தருமபுரி வன்முறை மற்றும் காதலைக் கொண்டாடும் ஓவிய முகாம் சென்னை மெரினா கடற்கரையில் வெற்றிகரமாக நடந்தது
தருமபுரி வன்கொடுமைகளைத் தொடர்ந்து தலித் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட சாதி வெறியாட்டங்கள் பரவலாக அதிகரித்துள்ளது. இதற்கு தலித் இளைஞர்களின் காதல் நாடகங்கள் என்ற தவறாக பரப்புரையும் சில இயக்கங்கள் மேற்கொண்டுள்ளன, மேலும் இதைத் தொடர்ந்து காதலுக்கு எதிராக சாதி வெறி இயக்கங்கள் களம் இறங்கியுள்ளதால் பொது மக்களிடையே உருவாகிவரும் தப்பபெண்ணங்களை நீக்கும் முயற்சியில் ஒரு அங்கமாக சமுக அமைதிக்கான படைப்பாளிகள் இயக்கம் இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னை மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலையருகில் ஓவிய முகாமினை நடத்தியது. இதில் ஓவியர் சந்ரு தலைமைத் தாங்கினார், பேராசிரியர் ஆர்ம்ஸ்ராங், பேராசிரியர் அழகரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர், சிறப்பு அழைப்பாளர்களாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் கலந்துக் கொண்டார்.
வைகோ அவர்கள் பேசும் போது, காலம் மாறிவிட்ட இந்தச் சூழலில் காதலைச் சொல்லி தலித் மக்கள் மீது ஒடுக்கு முறையைக் கட்டவிழ்த்து விடுவது மனிதத் தன்மையற்றச் செயல், தலித் இளைஞர்கைள் கூலிங் கிளாஸ் போடுகிறார்கள், பேண்ட் அணிந்து பெண்களை மயக்குகிறார்கள் என்பது அவதூறு என்றார். மேலும் அவர்களின் முன்னேற்றத்தைப் பார்த்து பொருக்காமல் இப்படிபட்ட செயல்களை செய்தை இனியும் அனுமதிக்கக்கூடாது, தருமபுரியில் தாக்கப் பட்டு கொள்ளையடிக்கப்பட்ட மக்களுக்கு உரிய பொருளாதார நிவாரணம் வழங்கப்பட வேண்டும் அதற்கு இந்த அரசு முன்வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்ததுடன், தாக்குலில் ஈடுபட்ட அத்தனைப் பேரும் சட்டத்தின் முன் தண்டிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கையை முன் வைத்தார்.
இதற்கு முன் விஞ்ஞானி.தயானந்தன், கவிஞர் தமிழச்சித் தங்கப்பாண்டியன், எழுத்தாளர்,வ.கீதா, எழுத்தாளர் மனுஷ்ய புத்திரன், எழுத்தாளர் ஞாநி, மனநல நிபுணர் டாக்டர் ருத்ரன், ஓவியர் விசுவம், ஓவியர் தட்சிணாமுர்த்தி பத்திரிக்கையாளர் டி எஸ் எஸ் மணி ஆகியோர் சிறப்புரையாற்றினர். பல்வேறு கட்சித் தலைவர்களும் எழுத்தாளர்களும், பொது மக்களும் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டனர்.
பின்பு ஐம்பதிற்கும் மேற்பட்ட ஓவியர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கேன்வாசுகளை கொண்டு மாலைவரை ஓவியங்களைத் தீட்டினர், ஓவியங்கள் வரையப்படுவதையும், அவற்றில் ஓவியர்கள் ஈடுபடும் விதத்தையும் வந்திருந்த மக்கள் ஆர்வத்துடன் பார்த்தனர். முடிக்கப்பட்ட ஓவியங்கள் அங்கேயே காட்சிக்கு வைக்கப்பட்டன அவற்றையும் ஏராளமான பொதுமக்கள் கண்டு தங்கள் கருத்துக்களை பகிர்ந்துச் சென்றனர்.