கப்பலோட்டிய தமிழன் யாரென்று பார்ப்போம். அதற்கு முன் நெஞ்சை உருக்கும் ஒரு கதையைப் பார்த்து விடுவோம். சமீபத்தில் சென்னையைத் தாக்க இருந்த நீலம் புயல், ஒரு வழியாக வலுவிழந்து சென்னை தப்பித்தது. சென்னை தப்பித்தாலும், சென்னையை ஒட்டி தரை தட்டியது ஒரு கப்பல். பிரதீபா காவேரி. இந்தக் கப்பல் தரைத் தட்டியதன் காரணமாக அக்கப்பலில் இருந்த ஊழியர்கள் கப்பலை விட்டு வெளியேற முடிவெடுத்தனர். 22 பேர் உயிர்ப் பாதுகாப்புப் படகுகளில் வெளியேறினர். 15 பேர் கப்பலிலேயே தங்கினர். வெளியேறிய 22 பேரில் ஆறு பேர் கடலின் சீற்றத்தில் சிக்கி உயிரிழந்தனர்.
இந்தக்கப்பலில் உயிரிழந்த ஒருவரின் சகோதரர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தொடர்பாக தினத்தந்தியில் வந்த செய்தியைப் பார்ப்போம்.
“சென்னை ஐகோர்ட்டில் விழுப்புரம் மாவட்டம், வானூரை அடுத்த நேசிலைச் சேர்ந்த சங்கர நாராயணன் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:–எனது மூத்த சகோதரர் ஆனந்த் மோகன்தாஸ் (வயது 32) பொறியாளர். அவர் ‘எம்.டி. பிரதிபா காவிரி’ என்ற கச்சா எண்ணெய் சரக்கு கப்பலில் 18.5.12 அன்று 2–ம் நிலை என்ஜினீயராக பணியில் சேர்ந்தார். அது 4 மாதங்களுக்கான ஒப்பந்தப்பணி.37 சிப்பந்திகளுடன் இந்த கப்பல் சென்னைக்கு வந்து கச்சா எண்ணெயை சென்னை துறைமுகத்தில் இறக்கியது. கடலில் செல்லும் தகுதி அந்தக் கப்பலுக்கு இல்லை. அதில் போதுமான அளவு எரிபொருளும் இல்லை. அங்கிருந்த ஊழியர்களுக்கு சம்பளமும் வழங்கப்படவில்லை. தங்களை விடுவிக்கும்படி ஊழியர்கள் கேட்டும் அதன் உரிமையாளர் செவிசாய்க்கவில்லை.
ஒருவேளை உணவு
ஆனந்த் மோகன்தாசுக்கும் சம்பளம் தரப்படவில்லை. எனவே கப்பல் உரிமையாளருக்கு அவர் 3 முறை கடிதம் எழுதி, சம்பளம் தரும்படியும், கப்பலில் இருந்து இறங்க அனுமதியும் கோரியுள்ளார். ஆனால் அதற்கான பதிலை உரிமையாளர் கொடுக்கவில்லை.எண்ணெயை இறக்கிய பிறகு துறைமுகத்தின் வெளியே கப்பல் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டது. ஊழியர்களுக்கு உணவும், குடிநீரும் கொடுக்கப்படவில்லை. ஒருநாளுக்கு ஒரு வேளைதான் உணவு கிடைத்திருக்கிறது. கப்பலில் மருத்துவ சிகிச்சை பெறவும் வசதி இல்லை.
ஆபத்தான நிலை
எனவே எனது சகோதரர் மத்திய கப்பல்துறை, தமிழக உள்துறை செயலாளர், தமிழ்நாடு டி.ஜி.பி., சென்னை போலீஸ் கமிஷனர், பட்டினப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர், சென்னை துறைமுக அதிகாரிகள் ஆகியோரை பலமுறை தொடர்புகொண்டு, ஆபத்தான நிலையில் கப்பலில் இருக்கும் எங்களை காப்பாற்றுங்கள் என்று கூறியிருக்கிறார். ஆனால் யாருமே அவரது கூக்குரலை கவனிக்கவில்லை.மத்திய மந்திரி சரத்பவாரின் நெருங்கிய உறவினரின் கப்பல் அது என்பதால் யாருமே எனது சகோதரர் உள்பட மற்ற ஊழியர்களின் கோரிக்கைகளை கவனிக்காமல் விட்டுவிட்டனர். துறைமுகத்துக்கு வெளியே 80 நாட்கள் நிறுத்தப்பட்டு இருந்தாலும்கூட அதிகாரிகள் யாரும் அதுபற்றி விசாரணை கூட நடத்தவில்லை.
புயல் எச்சரிக்கை
முக்கிய புள்ளியின் கப்பல் என்பதால், கடலில் பயணிக்கும் தகுதியை இழந்திருந்தாலும் 33 நாட்கள் கடலில் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டு இருந்தது.இந்த நிலையில் சென்னைக்கு புயல் அபாய எச்சரிக்கை வந்து சேர்ந்தது. எனவே ஒவ்வொரு ஊழியரும் தங்களின் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் முயற்சியில் இறங்கினார்கள். உயிர்காக்கும் படகை உபயோகிக்க முயன்றாலும், அதற்கு போதிய எரிபொருள் கிடைக்கவில்லை.
பொறுப்பற்ற தன்மை
அங்கிருந்த 37 ஊழியரில், எனது சகோதரருடன் 22 பேர் உயிர்காக்கும் படகு மூலம் தப்ப முயன்றனர். ஆனால் அதில் போதிய எரிபொருள் இல்லாததால் படகு கவிழ்ந்துவிட்டது. அதைப் பார்த்த மீனவர்கள் சிலர் 15 ஊழியர்களை மீட்டனர். மீதமுள்ள 7 ஊழியர்களில் எனது சகோதரரும் ஒருவர். அவர் கடலில் விழுந்து இறந்துபோனார். மற்ற 6 பேரின் கதி என்ன என்பது தெரியவில்லை.80 நாட்கள் சரியாக உணவு சாப்பிடாமல், பட்டினியாக இருந்ததால் படகில் இருந்து விழுந்த சிறிது நேரத்தில் அவரது உயிர் போய்விட்டது. இது முழுக்க முழுக்க கப்பல் உரிமையாளரின் பொறுப்பற்ற தன்மையால் நடந்த சம்பவமாகும்.
துயர சம்பவம்
அதோடு, புயல் வருவதற்கு முன்பு எங்களை காப்பாற்றிவிடுங்கள் என்று விடுத்த கோரிக்கையை கேளாமல்போன அரசு அதிகாரிகளாலும் தான் இந்த துயர சம்பவம் நேரிட்டுள்ளது. உணவு, குடிநீர் போன்றவை கொடுக்கப்பட்டு இருந்தால் எனது சகோதரன் தனது உயிரை காப்பாற்றிக் கொண்டிருப்பார்.ஆனால் நீண்டநாட்கள் உணவின்றி இருந்ததால், உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக செய்யும் அடிப்படை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குக்கூட அவருக்கு சக்தி இல்லாமல் போய்விட்டது.
நீதி விசாரணை
அவரை இழந்து நாங்கள் தவித்துக் கொண்டிருக்கிறோம். எனவே இடைக்கால நிவாரணமாக ரூ.25 லட்சத்தை எங்களுக்கு வழங்க மத்திய, மாநில அரசுகளுக்கும், கப்பல் உரிமையாளருக்கும் உத்தரவிட வேண்டும். அங்கு நடந்த சம்பவம் பற்றி மாவட்ட நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். இந்த வழக்கின் விசாரணை முடியும்வரை கப்பலை அங்கிருந்து செல்ல அனுமதிக்கக் கூடாது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
எலிக் கறி சாப்பிட்டனர்
நீதிபதி என்.பால்வசந்தகுமார் முன்பு இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வக்கீல்கள் எஸ்.பிரபாகரன், டி.பி.செந்தில்குமார், பி.எஸ்.அமல்ராஜ் ஆஜரானார்கள். அவர்கள் வாதிட்டதாவது:–இந்த கப்பலின் ஏஜெண்டுக்கு கப்பல் நிர்வாகம் ரூ.1.5 கோடியை பாக்கி வைத்திருந்தது. எனவே ஏஜெண்டின் உதவிகூட அந்த கப்பல் சிப்பந்திகளுக்கு கிடைக்காமல் போய்விட்டது. அங்கிருந்த ஊழியர்கள் மட்டுமல்ல, ஊழியர்களின் உறவினர்கள்கூட அரசு அதிகாரிகள், கப்பல் உரிமையாளர், சென்னை துறைமுகத் தலைவர் உட்பட பலருக்கு உதவி கேட்டு இ–மெயில் அனுப்பினர். ஒரு பக்கத்தில் இருந்தும் உதவி கிடைக்கவில்லை.பசிக் கொடுமையால் சிலர் கப்பலில் இருந்த எலி, கரப்பான் பூச்சி போன்றவற்றை சமைத்து உணவாக்கிக் கொண்டதாகவும் கூறப்பட்டது. 6 மாதங்களாக வைக்கப்பட்டு இருந்த ரொட்டிகளை சாப்பிட்டுள்ளனர். பட்டினியால் தொய்ந்துபோன அவர்களுக்கு தங்களை காப்பாற்றிக்கொள்ள பலமில்லாமல் போய்விட்டது”
ஆறு மாலுமிகளின் மரணம் தொடர்பாக சென்னை சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் குற்ற எண் 4592 / 2012 என்ற வழக்கு இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 304 (2)ன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தரை தட்டிய இந்த பிரதீபா காவேரி கப்பல் 31 ஆண்டுகள் பழமையானது. இந்தக் கப்பல் கடலில் பயணிக்கத் தகுதியில்லாத ஒரு கப்பல். உடனடியாக இக்கப்பல் மராமத்துப் பணிக்காக அனுப்பப்பட்டிருக்க வேண்டும். ஆனால், எவ்விதக் கவலையும் இல்லாமல் இக்கப்பல் கடலில் இருந்தது.
இந்தக் கப்பலின் உரிமையாளர்களுக்கு, பிரதீபா காவேரியைத் தவிர, பிரதீபா கோய்னா, பிரதீபா இந்திரயானி, பிரதீபா சந்திரபாகா, பிரதீபா வர்ணா, பிரதீபா தபி, பிரதீபா பீமா, பிரதீபா நீரா என்ற கப்பல்களும் சொந்தம்.
பிரதீபாக காவேரியில் பணியாற்றியவர்களுக்குத்தான் இவர்கள் சரிவர ஊதியம் வழங்காமல் பாக்கி வைத்திருக்கிறார்கள் என்றால், மற்ற கப்பல்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் ஊதிய பாக்கி. பிரதீபா வர்ணா என்ற கப்பலில் பணியாற்றிய அத்தனை ஊழியர்களுக்கும் சேர்த்து 1.57 கோடி பாக்கி தர வேண்டும். இந்த பாக்கியைத் தராமல், பிரதீபா வர்ணா கப்பலை நகர்த்தக் கூடாது என்று இக்கப்பலின் ஊழியர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
சரி கப்பல் ஊழியர்களுக்குத்தான் ஊதிய பாக்கி என்று பார்த்தால், ஜப்பானைச் சேர்ந்த ஆர்க் மெரைன் ஸ்டேஷன் என்ற கப்பல் உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்துக்கு 13 கோடி ஜப்பானிய என் பாக்கி வைக்கப்பட்டிருக்கிறது.
யாருக்குமே ஊதியம் கொடுக்காமல், வாங்கிய உதிரி பாகங்களுக்கும் பணம் கொடுக்காமல், கடலில் பயணிக்கத் தகுதியில்லாத கப்பலில் சரக்கு ஏற்றிக் கொண்டு எப்படி இந்தக் கப்பல் நிறுவனத்தால் தொடர்ந்து செயல் பட முடிந்தது என்று பார்த்தால், இந்தக் கப்பல் உரிமையாளர், மத்திய அமைச்சர் சரத் பவாரின் உறவினர் என்று தகவல் வருகிறது.
சரி வர ஊதியம் வழங்காதது, வாங்கிய உதிரி பாகங்களுக்கு பணம் கொடுக்காதது ஆகியவற்றைக் கூட மன்னித்து விடலாம். உயிரிழந்த ஆறு மாலுமிகளுக்கு யார் பொறுப்பு ?
போதுமான டீசலோ, உணவுகளோ, குடிநீரோ இல்லாத பிரதீபா காவேரி கப்பலில் பயணித்த ஆனந்த் மோகன்தாஸ் (32), நிரஞ்சன் (32), ஜீமான் ஜேக்கப் (23), ருஷாப் ஜாதவ் (25), கிருஷ்ணசந்திரா, (22) மற்றும் காமித்கர் ராஜ் ரமேஷ் (22) ஆகியோர் இறந்து போயுள்ளனர்.
நம் வீட்டிலும் மெரைன் என்ஜினியரிங் படித்து விட்டு, கப்பலில் பணியாற்றும் இளைஞர்கள் இருக்கலாம். நம் வீட்டில் உள்ள 22 வயதுப் பிள்ளை ஒரு கப்பல் நிறுவனத்தின் பொறுப்பற்ற நிர்வாகத்தால் இறந்து போனது தெரிந்தால் நம்மால் அந்நிறுவனத்தின் உரிமையாளர்களை மன்னிக்க முடியுமா ? சட்டப்படி அந்நிறுவனத்தின் உரிமையாகளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமா இல்லையா ?
சாஸ்திரி நகர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, சென்னை மாநகர காவல்துறை புலனாய்வு மேற்கொண்டுள்ளது. பிரதீபா காவேரியின் ஷிப்பிங் ஏஜென்ட்டுகளாக ஸீ வேர்ல்ட் ஷிப்பிங் அன்ட் லாஜிஸ்டிக்ஸ் லிமிட்டெட் என்று ஒரு நிறுவனம் நியமிக்கப்படுகிறது. அந்த நிறுவனத்தின் பணி, இந்தியாவில் உள்ள ஒவ்வொரு துறைமுகங்களிலும் கஸ்டம்ஸ் துறை மற்றும் துறைமுக நிறுவனம் (Port) தொடர்பான பணிகளை கவனிப்பது, கப்பல் பணியாளர்களை சேர்ப்பது, பணியாளர்கள் தொடர்பான விவகாரங்களை பார்ப்பது ஆகியவை. இந்தப் பணிகளில், கப்பலின் பணியாளர்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்குவது, உடைகள் வழங்குவது போன்றவை அடங்காது.
செப்டம்பர் 2012 மற்றும் அக்டோபர் 2012ல் பிரதீபா கப்பலின் அதிகாரிகள், ஸீ வேர்ல்ட் ஷிப்பிங் அன்ட் லாஜிஸ்டிக்ஸ் லிமிட்டெட் நிறுவனத்திடம், கப்பலுக்கு பணியாளர்களை வழங்குவது போன்ற பணிகளைச் செய்யுமாறு கேட்கின்றனர். இக்கோரிக்கை வந்த உடனேயே, இந்தப் பணிகளுக்குத் தேவையான பணத்தை செலுத்தினால் மட்டுமே, சேவைகள் வழங்கப்படும் என்பது தெரியப்படுத்தப்படுகிறது.
சென்னைத் துறைமுகத்துக்கு வெளியே நங்கூரமிட்டிருந்த பிரதீபா காவேரி கப்பலுக்கு, ஸீ வேர்ல்ட் ஷிப்பிங் அன்ட் லாஜிஸ்டிக்ஸ் லிமிட்டெட் நிறுவனத்தால் 30.10.2012 அன்று ஒரு தகவல் அனுப்பப்படுகிறது. சென்னைத் துறைமுக அதிகாரிகளின் அறிவுரைப்படி, கடும் புயல் சென்னையைத் தாக்க இருப்பதால், உடனடியாக கப்பலை நகர்த்தி பாதுகாப்பான இடத்தில் நங்கூரமிடுமாறு அறிவுறுத்தப்படுகிறது. கப்பலின் கேப்டன் (விஜயகாந்த் அல்ல.) பிரதீபாக காவேரியின் உரிமையாளர்களுக்கு, கப்பலில் போதுமான உணவு, குடிநீர், எரிபொருள் போன்றவை இல்லை என்ற தகவலைத் தெரிவிக்கிறார். மேலும், இப்பொருட்கள் பணம் செலுத்தினால் மட்டுமே வழங்கப்படும் என்பதையும் தெரிவிக்கிறார்.,
எரிபொருள் உள்ளிட்ட எந்தப் பொருட்களும் இல்லாததால், பிரதீபா காவேரி கப்பல், புயலில் சிக்கி தரை தட்டியது. அதன் விளைவாகவே ஆறு மாலுமிகள் உயிரிழந்தனர்.
இந்த ஆறு மாலுமிகளின் உயிருக்கு யார் பொறுப்பு ? கப்பலின் உரிமையாளர்கள்தானே ? ஊரெங்கும் பல கோடி ரூபாய் கடன் வைத்து விட்டு, இளம் மாலுமிகளின் உயிரோடு விளையாடும் அந்தக் கப்பலின் உரிமையாளர்கள், கைது செய்ய்பபட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டுமா இல்லையா ?
ஆனால் சென்னை மாநகர காவல்துறை யாரைக் கைது செய்திருக்கிறது தெரியுமா ? ஸீ வேர்ல்ட் ஷிப்பிங் அன்ட் லாஜிஸ்டிக்ஸ் லிமிட்டெட் நிறுவனத்தின் மேனேஜர் சிட்டிபாபு மற்றும், அந்நிறுவனத்தின் ஏஜென்ட் ஜெயராமன் ஆகியோரைக் கைது செய்திருக்கிறது. இவர்களையும் எப்படிக் கைது செய்கிறார்கள் என்றால், 24.11.2012 அன்று விசாரணைக்கு வரச் சொல்லி 27.11.2012 வரை சட்டவிரோத காவலில் வைத்து, 27.11.2012 அன்று ஆறு மாலுமிகளின் மரணத்துக்கு காரணம் என்று கைது செய்துள்ளார்கள்.
பத்மா சேஷாத்ரி பள்ளியின் நீச்சல் குளத்தில் பலியான சிறுவன் ரஞ்சனின் மரணத்துக்கு, பள்ளியின் உரிமையாளர் ராஜலட்சுமி பார்த்தசாரதியை கைது செய்வதற்கு பதிலாக நீச்சல் குளத்தை சுத்தம் செய்பவரைக் கைது செய்தார்களே… அதே போலத்தான் இதுவும்.
பல கோடி ரூபாய்களை ஏமாற்றி, நிம்மதியாக சுற்றிக் கொண்டிருக்கும், பிரதீபா கப்பல் நிறுவனத்தின் உரிமையாளர் சுனில் பவார் இது வரை இந்த வழக்கில் கைது செய்யப்படவில்லை. கைது செய்யப்படப் போவதுமில்லை. ராஜலட்சுமி பார்த்தசாரதியைக் கைது செய்து விட்டார்களா என்ன ?
பிரதீபா காவேரி கப்பலின் உரிமையாளர்கள் கைது செய்யப்படாமல் இருப்பதன் பின்னணியில், சென்னை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் செயல்படும் உளவுத்துறையின் இணை ஆணையராக உள்ள வரதராஜு இருப்பதாக கூறப்படுகிறது. அவர்தான் கப்பலோட்டிய தமிழன். கப்பல் உரிமையாளர்களைக் கைது செய்யாமல் இருப்பதற்காக வரதராஜுவுக்கு ஒரு பெரும் தொகை தரப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
வரதராஜு ஐபிஎஸ்
வரதராஜு சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். காவல்துறையில் க்ரூப் 1 பிரிவில் நேரடி காவல் துணைக் கண்காணிப்பாளராகப் பணியில் சேர்வதற்கு முன், தகுதி காண் அதிகாரியாக (Probationary Officer) ஆக பணியாற்றியவர். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக செயல்பட்டு, டிஎன்பிஎஸ்சி ஊழலின் ஊற்றுக்கண்ணாக விளங்கிய செல்லமுத்து ஐஏஎஸ்ஸின் நெருங்கிய உறவினர். (சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி கோபப்பட வேண்டாம்)
டிஎஸ்பியாக பணியில் சேர்ந்த வரதராஜு சிதம்பரம் துணைக் கோட்டத்தில் சேர்கிறார். அப்போது கடலூர் மாவட்டக் கண்காணிப்பாளராக இருந்தவர் ஜாங்கிட். அப்போது முதல் இந்த இருவருக்கும் இடையேயான நட்பு நெருக்கமாக நீடிக்கிறது. புறநகர் ஆணையாளராக ஜாங்கிட் இருந்தபோது, தனக்கு நெருக்கமான வரதராஜுவையே துணை ஆணையராக நியமித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜாங்கிட் எள் என்ற வார்த்தையை சொல்லி முடிக்கும் முன்பே, எண்ணையாக மாறக்கூடிய அளவுக்கு தீவிரமான ஜாங்கிட் விசுவாசி வரதராஜு… … 50 லட்ச ரூபாய் பெருமானமுள்ள ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி சீட்டை இலவசமாக வரதராஜு மகளுக்கு பெற்றுத் தந்திருக்கிறாரே ஜாங்கிட்… விசுவாசம் இருக்காதா என்ன ? இந்த விசுவாசம் ஜாங்கிட்டின் பரம வைரியும், சென்னை மாநகர ஆணையாளருமான ஜார்ஜுக்குத் தெரியுமா என்பது தெரியவில்லை.
வரதராஜூ சார்… ஸீ வேர்ல்ட் ஷிப்பிங் அன்ட் லாஜிஸ்டிக்ஸ் லிமிட்டெட் நிறுவனத்தின் இரண்டு பணியாளர்களை கைது செய்ததோடு நிற்காதீர்கள்… அந்தக் கப்பல், நடுக்கடலில் நின்று விட்டால், இறங்கித் தள்ளுவதற்கு ஏன் ஆட்களை நியமிக்கவில்லை என்று புதிய வழக்கு போட்டு, அந்தக் கப்பலின் கேப்டனையும் கைது செய்ய உத்தரவிடுங்கள். 22 வயதான இளம் மகன்களை பறிகொடுத்து மீளா சோகத்தில் ஆழ்ந்திருக்கும் பெற்றோர்களை, தரை தட்டும் கப்பலில் ஏன் உங்கள் மகனை வேலைக்கு அனுப்பினீர்கள் என்று கேள்வி கேட்டு, அவர்களையும் கைது செய்யுங்கள். தப்பித் தவறிக் கூட, கப்பலின் உரிமையாளர்களைக் கைது செய்யலாமா என்று நினைத்துக் கூடப் பார்க்காதீர்கள்… அவர்களையெல்லாம் கைது செய்வதற்கா இருக்கிறது காவல்துறை… யாராவது பாடகியின் அம்மாவைப் பற்றி ட்வீட் செய்கிறானா என்று பார்த்து அவர்களைக் கைது செய்வதற்காகத்தானே அரசு உங்களுக்கு ஊதியம் தருகிறது…. ?
சரி.. கப்பல் உரிமையாளர்களிடம் எவ்வளவுதான் வாங்கீனிர்கள் வரதராஜு சார்.. ? ஒரு சிலர் 30 லட்சம் என்கிறார்கள்… ஒரு சிலர் 50 லட்சம் என்கிறார்கள்.. எவ்வளவோ முயன்றும் அந்தத் தொகையை உறுதிப்படுத்த முடியவில்லை. தயவு செய்து நீங்களே எவ்வளவு வாங்கினீர்கள் என்று சொல்லி விடுங்களேன்… தலையே வெடிப்பது போலிருக்கிறது.