நீதிமன்றத்தில் தமிழக அரசுக்குத் தோல்வியா?
பதில் சொல்கிறார் அட்வகேட் ஜெனரல்
சமச்சீர்க் கல்வி தொடங்கி அண்ணா நூலகம் வரை அனைத்திலும் தமிழக அரசின் நிலைப்பாட்டுக்கு சறுக்கல்கள்தான். இந்தநிலையில், கடந்த வாரம் கிரானைட் வழக்கில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அளித்திருக்கும் தீர்ப்பு இதன் உச்சம். ‘பி.ஆர்.பி.யின் நிறுவனத்தைத் திறக்கலாம்’ என்று தீர்ப்பு அளித்து உள்ளது நீதிமன்றம்.
இந்தச் சறுக்கல்கள் குறித்து தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் நவநீத கிருஷ்ணனிடம் கேட்டோம்…
”நீதிமன்றத்துக்கும் தமிழக அரசுக்குமான உறவு சீராக இல்லையோ?”
”முதலமைச்சர் அம்மா அவர்களுடைய அரசின் திட்டங்களும் சட்டத்தை மதித்து எடுக்கப்படும் நடவடிக்கைகளும் சிறப்பாக உள்ளன. அரசு வழக்குகள் முறையாக நடத்தப்படுகின்றன. நில அபகரிப்புப் புகார்கள் மீதான நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து இருக்கிறது. சாதாரணமானவர்கள் தங்கள் தொழிலையும் வியாபாரத்தையும் இந்த ஆட்சியில் செவ்வனே செய்ய முடிகிறது. எந்த மட்டத்திலும் எந்தத் தரப்பினருக்கும் பாதிப்பு ஏற்படாத வண்ணம், சட்டம் ஒழுங்கு சீராக இருக்கிறது. இவை அனைத்தும் சட்டப்படி நடப்பதால், நீதிமன்றத்துக்கும் இந்த அரசுக்குமான உறவு மிகச்சிறப்பாக உள்ளது.”
”கடந்த ஆட்சியுடன் ஒப்பிடும்போது இந்த ஆட்சியில் அரசு வழக்கறிஞர்களின் செயல்பாடுகள் மிகப்பலவீனமாக இருப்பதுபோல் தெரிகிறதே?”
”இது தவறான கருத்து. முதலில் நீங்கள் ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள். இந்த ஆட்சியில்தான் நேர் மையான வழக்கறிஞர்களை முதலமைச்சர் அவர்கள் அரசு வழக்கறிஞர்களாக நியமனம் செய்துள்ளார். நான் இப்படிச் சொல்வதிலேயே ஆயிரம் அர்த்தங்கள் ஒளிந்து இருக்கின்றன. அதை நீங்கள் சிந்தித்துப் பார்த்துக் கொள்ளுங்கள். சட்டமும் நீதியும் இந்த ஆட்சியில்தான் முறையாக நடக்கிறது. அம்மா அவர்களின் நல்ல திட்டங்களை நீதிமன்றத்தின் வாயிலாக நடைமுறைப்படுத்த இப்போது நியமனம் செய்யப்பட்டுள்ள அரசு வழக்கறிஞர்கள் நேர்மையாக பாடுபடுகின்றனர். இதில் நேர்மையாக என்ற சொல் மிகமுக்கியமானது.”
”நீங்கள் இப்படிச் சொல்கிறீர்கள். ஆனால், சமச்சீர்க் கல்வி, புதிய தலைமைச் செயலகக் கட் டடம், அண்ணா நூற்றாண்டு நூலகம்தொடங்கி இப்போது பி.ஆர்.பி–க்கு எதிரான கிரானைட்குவாரி வழக்கு வரை அனைத்திலும் தமிழக அரசுக்குத் தோல்விதானே?”
”தமிழக அரசைப் பொறுத்தவரை தோல்வி என்பதே கிடையாது. அரசு வழக்குகள் எதுவும் நீதிமன்றத்தில் தோற்றுப்போகவில்லை. அரசுக்கு விரோதமாகப் போகும் வழக்குகள் அனைத்துக்கும் நீதிமன்றத்தில் தடை வாங்கி இருக்கிறோம். அரசு நல்ல திட்டங்களை செயல்படுத்தும்போது, அதை எதிர்க்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் சிலர் வழக்குத் தொடுக்கின்றனர். குறிப்பிட்டுச் சொல்வது என்றால், கடந்த ஆட்சியில் தேவைஇல்லாமல் அதிக செலவில் ஆடம்பரமாக அமைக்கப்பட்ட கட்டடங்கள் சிலவற்றை மருத்துவமனைகளாக்கி பொதுமக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டுவர தமிழக அரசு நல்லெண்ணத்துடன் திட்டங்கள் தீட்டியது. ஆனால், சிலர் இதற்கு எதிராக வழக்குகளைத் தொடர்ந்து உள்ளனர். அந்த வழக்குகளில் இன்னும் இறுதித்தீர்ப்பு எதுவும் வந்துவிடவில்லை. அவை நிலுவையில்தான் இருக்கின்றன. விரைவில், அந்த வழக்குகளில் நீதி நிலை நாட்டப்படும். வழக்குகளை நீதிமன்றத்தில் நடத்துவதில் உள்ள சில நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக கொஞ்சம் தாமதம் ஏற்படுகிறதே தவிர, தமிழக அரசு தோற்றுப்போகவில்லை; தோற்கவும் தோற்காது. ஏனென்றால், தமிழகத்தில் நடைபெறுவது அம்மா அவர்களின் ஆட்சி; சட்டத்தின் ஆட்சி.”
”முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ–க்கள் என்று அவசரகதியில் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டவர்கள் எல்லாம் வெளியே வந்து விட்டார்களே? அந்த வழக்குகளில் எல்லாம் தமிழக அரசு நீதிமன்றத்தின் கண்டனத்துக்கும் ஆளாகி உள்ளதே?”
”தவறு…. தவறு. (வேகமாக மறுக்கிறார்) முதலமைச்சர் அம்மா அவர்களின் ஆட்சியில்தான், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் சட்டப்படியான தண்டனையைப் பெறுகிறார்கள். இதில் ஆளும் வர்க்கம், அதிகார வர்க்கம், பணக்காரர்கள் என்ற எந்த பாரபட்சமும் பார்ப்பது இல்லை. மத்திய அமைச்சரின் மகனாக இருந்தாலும் சரி, முன்னாள் மந்திரியாக இருந்தாலும் சரி, தவறு செய்திருந்தால் சட்டத்தின் நடவடிக்கை பாய்வதில் இருந்து அவர்களால் தப்பவே முடியாது. இந்த ஆட்சியில் சட்ட நடவடிக்கைகள் அவ்வளவு நேர்மையாக இருப்பதால்தான், முன்னாள் அமைச்சர் பொன்முடி கைது செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடியில் நிழல் அரசாங்கம் நடத்தி வந்த பெரியசாமி கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் கூடுதல் டி.ஜி.பி. துக்கையாண்டியின் மனைவி, நிலஅபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். சட்ட விரோதமாக இயற்கை வளங்களைச் சுரண்டி வந்த பி.ஆர்.பி.போன்ற மிகப்பெரிய பணக்காரர்கள் தண்டிக்கப்பட்டுள்ளனர். மத்திய அமைச்சர் அழகிரியின் மகன் துரை தயாநிதி ஓடி ஒளிந்து திரிகிறார்.
இன்னொன்றையும் நான் குறிப்பிட விரும்புகிறேன். யார் மீதான வழக்காக இருந்தாலும், அதை நேர்மையான முறையில், சட்ட திட்டங்களுக்கு உட்பட்டே நடத்த வேண்டும் என்றும் எங்களுக்கு முதலமைச்சர் அம்மா அவர்கள் உத்தரவிட்டு இருக்கிறார். அவர்களின் உத்தரவுப்படியே செயல் பட்டு வருகிறோம். நீதிமன்றம் அவ்வப்போது சில ஆலோசனைகளை அரசாங்கத்துக்கு வழங்கி வருகிறது. அவற்றை எல்லாம் கண்டனம் என்ற வார்த்தையில் குறிப்பிடுவது தவறு.”
”நில அபகரிப்புப் புகார்கள் மீதான வழக்குகள் என்ன நிலைமையில் உள்ளன?”
”அப்பாவி ஏழை மக்களை ஏமாற்றி, மிரட்டி நிலங்களை பறித்துக்கொண்டவர்கள், இப்போது தீர்ப்பு நாளை எதிர்பார்த்து அஞ்சி நடுங்குகின்றனர். வஞ்சிக்கப்பட்ட எளிய மக்களுக்கு விரைவில் நீதி கிடைக்கும்.”
– ஜோ.ஸ்டாலின்
நன்றி ஜுனியர் விகடன்.