இந்த வாரம் ஆனந்த விகடனில் வெளிவந்த பேட்டி இது….
“நேற்று… நான் விடுதலைப் போராளி! இன்று… பாலியல் தொழிலாளி.”
ஒரு பெண் புலியின் வாக்குமூலம்
இது ஒர் உண்மைக் கதை
வித்யா ராணி… 2009 மே வரை தமிழ் ஈழம் போற்றிய ஒரு பெண் போராளி. ஆனையிறவு முகாம் மீதான தாக்குதல் தொடங்கி ‘ஜெயசிக்குறு எதிர் சமர்’ என ஈழத்தின் பெரும் சமர்களிலும் பங்கெடுத்தவர். ஈழத்தின் இறுதி யுத்தம் முள்ளிவாய்க்கால் வரை களமாடிய போராளி. ஈழத்துப் பெண் புலிகளின் வீரத்தை உலகுக்குச் சொன்ன ‘சோதியா படையணி’யின் முன்னணித் தளபதிகளில் ஒருவர். ஜான்சி ராணி, வேலு நாச்சியார் போன்ற வீராங்கனைகளுக்கு இணையாகத் தமிழ் ஈழத்தில் ஒரு காலம் புகழப்பட்ட வித்யா ராணி… கால வெள்ளச் சுழலில் இன்று ஒரு பாலியல் தொழிலாளி.
உங்களிடம் கருணை தேடியோ, பரிதாபம் ஈனவோ வித்யா ராணி இங்கு பேசவில்லை… ‘இதுதானடா தமிழா… இலங்கையில் இப்போதைய நிலைமை!’ என்று சில உண்மைகளை முகத்தில் அறையவே இந்தப் பேட்டிக்குச் சம்மதித்தார்.
”எனது சொந்த ஊர் யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை. 1995 ஜூலை மாதம் நாம் இடம் பெயர்ந்து நவாலியில் உள்ள தேவாலயத்தில் தஞ்சம் புகுந்து இருந்தோம். நவாலியை அண்மித்த பிரதேசங்களில் இருந்து சுமார் 500 பேரளவில் அங்கு தஞ்சம் புகுந்திருந்தோம். ஜூலை மாதம் ஒன்பதாம் திகதி ‘புக்காரா’ விமானங்கள் வானத்தில் இருந்து நடத்திய தாக்குதலில் எனது கண்ணுக்கு முன்பாக சுமார் 125 அப்பாவித் தமிழ் மக்கள், ‘அவர்கள் தமிழர்கள்’ எனும் ஒரே காரணத்துக்காகக் கொல்லப்பட்டனர். என்னுடன் அந்தக் கணம் வரை சிரித்து விளையாடித் திரிந்த எனது இரண்டு வயதுத் தம்பி எனது கண்களுக்கு முன்பாக உடல் இரு துண்டாகி இறந்துபோனான். தம்பி உடல் சிதைந்து இறந்த கணம் எனக்கு நினைவு தப்பியது. சுமார் ஒரு வாரம் மயக்கமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருந்தேன். கண் விழித்துப் பார்த்தபோது, தம்பியோடு தாயையும் அந்தத் தாக்குதலில் பறிகொடுத்ததை அறிந்துகொண்டேன். நான் உயிரினும் மேலாக நேசித்த எனது தம்பியைக் காப்பாற்ற முடியவில்லை என்கிற வலி எனக்குள் ஆற்றுப்படுத்த முடியாத கோபத்தைக் கிளப்பியது. சிறு குழந்தை அவன். எனது உதவி இல்லாமல் காலைக் கடன்கூடக் கழிக்க முடியாத குழந்தை. அவன் என்ன பாவம் செய்தான்? அவன் உடல் சிதறிக் கொல்லப்பட என்ன காரணம்? தமிழனாகப் பிறந்த ஒரே காரணத்துக்காக எவ்வளவு காலம்தான் எமது குழந்தைகளை நாம் பலிகொடுப்பது? எமது அடுத்த சந்ததியைக் காக்க வேண்டிய கடமை எனக்கு இருப்பதாக எனது உள் மனம் சொன்னது. நான் விடுதலைப் புலிகளுடன் போராட்டத்தில் இணைந்தேன்.
”பெண்களை முதல்முறையாக மரபு வழியாகப் போராடவைத்த எல்.டி.டி.ஈ. இயக்கத்தில் பெண்கள் படையணி எந்த அளவுக்கு வலிமையாக இருந்தது?”
”1985 ஆவணி மாதம் 18-ம் திகதி பெண் புலிகளுக்கான உத்தியோகப்பூர்வமான பயிற்சிப் பாசறை ஆரம்பிக்கப்பட்டது. அன்றில் இருந்து ஈழப் போரின் இறுதிக் கணம் வரை விடுதலைப் புலிகளின் மிகப் பெரிய தூண்கள் பெண்கள் படையணி. பெண்களைப் போராட்டத்தில் இணைத்ததன் மூலம் பிரபாகரன் செய்தது மிகப் பெரிய சமூகப் புரட்சி. சாதிக் கொடுமைகளும் பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகளும் தாண்டவமாடிய ஈழத்தில் பெண்களைப் போராட்டத்தில் இணைத்ததன் மூலம் பெண்களின் மேல் கலாசாரம் எனும் பெயரால் விதைக்கப்பட்ட அடக்குமுறைகளை எல்லாம் பிரபாகரன் நீக்கினார். ஆண்கள் படையணிகள் மேல் வைத்திருந்த அதே நம்பிக்கை அவருக்கு பெண்கள் படையணிகள் மீதும் இருந்தது. பிரபாகரன் ஈழ விடுதலைக்காக மாத்திரம் போராடவில்லை. அவர் பெண் விடு தலைக்காகவும் போராடியவர். ஈழ விடுதலையை அவரால் அடைய முடியவில்லை. ஆனால், பெண் விடுதலை ஈழத்தில் எப்போதோ பெறப்பட்டுவிட்டது!”
”அவரது படையணியில் இருந்தவர் என்ற முறையில், பிரபாகரன் என்றவுடன் உங்கள் நினைவுக்கு வருவது எது?”
”இந்த நூற்றாண்டு கண்ட மாபெரும் வீரன் அவர். ஒரே ஒரு துப்பாக்கியுடன் ஆரம்பித்த விடுதலைப் புலிகள் இயக்கத்தை யுத்த விமானம் வரை முன்னெடுத்து வந்தவர். அவர் இறந்தவுடன் ஈழப் போர் முடிவுக்கு வந்துவிட்டது. ஈழத் தமிழர்கள் இப்போது தலைவன் இல்லாத குடும்பம்போல உணர்கிறோம்!”
”இப்போது நீங்கள் பாலியல் தொழிலாளியா?’
”ஆம். இப்போது நான் ஒரு பாலியல் தொழிலாளி. ஆனால், பாலியல் தொழிலாளி ஆக்கப்பட்டவள்!”
”என்ன நடந்தது?”
”விடுதலைப் புலிகள் இயக்கத்தில் நான் இருந்தபோது சக போராளி கீரனைக் காதலித்து மணந்தேன். நான்கு வருடக் காதல் அது. நாங்கள் வாழ்ந்த வாழ்வுக்குச் சாட்சியாக இரு குழந்தைகள். இறுதிப் போரின்போது ஆனந்தபுரத்தில் ரசாயனக் குண்டடித்து இறந்துபோன 700 போராளிகளில் அவரும் ஒருவர். அவர் இறந்தவுடன் எனக்கு இருந்த ஒரு துணையும் இல்லாமல் போனது. அவர் இறந்துபோகும் கணம் வரை எனது குழந்தைகளின் எதிர்காலம்பற்றி நான் கவலைப்படவில்லை. ஆனாலும், நான் மனம் தளராமல் போராடினேன். எமது போராட்டத்தில் தோற்றுப்போவோம் என நாங்கள் கனவிலும் நினைத்தது இல்லை. ஆனாலும், நாங்கள் தோற்றுவிட்டோம். எமது போராட்டம் தோற்றுப்போனால் என்ன செய்வது என்கிற எந்தவிதமான முன் ஏற்பாடும் எங்களிடம் இல்லை. முள்ளிவாய்க்காலில் இருந்து நானும் எனது ஆயுதங்களைக் கைவிட்டு ராணுவப் பிரதேசங்களுக்கு எனது இரு குழந்தைகளுடன் வந்தேன். வவுனியா மெனிக் ஃபாம் முகாமில் தங்கியிருந்தபோது, ராணுவப் புலனாய்வுப் பிரிவால் கைது செய்யப்பட்டேன். எனது குழந்தைகள் என்னிடம் இருந்து பிரிக்கப்பட்டனர். வவுனியா வில் இருந்து விசாரணைக்காக அனுராதபுரம் முகாமுக்குக் கொண்டுசெல்லப்பட்டேன். அங்கு கொண்டுசெல்லப்பட்ட முதல் நாளே விசாரணை எனும் பெயரில் ராணுவத்தினரால் கூட்டாகக் கற்பழிக்கப்பட்டேன். காலை, மாலை, இரவு என ஒரு நாளைக்குக் குறைந்தது மூன்று முறையாவது கற்பழிக்கப்பட்டேன். எனது கண்களுக்கு முன்னால் சுமார் 50-க்கும் மேற்பட்ட பெண் போராளிகள் ராணுவத்தினரால் கற்பழிக்கப்பட்டனர். பெரும்பாலான பெண் போராளிகள் தற்கொலை செய்துகொண்டனர். எனது குழந்தை களின் எதிர்காலத்தை நினைத்து நான் உயிருடன் இருந்தேன்.
அழகான பெண் போராளிகள் உயர் அதிகாரிகளால் கற்பழிக்கப்பட்டனர். சில போராளிகள் சிங்கள இனவாத அமைச்சர்களாலும் கற்பழிக்கப்பட்டனர். ‘சோதியா படையணி’யில் குறிப்பிடத்தக்க தளபதியாக இருந்தவள் என்ற ஒரே காரணத்துக்காக ராணுவ உயர் அதிகாரி ஒருவரும் சிங்களப் பேரினவாதத்தைத் தனது ஒவ்வொரு வார்த்தையிலும் விஷமாக உமிழும் ஒரு அமைச்சரும் என்னைக் கூட்டாகக் கற்பழித்தனர். காமப் பசியாற்றுவதற்காக அவர்கள் கற்பழிக்கவில்லை. ‘தமிழ்ப் பெண்களைக் கற்பழிக்கிறோம்’ என்ற மிருக வெறி உந்தித் தள்ளலே அவர்களை முடுக்கியது. எங்கள் வேதனைகளைக் கை கொட்டி ரசிக்கும் மிருகத்தனம் இருந்தது. கூட்டாகக் கற்பழிக்கப்படும்போதே ரத்தப்போக்கு அதிகமாகி இறந்தார் என் தோழி ஒருவர். குதறிக் கிழிக்கப்பட்ட பெண்களின் பிறப்புறுப்பில் பெட்ரோல் ஊற்றி அவர்கள் வலியால் துடிப்பதைக் கை கொட்டி ரசித்தனர். அவர்களின் மார்பகத்தில் ஊசிகளை ஏற்றி, அவர்களின் மலத் துவாரங்களில் இரும்புக் குழாய்களைச் செலுத்தி, அவர்கள் வலியால் துடிப்பதை வெற்றித் திருவிழாவாக ரசித்தனர். பெண் போராளிகளை எவ்வளவு தூரம் சிதைக்க முடியுமோ அவ்வளவு தூரம் மிருகத்தனமாகச் சிதைத்தனர். எனது குழந்தைகளுக்காக நான் எனது உயிரைக் கையில் பிடித்தவண்ணம் இருந்தேன்!’
”விசாரணை சித்ரவதையில் இருந்து எப்படித் தப்பினீர்கள்?”
”சிறிது காலத்தில் அவர்களாகவே விடுவித்தனர். எங்களை மீள் குடியேற்றம் செய்வதாகக் கூறி, முல்லைத் தீவுக் காடுகளுக்குள் கொண்டுவிட்டனர். அடுத்த வேளை உணவுக்கே திண்டாடும் நிலை. வன விலங்குகள், பாம்பு, பூச்சிகளுக்கு இடையே என் இரண்டு குழந்தைகளை வைத்துக்கொண்டு நான் பட்ட அவலத்தை வார்த்தையில் வடிக்க முடியாது. பின், ஒருவழியாக அங்கிருந்து தப்பி யாழ்ப்பாணம் வந்தேன். யாழ்ப்பாணம் வந்த கணத்தில் இருந்துதான் நான் ஒரு பாலியல் தொழிலாளி ஆனேன்!’
”நீங்கள் பாலியல் தொழிலாளியாக மாறக் காரணம்..?’
”பசிதான் காரணம் சகோதரா. யாழ்ப்பாணம் வந்த எங்களுக்கு உதவ யாருமே இல்லை. தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறும் கட்சிகள் எல்லாமே வெறுமனே பெயர் அளவில்தான் இயங்குகின்றன. முன்னாள் போராளி எனத் தெரிந்ததும் யாரும் உதவக்கூட முன்வரவில்லை. எங்களை ஏதோ தீண்டத்தகாதவர்கள்போல நடத்தினார்கள். எங்களிடம் பேசினால்கூட அவர்களுக்கு ஏதும் பாதிப்பு வரலாம்என அஞ்சினர். நானும் எனது இரண்டு குழந்தைகளும் தனித்துவிடப்பட்டோம். பசியால் பிஞ்சுக் குழந்தைகள் வாடுவதை எவ்வளவு காலம்தான் சகித்துக்கொண்டு இருப்பது. பால் சுரக்காத முலையைச் சப்பியவாறு ‘பால்… பால்’ என எனது சிறு குழந்தை அழுவதை நான் எப்படித் தம்பி சகித்துக்கொண்டு இருப்பது. எனக்கு வேறு எந்த வழியும் தெரியவில்லை!”
”ஏன், நீங்கள் வேலை தேடவில்லையா?”
”எங்களுடன் பேசவே பயந்தவர்கள் வேலை தருவார்களா என்ன? நான் வேலை தேடிச் சென்ற அனைத்து இடங்களிலும் என்னை உள்ளே விடவே பயந்தனர். பசி தாங்காமல் பிச்சை எடுத்தேன். எங்களுக்குப் பிச்சை போடக்கூடப் பயந்தனர். மீண்டும் சொல்கிறேன்… எனக்கு வேறு வழி ஏதுமே இல்லை. யாழ்ப்பாணம் பழைய புகையிரத நிலையத்தில் பசி வயிற்றைச் சுருக்கப் படுத்திருந்தபோது, அங்கு வந்த ஒருவரிடம் பிச்சை கேட்டேன். அவர் என்னைப் படுக்க அழைத்தார். சென்றேன். அவர் வேலை முடிந்ததும் எனக்கும் எனது குழந்தைகளுக்கும் உணவு வாங்கித் தந்தார். அன்றில் இருந்துதான் நான் ஒரு பாலியல் தொழிலாளி ஆனேன். தம்பிக்காகப் போராளி ஆன நான், எனது குழந்தைகளுக்காகப் பாலியல் தொழிலாளி ஆனேன்!”
”யாரெல்லாம் உங்களின் வாடிக்கையாளர்கள்?”
”பெரும்பாலும் வயதானவர்கள். சில சிங்கள யாத்ரீகர்களும் வந்து போவார்கள். சில பாடசாலை மாணவர்களும் வருவார்கள். ஆனால், நான் அவர்களை அனுமதிப்பது இல்லை.”
”தமிழ் அரசியல் கட்சிகள் எதுவுமே உங்களுக்கு உதவ முன்வரவில்லையா?”
”அவர்கள் வெறும் பேச்சுக்குத்தான் அரசியல் கட்சிகள். அவர்கள் சிங்களப் பேரினவாத அரசாங்கத்தின் ஏஜென்ட் போலவே செயல்படுகின்றனர்.”
”இந்தியாவில் இருந்துகொண்டு தமிழ் ஈழத்துக்காகப் போராடும் எந்தத் தலைவர் களும் உங்களைப்போன்ற பெண்களுக்கு உதவிக்கரம் நீட்ட முன்வரவில்லையா?”
(அதுவரை எந்த உணர்ச்சியும் இல்லாமல் தன்மையாக ஒலித்த குரலில் அனல் ஏறுகிறது) ”இந்தியாவில் இருந்துகொண்டு ஈழத்துக்காகப் போராடுவதாகச் சொல்லும் எந்தத் தலைவர் களிடமும் ஈழம் சம்பந்தமான நேர்மையான புரிந்துணர்வே இல்லை. ‘ஈழத் தமிழர்களாகிய நாங்கள் தோற்றுவிட்டோம்’ என்கிற நிர்வாண கசப்பான உண்மையைக்கூட இன்னும் ஏற்றுக் கொள்ள முடியாதவர்களாக இருக்கிறார்கள்.அதனால்தான் இன்றும் ‘இனி ஒரு ஈழப் போர் வெடிக்கும். பிரபாகரன் திரும்பி வருவார்’ என்றெல்லாம் சும்மா எழுதிக் கொளுத்திப்போடு கின்றனர். எமது போராட்டம் ஈழத்தில் இருந்து சர்வதேசத்தின் சதியால் வேரோடும் வேரடி மண்ணோடும் பிடுங்கப்பட்டுவிட்டது. எனது குழந்தைகளுக்கு அடுத்த வேளை உணவு இல்லாமல் பாலியல் தொழில் செய்துவரும் என்னிடம் வந்து, ‘எப்போது உங்கள் அடுத்த போராட்டம்?’ என்று கேட்டால், விளக்குமாறால் அடிப்பேன். (சட்டென ஆற்றாமை பொங்க, குரல் உடைந்து அழுகிறார்.) இந்தியத் தலைவர்களே… உங்களைக் கை கூப்பித் தொழுகிறேன்… எங்களை வைத்து வியாபாரம் செய்வதை இனியாவது நிறுத்துங்கள். எமது அடுத்த சந்ததி வாழ வேண்டும். ஒரு நாளேனும் நிம்மதியான உறக்கம்கொள்ள வேண்டும். உங்களுடைய பிள்ளைகள் மட்டும் படித்தால் போதுமா? எமது அடுத்த சந்ததியும் கல்வி கற்க வேண்டும்.
ஈழத்தில் இன்னொரு போர் வேண்டும் என்று கூறும் நண்பர்களே… உங்களுக்குப் போர் எவ்வளவு வலியானது என்று தெரியுமா? போர் எவ்வளவு கொடுமையானது என்று தெரியுமா? கண் எதிரே ஷெல் பட்டு இறந்துபோன பெற்றோரின் உடல் களைக்கூடத் தகனம் செய்ய முடியாமல் உயிருக்கு அஞ்சி ஓடிய எம்மவர்களின் வாழ்க்கையைப் பற்றி உங்களுக்கு ஏதாவது தெரியுமா? தாய் இறந்ததைக்கூட அறியாது தாயிடம் முலைப் பால் குடித்த குழந்தையின் அவலத்தை நீங்கள் கண்டதுண்டா? கர்ப்பிணித் தாயின் வயிறு வெடித்து, தாயும் நிறைமாத சிசுவும் அருகிலேயே கணவரும் துடிதுடித்த அவலத்தை நீங்கள் கண்டது உண்டா? கண்டிருந்தால், நீங்கள் ஈழத்தில் மட்டுமல்ல, உலகின் எந்த மூலையில் போர் நடந்தாலும் ஆதரிக்க மாட்டீர்கள்!”
”உங்களால் இந்தப் பேட்டியில் விமர்சிக்கப்படும் நபர்கள் பதிலுக்கு உங்களை ‘விபசாரி’ என விமர்சித்…’
(கேள்வியை முடிக்கும் முன்பே சுளீரெனச் சொல்கிறார்…) ‘நான் எனது உடலைத்தான் விற்கிறேன். அவர்களைப் போல ஆன்மாவை அல்ல!”
(பின்குறிப்பு : பேட்டி அளித்தவரின் நலன் கருதி, அவரது பெயர் மாற்றப்பட்டுள்ளது.)
ம.அருளினியன்
ஓவியங்கள் : ஸ்யாம்
கடந்த வாரம் முகநூல் முழுக்க வினோத் என்ற பத்திரிக்கையாளர், ஈழப்ப்போர் நடந்த சமயத்தில் இந்திய வெளியுறவுத் துறைச் செயலராக இருந்த நிருபமா ராவை எடுத்த பேட்டி தொடர்பாக வாழ்த்துச்செய்திகளும், பாராட்டுச் செய்திகளும் குவிந்திருந்தன. அந்தப்பேட்டியில், நிருபமா ராவிடம், மிகச் சிறப்பாகவே கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. அந்தப் பேட்டி ஈழப்போரில் இந்தியாவின் துரோகத்தை ஓரளவுக்கு வெளிப்படுத்தியது என்றே சொல்ல வேண்டும்.
ஆனால், இந்த வாரம், ஒரு பெண் போராளியின் பேட்டி என்று விகடனில் வந்திருக்கும் பேட்டி, தமிழர்களையும், இன உணர்வாளர்களையும் கொதிப்படைய வைத்திருக்கிறது. இந்தப் பேட்டி, இந்திய வெளியுறவு உளவு நிறுவனமான “ரா” வின் வேலையென்றே நேரடியாகக் குற்றம் சாட்டுகின்றனர் ஈழத் தமிழர்கள். நிருபமா ராவின் பேட்டி ஏற்படுத்திய பாதிப்பை சமன் செய்ய ரா வின் நெருக்குதலால் இந்தப் பேட்டி வெளியாகியுள்ளதோ என்ற அவர்கள் சந்தேகம் நியாயமானதே…
ஆனந்த விகடனின் பேட்டியைக் கண்டித்து, ஈழப் பத்திரிக்கையாளர்கள் ஆற்றியுள்ள எதிர்வினை இது….
அந்த அறையினுள் வெறும் நிசப்தமே எஞ்சியிருந்தது. அவள் அழுதுமுடியட்டுமெனக் காத்திருந்தோம். தற்கொலை முயற்சியொன்றிலிருந்து காப்பாற்றப்பட்ட அவள் மீண்டும் அவ்வாறான முயற்சியொன்றினில் ஈடுபடலாமென்ற அச்சம் வைத்திய நிபுணரிடமிருந்தது. முன்னாள் போராளியான அவளது எதிர்காலம் பற்றிப்பேச ஊடகவியலாளனான என்னையும் அவர் அழைத்திருந்தார். முன்னாள் போராளியான அவள் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுவிட்டாள். ஆனாலும் மீண்டும் மீண்டும் விசாரணைகளுக்கென அழைக்கப்பட்ட அவள் சாதாரண கடைநிலை சிப்பாய் முதல் அதிகாரிகள் ஈறாக பாலியல் துன்புறுத்தல்களுக்கு உட்படுத்தப்பட்டிருந்தாள். அத்தகைய சித்திரவதை கூடமொன்றினில் தற்கொலை செய்யும் நோக்கினில், பிளேடுகளை அவள் நொருக்கி விழுங்கியிருந்தாள். தம்மீதான பழிகளிலிருந்து தப்பிக்க வைத்திய சாலையினில் அவள் அதே படையினராலேயே அனுமதிக்கப்பட்டிருந்தாள்.
மூடப்பட்ட அறையினுள் அவள் கூறிய அவலங்கள் எந்தவொரு பெண்ணும் உலகினில்; எங்குமே சந்தித்திராதவை. யுத்தத்தின் வடுக்களைத் தாங்கி நிற்கும் நூற்றுக்கணக்கான பெண்களுள் அவளுமொருத்தி. மீண்டுமொருமுறை தற்கொலைக்கு முற்படலாமென்ற அச்சத்தினில் அவளை ஆறுதல் படுத்த முற்பட்டோம். இத்தகைய துன்பங்களை பொருட்படுத்த வேண்டாம். வீதியால் பயணிக்கும் போது காலில் பட்டுவிடும் மாட்டுச் சாணமாக இதனைக் கருதி கால்களைக் கழுவிவிட்டு பயணிப்போமென்றேன் நான்;. அவள் சிரித்தவாறு சொன்னாள், “இல்லை அண்ணா, இப்போதைக்கு நான் சாகமாட்டேன். அங்கிருந்து தப்பிக்கவே பிளேடை உடைத்து விழுங்கினேன். அதை விட வேறு வழியிருக்கவில்லை. எனக்கு செய்வதற்கு நிரம்பவுமே கடமைகள் இப்போதைக்கு எஞ்சியிருக்கின்றதென கூறுகையினில் அவளது முகம் விகாரமடைந்திருந்தது.
அந்தப் பெண்மணிக்கு முப்பத்தைந்து முதல் நாற்பது வயதினுள் இருக்கும். வெறிச்சோடிய கண்கள் பல கதைகளைச் சொல்லின. போராளியான கணவன் உயிருடன் இருக்கின்றானா ? இல்லையாவென்பது கூட தெரியாது. தற்போது அவள் ஆறு மாத கர்ப்பிணி. வருடம் முழுவதும் ஊரிலுள்ள பாடசாலை மூடப்பட்டிருக்காதா என கடவுளிடம் கேட்பேன். பாடசாலை திறக்கும் நேரம் எனது பிள்ளைகள் வீட்டை விட்டு அங்கு போய்விடுவார்கள். அதுதான் சாக்கென வீட்டின் முன்னாலுள்ள காவலரணிலுள்ள சிங்கள சிப்பாய்கள் உள்ளே வந்து விடுகின்றார்கள். பிறக்கப் போகும் குழந்தைக்கு எவன் அப்பனென எனக்குத் தெரியாது. அந்த இராணுவ உடையில் எல்லோரும் ஒரே மாதிரியாகவே இருப்பதாகக் கூறும் அத்தாயும் தற்கொலை முயற்சியிலிருந்து மீட்கப்பட்டவரே. தனது பிள்ளைகளை என்ன முகத்துடன் சந்திக்கப்போகின்றேனென அழும் அத்தாய் தற்போது காப்பகமொன்றிற்கு அனுப்பப்பட்டுவிட்டார். இப்போது தாயுமற்றுப்போயுள்ள அந்த பிள்ளைகள் விடுதியொன்றினில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
போரின் பின்னரான, தமிழ்பெண்களது அவலங்கள் பற்றிப் பேசவும், எழுதவும் எங்களிடம் ஆயிரக் கணக்கான கதைகள் இருக்கின்றன. இவர்களுக்கு முறைதவறிப் பிறக்கப்போகும் குழந்தைகளை முன்னிறுத்தி அவர்களை விபச்சாரிகளாக்க உங்களால் முடியும். ஏனெனில் எங்களை முடக்கி விட உங்களில் பலர் பணம் வாங்கிக் கொண்டு வரிசை கட்டி நிற்கின்றீர்கள். எழ எழ முதுகினில் குத்திக்கொண்டேயிருக்கிறீர்கள். ஆனால் உங்களுக்குப் பின்னாலுள்ள இயக்குபவர்கள் பற்றியும் நாம் புரிந்தேயுள்ளோம். எனினும் நாம் இப்போதும் மௌனமாகவே இருப்போம். ஏனெனில் நாம் இப்போது பலவீனமானவர்களாகியிருக்கின்றோம்.
வன்னியில் இறுதிக்கணம் வரை எழுதிக் கொண்டிருந்த, குரல் கொடுத்துக் கொண்டிருந்த ஊடகவியலாளன் அவன். இப்போது உயிருடன் இருக்கின்றானா? இல்லையாவென்பது கூட எவருக்கும் தெரியாது. அவனது குடும்பத்திற்கும் அதே கதைதான். மாதாந்தம் கிடைக்கும் பத்தாயிரம் ரூபா (இந்திய ரூபா வெறும் 3,500) வருமானத்தில் தோளுக்கு மேல் வளர்ந்துவிட்ட மூன்று பிள்ளைகள், கணவனது வயோதிபத் தாய், யுத்தத்தின் போது விமானக் குண்டு வீச்சினில் உயிரிழந்த கணவரது தம்பியின் குடும்பம் அனைத்தையும் அவளே பார்த்துக் கொள்கிறாள். அவள் எவரிடமும் கையேந்தத் தயாராக இல்லை. புலம்பெயர் ஊடக நண்பர் ஒருவரது உதவியின் கீழ், பிள்ளைகளது படிப்பிற்கென உதவி வழங்க தேடிச் சென்ற போது கூட தீர்க்கமாக ஆராய்ந்தே உதவியை ஏற்றுக்கொண்டாள். அண்ணா யாரிடமும் கை நீட்டுவது அவருக்கு பிடிக்காதென்றாள் எட்டிப்பார்க்கும் கண்ணீர்த்துளிகளினூடே. அவளது அந்த வீம்பிற்கு நான் தலை வணங்கினேன்.
வன்னியில் செல்வச் செழிப்போடும், வசதிகளோடும் வாழ்ந்த அவர்களது தேவைகளை முழுமையாக தீர்த்து வைப்பதென்பது கடினமானதொன்றே. தசாப்பதங்களாக உழைத்து சேமித்து வைத்தவற்றை பிடிங்கியெறிந்து விட்டு, நடுத் தெருவில் விடப்பட்ட அவர்களை மீட்பது கடினமானதே. ஆனாலும் புலம்பெயர் தேசத்திலும், தாயகத்திலும், சிலவேளை தமிழகத்திலிருந்தும் கூட சாதாரணமானவர்களிடமிருந்தும், உணர்வாளர்களிடமிருந்தும் உதவி கிடைக்கின்றன. கிடைக்கின்ற உதவிகள் மேடை போட்டு சொல்லப்பட வேண்டியதில்லை. மேடை போட்டு சொல்லுபவர்கள் எங்குமே உதவ முன்வரவில்லை. முப்பது வருட ஆயுதப் போராட்டத்தின் போதும் விழ விழ மீண்டெழுந்ததே எம்வரலாறு. அதுவே ஈழத்தமிழர்களுக்கான குணவியல்பும் கூட. முகத்திற்கு நேரே பிரச்சினைகள் வரும்போதும் பதகளிக்கும் அவர்கள், சிறிது காலத்தினுள்ளாகவே அதனை எதிர்கொள்ளத் தயாராகி விடுவது அவர்களது சிறப்பியல்பு. முள்ளிவாய்க்காலின் பின்னரும் வன்னியின் எழுச்சி ஒன்றும் இலங்கை அரசோ, சர்வதேசமோ கொண்டுவந்ததல்ல. சாதாரண புலம்பெயர் தமிழ் குடும்பங்களது உதவியும், தமது காலில் நிற்க முனைப்பு காட்டி நிற்கும் மக்களதும் கூட்டிணைவே அது.
முன்னாள் பெண் போராளிகள் மற்றும் தளபதிகளது மனைவியரது பாலியல் தொழில் என்னும் கட்டுக்கதை திட்டமிட்டு, இந்திய உளவு அமைப்பான “றோ” வினால் ஏற்கனவே அரங்கேற்றப்பட்ட ஒன்றே. அவர்களது நிழலாக செயற்படும் இந்திய செய்தி முகவர் மையமூடாக இக்கதைகள் முதலினில் அவிழ்த்து விடப்பட்டன. அதை இலங்கை அரசும் அதனது எடுபிடிகளும் பரவலாக உலகமெங்கும் எடுத்துச் சென்றனர். திட்டமிட்ட வகையினில் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள போராளிகளையும், புலம்பெயர் தேசத்து உறவுகளையும், ஆதரவு செயற்பாட்டாளர்களையும் இலக்கு வைத்து அவர்களது உளவரணை சிதைக்க முன்னெடுக்கப்பட்ட முயற்சியே அது.
இத்தகைய பாரம்பரியத்தினில் இப்போது ஆனந்த விகடனும் தனது பங்கிற்கு கதையொன்றை அரங்கேற்றியுள்ளது. தமிழ் இணையங்கள் சிலவற்றில் யாழ் புகையிரத கட்டடப் பகுதியினில் விபச்சாரம் நடப்பதாக வெளிவந்த கதைகளை நம்பியும் ஈழ ஆதரவாளர்கள் மற்றும் கூட்டமைப்பினரையும் இலக்கு வைத்து திட்டமிட்ட வகையினில் தானே கேள்வி பதிலெனும் கட்டுக் கதையை அரங்கேற்றியிருக்கின்றார் அருளினியன் எனும் நபர். ஒரு மூத்த பெண் போராளி எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பிரபாகரனை பேர் சொல்லி அழைக்கமாட்டாரென்பது அனைவருக்கும் தெரியும். பலவேளைகளில் அண்ணையாகவோ, அப்பாவாகவோ தான் அவர் இருந்து வந்துள்ளார்.
எவ்வளவோ துன்பங்களைச் சந்தித்து, உடைந்தழுகின்ற போதும் மீண்டும் மீண்டும் எழுந்து நடக்கவே அவர்கள் பாடுபடுகின்றார்கள். அவர்களை உங்கள் எழுத்துக்களால் விபச்சாரிகளாக்காதீர்களென கெஞ்சிக் கேட்கின்றோம். தடுப்பு முகாம்களிலும், முள்ளிவாய்க்காலிலும் நடந்து முடிந்தவற்றை மறந்து புது வாழ்வொன்றை வாழ அவர்கள் முற்பட்டுள்ளார்கள். அதேவேளை காணாமல் போன தமது கணவரை. பிள்ளைகளை தேடியலையும் அவலமும் அவர்கள் வசமிருக்கின்றது..
கட்டுரையாளனான எனது தனிப்பட்ட கருத்து இதுவென உங்களினில் சிலர் சாயம் பூச முன்னுக்கு வருவீர்களென தெரிந்தேயுள்ளேன். அதானாலேயே யாழ்ப்பாணத்தின் முன்னணி கள செய்தியாளர்கள் சிலரது கட்டுரை தொடர்பான விமர்சனங்களையும் இணைத்தேயிருக்கின்றேன்.
ந.பரமேஸ்வரன் – சிரேஷ்ட ஊடகவியலாளர்
ஈழத்தவர்களது இரத்தத்தையும், கண்ணீரையும் வர்த்தகம் செய்வது இவர்களுக்கு வழக்கமாகப்போய்விட்டது. அவர்கள் பிழைப்பு அவர்களுக்கு. இவர்கள் திருந்துவார்களென நான் நம்பவில்லை.
இ.தயாபரன் – சிரேஷ்ட ஊடகவியலாளர்
தலைவர் – நிமலராஐன் ஞாபகார்த்த அமைப்பு
நாங்கள் தொப்புள் கொடி உறவென அடிக்கடி கூறிக் கொண்டிருக்கின்றோம். ஆனால் ஒட்டு மொத்தப் பெண் போராளிகளையும் கேவலப்படுத்தும் வகையினில் எழுதிக் கிழிக்கிறார்கள். விகடன் இதுவரை அர்ப்பணிப்புடன் செய்த சிலது கூட இக்கட்டுரையால் நாறடிக்கப்பட்டுவிட்டது. பாவம் அவர்களை சமூகம் உங்கள் கட்டுரைகளைப்; பார்த்து தவறாக எடை போட்டுவிட போகிறது. எமது அமைப்பு கூட சத்தமின்றி சத்திர சிகிச்சை தொழில் முயற்சியென பல உதவிகளை வழங்கிக்கொண்டேயிருக்கின்றது.
ஆ.சபேஸ்வரன் – ஊடகத்துறை விரிவுரையாளர்
உதவி ஆசிரியர், யாழ் தினக்குரல்
எங்களுக்காகக் கதைப்பதாகக் கூறிக் கொண்டே நாறடிக்கும் முயற்சி. தமிழக செயற்பாட்டாளர்களையெல்லாம் வம்புக்கு இழுத்து, சோர்ந்து போகச் செய்யும் நன்கு திட்டமிடப்பட்ட சதி முயற்சி. பின்னால்; இருப்பவர்கள் யார் என்று புரிகின்றது.
ந.பொன்ராசா – ஊடகவியலாளர் செயலாளர், வட இலங்கை பத்திரிகையாளர் சங்கம்
நாம் பகிரங்கமாகச் சவால் விடுகின்றோம். அவ்வளவு பகிரங்கமாக அரசியல் கருத்துக்களை முன்வைக்கும், பெண் போராளி விபச்சாரத்துக்குப் போவதாகச் சொல்கிறீர்களே விபரத்தைத் தாருங்கள். உதவுகின்றோம். அவ்வாறில்லாமல் இது பொய்யாகப் புனையப்பட்டதென்றால், அனைத்து பெண் போராளிகளிடமும் விகடன் மன்னிப்பு கோர வேண்டும்.
எம்.நியூட்டன் – ஊடகவியலாளர், வீரகேசரி
தடுப்பு முகாம்களிலும், பின்னரும் பெண் போராளிகள் மீதான துன்புறுத்தல்கள் எமக்கும் தெரியும். ஆனால் விடுவிக்கப்பட்ட பின்னர் அவர்கள் வீம்புடன் வாழ முற்பட்டுள்ளதை நாம் ஊக்குவிக்கின்றோம். அவர்களைச் சமூகம் நிராகரித்துவிட்டதாக கூறுவது பச்சைப் பொய். அவர்களுக்கு உதவினால் பழிவாங்கப்படுவார்களென்ற அச்சம் உண்டு. அவ்வாறு உதவினால் காணாமல் போக கூட வேண்டியிருக்கும். அதையும் மீறி அவர்களைத் தூக்கிவிட கை கொடுத்தவாறு தான் இருக்கின்றார்கள்.
ஈழத்தமிழர்களது இரத்தமும், கண்ணீரும் பெரும்பாலும் தமிழக ஊடகங்களுக்கு சந்தை வாய்ப்பை கூட்டித்தரும் வணிகப் பொருட்களே. இப்போது அவர்களுக்கு விபச்சாரம் விற்பனைப் பொருளாகிறது. எந்தவொரு முன்னாள் போராளியும் விபச்சாரியாக இந்த தேசமும், உறவுகளும் விடப்போவதில்லை. அவ்வாறு அவர்கள் விபச்சாரியானாலும் நீங்கள் செய்யும் ஊடக விபச்சாரத்தினை விட அது ஒன்றும் மோசமானதல்ல.
விகடனில் வெளிவந்த பேட்டி குறித்து, ஆதி என்ற ஈழத்தமிழரின் எதிர்வினை இது…
“நேற்று நான் விடுதலைப் போராளி! இன்று பாலியல் தொழிலாளி!” என்ற தலைப்பில் அருளினியனால் எழுதப்பட்டு விகடனில் வெளியிடப்பட்டிருக்கும் கட்டுரையில் முழுக்க முழுக்க போர்க்குற்ற ஆதார வாக்கு மூலம் இருந்தும் அதை மனித உரிமை அமைப்புகளுக்கோ சம்மந்தப்பட்ட விசாரணைக் குழுக்களுக்கோ அனுப்பாமல் வெறும் வியாபாரத்திற்காக மட்டுமே பயன்படுத்தி விகடன் யாரைக் காப்பாற்ற நினைக்கிறது.
சனல் 4 உட்பட எத்தனையோ ஆங்கில ஊடகங்கள் தமிழ் மக்களுக்காக பல வழிகளிலும் தமிழ் மக்களின் நியாயத்திற்காக உலக அரங்கில் குரல் கொடுக்க விகடனோ ஒரு போராளியை விபச்சாரியாக்கி பணம் சம்பாதிக்கிறது.
விகடன் திருமாவேலனுடனும் அருளினியனுடனும் தொடர்பு கொண்டேன்
உண்மையாகவே இந்த வாக்கு மூலம் எடுக்கப்பட்டிருந்தால் அதை மனித உரிமை அமைப்புகளுக்கு போர்க்குற்ற ஆதாரா வாக்கு மூங்களாக அனுப்புங்கள் அல்லது என்னிடம் தாருங்கள் நான் அனுப்புகிறேன் என்று விகடன் “திருமாவேலனிற்கு” இன்று நண்பகல் முதல் இது வரை ஏராளமான அழைப்புகளை எடுத்துவிட்டேன்.
முதல் தடவை எனது அழைப்பை ஏற்ற அவர் “நான் ஆதி பேசுகிறேன்…. அருளினியனால் எழுதப்பட்ட கட்டுரை சம்மந்தமாக..” என்று உரையாடலை தொடரும் பொழுது “ஹலோ..ஹலோ… ” என்ற படி அழைப்பை துண்டித்துவிட்டார். அதன் பிறகு எல்லா அழைப்புகளையும் துண்டித்துக் கொண்டே இருக்கிறார்.
தவிர அருளினியனுக்கு அழைப்பை எடுத்து கேட்டேன்.. அவர் தான் விகடனின் சம்பளத்திற்கு வேலை செய்யும் ஒரு வேலையாள் மட்டுமே என்று சொல்லியிருந்தார்.
“உங்களிடம் போர்க்குற்ற ஆதாரம் இருந்தும் அதை வெறும் சம்பளத்திற்காகவா மறைக்கிறீர்கள்” என்று கேட்டேன்… தன்னிடம் எதுவும் இல்லை நீங்கள் விகடன் அலுவலகத்திலேயே கேளுங்கள் என்று சொன்னார்.
ஆக பேட்டி உண்மை என்றால் சிறிலங்கா அரை காப்பாற்றுவதற்காகவா விகடன் போர்க்குற்ற ஆதாராங்களை சம்மந்தப்பட்ட அமைப்புகளுக்கு கொடுக்காமல் மறைக்கிறது??? சிறிலங்கா அமச்சர் ஒருவரும் பெண்கள் மீதான வன்முறையில் நேரடியாக ஈடுபட்டார் என்று பாதிக்கபட்ட பெண் கொடுத்திருக்கும் வாக்கு மூலத்தை விகடன் என்ன நோக்கத்திற்காக மறைக்கிறது??
அல்லது வியாபார நோக்கத்திற்காக மட்டுமே இதை எழுதியிருக்கிறார்கள்.
தவிர..
சுதந்திர மற்றும் ஆனந்தபுரச் சமர்களில் தனது பிள்ளைகளை தன் தாய் தகப்பனிடம் கொடுத்துவிட்டு களமாடியதாக சொல்லியிருக்கும் பெண் 3 வருடங்கள் கழித்து வந்து பிள்ளைக்கு பாலூட்டுவதற்காக பாலற்ற முலையை கொடுத்தாள் என்று அருளினியன் எழுதியிருப்பது அருளினியனின் கற்பனை வளத்தையும் விகடனின் காம வெறியையும் காட்டுகிறது.
அது போக யோ.கர்ணனை முள்ளிவாய்க்கால் வரை போராடிய முன்னாள் போராளி என்று எழுதியவர்தான் அருளினியன். ஆனால் யோ. கர்ணன் ஏற்கனவே விடுதலைப்புலிகள் அமைப்பின் தொலைக்காட்சி பிரில் வேலை செய்து கொண்டிருக்கும் பொழுது பொம்பிளைப் பிள்ளைகளோடு அநாகரிகமாக நடக்க முயற்சித்தார் என்ற குற்றச்சாட்டில் பணி நீக்கம் செய்யப்ட்டவர் என்பது ஊரறிந்த விடையம். இது புதுசாக முழைத்திருக்கும் அருளினியனுக்கோ விகடனுக்கோ தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
அதுபோக தமிழ்நாட்டு ஊடகங்களிற்கு ஈழத்தமிழர் பிரச்சினை என்பது வெறும் வியாபார நோக்கமே. தனது சொந்த சம்பள உயர்விற்காக, வலிகளை தாங்கி ஊமைகளாக போயிருக்கும் போராளிகளை கொச்சைப்படுத்தவும்.. தமிழீழ பெண்களை இழிவுபடுத்தவும் அருளினியன் ஆரம்பித்திருப்பது ஆச்சரியப்படுவதற்கில்லை.
வாழ்நாளில் போர்களையோ அல்லது களம் நின்ற போராளிகளையோ சந்தித்திராத அருளினியனுக்கு எல்லாமே சினிமாவாகதான் தெரியும்.
போராளிகள் வறுமையில் இருக்கிறார்கள் ஆனால் யாரும் பிச்சையெடுக்கவில்லை. வாழ்வை எதிர்கொள்ளும் பலம் அவர்களுக்குள் ஊட்டப்பட்டிருக்கிறது!!!!
பேட்டி உண்மையென்றால்!!
தமிழினத்தின் மீது நடாத்தப்பட்ட மிகக் கொடுமையான இன அழிப்பு போர்க் குற்றச்சாட்டுகள் பற்றி ஆதாரங்களை சேகரித்து ஆனால் தனது வேலை மற்றும் சம்பளத்தை தக்க வைத்து கொள்ளவதற்காக, அதை பகிரங்கப்படுத்தி நியாம் கேட்க வக்கில்லாத அருளினியனும் ஆதாரங்களை ஒளித்து வைத்து சிங்கள அரசிற்கும் இந்திய அரசிற்கும் சலியூட் அடிக்கும் விகடனும் தமிழீழ போர் பற்றியோ தமிழ் மக்களின் விடுதலை பற்றியோ கதைக்க அருகதையற்றவர்கள்.
வெறும் பணத்திற்காக சொந்த இன அழிப்பு ஆதாரத்தையே மறைக்கும் இவர்கள் இனிமேல் நடைப் பிணங்கள் தான்…
உண்மையிலேயே இனப் பற்று இருந்தால்… ஒடுக்கப்படும் இனத்திற்கான ஊடக நேர்மை இருந்தால் ஆதாரங்களை வெளிப்படுத்தி நியாயம் கேட்கட்டும்.. இல்லையேல் எம்மிடம் தரட்டும் அதை நாங்கள் சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்த்து நியாயம் கேட்போம்.
ஆதி
02-11-2012