பாஸ்கரன். இவர் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் க்ரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்று, 2010ல் ஐஏஎஸ் அதிகாரியாக பணி உயர்த்தப்படுகிறார். 10 ஜுன் 2011 அன்று தஞ்சாவூர் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்படுகிறார்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் நியமனம்தான் இவருக்கு முதல் ஆட்சியர் நியமனம். மாவட்ட ஆட்சியரானதுமே, பாஸ்கரனுக்குத் தலைகால் புரியவில்லை என்கிறார்கள் தஞ்சை மாவட்ட அதிகாரிகள்.
சம்பவம் 1
டிபிசி என்று அழைக்கப்படும் டைரக்ட் ப்ரொக்யூர்மென்ட் சென்டர்கள் என்பவை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தால் அறுவடை சமயத்தில் தஞ்சை மற்றும் நெல் சாகுபடி செய்யப்படும் பகுதிகளில் அமைக்கப்படும். இந்த மையங்கள் அறுவடை செய்யப்படும் இரண்டு மாதங்களுக்கு மட்டுமே செயல்படும். இப்படி அறுவடை செய்யப்படும் தருணங்களில், விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்முதல் செய்ய, பில் க்ளெர்க் என்ற தற்காலிக அரசுப் பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள். இந்த பில் க்ளெர்க்குகள், நெல் கொள்முதல் செய்கையில் ஒரு மூட்டைக்கு ரூபாய் 5 முதல் 10 வரை விவசாயிகளிடமிருந்து வசூல் செய்வது வழக்கம். அப்படி வசூல் செய்கையில் விவசாயிகள் கொடுக்க மறுத்தால், நெல் மூட்டையில் ஈரப்பதம் அதிகமாக இருக்கிறது என்ற கொள்முதல் விலையில் கை வைத்து விடுவார்கள் என்பதால், விவசாயிகள் வேறு வழியின்றி கொடுத்து விடுவார்கள். இப்படி வசூல் செய்யப்படும் தொகை, அந்த பில் க்ளெர்க்குக்கு மட்டும் சொந்தமானது கிடையாது. உணவு நுகர்பொருள் வாணிபக் கழக உயர் அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள், வேளாண் துறை அதிகாரிகள் என அனைவராலும் பங்கு பிரித்துக் கொள்ளப்படும்.
இப்படி சில மாதங்களுக்கு முன்பு தஞ்சை மாவட்டத்தில் உள்ள பள்ளி அக்ரஹாரம் என்ற இடத்தில் அமைந்துள்ள நெல் கொள்முதல் நிலையத்தில் இதே போல சரவணன் என்ற பில் க்ளெர்க் வசூல் செய்து வந்துள்ளார். நமது ரவுடி கலெக்டர் பாஸ்கரன், இந்த நெல் கொள்முதல் மையத்தில் திடீர் சோதனை நடத்தியுள்ளார். சோதனையின்போது, பில் க்ளெர்க் சரவணனிடம் கணக்கில் வர வேண்டியதை விட அதிகமான தொகை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சரவணனிடம் இது குறித்து விளக்கம் கேட்டுள்ளார் பாஸ்கரன். சரவணனுக்கு, பாஸ்கரன் கலெக்டர் என்பது தெரியவில்லை. உணவு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் அதிகாரிகள் யாரோ வந்திருகிறார்கள் என்று நினைத்து, “சார் நீங்களும் ஒரு பங்கு வாங்கிக்கங்க.. கண்டுக்காம விட்டுடுங்க” என்று சொல்லியிருக்கிறார்.
அவ்வளவுதான்… பாஸ்கரனுக்கு வந்ததே கோபம்….. அருகிலிருந்த மூங்கில் தடி ஒன்றை எடுத்து… நான் யாருன்னு தெரியுமாடா… எனக்கே லஞ்சம் கொடுக்கறியா… என்று அந்த பில் க்ளெர்க் சரவணனை அடி அடி என்று அடித்து வெளுத்து விட்டார். அடித்ததோடு விடாமல், அந்த பில் க்ளெர்க்கை பணி இடைநீக்கமும் செய்து விட்டார்.
பில் க்ளெர்க்கை கலெக்டர் அடித்த செய்தி, மற்ற ஊழியர்கள் மத்தியில் பரவவும், அப்போது கொள்முதல் நிலையங்களில் பணியில் இருந்த அனைத்து ஊழியர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். நெல் கொள்முதல் பணி தடைபட்டுப் போனதால், அந்த ஊழியரின் பணி இடைநீக்கத்தை உடனே ரத்து செய்தார் பாஸ்கரன்.
சம்பவம் 2
டாஸ்மாக் பார்களில் அனுமதிக்கப்பட்ட நேரத்தைக் கடந்து, இரவு நேரங்களில் சரக்கு விற்பனை நடைபெறுவது, தமிழகமெங்கும் இப்படி விற்பனை ஜோராக நடந்து கொண்டிருந்தது. ஒரு நாள் நள்ளிரவு நேரத்தில் ஒரு தஞ்சை நகரில் உள்ள ஒரு டாஸ்மாக் பாருக்குள் சென்று சரக்கு வேண்டும் என்று கேட்டிருக்கிறார். அனுமதிக்கப்பட்ட நேரத்துக்குப் பிறகும், அந்த கடையில் கொடுத்ததும், களத்தில் இறங்கினார் ரவுடி பாஸ்கரன். லத்தியை எடுத்து, பாரின் ஊழியர்களை சராமாரியாக அடித்து நொறுக்கினார். நெல் கொள்முதல் நிலையங்களில் இருந்த பில் க்ளெர்க்குக்கு மற்ற ஊழியர்கள் ஆதரவு தருவார்கள். டாஸ்மாக் பார் ஊழியருக்கு யார் ஆதரவு தருவார்கள் ?
சம்பவம் 3
தஞ்சாவூர் மாவட்டம் வடக்கு மாங்குடி பகுதி பெரும்பான்மையாக இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதி. அப்பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன் ஒரு டாஸ்மாக் மதுக்கடை செயல்பட்டு வந்துள்ளது. தற்போது மீண்டும் அப்பகுதியில் ஒரு டாஸ்மாக் கடையை திறக்க அரசு முயற்சி எடுத்துள்ளது. அப்பகுதி மக்கள் மீண்டும் எதிர்ப்புத் தெரிவித்ததால், அந்த ஊருக்கு ஒதுக்குப்புறமாக பெருங்கரை என்ற இடத்தில் ஒரு கடை திறக்க அரசு நிர்வாகம் முயற்சி செய்துள்ளது.
எங்கள் ஊர் எல்லைக்குள் கடை திறக்க வேண்டாம். வேறு பகுதியில் மீண்டும் மதுக்கடை திறந்து கொள்ளுங்கள் என்று மாங்குடி வடக்குப் பகுதியின் ஜமாத் தலைவர் அப்துல் காதல் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் மாவட்ட ஆட்சியரான ரவுடி பாஸ்கரனிடம் சென்று முறையிட்டுள்ளனர். அப்போது பாஸ்கரன், “என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் உங்கள் மனதில்… ஊருக்குள் கடையை வைக்கக் கூடாத என்று சொன்னீர்கள்.. அதனால் ஊருக்கு வெளியே கடையைத் திறக்க உத்தரவிட்டுள்னேன்.. இப்போது இதற்கும் பிரச்சினை செய்தால் என்ன அர்த்தம்…. டாஸ்மாக் கடை திறக்கக் கூடாது என்று சொல்லி விட்டு, கள்ளச் சாராயம் காய்ச்சி விற்கலாம் என்று பார்க்கிறீர்களா… ? தொலைத்து விடுவேன்… கள்ளச் சாராயம் காய்ச்சுகிறேன் என்று உங்கள் அனைவரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து விடுவேன்” என்று மிரட்டியுள்ளார்.
இவர்கள் சென்றதும், அப்பகுதியைச் சேர்ந்த அதிமுக அடிமைகள், கலெக்டர் பாஸ்கரனைச் சந்தித்து, எங்கள் பகுதிக்கு டாஸ்மாக் கடை இல்லை. அதனால் டாஸ்மாக் கடை திறக்க வேண்டும் என்ற மனு கொடுத்துள்ளனர். டாஸ்மாக் கடை திறக்க வேண்டும் என்று மனு கொடுத்த அதிமுக அடிமைகளை, உட்கார வைத்து தடபுடலாக உபசரித்துள்ளார் பாஸ்கரன்.
சம்பவம் 4
தஞ்சாவூரில் ராஜ ராஜ சோழனின் 1027வது சதய விழா சமீபத்தில் நடைபெற்றுள்ளது. இந்த விழாவை முன்னிட்டு, தஞ்சை மருத்துவக் கல்லூரி சாலையிலிருந்து பெரிய கோவிலுக்குச் செல்லும் பாலத்தின் ஒரு பகுதி ஒரு வழிச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது.
அந்த விழா நடக்கும் தினத்தில், காலை முதல், அந்தப் பாலத்தின் வழியாக ரவுடி பாஸ்கரன் நான்கைந்து முறை சென்று வந்துள்ளார். , அவர் சாதாரண காரில் சென்று வந்ததால் அவர் கார் கலெக்டர் கார் என்று அடையாளம் தெரியவில்லை. மாலையில் மீண்டும் பாஸ்கரன் அந்த வழியாகச் செல்லும்போது, இவரது காருக்கு முன்னால் ஒரு ஆட்டோ நின்றுள்ளது. ஒரு வழிச்சாலை வழியாக செல்ல முயன்ற அந்த ஆட்டோவை சிறப்புக் காவல் உதவி ஆய்வாளர் சேகர் என்பவர் தடுத்துள்ளார். தடுத்தவுடன், ஆட்டோவின் உள்ளே, ராஜா மிராசுதார் மருத்துவமனைக்குச் செல்வதற்காக ஒரு பெண்ணை அழைத்துச் சென்ற விபரம் தெரிவிக்கப்படுகிறது. அந்த விபரம் தெரிந்ததும், அந்த ஆட்டோவை மட்டும் அனுப்பி விட்டு, அடுத்து இருந்த காரை சேகர் தடுக்கிறார். அந்தக் காரினுள்ளேதான் ரவுடி பாஸ்கரன் அமர்ந்திருக்கிறார்.
தனது கார் தடுக்கப்பட்டதும் சட்டென்று காரினுள்ளிருந்து வெளியே வந்த பாஸ்கரன்… நான் யாரென்று தெரியுமா…. கலெக்டர் காரையே தடுக்கிறாயா… உன்னை என்ன செய்கிறன் பார் என்று உடனடியாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அனில் குமார் கிரிக்கு போன் செய்து, பாலத்தில் பணியில் இருக்கும் காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர், பணி நேரத்திலேயே குடித்திருக்கிறார் என்று சொல்கிறார்.
கலெக்டர் போன் செய்தால் எஸ்.பி நடுங்கியே ஆக வேண்டும். என்ன காரணமென்றால், ஒவ்வொரு மாவட்ட கண்காணிப்பாளரின் ஆண்டு ரகசிய அறிக்கையை எழுதுவது, அந்தந்த மாவட்ட ஆட்சியரே. அனில் குமார் கிரி, உடனடியாக தஞ்சாவூர் டவுன் டிஎஸ்பி ரவி என்பவரை அனுப்பி, சம்பந்தப்பட்ட உதவி ஆய்வாளரை, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரிக்கு அழைத்துச் சென்று, குடித்திருக்கிறார் என்று சான்றிதழ் பெற்று வருமாறு உத்தரவிடுகிறார்.
அந்த உதவி ஆய்வாளர் சேகருக்கு குடிப்பழக்கமே கிடையாது. அவரை டவுன் டிஎஸ்பி மருத்துவக் கல்லுரிக்கு அழைத்துச் சென்றதும், அவரைப் பரிசோதித்த மருத்துவர், இவர் குடித்திருக்கவில்லை என்று கூறி விட்டார். கலெக்டரின் மனது புண்படுமே என்று குடித்திருப்பதாக சான்றிதழ் தருமாறு மருத்துவரைக் கட்டாயப்படுத்துகின்றனர். ஆனால் அந்த மருத்துவர் உறுதியாக மறுத்துவிட்டார்.
உடனே, உதவி ஆய்வாளர் சேகரை, உப்பு சப்பில்லாத ஒரு இடத்துக்கு மாற்றி உத்தரவிடுகிறார் மாவட்ட எஸ்.பி அனில் குமார் கிரி.
சினிமாவில் பார்ப்பது போல, கலெக்டர் பாஸ்கரன் தன் கையில் தடியெடுத்து தவறு செய்பவர்களை அடித்து நொறுக்குவது ஒரு ஜனநாயக நாட்டில் ஏற்புடையதல்ல. காவல்துறையினர் உட்பட யாருக்கும் அடிக்கும் உரிமையை சட்டம் வழங்கவில்லை. காவல்துறையினர் அடிப்பதற்கே உரிமையில்லாத நிலையில், தருமபுரியில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர் ஒருவரை அடித்த சந்தனபாண்டியன் என்ற டிஎஸ்பி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் சார்பாக வழக்கு தொடுக்கப்பட்டு, உள்துறைச் செயலாளருக்கும், டிஜிபிக்கும், டிஎஸ்பி சந்தனபாண்டியனுக்கும் சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இப்படிப்பட்ட சூழலில், ஒரு மாவட்ட ஆட்சியர் பதவியை வகிக்கும் பொறுப்பு வாய்ந்த அதிகாரியாக உள்ள பாஸ்கரன் போன்றோர், ரவுடிகளைப் போல கையில் தடியெடுத்துக் கொண்டு தாண்டவமாடுவது வன்மையாக கண்டிக்கத் தக்கது. குறிப்பாக பாஸ்கரன் காரில் செல்லும்போது தனக்கு சல்யூட் அடிக்கவில்லையென்பதால், அங்கு பணியில் இருந்த சேகர் என்ற சிறப்பு உதவி ஆய்வாளரை குடித்திருக்கிறார் என்று பொய்க்குற்றச்சாட்டு சுமத்தி மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பிய செயல், உச்சக் கட்ட அதிகார துஷ்பிரயோகமாகும். குடிக்காத அந்த காவல் உதவி ஆய்வாளரை மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்புகையில் எதுவும் செய்ய முடியாத கையறு நிலையில் அந்த உதவி ஆய்வாளர் என்ன மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பார்… ? மாவட்ட ஆட்சியர் என்ற அதிகாரம் தனக்கு இருப்பதாலேயே பாஸ்கரன், திமிரோடு ரவுடியைப் போல நடந்து கொள்கிறார். மாவட்ட ஆட்சியாளராக இல்லாமல் சாலையில் சென்று இது போல ஒரு தகராறில் ஈடுபட்டால் அவரை பொதுமக்கள் பின்னியெடுத்து விடுவார்கள் என்பதை பாஸ்கரன் நினைவில் வைப்பது நல்லது. இந்தப் பதவியும் அதிகாரமும், தற்காலிகமானது என்பதையும் பாஸ்கரன் நினைவில் வைக்க வேண்டும்.
இது தவிரவும் மாவட்ட ஆட்சியர் பாஸ்கரன், பொதுமக்களிடமிருந்து திங்கட்கிழமைகளைத் தவிர மற்ற நாட்களில் மனு வாங்குவதில்லை என்பதையும் இவர் மீது பெரிய குறையாகச் சொல்கிறார்கள். எந்தப் பத்திரிக்கையாளரையும் பாஸ்கரன் சந்திப்பதில்லை. தஞ்சாவூர் மாவட்டத்துக்கான ஜெயா டிவியின் பத்திரிக்கையாளர் தமிழ்செல்வன் என்பவரைத் தவிர, வேறு எந்த பத்திரிக்கையாளரையும் பாஸ்கரன் சந்திப்பதில்லை. ஜெயா டிவியில் வரும் “உண்மைச்” செய்திகளே போதும் என்று முடிவெடுத்துவிட்டார் போலும்.
பாஸ்கரனைப் போல அந்த உதவி ஆய்வாளர், குளிரூட்டப்பட்ட அறையில் பணியாற்றுபவர் அல்ல… கொளுத்தும் வெயிலிலும், கொட்டும் மழையிலும் சாலையில் நின்று, வாகனங்கள் விடும் அத்தனை புகையையும் சுவாசித்து தன் வாழ்க்கையை ஓட்டுபவர். பிழைப்புக்காகவும், தன்னை நம்பி இருக்கும் குடும்பத்துக்காகவும், தன் எதிர்காலத்தைக் கருதியுமே பாஸ்கரன் போன்ற ரவுடி கலெக்டர்களின் அடாவடியை பொறுத்துக் கொண்டுள்ளார். அந்த உதவி ஆய்வாளரைப் போன்ற சாமான்ய மக்கள் பொறுமையாக இருக்கும் வரையில்தான் பாஸ்கரன் போன்ற ரவுடி கலெக்டர்களின் அதிகாரம் செல்லுபடியாகும் என்பதை பாஸ்கரன்கள் நினைவில் வைக்க வேண்டும்.
விவசாயிகளிடம் லஞ்சம் வாங்கி கையும் களவுமாகச் சிக்கிய அந்த பில் க்ளெர்க் சரவணன் மீது, பாஸ்கரன் ஒரு விசாரணை அறிக்கை அனுப்பியிருப்பாரேயானால் தஞ்சாவூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை மூலமாக அந்த நபர் மீது விசாரணை தொடங்கப்பட்டு, அவர் நீதிமன்றத்துக்கு அலைந்து கொண்டிருப்பார். பாஸ்கரன் தடியை எடுத்து அவரை அடித்ததால், அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியாமல் போய் விட்டது.
பில் க்ளெர்க்கையும், டாஸ்மாக் பார் ஊழியரையும் தடியெடுத்து அடிக்கும் பாஸ்கரன், இதை விடத் பெரிய தவறுகளைச் செய்து விட்டு, பென்ஸ் காரில் வரும் நபரை அடிப்பாரா ? அதே தஞ்சாவூர் மாவட்டத்தில் லட்சக்கணக்கில் வரி ஏய்ப்பு செய்பவர்கள் யாருமே இல்லையா ? விவசாயியிடம் 5 முதல் 10 லஞ்சம் வாங்கும் நபர் செய்யும் தவறை விட, லட்சக்கணக்கில் ஊழல் புரியும் அதிகாரிகளும், அமைச்சர்களும் செய்யும் தவறு, இச்சமுதாயத்தையே சீரழிக்கும் நோயல்லவா ? அவர்களை அடிக்க முடியுமா பாஸ்கரனால் ?
மாவட்ட ஆட்சியர் பதவி என்பது ஒவ்வொரு ஐஏஎஸ் அதிகாரியின் வாழ்க்கையிலும் ஒரு முக்கியமான காலகட்டம். மாவட்ட ஆட்சியராக இருக்கும் அந்தக் காலத்தில் மட்டுமே மக்களோடு நேரடியான தொடர்பு இருக்கும். அதன் பிறகு பதவி உயர்வு பெற்று வேறு பதவிகளுக்கு சென்று விட்டால், நேரடியாக மக்கள் தொடர்பு இல்லாது போய் விடும். மாவட்ட ஆட்சியர் என்ற அந்த அற்புதமான வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டு, மிக மிகச் சிறப்பாக பணியாற்றிய எத்தனையோ ஐஏஎஸ் அதிகாரிகள் தமிழ்நாட்டில் இருந்திருக்கிறார்கள். அந்த அதிகாரிகள் மாவட்டத்தை விட்டு மாற்றப்படுகையில், அம்மாவட்டத்து மக்கள், சம்பந்தப்பட்ட அந்த அதிகாரிகளை கண்ணீரோடு வழியனுப்பியிருக்கிறார்கள். அந்த அதிகாரிகளெல்லாம், யாரையும் தடியெடுத்து அடித்ததில்லை. தங்கள் பணியை சட்டப்படி செய்ததற்காகவே அம்மக்கள் அந்த அதிகாரிகளை வாழ்த்தியிருக்கின்றனர். அது போன்ற அதிகாரிகளைப் பார்த்து, பாஸ்கரன் கற்றுக் கொள்ள வேண்டும்.
இனியாவது பாஸ்கரன் தன் கையில் உள்ள தடியை ஓரமாக வைத்து விட்டு, ஒரு மாவட்ட ஆட்சியராக தன் பணியைச் செய்வார் என்று நம்புவோம்.