இந்தியாவின் நீதித்துறை உலகின் புகழ் பெற்ற நீதித்துறைகளுக்கு சற்றும் சளைக்காத நீதித்துறை. விவியன் போஸ், வி.ஆர்.கிருஷ்ணய்யர், பி.என்.பகவதி, எச்.ஆர்.கண்ணா, சர்க்காரியா, சின்னப்ப ரெட்டி, போன்ற பல்வேறு நீதிபதிகள் இந்திய நீதித்துறையின் பெருமையை நிலைநாட்டிச் சென்றுள்ளனர்.
இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் உருவாக்கப்பட்ட பல உரிமைகளும், விதிகளும், உச்சநீதிமன்ற நீதிபதிகளாலேயே செதுக்கப்பட்டு, செழுமைப்படுத்தப்பட்டு சிறப்பெய்தி உள்ளன. அப்படிப்பட்ட பெருமை வாய்ந்த நீதித்துறை நம்முடைய நீதித்துறை.
தாராளமய பொருளாதார அமலாக்கத்திற்குப் பிறகு, சமூகத்தில் பல்வேறு துறைகளின் விழுமியங்கள் வீழ்ச்சியடைந்து விட்டாலும், ஜனநாயகத்தின் மீது இன்னமும் நம்பிக்கை ஏற்படுத்திக் கொண்டிருப்பவை நீதிமன்றங்களே. ஆனால் நீதிபதிகளும் மனிதர்களே… அவர்கள் கடவுள்கள் அல்ல என்பது, நீதிமன்றத்தோடு நன்கு பரிச்சயம் ஆனவர்களுக்குத் தெரியும். மற்ற துறைகளில் கருப்பு ஆடுகள் பெரும்பான்மையாகி, வெளிப்படையாக செயல்படத் தொடங்கி விட்டன… ஆனால், நீதித்துறையில் மறைமுகமாகவும், வெளிப்படையாகத் தெரியாமலும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த கருப்பு ஆடுகளை அம்பலப்படுத்துவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல…. எப்போதாவது ஒரு முறைதான், சவுமித்ரா சென் அல்லது பி.டி.தினகரன் போன்றவர்கள் சிக்குவார்கள். ஆனால், பெரும்பான்மையான நேர்வுகளில், இந்த கருப்பு ஆடுகள் சிக்குவதில்லை.
சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளில் பணி தொடர்பான (Service matters) வழக்குகள் ஆயிரக்கணக்கில் இருக்கும். மத்திய அரசானாலும் சரி, மாநில அரசானாலும் சரி, பணி நியமனம், மாறுதல், பதவி உயர்வு, தண்டனை, என பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன. Service Law எனப்படும் இந்த பிரிவு சட்டத்தின் மிக நுணுக்கமான பிரிவு. இந்தப் பிரிவில் ஏற்பட்ட வளர்ச்சியிலேயே அரசியல் அமைப்புச் சட்டம் பல்வேறு செழுமைகளை அடைந்திருக்கிறது.
இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு அரசுப் பணி என்பது வெள்ளைக்காரன் யாரை நியமிக்கிறானோ அவனுக்குத்தான். ஒரு வரைமுறை, விதி என்பதெல்லாம் கிடையாது. ஆனால் சுதந்திரத்திற்குப் பிறகு, அரசியல் அமைப்புச் சட்டம் உருவான பிறகு, அரசுப் பணி என்பது எப்படி நியாயமாக இருக்க வேண்டும் என்பதை அரசியல் அமைப்புச் சட்டத்தின் 16வது பிரிவு வரையறுத்தது. இதன் பிறகு இந்தப் பிரிவின் அடிப்படையில் வழங்கப்பட்ட பல்வேறு தீர்ப்புகள், அரசுப் பணிகளின் நியமனம், பாரபட்சமற்ற முறையில், வெளிப்படையாக, இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் நடைபெற வேண்டும் என்பதை உறுதி செய்தன.
1996ல் வெளியான ஒரு தீர்ப்பில், உச்ச நீதிமன்றம், அரசு வேலைக்காக நபர்களைத் தேர்ந்தெடுக்கையில், வெளிப்படையான முறையில், செய்தித்தாள்கள், வானொலி, தொலைக்காட்சி போன்றவற்றில் விளம்பரம் அளித்து, அதன் அடிப்படையில் வேலை வாய்ப்பு வழங்கினால் மட்டுமே, அனைவருக்கும் சமவாய்ப்பு என்ற அரசியல் சட்டத்தின் உரிமையை உறுதி செய்ய முடியும் என்று கூறியுள்ளது.
தமிழகத்தின் ஏதாவது ஒரு துறையில், ஒரு பதவிக்கு, விளம்பரம் செய்யாமல் நியமனம் வழங்கி, அந்த நியமனத்தால் பாதிக்கப்பட்ட நபர் உயர்நீதிமன்றத்தை அணுகுவாரேயானால், உடனடியாக அந்த நியமனம் ரத்து செய்யப்படும். பணி நியமன விஷயத்தில், பல உயர்நீதிமன்றங்களும், உச்ச நீதிமன்றமும், இந்த வழிமுறைகளை உறுதி செய்துள்ளன.
மற்ற துறைகளில் இந்த விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறதா என்பதை உறுதி செய்யும் சென்னை உயர்நீதிமன்றத்தில் நியமனங்கள் எப்படி நடைபெறுகின்றன என்பதை அறிந்தால், ஊருக்கு உபதேசம் செய்யும் உயர்நீதிமன்றத்தை நினைத்து வேதனைப்படுவீர்கள்.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், அக்டோபர் 2010ல் பெற்ற ஒரு தகவலில் சொல்லப்பட்டிருப்பது என்னவென்றால், 2002ம் ஆண்டு முதல் 2008 வரை 71 பேர் உதவியாளர் பணியிடத்திற்கு எவ்வித வரைமுறையுமின்றி நியமனம் செய்யப்படடிருக்கிறார்கள் என்பதே. அரசுப் பணிக்கு நியமனம் செய்கையில் வெளிப்படையாக, செய்தித்தாள்களில் விளம்பரம் செய்து விண்ணப்பங்களைப் பெற்று நியமனம் வழங்கியிருக்க வேண்டும். அப்படி இல்லாமல் இந்த நியமனங்கள் எப்படி நடந்தது என்றால் வியப்பாக இருப்பதோடு மட்டுமல்லாமல், வயிற்றெரிச்சலாகவும் இருக்கிறது. உயர்நீதிமன்ற வட்டாரங்களில் விசாரித்ததில், நீதிபதிகள் யாரைப் பரிந்துரை செய்கிறார்களோ அவர்கள் எவ்வித கேள்வியும் கேட்கப்படாமல் உயர்நீதிமன்றப் பணியாளர்களாக நியமிக்கப்படுவார்கள் என்பதே. தமிழகத்தில் வேறு எந்தத் துறையிலாவது இப்படி ஒரு நியமனத்தைச் செய்ய முடியுமா ? ஆனால் உயர்நீதிமன்றத்தில் இது தொடர்ந்து நடைபெற்று வந்து கொண்டிருந்தது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 2011ல், இது போல 100 பணியிடங்களை நியமனம் செய்ய, நீதிமான்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் பட்டியல் தயார் செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது என்ற தகவலின் அடிப்படையில், தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் வழக்கறிஞர் புகழேந்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தாக்கல் செய்தார். அந்த வழக்கில், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக, சென்னை உயர்நீதிமன்றத்தில் பணியாளர் நியமனம் செய்யப்பட்டு வருவதாகவும், வெளிப்படையான முறையில், சட்டபூர்வமாக விளம்பரங்கள் அளிக்கப்பட்ட பிறகே நியமனம் செய்ய வேண்டும் என்று உத்தரவிட வேண்டும் என்று அந்த வழக்கில் தெரிவித்திருந்தார். சென்னை உயர்நீதிமன்றத்தின் சார்பாக, உயர்நீதிமன்றப் பதிவாளர் ஒரு பதில் மனுவைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், உயர்நீதிமன்றப் பதிவாளர் முதல், தபேதார் வரை உள்ள அத்தனைப் பணியிடங்களுக்கும் Madras High Court Service Rules என்ற விதிகள் உள்ளன. அனைத்துப் பணியிடங்களும் விதிமுறைகளின் படியே நிரப்பப்படுகின்றன என்று பதில் மனுவில் கூறியிருந்தார். இதன் அடிப்படையில், தலைமை நீதிபதி இக்பால் மற்றும் சிவஞானம் அடங்கிய டிவிஷன் பென்ச், 3 செப்டம்பர் 2012 அன்று ஒரு தீர்ப்பு வழங்கியது.
மனுதாரர் கூறியது போல, விளம்பரங்கள் செய்யாமல், விதிமுறைகளை மீறி நியமனம் நடப்பதில்லை என்று பதிவாளர் பதில் மனுவில் தெரிவித்துள்ளார். உரிய முறையில் விளம்பரங்கள் செய்து விதிமுறைகளின் படி நடவடிக்கை எடுத்து, தற்போது காலியாக உள்ள உதவியாளர் (Assistants), தட்டச்சர் (Typists) ஆய்வாளர் (Reader / Examiner) ஆகிய பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று உத்தரவிட்டார். இந்தத் தீர்ப்பின் பொருள் என்னவென்றால், பதவி உயர்வு அல்லாமல் நேரடி நியமனம் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் அத்தனை பதவிகளுக்கும் விதிகளின் படி, விளம்பரம் செய்து, தேர்ச்சி செய்ய வேண்டும் என்பதே.
தற்போது என்ன நடந்துள்ளது தெரியுமா ? எந்த விதமான விளம்பரங்களும் செய்யாமல், இட ஒதுக்கீட்டு முறையைப் பின்பற்றாமல், மிகவும் ரகசியமாக அலுவலக உதவியாளர், வாட்ச்மேன், போன்ற பதவிகளுக்கு 31 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள் என்பதே.
அந்த 31 பெயர்கள் பின் வருமாறு
1) அந்தோணி
2) பாரூக்
3) அருள்ஜோதி
4) வினாயகமூர்த்தி
5) முப்பில்ஆதி
6) பிரபு
7) மோகன்பாபு
8) சதீஷ்குமார்
9) ராஜேஷ்
10) கேத்ரபாலன்
11) ஜெகன்னாதன்
12) மகேந்திரன்
13) பரமேஸ்வரி
14) சுமித்ரா
15) காயத்ரி
16) ஆசிர்வாதம்
17) ரேவதி
18) மஞ்சுளா
19) சந்திரசேகர்
20) சிவக்குமார்
21) செல்வி
22) சாந்தி
23) ஜெயந்தி
24) காளமேகம்
25) கார்த்திகேயன்
26) பூபதி
27) ராமு
28) செந்தில்குமார்
29) சக்திவேல்
30) உதயன்
31) சீனிவாசன்.
அலுவலக உதவியாளர், வாட்ச்மேன் போன்ற பணியிடங்களுக்கான கல்வித் தகுதி, 10ம் வகுப்பு தேர்ச்சியடைந்திருக்கக் கூடாது என்பதே. ஆனால் மேற்கண்டவர்களில் பெரும்பாலானவர்கள், பட்டப்படிப்பும், முதுகலைப் பட்டமும் பெற்றவர்கள் என்று தெரிகிறது. இவர்களுக்குச் சொல்லப்பட்ட நம்பிக்கை வார்த்தை என்னவென்றால், முதலில் அலுவலக உதவியாளராகவோ, வாட்ச்மேனாகவோ பணியில் சேர்ந்து கொள்ள வேண்டும். சேர்ந்த பிறகு சிறிது காலத்தில் ஏதாவது தேர்வு வைத்து, இவர்கள் உதவியாளர்களாகவோ, வேறு பதவிக்கோ நியமிக்கப்படுவார்கள் என்பதே.
அரசுப் பணி நியமனதில் 69 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டுமென்ற கோரிக்கை பல ஆண்டுகளாக போராடிப் பெற்றது. தமிழக அரசின் பணி நியமனக் கொள்கையின் படி, தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள், மாற்றுத் திறனாளிகள், பெண்களில், கைம்பெண்கள், ராணுவ வீரர்களின் குழந்தைகள் என்று பல பிரிவுகளில் இட ஒதுக்கீடு உண்டு. இந்த ஒதுக்கீடுகளைப் பூர்த்தி செய்தவர்கள் இதில் எத்தனை பேர்… ? இவர்கள் நியமனத்திற்கு எந்த செய்தித்தாளில் விளம்பரம் செய்யப்பட்டது ? இவர்களுக்கு எப்போது நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டது என்று விசாரித்தால், இவர்கள் அத்தனை பேரும், தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள நீதிபதிகளின் பரிந்துரைகளின் படி நியமிக்கப்பட்டவர்கள் என்று கூறுகின்றன நீதிமன்ற வட்டாரங்கள்.
இந்த 31 பேரையும் பரிந்துரை செய்த நீதிபதிகளின் பெயர்கள் முழுமையாக கிடைக்கவில்லை. ஆனால், இந்த 31 பேர்களில் சிலரை பரிந்துரை செய்த நீதிபதிகள்
நீதிபதி சத்யநாராயணன்
நீதிபதி சி.டி.செல்வம்
நீதிபதி ஆர்.எஸ்.ராமநாதன்
நீதிபதி தமிழ்வாணன்
நீதிபதி ஜி.ராஜசூர்யா
நீதிபதி மணிக்குமார்
நீதிபதி வினோத் கே. சர்மா
நீதிபதி கே.வெங்கட்ராமன்
நீதிபதி ட்டி.மதிவாணன்
நீதிபதி கே.சுகுணா
இந்த நீதிபதிகள் Service Law தெரியாதவர்கள் அல்ல. இதில் சில நீதிபதிகள் Service Law வில் புலிகள். இவர்களுக்குத் தெரியாத சட்டமே கிடையாது. பல்வேறு உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் மற்றும் உயர்நீதிமன்றங்களின் தீர்ப்பின் படி, அரசுப் பணிக்காக இப்படி ஆட்களைப் பரிந்துரை செய்வது சட்டவிரோதம் என்பதை நன்கு அறிந்தவர்கள்.
கக்கூஸைக் கழுவும் துப்புறவுத் தொழிலாளி வேலையாக இருந்தாலும் அது அரசு வேலை. மக்கள் வரிப்பணத்தில் ஊதியம் வாங்கும் வேலை. என்பதை அறிந்தவர்கள். சாதாரண தொகுப்பூதியம் பெறும் சத்துணவு ஆயா வேலையோ, கோயிலில் பெருக்கும் வேலையோ எதுவாக இருந்தாலும், அது சட்டபூர்வமாக நியமனம் செய்யப்பட வேண்டும் என்பதை நன்கு அறிந்த நீதிமான்கள் இவர்கள். இவர்கள் இப்படிச் செய்யலாமா ?
மெத்தப் படித்த நீதிமான்களே இப்படிச் செய்தால், தவறிழைக்கும் அரசு நிர்வாகத்தை இவர்கள் எப்படிக் கண்டிப்பார்கள் ? ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலை வாய்ப்புக்காக அரசு வேலை வாய்ப்பக வாசலில் காத்திருக்கையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் பங்கெடுக்க போட்டி போட்டுக் கொண்டிருக்கையில், பின் வாசல் வழியாக இப்படி நடத்தும் பணியாளர் தேர்வு அந்த இளைஞர்களுக்குச் செய்யும் துரோகமாகாதா ? இட ஒதுக்கீட்டுக் கொள்கைக்கு எதிரானதாகாதா ? அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமைகளுக்கு எதிரானதாகாதா ?
தோட்டம் காக்க போட்ட வேலி பயிரைத் தின்பதோ…
அதைக் கேள்வி கேட்க ஆளில்லாமல் பார்த்து நிற்பதோ..
இந்த 31 பேரின் நியமனத்தையும் எதிர்த்து, தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் செயலாளர் புகழேந்தி நாளை ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்ய உள்ளார் என்பதை இந்நேரத்தில் வாசகர்களோடு பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறது சவுக்கு. நீதி நிலைநாட்டப்படும் என்று நம்புவோம்.