சேலம் அங்கம்மாள் காலனியில் குடியிருந்த மக்களின் சொத்துக்களை திமுகவின் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மற்றும் அவர் உறவினர்கள் பறிக்க முயற்சி செய்து, அங்கே குடியிருந்த மக்களை அடித்து விரட்டி, அதன் காரணமாக வீரபாண்டி ஆறுமுகம் பல நாட்கள் சிறையில் இருந்ததோடு, குண்டர் என்று தீர்மானிக்கப்பட்டு குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதும் அனைவருக்கும் தெரியும். அப்படி தனக்குச் சொந்தமில்லாத நிலத்தை அபகரிக்க முயன்ற வீரபாண்டி ஆறுமுகம், இன்று ஆறு அடி நிலத்தில் மீளா உறக்கத்தில் ஆழ்ந்திருக்கிறார். வீரபாண்டி ஆறுமுகம் போன்றவர்களின் வாழ்வும் மரணமும், அதிகார போதையில் இருக்கும் அத்தனை பேருக்கும் பாடமாக இருக்க வேண்டும். ஆனால், வரலாறு தரும் இந்த படிப்பினைகளை யாரும் கவனத்தில் கொள்வதாகத் தெரியவில்லை.
வீரபாண்டி ஆறுமுகத்தைப் போலவே அதிகார போதையில் அடுத்தவர் நிலத்தை அபகரிப்பதற்காக அலையும் அதிமுக பிரமுகர்தான் தமிழக அரசின் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜி.
செந்தில் பாலாஜி, அதிமுக ஆட்சி தொடங்கியதிலிருந்தே, தனது வசூல் வேட்டைகள் மற்றும் அதிகார துஷ்பிரயோகத்தை தொடங்கி விட்டார். திமுக குண்டர்களின் கொடுங்கோல் ஆட்சியிலிருந்து தமிழகத்தை விடுவிப்பேன் என்ற முழக்கத்தோடு பதவியேற்ற ஜெயலலிதா, செந்தில் பாலாஜி போன்ற ரவுடிகளை இன்னமும் அமைச்சர்களாக வைத்து அழகு பார்ப்பது, கருணாநிதிக்கு ஜெயலலிதா சற்றும் சளைத்தவரில்லை என்பதையே காட்டுகிறது.
செந்தில் பாலாஜியின் நெருங்கிய உறவினர் காமாட்சி பெரியசாமி என்கிற கோகுல். இந்த கோகுல், நாமக்கல் மாவட்டம் பிறந்தபோது காமாட்சியம்மன் கோவிலில் இவர் பெற்றோரால் அனாதையாக விடப்பட்டார். இப்படி விடப்பட்டு குழந்தையாக இருந்த கோகுலை, தெய்வானை மற்றும் பி.சி.ராமலிங்கம் என்ற தம்பதியினர், எடுத்து வளர்க்கின்றனர். இந்த கோகுல், கோவையில் உள்ள இந்துஸ்தான் கல்லூரியில் படித்து முடித்து வேலைக்கும் போகிறார். இவருக்கு காதல் திருமணம் நடைபெறுகிறது. மனைவியோடு மகிழ்ச்சியாக வாழ்ந்த கோகுலுக்கு அவரது வளர்ப்புப் பெற்றோருக்குச் சொந்தமான பல ஏக்கர் நிலங்கள் சொந்தமாக இருப்பது தெரிய வந்ததும், அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அஷோக் இந்த சொத்துக்களை அபகரிக்க திட்டமிடுகிறார்.
இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, கடந்த ஆண்டு 2011 ஜுன் 3ம் தேதி, இந்த கோகுலை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான கோழி பாலு, நடராஜன், மோகன்ராஜ், செல்வராஜ் மற்றும் பெரியசாமி அடங்கிய கும்பல் பொலிரோ வாகனத்தில் கடத்துகிறது. ஒரு மணி நேரம் கழித்து வேறு வாகனத்துக்கு கோகுல் மாற்றப்படுகிறார். கோகுலின் கையும் காலும் கட்டப்பட்டு, ஒரு கட்டிலில் படுக்க வைக்கப்பட்டு, கட்டிலோடு சேர்த்துக் கட்டப்படுகிறார்.
கோகுல்
அப்போது அமைச்சரின் தம்பி அஷோக்கால் அவரிடம் செல்போன் கொடுக்கப்பட்டு, அமைச்சர் செந்தில் பாலாஜியே அந்த போனில் பேசியதாக தெரிவிக்கிறார் கோகுல். இரண்டு வாரங்களாக மேல் அந்த அறையிலேயே கோகுல் அடைத்து வைக்கப்படுகிறார்.
கோகுலின் தாயார் தெய்வானை இரண்டு நாட்களாக தொடர்ந்து கோகுல் போன் பேசாமல் இருப்பதால் கலக்கமடைந்து, கோகுலைத் தேடுகிறார். ஆனால் கோகுல் இருப்பிடம் தெரியவில்லை. தெரிந்தவர்கள், உறவினர்கள் என்று அத்தனை இடங்களிலும் கோகுலைத் தேடுகிறார். ஆனால் எங்கேயும் பதிலில்லை. வெங்கமேடு காவல்நிலையத்தில் கோகுலைக் காணவில்லை என்று கொடுத்த புகார் பதிவு செய்யப்படவில்லை. அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அஷோக் இந்தக் கடத்தல் விவகாரத்தின் பின்னணியில் இருப்பது தெரிந்து, அந்த அம்மாவை விரட்டியடிக்கிறார்கள். வேறு வழியில்லாத தெய்வானை, கரூர் மாவட்ட ஆட்சியரை சந்தித்துப் புகார் அளிக்கிறார். அவர் உடனடியான புகாரின் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறையினருக்கு உத்தரவிடுவதாக வாக்களிக்கிறார். ஆனால், சம்பந்தப்பட்ட காவல்துறையினர், இதற்காக முதல் தகவல் அறிக்கை கூட பதிவு செய்யாமல் விரட்டியடிக்கிறார்கள். மீண்டும் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து தெய்வானை புகார் கொடுக்கச் சென்றபோது, சும்மா சும்மா வந்து தொந்தரவு செய்யாதே என்று விரட்டப்படுகிறார் தெய்வானை.
காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் , தன் உறவினர்களோடு தானே கோகுலைத் தேடுகிறார். அப்படித் தேடுகையில் மோகன்ராஜ் என்பவர் வீட்டில் கோகுல் அடைத்து வைக்கப்பட்டிருப்பது தெரிந்து உறவினர்களோடு சென்று கோகுலை மீட்கிறார். மீட்கப்பட்ட கோகுல் மிகுந்த பலவீனமான நிலையில் இருக்கிறார். கோகுலை அவர் உறவினர் ராஜா என்பவரின் வீட்டில் தங்க வைக்கிறார்கள்.
இரண்டு நாட்கள் கழித்து, மோகன்ராஜ் என்பவர், வேலாயுதம் பாளையம் காவல்நிலையத்திலிருந்து இரண்டு போலீசாருடன் வந்து காவல்நிலையத்திற்கு கோகுலை அழைத்துச் செல்கின்றனர். அவர்களோடு செல்வராஜ் என்பவரும் சேர்ந்து கொள்கிறார். செல்லும் வழியிலேயே, செல்வராஜோடு, அமைச்சர் செந்தில் பாலாஜி போனில் பேசுகிறார். அவர் பேசியபிறகு, காவல்நிலையத்தில், தன்னை யாரும் அடைத்து வைக்கவில்லை, கடத்தவில்லை, தன்னை மிரட்டி நிலத்தை அபகரிக்க முயற்சி செய்யவில்லை என்று எழுதி வாங்கப்படுகிறது.
பின்னர் வெளியே வந்த கோகுல், அவர் தாயார் வீட்டுக்கு வந்து சேர்கிறார். வழக்கறிஞர்களைக் கலந்து ஆலோசித்த பின்னர், கோகுல் கரூர் மாவட்டக் குற்றப்பிரிவில் புகார் ஒன்றை அளிக்கிறார். அந்தப் புகாரின் அடிப்படையில், கோழி பாலு உள்ளிட்ட சிலரின் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்கிறது காவல்துறை. ஆனால், அமைச்சர் செந்தில் பாலாஜி, அவர் தம்பி அஷோக் ஆகியோரின் பெயரைக் குறிப்பிட்டுச் சொல்லியிருந்தும், அவர்கள் பெயர் எப்ஐஆரில் சேர்க்காமல் வேண்டுமென்றே விடப்படுகிறது. கோழி பாலு உள்ளிட்டோர் கைது செய்ய்பபடுகிறார்கள். அமைச்சர் மற்றும் அமைச்சரின் தம்பி பெயரைச் சேர்க்காமலேயே வழக்கின் புலன் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இத்தனை அயோக்கியத்தனங்களும் அரங்கேற ஒரே காரணம் என்ன தெரியுமா ? அமைச்சர் செந்தில் பாலாஜியின் சொந்த வீட்டுக்கு அருகே, கோகுல் மற்றும் அவரது குடும்பத்தினருக்குச் சொந்தமான மூன்று ஏக்கர் நிலம் உள்ளது. ஊரில் எங்கே சொத்து வாங்கியிருந்தாலும், வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள நிலத்தைச் சொந்தமாக்க முடியவில்லையே என்ற ஆதங்கம் செந்தில் பாலாஜிக்கு. இந்த ஆதங்கத்தை தன்னுடைய தொண்டர் அடிப்பொடிகளான நடராஜன், கோழி பாலு, மற்றும் தனது தம்பியிடம் செந்தில் பாலாஜி தெரிவித்ததன் விளைவே ஆட்கடத்தல், கொலை மிரட்டல் ஆகியன.
மிரட்டல் காரணமாக கோகுல் எழுதிக் கொடுத்த நிலப்பத்திரம்
இதே போன்ற மிரட்டல்களில் தொடர்ந்து ஈடுபட்டவர்தான் திமுகவின் காலஞ்சென்ற ரவுடி வீரபாண்டி ஆறுமுகம். தன் தம்பி, உறவினர்கள் என அனைவரையும் ரவுடித்தனம் செய்ய வைத்து, ஊரெங்கும் சொத்துக்களை வாங்கிக் குவித்தவர்தான் வீரபாண்டி ஆறுமுகம். வீரபாண்டி ஆறுமுகத்தின் மீது பல்வேறு புகார்கள் குவிந்தாலும், திமுக தலைமையின் ஆதரவு ஆறுமுகத்துக்கு இருந்தது. திமுக ஆட்சி முடியும் வரை, அங்கம்மாள் காலனி மக்கள் மற்றும் ஆறுமுகத்தால் பாதிக்கப்பட்ட ஒருவராலும், வீரபாண்டி ஆறுமுகத்தை எதிர்த்து எதுவுமே செய்ய முடியவில்லை. குறைந்தபட்சம், ஆறுமுகத்தை பதவியை விட்டுக் கூடத் தூக்க முடியவில்லை.
ஆனால், அதிமுக அப்படிப்பட்ட கட்சி அல்ல. எவ்வளவு பெரிய அப்பாடக்கராக இருந்தாலும், புரட்சித் தலைவி அம்மாவின் நல்லெண்ணத்தில் இருக்கும் வரைதான் கட்சிப் பதவியும்.. மந்திரிப் பதவியும்….. ஜெயலலிதாவுக்கு பிடிக்காமல் போய் விட்டால், ஆடிக்காற்றில் அம்மியே பறப்பது போல பறந்து விடுவார்கள். ஜெயலலிதாவுக்கு பிடிக்காமல் போனவர்களை சசிகலா நினைத்தால் கூட காப்பாற்ற முடியாது.
ஆனால், இத்தனை நாட்களாகியும், ஆட்கடத்தல் உள்ளிட்ட புகார்கள் மலை போல குவிந்தும், ஜெயலலிதா செந்தில் பாலாஜியை இன்னும் ஏன் அமைச்சராக வைத்துள்ளார் என்பது பலருக்கு புரியாத புதிராக இருக்கிறது.
தனி நபர் கொடுத்த புகார்களைத் தவிர்த்து, கரூர் முதலாம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில், செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பி அஷோக் ஆகியோரை விசாரிக்க வேண்டும், குற்றவாளிகளாகச் சேர்க்க வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட மனுவில், காவல்துறையை விசாரித்து அறிக்கை அளிக்குமாறு, உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை அடுத்து, காவல்துறையினர் என்னதான் முயற்சி எடுத்தாலும், குறைந்தபட்சம், செந்தில் பாலாஜியை விசாரித்து வாக்குமூலமாவது வாங்க வேண்டிய ஒரு நெருக்கடி. இப்படி ஆட்கடத்தல் புகாருக்கு ஆளான செந்தில் பாலாஜியை போக்குவரத்து அமைச்சராக பஸ் ஓட்ட வைத்துக் கொண்டு ஏன் ஜெயலலிதா வேடிக்கைப் பார்க்கிறார் ?
செந்தில் பாலாஜி மீது இந்த ஆட்கடத்தல் புகாரைத் தவிர, சட்ட விரோதமாக க்ரானைட் வெட்டியெடுத்த புகாரும் உள்ளது. கரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள தோகைமலை, நாகனூர் போன்ற இடங்களில், அரசுக்கு சொந்தமான இடங்களை கிரானைட் கொள்ளையன் பிஆர்பி குடும்பம் வளைத்துப் போட்டுள்ளது. கரூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை கிரானைட் கொள்ளையை கவனித்துக் கொள்வது, பிஆர்.பழனிச்சாமியின் மருமகன், காந்திராஜன். இந்த காந்திராஜனுக்கு, செந்தில் பாலாஜி மிக நெருக்கம் என்று கூறப்படுகிறது. திமுக ஆட்சிக் காலத்தில் பிஆர்பி யாராலும் அசைக்க முடியாத சாம்ராஜ்யத்தை நடத்திக் கொண்டிருந்தார். அதிமுக ஆட்சிக்கு வந்ததும், இந்த சாம்ராஜ்யத்தை தொடர்ந்து நடத்துவதற்காக, இந்த கிரானைட் கொள்ளை நடைபெறும் இடத்தில் ஒரு விழா எடுக்கப்பட்டு விருந்து வைக்கப்பட்டுள்ளது.
அந்த விருந்தின் சிறப்பு விருந்தினர், அமைச்சர் செந்தில் பாலாஜி. மதுரையில் பிஆர்பி நிறுவனத்தின் கிரானைட் கொள்ளையில் அரசு வெகு தீவிரமாக நடவடிக்கை எடுத்து வந்தாலும், கரூர் மாவட்டத்தில் நில ஆக்ரமிப்பு, சட்டவிரோத கிரானைட் கடத்தல் போன்றவற்றில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதற்கு, அமைச்சர் செந்தில் பாலாஜியின் தலையீடே காரணம்.
வீரபாண்டி ஆறுமுகம் போன்றவர்களின் ரவுடித்தனம், மணற்கடத்தல், கிரானைட் கொள்ளை போன்றவற்றை ஒழிப்பேன் என்று சூளுரைத்து ஆட்சியைப் பிடித்த ஜெயலலிதா, ஆட்களைக் கடத்தி நிலத்தை அபகரிக்கும் செந்தில் பாலாஜி போன்ற ரவுடிகளை இன்னும் அமைச்சராக உட்கார வைத்து அழகு பார்த்துக் கொண்டிருக்கிறார்.
திமுக ஆட்சியானாலும், அதிமுக ஆட்சியானாலும், மக்களை வதைத்து சொத்துக்களை ரவுடிகள் அபகரிப்பது தொடர்ந்து நடந்து கொண்டுதான் உள்ளது.
கோகுலின் தாயார், தெய்வானையோடு பேசியபோது, தன் மகனின் உயிருக்கு இன்றும் ஆபத்து நீங்கவில்லை என்றே கூறுகிறார். செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிக்கும் வரை, அரசியல்வாதிகளுக்கு அடிமைகளாகவே இருந்து பழக்கப்பட்ட காவல்துறை அதிகாரிகள் நியாயமான விசாரணை நடத்துவார்கள் என்ற நம்பிக்கை இல்லை.
செந்தில் பாலாஜியை உடனடியாக அமைச்சர் பதவியை விட்டு நீக்கி, இந்த வழக்கின் புலன் விசாரணையை சிபி.சிஐடி பிரிவுக்கு மாற்ற உத்தரவிட வேண்டும் என்று கோருகிறார், கோகுலின் தாயார் தெய்வானை. மேலும், கோகுல் சார்பாக, இந்த வழக்கின் விசாரணையை கரூர் நீதிமன்ற நடுவர் நீதிமன்றத்திலிருந்து, ஈரோடு நீதிமன்ற நடுவர் நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தன்னுடைய அமைச்சரே இப்படிப்பட்ட அடாவடித்தனத்தில் ஈடுபட்ட தகவல் அறிந்ததும், கடுமையான நடவடிக்கை எடுத்திருக்க வேண்டிய ஜெயலலிதா, இதையெல்லாம் விட, யார் மீது அவதூறு வழக்கு தொடுக்கலாம் என்பதிலேயே கவனமாக இருக்கிறார்.
கருணாநிதிகளும், ஜெயலலிதாக்களும், தமிழகத்தை ஆட்சி செய்யும் வரை, வீரபாண்டி ஆறுமுகம்களும், செந்தில் பாலாஜிக்களும் தோன்றிக்கொண்டுதான் இருப்பார்கள். அது வரை, தெய்வானைகளின் அழுகுரல் கேட்டுக் கொண்டேதான் இருக்கும்.
இந்த பச்ச மண்ணு மேல போயி புகார் சொல்றாங்களே… படுபாவிங்க…