என்னடா இது…. ஜாபர் சேட் ஒரு ஐபிஎஸ் அதிகாரி என்பது தெரியும். உளவுத்துறையின் தலைவர் என்பது தெரியும். கருணாநிதியின் கைக்கூலி என்பது தெரியும். கோபாலபுரத்தின் கோயபல்ஸ் என்பது தெரியும், இது என்னடா புதிதாக…. ஆங்கிலப் பேராசிரியர் பட்டம் என்று உங்களுக்கெல்லாம் ஆச்சர்யமாக இருக்கும்.
ஒரு நபருக்கு ஆங்கிலத்தில் புரியாத ஒரு விஷயத்தை தமிழில் விளக்கி அவருக்கு புரிய வைக்கும் நபரை ஆங்கிலப் பேராசிரியர் என்று அழைத்தால் என்ன தவறு ?
அப்படி விளக்கிப் புரிய வைத்ததால் தான் ஜாபர் ஆங்கிலப் பேராசிரியர் என்று அழைக்கப் படுகிறார். இவர் மட்டும் அல்ல, ஆக்ஸ்போர்ட்டு பல்கலைகழகத்திலே, ஆங்கிலத்தில் முனைவர் பட்டம் பெற்ற இன்னொருவரும் ஆங்கிலத்தில் உள்ளதை தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார். அவர் யாரென்றால் மதுரை மாநகரிலே உள்ள “பொட்டு சுரேஷ்“.
இருவரும் யாருக்கு ஆங்கிலத்தில் உள்ளதை தமிழில் மொழி பெயர்த்தார்கள் தெரியுமா ? அஞ்சா நெஞ்சன் அழகிரிக்குத் தான். அழகிரிக்கு ஆங்கிலம் தெரியாது என்பது டெல்லியில் உள்ள பாராளுமன்றத்தை பாதுகாத்துக் கொண்டிருக்கும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை காவலருக்குக் கூட தெரியும். ஆனால் இந்த அளவுக்கு மங்குணியாக இருப்பார் என்று நினைக்கவேயில்லை.
இந்த சம்பவங்கள் அனைத்தும், “எங்கேயோ கேட்ட குரல்“ பூங்கோதை உரையாடலை ஒட்டி நடைபெற்றவை. பூங்கோதை அழகிரியை நம்பவைத்து கழுத்தறுக்கும் அரசியல்வாதி என்று சொன்னதை ஒட்டி, முதலில் அழகிரி கோபப் பட்டிருக்கிறார்.
ஆனால் உடனடியாக களத்தில் குதித்த பேராசிரியர் ஜாபர் சேட், அழகிரியை தொடர்பு கொண்டு பூங்கோதை உங்களைப் பற்றிப் பேசவில்லை, டெல்லி அரசியல்வாதிகளைத் தான் அவ்வாறு சொல்லியிருக்கிறார் என்று கூறியிருக்கிறார். உடனே ஆக்ஸ்போர்டு பேராசிரியர் பொட்டு சுரேஷ் “ஆமான்ணே… அந்த அம்மா உங்களச் சொல்லலண்ணே“ என்று ஒத்து ஊதியிருக்கிறார்.
இந்த விவகாரத்தில் உண்மை என்ன என்று சவுக்கு வாசகர்களுக்கு நன்கு தெரியும். இருப்பினும், அந்த உரையாடலில் முக்கிய பகுதிகள் மறுபிரசுரம் செய்யப் படுகின்றன.
நீரா எனக்குத் தெரிந்த வரை, அவர் அழகிரியோடு நட்பாக பழகவேண்டும் என்று நினைக்கிறேன். அவர் இதைச் செய்வதற்கு நீங்கள் அவரை ஊக்கப் படுத்த வேண்டும். ஏனென்றால், அழகிரியால் டெல்லியில் ரொம்ப நாளைக்கு தாக்குப் பிடிக்க முடியும் என்று தோன்றவில்லை.
பூங்கோதை அப்படியா நினைக்கிறீர்கள் ?
நீரா அவருக்கு அதற்கான தகுதிகள் இல்லையென்றே நினைக்கிறேன்.
பூங்கோதை. இல்லை. இல்லை. நீங்கள் அவரை குறைத்து மதிப்பிடுகிறீர்கள்.
நீரா யோசித்துப் பாருங்களேன்….
பூங்கோதை அவர்களெல்லாம் நம்பவைத்து கழுத்தை அறுக்கக் கூடிய அரசியல்வாதிகள்.
நீரா எனக்குப் புரிகிறது. புரிகிறது. அதனால்தான் அவர் தமிழ்நாட்டில் இருப்பதைத் தானே விரும்புவார். எதற்கு இங்கே இருக்க வேண்டும் ?
பூங்கோதை அவருக்கு ஏற்கனவே மதுரையை விட்டு இருக்க பிடிக்கவில்லை. நான் திரும்பிப் போக வேண்டும், திரும்பிப் போக வேண்டும் என்றுதான் கூறிக் கொண்டு இருக்கிறார்.
இதில் பூங்கோதை அழகிரியைச் சொல்லுகிறாரா டெல்லி அரசியல்வாதிகளை சொல்லுகிறாரா என்பதில் என்ன சந்தேகம் ?
இந்த பொட்டு சுரேஷ் இவ்வாறு ஜாபருக்கு ஒத்து ஊதுவதற்கான காரணம் என்ன தெரியுமா ?
டெல்லி எருமை போன்ற ஜெயஸ்ரீ என்ற பெண் எஸ்பி ஒருவர் மதுரையில் உள்ளார். அவர் உணவுக் கடத்தல் பிரிவு எஸ்.பி யாக இருந்த போது, லஞ்ச ஒழிப்புத் துறை நடத்திய சோதனையின் போது மாமூல் வசூல் செய்து மாட்டிக் கொண்டார். இவருக்கு எதிராக ஏராளமான ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத் துறை கைப்பற்றியது. இந்த வழக்கை இசக்கி ஆனந்தன் என்ற ஒரு நேர்மையான அதிகாரி விசாரித்தார்.
பொட்டு சுரேஷ் ஜாபர் சேட்டை அணுகி, ஜெயஸ்ரீ மீதான வழக்கை ஊத்தி மூட உதவுமாறு கேட்க, அதன் படியே, இசக்கி ஆனந்தன் லஞ்ச ஒழிப்புத் துறையை விட்டு மாற்றப் பட்டார். அழகிரியே நேரடியாக இதில் தலையிட்டதாகவும் கூறுகிறார்கள்.
இந்த உதவியை செய்து கொடுத்த பிறகு பொட்டு சுரேஷ் ஏறக்குறைய ஜாபரின் அடிமையாகவே மாறி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதற்காக பொட்டு சுரேஷ் ஜெயஸ்ரீக்காக இத்தனை முயற்சிகள் எடுக்க வேண்டும் என்பது பதிவில் எழுத முடியாத ரகசியம். (ஆனாலும் நீங்கள் கண்டு பிடித்து விட மாட்டீர்களா என்ன ?)
அவ்வப்போது பொட்டு சுரேஷ் அழகிரியிடம், ஜாபரு ரொம்ப நல்லவரு, வல்லவரு, என்று எடுத்துக் கூறினார்.
அழகிரியும் தற்போது மாறன் சகோதரர்களுடன் அதிக நெருக்கம் பாராட்டுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மதுரையில் ராயல் கேபிள் விஷனும், சென்னையில் ஜாக் கம்யூனிக்கேஷன் என்ற நிறுவனமும் அழகிரியால் துவக்கப் பட்டதை அறிவீர்கள். இந்த இரண்டு நிறுவனங்களும் வளர்ந்தால், சுமங்கலி கேபிள் விஷனுக்கு மிகுந்த ஆபத்து என்பதை உணர்ந்த கேடி சகோதரர்கள், உடனடியாக கருணாநிதி குடும்பத்தின் நீரா ராடியாவான செல்வியை அணுகுகிறார்கள்.
செல்வி தரகராக இருந்து செயல்பட்டு, அழகிரிக்கு 1200 கோடி ரூபாய் பெற்றுத் தந்ததாகவும், இதையடுத்து, அழகிரி, கேடி சகோதரர்களோடு மிகுந்த நட்பாகி விட்டதாகவும் கூறுகிறார்கள். இதை ஒட்டியே, தயாநிதி மாறனின் பிறந்த நாளுக்கு, அழகிரி நேரில் வந்து வாழ்த்து சொன்னார் என்றும் கூறுகிறார்கள்.
இப்படி ஜாபர் சேட்டும், பொட்டு சுரேஷும் சேர்ந்து அழகிரிக்கு ஆங்கிலப் பாடம் எடுத்ததால், அழகிரி பூங்கோதை மீது கோபப் படவில்லை.
இரண்டு நாட்களுக்கு முன், கருணாநிதி ஏலகிரியில் ஓய்வு எடுக்க சென்ற போது, ஜாபரை தொலைபேசியில் அழைத்த அழகிரி, “அப்பா ஏலகிரி போறாராமே… ? அந்த அம்மா பேசுனதுக்கு நானே கோபப் படல… இவரு எதுக்கு கோவிச்சுகிட்டு ஏலகிரி போறாரு ? “ என்று கேட்டுள்ளார்.
இப்போது சொல்லுங்கள், ஜாபர் சேட் ஆங்கிலப் பேராசிரியர் தானே ?