கடந்த வாரம் என்கவுன்டர் என்ற பெயரில் மேலும் இரண்டு கொலைகளை அரங்கேற்றியிருக்கிறது தமிழ்நாடு காவல்துறை. பிரபு மற்றும் பாரதி என்ற இருவரை வழக்கம் போல தப்பிச் சென்ற பிறகு பிடித்த காவல்துறையினரை அவர்கள் தாக்கியதால், “தற்காப்புக்காக” காவல்துறையினர் சுட்டதில் அவர்கள் இருவரும் பலியாகியுள்ளார்கள்.
சற்று பின்னோக்கிச் செல்வோம். நவம்பர் முதல் வாரத்தில் நடந்த ஆல்வின் சுதன் என்ற உதவி ஆய்வாளரின் கொலையே இந்த என்கவுன்டர் கொலைகளுக்கு காரணமாக அமைந்துள்ளது.
கடந்த வருடம் இமானுவேல் சேகரன் நினைவு நாளன்று காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் தாக்குதலில் ஆறு பேர் இறந்ததால், இந்த முறை நடந்த இமானுவேல் சேகரனின் நினைவு நாளிலும் சரி.. அதற்குப் பிறகு நடந்த மருதுபாண்டியர் மற்றும் தேவர் குரு பூஜையிலும் சரி… ஏராளமான பாதுகாப்பு ஏற்பாடுகள். ஆனால் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு வந்த காவல்துறையினருக்கு ஒரு முக்கிய கட்டளை… துப்பாக்கி எடுத்து வரக் கூடாது என்பதே.
ஆயிரக்கணக்கில், ஒரு சாதி விழாவுக்காக கூடும் இடத்தில் துப்பாக்கியை எடுத்து வராதே என்று அறிவுரை வழங்கும் முட்டாள்களை எங்காவது பார்த்திருக்கிறீர்களா… ? தமிழக காவல்துறையில்தான் அப்படிப்பட்ட முட்டாள் அதிகாரிகள் இருக்கிறார்கள்.
தேவர் குருபூஜைக்கு பாதுகாப்பு பணிக்காகச் சென்ற ஒரு காவல்துறை அதிகாரி சொன்னது… நிகழ்ச்சி நடப்பதற்கு முன்பாகவே, தேவர் குரு பூஜை ஏற்பாட்டாளர்கள் மற்றும் பங்கேற்பவர்களிடம் காவல்துறையினர் கூறியது, மூடிய வாகனத்தில்தான் வர வேண்டும், ஆயுதங்களோடு வரக்கூடாது, வாகனத்தில் அதிகப்படியான நபர்களை ஏற்றி வரக்கூடாது என்று உத்தரவிட்டிருக்கின்றனர். ஆனால் அன்று விழாவுக்கு வந்த அத்தனை வாகனங்களிலும் குறைந்தது 15 முதல் 25 பேர் பயணம் செய்து வந்திருக்கின்றனர். எந்த காவல்துறையினரிடமும் ஆயுதங்கள் இல்லாததால் காவல்துறை செக்போஸ்ட் அருகே வந்தால், ஆபாசமாக கோஷமிடுவது அல்லது லுங்கியைத் தூக்கிக் காட்டுவது என்று நடந்து கொண்டிருக்கின்றனர். செங்கோட்டை என்ற இடத்துக்கு அருகே, செந்தில் குமார் என்ற துணை ஆணையர் பாதுகாப்புப் பணிக்காக நின்று கொண்டிருந்தபோது, வாண்டையார் கோஷ்டியைச் சேர்ந்த வாகனம் அவ்வழியாக வந்தது. அந்த வாகனத்தை அதே இடத்தில் நிறுத்தி விட்டு, நடந்து செல்லும்படி கூறியிருக்கிறார். ஆனால், டாடா சுமோவில் வந்த அவர்கள், அந்த துணை ஆணையரை இடிப்பது போலச் சென்றிருக்கின்றனர். தப்பித் தவறி துப்பாக்கி எடுத்து வந்தவர்களிடமும், துப்பாக்கிகளை சேகரித்து, ராமநாதபுரம் ஆயுதக் கிடங்கில் வைத்துள்ளனர்.
டிஎஸ்பி வரையிலான அதிகாரிகள் எவ்வித பாதுகாப்புமின்றி கையில் லத்திகளோடு மட்டுமே நின்றிருக்கின்றனர். டிஎஸ்பி வரையிலான அதிகாரிகளை லத்தியோடு சாலையில் நிறுத்திய தென் மண்டல ஐஜி ராஜேஷ் தாஸ் மற்றும் சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி டி.கே.ராஜேந்திரன் ஆகியோர் மட்டும், தங்கள் வாகனத்தின் முன்னும் பின்னும் ஆயுதம் தாங்கிய காவலர்களை பாதுகாப்புக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இப்படிப்பட்ட புத்திசாலி அதிகாரிகளின் அறிவுரையின்படிதான், மருதுபாண்டியர் விழாவின் போது காவல்துறை அதிகாரிகள் ஆயுதம் இல்லாமல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். அப்படிப்பட்ட ஒரு அதிகாரியாகத்தான் ஆல்வின் சுதன் என்ற இளம் உதவி ஆய்வாளர் ரவுடிகளால் கொல்லப்பட்டுள்ளார்.
காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்புக்காக துப்பாக்கியை பயன்படுத்துவதை எந்த முட்டாளும் எதிர்க்க முடியாது. தன்னை ஒரு ரவுடி தாக்க வருகையில், தன்னைத் தற்காத்துக் கொள்வதற்காக அந்த ரவுடியைச் சுடுவது காவல்துறை அதிகாரிகளின் உரிமை. இப்படி நெருக்கடியான நேரங்களில் துப்பாக்கி வைத்துக் கொள்ளாதே என்று உத்தரவிட்டு ஒரு உதவி ஆய்வாளரின் உயிர் பலியானதும், அதில் குற்றம் சாட்டப்பட்டவனை பிடித்து வைத்து, கொல்வதையும் ஏற்றுக் கொள்ள முடியாது.
ஆல்வின் சுதன் கொலையில் சம்பந்தப்பட்டவர்களில் கொலை செய்யப்பட்டுள்ள பிரபு மற்றும் பாரதி என்ற இருவரை என்கவுன்டரில் கொலை செய்துள்ளது காவல்துறை.
மதுரைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பிரபு மற்றும் பாரதி ஆகிய இருவரும் நேற்று வேனில் கொண்டு செல்லப்பட்டதாகவும், அப்போது நெஞ்சு வலிப்பதாக பிரபு கூறியதால், காவல்துறையினர் வேனை நிறுத்தியதாக கூறப்படுகிறது.
வேன் நிறுத்தப்பட்டபோது, அந்த இருவரும் காவலர்களை தாக்கிவிட்டு தப்பிவிட்டதாகவும், இதில் சித்திரைவேல் என்கிற காவலர் உள்பட இரண்டு காவலர்கள் படுகாயமடைந்தனர். மதுரை நகர் மற்றும் புறநகர் போலீசாருக்கு தகவல் கொடுத்து தப்பியோடிய 2 பேரையும் கைது செய்ய விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு துணை கமிஷனர் திருநாவுக்கரசு நகரில் உள்ள நான்கு உதவி கமிஷனர்களை மைக் மூலம் அழைத்து உத்தரவிட்டார். இந்த தகவல் பக்கத்து மாவட்டங்களுக்கும் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட போலீசாரும் உஷார் படுத்தப்பட்டனர். ஆங்காங்கே வாகனச் சோதனையும் நடத்தப்பட்டன.
தப்பி ஓடிய 2 பேரும் நேற்று இரவு 8.45 மணிக்கு ஒரு பைக்கில், மேலமேல் குடி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தனர். அவர்களை எஸ்.ஐ.பூமிநாதன் மற்றும் 2 போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது போலீசாரைப் பார்த்ததும் 2 பேரும் ஆயுதங்களால் தாக்கினர். இந்த தாக்குதலில் 3 போலீஸாரும் காயமடைந்தனர். இந்த தகவலும் போலீஸ் மைக் மூலம் தெரிவிக்கப்பட்டது. அப்போது ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த டி.எஸ்.பி. வெள்ளத்துரை தலைமையிலான போலீஸார் இவர்களை பிடிக்க சென்றனர். 3 போலீஸாரை காயப்படுத்திவிட்டு தப்பிச்சென்ற இருவரும், தீர்த்தான்பேட்டை என்ற கிராமத்தின் அருகே சென்று கொண்டிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, மானாமதுரை டி.எஸ்.பி வெள்ளைத்துரை தலைமையில் காவலர்கள் அங்கு விரைந்து சென்றனர்.
அவர்களைப் பார்த்ததும், தப்பி ஓடிய 2 பேரும் வெடிகுண்டுகளை வீசினர். இதனால் போலீசார் அவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டனர். சூடு பட்டு விழுந்த இருவரையும் மதுரை அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இது குறித்து கருத்து தெரிவித்த வெள்ளைத்துரை “போலீசாரிடம் இருந்து தப்பிய இருவரையும் பிடிக்க போலீசார் உஷார் படுத்தப்பட்டனர். இருவரும் தங்கள் சொந்த ஊருக்கு வரலாம் என்பதால், அப்பகுதியில் சோதனை நடத்தினோம். அப்போது பைக்கில் வந்த இருவரும் போலீசாரை நோக்கி, பெட்ரோல் குண்டு வீசினர். அரிவாள் வைத்திருந்தனர். போலீசாரை பாதுகாக்க இருவரையும் சுட்டேன்” என்றார் அவர்.
நெஞ்சு வலி என்று காரணம் கூறி தப்பி ஓடிய பிரபு, இந்த கொலை வழக்கில் போலீஸ் தன்னைத் தேடுவது அறிந்து, திருப்பூர் ஜூடிசியல் ஜே.எம்., எண்-2 கோர்ட்டில் நீதிபதி மலர்மன்னன் முன்பு, சரண் அடைந்தவர். சரணடையும்போதே, தங்கள் உயிருக்கு ஆபத்து, தங்களை என்கவுன்டரில் கொல்லப்போகிறார்கள் என்று நீதிபதிக்கு மனு எழுதிக் கொடுத்துள்ளனர். இதையும் மீறி இந்தக் கொலை நடந்துள்ளது.
என்கவுன்டர் என்ற பெயரில் நடந்த இந்தப் படுகொலைகளுக்கு யார் காரணம் என்றால் நிச்சயமாக காவல்துறையினர் காரணம் இல்லை.
இந்தப் படுகொலைகளுக்கு முழுமையான காரணம், நீதிமன்றங்கள் மட்டுமே. இந்த என்கவுன்டர் மட்டுமல்ல… இது போல இன்னும் பல என்கவுன்டர்கள் தொடர்ந்து தமிழகத்தில் நடக்கும். ரவுடிகள் என்ற பெயரில் மேலும் பல்வேறு படுகொலைகளை தமிழக காவல்துறை நடத்துவதற்கு கொஞ்சமும் அஞ்சப்போவதில்லை. இதற்கு காரணம், உயர்நீதிமன்றத்தின் மீதும் நீதிபதிகள் மீதும் காவல்துறை அதிகாரிகளுக்கு துளியும் பயம் கிடையாது என்பதே… உயர்நீதிமன்றத்தின் உள்ளே புகுந்து, வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள், பொதுமக்கள், நீதிபதிகள் என்று விரட்டி விரட்டி காவல்துறை அடித்தபோது மவுனமாக வேடிக்கை பார்த்ததுதான் இந்த நீதித்துரை. உயர்நீதிமன்றத்தின் மாண்பை கெடுத்த காவல்துறை அதிகாரிகளை மறுநாளே பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டிருக்க வேண்டாமா ? ஆனால் எந்த நீதிபதியும் செய்யவில்லை.
2006ம் ஆண்டு முதல் 2012 வரையிலான காலகட்டத்தில் மட்டும், தமிழகத்தில் 40க்கும் மேற்பட்டவர்கள் என்கவுன்டர்களில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 2006 முதல் 2010 வரை நடந்த என்கவுன்டர்களை சிபிஐ விசாரிக்க உத்தரவிடும்படி, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டது. திண்டுக்கல் பாண்டி, கொற சிவா, ராஜன் என்கிற சண்முகசுந்தரம் ஆகிய என்கவுன்டர் கொலைகளை விசாரிக்க வேண்டும் என்று தமிழக மக்கள் உரிமைக்கழகத்தின் சார்பில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டு அந்த வழக்குகளும் நிலுவையில் உள்ளன. இந்த என்கவுன்டர் வழக்குகளையெல்லாம் விசாரிக்குமாறு ஒரு சிறப்பு அமர்வை தலைமை நீதிபதி கடந்த ஆண்டு தொடக்கத்தில் நியமித்தார். நீதிபதி கே.என்.பாஷா மற்றும் நீதிபதி சத்யநாராயணா ஆகியோர் அடங்கிய டிவிஷன் பென்ச் இந்த வழக்குகளை விசாரிப்பதற்கென நியமிக்கப்பட்டு, இது வரை ஒரே ஒரு முறைதான் விசாரணை நடத்தியுள்ளது. அதன் பிறகு, நீதிபதி கே.என்.பாஷா சென்னையில் இருந்தால், சத்யநாராயணா மதுரையில் இருப்பார். சத்யநாராயணா சென்னையில் இருந்தால், பாஷா மதுரையில் இருப்பார். இப்படி இந்த இரண்டு நீதிபதிகளும் கண்ணாமூச்சி ஆடி இரண்டு ஆண்டுகள் கடந்து விட்டன. நீதிபதி கே.என்.பாஷா பற்றிய விபரங்களுக்கு என்ன ஒரு கரிசனம் என்ற சவுக்கு கட்டுரையைப் படியுங்கள். இவர்கள் இருவரும் எப்போது சென்னையில் ஒன்றாக இருப்பார்கள் என்பதை, வானிலை ஆராய்ச்சி மையத்தில்தான் கேட்க வேண்டும்.
கடந்த பிப்ரவரி மாதம் வேளச்சேரியில் நடந்த என்கவுன்டரையே எடுத்துக் கொள்ளுங்கள். என்கவுன்டர் நடந்த மறுநாளே சென்னை உயர்நீதிமன்றத்தில் சிபிஐ விசாரணை வேண்டி பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இது வரை 24 தடவைக்கு மேல் அந்த வழக்கு விசாரணைக்காக வந்துள்ளது. ஒவ்வொரு முறையும், அரசு வழக்கறிஞர் இல்லை… மேஜிஸ்ட்ரேட் விசாரணை முடியவில்லை, சிபி.சிஐடி விசாரணை முடியவில்லை என்று அரசுத் தரப்பு காலம் தாழ்த்தி வந்தது. இறுதியாக கடந்த 24.10.2012 அன்று, மேஜிஸ்ட்ரேட் விசாரணை அறிக்கை, சிபி.சிஐடி விசாரணை அறிக்கை இரண்டையும், நீதிமன்ற ஆவணமாக சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்கள் நீதிபதிகள் எலிப்பி தர்மாராவ் மற்றும் வேணுகோபால்.
கடந்த வாரம் இரண்டு அறிக்கைகளையும் நீதிமன்றத்தில் சீலிடப்பட்ட உறையில் சமர்ப்பித்தார் அரசு வழக்கறிஞர் வண்டுமுருகன். ஏற்கனவே நீதிமன்ற ஆவணமாக சமர்ப்பிக்கப் பட்டதை சுட்டிக் காட்டினார் மனுதாரரின் வழக்கறிஞர். நீதிமன்ற ஆவணமாக சமர்ப்பிக்க வேண்டுமென்றால், சம்பந்தப்பட்டவர்கள் அனைவருக்கும் நகல் வழங்க வேண்டும். ஆனால் வண்டு முருகனோ, இதன் நகலை யாருக்கும் வழங்க இயலாது, இந்த வழக்கையே விசாரணைக்கு ஏற்க இயலாது என்றார். நீதிபதியும் அவர் சொல்வதை கேட்டுக் கொண்டு, இது தொடர்பாக முழுமையாக விசாரிக்க வேண்டும் என்று வழக்கை தள்ளி வைத்தார். இந்த வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கிறது.
என்கவுன்டர் என்ற பெயரில் செய்தாலும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பார்வையில் அது கொலையே. காவல்துறையினர் தங்கள் பணியின் போது கொலை செய்தால் வழக்கு பதிவு செய்ய வேண்டியதில்லை என்று இந்திய தண்டனைச் சட்டம் சொல்லவில்லை. யார் செய்தாலும் கொலைதான். அது தற்காப்புக்காக செய்யப்பட்ட கொலையா என்பதை, விசாரணை நீதிமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும். காவல்துறையினரே அதை முடிவு செய்ய எந்த அதிகாரத்தையும் இந்திய தண்டனைச் சட்டம் வழங்கவில்லை. இப்படி இருக்கையில் இது போன்ற என்கவுன்டர் தொடர்பான வழக்குகளில் விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்குவதில் என்ன சிக்கல் இருக்க முடியும் ? பிப்ரவரி மாதம் தொடரப்பட்ட வழக்கு இது… எதிர்த்தரப்பு பதில் மனு தாக்கல் செய்ய ஒரு மாதம் அவகாசம் வழங்கலாம்.. இரண்டு மாதம் அவகாசம் வழங்கலாம்.. பத்து மாதங்கள் எதற்கு…. ? என்கவுன்டர்களில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளைத் தூக்கில் போட வேண்டும் என்று யாரும் கோரவில்லையே… அது உண்மையிலேயே என்கவுன்டரா… இல்லையா என்பதை சிபிஐ விசாரிக்கட்டும் என்றுதானே கேட்கிறார்கள்… ? சிபிஐ விசாரித்து உண்மையான என்கவுன்டராக இருந்தால், அப்படித்தானே அறிக்கை தரப்போகிறார்கள்… ? இந்த விசாரணைக்கு உத்தரவிடுவதில் நீதிமன்றத்துக்கு என்ன தயக்கம் இருக்க முடியும் ? இதற்கு பத்து மாதங்கள் எதற்கு ? சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட முடியும்.. அல்லது முடியாது… இப்படி ஒரு முடிவெடுக்க நீதிமன்றங்கள் ஏன் தயங்குகின்றன ?
இப்படி நாட்களைக் கடத்தி, இது போன்ற வழக்குகளில் தீர்ப்பு வழங்காமல் காலம் தாழ்த்துவதன் ஒரே காரணம், சம்பந்தப் பட்ட கொலைகார அதிகாரிகளை காப்பாற்றுவதன்றி வேறு என்ன இருக்க முடியும் ?
வழக்கை விரைவாக விசாரித்து தீர்ப்பெழுத வேண்டிய நீதிபதிகள், அப்போல்லோ மருத்துவமனையில் ஓசியில் மருந்து வாங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் வேதனையான விஷயம். அப்போல்லோ மருத்துவமனையின் ஊழியர்கள், சில நீதிபதிகளின் வீட்டுக்கு காலையில் செல்வார்கள். அன்றைய மருந்துகளின் தேவை என்ன, நீதிமான்களுக்கு ஏதாவது பரிசோதனை செய்ய வேண்டுமா என்பது போன்ற விபரங்களை கேட்டறிந்து கொள்வார்கள். பரிசோதனை தேவை என்றால் ரத்த மாதிரிகள் எடுத்துச் செல்லப்படும். அன்று மாலையே, கேட்கப்பட்ட மருந்துகள், பரிசோதனையின் விபரங்கள் நீதிமான்களின் இல்லத்தில் வழங்கப்படும். நீதிபதிகளுக்கு வீட்டிலேயே பரிசோதனை செய்து, மருந்து வழங்கினால் அது ஒரு குற்றமா என்று நியாய உணர்வுள்ளவர்கள் கேட்பீர்கள். அதற்கு தேவையான கட்டணத்தைச் செலுத்த வேண்டாமா ? கட்டணத்தைச் செலுத்தினால் யார் கேட்கப்போகிறார்கள். யார் இந்த நீதிபதிகள் என்று கேட்பீர்கள்.. அவர்கள் பெயரெல்லாம் தெரியாது அய்யா….
சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தின் 150வது ஆண்டு விழா நடந்தது. அந்த விழா முடிந்ததும், நன்றியுரை ஆற்றியவர் நீதிபதி எலிப்பி தர்மாராவ். அப்போது விழாவிற்கு வருகை தந்திருந்த முதலமைச்சர், உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆகியோருக்கு நன்றி தெரிவித்த நீதிபதி எலிப்பி தர்மாராவ், இந்த விழாவிற்கு வருகை தந்து சிறப்பித்த, அப்போல்லோ மருத்துவமனையின் நிறுவனர் டாக்டர் பிரதாப் சி.ரெட்டி அவர்களுக்கு நன்றி என்று தெரிவித்தார். 2ஜி ஊழலில் விசாரிக்கப்பட உள்ள அப்போல்லோ மருத்துவமனையின் முதலாளி பிரதாப் சி.ரெட்டிக்கும் சென்னை உயர்நீதிமன்றத்தின் 150வது ஆண்டு விழாவுக்கும் என்ன சம்பந்தம் என்று அதிகப்பிரசங்கித் தனமாக கேட்காதீர்கள். ரெட்டிகாரு, ராவ்காரு, மன்ச்சி ஃப்ரென்ட்ஷிப்பூ
இது போன்ற நீதிமன்றங்களின் அலட்சியமான, அசட்டையான போக்கினாலுமே, காக்கிச் சட்டை அணிந்த கொலைகாரர்கள் சர்வ சாதாரணமாக கொலைகளை அரங்கேற்றி வருகின்றனர். ஒரு என்கவுன்டர் நடந்திருக்கிறது.. அதில் சிபிஐ விசாரணை வேண்டும் என்று கேட்டு மனுத்தாக்கல் செய்யப்படுகிறது. அரசுத் தரப்பு என்ன கூறுகிறது என்று கேட்டு, இரண்டு மாதங்களுக்குள் தீர்ப்பு வழங்கினால் இது போன்ற என்கவுன்டர்கள் தொடருமா… வெள்ளைத்துரைகள் திமிரோடு திரிவார்களா ? திரிபாதிகள் திமிரோடு பவனி வருவார்களா ?
மானாமதுரையில் வெள்ளைத்துரை நடத்திய கொலைகளுக்கு வெள்ளைத்துரை மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும், வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் செயலர் புகழேந்தி பொது நல வழக்கு தாக்கல் செய்துள்ளார். இந்த பொதுநல வழக்கு வரும் புதன் அன்று விசாரணைக்கு வருகிறது.
நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்காமல் காலதாமதம் செய்தாலும் நாங்கள் விடமாட்டோம். போலி என்கவுன்டர்களுக்கு எதிராக வழக்கு போடுவதை நிறுத்தமாட்டோம். நீதிமன்றங்கள் தீர்ப்பு எழுதும் வரை நெருக்கடி கொடுப்போம். உச்சநீதிமன்றம் வரை சென்று போராடுவோம். மானாமதுரையில் நடந்த என்கவுன்டர்களை கண்டித்து சுவரொட்டி ஒட்டிய, தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் நிர்வாகிகள் காளை லிங்கம் மற்றும் தேவதாஸ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளது காவல்துறை. ஷகீலா படத்துக்கு போஸ்டர் ஒட்ட அனுமதிக்கும் காவல்துறை, என்கவுன்டர்களை கண்டித்து போஸ்டர் ஒட்டியவர்களை கைது செய்திருப்பது எதிர்ப்புக் குரல்களைக் கண்டு அவர்கள் எப்படி அச்சப்படுகிறார்கள் என்பதையே காட்டுகிறது.
நீதிமன்றங்கள் இப்படி மீளா உறக்கத்தில் இருப்பதனால்தான், சற்றும் அச்சமின்றி காவல்துறையினர் இப்படிப்பட்ட சட்டபூர்வமான கொலைகளை அரங்கேற்றி வருகின்றனர். இந்தக் கொலைகளை தடுக்க வேண்டிய நீதிமன்றங்களோ மீளா உறக்கதில் இருக்கிறது. காவல்துறையினர் நடத்தும் இப்படிப்பட்ட படுகொலைகளுக்கு மவுன சாட்சியாக இருக்கும் நீதிமன்றங்கள், கொலைகார நீதிமன்றங்களே…
இந்தக் நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்காமல் காலதாமதம் செய்தாலும் நாங்கள் விடமாட்டோம். போலி என்கவுன்டர்களுக்கு எதிராக வழக்கு போடுவதை நிறுத்தமாட்டோம். நீதிமன்றங்கள் தீர்ப்பு எழுதும் வரை நெருக்கடி கொடுப்போம். உச்சநீதிமன்றம் வரை சென்று போராடுவோம்.