தந்தை வண்டி இழுத்து வாழ்வை நடத்துபவர். கடுமையான வறுமைச் சூழல். ஆறாவது வகுப்போடு படிப்பை கைவிடுகிறான். அதற்குப் பிறகு உடல் உழைப்பு. லாஹுரில் தனியாக தங்கி வேலை செய்கிறான். ஊருக்குத் திரும்பியதும், தான் சம்பாதித்த பணத்தை செலவு செய்வது தொடர்பாக அவனுக்கும், அவன் தந்தைக்கும் சண்டை. கோபித்துக் கொண்டு, ராவல்பிண்டி செல்கிறான். மீண்டும் அங்கே வேலை. அங்கே லஷ்கர் ஏ தொய்பா என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் நோட்டீஸ் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். காஷ்மீர் விடுதலைக்காக ஆடுகளை தானமாகக் கொடுங்கள் என்று பேசுகிறார்கள். 20 வயதான கசாப்புக்கு அது ஈர்ப்பை ஏற்படுத்துகிறது. அந்த லஷ்கர் அமைப்பின் அலுவலகத்துக்கு சென்று நான் ஜிகாத்தில் சேர வேண்டும் என்கிறான். வீட்டுக்குப் போய் உன் துணி மணியையெல்லாம் எடுத்துக் கொண்டு நாளை வா என்று அனுப்புகிறார்கள். அதன் படியே துணி மணிகளை எடுத்துக் கொண்டு மறு நாள் செல்கிறான்.
அவனை வேறு ஊருக்கு அனுப்பி பயிற்சி எடுக்க அனுப்புகிறார்கள். அங்கே அவனுக்கு ஆயுதப் பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. மூன்று முறை பயிற்சி எடுக்கிறான். இந்தியாவுக்கு சென்று கண்மூடித்தனமாக தாக்குதல் தொடுக்க வேண்டும் என்று அவனுக்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.
2008 நவம்பர் 26 அன்று மும்பை வந்திறங்கிய அவன் கண்மூடித்தனமாக விக்டோரியா ரயில் நிலையத்தில் இருந்த அப்பாவிப் பொதுமக்கள் சுட்டுத் தள்ளுகிறான். காவல்துறையோடு நடந்த மோதலில் இறுதியாக கைது செய்யப்படுகிறான்.
26 நவம்பர் 2008 அன்று மும்பையில் நடந்த தாக்குதல் இந்தியாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கசாப்பும் அவனோடு வந்த தீவிரவாதிகளும் நடத்திய தாக்குதலில் 176 பேர் உயிர் துறக்கின்றனர். 226 பேர் காயமடைகின்றனர். இந்தியாவையே உலுக்கிப் போடுகிறது இத்தாக்குதல்.
இதனைத் தொடர்ந்து நடந்த விசாரணையில் கசாப்புக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. இந்தத் தண்டனையை ஒட்டியே கசாப் புதன் அன்று காலை 7.30 மணிக்கு தூக்கிலிடப்படுகிறான்.
இந்த மரண தண்டனை சட்டபூர்வமாக செய்யப்பட்டிருக்கிறதா என்றால் இல்லை. மிக மிக ரகசியமாக, யாருக்கும் தெரியக்கூடாது என்பதற்காகவே மறைக்கப்பட்டு, படு ரகசியமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஊடகங்களில் வந்த தகவல்களின் படி, கசாப்பை தூக்கிலிடுவதற்கு ஆபரேஷன் எக்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவரின் அலுவலகத்திலிருந்து நவம்பர் 8 அன்று கசாப்பின் கருணை மனு நிராகரிக்கப்பட்ட தகவல் உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்படுகிறது.
மத்திய உள்துறை அமைச்சகம் நவம்பர் 8 அன்றே மஹாராஷ்டிர அரசுக்கு தெரியப்படுத்துக்கிறது. 9 நவம்பர் அன்று உள்துறை அமைச்சர், தேசியப்பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் மத்திய உள்துறை செயலர் ஆகியோர் விவாதிக்கின்றனர். 26க்கு முன்பாக தூக்கு தண்டனை நிறைவேற்றப் படவேண்டும் என்று முடிவெடுக்கப்படுகிறது.
11 நவம்பர் அன்று மஹாராஷ்டிர முதல்வர் உள்துறைச் செயலர் மற்றும் டிஜிபியோடு ஆலோசனை நடத்துகிறார். 21 நவம்பர் அன்று காலை 7.30 மணிக்கு தூக்கிலிடுவது என்று முடிவெடுக்கப்படுகிறது. மத்திய உள்துறை அமைச்சருக்கு 21 என்று முடிவெடுக்கப்பட்ட தேதி தெரிவிக்கப்படுகிறது. வெளியுறவுத்துறை அமைச்சர் குர்ஷீத்துக்கும் தெரிவிக்கப்படுகிறது. பாகிஸ்தான் அமைச்சர் ரஹ்மான் மாலிக் 23 இந்தியா வருவதாக இருந்தது. 26/11 தாக்குதலை காரணம் காண்பித்து அவரது வருகை தள்ளிப்போடப் பட்டது. சல்மான் குர்ஷீத்தின் ஈரான் பயணமும் ரத்து செய்யப்பட்டது.
திங்கட்கிழமை அன்று, மஹாராஷ்டிர மாநில சட்டம் ஒழுங்கு ஐஜி மற்றும் சிறைத்துறை ஐஜிக்கு தகவல் சொல்லப்படுகிறது. கசாப்பை பாதுகாத்து வரும், இந்திய திபேத்திய எல்லைப் படையினருக்கு கசாப்பை பூனாவில் உள்ள ஏரவாடா சிறைக்கு கசாப்பை மாற்ற வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. அந்தக் காவல்துறையினரின் அத்தனை செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டு, காவல்துறை பயன்படுத்தும் மைக் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.
செவ்வாய் அன்று மாலை தூக்கிலிடுபவருக்கு தகவல் சொல்லப்படுகிறது. அவர் பூனா சிறைக்கு வரவழைக்கப்பட்டு அங்கேயே தங்க வைக்கப்படுகிறார். சட்டம் ஒழுங்கு ஐஜியின் செல்போன் மட்டுமே செயல்பாட்டில் இருக்கிறது மற்ற அதிகாரிகள் அனைவரும், செல்போனை அணைத்து வைக்ககுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
புதன் அன்று காலை 7.30 மணிக்கு கசாப் தூக்கிலிடப்படுகிறான்.
மிக மிக ரகசியமாக வெளி உலகத்திற்கு தெரியாத வகையில் இந்த தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்தத் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்ட விதத்தைப் பார்க்கையில் அரசியல் காரணங்களுக்காக நிகழ்த்தப்பட்ட கொலையாகவே இதைப் பார்க்க வேண்டியுள்ளது.
இந்திய சட்டங்களின் படி, கசாப்பை தூக்கிலிட வழி வகைகள் இருக்கின்றன என்றாலும், பிரிட்டிஷார் ஆட்சிக் காலத்தில் தூக்கிலிடப்பட்ட பகத்சிங், ராஜகுரு மற்றும் சுக்தேவுக்குப் பிறகு இப்படி ரகசியமாக தூக்கிலிடப்பட்டவர்கள் யாருமே இல்லை.
வாழும் உரிமையை அனைத்து இந்தியர்களுக்கும் வழங்கும் இந்திய அரசியல் சட்டப் பிரிவு 21, அந்த உரிமையை வெளிநாட்டவருக்கும் வழங்குகிறது. யார் ஒருவரையும் கைது செய்கையிலோ, அவர் உயிரைப் பறிக்கையிலோ, சட்டபூர்வமான வழிமுறைகளுக்குப் பின்னரே அவ்வாறு செய்ய வேண்டும் என்ற அந்த முக்கியமான உரிமை கசாப் விஷயத்தில் மீறப்பட்டுள்ளது.
பிரிட்டிஷாரின் காலனியிலிருந்து உருவான இரண்டு நாடுகளான இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இருக்கும் மிகப் பெரிய வேறுபாடே, இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்பதுதான். மத அடிப்படையில் உருவான பாகிஸ்தானில் இது வரை பல ராணுவப் புரட்சிகள் நடைபெற்றுள்ளன. இந்தியாவைப் போல மனித உரிமைகளுக்கெல்லாம் மதிப்பளிக்கும் நாடு அல்ல பாகிஸ்தான். மத அடிப்படைவாதத்தில் ஊறித் திளைக்கும் நாடு அது. ஆனால், இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக தன்னைக் கருதிக் கொள்கிறது. மனித உரிமைகளுக்கும், ஜனநாயகத்துக்கும் மதிப்பளித்து, வளர்ந்த நாகரீகமாக தன்னைக் காண்பித்துக் கொள்ளும் இந்தியாவில்தான் இப்படிப்பட்ட ஒரு படுகொலை நிகழ்த்தப்பட்டுள்ளது.
கருத்துச் சுதந்திரம், மனித உரிமைகள் போன்றவற்றை இந்தியாவின் உச்சநீதிமன்றம் காலப்போக்கில் செழுமைப்படுத்தி, உலகின் வளர்ந்த நாகரீங்களுக்கு இணையானதாக இந்தியாவை உருவாக்கியிருக்கிறது. இத்தனை ஆண்டுகளாக, செதுக்கி செதுக்கி உருவாக்கிய இந்தியாவின் பண்பு, ஒரு படுகொலையின் மூலம் தூக்கி எறியப்பட்டிருக்கிறது.
அஜ்மல் கசாப் பாகிஸ்தானைச் சேர்ந்தவன். அவனைத் தூக்கிலிட வேண்டும் என்று மத அடிப்படைவாதிகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்கள். கசாப்பை சிறையில் வைப்பதால் இந்திய அரசுக்கு தேவையில்லாத செலவு என்று பேசியும், எழுதியும் வருகிறார்கள். கசாப்பை பாதுகாக்கும், இந்திய திபேத்திய எல்லைப்படைக்கு இத்தனை நாட்களாக 60 கோடி ரூபாய் செலவாகியிருக்கிறது என்று செய்தி பரப்புகிறார்கள். 60 கோடி ரூபாய், மஹாராஷ்டிர அரசு, மற்றொரு துணை ராணுவப் படைக்குத்தான் அளிக்கிறது, அதுவும் இந்திய அரசின் ஒரு அங்கம்தான் என்பது வசதியாக மறைக்கப்பட்டு, ஏதோ வெளிநாட்டுக்கு 60 கோடி ரூபாயை அளிக்கப்போவது போல பரப்புரை நிகழ்த்தப்பட்டு வருகிறது. சாதாரண பாமரன் மத்தியில், கசாப்பை உயிரோடு வைத்திருப்பதால், இந்தியாவுக்கு மிகப்பெரிய நிதிச்சுமை, அவனை உடனடியாக கொலை செய்ய வேண்டும் என்ற பரப்புரை திட்டமிட்டு பரப்பப்பட்டே வந்திருக்கிறது.
சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகாலமாக நாம் செழுமைப் படுத்தி வளர்த்த உரிமைகளையும், ஜனநயாயகப் பண்புகளையும் ஒரே நாளில் குழிதோண்டிப் புதைத்துள்ளோம்.
எத்தகைய குற்றமாக இருந்தாலும், அந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய 90 நாட்கள் அவகாசம் வழங்கப்படுகிறது. மரண தண்டனை வழக்குகளில் உச்ச நீதிமன்றமே தீர்ப்பை உறுதி செய்தாலும், குடியரசுத் தலைவரிடம் மேல்முறையீடு செய்யலாம். குடியரசுத் தலைவர் மேல்முறையீட்டை நிராகரித்தாலும், மீண்டும் உச்ச நீதிமன்றத்தை அணுகும் வழிவகைகள் நமது நீதிபரிபாலனத்தில் உண்டு. குடியரசுத்தலைவர் கருணை மனுக்களை நிராகரித்த பல நேர்வுகளில் உச்ச நீதிமன்றம், மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றியிருக்கிறது. அப்படிப்பட்ட வாய்ப்பு கசாப்புக்கு மறுக்கப்பட்டிருக்கிறது.
மரண தண்டனை நேர்வுகளில், சம்பந்தப்பட்டவரே நீதிமன்றத்தை அணுக வேண்டும் என்பதில்லை. தொலைக்காட்சியில் செய்தியைப் பார்த்தேன். இவரைத் தூக்கிலிடுவதில் சட்டபூர்வமான பிழை இருக்கிறது என்று இந்தியாவில் யார் வேண்டுமானாலும் நீதிமன்றத்தை அணுகலாம் என்ற நிலையில், கசாப்பை இப்படி தூக்கிலிட்டிருப்பது, அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒரே நேரத்தில் நெருக்கடிக்குள்ளாக்கி, அரசியல் ஆதாயம் தேட வேண்டும் என்பதைத் தவிர வேறு காரணங்கள் இல்லை.
கசாப் வழக்கையே எடுத்துக் கொண்டால், கசாப்புக்கு மற்றவர்கள் அனைவருக்கும் கிடைத்த நியாயமான உரிமைகள் கிடைத்ததா என்றால் இல்லை. கசாப் சார்பாக ஆஜராக எந்த வழக்கறிஞரும் முன்வரவில்லை. அந்த அளவுக்கு தேசபக்த வெறி ஊட்டப்பட்டிருந்தது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த கே.ஜி.பாலகிருஷ்ணன் வெளிப்படையாக கசாப்புக்கு வழக்கறிஞர் வைக்கும் உரிமையை நிராகரிக்கக் கூடாது என்று அறிவித்த பின்னரே நீதிமன்றத்தின் சார்பாக வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டார்கள். வெளிப்படையாகவே கசாப் சார்பாக ஆஜராகும் வழக்கறிஞர்கள் தேசத் துரோகிகள் என்று அறிவிக்கப்பட்டது.
26/11 தாக்குதல் ஒரு மோசமான தீவிரவாதத் தாக்குதல் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. அதற்காக அதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு எவ்விதமான உரிமையையும் வழங்கக் கூடாத என்று இந்தியா முழுக்க குரல் எழுவது ஒரு ஜனநாயக நாட்டில் ஏற்புடையதா ? ஆனால் அப்சல் குரு வழக்கிலும், அஜ்மல் கசாப் வழக்கிலும் இதுதான் நடந்தது. இந்த இருவருக்கும் ஆதரவாக அல்ல… இந்த இருவருக்கும் நியாயமான உரிமைகள் வழங்கப்படவேண்டும் என்று கூறினாலே அவ்வாறு கூறுபவர்கள் தேசத்துரோகிகளாகிறார்கள்.
மத அடிப்படைவாதத்தின் அடிப்படையிலேயே தொடர்ந்து அரசியல் நடத்தும் சங் பரிவார் அமைப்புகளின் தாக்கம், காங்கிரஸ் கட்சியையும் பீடித்திருப்பதையே இது காட்டுகிறது. அதன் வெளிப்பாடே கசாப்பின் ரகசிய தூக்கு.
சுதந்திரம் பெற்ற நாள் முதலாகவே இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்தும் போக்கு வளர்ந்தே வந்திருக்கிறது. சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சரும், இந்த அடிப்படைவாதியுமான வல்லபாய் பட்டேல், 1948ம் ஆண்டு, பட்டேல் அனைத்துத் துறை செயலாளர்களுக்கும் கடிதம் எழுதுகிறார். அந்தக் கடிதத்தில்
I draw your attention to one aspect of security which has assumed urgency and importance in the present context of relations with Pakistan. There is growing evidence that a section of Muslims in India is out of sympathy with the Government of India, particularly because of its policy regarding Kashmir and Hyderabad, and is actively sympathetic to Pakistan. Such Government servants are likely to be useful channels of information and would be particularly susceptible to the influence of their relatives.
It is probable that among Muslim employees of Government there are some who belong to these categories. It is obvious that they constitute a dangerous element in the fabric of administration; and it is essential that they should not be entrusted with any confidential or secret work or allowed to hold key posts. For this purpose I would request you to prepare a list of muslim employees in your ministry and offices under your control, whose loyalty to the Dominion of India is suspected or likely to constitute a threat to security.
இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களில் பலர், இந்தியாவின் காஷ்மீர் மற்றும் ஐதராபாத் தொடர்பான கொள்கைகளின் காரணமாக ஆத்திரமடைந்து பாகிஸ்தான் ஆதரவாளர்களாக உள்ளனர். இது போன்ற நபர்களை முக்கிய பதவிகளில் நியமிப்பது ஆபத்தானது. ஆகையால் உங்கள் துறையில் பணியாற்றும் இது போன்ற நபர்களை கண்டறிந்து அந்த பட்டியலை அனுப்பவும் என்று கடிதம் எழுதுகிறார்.
பாகிஸ்தானிலேயே தங்கிய இந்துக்களுக்கு அந்நாட்டு அரசு கடும் நெருக்கடி கொடுப்பதாக தகவல்கள் பரவியிருந்ததால், பட்டேலின் இந்தக் கடிதம், இந்து அதிகாரிகளுக்கு வரப்பிரசாதமாக அமைந்தது.
இந்தக் கடிதம் அனைத்துத் துறைகளிலும் இஸ்லாமியர்களுக்கு எதிரான ஒரு போக்கை உருவாக்குகிறது. தொல்பொருள் ஆய்வுத் துறையில் (Archaeological Survey of India) ஏராளமான முஸ்லீம்கள் பணியாற்றி வந்தனர். 17ம் நூற்றாண்டில், தாஜ்மஹாலை பாதுகாப்பதற்காக “காதிம்” என்ற வாட்ச்மேன் போன்ற பணியிடத்தை ஷாஜஹான் உருவாக்கியிருந்தார். அந்தப் பணியிடம் 20ம் நூற்றாண்டு வரை தொடர்ந்தது. ஆக்ராவுக்கான தொல்பொருள் துறையின் கண்காணிப்பாளர் தனக்குக் கீழ் பணியாற்றும் காதிம்களை பழிவாங்க இதுவே சரியான சந்தர்ப்பம் என்று கருதினார். யார் யாருடைய உறவினர்கள் பாகிஸ்தானில் இருக்கிறார்களோ, அவர்கள் தங்கள் உறவினர்களை உடனடியாக இந்தியா அழைத்து வர வேண்டும், அப்படி இல்லையென்றால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவித்தார். அப்படி இந்தியா வந்தவர்கள் அனைவரும், நான் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் போர் வந்தால், இந்தியாவுக்காக உயிரைக் கொடுப்பேன் என்று உறுதிமொழிப் பத்திரம் எழுதி வாங்கினார். அரசு நிர்வாகத்தில் பட்டேல் தொடங்கி வைத்த அந்த போக்கு, இன்று இந்தியா முழுக்க பரவியிருக்கிறது.
பாகிஸ்தானில் இந்துக்கள் துன்புறுத்தப்படுகிறார்கள் என்ற செய்திகள் பரவத் தொடங்கியதும், இங்குள்ள இஸ்லாமியர்கள் மீதான நெருக்கடிகளை அதிகரிக்க வேண்டும் என்று இந்து அடிப்படைவாதிகள் மத்தியில் குரல் எழத் தொடங்கியது.
பட்டேல் இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்கள் தங்களின் விசுவாசத்தை நிரூபித்துக் காட்ட வேண்டும் என்று சொன்ன அதே வேளையில், ஜவஹர்லால் நேரு, இஸ்லாமியர்களை பாதுகாப்பாக உணரச் செய்வது அரசின் கடமை என்றார்.
பிரிவினை நடந்து மூன்று மாதங்களுக்குப் பிறகு அனைத்து மாநில முதல்வர்களுக்கும் எழுதிய கடிதத்தில் நேரு
We have a Muslim minority who are so large in numbers that they cannot, even if they want, go anywhere else. That is a basic fact about which there can be no argument. Whatever the provocation from Pakistan and whatever the indignities and horrors inflicted on non-Muslims there, we have got to deal with this minority in a civilized manner. We must give them security and the rights of a citizens in a democratic State. If we fail to do so, we shall have a festering sore which will eventually poison the whole body politic and probably destroy it.
இஸ்லாமிய சிறுபான்மையினர் பெரும் எண்ணிக்கையில், அவர்கள் விரும்பினாலும் வேறு எங்கேயும் செல்ல முடியாத எண்ணிக்கையில் இருக்கிறார்கள். விவாதம் செய்ய இடமில்லாத ஒரு அடிப்படை உண்மை இது. பாகிஸ்தானில் முஸ்லீம் அல்லாதவர்கன் துன்புறுத்தப்படுகிறார்கள் என்று எத்தனை செய்திகள் வந்தாலும், இங்குள்ள சிறுபான்மை முஸ்லீம்களை நாம் நாகரீகமாக நடத்த வேண்டும். அவர்கள் இந்நாட்டின் குடிமகன்கள் என்ற எல்லா உரிமைகளையும் அளித்து, அவர்களை பாதுகாப்பாக உணரச் செய்ய வேண்டும். அப்படிச் செய்யத் தவறுவோமேயானால், அது ஆறாத புண்ணாக மாறி, மொத்த உடலுக்கும் அந்த விஷம் பரவி, இறுதியாக அது நம்மை அழித்து விடும் என்றார்.
எத்தனை நிதர்சனமான வரிகள்… ?
நேரு எதற்காக பயந்தாரோ, அதை காங்கிரஸ் அரசு நடத்திக் காட்டிக் கொண்டிருக்கிறது. மார்ச் 2005ல் இஸ்லாமியர்களின் நிலைமை குறித்து ஆராய காங்கிரஸ் அரசு நியமித்த நீதிபதி சச்சார் கமிட்டி நவம்பர் 2006ல் அதன் பரிந்துரைகளை அளித்தது.
6 முதல் 14 வயதுக்குட்பட்ட முஸ்லீம் குழந்தைகள் பள்ளிக்கே செல்லவில்லை அல்லது பள்ளிப் படிப்பை கைவிட்டார்கள்.
அரசு கல்வி நிறுவனங்களில் முஸ்லீம்களுக்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளன.
மேலாண்மை மற்றும் ப்ரொபஷனல் துறைகளில் இஸ்லாமியர்களின் பங்கு குறைவாக உள்ளது.
ஐஏஎஸ், ஐஎப்எஸ் மற்றும் ஐபிஎஸ் பணிகளில் இஸ்லாமியர்களின் சதவிகிதம் முறையே 3, 1.8 மற்றும் 4 சதவிதமாகவே உள்ளது.
ரயில்வேயில் இஸ்லாமியர்கள் வெறும் 4.5 சதவிகிதமே இருக்கிறார்கள். அந்த 4.5 சதவிதத்திலும் 98.7 சதவிகிதம் கடைநிலை ஊழியர்களாக இருக்கிறார்கள்.
மதராஸா எனப்படும் இஸ்லாமிய கல்விமுறையையே முஸ்லீம்கள் விரும்புகிறார்கள் என்பது தவறு. மொத்தம் உள்ள இஸ்லாமியர்களில் நான்கு சதவிகிதத்தினரே இந்தக் கல்வி முறையில் பயில்கிறார்கள் என்று பல்வேறு உண்மைகளை சச்சார் கமிட்டி எடுத்துரைத்தது.
ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டதாகவும், இரண்டாம் தர குடிமக்களாகவும் உணரும் இஸ்லாமியர்களை அஜ்மல் கசாப்பை தூக்கிலிட்ட முறை மேலும் தனிமைப்படுத்தும்.
அஜ்மல் கசாப்புக்கு உரிய உரிமைகளை வழங்கி, உச்சநீதிமன்றத்தில் குடியரசுத்தலைவரின் முடிவுக்கு எதிராக வழக்கு தொடர வாய்ப்பு வழங்கி, சட்டபூர்வமான முறையில் இந்த மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருந்தால் கூட, யாரும் குறை சொல்வதற்கு வாய்ப்பு நேர்ந்திருக்காது.
ஆனால், இந்த மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட முறை, நாட்டின் அமைதியை சீர்குலைக்கும் தன்மைகளை உருவாக்கும். உலகில் உள்ள மொத்த நாடுகளில் மூன்றில் இரண்டு பங்கு நாடுகள் மரண தண்டனையை ஒழித்திருக்கும் இந்தச் சூழலில், இந்தியா படு ரகசியமாக நிறைவேற்றியுள்ள இந்த மரண தண்டனை, ஏற்கனவே இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இருந்து வரும் பலவீமான உறவை மேலும் பலவீனப்படுத்தும். இந்த ரகசிய மரணதண்டனையானது, தாலிபான், லஷ்கர் ஏ தொய்பா போன்ற அமைப்புகள், இளம் இஸ்லாமிய இளைஞர்களை, இந்தியாவுக்கு எதிராக தாக்குதல் தொடுக்க பயிற்சி கொடுக்கவே வழிவகை செய்திருக்கிறது.
ட்விட்டரிலும், இதர சமூக வலைத்தளங்களிலும், கசாப்பை தூக்கிலிட்டது குறித்து நடக்கும் கொண்டாட்டங்கள், நாம் நாகரீகத்தில் பின்னோக்கிச் செல்கிறோமோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது. குறிப்பாக பாலிவுட்டைச் சேர்ந்த பலர், கசாப்பை தூக்கிலிட்டதை பெரும் உவகையோடு கொண்டாடுகிறார்கள்.
ஆனால், பெரும்பாலான இஸ்லாமியர்கள், ஒரு வித மனப்புழுக்கத்தோடு, இது குறித்து கருத்து தெரிவிக்கவே அஞ்சுகிறார்கள். எங்கே இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தால், நம்மை தேச விரோதியாக்கி விடுவார்களோ என்ற அச்சம் அவர்களிடத்தில் காணப்படுகிறது. நத்தை ஓட்டுக்குள் சுருங்குவது போல அவர்கள் சுருங்குவதை காண முடிகிறது.
இதுவா காந்தி கனவு கண்ட இந்தியா ? காஷ்மீரை கைப்பற்றுவதற்காக பாகிஸ்தான் இந்தியா மீது படையெடுத்த பிறகு, பாகிஸ்தானுக்கு இந்தியா தர வேண்டிய 55 கோடியை இந்தியா தரக்கூடாது என்று வல்லபாய் படேல் முடிவெடுக்கிறார். இத்தகவலை அறிந்த காந்தி, பாகிஸ்தானுக்கு ஏற்கனவே கொடுத்த வாக்குறுதியை மீறக் கூடாது என்று அறிவுறுத்தி, உண்ணாவிரதம் மேற்கொள்கிறார். அதன் பிறகே இந்தியா தர வேண்டிய 55 கோடி தரப்பட்டது.
இப்படிப்பட்ட தலைவர்கள் வாழ்ந்த நாட்டில் இன்று இப்படி ஒரு படுகொலை நடந்திருப்பது தேசிய அவமானமா இல்லையா ?
Intha Dramavey Karkarayea kolrathukkuthana da..Ithula yeanda yella karumathaium illukkuirnga..
கர்கரேயை கொலை செய்த்து யார் என்ற புத்தகத்தில் எட்டு பேர்கள் தான் பம்பாய்க்குள் வந்தார்கள். அந்த 8 பேரையும் காவல் துறையினர் கொன்று விட்டார்கள். பிடிபட்டதாகச் சவல்லப்படும் இருவர் உளவுத்துறையின் வசம் இருந்தவர்கள். கர்கரேயே கொன்ற இருவர் தப்பி விட்டனர் அந்த இடத்தில்தான் இந்த இருவரை சேர்த்திருக்கிறார்கள் என்பது விருப்ப ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி எழுதிய புத்தகம்தான் கர்கரேயை கொலை செய்த்துயார்? அப்படி இருக்க நேபாளத்தில் கைது செய்யப்படவன்தான் அந்த அஜ்மல் என்பது புத்தகம் தரும் தகவல். புத்தகம் தடைசெய்யப்படவில்லை. தமிழில் பலபதிப்புகளை இப்புத்தகம் கண்டுள்ளது.