சவுக்கு தளத்தை அவர் கருதி, தொடர்ந்து ஆதரவளித்து வருகிறார்.
இவர்கள் இல்லையென்றால் சவுக்கும் இல்லை…. சவுக்கு தளமும் இல்லை. இவர்களே சவுக்கின் பின்புலம். இவர்களே சவுக்குக்கு பக்கபலம். இவர்கள்தான் சவுக்கு.
இப்போது சொல்லுங்கள் தோழர்களே… இது ஊர் கூடி இழுத்த தேர்தானே… ? சமூகத்தில் எங்கு பார்த்தாலும் அவலம், அநியாயம், துரோகம், என்று அவநம்பிக்கைகளே விஞ்சி நிற்கையில், இது போன்ற உன்னதமான உள்ளங்கள் இருக்கையில் நாம் நம் பணியைத் தொடர்ந்து செய்வதை யார் தடை செய்ய முடியும் ?
அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
புறத்த புகழும் இல.
தூய்மையான நெஞ்சுடன் நடத்தும் அறவழி வாழ்க்கையில் வருகின்ற புகழால் ஏற்படுவதே இன்பமாகும். அதற்கு மாறான வழியில் வருவது புகழும் ஆகாது; இன்பமும் ஆகாது.