சவுக்கில் ஜாபர் சேட் வீட்டு வசதி வாரியத்தில் மோசடி செய்த பெற்ற வீட்டு மனை குறித்து சவுக்கு தளத்தில் ஒரு மகிழ்ச்சி ஒரு சோகம் என்ற கட்டுரை எழுதியதற்காக, ஜாபர் சேட் உத்தரவின் பேரில், மதுரவாயல் காவல்நிலையத்தில் ஒரு பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டது. சாலையில் சென்று கொண்டிருந்த ஒருவரோடு தகராறு செய்து, அவரை டேய் …………. பையா… உன்னைக் கொல்லாமல் விட மாட்டேன் என்று அவரை அடித்து, செங்கலால் தாக்க முயன்றதாக ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்தக் கைது அனுபவங்கள் குறித்து, சிறையில் சவுக்கு என்ற கட்டுரையில் விரிவாக எழுதப்பட்டுள்ளது. ஜுலை 2010ல் பதிவு செய்யப்பட்ட அந்த வழக்கில் இன்று சவுக்கை விடுதலை செய்து தீர்ப்பு வழங்கினார் நீதிபதி.
அந்த பொய் வழக்கே சவுக்கை பலதரப்பட்ட வாசர்களிடம் சென்று சேர்த்தது. அந்தக் கைது குறித்து, குமுதம் ஓ பக்கங்களில் எழுதிய தோழர் ஞாநியின் கட்டுரைக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், தோழர் ஞாநி, குமுதத்தில் ஓ பக்கங்கள் எழுதுவதை நிறுத்தினார். சவுக்கு கைது குறித்து வினவு தோழர்களும் கட்டுரை எழுதி, இணைய தளத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஜுனியர் விகடனில், இரா.சரவணன் கட்டுரை எழுதினார். அதுவும் அந்தப் பொய் வழக்கு குறித்த செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்த்தது.
இந்த வழக்கிலிருந்து விடுதலை பெறுவதற்கு பெரிதும் உறுதுணையாக இருந்த பூந்தமல்லி வழக்கறிஞர் ராஜன், இவ்வழக்கை நடத்திய வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன், தோழர் ஞாநி, வினவுத் தோழர்கள், ஜுனியர் விகடன் நிருபர் இரா.சரவணன், திருமாவேலன், மற்றும் பேரன்பைப் பொழிந்த அன்பு வாசகர்கள் அனைவருக்கும், சவுக்கு தன் அன்பு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.