ராதாகிருஷ்ணன். இவர் ஒரு வழக்கறிஞர். ஆயிரக்கணக்கில் இருக்கும் வழக்கறிஞர்களில் இவர் ஒரு வழக்கறிஞர் அல்ல. இவர் மக்களுக்கான வழக்கறிஞர்.
நம்மில் பலர் பல்வேறு துறைகளில் விற்பன்னர்களாக இருப்போம். நிபுணர்களாக இருப்போம். மற்றவர்களோடு ஒப்பிட முடியாத அளவுக்கு சிறந்த திறமை படைத்தவர்களாக இருப்போம். ஆனால் நமது திறமையை எப்படிப் பயன்படுத்துகிறோம், யாருக்காக பயன்படுத்துகிறோம் என்பதே நாம் எப்படிப்பட்ட மனிதர்கள் என்பதை வரலாற்றில் பதியச் செய்கிறது.
ராதாகிருஷ்ணன் ஒரு மிகச் சிறந்த வழக்கறிஞர் என்பதை அவரோடு அறிமுகம் ஆன அனைவரும் ஒப்புக் கொள்வார்கள். அவருக்கு இருக்கும் சட்ட அறிவும், வாதத்திறமையும் ஈடு இணை இல்லாதது. அவருக்கு இருக்கும் திறமையை அவர் யாருக்காக பயன்படுத்துகிறார் ?
2009ம் ஆண்டு வேலூர் சிறையில் ஒரு சம்பவம். சாரதா என்ற பெண்மணியை பெண் சிறைக்காவலர்கள், நிர்வாணப்படுத்தி சித்திரவதை செய்தார்கள் என்ற புகார் வந்தது. வேலூர் சிறைக்கு நளினியைப் பார்க்கச் சென்ற தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் செயலாளர் புகழேந்தி நடந்த சம்பவம் குறித்து உடனடியாக உள்துறைச் செயலாளருக்கு தந்தி அனுப்பினார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த ராதாகிருஷ்ணன், உடனடியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
அந்த வழக்கு நீதிபதி எலிப்பி தர்மாராவ் மற்றும் நீதிபதி சி,டி.செல்வம் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணை நடந்தபோது, பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினரோ, நண்பரோதான் வழக்கு தாக்கல் செய்ய முடியும்… மனு தாக்கல் செய்திருப்பவர் ஒரு வழக்கறிஞர்.. அவர் எப்படித் தாக்கல் செய்யலாம் என்ற ரீதியில் பல்வேறு கேள்விகளை எழுப்பினார் நீதிபதி எலிப்பி தர்மாராவ். சிறையில் நடக்கும் ஒரு கொடுமையை நீதிமன்றத்தின் கவனத்துக்கு எடுத்து வருவது ஒரு வழக்கறிஞரின் கடமை. விளிம்பு நிலை மக்களுக்கு நியாயம் வழங்கும் நீதிமன்றத்தின் கடமையைச் செய்ய, இந்த வழக்கறிஞர் உதவி செய்திருக்கிறார். நடைபெற்றிருக்கும் மிக மோசமான இந்த மனித உரிமை மீறலை கவனத்தில் கொள்ளாமல், யார் மனு தாக்கல் செய்திருக்கிறார்கள் என்று நீதிமன்றம் ஆராய்வது வருத்தத்திற்கு உரியது. நீதிமன்றத்தின் கவனத்துக்கு இப்படிப்பட்ட அநீதியை எடுத்த வந்ததற்காக, மனுதாரரை இந்நீதிமன்றம் பாராட்ட வேண்டும். மாறாக இப்படி டெக்னிக்கலான கேள்விகளைக் கேட்பதே, வருத்தத்திற்குரியது என்றார்.
அவரின் அத்தனை வாதங்களையும் ஏற்றுக் கொண்ட நீதிபதி, பாதிக்கப்பட்ட சாரதா என்ற பெண்ணுக்கு 50 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடும், அவர் மீது நடந்த தாக்குதலுக்குக் காரணமான சிறைக் காவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்க உத்தரவிட்டார்.
2009 முதல், திமுக ஆட்சியில் நடந்த ஏராளமான அயோக்கியத்தனங்களுக்கு எதிராக தமிழக மக்கள் உரிமைக் கழகம் தொடுத்த பல்வேறு பொதுநல வழக்குகளில் ஆஜராகி வாதாடியிருக்கிறார் ராதாகிருஷ்ணன். சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக ஆட்சிக் காலத்தில் அரசு வழக்கறிஞராக இருந்த ராஜா கலிபுல்லாவைக் கேட்டுப்பாருங்கள். நீதிமன்றத்தில் திமுக அரசின் மானம் கப்பலேறாமல் காப்பாற்ற அவர் எத்தனை பாடுபட்டிருப்பார் என்று.
தமிழக மீனவர்களைச் சுட்டுக் கொன்ற சிங்களக் கடற்படையினரைக் கைது செய்ய வேண்டும், சென்னையில் திருநாவுக்கரசு என்ற இளைஞனைக் கொலை செய்து விட்டு, இலங்கையில் அமைச்சராக உள்ள டக்ளஸ் தேவானந்தாவைக் கைது செய்ய வேண்டும், 2ஜி ஊழலில் சம்பந்தப்பட்ட திருட்டுப் பாதிரியார் ஜெகத் கஸ்பரோடு தமிழக அரசு இணைந்து சென்னைச் சங்கமம் நடத்தக் கூடாது, ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களை ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்யக்கூடாது, கூடங்குளத்தில் போடப்பட்டுள்ள 144 தடை உத்தரவை விலக்க வேண்டும், போலி என்கவுன்டரில் சம்பந்தப்பட்ட அனைத்து காவல்துறை அதிகாரிகள் மீதும் கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும், தமிழக சிறைகளில் நடக்கும் கொடுமைகளை நிறுத்த வேண்டும், ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் நளினியை முன் விடுதலை செய்ய வேண்டும், விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும், சட்டவிரோதமாக செய்யப்படும் தமிழக இளைஞர் காவல் சிறப்புப் படைக்கு தடை விதிக்க வேண்டும், என்று மனித உரிமைகள் தொடர்பான ஏராளமான வழக்குகளில் ராதாகிருஷ்ணன் ஆஜராகி வாதாடியிருக்கிறார்.
ராதாகிருஷ்ணனுக்கு இருக்கும் சட்ட அறிவுக்கும், வாதத் திறமைக்கும், அவர் ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தின் நலன்களைப் பாதுகாக்கும் வழக்கறிஞராகியிருக்கலாம்…. அயோக்கியத் தனங்களை அரங்கேற்றுவதையே முழு நேர வேலையாக வைத்திருக்கும் அரசுகளின் வழக்கஞராகியிருக்கலாம், அரசுப் பணத்தைக் கொள்ளையடிக்கும் பணக்கார முதலைகளின் நலனுக்காக பாடுபட்டிருக்கலாம். இப்படியெல்லாம் அவர் இருந்திருந்தால், சென்னை போட் கிளப் சாலையில் ஒரு பங்களா வாங்கி, பிஎம்டபிள்யூ காரில் பயணித்துக் கொண்டிருப்பார்.
ஆனால், மனித உரிமைகளுக்காக குரல் கொடுத்து, தன் அத்தனை திறமைகளையும் விளிம்பு நிலை மக்களுக்காகவே செலவிட்டுக் கொண்டிருப்பதால், இன்று பெரும்பாலான மக்களின் அன்புக்கு பாத்திரமாகியிருக்கிறார். சென்னை உயர்நீதிமன்றத்தின் வரலாற்றில், ஒரு மனித உரிமைப் போராளி என்று பதிவாகியிருக்கிறார்.
இப்படிப்பட்ட மனிதரான ராதாகிருஷ்ணன், உலக மனித உரிமை நாளில் பிறந்திருப்பது இயல்புதானே… ?
அவரது பிறந்தநாளில், அவர் மென்மேலும் பல்வேறு வெற்றி மகுடங்களைச் சூட வேண்டும் என்றும், ஏழை உழைப்பாளி மற்றும் விளிம்பு நிலை மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும் என்றும், இப்போது போல எப்போதும் அதிகார மையங்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்க வேண்டும் என்றும் சவுக்கு மனதார வாழ்த்துகிறது.
நீங்களும் வாழ்த்துங்கள் தோழர்களே…
வாழ்க வளமுடன்