ஏழு தமிழர் விடுதலை என்றால் என்ன ? யார் அந்த ஏழு பேர் ? அவர்கள் மட்டும் தான் தமிழர்களா ? இது போன்ற கேள்விகளுக்கு விடை தந்ததுதான் இன்று தமிழக மக்கள் உரிமைக் கழகம் நடத்திய மாநாடு.
ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று 20 ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளர், முருகன், சாந்தன், ஜெயக்குமார், ரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ் மற்றும் நளினி ஆகிய ஏழு தமிழர்களை விடுதலை செய்யக் கோரிதான் இந்த மாநாடு நடந்தது.
முதலில், தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் பொருளாளர் செம்மணி வரவேற்புரை வழங்கினார். அடுத்ததாக இணைச் செயலாளர் இளங்கோவன் தலைமை ஏற்றார்.
முதலில் இதழாளர் அய்யநாதன் பேசினார். அவர் தனது உரையில், இந்த ஏழு பேரின் விடுதலை மறுக்கப் படுவதன் பின்னணியில் அரசியல் இருக்கிறது என்றார். இந்த 7 பேரின் விடுதலையைப் பற்றி பேசினாலே, காங்கிரஸ் காரர் யாராவது ஒருவர் அறிக்கை வெளியிடுகிறார். இவ்வளவு நாள் பொறுமையாக இருந்து விட்டோம். இனி இந்த ராஜீவ் காந்தி என்ற மனிதரின் மரணத்திற்குப் பின்னார் உள்ள அரசியலை பேசித்தான் ஆக வேண்டும் என்றார்.
காங்கிரஸ் கட்சிக்கு ராஜீவ் கொலையில் உள்ள தொடர்பு பற்றியும் பேச வேண்டிய நேரம் வந்து விட்டது என்றார். 1991ல் ஜனதா தளத்தின் தென் சென்னை மாவட்டச் செயலாளராக இருந்த அய்யநாதன், அப்போது முன்னாள் பிரதமராக இருந்த வி.பி.சிங்கின் பாதுகாப்பு ஏற்பாடுகள் எப்படி மிக மிக கடினமாக இருந்தன என்பதை விளக்கினார். ஆனால், அதே முன்னாள் பிரதமராக இருந்த ராஜீவ் காந்திக்கு பாதுகாப்பு ஏற்பாட்டில் ஏன் குறைபாடுகள் என்ற கேள்வியை எழுப்பினார். ராஜீவ் பாதுகாப்புக்காக வந்திருந்த அதிகாரி, தனது துப்பாக்கியை கூட எடுத்து வரவில்லை. இஸட் ப்ளஸ் பிரிவில் இருக்கும் தலைவர்கள் பேசும் மேடையின் பாதுகாப்பு எப்படி அமைக்கப் பட வேண்டும் என்ற விதிமுறை கூட ராஜீவ் விஷயத்தின் பின்பற்றப் படவில்லை என்பதை சுட்டிக் காட்டினார். ராஜீவின் பாதுகாப்பு ஏற்பாடுகளில் உள்ள குறைபாடுகளை ஆராய்வதற்காக அமைக்கப் பட்ட வர்மா கமிஷனின் நீதிபதி ஜே.எஸ்.வர்மா, விமானநிலையத்திலிருந்து ஸ்ரீபெரும்புதூர் வரை பாதுகாப்பு ஏற்பாடுகள் எப்படி செய்யப் பட்டுள்ளன என்பதை ஆய்வு செய்த பிறகு, ராஜீவ் விமானநிலையத்திலிருந்து ஸ்ரீபெரும்புதூர் வரை எங்கு வேண்டுமானாலும் கொல்லப் பட்டிருக்கலாமே என்று கூறியதாக தெரிவித்தார்.
ராஜீவ் மரணத்திற்குப் பிறகு, இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை எப்படி அமெரிக்காவைச் சார்ந்து மாறியது, தாராளமயமாக்கல் கொள்கைகள் எப்படி கொண்டு வரப்பட்டன என்ற விஷயங்களையெல்லாம் ஆராய வேண்டும் என்றார்.
ஏழு தமிழர்களை விடுதலை செய்யாமல் காலம் கடத்தும், காங்கிரஸ் கட்சியை வரக்கூடிய தேர்தலில் ஒழித்துக் கட்டுங்கள் என்றார்.
அடுத்து பேசிய இதழாளர் டிஎஸ்எஸ் மணி அவர்கள் தனது உரையில், காங்கிரஸ் தலைமைக்கு ராஜீவ் கொலையில் பல உண்மைகள் தெரியும என்றார். தமிழர்களை வன்முறைக்கு ஆளாக்க வேண்டும் என்பதற்காகவே இலங்கைக்கு இந்தி மொழி பேசும் ராணுவத்தினர் அனுப்பப் பட்டனர் என்றார். சூழ்நிலை ஆதாரங்களை வைத்து, எப்படி ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை வழங்கப் பட்டதோ, அதே போல சூழ்நிலை ஆதாரங்களை ஆராய்ந்து பார்த்தால், ராஜீவ் கொலை வழக்கில் அமெரிக்காதான் குற்றம் சாட்டப் பட வேண்டும் என்று கூறினார். 7 தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற குரல் ஓங்கி உரத்து ஒலிக்க வேண்டும் என்று கூறினார்.
அடுத்து பேசிய விடுதலை ராசேந்திரன், ராயப்பேட்டையில் முக்கிய பிரமுகர்கள் வசிக்கிறார்கள் என்பதால், நளினியை முன்விடுதலை செய்ய இயலாது என்பதே எப்படிப் பட்ட ஒரு அயோக்கியத்தனமான நிபந்தனை என்று சுட்டிக் காட்டினார். ஆரிய திராவிடப் போர் நடக்கிறது என்று கருணாநிதி பேசியதை சுட்டிக் காட்டிய ராசேந்திரன், தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக இருந்த திராவிடரான விடுதலையை அப்பதவியில் இருந்து நீக்கி விட்டு, பி.எஸ்.ராமன் என்ற ஆரியரை நியமித்தது மட்டும் எந்த வகையில் நியாயம் என்ற கேள்வியை எழுப்பினார்.
போபால் விஷவாயு படுகொலைக்கு காரணமான வாரன் ஆண்டர்சனுக்கு இதே ராஜீவ் காந்தி அரசுதான் தனி விமானம் கொடுத்து அமேரிக்காவுக்கு அனுப்பி வைத்தது, 3000 சீக்கியர்கள் கொல்லப் பட்டதற்கு, இது வரை யாருமே தண்டிக்கப் படவில்லை, தினகரன் ஊழியர்கள் கொல்லப் பட்டதற்கு இது வரை யாரும் தண்டிக்கப் படவில்லை, பார்ப்பனர் என்று சொல்லுகிற ஜெயலலிதா சங்கரராமன் கொலை வழக்கில் பார்ப்பனரான ஜெயேந்திரரை கைது செய்தார், ஆனால் கருணாநிதி அரசு, சாட்சிகளை பிறழ் சாட்சிகளாக மாற்றி ஜெயேந்திரரை காப்பாற்றுகிறது என்று கூறினார். உலகெங்கும், மரண தண்டனை ஒழிக்கப் பட்டு வரும் சூழலில், இந்தியாவில் மட்டும் மரண தண்டனை ஏன் இன்னும் ஒழிக்கப் படாமல் இருக்கிறது என்ற கேள்வியையும் எழுப்பினார்.
இதழாளர் பாரதி தமிழன் தனது உரையில், ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப் பட்டவர்கள் வெளியே வந்தால் உண்மை வெளிவந்து விடும் என்று அரசு அஞ்சுகிறதோ என்ற கேள்வியை எழுப்பினார். வாழ்நாள் சிறையாளிகள் ஏழு ஆண்டுகளுக்குள் விடுதலை செய்யப் படும் போது, 20 வருடங்களாக இவர்களை மட்டும் சிறையில் வைத்திருப்பது எந்த வகையில் நியாயம் என்ற கேள்வியையும் எழுப்பினார்.
இதழாளர் புகழேந்தி தங்கராஜ் ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப் பட்ட போது, மவுன சாட்சிகளாக இருந்த நாம், இந்த 7 தமிழர்களை விடுதலை செய்ய போராடியாவது பிராயச்சித்தம் தேடிக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்தியா பேசுகையில், தமிழக மக்கள் உரிமைக் கழகம் முன்னெடுக்கும் 7 தமிழர் விடுதலை தொடர்பான போராட்டங்களுக்கு, மதிமுக உறுதியான ஆதரவை நல்கும் என்று தெரிவித்தார். 7 தமிழர்களை விடுதலை செய்தால் வாக்கு கிடைக்கும் என்று தகவல் வந்தால், அவர்கள் விடுதலைக்காக முதலில் குரல் கொடுப்பது கருணாநிதியாகத் தான் இருக்கும் என்று கூறினார்.
தஞ்சை மணியரசன் பேசுகையில், தமிழ்நாட்டில் ஒரு அறிவிக்கப் படாத நெருக்கடி நிலை பிரகடனப் பட்டிருப்பதாக சுட்டிக் காட்டினார். தொடர்ந்து மீனவர்கள் படுகொலை செய்யப் படுவதை கண்டித்த சீமானை கைது செய்தது எந்த வகையில் நியாயம் என்று கூறினார். தமிழக மீனவர்கள் கொல்லப் படாமல் குஜராத் மீனவர்களோ, மராட்டிய மீனவர்களோ கொல்லப் பட்டிருந்தால், இந்த தேசமும் ஊடகமும் இப்படி மவுனம் சாதிக்குமா என்று கேட்டார். பஞ்சாப் மாகாணத்தில் தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டனர் என்று குற்றம் சாட்டப் பட்ட பிந்தரன்வாலேவின் படத்தை சீக்கிய பொற்கோவிலில் இருந்து அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த போது, சீக்கிய மக்கள் அதை நிராகரித்ததை சுட்டிக் காட்டினார். கருணாநிதி சோனியா காந்தியின் ப்யூன் போல செயல்பட்டு வருகிறார் என்றும், பத்து ஆண்டுகளுக்கு மேல் ஒருவர் கூட சிறையில் அடைக்கப் படக் கூடாது என்றும் கூறினார்.
இவர்களைத் தவிர, தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் நிர்வாகிகள், இளங்கோவன், செம்மணி, கனகசபை, பா.புகழேந்தி, நிலவன் ஆகியோர் உரையாற்றினர்.