முதல் பாகம் நாடகத்தைப் படிக்காதவர்களுக்கு, நாடகத்தின் கதை முழுமையாகத் தெரியாது. ஆகையால் இரண்டாம் பாகத்தைப் படிப்பதற்கு முன்னால், முதல் பாகத்தைப் படித்து விடவும்.
கடந்த பாகத்தின் இறுதியில் சொல்லியிருந்தது போலவே, இரண்டாம் பாகம் கொடைக்கானலில். முன்னதாகவே பிரயாணம் செய்யப்போவது தெரிந்தும் தேவையான ஏற்பாடுகளை செய்யாமல் விட்டதால், கடைசி நேரத்தில் வழக்கறிஞர் புகழேந்தி, ராதாகிருஷ்ணன், மற்றும் வழக்கறிஞர் மோகன்குமார் ஆகியோர் ஒரு டாடா இன்டிக்கா காரைப் பிடித்து கொடைக்கானல் செல்ல வேண்டியதாயிற்று. இரவு சென்னையிலிருந்து கிளம்பி, மறுநாள் காலை 6 மணிக்கு வத்தலகுண்டை அடைந்தோம். வத்தலகுண்டிலிருந்து கொடைக்கானல் செல்ல இரண்டு மணி நேரம் ஆகும் என்பதால், 8 மணிக்கெல்லாம் கொடைக்கானல் சென்று, தயாராகி, 10.30 மணிக்கெல்லாம் விடுதலைப் புலிகள் வழக்கு விசாரிக்கப்படும் தீர்ப்பாயத்திற்கு செல்லலாம் என்று திட்டம். மலை ஏறத் தொடங்கியதுமே, ட்ரைவரின் வாகன ஓட்டும் ஸ்டைலில் வித்யாசம் தெரிந்தது. அவர் வலதுசாரி சிந்தனை உள்ளவர் போலிருக்கிறது. வலதுபுறமாகவே வண்டியை ஓட்டிச் சென்றார். முழுக்க வலதுபுறம் சென்றதால், எதிரே பைக் வருவதற்கு கூட வழி இல்லை. எதிரே மோட்டார் பைக்கில் வந்த ஒருவர் திட்டிக் கொண்டே சென்றார். மலை ஏறிக் கொண்டிருந்ததால் ட்ரைவரிடம் பார்த்து ஓட்டுங்கள் என்று சொன்னால், அவர் கவனம் சிதையுமோ என்று எதுவும் சொல்லவில்லை. இரண்டு மூன்று வளைவுகள் கடந்ததும், ஒரு ப்ளைன்ட் திருப்பத்தில் அதே போல வலது ஓரமாகச் சென்றார். எதிரே மலையிலிருந்து கீழே இறங்கி வந்த கார், இயல்பாக இடது ஓரமாக வந்தது. சவுக்கு முன் பக்கம் அமர்ந்திருந்ததால் அந்தக் கார் வருவதைப் பார்க்க முடிந்தது. அந்தக் கார் வந்ததை கிரகிக்கும் முன்பாக பலத்த சத்தத்தோடு டமாரென்று நேருக்கு நேராக இரண்டு கார்களும் மோதின. மோதி நின்றதும் காலில் பலத்த அடி.. போச்சு.. ரெண்டு வீலும் பெண்டு என்று காலை அசைத்துப் பார்த்தால் அசைக்க முடிந்தது. தலை வேகமாகச் சென்று முன் பக்கம் உள்ள கண்ணாடியில் மோதியதில் கண்ணாடி உடைந்தது. நெற்றியில் அம்மி கொத்தியது போல கண்ணாடித் துகள்கள் குத்தியிருந்தன. தலையில் மோதி கண்ணாடி உடைந்திருந்ததைப் பார்த்த போது, ஆறாம் வகுப்பு கணக்கு வாத்தியார் மரமண்டை என்று திட்டியது நினைவுக்கு வந்தது.
நேரம் ஸ்தம்பித்தது போலிருந்தது. என்ன நடந்தது என்று புரிந்து சுதாரிப்பதற்குள், ராதாகிருஷ்ணன் “புகழேந்தி… என்னன்னு பாருங்க” என்றார். திரும்பிப் பார்த்தால், ராதாகிருஷ்ணனின் வலது நெற்றியில் பெரிய காயம். காரின் ஜன்னல் விளிம்பில் இடித்து, நெற்றியில் எலும்பு தெரிந்தது. இதற்குள், எதிரே இருந்த காரில் இருந்து இளைஞர்கள் துள்ளிக் கொண்டு இறங்கினார்கள். அவர்கள் கோபப்பட்டதில் நியாயம் இருக்கிறது. ராதாகிருஷ்ணனுக்கு ஏற்பட்ட காயத்தைப் பார்த்ததும் ஒரு நிமிடம் என்ன செய்வது என்றே புரியவில்லை. சட்டென்று புகழேந்தி ஒரு துண்டை எடுத்து ரத்தப்போக்கை நிறுத்த ராதாகிருஷ்ணனின் தலையில் கட்டினார். மலை மேல் ஏறும் கார் ஒன்று வந்தது. அவரிடம் கை காட்டி நிறுத்தி விபரத்தைச் சொன்னதும், உடனே வண்டியில் ஏறுங்கள் என்றார். கூட வந்த மோகன்குமார் வழக்கறிஞரை வண்டியோடு நிறுத்தி விட்டு, அந்தக் காரில் சவுக்கு, புகழேந்தி மற்றும் ராதாகிருஷ்ணனை அழைத்துக் கொண்டு புறப்பபட்டோம்
மலை ஏறுவதற்கு இன்னும் ஒரு மணி நேரம் ஆகும். வழியில் பண்ணைக்காடு என்ற இடத்தில் ஒரு மருத்துவமனை இருக்கிறது அங்கே செல்லலாம் என்றார். அந்த இடத்துக்குச் சென்றதும், அது ஒரு சிறிய தனியார் மருத்துவமனை இருந்தது. அந்த டாக்டர், காயம் பெரிதாக இருக்கிறது. நான் முதலுதவி செய்கிறேன். ரத்தப்போக்கை நிறுத்துகிறேன். கொடைக்கானலில் பெரிய மருத்துவமனை இருக்கிறது. அங்கே சென்று பார்த்துக் கொள்ளுங்கள் என்றார். காயத்தை சுத்தம் செய்து, பிளந்திருந்த இடத்தை ஒன்றாகச் சேர்த்து வைத்து, இறுக்கமாக பேன்டேஜ் போட்டுக் கட்டி, இனி ரத்தப் போக்கு இருக்காது என்று அனுப்பி வைத்தார். அவ்வளவு சிறப்பாக வைத்தியம் பார்த்து எவ்வளவு ஆனது என்றால் வெறும் 70 ரூபாய் என்றார். அவருக்கு நன்றி சொல்லி விட்டு அந்தக் காரில் அழைத்து வந்த நண்பருடனே கிளம்பி, கொடைக்கானல் சென்றோம். அதற்குள் கொடைக்கானலில் இருந்த மற்றொரு நண்பரை அழைத்து, ஒரு கார் ஏற்பாடு செய்து, விபத்து நடந்த இடத்தில் இருந்து மற்றொரு வழக்கறிஞரையும், ஆவணங்களையும் எடுத்துக் கொண்டு மருத்துவமனைக்கு வரச்சொல்லி விட்டு, கொடைக்கானலில் இருந்த கேஎம்எச்எஸ் மருத்துவமனைக்கு சென்றோம்.
அங்கே பணியில் இருந்த மருத்துவர் ஒரு வட இந்தியர். ஆக்சிடென்டா… போலீஸ் கேசா.. என்றார். சட்டென்று அந்த மருத்துவரின் இடது தலைக்கு மேல் சுவற்றில் கையை வைத்து, ஐயரை அழைக்கலாம் என்றால்… ஐயர் யாரும் இல்லை. புகழேந்திதான் இருந்தார். புகழேந்தி… டாக்டர் பேர் என்னன்னு கேளுங்க..
“ஆப்கா நாம் க்யா ஹை”
டாக்டர் வீடு எங்கன்னு கேளுங்க…
“ஆப் கா கர் கிதர் ஹை”.
“டாக்டருக்கு பசங்க இருக்கா எத்தனை பசங்கன்னு கேளுங்க…
“ஆப்கோ கித்னே பால் பச்சே ஹை“
“அவரு பசங்க நல்லா இருக்கணும்னா நம்ப வக்கீல் நல்லா இருக்கணும்னு சொல்லுங்க..“
“அகர் ஆப்கா பச்சோன்.. “ என்று நாயகன் டயலாக்கெல்லாம் பேச வேண்டிய அவசியமே இல்லை. நீங்கள் இன்ஷுரன்ஸ் க்ளெய்ம் பண்ணுவதாக இருந்தால் அரசு மருத்துவமனைக்குச் செல்லுங்கள் என்றார். நாங்கள் இன்ஷுரன்ஸ் எதுவும் க்ளெய்ம் பண்ணுவதாக இல்லை. தயவு செய்து சிசிக்சை செய்யுங்கள் என்று சொன்னதும், உடனடியாக சிசிக்சையை தொடங்கினார். அற்புதமாக சிசிக்சை அளித்தார்கள். லோக்கல் அனஸ்தீஷியா கொடுத்துவிட்டு, மொத்தம் 20 தையல். தையல் போட்டு முடிந்ததும், ஏதாவது சாப்பிடுங்கள் ஊசி போட வேண்டும் என்றார்கள்.
மருத்துவர்கள் கடவுளுக்கு நிகரானவர்கள் என்ற சவுக்கின் கருத்து மீண்டும் ஒரு முறை உறுதிப்படுத்தப்பட்டது. இரண்டு மருத்துவர்களுமே அற்புதமாக சிகிச்சை அளித்தனர்.
சிகிச்சை முடிந்ததும், வழக்கறிஞர் ராதாகிருஷ்ணனிடம், “சார், ரூமுக்குப் போய் சாப்பிட்டு விட்டு வந்து ஊசி போட்டுக் கொள்ளலாமா“ என்று கேட்டால் நேராக தீர்ப்பாயத்துக்குச் செல்லாம். ரூமுக்கெல்லாம் போக வேண்டியதில்லை என்றார். எங்களுக்கெல்லாம் ஒரே அதிர்ச்சி. சார். பெரிய காயம்… ஓய்வெடுத்துக் கொள்ளலாம்.. நாளையும் தீர்ப்பாயம் இருக்கிறது என்று சொன்னதற்கு, முடியவே முடியாது… நேராகத் தீர்ப்பாயத்திற்குச் செல்லலாம் ஆவணங்களை எடுத்து வர ஏற்பாடு செய்யுங்கள் என்றார்..
விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீது தடையை நீக்க வேண்டும் என்று உறுதியோடு போராடுவதற்கு ராதாகிருஷ்ணன், புலிகளின் பெயரால் வசூல் வேட்டை செய்பவர் அல்ல. புலிகளின் ஆதரவாளர்களாகக் காட்டிக் கொண்டால், தமிழ் தேசியக் கட்சிகளிடமும், புலம் பெயர்ந்த தமிழர்களிடமும் ஆதரவு கிடைக்கும் என்று ஆசைப்படுபவர் அல்ல. புலிகளின் பெயரை வைத்து வியாபாரம் செய்பவர் அல்ல. அவர் ஒரு சிறந்த வழக்கறிஞர். தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் கோரிக்கையை ஏற்று, புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீக்க வேண்டும் என்பதற்காக கடந்த இரண்டு ஆண்டுகளாக வழக்காடிக் கொண்டிருக்கிறார். ஆனால் அவரின் சின்சியாரிட்டி மற்றும் ஆர்வம் வியக்க வைத்தது. அவ்வளவு பெரிய காயம் பட்டதற்கான துளி அறிகுறியும் இல்லாமல் நேராக தீர்ப்பாயத்திற்குச் செல்ல வேண்டும் என்றார்.
அதற்குள் ஆவணங்களையும் உடைகளையும் எடுத்துக் கொண்டு, அந்த மற்றொரு கார் வந்தது. சட்டென்று பல் விளக்கி விட்டு பக்கத்தில் இருந்த டீக்கடையில் இரண்டு வடையும் டீயும் வாங்கிச் சாப்பிட்டு விட்டு ஊசி போட்டுக் கொண்டு வாருங்கள் போவோம் என்றார். அதற்குள் மணி 11 ஆகி விட்டது. தீர்ப்பாயத்தின் விசாரணை தொடங்கியிருக்கும். செல்லும் வழியில் நெற்றிக் காயத்தை மறைக்க ஒரு தொப்பி ஒன்று வாங்குங்கள் என்றார். தொப்பியை வாங்கிக் கொண்டு கொடைக்கானல், “கோடை கிளப்” என்ற இடத்தில் நடக்கும் விசாரணைக்கு உள்ளே நுழைந்தோம்.
அந்தக் கோடை கிளப், வெள்ளைக்காரன் காலத்தில் அவர்களுக்காக கட்டப்பட்ட சொகுசு விடுதி. வீடு, வாசல், மனைவி, குடும்பம் இறுதியாக தங்கள் உயிரையே தியாகம் செய்யும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீடிப்பதா வேண்டாமா என்ற விசாரணை, அந்த சொகுசு விடுதியில் நடைபெற்றது அந்த விசாரணையின் போலித்தனத்தை உறுதி செய்வதாக இருந்தது.
அந்த கிளப்பில் நுழைந்தபோது வைகோ, சாட்சி சொல்லிய க்யூ பிரிவு ஆய்வாளர்கள் இருவரை குறுக்கு விசாரணை செய்து கொண்டிருந்தார். வைகோவின் குறுக்கு விசாரணை முடிந்ததும் ராதாகிருஷ்ணன் எழுந்து “ஐ யம் அப்பியரிங் ஃபார் எல்.டி.டி.இ” என்றார்.
நீதிபதியின் முகத்தில் அதிர்ச்சி. மத்திய அரசின் வழக்கறிஞர் சாந்திஹோக்கின் முகத்தில் அதிர்ச்சி. யார் அந்த மனுதாரர் என்றார் நீதிபதி. இவர் ஸ்விட்சர்லாந்து நாட்டின் குடிமகன். விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவின் சுவிட்சர்லாந்து நாட்டின் துணைத் தலைவர். யாரோ ஒரு நபர் திடீரென்று வந்து நான் விடுதலைப்புலி என்றால் எப்படி ஒப்புக் கொள்வது… என்றார் நீதிபதி.
அவர் ஒரு பிரமாண வாக்குமூலத்தை தாக்கல் செய்துள்ளார். அந்த வாக்குமூலத்தில் நான் விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவன் என்று கூறியுள்ளார். அதை தீர்ப்பாயம் ஏன் நம்ப மறுக்க வேண்டும் என்றார் ராதாகிருஷ்ணன்.
இப்படி ஒரு நபர் உண்மையிலேயே இருக்கிறாரா என்பது தீர்ப்பாயத்துக்கு எப்படித் தெரியும் என்றார் நீதிபதி. பயங்கரவாத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் படி, தடை செய்யப்பட்ட ஒரு இயக்கத்தின் சார்பாக ஒரு உறுப்பினரோ, அல்லது நிர்வாகியோ வரலாம். தற்போது உறுப்பினர் என்று ஒருவர் வந்திருக்கிறார்… அவரையும் சந்தேகப்பட்டு, அவர் உறுப்பினர் அல்ல என்றால் யாரையுமே அனுமதிக்காமல் தீர்ப்பாயம் விசாரணையை முடிக்க உத்தேசித்துள்ளதா ? என்றார் ராதாகிருஷ்ணன்.
இது தொடர்பாக நான் நாளை உத்தரவு பிறப்பிக்கிறேன். இன்று விசாரணை தொடரட்டும் என்றார். மேலும் ஒரு ஆய்வாளரின் சாட்சியத்தை வைகோ குறுக்கு விசாரணை செய்தார்.
அன்று மாலை அறைக்குச் சென்று தங்கியதும், இரவு 12 மணிக்கு பதில் மனுவை அளித்தார்கள்.
மறுநாள் விசாரணை தொடங்கியது.
விடுதலைப்புலிகள் அமைப்பு ஒழிக்கப்பட்டு விட்டது என்று இலங்கை அரசே அறிவித்து விட்டது. அப்படி இருக்கையில் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர் என்று சொல்லிக் கொண்டு ஒருவர் வருவதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும் என்றார் நீதிபதி.
இதுதான் விவாதத்தின் மையப்பொருள். இல்லாத ஒரு அமைப்புக்கு மத்திய அரசு எதற்காக தடை விதிக்க வேண்டும்.. ? அப்படி தடை விதித்திருக்கையில், நான் அந்த இயக்கத்தின் உறுப்பினர் என்று ஒருவர் இத்தீர்ப்பாயத்தின் முன் வந்தால், அந்த நபர் சொல்வதை தீர்ப்பாயம் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும் என்றார்.
சுவிட்சர்லாந்து நாட்டில் கையெழுத்திட்ட வக்காலத்து எப்படி இந்தியாவில் செல்லுபடியாகும்… என்றார் நீதிபதி..
இந்திய வழக்கறிஞர்கள் சட்டத்தின்படி, நான் ஒரு தகுதிவாய்ந்த வழக்கறிஞர். உலகில் எந்த மூலையில் இருப்பவர் என்னை வழக்கறிஞராக நியமித்தாலும் வாதாடுவதற்கு எனக்கு உரிமை உண்டு. அந்த உரிமையை யாராலும் தடுக்க முடியாது என்றார். இவரை விசாரணையில் பங்கு கொள்ள அனுமதித்தால் தீர்ப்பாயத்தின் அறிக்கை வெளியிட தாமதமாகும். அதனால் இந்த நேரத்தில் இந்த மனுவை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும் என்றார் நீதிபதி.
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் படி ஒரு அமைப்பை தடை செய்வது இரண்டு வகைப்படும். ஒன்று தீர்ப்பாயம் அந்தத் தடை சரியானதே என்று தீர்ப்பளித்த பிறகு அமலுக்கு வரும் தடை. மற்றொரு தடை, அறிவிக்கை வெளியான உடனேயே அமலுக்கு வரும் தடை. விடுதலைப்புலிகள் மீதான தடை, வெளியான மறு நிமிடமே அமலுக்கு வந்து விட்டது. தற்போது இந்தத் தீர்ப்பாயம் போஸ்ட் மார்டம் செய்யும் வேலையைச் செய்து கொண்டிருக்கிறது. ஆகையால் ஆறு மாதங்கள் என்ற கால அவகாசத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை என்றார் ராதாகிருஷ்ணன்.
20 ஆண்டுகளாக ஒரு இயக்கத்தின் மீது தடை உள்ளது. அந்த இயக்கத்தின் இருபது ஆண்டு கால வரலாற்றில், முதன் முறையாக அந்த இயக்கத்தைச் சேர்ந்த ஒருவர் அந்த இயக்கத்தின் மீதான தடையை நீக்க வேண்டும் என்று வாதாடுவதற்காக வருகிறார், அவரையும் இத்தீர்ப்பாயம் அனுமதிக்க முடியாது என்று கூறுவது வருந்ததத்தக்கது என்றார்.
உடனே நீதிபதி, இந்த நபர் மீது எங்களுக்கு சந்தேகம் இருக்கிறது… அவர் நேரில் வருவாரா என்றார்…
விடுதலைப்புலிகள் இயக்கம் தற்போது தடைசெய்யப்பட்ட இயக்கம். அந்த இயக்கத்தின் உறுப்பினர் என்று சொல்லிக்கொண்டு வருபவர், விமான நிலையத்திலேயே கைது செய்யப்படுவார். அவருக்கு உரிய பாதுகாப்பை இத்தீர்ப்பாயம் வழங்குமென்றால், இரண்டு நாட்களில் அவர் இத்தீர்ப்பாயத்தின் முன் ஆஜராவார் என்றார். அதற்குப் பிறகு நீதிபதி, அந்த விஷயம் பற்றிப் பேசவேயில்லை.
இவர் விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்தான் என்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது ? ஏதாவது ஒரு கடிதப்போக்குவரத்து, ஒரு உத்தரவு என்று ஏதாவது ஒரு ஆதாரத்தை சமர்ப்பிப்பீர்களா ? அவர் சுவிட்சர்லாந்தின் அரசியல் பிரிவின் தலைவர் என்று தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு ஏதாவது ஆதாரம் உள்ளதா என்று கேட்டார் நீதிபதி.
விடுதலைப் புலிகள் இயக்கம் என்பது ஒரு அமைப்பு. அது ஒரு கூட்டுறவு சங்கமோ அல்லது கார்ப்பரேட் நிறுவனமோ இல்லை. புலிகள் அமைப்பு ஒரு போராளி அமைப்பு. கடிதப்போக்குவரத்தில் ஈடுபடுவது போராளி அமைப்பின் வேலை அல்ல. கூட்டுறவு சங்கத்தைப் போல தேர்தல் நடத்திக் கொண்டிருப்பதும் புலிகள் அமைப்பின் வழக்கமும் அல்ல. மத்திய அரசின் நிலைப்பாட்டின் படியே, புலிகள் அமைப்பு ஒரு தீவிரவாத இயக்கம். உலகில் எந்தத் தீவிரவாத இயக்கம் கடிதம் எழுதிக்கொண்டிருக்கிறது ? புலிகள் அமைப்பு இலங்கையில் இல்லை என்பதை இலங்கை அரசு அறிவித்துள்ளது. இந்திய அரசாங்கமும் அதை ஒப்புக் கொண்டுள்ளது. ஆனால், இலங்கையில் வெளியாகும் நாளிதழில் புலிகள் அமைப்பின் மீதான தடை குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது இந்தத் தீர்ப்பாயம். ஆனால், புலிகள் அமைப்பு செயல்பட்டு வரும், சுவிட்சர்லாந்து, ஐரோப்பா போன்ற நாடுகளில் இந்த விளம்பரம் செய்யப்படவில்லை என்பதே, இத்தீர்ப்பாயம் எத்தகைய விசாரணையை நடத்துகிறது என்பதைக் காட்டுகிறது. என்றார்.
மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், தற்போது மனு தாக்கல் செய்துள்ள விஜயரத்னம் சிவனேசன் என்பவர் கிட்டு என்கிற கிருஷ்ணகுமார் மற்றும் 80 பேரோடு இந்திய அரசால் கைது செய்யப்பட்டவர். பின்னர் அவர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார். அங்கிருந்து தப்பி சுவிட்சர்லாந்து சென்ற அவர், அந்நாட்டின் குடிமகனானார். இந்த விஜயரத்னம், நெடியவன் பிரிவைச் சேர்ந்தவர். விடுதலைப் புலிகளின் மற்றொரு பிரிவான ருத்ரகுமாரன், இந்த நெடியவன் பிரிவை அங்கீகரிக்கவில்லை என்று கூறுகிறது. நெடியவன் பிரிவு உண்மையான விடுதலைப்புலிகள் இல்லை, என்று தமிழர்களுக்கான தனி நாடு கோரும் ருத்ரகுமாரன் பிரிவு கூறுகிறது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஒரு வாதத்துக்காக ருத்ரகுமாரன் பிரிவை உண்மையான விடுதலைப்புலிகள் என்று ஏற்றுக் கொண்டாலும், அந்த ருத்ரகுமாரன் பிரிவுக்கு ஏன் இந்த தீர்ப்பாயம் நோட்டீஸ் அனுப்பவில்லை ? யாருக்குமே நோட்டீஸ் அனுப்பி தங்கள் தரப்பை எடுத்து வைக்க அனுமதி வழங்காமல் ஒருதலைப்பட்சமாக இத்தீர்ப்பாயம் செயல்பட்டு வருகிறது.
விஜயரத்னம் சிவநேனன்
மனுதாரர் விஜயரத்னம் சிவநேசன், ஐரோப்பிய நீதிமன்றத்தில், விடுதலைப் புலிகளின் மீதான தடையை நீக்க வேண்டும் என்று கோரி ஒரு மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனு விசாரணைக்கு ஏற்கப்பட்டு மனு நிலுவையில் உள்ளது. ஐரோப்பிய நீதிமன்றம், இந்த மனுதாரரின் மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது ஐரோப்பிய நீதிமன்றம்.
துரதிருஷ்டவசமாக இத்தீர்ப்பாயம் கொடைக்கானலில் நடத்தப்பட்டு வருகிறது என்றதும் நீதிபதி முகத்தில் பதற்றம்…
ஏன் ஏன்.. தீர்ப்பாயம் இந்தியாவில் எந்த இடத்திலும் விசாரணையை நடத்தலாம் என்றார் நீதிபதி.
எந்த இடத்திலும் நடத்தலாம் என்பது உண்மைதான். ஆனால் வழக்கறிஞர்கள் அனைவரும் சென்னையில் இருக்கையில், யாருடைய வசதிக்காக கொடைக்கானலில் இவ்விசாரணை நடத்தப்படுகிறது என்றதும், நீதிபதி அமைதியானார்.
மத்திய அரசு, இவ்வழக்கில் டெக்னிக்கல் காரணங்களைக் காட்டி இந்த மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்யப் பார்க்கிறது. உண்மையில் இத்தடை சரியானதா, நியாமானதா என்று விசாரணையை நடத்தும் விருப்பம் மத்திய அரசுக்கு இல்லை. இந்தத் தீர்ப்பாயத்தின் முன் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆவணங்களின்படி, ஈழம் என்றால் அது தமிழகத்தின் ஒரு பகுதியோடு சேர்ந்தது என்று குற்றம் சாட்டுகிறது மத்திய அரசு…
தனி ஈழம் என்பது, இலங்கையில் உள்ள பகுதி மட்டுமே, தமிழகத்தைச் சேர்ந்த பகுதி கிடையாது என்பதை உறுதிப்படுத்த, புலிகள் இயக்கத்தின் உறுப்பினர் மட்டுமே சொல்ல முடியும்.. இந்த ஒரே காரணத்துக்காகவாவது, இந்த உறுப்பினரைத் இத்தீர்ப்பாயம் விசாரணையில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்றார்.
நடுவில் ஒரு முறை, “ராதாகிருஷ்ணன், போதும் நீங்கள் வாதிட்டது… நான் தீர்ப்பு எழுத வேண்டும்” என்றார் நீதிபதி.. உடனே ராதாகிருஷ்ணன், கோடிக்கணக்கான தமிழர்களின் வாழ்வு சம்பந்தப்பட்ட விவகாரம் இது… நான் வாதாடுவதை முழுமையாக கேட்டுத்தான் ஆக வேண்டும் என்றார்.
இறுதியாக 12.30 மணிக்கு தன் வாதத்தை முடித்தார் ராதாகிருஷ்ணன். நீதிபதி, நான் ஒரு ப்ரேக் எடுத்த விட்டு ஒரு மணிக்கு வருகிறேன் என்றார்.
வழக்கறிஞர் ராதாகிருஷ்ணனின் வாதத்தைக் கேட்பதற்கு நீதிபதிக்கு எரிச்சலென்றால் அப்படி ஒரு எரிச்சல்…. என்னடா இது இந்த ஆள் வாதாடுவதும் சரியான விஷயமாக இருக்கிறது… ஒரு மணி நேரத்தில் விசாரணையை முடிக்கலாம் என்றால் இப்படி இழுத்தடிக்கிறாரே என்று அவர் முகத்தில் அப்படி ஒரு எரிச்சல். தலையில் காயம் பட்டதற்கான சுவடே இல்லாமல், கர்ஜித்தார் ராதாகிருஷ்ணன். ராதாகிருஷ்ணனை நாங்கள் அனைவரும் சிங்கம் என்று அழைப்பதே வழக்கம். சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும் சீற்றம் குறைவதுண்டோ… அப்படித்தான் அன்று நெற்றியில் காயம்பட்ட ராதாகிருஷ்ணனும் வாதாடினார்.
ஒரு மணிக்குத் திரும்பிய நீதிபதி, ராதாகிருஷ்ணன், உங்கள் மனுவை நான் ஏற்றுக் கொண்டேன்.. விஜயரத்னம் விசாரணையில் பங்கெடுக்கலாம் என்றார். நீதிபதி அப்போது அப்படிச் சொல்லியபோதே சந்தேகமாகத்தான் இருந்தது.
தீர்ப்பு மறுநாள் கையில் கிடைத்தது. அத்தீர்ப்பில்
The request of the petitioner to participate in the proceedings is rejected. However, he is permitted to submit arguments at the time of final hearing before the Tribunal, on the basis of such material which is otherwise produced before the Tribunal and in respect of which no confidentiality is claimed by the Government. He, however, would have no right to inspect the record, cross-examine the witnesses or produce witnesses of his own. He will also be not entitled to copies of the documents which have been filed before the Tribunal.
என்று குறிப்பிட்டுள்ளார் நீதிபதி. இது போன்ற ஒரு முட்டாள்த்தனமாக தீர்ப்பை யாராவது எழுத முடியுமா என்று தெரியவில்லை.
However, he is permitted to submit arguments at the time of final hearing before the Tribunal, on the basis of such material which is otherwise produced before the Tribunal and in respect of which no confidentiality is claimed by the Government.
மனுதாரர் அரசு சமர்ப்பித்துள்ள ரகசியம் என்று உரிமை கோராத ஆவணங்களின் அடிப்படையில் இறுதி விசாரணையில் தன் தரப்பு வாதங்களை எடுத்து வைக்க அனுமதி அளிக்கப்படுகிறது.
He, however, would have no right to inspect the record, cross-examine the witnesses or produce witnesses of his own. He will also be not entitled to copies of the documents which have been filed before the Tribunal.
ஆனால், மனுதாரருக்கு ஆவணங்களை பார்வையிடவோ, சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்யவோ, தன் தரப்பில் சாட்சிகளை விசாரிக்கவோ, அனுமதி கிடையாது. தீர்ப்பாயத்தின் முன் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களின் நகல்களும் வழங்கப்படாது.
இது முட்டாள்த்தனமான தீர்ப்பா இல்லையா ? நீங்களே சொல்லுங்கள். அரசு சமர்ப்பித்துள்ள ஆவணங்களின் அடிப்படையில் இறுதி விசாரணையில் வாதிடலாம் என்று உத்தரவிட்டு விட்டு, அந்த ஆவணங்களைப் பார்வையிடவும் கூடாது, நகல்களும் வழங்கப்படமாட்டாது என்று உத்தரவிடும் தீர்ப்பு முட்டாள்த்தமனமான தீர்ப்பா இல்லையா ? பாவம் நீதிபதி அவசரத்தில் இருந்தார் போலிருக்கிறது. கோக்கர்ஸ் வாக், பில்லர் ராக் போன்ற இடங்களை சுற்றிப் பார்க்கலாம் என்று திட்டமிட்டே கொடைக்கானலில் விசாரணையை அமைத்திருப்பார். விடுதலைப் புலிகள் மீதான தடைதானே.. யார் வரப்போகிறார்கள்… ஆதரவாளர்கள் என்று சொல்லிக் கொண்டு ஒன்றிரண்டு பேர் வருவார்கள்… அவர்களை அழகாக சமாளித்து விடலாம் என்று கொடைக்கானலுக்கு உல்லாச சுற்றுப்பயணம் வந்த நீதிபதிக்கு திடீரென்று புலிகள் இயக்கமே விசாரணையில் பங்கெடுக்கிறது என்ற தகவல் அதிர்ச்சியாகத்தானே இருக்கும்… அதனால்தான் குழம்பிப்போய் இப்படி ஒரு தீர்ப்பை அளித்திருக்கிறார்.
கடந்த முறை நாடகத்தின் முதல் பாகம் சென்னையில் நடந்தது அல்லவா ? அந்த நாடகத்தை நடத்தி விட்டு, நீதிபதி வி.கே.ஜெயின் மற்றும் அவரோடு வந்த ரத கஜ துரக பதாதிகள் சென்னையில் விசாரணையை முடித்து விட்டு, பாண்டிச்சேரி ஆரோவில் சென்று சுற்றிப் பார்த்திருக்கிறார்கள். சுற்றிப் பார்ப்பது அவர்கள் உரிமை என்றே வைத்துக் கொண்டாலும் கூட, அதை க்யூ பிரிவு காவல்துறைக்கு ஒதுக்கப்பட்ட ரகசிய நிதியில் சுற்றிப் பார்க்கக் கூடாது அல்லவா ? சென்னையில் நடந்த விசாரணைக்கு டெல்லியிலிருந்து நீதிபதியோடு சேர்த்து, நீதிமன்றப் பணியாளர்களும் வந்திருந்தனர்.
நீதிமான் வி.கே.ஜெயின்
நீதிமன்றப் பணியாளர்கள் வந்திருந்தால் பரவாயில்லை. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு முன்பாக ஒரு தடியை தூக்கிக் கொண்டு, உஸ்ஸூ.. உஸ்ஸூ என்று சொல்லிக்கொண்டு சீருடை அணிந்த ஒருவர் செல்வாரல்லவா ? அந்த உஸ்ஸூ சொல்பவரையும் விமானத்தில் அழைத்து வந்திருந்தனர். நீதிமன்றத்தின் பதிவாளர், சுருக்கெழுத்தர்கள் போன்றவர்கள் அவசியமான பணியாளர்கள். உஸ்ஸு சொல்பவருமா ? அந்த உஸ்ஸு சொல்பவர் சென்னைக்கு விமானத்தில் வந்து தங்கிய வகையில் மட்டும் எப்படிப் பார்த்தாலும் 50 ஆயிரம் செலவாயிருக்கும். ஒரு நாள் உஸ்ஸூ சொல்லாவிட்டால் நீதிபதியால் நடக்க முடியாதா ? தீர்ப்பெழுத முடியாதா ? என்ன செய்வது.. ? நீதிபதிக்கு பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணுமாம்.
சென்னைக்கு வந்த நீதிமான் தங்கியிருந்தது அடையாறில் உள்ள பார்க் ஷெராட்டன் ஹோட்டலில். இந்த ஹோட்டலில் ஒரு ஸ்வீட்டின் ஒரு நாள் வாடகை வரிகளோடு சேர்த்து 15 ஆயிரத்தைத் தாண்டும். நீதிமானோடு சென்னைக்கு வந்த மற்றவர்கள் தங்கியது சென்னையில் உள்ள ஹோட்டல் சவேராவில். இந்த ஹோட்டலிலும் அறை வாடகை பல ஆயிரங்கள்.
சென்னையிலேயே சேப்பாக்கத்தில் தமிழக அரசின் அரசு விருந்தினர் மாளிகை உள்ளது. ஆனால் நீதிமான் இதிலெல்லாம் தங்க மாட்டாராம்… இந்த நீதிபதியும், அவர் பணியாளர்களும் தங்குவதற்கான ஏற்பாடுகளை செய்வது, தமிழக அரசின் க்யூ பிரிவு காவல்துறை. இந்தப் பிரிவினர் நினைத்திருந்தால், நீதிபதியையும், அவரது பணியாளர்களையும், சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகையில் தங்க வைத்திருக்க முடியும். ஆனால், அவ்வாறு தங்க வைக்காமல், ஐந்து நட்சத்திர விடுதிகளில் தங்க வைத்ததற்கான காரணம், க்யூ பிரிவு காவல்துறையினர் போடும் அத்தனை பொய் வழக்குகளையும் நீதிபதி அப்படியே ஆமோதிப்பார் என்பதே. நாளை வரும் மற்றொரு நீதிபதி, எனக்கு “வேறு” ஏதாவது வேண்டும் என்று கேட்டாலும், இந்தக் க்யூ பிரிவு காவல்துறையினர் அந்த “வேறை” செய்து தருவதற்கு சற்றும் தயங்கமாட்டார்கள்.
இதே போல கொடைக்கானலில் நீதிமான் தங்கியிருந்த ஹோட்டலில் பெயர், ஹோட்டல் கார்ல்டன். இந்த ஹோட்டலிலும், நீதிமான் தங்கியிருந்த அறையின் ஒரு நாள் வாடகை 15 ஆயிரத்திற்கு மேல். நீதிபதி மற்றும் அவரோடு வந்தவர்கள் இரண்டு நாட்கள் கொடைக்கானலில் தங்கிச் சென்ற செலவு மட்டும் எவ்வளவு தெரியுமா ? 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய். இந்தத் தொகையை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டியுள்ளது.
இந்தக் க்யூ பிரிவு செய்த அத்தனை உபசரிப்புகளும், கவனிப்புகளும் பலன் தராமல் போகவில்லை. நான் ஒரு விடுதலைப் புலி என்று பகிரங்கமாக அறிவித்து, தீர்ப்பாயத்தின் முன் மனுத்தாக்கல் செய்த ஒரு நபரின் பிரமாண வாக்குமூலத்தை பார்த்ததும்,
இவர் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் உறுப்பினர் என்பதற்கு என்ன ஆதாரம்… ?
ஏதாவது கடிதப்போக்குவரத்து உள்ளதா ?
ஏதாவது ஆவணம் உள்ளதா ?
ஒரே ஒரு கடிதம் கொடுங்கள் என்று பல்வேறு கேள்விகளை எழுப்பிய நீதிபதி வி.கே.ஜெயின், க்யூ பிரிவு காவல்துறையினர் தாக்கல் செய்த ஒரு வாக்குமூலத்தை அப்படியே ஏற்றுக் கொண்டார். அந்த வாக்குமூலத்தின் சில பகுதிகளைப் பார்ப்போம்.
இந்த வாக்குமூலம் 2011 ஆகஸ்ட் 23ம் தேதி ஜேசுராஜா என்பவர் அளித்த வாக்குமூலம். அவருக்கு தமிழ்நாடு விடுதலைப்படையின் கொள்கைகளில் ஈடுபாடு உண்டு என்று வாக்குமூலம் தொடங்குகிறது.
“தமிழ்நாடு விடுதலைப்படையைச் சேர்ந்த பலர் சிறையில் இருந்தனர். நான் ஒருவன் மட்டுமே வெளியில் இருந்தேன். இதனால் வடகிழக்கு மாநிலங்களுக்கு சென்று அங்கிருக்கும் விடுதலை இயக்கங்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள முடிவு செய்தேன். இதன் முதல் படியாக நான் மணிப்பூர் மாநிலத்திற்குச் சென்று அங்கு புல்டோசர் மெக்கானிக்காக வேலை செய்தேன். அங்கிருந்தபடியே இந்தி பையன் ஒருவன் மூலமாக யுனைடட் நேஷனல் லிபரேஷன் பிரன்ட் (UNLF) இயக்கத்துடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டேன். UNLFல் தொய்பா என்பவருடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டேன். அவர் என்னை முதலில் போலீஸ் உளவாளி என்று சந்தேகப்பட்டார். அவரை பலமுறை தொடர்ந்து சந்தித்தபோது அவர் என்னிடம் தமிழ்நாடு அரசியல் நிலவரம், மக்கள் தொகை மற்றும் ஜாதி அமைப்புகள் குறித்து விசாரித்தார். நான் அவர் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லிவிட்டு, நானும் தமிழ்நாட்டில் ஒரு விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்தான் என்று தெரிவித்து தமிர்நாடு விடுதலைப்படை என்ற அமைப்பின் பெயரையும் தெரிவித்தேன். அப்போது தொய்பா என்னிடம் தனி ஒரு நபராக எங்களது இயக்கத்தை தொடர்பு கொள்ள முடியாது, அதனால் உங்கள் அமைப்பிடமிருந்து கடிதம் வாங்கி வாருங்கள் என்று தெரிவித்தார். அதனால் நான் சென்னைக்குத் திரும்பி வந்தன்.
பூந்தமல்லி சென்று மாறனைச் சந்தித்து அவர் சொல்லியபடி ஹசன் அலி என்பவரைச் சந்தித்தேன். அவர் எனக்கு தமிழ்நாடு விடுதலைப்படையின் கடிதத்தை தயார் செய்து கொடுத்தார். நான் அதனை எடுத்துக் கொண்டு மணிப்பூருக்குச் சென்றேன். ஒரு மாதம் கழித்து தொய்பாவை தொடர்பு கொண்டேன். அவர் என்னை அழைத்துச் சென்று அவர்களது பயிற்சி முகாமில்வைத்து எனக்கும் மதன் என்பவருக்கும் 3 நாள் அரசியல் வகுப்பு எடுத்தார். ஆயுதப் பயிற்சி வேண்டுமானால் ஒன்றரை லட்ச ரூபாய் பணம் கட்ட வேண்டும் என்று சொன்னார்கள். என்னிடம் பணம் இல்லாததால் திரும்பி சென்னைக்கு வந்துவிட்டேன்” என்ற அவரது வாக்குமூலம், பின்னர் அவர் பலரிடம் துப்பாக்கி வாங்குவதற்காக பணம் கொடுத்து, பலரும் ஏமாற்றி விட்டதாகத் தொடர்கிறது.
இந்த ஜேசுராஜா அனகாப்புதூரில் விறகுக் கடை வைத்திருப்பவர். இவரைக் கைது செய்து 6 நாட்கள் சட்டவிரோத காவலில் வைத்திருந்து, விழுப்புரம் தண்டவாள குண்டுவெடிப்பை ஒத்துக் கொள் என்று க்யூ பிரிவு ஆய்வாளர் மணிவண்ணன் என்பவர் தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார். ஐந்தாவது நாள், இவரது மகள் தமிழக மக்கள் உரிமைக் கழகத்தை அணுகியதும், உடனடியாக தந்தி அனுப்பப்பட்டு, உள்துறைச் செயலாளருக்கு புகார் அனுப்பப்பட்டது. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
விழுப்புரம் குண்டு வெடிப்பை இவர் ஒப்புக் கொள்ள மறுக்கவும், இவர் மணிப்பூர் தீவிரவாதிகளோடு தொடர்பில் உள்ளார் என்று இவரிடமிருந்து லேப்டாப், சில புத்தகங்கள், செல்போன்கள், கொஞ்சம் பணம், மற்றும் இரண்டு ஜெலட்டின் குச்சிகள் மற்றும் டெட்டனேட்டர்கள், பிவிசி பைப் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக ஜோடித்து வழக்கு பதிவு செய்தனர்.
தமிழ்நாடு விடுதலைப்படையிடமிருந்து அறிமுகக் கடிதம் கொடுத்தால் UNLFல் சேர்த்துக் கொள்வார்களாம். ஒன்றரை லட்ச ரூபாய் கட்டினால் ஆயுதப்பயிற்சி அளிப்பார்களாம்… எப்படி இருக்கிறது… ? சரி அப்படியே இதை உண்மை என்று எடுத்துக் கொண்டாலும், இதற்கும் விடுதலைப்புலிகள் மீதான தடைக்கும் என்ன சம்பந்தம்….
இந்த வாக்குமூலம், காவல் துறையினர் முன்னிலையில் வழங்கப்பட்டதாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. காவல்துறையினர் முன் வழங்கப்படும் எந்த வாக்குமூலமும், நீதிமன்றத்தில் செல்லுபடியாகாது என்பதை நன்கு அறிந்த நீதிபதி, இந்த வாக்குமூலத்தை ஏற்றுக் கொண்டுள்ளார்.
இப்படிப்பட்ட ஒரு வாக்குமூலத்தை நீதி ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான், ஹோட்டல் பார்க் ஷெராட்டன், ஹோட்டல் கார்ல்டன், கோடை கிளப் போன்ற வசதிகள் …. ஏற்பாடுகள்….
மக்களின் வரிப்பணத்தில் இது போன்ற சொகுசுகளை அனுபவிக்கும் நீதிபதிகள் வெட்கப்பட வேண்டும். மக்கள் வரிப்பணத்தில் ஒவ்வொரு ரூபாயும், ஏழை உழைப்பாளி மக்களின் வியர்வை என்பதை புரியாத நீதிபதிகள்தான் குளுகுளு கொடைக்கானலில் விசாரணை நடத்துகிறார்கள்.
கடந்த நவம்பர் 3 அன்று டெல்லியில் இறுதிக்கட்ட விசாரணை நடைபெற்ற பிறகு, தீர்ப்பாயத்தின் தீர்பை ஒத்தி வைத்துள்ளார் நீதிபதி வி.கே.ஜெயின்.
தீர்ப்பு எப்படி வரும் என்பதை சவுக்கு வாசகர்களாகிய உங்களுக்கு விளக்கிச் சொல்ல வேண்டுமா என்ன ?