காதலிப்பவர்களுக்கெல்லாம் ஒரு அற்புத செய்தி. காதலிக்கும் போது பலருக்கு இருக்கும் ஒரு அச்சம் நம் காதல் உண்மையானதுதானா… நம் காதல் நிறைவேறுமா… நாம் ஒருவரையொருவர் காதலிப்பது சரியானதா… இல்லையா.. இது போல பல சந்தேகங்கள் காதலர்களுக்கு எழுவது இயல்பானதே.
ஆனால் இந்தச் சந்தேகங்களையெல்லாம் யாரிடம் போய் தீர்த்துக் கொள்வது ? காதலித்துக் கொண்டு, கல்யாணமும் செய்து, அந்தக் காதல் உண்மையான காதல் அல்ல என்பது தெரிகையில் ஏற்படும் வேதனை, இழப்பு எத்தகையது… ?
அப்படியெல்லாம் காதலித்து, கல்யாணம் வரை போய் காதலிப்பவர்கள் யாரும் அவஸ்தைப் பட வேண்டியதில்லை. காதலர்களுக்கெல்லாம் வரப்பிரசாதமாக, ஒரு காதல் டாக்டர் இருக்கிறார் என்பது தெரிந்தால் காதலர்கள் எப்படி மகிழ்வார்கள்…. ? எவன்டா அது…. பாருங்க சார்.. எவ்வளவு சீரியஸான மேட்டர் பேசிக்கிட்டு இருக்கும்போது ஒரு பொறுப்பில்லாத பயல், அந்த டாக்டர் ஸ்டெதஸ்கோப்பை எங்க வச்சு டெஸ்ட் பண்ணுவார்னு கேக்கறான்… இடியட்…
சனி அன்று காலை ஹோட்டல் ஃபோர்ட்டல்லில் தமிழ்க்குடிதாங்கி, சமூகநீதிப் போராளி, வாழும் பெரியார், வன்னிய குல திலகம், வன்னியரின் வாழ்வுரிமை, (வேற என்ன சொல்லலாம்….) அன்புமணியின் அப்பா, சவுமியாவின் மாமனார்.. போதும்.. தருமபுரி கலவரம் தொடர்பாக ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தினார்.
பத்திரிக்கையாளர் சந்திப்பு தொடங்கியதும், தருமபுரியில் நடந்தவை என்ன என்பதை விளக்க, பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் செந்திலை பேசச் சொன்னார் தமிழ்த் தடிதாங்கி. சாரி… குடிதாங்கி.
மருத்துவர் செந்தில், நாயக்கன் கொட்டாய் பகுதியைச் சேர்ந்த திவ்யா என்ற பெண்ணை, இளவரசன் என்ற வாலிபன் கிண்டல் செய்து, தொடர்ந்து தொந்தரவு செய்து வந்திருக்கிறான். திவ்யா பிஎஸ்ஸி நர்சிங் படித்துக் கொண்டிருந்தாள். இளவரசனின் தொந்தரவு தாங்க முடியாமல், திவ்யாவை ஹாஸ்டலில் சேர்த்தனர். ஹாஸ்டலில் சேர்த்தும் இளவரசனின் தொந்தரவு தொடர்ந்தது. ஒரு நாள் திடீரென்று இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். பெண்ணைக் காணவில்லை என்று பெண் வீட்டார் காவல்நிலையத்தில் புகார் செய்தார்கள். பெண்ணை ஒப்படையுங்கள் என்று பெண் வீட்டார் கேட்டதற்கு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வந்திருந்த நான்கைந்து பேர், பெண்ணை ஒப்படைக்க முடியாது என்று காவல்நிலையத்திலேயே மறுத்தனர். இதன் தொடர்ச்சியாகவே சம்பவங்கள் நடந்தேறின என்றார்.
அவரைத் தொடர்ந்து பேசத் தொடங்கினார் மருத்துவர் அய்யா. வருந்தத்தக்க சம்பவங்கள் நடந்தேறியுள்ளன. இச்சம்பவங்கள் நடந்திருக்கக் கூடாது. எந்தச் சம்பவங்கள் நடக்கக் கூடாது என்று 32 ஆண்டுகளாக போராடி வந்தேனோ, அந்தச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளது வேதனை அளிக்கிறது. நேற்று பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த தம்பி தொல் திருமாவளவன், இந்த வன்முறைச் சம்பவத்துக்குக் காரணம் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கம் என்று கூறியுள்ளார். நான் இதை எதிர்ப்பார்க்கவில்லை. இது மிகவும் அபத்தமானது. பாட்டாளி மக்கள் கட்சியின் பெயரைக் கெடுக்க வேண்டுமென்றே சிலர் இது போன்ற பொய்ப்பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தருமபுரியில் நடந்தது இரண்டு சமூகத்திற்கு இடையிலோ அல்லது இரண்டு கட்சிகளுக்கு இடையிலோ நடந்தது அல்ல. அந்தப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு இடையே பல காலமாக பகை இருந்து வருகிறது. அந்தப் பகை காரணமாகவே இந்த மோதல் நடந்துள்ளது. சமீபத்தில் அங்கே நடந்த திருமணம் இதற்கு காரணமல்ல. பெண்ணின் தந்தை நாகராஜன், தலித் சமூகத்தைச் சேர்ந்த பலரால் கடுமையாக அவமானப்படுத்தப்பட்டிருக்கிறார். குறிப்பாக தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒரு உதவி ஆய்வாளர், நாகராஜனை திட்டி, தற்கொலை செய்து கொள்ளுடா என்று கூறியுள்ளார். இதனாலேயே அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
ஏற்கனவே உள்ள முன்பகை காரணமாக பாதிக்கப்பட்ட மக்கள் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். தற்போது குற்றம் சாட்டப்பட்டுள்ள மக்களில் வன்னியர்கள் மட்டும் இல்லை. நாயுடுக்கள், செட்டியார்கள், பழங்குடி இனத்தைச் சேர்ந்த குரும்பர்கள் போன்றோர் உள்ளனர். இது கட்சிகளுக்கிடையேயான தகராறும் அல்ல. இன்னும் சொல்லப்போனால் தற்கொலை செய்து கொண்டு இறந்து போன நாகராஜன் தேமுதிகவைச் சேர்ந்தவர். கலவரத்துக்குக் காரணமாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள முருகேசன், அதிமுகவைச் சேர்ந்தவர். மற்றொருவரான பச்சையப்பன் திமுகவைச் சேர்ந்தவர். இது தவிர, கைது செய்யப்பட்டுள்ளவர்களில், மதிமுக, விவசாயிகள் சங்கம் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் உள்ளனர்.
நான் காதல் திருமணத்திற்கு எதிரானவன் அல்ல. நானே காதல் திருமணங்களை நடத்தி வைத்திருக்கிறேன். (உங்க மவனுக்கும், கிருஷ்ணசாமி படையாச்சி பொண்ணுக்கும் பண்ணி வச்சது காதல் திருமணமா… கடுப்பேத்தறார் மை லார்ட்) பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்த வன்னியர்கள், தேவர்கள், நாயுடு, முதலியார், கொங்கு வேளாளக் கவுண்டர்கள் நாடார்கள் ஆகிய சமூகங்களைச் சேர்ந்தவர்கள் இது போன்ற காதல் நாடகங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவே கலவரத்திற்கு காரணம். இது குறித்து அரசு விரிவான விசாரணையை மேற்கொள்ள வேண்டும். இந்த காதல் நாடகங்கள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வன்கொடுமைத் தடுப்புச் சட்டமும் கடுமையான முறையில் துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது. ஒரு டீக்கடையில் ரெண்டு பேர் பேசிக்கிட்டு இருக்கான்… அவங்களுக்குள்ள சண்டை வருது. திடீர்னு ஒருத்தன் போயி இன்னொருத்தன் என்னை ஜாதிப் பேரச் சொல்லி திட்டிட்டான்னு புகார் கொடுத்துட்றான்.. அங்க ஜாதிப் பேரைச் சொல்லி எதுவுமே பேச்சு நடந்துருக்காது. இதைப் போலத்தான் பல வழக்குகள் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படுகின்றன. இந்தச் சட்டத்தால் பல சமூகத்தைச் சேர்ந்த மக்களும் பாதிக்கப்படுகிறார்கள்….
வன்னிய சமூகம் மற்றும் இதர சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் தலித்துகள் வசிக்கும் பகுதிக்குள் சென்றால் அவர்களுக்கு பாதுகாப்பு இல்லை. அவர்களை கிண்டல் செய்வது, அச்சுறுத்துவது போன்ற விஷயங்கள் நடந்து வருகின்றன. இது போன்ற சம்பவங்களால் பல பெண்கள் தங்கள் கல்வியையே கை விடும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் பெண் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்தும் அரசு விரிவான விசாரணை நடத்த வேண்டும்.
தருமபுரியில் நடந்த கலவரத்திற்கு காதல் திருமணம்தான் காரணம் என்றால் ஒரு மாதத்திற்கு முன்பாகவே நடந்திருக்க வேண்டும். ஆகையால் அந்த கலவரத்திற்கு இந்தத் திருமணம் காரணம் என்ற குற்றச்சாட்டு பொய்யானது. தலித்துகளுக்கும் தலித் அல்லாதோருக்கும் நீண்ட காலமாக நிலவி வந்த பகையே இந்த மோதலுக்குக் காரணம். இந்தப் பகையை அகற்றுவதற்கு அரசு முயற்சி செய்ய வேண்டும். சமூக ஆர்வலர்களும் இதற்காக முயல வேண்டும்.
இந்த காதல் நாடகங்கள் தடுக்கப்பட வேண்டும். இந்த காதல் நாடகங்களே மோதலுக்கு வழி வகுக்கின்றன. தலித் அல்லாத மாணவிகள் குறிவைத்து இந்த காதல் நாடகங்களுக்கு பலியாக்கப்படுகிறார்கள். குறிப்பாக பள்ளி இறுதி மற்றும் கல்லூரியில் உள்ள மாணவிகள்… (யோவ்… கல்லூரியில் படிக்கும்போது காதலிக்காம உன் வயசுலயா காதலிக்க முடியும்.. உனக்கு ஏதாவது அறிவு இருக்கா இல்லையா… ?)
தருமபுரி வன்முறைச் சம்பவங்களுக்கு வன்னியர்களே காரணம் என்று குற்றம் சாட்டுவதன் மூலம், தருமபுரி பகுதியில் உள்ள தலித் அதிகாரிகள், வன்னியர்களை பழிவாங்கும் நோக்கத்தோடு செயல்படுகின்றனர். பல அப்பாவி வன்னியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வன்னியர்களை குறி வைத்து காவல்துறை கைது செய்து வருகிறது. இவ்வாறு கைது செய்யப்படும் வன்னியர்கள், அங்கே உள்ள தலித் காவல்துறையினரால் அடித்து துன்புறுத்தப்படுகிறார்கள்.
இது வரை கைது செய்யப்பட்டுள்ளளவர்களில் வெகு சிலரே பாமகவைச் சேர்ந்தவர்கள். உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை (கரெக்ட் டாக்டர். கலவரத்தை தூண்டி விட்ட நீங்க, டாக்டர் செந்தில், காடுவெட்டி குருவைக் கைது செய்யாம காவல்துறை அம்புகளைத்தானே கைது செய்திருக்கிறது)
எங்களுக்கு இந்தக் கலவரம் குறித்து சில செய்திகள் வந்திருக்கிறது. அந்தப் பகுதியில் சில வீடுகள் மட்டுமே எரிக்கப்பட்டதாகவும் அங்கே உள்ள வீரண்ணன் என்ற திட்ட அதிகாரி, அந்தப் பகுதியில் உள்ளவர்களை அழைத்து, உங்கள் வீடுகளை எரித்து விடுங்கள்… அப்போதுதான் புதிய வீடுகளை அரசு செலவில் கட்டிக் கொள்ளலாம் என்று கூறியதால் பல வீடுகளை அவர்களாகவே எரித்து உள்ளனர் என்ற தகவல் எங்களுக்கு வந்துள்ளது. இதையும் அரசு விசாரிக்க வேண்டும்.
அரசு அதிகாரிகள் நேர்மையாக பாரபட்சமின்றி நடந்து கொள்ள வேண்டும். அந்த காவல்துறை உதவி ஆய்வாளர் பெண்ணின் தந்தை நாகராஜனை அவமானப்படுத்தியதாலேயே அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்த இது வரை அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இது வரை பாதிக்கப்பட்ட நாகராஜன் குடும்பத்தினை அரசு அதிகாரிகளோ, அமைச்சரோ சென்று பார்க்கவில்லை. அரசும் பாதிக்கப்பட்ட நாகராஜன் குடும்பத்தினருக்கு அரசு நஷ்ட ஈட்டையும் இது வரை வழங்கவில்லை. நாகராஜன் உயிர் என்ன விலை மதிப்பற்றதா… ?
அவர் தற்கொலைக்கு காரணமான அந்த உதவி ஆய்வாளரை உடனடியாக கைது செய்ய வேண்டும். அந்த மாவட்டத்தில் உள்ள மாவட்ட வருவாய் அதிகாரி மற்றும் திட்ட அலுவலர் இடமாற்றம் செய்ய்பட வேண்டும். நாகராஜன் குடும்பத்திற்கு அரசு நஷ்ட ஈடு வழங்க வேண்டும். நேர்மையான அதிகாரிகள் அந்த மாவட்டத்தில் நியமிக்கப்பட வேண்டும்.
நாங்கள் தலித்துகளுக்கு எதிரானவர் அல்ல. என் வாழ்நாள் முழுக்க தலித்துகளின் நலனுக்காக பாடுபட்டவன் நான். எத்தனையோ அம்பேத்கர் சிலைகளை திறந்து வைத்திருக்கிறேன். ஒரே நாளில் ஆறு அம்பேத்கர் சிலைகளை திறந்து வைத்திருக்கிறேன். வட தமிழகத்தில் இன்று அமைதி நிலவுவதற்கு நான் பெரும் காரணமாக இருந்திருக்கிறேன். தென் தமிழகத்தில் சாதிக் கலவரங்கள் ஏற்பட்ட போது, அங்கே சென்று அமைதிக் கூட்டங்களை நடத்திய ஒரே தலைவர் நான்தான். என்னோடு திருமாவளவனும் வந்திருந்தார்.
அடுத்து காடுவெட்டி குரு பேசினார்.
இந்தக் கலவரத்திற்கு காரணமே, தேவையற்ற சில மேடைப்பேச்சுக்கள்தான். தேவையற்ற முறையில் பேசி சிலர் வன்முறையைத் தூண்டுகிறார்கள். (உங்களப்பத்தி இப்படி உண்மைய ஒத்துக்கறீங்களே… நீங்க நல்லவரு சார்..) நாங்களும் சாதிய ஒழிக்கணும்னுதான் நெனைக்கிறோம். ஆனா பல தலித்துகள் வன்னியர்களைப் பழிவாங்க வேண்டும் என்பதற்காகவே வேண்டுமென்றே வன்னியப் பெண்களை காதலித்து ஏமாற்றுகின்றனர். வன்னியப் பெண்களை காதலிப்பது, பின்னர் திருமணம் செய்து கொள்வது, அந்தப் பெண்ணை கர்ப்பாமாக்கிய பின்னர், அவளைக் கை விடுவது. அந்தப் பெண்ணின் பெற்றோரும் ஏற்கனவே அந்தப் பெண்ணின் மீது கோபமாக இருப்பதால் அந்தப் பெண்ணை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள். அந்தப் பெண் தவறான வழியில் செல்ல நேர்கிறது. இதை நாங்கள் எப்படி அனுமதிக்க முடியும் ?
கலப்புத் திருமணம்தான் சாதிய ஒழிக்க வழின்னு சொல்றாங்க.. அப்படி கலப்புத் திருமணம்தான் சாதிய ஒழிக்க வழின்னா, தலித்துகள் இருக்கற இடத்துலயே ஒதுக்கி வைக்கப்பட்டிருக்க அருந்ததியர்னு சொல்லப்பட்ற சக்கிலியர்கள் வீட்ல பொண்ணு எடுகக் வேண்டியதுதானே… இவனுங்களுக்கு அந்த எடத்துல ஏன் காதல் வர மாட்டேங்குது…
விழுப்புரத்துல ஒரு வக்கீல் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேந்தவரு… அந்த ஆளு ரெண்டாயிரம் மற்ற சாதிப் பெண்களை தலித்துகளுக்கு கல்யாணம் பண்ணி வச்சுருக்கார்…. ஒரு ரெட்டியார் வீட்டுப் பொண்ண வீடு பூந்து தூக்கிட்டுப் போயி கல்யாணம் பண்ணிருக்காங்க.
இது தலித்துகளுக்கும் வன்னியர்களுக்குமான போராட்டம் இல்ல… தலித்துகளுக்கும் தலித் அல்லாதாருக்குமான போராட்டம். சாதி ஒழிப்புக்கு காதல் திருமணங்கள் ஒரு வழிமுறையாக இருக்க முடியாது. வன்னிய இனப் பெண்கள் மீது திட்டமிட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது என்றார்.
மீண்டும் பேசிய மருத்துவர் அய்யா, இப்போது திருமணம் நடந்த இளவரசனுக்கு வயது 19தான் ஆகிறது. சட்டப்படி 21 வயது ஆகாத ஆண் மகனுக்கு திருமணம் நடப்பது குற்றம். இந்தக் குற்றத்தை செய்த சேலம் சரக டிஐஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
ஒரு செய்தியாளர், தருமபுரியில் தலித்துகள் தங்கள் வீடுகளைத் தாங்களாகவே கொளுத்திக் கொண்டார்கள் என்று சொல்கிறீர்களா என்று கேட்டார். அதற்கு மருத்துவர், இப்படி ஒரு தகவல் எங்களுக்கு வந்திருக்கிறது, இதை அரசுதான் விசாரிக்க வேண்டும் என்றார்.
மகாபலிபுரம் வன்னியர் சங்க விழாவில் குரு காதல் திருமணங்களில் ஈடுபடுபவர்களை வெட்டுவேன் என்று பேசினாரே என்று ஒரு பத்திரிக்கையாளர் கேட்டார். உடனே, ராமதாஸ், குரு அப்படிச் சொல்லவில்லை. அது தவறாக போடப்பட்டது. திட்டமிட்டு தூக்கிக் கொண்டு போய் திருமணம் செய்வது தவறு, அதை அனுமதிக்காதீர்கள் என்றுதான் பேசினாரே தவிர, காதல் திருமணமே தவறு என்று அவர் சொல்லவில்லை. அங்கேதான் அவர் அப்படிப் பேசினாரே தவிர வேறு எங்கும் அவர் அவ்வாறு பேசவில்லை.. இன்னும் சொல்லப்போனால், அவர் பேசியதற்கு தமிழ்நாட்டில் தலித் அல்லாத எல்லா சமுதாயங்களும் குரு பேசுனது சரியான பேச்சுதான்னு சொல்லியிருக்காங்க.
உடனே குரு பேசினார். காதல் பண்ணி, திருமணம் பண்ணி எத்தனை பேர் ஏமாத்திருக்காங்கன்னு நான் மாவட்ட வாரியா உங்களுக்கு ஒரு பட்டியலே தர்றேன். பல இடங்கள்ல இது நடந்துருக்கு. டாக்டர் ராமதாஸ் “கடலூர் மாவட்டத்துல மட்டும் 2000 திருமணங்கள் இது மாதிரி நடந்துருக்கு”
குரு ”இந்த மாதிரி திருமணங்களத்தான் நாங்க கண்டிக்கறோம். ”
பத்திரிக்கையாளர் ”இந்தப் பிரச்சினை இன்னைக்கோ நேத்தோ நடந்த பிரச்சினை இல்லை. இது தொடர்ச்சியா நடக்கற பிரச்சினை. அப்போல்லாம் பா.ம.க என்ன பண்ணுச்சு…”
ராமதாஸ் ”பா.ம.க என்ன பண்ணுச்சுன்னுதான் இவ்ளோ நேரமா சொல்லிக்கிட்டு இருக்கறேன்.. இப்போ வந்து என்ன பண்ணுச்சுன்னு கேக்கறீங்க…”
மற்றொரு செய்தியாளர், அய்யா நல்ல காதல் நாடகக் காதல் என்பதை எப்படிக் கண்டு பிடிப்பது என்று கேட்டார். “காதலிக்கறதுக்கு ஒரு வயசு வேணாமா… எந்த வயசுல காதலிக்கறதுன்னு ஒரு வரைமுறை வேணாமா “ நானே ஒரு திருமணத்தைப் பண்ணி வச்சேன். 5 வருஷமா காதலிச்சாங்க.. அவங்க பெற்றோர்கள் சம்மதிக்கல.. நான் உங்கள கேக்கறேன்.. பெற்றோர்கள் 18 வயசு 19 வயசு வரைக்கும் பாராட்டி சீராட்டி வளக்கறாங்க.. அந்தப் பொண்ணு திடீர்னு ஓடிப்போயி கல்யாணம் பண்ணிக்கிச்சுன்னா அவங்க பெற்றோர்களோட மனநிலைய நெனச்சுப் பாருங்க… இது மூலமா… இந்தக் காதல் மூலமாத்தான் ஜாதி ஒழிப்பு நடக்கணும்னா அது எப்படி..?”
குரு “நான் இன்னொரு சேதி சொல்றேன்…. வட தமிழ்நாடு பூரா காதல் திருமணம் நடந்து அது போலீஸ் ஸ்டேஷனுக்கு வருது. போலீஸ் ஸ்டேஷனுக்கு விடுதலைச் கட்சிக் காரங்க வந்துருக்காங்க… எங்க சமுதாயத்து ஆளுங்களும் போயிருக்காங்க.. எந்த எடத்துலயும் அந்தப் பொண்ண பிரிச்சுக்கிட்டுத்தான் அழச்சுக்கிட்டு வருவோம்னு சொல்றதேயில்ல… போன்னா போன்னு அனுப்பி வச்சுடுவோம். தமிழ்நாட்டுல எந்த இடத்திலயும் பொண்ண பிரிச்சுதான் கூட்டிட்டு வரணும்னு எங்க கட்சிப் பொறுப்பாளர்களோ…. வன்னியர் சங்க பொறுப்பாளர்களோ சொன்னதே கிடையாது. அந்தப் பையனோடதான் வாழுவேன்னா அந்தப் பையனோட போயிக்கோன்னு சொல்லுவோம்.. அந்தப் பொண்ணோட அப்பா அம்மா எனக்கும் உனக்கும் எந்தத் தொடர்பும் இல்லன்னு சொல்லிட்டு வந்துடுவாங்க. இப்படி சொல்லி அனுப்பி வந்துட்டதுக்குப் பிறகு, அந்தப் பொண்ணோட நெலமை ஊர்ல என்னன்னா .. அதுக்கு கீழ ஒரு தங்கச்சி அண்ணன் தம்பி இருந்துச்சுன்னா… பொண்ணு குடுக்கவோ பொண்ணு எடுக்கவோ யாரும் வர மாட்டாங்க..அந்தக் குடும்பம் அந்த ஊர்ல ஒரு மாதிரியா ஒடுக்கப்படுது. மிகப்பெரிய கொடுமைய அந்தக் குடும்பம் அந்த ஊர்ல அனுபவிக்குது. இவ்வளவும் நடக்கும்போது அந்தப் பொண்ணு ஒரு ஆறு மாசம் கழிச்சு வயித்துல புள்ளையோட திருப்பி அனுப்பிட்டான்னு இங்க வந்து நின்னா .. ஒரு நல்ல ஆண் மகன், அந்தப் பொண்ணோட அண்ணனா இருந்தா என்ன பண்ணுவான் ? தற்கொலை பண்ணிக்குவான்.. இல்லன்னா வெட்டுவான்… வேற என்ன பண்ணுவான்..
ராமதாஸ்..”வெட்டுவான்.. இல்லையா… ? ”
செய்தியாளர் “அப்போ சட்டப்படி நடவடிக்கை எடுக்கறதுல தாமதம் ஏற்பட்டுச்சுன்னா வெட்றதுதான் ஒரே தீர்வுன்னு சொல்றீங்களா.. ”
ராமதாஸ் ”அதை எங்களை சொல்ல வைக்கறீங்களா…”
குரு…”உங்க தங்கச்சி அது போல பண்ணா நீங்க என்ன பண்ணுவீங்க சொல்லுங்க.. உங்களுடைய தங்கச்சி அது போல போயி வீட்டுக்கு திரும்பி வந்தா என்ன பண்ணுவீங்க சொல்லுங்க…” என்றார்.
கேள்வி கேட்ட செய்தியாளரை மிரட்டும் காடுவெட்டி குரு மற்றும் ராமதாஸ்
இறுதியாக ராமதாஸிடம், 21 வயதைக் கடந்த இருவர், வன்னியர் சாதியிலிருந்தும், தலித் சாதியிலிருந்தும் திருமணம் செய்து கொண்டால் அதை நீங்கள் ஆதரிக்கிறீர்களா என்று கேட்டதற்கு, பெற்றோரின் சம்மதத்தோடு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றார்.
ராமதாஸின் காதல் குறித்த கருத்துக்களைப் பார்க்கையில் கவிஞர் மீராவின் கவிதைதான் நினைவுக்கு வருகிறது.
உனக்கும் எனக்கும்
ஒரே ஊர்
வாசு தேவ நல்லூர்…
நீயும் நானும்
ஒரே மதம்…
திருநெல்வேலிச்
சைவப் பிள்ளைமார்
வகுப்புங் கூட….
உன்றன் தந்தையும்
என்றன் தந்தையும்
சொந்தக்காரர்கள்
மைத்துனன்மார்கள்
எனவே
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம்
தாம் கலந்தனவே!
எப்படி ஒரு அற்புதமான வரிகள் ? இதற்கும் ராமதாஸின் கருத்துக்களுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை. தலித்துகள் அந்த சாதிக்குள்ளேயேதான் திருமணம் செய்ய வேண்டும், மாற்று சாதியில் திருமணம் செய்யக் கூடாது, அப்படி மீறி திருமணம் செய்தால் வெட்டுவோம் என்பதை வெளிப்படையாகவே அறிவித்துள்ளார்.
ராமதாஸின் ஒவ்வொரு கருத்தாகப் பார்ப்போம். இது இரு சமூகங்களுக்கிடையேயான மோதல் அல்ல என்கிறார். இது இரு சமூகங்களுக்கிடையே நிகழ்ந்த மோதல் அல்ல. சரியான விஷயமே. ஒரு சமூகம் திட்டமிட்டு இன்னொரு சமூகத்தின் மீது நடத்திய கொடுந்தாக்குதல் இது. இது மோதல் அல்ல.
இரு சமூகங்களுக்கிடையே பல காலமாக பகை இருந்து வருகிறது என்கிறார் மருத்துவர். இந்த இரண்டு சமூகங்களுக்கிடையே பகை கிடையாது. வன்னியர் சமூகத்துக்கு, தலித்துகள் மீது வன்மம் இருந்து வந்திருக்கிறது என்பதே இந்த திட்டமிட்ட தாக்குதலுக்கு காரணம். பெரும்பாலான தலித்துகள் கூலிகளாக இருக்கும் நிலையில், வன்னியர்களில் பெரும்பாலானோர் நில உடைமையாளர்களாக இருக்கின்றனர். ஒன்று அல்லது இரண்டு ஏக்கராவது குறைந்தபட்சம் வைத்திருக்கின்றனர். பல ஆண்டுகளாக இவர்களின் நிலங்களில் விவசாயக் கூலிகளாக இருந்த தலித்துகள், கடந்த சில ஆண்டுகளாக விவசாயக் கூலி வேலைக்குச் செல்வது இல்லை. 100 நாள் வேலைத் திட்டத்தில் வேலை செய்யாமலேயே பணம் கிடைக்கையில் எதற்காக கூலி வேலைக்குச் செல்ல வேண்டும் ? மேலும், பெரும்பாலான தலித் ஆண்கள், ஓசூருக்கும், பெங்களுருக்கும் கட்டுமான வேலை உள்ளிட்ட வேலைகளுக்குச் செல்கிறார்கள். நம் வயல்களுக்கு கூலி வேலை செய்ய வராமல், வெளியில் எங்கோ வேலைக்குச் சென்று சம்பாதித்து, அந்தப் பணத்தில் அந்தப் பணத்தில் பைக், கலர் டிவி என்று வாங்கி நம் முன்னாலேயே அந்த பைக்கில் போகிறார்களே பறப்பயல்கள் என்ற வன்மம் வன்னியர்களுக்கு நீண்ட நாட்களாகவே உள்ளது என்பதே மருத்துவர் கொய்யா சொன்னதன் பொருள்.
பாட்டாளி மக்கள் கட்சியின் பெயரைக் கெடுக்க வேண்டும் என்பதற்காகவே சிலர் திட்டமிட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் என்கிறார் மருத்துவர். இது முழுக்க முழுக்க தவறான குற்றச்சாட்டு. பாட்டாளி மக்கள் கட்சிக்கு நற்பெயர் இருக்கிறது என்று எந்த பரதேசிப் பயல் சொன்னது ? சமூக நீதி, சாணி அள்ளும் தேதி என்று பேசிக் கொண்டிருந்து விட்டு, லஞ்சம் வாங்கிக் கொண்டு உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாத தனியார் மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி அளித்த சின்ன கொய்யாவின் சாயத்தை சிபிஐ வெளுத்து விட்டது.
Anbumani Ramadoss appears before Delhi Court
CBI files chargesheet against Anbumani Ramadoss in corruption case
CBI may file another chargesheet against Ramadoss
அதனால் பாட்டாளி மக்கள் கட்சிக்கு நற்பெயர் என்றெல்லாம் தமாஸ் பண்ணிக் கொண்டிருக்காதீர்கள் மருத்துவரே… போயி பழையபடி க்ளினிக் வெச்சு பொழைக்கிற வழியப் பாருங்க…
பெண்ணைக் காணோம் என்று புகார் கொடுக்கச் சென்றபோது காவல் நிலையத்தில் இருந்த தலித் சமூகத்தைச் சேர்ந்த உதவி ஆய்வாளர் தற்கொலை செய்து கொள்ளுடா என்று பெண்ணின் தந்தையை அவமானப் படுத்தியதால்தான் அவர் தற்கொலை செய்து கொண்டாராம். ஒரு காவல் நிலையத்தில் ஆய்வாளர்தான் தலைமைப் பொறுப்பில் இருப்பவர். இது போன்ற முக்கியமான வழக்குகளை ஆய்வாளரே விசாரிப்பார். அந்த உதவி ஆய்வாளர் தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்க முடியாது. மேலும் புகார் கொடுக்கையில் வன்னிய சமூகத்தைச் சேர்ந்த பலர் காவல் நிலையம் சென்றிருப்பார்கள். அவர்கள் முன்னிலையில் அந்த உதவி ஆய்வாளர், “தற்கொலை செய்து கொள்ளுடா” என்று பெண்ணின் தந்தையைப் பார்த்துச் சொல்லியிருக்கிறார் என்பது நம்பும்படி இல்லை.
பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்த வன்னியர்கள், தேவர்கள், நாயுடு, முதலியார், கொங்கு வேளாளக் கவுண்டர்கள் நாடார்கள் ஆகிய சமூகங்களைச் சேர்ந்தவர்கள் இது போன்ற காதல் நாடகங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவே கலவரத்திற்கு காரணம் என்ற ராமதாஸின் அறிக்கைதான் பூனைக்குட்டியை வெளியை வரவழைத்துள்ளது. கருணாநிதியையே தெலுங்கர் என்று குற்றம் சாட்டியவர் ராமதாஸ். திராவிடம் என்று சொல்லி, இரண்டு திராவிடக் கட்சிகளும் தமிழனை ஏமாற்றியுள்ளன என்று தொடர்ச்சியாக பேசி வருபவர் ராமதாஸ். அப்படிப்பட்ட ராமதாஸ், தெலுங்கு பேசும் ரெட்டியார்களுக்கும், நாயுடுக்களுக்கும் வக்காலத்து வாங்குவது, 2014 தேர்தலில் சாதிக் கூட்டணியை ஏற்படுத்துவதற்கான முன்னோட்டமே. வன்னிய சாதியைத் தவிர வேறு எந்த சாதிக்காகவும் ஒரு துரும்பைக் கூட தூக்கிப் போடாத ராமதாஸ், இத்தனை சாதிக்களுக்காக பேசுவது, வன்னிய சாதியோடு மற்ற சாதி இந்துக்களை கூட்டணி சேர்ப்பதற்காகவே.
வன்னிய இனப் பெண்கள் தலித் பகுதிக்குள் சென்றால் ஆண்கள் கிண்டல் செய்கிறார்களாம்… அதனால் வன்னியப் பெண்கள் படிப்பையே கை விடுகிறார்களாம். இதனால் பெண் கல்வி பாதிக்கப்படுகிறதாம். வன்னியப் பெண்ணை தலித் இளைஞர்கள் கிண்டல் செய்வது அங்கொன்றும், இங்கொன்றுமாக நடந்திருக்கும் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், இதனால் வன்னிய இனப் பெண்கள் படிப்பையே கைவிடுகிறார்கள்.. பெண் கல்வி பாதிக்கப்படுகிறது என்பது எத்தனை பெரிய அயோக்கியத்தனம்… ? ஒரு பெண்ணைப் பெற்றவன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதற்கே ஊரைக் கொளுத்துபவர்கள், வன்னியப் பெண்களை பள்ளிக்குச் செல்லாமல் தடுக்கும் அளவுக்கு தலித்துகள் கிண்டல் செய்தால் விட்டு விடுவார்களா என்ன ? மேலும் இவர்களுக்கு இருக்கும் செல்வாக்குக்கு காவல்துறையினரை வைத்து, தலித்துகளின் ஊரையே அடித்து நொறுக்க மாட்டார்களா ?
இது வரை கைது செய்யப்படடவர்களில் மற்ற சாதியினரும் இருக்கிறார்களாம். அதனால் இது இரு சமூகத்திற்கிடையேயான மோதல் என்று சொல்ல முடியாதாம். ராமதாஸ் அவர்களே. இது வரை தருமபுரி கலவரத்துக்காக கைது செய்யப்பட்டவர்கள் 142 பேர். இவர்களில் 125 பேர் வன்னியர்கள். நீங்கள் தாராளமாக காவல்துறையில் சரிபார்த்துக் கொள்ளலாம். இது வன்னியர்கள் நடத்திய தாக்குதலா.. வேறு சாதியினர் நடத்திய தாக்குதலா… பொய்யையும் புரட்டையுமே தொடர்ச்சியாக பேசி வரும் உங்களுக்கு வெட்கமாகவே இல்லையா ?
எத்தனையோ அம்பேத்கர் சிலைகளை திறந்து வைத்திருக்கிறாராம். வாழ்நாள் முழுக்க தலித்துகளுக்காக பாடுபட்டிருக்கிறாராம். வாழ்நாள் முழுக்க உங்கள் குடும்பத்துக்காக பாடுபட்டிருக்கிறேன் என்று சொல்லுங்கள் ஒப்புக் கொள்ளலாம். தலித்துக்காக என்ன பாடுபட்டிருக்கிறீர்கள் என்பதுதான் புரியவேயில்லை. அம்பேத்கர் சிலையைத் திறந்துவைத்தது நீங்கள் தலித்துகளுக்கு செய்த மிகப்பெரிய சேவை என்றால், அம்பேத்கரை சேரியிலுள்ள ஒரு தலித்தாக மட்டும்தானே பார்க்கிறீர்கள் ? உங்கள் மனதில் எத்தகைய வன்மத்தோடு அம்பேத்கர் சிலையைத் திறந்து வைத்திருப்பீர்கள்.. இப்படி ஒரு வன்மத்தோடு நீங்கள் அம்பேத்கர் சிலையைத் திறந்து வைப்பதை விட அம்பேத்கருக்குச் செய்திருக்கும் அவமானம் வேறு எதுவுமே இருந்திருக்க முடியாது.
தற்கொலை செய்து கொண்ட நாகராஜனுக்கு அரசு இது வரை எந்த நஷ்ட ஈடும் வழங்கவில்லையாம். யோவ் வௌக்கெண்ணை… அரசு குடுக்கறது இருக்கட்டும்… நீ உன் முடிச்ச அவுத்து குடுக்க வேண்டியதுதானே… என்ன பண்ணிக்கிட்டு இருக்க. சாதித் திமிரால் ஒருவன் தற்கொலை செய்து கொண்டால், மக்கள் வரிப்பணத்திலிருந்து அரசு நிவாரணம் கொடுக்க வேண்டுமா ?
விழுப்புரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் பொறுப்பாளர் ஒருவர் 2000 தலித்துகளுக்கு வேற்று சமூகத்திலிருந்து, குறிப்பாக வன்னிய சாதியிலிருந்து கல்யாணம் பண்ணி வைத்திருக்கிறாராம். இந்தப் பட்டியலை டாக்டர் வைத்திருக்கிறாராம். அந்த பொறுப்பாளருக்கு விழா அல்லவா எடுக்க வேண்டும். 2000 சாதி மறுப்பு திருமணங்களை பெரியார் கூடச் செய்ததில்லையே.. இதப் போயி கொறையா சொல்லிக்கிட்டு… போங்க டாக்டர்… நீங்க சரியான லூசு.
சாதி மறுப்புத் திருமணங்கள் மூலமாகத்தான் சாதியை ஒழிக்க வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாதாம்.. வேற எப்படி டாக்டர் சாதிய ஒழிக்கறது… நீங்க பண்ண மாதிரி, உங்க மகன் அன்புமணிக்கும், காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி படையாச்சிக்கும் கல்யாணம் பண்ணி வைக்கறது மூலமா சாதியை ஒழிச்சுட முடியுமா… ? உங்களுக்கு உண்மையிலேயே அறிவு இல்லையா.. இல்ல அறிவு இல்லாத மாதிரி நடிக்கறீங்களா… ?
தலித்துகள் தங்கள் வீடுகளைத் தாங்களே கொளுத்திக் கொண்டார்கள் என்று சொன்னது உச்சகட்ட அயோக்கியத்தனம். டாக்டர் ஒரு மனிதனே இல்லை மிருகம் என்பதை அவரின் இந்த வாக்கியம் காட்டுகிறது. 300 வீடுகள், எரிந்திருக்கின்றன. வீட்டில் உள்ள உடைமைகள், துணிமணிகள், எரிந்திருக்கின்றன. அத்தனை வீடுகளிலும் உள்ள பொருட்கள் அடித்து நொறுக்கப்பட்டிருக்கின்றன. மனசாட்சியே இல்லாமல் எப்படி இது போல் பேசமுடிகிறது இந்த மனிதரால் ?
இது தலித்துகளுக்கும், தலித் அல்லாதோருக்குமான போராட்டம் என்ற டாக்டரின் பேச்சுதான் இருப்பதிலேயே விஷமத்தனமானது. அயோக்கியத்தனமானது. அரக்கத்தனமானது. ஒடுக்கப்பட்ட மக்களான தலித்துகளுக்கு எதிராக மற்ற ஆதிக்க சாதிகளை ஒன்று திரட்டும் டாக்டரின் அயோக்கியத்தனமான திட்டமே இது. இது மிக மிக விஷமத்தனமானது. மனிதனின் நாகரீக வளர்ச்சியும், கல்வியும் இத்தனை ஆண்டுகாலமாக உருவாக்கி வைத்திருக்கும் ஒரு அற்புதமான கட்டமைப்பை ஒரே நாளில் சிதைக்கும் நோக்கம் கொண்ட பேச்சு இது.
சமூக நீதிக் காவலர், தமிழ்க் குடிதாங்கி, என்றெல்லாம் பல பட்டங்களோடு, போலி வேடமிட்டுத் திரிந்த மருத்துவர் ராமதாஸின் முகத்திரை கிழிந்ததில் உள்ளபடியே மகிழ்ச்சி. இத்தனை நாள் உங்களின் மனதில் உள்ள வன்மம் புரியாமல், ஏதோ இந்த ஆளு ஈழம் குறித்துப் பேசுகிறார், மொழி குறித்துப் பேசுகிறார் என்று நம்பி பலர் ஏமாந்திருக்கிறார்கள். அப்படியெல்லாம் ஏமாறாதீர்கள். நான் வன்னிய சாதி வெறி பிடித்தவன் என்பதை வெளிப்படையாக அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கதே. இப்போதாவது இவர்களின் அசல் முகத்தைக் கண்டு கொள்ள முடிந்ததே என்று மகிழ்ச்சியே.
ஆகையால் காதலர்களே.. இனி உங்கள் காதல் உண்மையானதா இல்லையா என்பதை இந்த காதல் டாக்டரிடம் பரிசோதித்து தெரிந்து கொள்ளுங்கள். இவர் பரிசோதிப்பது மட்டுமின்றி, அரசாங்கம் இது குறித்து விசாரிக்க வேண்டும் என்று வேறு தெரிவித்துள்ளார். இருந்தாலும் காதல் டாக்டரின் பரிசோதனைகளே சிறந்த பரிசோதனையாக இருக்கும்.
ராஸ்கல்ஸ்… இன்டீசன்ட் ஃபெல்லோஸ்.. பாருங்க சார்.. திருப்பி டாக்டர் எங்க ஸ்டெத்தஸ்கோப்பை வச்சு டெஸ்ட் பண்ணுவாருன்னு கேக்கறானுங்க… டர்ட்டி பாய்ஸ்..