துக்கையாண்டியின் மனைவி சுப்புலட்சுமி சிறையில் அடைக்கப்பட்டார். வட இந்தியாவைச் சேர்ந்த இருவருக்கு சொந்தமான பத்து கிரவுண்ட் நிலத்தை, அவர்கள் பெயரில் மோசடியாக ஆவணம் தயார் செய்து நில அபகரிப்பு செய்ததாக புகாரில் சிக்கிய முன்னாள் கூடுதல் டிஜிபி துக்கையாண்டியின் மனைவி இன்று நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
முன்னதாக துக்கையாண்டி, அவர் மனைவி மற்றும் மகள் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவில் தீர்ப்பளித்த உயர்நீதிமன்றம், துக்கையாண்டியின் மகள் மற்றும் துக்கையாண்டிக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்ட அதே நேரம், துக்கையாண்டி மனைவியின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது. இதையடுத்து தலைமறைவாக இருந்த துக்கையாண்டியின் மனைவி சுப்புலட்சுமியை நேற்று மதியம் ஒரு மணிக்கு பெங்களுரில் கைது செய்த போலீசார், இன்று காலை தாம்பரம் நீதிமன்ற நடுவர் முன்பு ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய துக்கையாண்டியின் மனைவி சுப்புலட்சுமி, தன் கணவர் ஒரு சிங்கம் போல இருந்தார். ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் தீவிரமாக நடவடிக்கை எடுத்ததன் காரணமாக என் மீது இந்தப் பொய் வழக்கு போடப்பட்டுள்ளது. என் கணவரை ஒன்றும் செய்ய முடியாது என்பதால், என்னை கைது செய்துள்ளனர் என்று கூறினார்.
ஜாபர் சேட்டை விட, சவுக்குக்கு அதிக துன்பத்தை ஏற்படுத்தியவர் துக்கையாண்டி. சிபி.சிஐடி காவல்துறையால் இரவு முழுவதும் சவுக்கை கொடுமையான சித்திரவதைக்கு ஆளாக்கியபோது சிபி.சிஐடி ஐஜியாக இருந்தவர் துக்கையாண்டி. துக்கையாண்டி அப்போது லஞ்ச ஒழிப்புத் துறையின் ஐஜியாகவும் இருந்தார். துக்கையாண்டி நினைத்திருந்தால், அந்த சித்திரவதையை தடுத்து நிறுத்தியிருக்க நிச்சயமாக முடியும். சென்னை உயர்நீதிமன்றம் துறைரீதியான நடவடிக்கை எடுக்கத் தடை விதித்திருந்த போதும், அதை மீறி அரசுப் பணியிலிருந்து டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டார் துக்கையாண்டி. இதையெல்லாம் விட, மிகப்பெரிய கொடுமையாக, தற்காலிக பணி நீக்கத்திலிருப்பவர்களுக்கு அரசு வழங்கும் பாதி சம்பளத்தை, ஐந்து மாதங்களுக்கு நிறுத்தி வைத்தார் துக்கையாண்டி. தற்காலிக பணி நீக்கத்திலிருப்பவர்களுக்கு வழங்கப்படும் பாதி ஊதியம், அரசு வழங்கும் உரிமை இல்லையா.. ? வேறு எந்த வருமானமும் இல்லாத ஒருவர், அந்தப் பாதி சம்பளமும் வராவிட்டால் என்ன செய்வார் ? அந்தக் கோப்பு துக்கையாண்டியின் மேசையிலேயே ஐந்து மாதங்கள் கட்டி வைக்கப்பட்டது. ஊதியம் வழங்காத விஷயம் உயர்நிதின்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட பிறகுதான், ஊதியம் வழங்கப்பட்டது.
இவ்வளவு செய்தபோதும், துக்கையாண்டியின் இன்றைய நிலையை நினைத்தால் மிகவும் வருத்தமாக இருக்கிறது. அவர் மனைவி இன்று பேசியதிலிருந்து, இந்த இருவரும் எப்படி நெருக்கமான கணவன் மனைவியாக வாழ்ந்திருக்கின்றனர் என்பதை உணர முடிகிறது. 24 ஆயிரம் சதுர அடிக்கு பங்களாவும், 3 நீச்சல் குளங்களும் உங்களுக்கு இன்று என்ன சந்தோஷத்தை கொடுத்து விடப் போகிறது துக்கையாண்டி… ? படிச்சவன் சூதும் வாதும் பண்ணா, போவான் போவான் அய்யோன்னு போவான் என்ற பாரதியின் வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன.
நீங்கள் என்ன வேதனையில் இருப்பீர்கள் என்பதை என்னால் உணர முடிகிறது. உங்கள் நிலையைப் போன்ற வேதனையான நிலை மிகவும் மோசமான ஒரு நிலை. எனக்கு கடவுள் நம்பிக்கை இருந்தால் நிச்சயம் உங்கள் துன்பம் நீங்க வேண்டுமென்று வேண்டுவேன். கடவுள் நம்பிக்கை இல்லாததால், நீங்கள் நம்பிக்கையோடு இருங்கள் என்று மட்டுமே சொல்ல முடிகிறது.
Boomerang