ஜெயலலிதாவின் நிர்வாகச் சீர்கேட்டிற்கு உதாரணங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம். அண்ணா வளைவைக் காப்பாற்றி விட்டு, அரசு சித்த மருத்துவமனையை இடிப்பது, நாள்தோறும் யாராவது ஒரு அதிகாரியையோ அமைச்சர்களையோ மாற்றுவது, அண்ணா நூலகத்தை குழந்தைகளுக்கான மருத்துவமனையாக மாற்றுவது, ஆயிரக்கணக்கான மக்கள் நலப்பணியாளர்களை ஒரே நாளில் வீட்டுக்கு அனுப்புவது, சென்னை மதுரவாயல் முதல் துறைமுகம் வரையிலான உயர்மேம்பாலச் சாலையை (Elevated Express Way) பல நூறு கோடி ரூபாய் செலவிட்ட பிறகு கைவிடுவது என ஜெயலலிதாவின் நிர்வாகச் சீர்கேடுகளை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.
சமீபத்தில் சட்டப்பேரவையில் விதி 110ன் கீழ் ஜெயலலிதா அறிவித்த திட்டமும் மிக மோசமான நிர்வாகச் சீர்கேட்டிற்கு உதாரணம். சட்டப்பேரவையில் ஜெயலலிதா பேசுவது எல்லாமே விதி 110ன் கீழ்தான். வேறு எந்தக் கட்சியின் உறுப்பினரையாவது பேச விட்டால்தானே…. ஒன்று அதிமுக அடிமைகள் யாராவது எழுந்து அம்மா புகழ் பாடுவார்கள். அம்மா, அம்மா என்று பிச்சை எடுப்பது போல கத்திக் கொண்டிருப்பார்கள். அடிமைகள் களைத்துப் போனால், செ.கு.தமிழரசன், சரத்குமார் போன்ற நவீன அடிமைகள் எழுந்து அம்மா புகழ் பாடுவார்கள். இவையெல்லாம் இல்லாத போது ஜெயலலிதா 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிடுவார். அந்த அறிவிப்பைக் கேட்ட அடிமைகள் மீண்டும் மேஜைகளைத் தட்டி தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தி விட்டு, மீண்டும் அம்மா புகழ் பாடத் தொடங்குவார்கள். அது தமிழக சட்டசபை அல்ல. அம்மாவின் அடிமைகள் கூடாரம் என்பதே பொருத்தமாக இருக்கும்.
அந்த 110 விதியின் கீழ், ஜெயலலிதா கடந்த வாரம் வெளியிட்ட அறிவிப்பு,
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பது, குற்ற நிகழ்வுகளை கண்டுபிடிப்பது, குற்றங்கள் நிகழாமல் தடுப்பது, போக்குவரத்தை சீர்படுத்துவது, இயற்கை இடர்பாடுகளின் போது
மீட்புப் பணிகளை மேற்கொள்வது, விழாக் காலங்களில் ஏற்படும் கூட்ட நெரிசல்களை முறைப்படுத்துவது என பல்வேறு இன்றியமையாப் பணிகளை தமிழக காவல் துறை ஆற்றி வருகிறது.
இப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த காவல் துறையில் உள்ள மொத்த பணியிடங்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 629 ஆகும். இது, 635 மக்களுக்கு ஒரு காவல் அலுவலர் என்ற விகிதாச்சாரத்தில் அமைந்துள்ளது. 1.1.2012 நிலவரப்படி, இந்த அனுமதிக்கப்பட்ட பணியிடங்களுக்கு எதிராக 82 விழுக்காடு காவல் அலுவலர்கள் மட்டுமே பணியில் இருந்து வருகிறார்கள்.
காவல் துறையில் நிலவும் இந்தப் பற்றாக்குறையினை சீர் செய்யும் வகையில், காலியாக உள்ள 12,208 காவலர் பணியிடங்களை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்புமாறு நான் உத்தரவிட்டேன்.
எனது உத்தரவினையடுத்து, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம், காவலர்களுக்கான எழுத்துத் தேர்வை 24.6.2012 அன்று நடத்தியது. இதனைத் தொடர்ந்து, 2012 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் உடற் தகுதித் தேர்வினை நடத்திய தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம், 12.10.2012 அன்று தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களின் பட்டியலை வெளியிட்டது. இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ள 12,162 காவலர்களுக்குத் தற்போது மருத்துவப் பரிசோதனை நடைபெற்று வருகிறது. மருத்துவப் பரிசோதனைக்குப் பின், தேர்ந்தெடுக்கப்பட்ட காவலர்களுக்கு 7 மாத கால பயிற்சி அளிக்கப்பட்டு, அதன் பின்னரே அவர்கள் பணியில் சேரும் நிலை உள்ளது.
இதனைக் கருத்தில் கொண்டும், பெருகி வரும் மக்கள் தொகைக்கேற்ப தமிழக அரசால் வகுக்கப்பட்டுள்ள அளவுகோல்களின்படி 19,096 காவல் பணியிடங்கள் கூடுதலாக உருவாக்கப்பட வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டும்; ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான காவலர்கள் ஓய்வு பெறுவதைக் கருத்தில் கொண்டும் பார்க்கும் போது, காவல் துறை ஈடுபடும் பல்வேறு நடவடிக்கைகளில் குறிப்பிட்ட சிலவற்றில் அவர்களுக்கு துணையாக ஒரு துணைப் படையை உருவாக்குவது அவசியமாகிறது. இவ்வாறு அமைப்பதன் மூலம், சட்டம் ஒழுங்கு பராமரித்தல், குற்றங்களை கட்டுப்படுத்துதல், குற்றப் புலனாடீநுவு போன்ற பிரதான காவல் பணிகளில் தற்போதுள்ள காவலர்களை முழுமையாக ஈடுபடுத்த இயலும்.
இதற்கு வழி செய்யும் வகையில், “தமிழ்நாடு சிறப்பு காவல் இளைஞர் படை” என்ற ஒரு சிறப்புப் படை தமிழ்நாட்டில் உருவாக்கப்படும் என்பதை இந்த மாமன்றத்திற்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த சிறப்புப் படைக்கு தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள், போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல்; நீதிமன்றங்களால் வெளியிடப்படும் வருவிப்பு ஆணைகளை சார்வு செய்தல்; கூட்ட நெரிசல்களை ஒழுங்குபடுத்துதல்; இரவு ரோந்து மற்றும் ஓட்டுநர் பணிகளில் ஈடுபடுத்தப்படுவர்.
தமிழ் நாடு சிறப்புக் காவல் இளைஞர் படையில் உறுப்பினர்களை சேர்ப்பதற்கு விளம்பரம் செய்யப்பட்டு; மாவட்ட வாரியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மூலம் தேர்வு நடத்தப்படும். பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று 18 வயது முதல் 30 வயது வரை உள்ள இளைஞர்கள் இத்தேர்வில் கலந்துகொள்ள தகுதியுடையவர் ஆவர்.
தேர்வில் வெற்றி பெறுபவர்கள் அந்தந்த மாவட்டங்களில் தமிழ் நாடு சிறப்புக் காவல் இளைஞர் படை உறுப்பினர்களாக பணி அமர்த்தப்படுவர்.
தமிழ் நாடு சிறப்புக் காவல் இளைஞர் படை உறுப்பினர்களுக்கு பயிற்சி காலத்திலும்; பணி காலத்திலும் மாதம் ஒன்றுக்கு மதிப்பூதியமாக 7,500/- ரூபாய் வழங்கப்படும். மேலும், அவர்கள் காவலர்களுக்கான சிறப்பு அங்காடிகளில் அளிக்கப்படும் வசதிகளை பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்படுவர். இது தவிர, அரிசி, கோதுமை, சர்க்கரை, மைதா, பருப்பு போன்ற அத்தியாவசிய பொருட்கள் மானிய விலையில் வகுக்கப்பட்டுள்ள அளவுகோலின்படி அவர்களுக்கு வழங்கப்படும்.
ஓர் ஆண்டு காலம் திருப்திகரமான பணியினை நிறைவு செய்யும் தமிழ் நாடு சிறப்புக் காவல் இளைஞர் படை உறுப்பினர்கள், காவல் துறையில் காலியாகும் காவலர் பணியிடங்களில் ஈர்த்துக் கொள்ளக் கூடிய தகுதியைப் பெறுவர். ஒவ்வொரு ஆண்டும் காவல் துறையில் காவலர் நிலையில் ஏற்படும் காலியிடங்களில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் இந்த சிறப்புக் காவல் இளைஞர் படையிலிருந்து தேர்ச்சி பெறும் நபர்களுக்கு ஒதுக்கப்படும். சீருடைப் பணியாளர் தேர்வாணையம் இதற்கென ஒவ்வொரு ஆண்டும் சிறப்புத் தேர்வினை நடத்தும். அத்தேர்வில் பங்கேற்று வெற்றி பெறுபவரின் பட்டியல் சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்படும். இத்தேர்வில் வெற்றி பெறாதவர்கள், 40 வயது வரை, இந்த தமிழ்நாடு சிறப்புக் காவலர் இளைஞர் படையிலேயே, தொடர்ந்து பணியாற்றுவர். 40 வயதிற்கு மேல், அவர்களுக்கு, தமிழக அரசே வேறு வேலை வாய்ப்பினை ஏற்படுத்தித் தரும்.
இந்த நிதியாண்டில் தமிழ் நாடு சிறப்புக் காவல் இளைஞர் படைக்கென மாநிலம் முழுவதும் 10,000 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். இதற்கான தேர்வுகள் வரும் டிசம்பர் மாதம் நடத்தப்படும். இந்தத் தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு 2013 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அடிப்படைப் பயிற்சி அளிக்கப்பட்டு அவர்கள் இந்த நிதியாண்டிற்குள் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். 2013-2014 ஆம் நிதியாண்டில் 15,000 பேர் இந்த இளைஞர் படைக்கென தேர்ந்தெடுக்கப்படுவர். இவ்வாறு ஒவ்வொரு ஆண்டும் தேவைக்கேற்ப 50,000 உறுப்பினர்கள் வரை இந்த தமிழ் நாடு சிறப்புக் காவல் இளைஞர் படையில் சேர்க்கப்படுவார்கள் என்பதைத் தெரிவித்துக் கொண்டு அமைகிறேன்.”
இதுதான் ஜெயலலிதா சட்டப்பேரவையில் வெளியிட்ட அறிவிப்பு. இந்த இளைஞர் படை என்பதைப் போன்ற விபரீதமான யோசனையை யாரும் பார்த்திருக்கவே முடியாது.
இந்த சிறப்புக் காவல் இளைஞர் படை ஏன் விபரீதமான யோசனை என்பதைப் பார்ப்போம்.
இப்படி ஒரு படையை ஜெயலலிதா ஏற்படுத்துவதற்கு கூறும் காரணங்கள் இரண்டு. ஒன்று மக்கள் தொகைப் பெருக்கத்திற்கு ஏற்ப, தமிழகத்தில் மேலும் 19 ஆயிரம் காவலர் பணியிடங்கள் தேவைப்படுகின்றன. தற்போது உள்ள நிலையின் படி, 12 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தக் காலியிடங்களுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பயிற்சி முடிந்து பணியில் சேர மேலும் 6 மாதம் ஆகும் என்பதால், இந்த இளைஞர் படை அமைக்கப்படுகிறது என்கிறார் ஜெயலலிதா. புதிதாக 19 ஆயிரம் பணியிடங்களைத் தோற்றுவிப்பதற்கு, ஜெயலலிதா போன்ற முதல்வருக்குத் தேவைப்படும் நேரம் ஒன்றிரண்டு நாட்கள் மட்டுமே. இதற்காக புதிதாக ஒரு இளைஞர் படையை உருவாக்குவது எப்படி பொருத்தமான காரணமாக இருக்க முடியும் ?.
அப்படியே ஜெயலலிதா சொல்வதை ஒரு வாதத்துக்காக ஒப்புக் கொண்டாலும், மேலும் 19 ஆயிரம் பணியிடங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்று கூறும் ஜெயலலிதா, இளைஞர் படையில் 50 ஆயிரம் பேர் சேர்க்கப்படுவார்கள் என்று கூறியுள்ளார். 19 ஆயிரம் பேர் தேவைப்படும் இடத்தில் எதற்காக 50 ஆயிரம் பேர் என்பதை, மெத்தப் படித்த ஜெயலலிதாதான் விளக்க வேண்டும்.
காவல்துறையின் பணி என்பது, அரசின் பணி. (Sovereign function) அந்தப் பணியை ஒரு முழு நேர அரசு ஊழியர் மட்டுமே செய்ய முடியும். அப்படிப்பட்ட ஒரு பணியை தொகுப்பூதியம் வாங்கும் நபர்களிடம் ஒப்படைப்பது என்பது மிக மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும்.
இவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் இளைஞர் படையில் உள்ளவர்கள் நீதிமன்ற சம்மன்களை வழங்குவது, இரவு நேர ரோந்துப் பணியில் ஈடுபடுவது, போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவது போன்ற வேலைகளில் ஈடுபடுவார்கள் என்று ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
சாதாரண பொதுமக்களுக்கு, நீதிமன்ற சம்மன் என்பது குறித்து விபரம் தெரியாது. ஒன்று போகாவிட்டால் என்ன என்று அலட்சியப்படுத்துவார்கள், அல்லது, அநியாயத்துக்கு பயந்து போவார்கள். இப்படி பயப்படும் பொதுமக்களை மிரட்டி பணம் பறிப்பது, மாதம் வெறும் 7500 ரூபாய் சம்பளத்துக்கு நியமிக்கப்படும் இளைஞர் படையினருக்கு வெகு எளிதாக அமையும். என்ன ஏது என்ற விபரம் தெரியாத பொதுமக்கள், இதற்கு எளிதாக பலியாவார்கள். மேலும், நீதிமன்ற சம்மனை ஒரு முழுநேர அரசு ஊழியர் வழங்குவதே சட்டப்படி சரியானது.
போக்குவரத்தை ஒழுங்குபடுத்த, கல்லூரிகளில் உள்ள என்எஸ்எஸ் மாணவர்கள் ஏற்கனவே பல இடங்களில் பயன்படுத்தப் படுகிறார்கள். இது தவிரவும், ஊர்க்காவல் படை உறுப்பினர்களும், பெருமளவில் பயன்படுத்தப்படுகிறார்கள். இவர்கள் இருக்கையில், எதற்காக இந்தப் புதிய இளைஞர் படை ? கல்லூரியில் உள்ள என்.எஸ்.எஸ் மாணவர்களை போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவதற்கு ஈடுபடுத்துவதில் ஜெயலலிதாவுக்கு என்ன சிரமம் என்பது புரியவில்லை.
ரோந்துப் பணி என்றால் என்ன, அது எப்படிச் செய்யப்பட வேண்டும் என்பதை தமிழ்நாடு காவல் நிலை ஆணை (Police Standing Order) கூறுகிறது.
நிலை ஆணை எண் 369ன் படி, “It is incumbent upon the Police to ensure the safety of the roads and strict attention must, therefore, be paid to road patrolling. Unduly severe work should not be demanded from night patrol men. They should be sent out with definite orders which may be varied, as circumstances permit, with respect to the time to be passed at particular spots. It should always be possible to arrange for a patrol to take some rest at a named place. If possible two constables should patrol together or a constable should be accompanied by a village talaiyari through his village limits. It is often useful for patrol constable to look up bad characters in villages not far from the roadside. To secure the due performance of road patrolling, constant checking is absolutely essential, and officers of and above the rank of Deputy Superintendent of Police must see that all subordinate officers, from Inspector downwards, perform their fair share of duty.”
இந்தப் பணி, ஒரு முழு நேர அரசு ஊழியர், அதாவது காவல் துறையைச் சேர்ந்தவரால் மட்டுமே செய்ய முடியும். அப்படி இல்லாத ஒருவரிடம் இந்தப் பணியை ஒப்படைப்பது சட்டவிரோதம்.
இந்த இளைஞர் படைக்கான தேர்வு, அந்தந்த மாவட்ட கண்காணிப்பாளர்களாலேயே நடத்தப்படும் என்று அறிவித்திருக்கிறார் ஜெயலலிதா. காவல்துறை, தீயணைப்புத் துறை மற்றும் சிறைத்துறைக்கான பணியாளர்களை நியமிப்பதற்காகவே உருவாக்கப்பட்டுள்ள தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் எதற்காக இருக்கிறது ? அந்த நிறுவனத்திடம் இப்பொறுப்பை ஒப்படைக்காமல், அந்தந்த மாவட்டக் கண்காணிப்பாளர்களே இதைச் செய்வார்கள் என்பது மிக மோசமான ஊழலுக்கும், நிர்வாகச் சீர்கேட்டுக்கும் வழி வகுக்கும்.
இரண்டாம் நிலைக் காவலர்களாகச் சேர்பவர்களுக்கு, அடுத்த பதவி உயர்வு முதல் நிலைக்காவலர். அதற்கு அடுத்தது உதவி ஆய்வாளர். சமீபத்தில் இந்த விதிமுறை மாற்றப்படும் வரை, உதவி ஆய்வாளர்களாக பதவி உயர்வு பெறுவதற்கு எழுத்துத் தேர்வும் நேர்முகத் தேர்வும் நடத்தப்படும். இந்த நேர்முகத் தேர்வை சரக டிஐஜிக்கள் நடத்துவார்கள். 2001ம் ஆண்டில், இது போல திண்டுக்கல் மாவட்டத்துக்கு நடந்த தேர்வுக் குழுவின் தலைவராக இருந்தவர் ஐ.ராஜா ஐபிஎஸ். திண்டுக்கல் சரகத்தில் உள்ள மாவட்ட கண்காணிப்பாளர்கள் அந்தக் குழுவின் உறுப்பினர்கள். உறுப்பினர்கள் ஒவ்வொருவரும், தேர்வு நடத்தி, தாங்கள் வழங்கிய மதிப்பெண்களை டிஐஜியிடம் அளிப்பார்கள். டிஐஜி இறுதி முடிவு எடுப்பார்.
2001ல் திண்டுக்கல் சரக டிஐஜியாக இருந்த ராஜா என்ன செய்தார் தெரியுமா ? ஒவ்வொரு தலைமைக் காவலரிடமும், உதவி ஆய்வாளர்களாக பதவி உயர்வு வழங்குவதற்கு 25 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை வசூல் செய்தார். தங்களுக்கு வழங்க வேண்டிய பதவி உயர்வுக்கு லஞ்சம் கொடுக்கும் அவலநிலை எங்காவது உண்டா ? இந்த விவகாரம் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு வந்து, ஒரு விரிவான விசாரணை நடத்தப்பட்டது. ( DE 26/2002/POL/HQ). விசாரணை அதிகாரி, ராஜாவிடம், தேர்வு எழுதியவர்களின் விடைத்தாள்கள் எங்கே என்று கேட்டால், அது காணாமல் போய் விட்டது என்றார். பிறகு தன் உதவியாளரிடம் கொடுத்து விட்டேன் என்றார். உதவியாளரை விசாரித்தால், அத்தனை விடைத்தாள்களும், ஐஜியிடம்தான் உள்ளது என்றார். ராஜா மீது துறை நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டதும், பயந்து போன ராஜா பழைய பைல்களில் தேடியபோது விடைத்தாள்கள் கிடைத்தது என்று எடுத்துக் கொடுத்தார். மற்ற எல்லா ஐபிஎஸ் அதிகாரிகளைப் போலவும், ராஜாவும் எவ்வித தண்டனையும் இன்றி அவ்வழக்கிலிருந்து தப்பித்தார்.
இப்படிப்பட்ட ராஜாவைத்தான் தற்போது ஜெயலலிதா, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினராக நியமித்து அழகு பார்த்துள்ளார். ஏற்கனவே தேர்வு நடத்தி வசூல் செய்ததில் அனுபவம் உள்ள ராஜா, இந்தப் பதவிக்கு நியமனம் செய்யப்படுவது பொருத்தம்தானே… இந்த நியமனமும், ஜெயலலிதாவின் சிறந்த நிர்வாகத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு.
டிஐஜி தரத்தில் உள்ள ராஜா போன்ற நபர்களே வசூலில் ஈடுபடுகையில், அதுவும், மிகக் குறைந்த ஊதியம் வாங்கும் காவலர்களிடமே அவர்கள் பதவி உயர்வுக்காக லஞ்சம் வாங்குகையில், பொதுமக்களில் இருந்து இளைஞர் படைக்கு ஆட்களைத் தேர்வு செய்வதென்றால் என்ன நடக்கும் என்பதை சொல்ல வேண்டுமா ?
ஒரு ஆண் காவலராக தேர்ச்சி பெற வேண்டுமென்றால் அவர் குறைந்த பட்சம் 168 சென்டிமீட்டர் உயரம் இருக்க வேண்டும். பெண்ணாக இருந்தால் 157 சென்டி மீட்டர் உயரம் இருக்க வேண்டும். இப்படி ஒரு தகுதி நிர்ணயம் செய்வதற்கான காரணம், உடல் ரீதியாக காவலர் பொருத்தமாக இருக்க வேண்டும் என்பதே. ஆனால் இளைஞர் படைக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் 18 முதல் 30 வயது வரை இருந்தால் போதும் என்று வரையறுக்கப்பட்டிருக்கிறது.
இந்த இளைஞர் படைக்குத் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மாதந்தோறும் 7500 ரூபாய் தொகுப்பூதியமாக வழங்கப்படுமாம். மாதம் 7500 ரூபாயை வைத்துக் கொண்டு, தற்போது விற்கும் விலைவாசியில் யாராவது குடும்பம் நடத்த முடியுமா ? மேலும், இப்படி குறைவான ஊதியம் பெறுபவர்கள், தங்கள் தேவைக்காக பொதுமக்களை மிரட்டிப் பணம் பறிப்பார்களா இல்லையா ? 1992ல் விலைவாசியிலேயே வளர்ப்பு மகள் திருமணத்தை 100 கோடி செலவு செய்து நடத்திய ஜெயலலிதா மாதம் 7500 ரூபாய் வருமானத்தில் வாழ்ந்து காட்டுவாரா ?
மேலும், இவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் இளைஞர் படையினர், காவல் துறையில் உள்ள உயர் உயர் அதிகாரிகளின் வீட்டு ஆர்டர்லிகளாகப் பயன்படுத்தப்படும் வாய்ப்பும் அதிகம். இப்படிக் குறைந்த ஊதியம் பெறும் இந்த இளைஞர்களை, உயர் அதிகாரிகள் கடுமையாக வேலை வாங்குவதற்கான வாய்ப்பு ஏராளம். இப்படிப்பட்ட உழைப்புச் சுரண்டலை எப்படி அனுமதிக்க முடியும் ?
தமிழக காவல்துறையில் காவலர்களாக பணியில் சேர்பவர்களை இந்த உயர் அதிகாரிகள் படுத்தும் பாடு சொல்லி மாளாது. 40 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் காவல்துறையில் சேர்வதற்கு ஆளே இருக்க மாட்டார்கள். போலீஸ் வேலைக்கு ஆள் தேவை என்று நோட்டீஸ் ஒட்டிய காலமேல்லாம் உண்டு. அப்போதெல்லாம் 6வது வரை படித்திருந்தாலே, காவல்துறையில் காவலராகச் சேர்த்துக் கொள்வார்கள். நாளடைவில் அனைவரும் படித்து, காவலர் பதவியும் கவர்ச்சிரமானதாக ஆகியதும், படித்த இளைஞர்கள் ஏராளமானோர் இப்பணியைத் தேர்ந்தெடுக்கத் தொடங்கினார்கள். காவல்துறையில், ஆய்வாளர் முதல் அத்தனை உயர் அதிகாரிகளையும் காவலர்கள் அய்யா என்றுதான் அழைக்க வேண்டும். சமீப காலமாக பணியில் சேரும் காவலர்கள் படித்த இளைஞர்களாக இருப்பதால் அவர்கள் அய்யா என்று அழைக்காமல் சார் என்று உயர் அதிகாரிகளை அழைப்பார்கள். இப்படி சார் என்று அழைக்கும் காவலர்களை, பெரும்பாலான உயர் அதிகாரிகளுக்குப் பிடிக்காது. அப்படி சார் என்று ஒரு காவலர் அழைத்தார் என்றால், அந்தக் காவலரை அழைத்து, அவர் கையில் ஒரு ஃப்ளாஸ்கை கொடுத்து முதலில் டீ வாங்கி வரச் சொல்லுவார்கள். ஃப்ளாஸ்கை எடுத்துப் பழகிய காவலர், நாளடைவில் அய்யா என்று அழைக்கப் பழகி விடுவார். இதுதான் காவல்துறையில் இன்று வரை நிலவும் நியதி.
சவுக்கு லஞ்ச ஒழிப்புத் துறையில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, ஒரு காவலர் பணியாற்றிக் கொண்டிருந்தார். அவர் டெல்லியில் கமாண்டோ பயிற்சி முடித்தவர். அவரை லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி ஒருவரிடம் நியமித்திருந்தார்கள். அந்தக் காவலருக்கு வேலையே ஃப்ளாஸ்கில் காப்பி வாங்கி வருவதுதான். ஒரு நாள் அந்தக் காவலர், கை தவறி காபி ஊற்றுகையில் சிந்தி விட்டார். கோபமடைந்த டிஎஸ்பி என்ன சொன்னார் தெரியுமா ? “என்னய்யா.. கமாண்டோ ட்ரெய்னிங் முடிச்சுருக்கேன்னு சொல்ற.. ஒரு காப்பி ஒழுங்கா ஊத்தத் தெரியலையே….” என்று அந்தக் காவலரைத் திட்டினார். இதுதான் காவலர்களின் நிலை.
அதிகாரிகள் வீட்டில் காய்கறி வாங்கித் தருவது, அதிகாரிகளின் பிள்ளைகளை பள்ளிக்குச் சென்று விடுவது, அதிகாரிகளின் பிள்ளைகளுக்கு மதிய உணவு எடுத்துச் செல்வது… (ஏன் அவர்களே எடுத்துச் செல்லமாட்டார்களா என்று அறிவுக்கெட்டத்தனமாக கேட்காதீர்கள்… காலையிலேயே எடுத்துச் சென்றால் சூடு ஆறி விடாதா…. ? அதிகாரிகளின் பிள்ளைகள் ஆறிப்போன உணவை சாப்பிடலாமா.. ?) அதிகாரிகள் வீட்டுக்கு மளிகை சாமான்கள் வாங்கித் தருவது, இதர பொருட்களை வாங்கித் தருவது, அதிகாரிகளின் வயதான பெற்றோர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது, அதிகாரிகளுக்கு சொந்தமான நிலம் இருந்தால் அதில் வெள்ளாமை பார்ப்பது, அந்த நிலங்களின் விளைபொருட்களை சந்தையில் விற்பது, அதிகாரிகள் வீடு கட்டினால், அந்த கட்டுமானப் பணிகளை மேற்பார்வை செய்வது…. இதையெல்லாம் விட முக்கியமாக, அதிகாரிகள் வளர்ப்பு நாய்களை நடைபயிற்சிக்கு அழைத்துச் செல்வது, அந்த நாய்களைக் குளிப்பாட்டுவது, அவற்றை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது…. இது போன்ற அதி அத்தியாவசியமான பணிகளுக்கு காவலர்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறார்கள். இது போக ஓட்டுநர்களாக இருக்கும் காவலர்களில் பெரும்பாலானோர், வீட்டு வேலைகளுக்கே பயன்படுத்தப்பட்டு வருகிறார்கள். இந்தப் பணிகளை காவலர்கள் எதிர்த்துக் கேட்க முடியாது. அவர்களுக்கு சங்கம் கிடையாது. எதிர்த்துப் பேசினால், மணிமுத்தாறு சிறப்புக் காவல் படை பட்டாலியன்தான்.
முழு நேர அரசு ஊழியர்களான இவர்களுக்கே இந்த நிலை என்றால், 7500 ரூபாய் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்டு, நாளை பணி நிரந்தரம் கிடைக்கும் என்ற வாக்குறுதியின் அடிப்படையில் நியமிக்கப்படுபவர்களின் நிலையை எண்ணிப் பாருங்கள்… இது எவ்வளவு மோசமான உழைப்புச் சுரண்டலாக அமையும் ?
2001ல் என்று நினைவு. லஞ்ச ஒழிப்புத் துறையில் மாதம் 2000 ரூபாய் சம்பளத்திற்கு டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணியிடத்திற்கு வேலை வாய்ப்பகத்திலிருந்து ஆட்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். மொத்தம் 3 பணியிடங்கள். அந்த 3 பணியிடங்களுக்கு 20 பேருக்கு மேல் நேர்முகத் தேர்வுக்கு வந்திருந்தார்கள். அதில் வந்த ஒருவரின் வயது 50. அந்தக் காலத்து பன்ச் ஆபரேட்டர் கோர்ஸ் படித்திருந்தார். 50 வயதில் மாதம் 2000 வழங்கப்படும் தற்காலிகப் பணிக்கு ஒருவர் வருகிறார் என்றால், என்ன காரணம்… எப்படியாவது பணி நிரந்தரம் ஆகும் என்ற ஒரே காரணம்தானே…
பணி நிரந்தரம் என்ற ஒரு காரணத்தை வைத்து, இப்படி ஒரு உழைப்புச் சுரண்டலை ஜெயலலிதா அரசு நடத்துவதை எப்படி அனுமதிக்க முடியும் ?
இந்த இளைஞர் படையில் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள், வருடந்தோறும் காவலர் பணியிடங்களில் ஏற்படும் காலியிடங்களில் ஒரு சிறப்புத் தேர்வு வைத்து சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். அந்த சிறப்புத் தேர்வை சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும். அப்படி தேர்ச்சியடையாத இளைஞர் படையினர் 40 வயது வரை அந்தப் பணியில் தொடரலாம். அதற்குப் பிறகு, அவர்களுக்கு வேறு வேலை வாங்கித் தரும் ஏற்பாடுகளை அரசு செய்யுமாம்….
உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என்று மாறி மாறி உத்தரவுகள் இட்டும், 12 ஆயிரம் மக்கள் நலப்பணியாளர்களுக்கு வேலை வழங்காமல் இழுத்தடிக்கும் இதே ஜெயலலிதாதான் 40 வயதுக்குப் பிறகு இளைஞர் படையினருக்கு மாற்று வேலை ஏற்பாடு செய்கிறாராம்…. எப்படி இருக்கிறது… ? ஒன்றரை லட்சம் அரசு ஊழியர்களை ஒரே நாளில் பணி நீக்கம் செய்து உத்தரவிட்ட ஜெயலலிதா இப்படி மாற்று வேலை ஏற்பாடுகளை அரசு செய்யும் என்று சொல்வது, சாத்தான் வேதம் ஓதுவது போலவே உள்ளது. இது தவிரவும், காவலர்களைத் தேர்ந்தெடுக்கவென்று தமிழ்நாடு காவல் துறை சார்நிலைப் பணியாளர்களுக்கான சிறப்பு விதிகள் (Tamil Nadu Police Subordinate Services Special Rules) உள்ளது. அந்த விதிகளுக்கு மாறாக, இது போன்ற சிறப்பு இளைஞர் படையிலிருந்து காவலர்களைத் தேர்வு செய்வது சட்ட விரோதம்.
50 ஆயிரம் இளைஞர் சிறப்புக் காவல் பணியிடங்களைத் தோற்றுவித்து, அவர்களும் விலங்குகளைப் போல உழைத்து, பணி நிரந்தரம் ஆகும் என்று நம்பி காத்திருக்கும் வேளையில்,அடுத்த அரசு வந்து இவர்கள் அத்தனை பேரையும் பணி நீக்கம் செய்யும். அவர்கள் குடும்பத்தோடு வீதியில் போராடுவார்கள். நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பார்கள். ஏற்கனவே லட்சக்கணக்கான வழக்குகளால் தள்ளாடும் நீதிமன்றங்கள், மீண்டும் பணிப்பளுவைச் சந்திக்கும்…. இதைத் தவிர இந்த நியமனத்தால் என்ன நேர்ந்து விடப் போகிறது.
கருணாநிதியிடம் ஆயிரம் குறைகளைச் சொன்னாலும், அவரைப் போன்ற சிறந்த நிர்வாகியைப் பார்க்க முடியாது. அரசு எடுக்கும் முடிவுகள் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்தவர் அவர். இது போன்ற அயோக்கியத்தனமான திட்டங்களை அவரிடமும் அதிகாரிகள் சொல்லியிருப்பார்கள். ஆனால் கருணாநிதி இது போன்ற திட்டங்களை அனுமதிக்கவே மாட்டார்.
இந்த இளைஞர் படை குறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை குறிப்பிடத்தக்கது.
“காவல் துறையில் பணியாற்று வோரின் எண்ணிக்கை போதவில்லை என்றால் ஏற்கனவே பல ஆண்டுக் காலமாக நடைமுறையில் உள்ள தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலமாக பணியமர்த்தி, அவர்களின் எண்ணிக்கையை உயர்த்திக் கொள்ள வேண்டியதுதானே? அரசுக்குப் புதிதாக இதுபோல் அதிகம் பேரை தேர்ந்தெடுப்பதென்றால் அதற்குரிய பணி நியமன விதிமுறைகளையும், ஊதிய அடிப்படைகளையும்தானே பின்பற்ற வேண்டும். காவல் துறை கண்காணிப்பாளரே இவர்களை தேர்ந்தெடுப்பார் என்றால், அங்கன்வாடிப் பணியாளர்களுக்கும், சத்துணவுப் பணியாளர்களுக்கும் நேர்ந்த கதியைப்போல, அந்தந்த மாவட்டங்களில் உள்ள அ.தி.மு.க.வினர் பரிந்துரைகளைத்தானே ஏற்க வேண்டிய நிலை ஏற்படும். கட்சிக்காரர்களுக்குப் பணிகள் வழங்க வேண்டும், அவர்களை காவல் துறையிலே நுழைக்க வேண்டும், முறைப்படி அவர்களை சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக தேர்ந்தெடுத்தால், தாங்கள் நினைத்தவர்களையெல்லாம் பணியிலே சேர்க்க முடியாது என்பதற்காக இந்த முயற்சி செய்யப் பட்டுள்ளதா? அ.தி.மு.க. ஆட்சியின் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ள மற்றொரு தவறான திட்டம்தான் இது. ஏற்கனவே பணியிலே உள்ள 13 ஆயிரம் மக்கள் நலப் பணியாளர்களை பணியிலிருந்து நீக்கி தெருவிலே நிறுத்துவார்களாம்! ஆனால்; காவல் துறையில் 50 ஆயிரம் பேரை புதிதாக வேலையிலே அமர்த்தப் போகிறார்களாம் !”
என்று கருணாநிதி தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ள விஷயங்கள் குறிப்பிடத்தக்கன. அங்கன்வாடிப் பணியாளர்கள் நியமனத்தில், அதிமுக அடிமைகள் வசூல் வேட்டையில் இறங்கி, அந்த அடிமைகளின் பரிந்துரைகளை ஏற்காத கலெக்டர்கள் மாற்றப்பட்டது சமீபத்தில்தான் நடந்தேறியுள்ளது. இந்த இளைஞர் காவல் படை அறிவிப்பு வெளி வந்த உடனேயே, அதிமுக அடிமைகள் வசூலை தொடங்கி விட்டதாகத் தகவல்கள் வருகின்றன.
அரசு நிர்வாகத்தில் இது போல பல குளறுபடிகளை அரங்கேற்றுவதில் ஜெயலலிதாவுக்கு நிகர் அவரேதான். 1993ல், வரதட்சிணை ஒழிப்புப் பிரிவு என்று ஒரு பிரிவுக்காக, பிரத்யேகமாக டிஎஸ்பிக்களை தேர்ந்தெடுத்தார் ஜெயலலிதா. அவர்கள் அத்தனை பேரும் பெண்கள். ஏனென்றால், பெண்கள் வரதட்சிணையை சிறப்பாக ஒழிப்பார்களாம். இப்படித் தேர்ந்தெடுக்கப்பட்ட அத்தனை பெண் அதிகாரிகளும் பணியில் சேர்ந்து சில வருடங்களிலேயே, நாங்களும் மற்ற டிஎஸ்பிக்களைப் போலத்தான். எங்களுக்கும் ஐபிஎஸ் வேண்டும் என்று, உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் வரை வழக்கு தொடர்ந்தார்கள். இந்த வரதட்சிணை ஒழிப்புப் பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பெண் அதிகாரி கூட உருப்படியான அதிகாரி இல்லை என்பதே காவல்துறையில் நிலவும் கருத்து. லஞ்ச ஒழிப்புத் துறையில் வேலை செய்த ஆசியம்மாள் மற்றும் லட்சுமி ஆகிய பெண் அதிகாரிகள் இருவரின் பணியையும் பார்த்த போது இந்தக் கருத்து உண்மை என்றே தோன்றுகிறது. ஜெயலலிதாவின் ஆட்சியில் டிஎஸ்பிக்களாக தேர்ந்தெடுக்கப்பட்டதால், இந்த ஆசியம்மாளுக்கும், லட்சுமிக்கும் தாங்களே ஜெயலலிதா என்ற நினைப்பு. அப்படி ஒரு ஆணவம், இறுமாப்பு. மற்ற அதிகாரிகள் செய்யும் பணியில் பத்தில் ஒரு பங்கு கூட இவர்கள் இருவருக்கும் செய்யத் தெரியாது. ஆனால் இவர்கள் செய்யும் அரட்டல் உருட்டல் இருக்கிறதே…. நேரடி ஐபிஎஸ் அதிகாரி கூடத் தோற்று விடுவார். அப்படி அலப்பறை பண்ணுவார்கள். அந்த வரதட்சிணை ஒழிப்புப் பிரிவுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட அத்தனை பெண் அதிகாரிகளும் ஐபிஎஸ் அதிகாரிகள்.
ஜெயலலிதாவின் இந்த இளைஞர்கள் சிறப்புக் காவல் படை அறிவிப்பை எதிர்த்து, தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் எலிப்பி தர்மாராவ் மற்றும் அருணா ஜெகதீசன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இரண்டு நீதிபதிகள் அடங்கிய டிவிஷன் பென்ச் என்றாலும், அந்த அமர்வில் மூத்த நீதிபதிதான் எப்போதுமே சட்டாம்பிள்ளையாக இருப்பார். வெகு அரிதாகவே, நீதிபதி சந்துரு போன்றவர்கள் மட்டுமே, தங்கள் கருத்தை தயங்காமல் சொல்லுவார்கள். மற்ற நீதிபதிகள் அனைவரும், ஜெயலலிதாவின் அமைச்சர்கள் போலதான் நடந்து கொள்வார்கள்.
ஆகையால், அந்த டிவிஷன் பென்ச் வழங்கிய தீர்ப்பு, நீதிபதி எலிப்பி தர்மாராவின் தீர்ப்பே.
வழக்கு விசாரணை தொடங்கியதும், நீதிபதி எலிப்பி தர்மா ராவ், இது வெறும் அறிவிப்புதானே அதற்குள் எதற்கு அவசரப்படுகிறீர்கள்… உங்கள் வழக்கைப் பார்த்து விட்டு, அரசு இந்த முடிவைக் கைவிட்டாலும் விடலாம் என்று நகைச்சுவையாகச் சொன்னார்.
உடனே கைவிட்டால் பரவாயில்லை, ஆனால் கைவிடமாட்டார்கள் போலிருக்கிறது என்று, இந்த அறிவிப்பின் மீது நடவடிக்கை எடுப்பதைத் தடை செய்ய வேண்டும் என்று கூறினார். சரி.. இப்போதைக்கு ஆணை எதுவும் வரவில்லை, நான் விசாரணையை தள்ளி வைக்கிறேன் என்றார் நீதிபதி. சொல்லி விட்டு, நீங்கள் ஏதோ சொல்ல வந்தீர்களே… என்று அரசு தலைமை வழக்கறிஞரான வாதப்புலி வண்டுமுருகனைப் பார்த்துக் கேட்டார்….
வண்டு முருகன் எழுந்து, ஆங்கில L எழுத்தை திருப்பிப் போட்டது போல குனிந்து நீதிபதியைப் பார்த்துக் கும்பிட்டார். வண்டு முருகனின் ஓப்பனிங்கே களை கட்டியது. இந்த வழக்கு அவசரப்பட்டு போடப்பட்டதுதானே (This is premature) என்றார். எப்போதும் போல மை லார்ட் சரியாக சொல்கிறீர்கள் (As usual my lord is right) என்றார். என்றார். அதனால் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றார்.
உடனே ராதாகிருஷ்ணன் எழுந்து, இந்த வழக்கை தள்ளுபடி செய்வதானால் நான் இதன் மீது வாதிட விரும்புகிறேன் என்று வாதாடத் தொடங்கினார்.
முதலமைச்சர் சட்டப்பேரவையில் பேரவை விதிகள் 110ன் கீழ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பில், இளைஞர் காவல் படையினர் என்ன வயதில் இருக்க வேண்டும், அவர்களுக்கு என்ன ஊதியம், எந்த வயது வரை வேலையில் இருப்பார்கள், அவர்கள் காவல்துறையில் எப்படி எடுத்துக் கொள்ளப்படுவார்கள் என்ற விபரங்கள் தெளிவாக இருக்கிறது. அப்படி இருக்கையில் இதை அரசின் முடிவாக மட்டுமே கருத முடியும். வெறும் அறிவிப்பாக எடுத்துக் கொள்ள முடியாது. அண்ணா நூற்றாண்டு நூலகத்தை குழந்தைகள் நல மருத்துவமனையாக மாற்றும் அரசின் முடிவு, ஒரு பத்திரிக்கை குறிப்பாகவே வெளியிடப்பட்டது. அதை எதிர்த்து தொடரப்பட்ட பொதுநல வழக்கை இதே நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டு அது இன்னும் நிலுவையில் உள்ளது. அதற்கும் மேலாக, பேருந்துக் கட்டண உயர்வு பற்றிய அறிவிப்பு, ஜெயா டிவி என்ற தனியார் தொலைக்காட்சியில் வெளியிடப்பட்டது. அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கையும் இதே நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆகையால், இதை வெறும் அரசின் அறிவிப்பாக எடுத்துக் கொள்ள முடியாது என்று கூறினார்.
நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்ற வண்டு முருகனைப் பார்த்துக் கேட்டார். மீண்டும் எழுந்து அதே L. ராதாகிருஷ்ணன், ஒரு விஷயத்தை சரிவர புரிந்து கொள்ளவில்லை. இந்த இளைஞர் படையிலிருந்து ஒரு சிறு பகுதி மட்டுமே காவல்துறையில் இணைத்துக் கொள்ளப்படுவார்கள். குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 39ன் படி, பொதுமக்களே குற்றத்தைப் பற்றி அரசுக்கு தகவல் சொல்ல வேண்டும் என்று உள்ளது என்று கூறினார். அவர் வாதிட்டுக் கொண்டிருக்கும்போதே நீதிபதி இடைமறித்து, தீர்ப்பை உத்தரவிடத் தொடங்கினார்.
நீதிபதி தனது தீர்ப்பில், இந்த இளைஞர் காவல் படை பற்றிய முதலமைச்சரின் அறிவிப்பு, சட்டசபையில் வெளியிட்ட ஒரு அறிவிப்பு. இது குறித்து எந்த வித விதிகளோ வரைமுறைகளோ உருவாக்கப்படவில்லை. ஆகையால், இந்த வழக்கு அவசரப்பட்டு (premature) போடப்பட்டது. ஒரு அறிவிப்பை பொதுநல வழக்கு மூலம் கேள்விக்குள்ளாக்க முடியாது என்பதால், இவ்வழக்கை தள்ளுபடி செய்கிறேன் என்று உத்தரவிட்டார்.
பேரவை விதிகள் 110ன் படி அமைச்சர்கள் மட்டுமே அறிக்கை படிக்க இயலும். அவ்வாறு படிக்கும் அறிக்கையின் மீது எந்த விவாதமும் நடத்த இயலாது. அமைச்சர்கள் மட்டுமே படிப்பதால், அந்த விதியின் கீழ் படிக்கப்படும் அறிக்கைகள் அரசின் முடிவாக மட்டுமே இருக்க முடியும். அதனால்தான் அதன் மீது விவாதம் நடத்த முடியாத வகையில் அந்த அறிக்கை வெளியிடப்படுகிறது. நீதிபதி எலிப்பி தர்மாராவின் வாதத்தின்படியே பார்த்தாலும், முதலமைச்சர் அவையில் சாதாரணமாக ஒரு அறிக்கையை படித்திருந்தால், இது வெறும் அறிவிப்பு, அரசின் முடிவு அல்ல என்று எடுத்துக் கொள்ளலாம். ஏனெனில், விவாதத்திற்குப் பிறகு, அந்த அறிவிப்பில் மாற்றம் வருவதற்கு வாய்ப்பு உண்டு. விதி 110ன் கீழ் படித்ததால் இது அரசின் முடிவாக மட்டுமே இருக்க முடியும். ஜெயலலிதா புல்லா அவென்யு பொதுக்கூட்டத்தில் பேசியதற்கு எதிராக வழக்கு தொடுக்கப்படவில்லை. 110ன் கீழ் சட்டப்பேரவையில் வெளியிட்ட அறிவிப்புக்கு எதிராகவே வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இது ஏன் நீதிபதிக்கு புரியவில்லை என்பது நமக்குப் புரியவில்லை.
இது தவிரவும், ஜெயலலிதாவின் 110 அறிக்கை வெறும் அறிவிப்பா, இல்லை முடிவா என்பதை நீதிபதி எலிப்பி தர்மாராவ் எப்படிச் சொல்ல முடியும் ? அதை அரசு வழக்கறிஞர்தானே சொல்ல முடியும் ? என்ன சொல்கிறீர்கள்.. இந்த அறிவிப்பின் மீது அரசாணை வெளியிடப் போகிறீர்களா என்று கேட்டால் ஒரே நிமிடத்தில் இதற்கான விடை தெரிந்து விடுமே…. பதில் மனு தாக்கல் செய்யுங்கள் என்று உத்தரவிட்டால், அரசின் பதில் மனுவில், இது வெறும் அறிவிப்பு.. ஜெயலலிதா பொழுது போகாமல் இப்படித்தான் சட்டசபையில் லூசுத்தனமாக பேசிக்கொண்டிருப்பார் இதையெல்லாம் கண்டு கொள்ளாதீர்கள் என்றா கூறுவார்கள்… ? அந்த பதில் மனுவில் அரசின் நிலைபாடு தெரியப்படுத்தப்பட்டிருக்குமா இல்லையா ?
ஜெயலலிதாவின் 110 அறிக்கை வெறும் அறிவிப்புதான் முடிவு அல்ல என்று ஜெயலலிதாவே நீதிபதி எலிப்பி தர்மாராவிடம் சொல்லியிருப்பாரா என்று தெரியவில்லை. ஒரு அநீதியான திட்டம் நிறைவேறப் போகிறது என்பதை நீதிபதியின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டால் அதைத் தடுக்க வேண்டியது நீதிமன்றத்தின் பணி கிடையாதா ?
Dr. D.C. Wadhwa & Ors. Vs. State of Bihar & Ors. என்ற வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதி பி.என்.பகவதி இவ்வாறு கூறியுள்ளார்.
“The rule of law constitutes the core of our Constitution of India and it is the essence of the rule of law that the exercise of the power by the State whether it be the Legislature or the Executive or any other authority should be within the constitutional limitations and if any practice is adopted by the Executive which is in flagrant and systematic violation of its constitutional limitations, petitioner No. 1 as a member of the public would have sufficient interest to challenge such practice by filing a writ petition and it would be the constitutional duty of this Court to entertain the writ petition and adjudicate upon the validity of such practice.”
இத்தீர்ப்பின்படி விதிமுறைகளுக்கும், அரசியல் அமைப்புச் சட்டத்திற்கும் எதிராக ஒரு திட்டத்தை அரசு செயல்படுத்த முனையுமேயானால், ஒரு குடிமகன், அதை எதிர்த்து நீதிமன்றம் வரலாம். அதை விசாரிக்க வேண்டியது நீதிமன்றத்தின் கடமை என்று கூறியுள்ளது. அதில் பயன்படுத்தியுள்ள வார்த்தை முக்கியமானது.
‘it would be the constitutional duty of this Court to entertain the writ petition and adjudicate upon the validity of such practice’ adjudicate என்றால், இரு தரப்பின் வாதத்தையும் கேட்க வேண்டும். அரசு பதில் மனு கூடத் தாக்கல் செய்யும் முன்பாக அவசர அவசரமாக இந்த வழக்கை ஏன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது எவ்வளவு யோசித்தாலும் புரியமாட்டேன்கிறது.
அரசாணை வெளியிட்ட பிறகு வழக்கு தொடர்ந்தால் நீதிபதி எலிப்பி தர்மாராவ் என்ன சொல்லுவார்… ?
இப்போதுதான் அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த அரசாணையைப் பின்பற்றி பொது விளம்பரங்கள் வெளியிடப்படவில்லை. இந்த வழக்கு அவசரப்பட்டு தாக்கல் செய்யப்பட்ட வழக்கு.
இளைஞர் படைக்கு வேலை வேண்டுவோர் விண்ணப்பிக்கலாம் என்று நாளிதழ்களில் விளம்பரம் வெளியிடப்பட்ட பிறகு வந்தால் என்ன சொல்லுவார் ?
விளம்பரங்கள்தான் வெளியிடப்பட்டிருக்கின்றன. இன்னும் தேர்வு எதுவும் நடைபெறவில்லை. தேர்வு நடைபெறும் முன்பாகவே அவசரப்பட்டு வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறது.
தேர்வு முடிந்தபிறகு வழக்கு தொடர்ந்தால் ?
இப்போதுதான் தேர்வு நடைபெற்றிருக்கிறது. அரசு இந்தத் தேர்வை ரத்து செய்யவும் வாய்ப்பு இருக்கிறது. வெறும் தேர்வை எதிர்த்து வழக்கு தொடுக்க இயலாது. மேலும், மனுதாரர் இந்தத் தேர்வில் கலந்து கொண்டவர் அல்ல. தேர்வில் கலந்து கொண்டவர் யாராவதுதான் இதை எதிர்த்து வழக்கு தாக்கல் செய்ய முடியும். எனவே மனுவை தள்ளுபடி செய்கிறேன்.
முடிவுகள் வெளியிடப்பட்ட பிறகு வழக்கு தொடர்ந்தால் ?
தேர்வு முடிவுகள் இப்போதுதான் வெளியாகியுள்ளது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இன்னும் பணியாணை வழங்கப்படவில்லை. அவர்களுக்கு பயிற்சியளிப்பது குறித்து அரசு என்ன முடிவெடுத்திருக்கிறது என்பதும் தெரியவில்லை. இந்த விபரங்கள் தெரியாத நிலையில் மனுதாரர் அவசரப்பட்டு இந்த வழக்கை தொடுத்திருக்கிறார். அதனால் இந்த மனுவை தள்ளுபடி செய்கிறேன்.
தேர்வுக்குப் பிறகு அனைவரும் பணியில் சேர்ந்த பிறகு வழக்கு தொடர்ந்தால் ?
அரசு ஒரு தேர்வு நடத்தி, அதில் தேர்ச்சி பெற்றவர்கள் பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கையில் மனுதாரர் மிகவும் தாமதமாக நீதிமன்றத்தை அணுகியுள்ளார். இந்த நேரத்தில், இத்தேர்வை ரத்து செய்தால், தேர்வெழுதிய ஆயிரக்கணக்கானோரின் எதிர்காலம் பாதிக்கப்படும். மேலும் மனுதாரர் இத்தேர்வில் கலந்து கொள்ளவில்லை. ஆகையால் அவருக்கு இத்தேர்வை எதிர்த்து வழக்கு தொடுக்க முகாந்திரம் இல்லை. தேர்வெழுதிய ஆயிரக்கணக்கானோரின் எதிர்காலத்தை கணக்கில் கொண்டு, இந்த வழக்கை தள்ளுபடி செய்வதோடு, இவ்வளவு தாமதமாக வழக்கு தொடுத்து, நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்ததற்காக மனுதாரருக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கிறேன். மனுதாரர் இந்தத் தொகையை ஆறு வார காலத்திற்குள் இலவச சட்ட உதவி மையத்தில் செலுத்த வேண்டும் என்று தீர்ப்பளித்திருப்பார்.
ஒரு ஆண்டுக்கு முன்னால், சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த கோகலே உச்ச நீதிமன்றத்துக்கு நியமிக்கப்பட்டதும் ஏற்பட்ட காலியிடத்தில், அடுத்து மூத்த நீதிபதியான எலிப்பி தர்மாராவ், பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். தலைமை நீதிபதி பொறுப்பேற்றுக் கொண்டதும், எலிப்பி தர்மாராவ், வாஸ்து படி, தலைமை நீதிபதியின் அறைக்குச் செல்லும் வழியை மாற்றி அமைத்தார். அந்த தலைமை நீதிபதியின் நாற்காலிக்கு சிறப்பு பூஜை செய்தார். இவ்வளவும செய்தால் ஒன்றிரண்டு நாட்களில் அடுத்த நீதிபதியை நியமித்து விட்டார்கள். (வடை போச்சே….) தற்போது தலைமை நீதிபதியாக உள்ள இக்பால் உச்சநீதிமன்றத்துக்கு செல்ல இருக்கிறார். அவர் சென்ற பிறகு, வேறு நீதிபதி நியமிக்கப்படாவிட்டால், மீண்டும் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்க உள்ளார் நீதிபதி எலிப்பி தர்மாராவ்.
நீதிபதி எலிப்பி தர்மாராவ்
நந்தினி சுந்தர் என்ற டெல்லி பல்கலைக்கழகத்தின் சமூகவியல் பேராசிரியர் சட்டீஸ்கர் மாநிலத்தில் இதே போன்று உருவாக்கப்பட்ட இளைஞர் படையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். சட்டீஸ்கர் மாநிலத்தில் ஜெயலலிதாவைப் போல அவசரமாகவெல்லாம் இந்த இளைஞர் படை உருவாக்கப்படவில்லை.
பேராசிரியர் நந்தினி சுந்தர்
விதிகளில் தேவையான மாற்றங்களைச் செய்து முடித்த பிறகே, அந்த இளைஞர் படை உருவாக்கப்பட்டது. சல்வா ஜுடும், சிறப்புக் காவல் படை என்ற பெயர்களிலெல்லாம் அழைக்கப்பட்ட அந்த படையை ரத்து செய்த உச்ச நீதிமன்றம் அந்தத் தீர்ப்பில்,
The creation of a cadre like groups of SPOs, temporarily employed and paid an honorarium, out of uneducated or undereducated tribal youth, many of who are also informed by feelings of rage, hatred and a desire for revenge, to combat Maoist/Naxalite activities runs counter to both those prescriptions. We have dealt with the same extensively hereinabove. We need to add one more necessary observation. It is obvious that the State is using the engagement of SPOs, on allegedly temporary basis and by paying “honoraria”, to overcome the shortages and shortcomings of currently available capacities and forces within the formal policing structures. The need itself is clearly a long-run need. Consequently, such actions of the State may be an abdication of constitutional responsibilities to provide appropriate security to citizens, by having an appropriately trained professional police force of sufficient numbers and properly equipped on a permanent basis. These are essential state functions, and cannot be divested or discharged through the creation of temporary cadres with varying degrees of state control. They necessarily have to be delivered by forces that are and personnel who are completely under the control of the State, permanent in nature, and appropriately trained to discharge their duties within the four corners of constitutional permissibility. The conditions of employment of such personnel also have to hew to constitutional limitations. The instant matters, in the case of SPOs in Chattisgarh, represent an extreme form of transgression of constitutional boundaries.
இந்தத் தீர்ப்பு ஜெயலலிதா உருவாக்க இருக்கும் இந்த “தமிழ்நாடு இளைஞர் சிறப்புக் காவல் படை”க்கு முழுமையாகப் பொருந்தும்.
இதனால்தான் இதை எதிர்க்கிறோம். ஜனநாயகத்தின் மீதும், தமிழக மக்களின் மீதும் அன்பு கொண்டுள்ள அத்தனை மனித உரிமை ஆர்வலர்களும் முழு மனதோடு இந்தத் திட்டத்தை எதிர்க்க வேண்டும். இது ஒரு மக்கள் விரோத, உழைப்பைச் சுரண்டும் திட்டம் என்பதை புரிந்து கொள்ளுங்கள் தோழர்களே….