சிபிஎம் மாநிலக்குழுச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்.
விழி பிதுங்க வைக்கும் விலைவாசி உயர்வு. விரக்தியின் விளிம்புக்குத் தள்ளும் வேலையின்மை, விவசாயத்துக்கு அடுத்ததாக அதிகம் பேர் நம்பியிருக்கும் சிறு வணிகத்திற்கு ஆபத்து. காசு உள்ளவர்களுக்கே வேலை வாய்ப்புள்ள உயர் கல்வி. பொதுச் சுகாதாரம் சீர்கெட்டு டெங்கு, மலேரியா என மக்களை ஓட ஓட விரட்டி மிரட்டும் நோய்கள். அனைத்துப்பகுதி மக்களையும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாக்கியுள்ள மின்வெட்டு. மொத்தத்தில் பெரும்பான்மையான மக்களின் வாழ்க்கைத் தரமும் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாவதை எதிர்த்து ஒன்றுபட்ட குரலை எழுப்ப வேண்டிய ஏழை எளிய, நடுத்தர மக்களுக்கிடையில் சாதீய ரீதியான மோதலை உருவாக்கும் சிலரின் போக்கும் நோக்கும் கவலை அளிப்பதாக உள்ளது.
“சாதிகள் இல்லையடி பாப்பா’ என சாதி வேறுபாட்டைச் சாடினார் பாரதி. ஆனால், தமிழகத்தில் சாதி மோதல்கள் நின்றபாடு இல்லை. 1990-களில் தென் தமிழகமே சாதி மோதல்களால் நிலை குலைந்து போனது. பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் மக்களுக்கிடையே மோதல் ஏற்படுத்தப்பட்டு உயிர்ச் சேதமும் பொருள் சேதமும் ஏற்பட்டது; பலியானவர்கள் 253 பேர். பெருந்துயரத்துக்கு ஆளானது தென் மாவட்டங்கள். இத்தகைய மோதலுக்கு காரணம் என்ன, எதிர்காலத்தில் இதுபோன்று நிகழாமல் தடுத்திட என்ன செய்திட வேண்டும் என ஆய்வு செய்து அறிக்கை அளிக்க நீதியரசர் மோகன் தலைமையில் உயர்நிலைக்குழு விசாரிக்க உத்தரவிட்டது மாநில அரசு. 31.01.1998-இல் உயர்நிலைக்குழு அளித்த அரிய ஆலோசனைகள்-பரிந்துரைகள் ஆவணமாகி ஆவணக்காப்பகத்தில் தூங்குவதுதான் மிச்சம். பரிந்துரைகள் அமலாக்கப்படவில்லை.
தற்பொழுது தர்மபுரியில் மூன்று கிராமங்களில் தலித் மக்கள் வீடுகள் தாக்கப்பட்டன -கொளுத்தப்பட்டன. சாதி வெறியர்களால் திட்டமிட்டு நடத்தப்படட தாக்குதல் இது. ஒரு கூட்டம் தலித் மக்கள் வீடுகளிலுள்ள பணம், விலை மதிப்புள்ள நகைகள், பொருள்களைக் கொள்ளையடித்ததும் அதைத் தொடர்ந்து வந்த இன்னொரு கூட்டம் பெட்ரோல் குண்டுகளை வீசி வீடுகளை எரித்துள்ளது. இரண்டு சக்கர வாகனங்கள் எரிக்கப்பட்டு சாம்பலாகியுள்ளன. பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதால் இரும்புக் கட்டில்கள், குளிர்சாதனப் பெட்டிகள், தொலைக்காட்சிப் பெட்டிகள் என அத்தனையும் நாசமடைந்துள்ளன.
நத்தம் காலனியில் உள்ள தலித் மக்களில் பெரும்பான்மையினர் வெளி மாவட்டங்களில் – ஏன் வெளி மாநிலத்திலும் – வேலை செய்து வருகின்றனர். சிலர் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களாக உள்ளனர். நான்கு பேர் காவல் துறையில் உள்ளனர். மூன்று பேர் ராணுவத்தில் உள்ளனர். சிலர் காவலர் பணிக்குத் தேர்வாகியுள்ளனர். 20-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் உயர்கல்வி பயின்று வருகின்றனர். உயர்கல்வி முடித்த சிலர் வேலை தேடி வருகின்றனர்.
நத்தம் கிராமத்தில் உள்ள வீடுகள் அனைத்தும் கல் வீடுகள். சாதாரணமாக தீப்பற்றி எரியாது. இதனால் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டு வீட்டுச் சுவர்கள் பாளம் பாளமாக வெடித்து வீடுகள் வசிப்பதற்கு லாயக்கற்றதாக ஆக்கப்பட்டுள்ளன.
சாதி மறுப்புத் திருமணத்திற்கு எதிர்ப்பு என்பதைவிட பொருளாதாரத்தில் ஓரளவுக்கு சொந்தக் காலில் நிற்கத் தொடங்கியுள்ள தலித் மக்கள் மீது ஆதிக்க சாதியினர் கொண்ட, பொறாமையும் வன்மமும்தான் தாக்குதலுக்கு அடிப்படைக் காரணம். என்றைக்கும் இவர்கள் நமக்கு என்றென்றும் அடிமையாக இருக்க வேண்டும் என்று தொடுக்கப்பட்ட தாக்குதல்தான் இது. நத்தம் காலனியில் உள்ள குடும்பங்கள் வாழ்வில் இருபது முப்பது ஆண்டுகள் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளன. தலித் கிராமங்களை தாக்கச் சென்றவர்கள் மரங்களை வெட்டிச் சாலையின் குறுக்கே போட்டு காவல் துறையினர் உடனடியாக வரக்கூடாது என்ற திட்டத்தோடு செயல்பட்டுள்ளனர்.
தர்மபுரி மாவட்ட கிராமங்களில் நடத்தப்பட்ட தாக்குதலை நியாயப்படுத்தும் வகையில் காதல் திருமணம் செய்துகொண்ட பெண்ணின் தந்தை தற்கொலை செய்துகொண்டதால்தான் உணர்ச்சிவசப்பட்டு தாக்குதல் நடந்ததாக பாமக தலைவர் கூறுகிறார். ஆனால், காதல் ஜோடி ஊரைவிட்டுச் சென்ற நிலையில், சுமார் ஒரு மாதத்திற்குப்பிறகே அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவரது தற்கொலை நிர்பந்தத்தினால் நடந்தது என்ற ஐயமும் உள்ளது.
எப்படிப் பார்த்தாலும் தலித் மக்கள் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலும் கூட தீண்டாமைக் கொடுமையின் ஒரு கோரமான வெளிப்பாடே ஆகும். எரியும் சாதி வெறித் தீயை அணைப்பதற்குப் பதிலாக, பாட்டாளி மக்கள் கட்சித் தலைமையில் சில சாதி அமைப்புகள் கூடி சில தீர்மானங்கள் நிறைவேற்றியுள்ளன. தமிழகத்தில் தீண்டாமைக் கொடுமை ஒழிக்கப்பட்டுவிட்டது. எனவே வன்கொடுமை தடுப்புச்சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது முதல் தீர்மானம். ஆனால், நிலைமை நேர்மாறாக உள்ளது. பல மாவட்டங்களில் தேநீர்க் கடைகளில் இரட்டைக்குவளை, ஆலயத்திற்குள் தலித் மக்கள் செல்லத் தடை, சாதி இந்துத் தெருக்களில் தலித் மக்கள் காலணி அணிந்து செல்லத் தடை, சாதி மறுப்புத் திருமணத்திற்கு எதிர்ப்பு, மீறி நடந்தால் கெüரவக் கொலை. இத்தனைக்குப் பிறகும் தீண்டாமைக் கொடுமை ஒழிக்கப்பட்டுவிட்டது என்று கூறும் இந்தத் தீர்மானம் தீண்டாமைக் கொடுமையை நியாயப்படுத்தவே வழிவகுக்கும்.
ஏதாவது ஒரு வடிவத்தில் தீண்டாமைக் கொடுமை நீடித்து வருவதே சாதி மோதலுக்கு முக்கியமான காரணம். இத்தகைய கொடுமைகள் அகற்றப்பட்டால் அனைத்துப் பகுதி மக்கள் மத்தியில் இணக்கத்தை உருவாக்க முடியும் எனவும் நீதியரசர் மோகன் தலைமையிலான உயர்நிலைக்குழு அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. இவ்வறிக்கை அரசுக்கு அளிக்கப்பட்டது 1998-இல். ஆனால், தீண்டாமைக் கொடுமையை ஒழிக்க அரசு இக்காலத்தில் ஆக்கபூர்வமாக எதுவும் செய்யவில்லை. அரசோ, பெரும்பான்மையான அரசியல் கட்சிகளோ தீண்டாமைக் கொடுமையை ஒழித்திட ஒன்றும் செய்யாத நிலையில் கொடுமை தானாக ஒழிந்துவிடுமா, ஒழிக்கப்பட்டுவிட்டது என்பதை ஏற்க முடியுமா?
வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது எனவும் 2.8 சதவிகிதம் வழக்குகளில் மட்டுமே குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளன, எனவே,97.8 சதவிகித வழக்குகள் பொய்வழக்குகள் என தீர்மானம் கூறுகிறது. இதையும் ஏற்க இயலாது. சமீபகாலத்தில் வட மாநிலங்களில் மட்டுமல்ல, தமிழகத்திலும் கெüரவக்கொலைகள் நடைபெற்று வருகின்றன. சிவகங்கை மாவட்டம் மேகலாவின் குடும்பத்தினர், அப்பெண்ணின் காதலன் சிவகுமாரை காதல் திருமணம் செய்து கொண்டதற்காக 6-10-2010 அன்று கொலை செய்தார்கள். திருவாரூரில் லட்சுமி என்ற சாதி இந்து குடும்பப்பெண்ணின் காதலரான தலித் பிரிவைச் சேர்ந்த சிவாஜி 2006-ஆம் ஆண்டு லட்சுமியின் சகோதரர்களால் கொல்லப்பட்டார். திருவண்ணாமலை சாதி இந்து குடும்பத்தைச் சேர்ந்த தேன்மொழியைக் காதலித்த பழங்குடி இன இளைஞர் துரையை 2011-ஆம் ஆண்டு தேன்மொழியின் உறவினர்கள் வெட்டிக்கொன்றார்கள். சமீபத்தில் அனைவரையும் திடுக்கிட வைத்த ஒரு கெüரவக்கொலை தஞ்சை மாவட்டத்தில் நடந்துள்ளது. மாரிமுத்து என்ற தலித் பட்டதாரி அபிராமி என்ற பெண்ணிடம் காதல் கொண்டு 2 ஆண்டுகளுக்கு முன்பு கலப்புத்திருமணம் செய்து கொண்டார். சென்னைக்குச் சென்று 2 ஆண்டுகளாக வாழ்ந்த இத் தம்பதியினரை நைசாக பேசி சூரக்கோட்டை கிராமத்துக்குத் திரும்ப வரவழைத்துள்ளனர். மாரிமுத்துவை அபிராமியின் சகோதரர் தன் வீட்டுக்கு அழைத்திருக்கிறார். அடுத்த நாள் காலையில் மாரிமுத்துவின் உடல் குரூரமாக வெட்டிச் சிதைக்கப்பட்டு, வயலில் கிடந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் சமீபத்தில் கலப்புத் திருமணம் செய்து கொண்டவர்களை கெüரவக்கொலை செய்த இரண்டு சம்பவங்கள் நடந்துள்ளன. இந்தக் கொலைகளெல்லாம் நியாயமானது என்று பாமக தலைமை கருதுகிறதா? மேற்கண்ட கொலையாளிகள் மீது வழக்கு நடைபெறுகிறது.
தமிழகத்தில் வன்கொடுமைத் தடுப்புச்சட்டம் சரியாக அமலாகாதது பற்றி நீதியரசர் மோகன் தலைமையிலான விசாரணை அறிக்கை கீழ்க்கண்டவாறு கூறுகிறது. குடியுரிமை பாதுகாப்புச் சட்டத்தையோ, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தையோ அரசு நிர்வாகம் சரியாக எடுத்துக் கொள்ளவில்லையென்பது வருத்தத்திற்குரியது. குறைவான எண்ணிக்கையில் வழக்குகள் பதிவாகி இருப்பதைக் கணக்கில்கொண்டு முடிவுக்கு வரவேண்டுமென்றால் தமிழகத்தில் தீண்டாமைக்கொடுமை இல்லை, தலித் மக்கள் மீது எந்தக்கொடுமையும் இழைக்கப்படவில்லை என்றுதான் முடிவு செய்ய வேண்டும். ஆனால், இது உண்மையல்ல என்பதை நாம் அனைவரும் அறிவோம். எனவே, இந்தச் சட்டங்களை ரத்து செய்யவோ, அல்லது திருத்தம் செய்ய வேண்டும் என்பதையோ உயர்நிலைக்குழு ஏற்கவில்லை. இந்தச் சட்டம் சரியான முறையில் அமலாக்கிட வேண்டும் என்றே குழு கருதுகிறது.
தென்மாவட்டங்களில் 1990-களில் ஏற்பட்ட சாதி மோதலில் பெருத்த உயிர்ச்சேதம், பொருள்சேதம் ஏற்பட்டு அதன்மீது அமைக்கப்பட்ட உயர்நிலைக்குழு, வன்கொடுமை தடுப்புச்சட்டத்தைத் திருத்த வேண்டிய அவசியம் இல்லை. மாறாக, சரியாக அமலாக்க வேண்டுமென்று பரிந்துரை செய்திருக்கிறது. எனவே, பாட்டாளி மக்கள் கட்சி தலைமையில் சாதி அமைப்புகள் கூடி வெளியிட்டுள்ள ஆபத்தான கருத்து ஏற்கத்தக்கதல்ல. வன்கொடுமை வழக்குகளை நடத்துவதில் பல சமயங்களில் காவல்துறையும், அரசு நிர்வாகமும் உயர் சாதி மனோபவத்துடனேயே நடந்துகொள்கிறது என்பதையும் மறுக்கமுடியாது.
தமிழகத்தில் பெரும்பான்மையான திருமணங்கள் மணமக்களுடைய பெற்றோர்கள் ஏற்பாடு செய்து நடக்கக்கூடிய திருமணங்கள்தான். ஆங்காங்கே விதி விலக்காகத்தான் காதல் திருமணங்களும், கலப்புத் திருமணங்களும் நடைபெறுகின்றன. கலப்புத் திருமணம் என்பது காலம் காலமாக நடைபெறும் ஒன்றுதான். கலப்புத் திருமணத்தை உற்சாகப்படுத்துவதற்குப் பதிலாக, அதை எதிர்ப்பது சரியான அணுகுமுறை அல்ல. கலப்புத் திருமணத்தினால் மட்டுமே சாதி வேறுபடு ஒழிந்துவிடாது. ஆனால், சாதி வேற்றுமையைக் களையும் முயற்சியில் இது ஒருபடி முன்னேற்றமாக அமையும்.
கலப்புத் திருமணத்தின் முக்கியத்துவம் பற்றியும் நீதியரசர் மோகன்குழு சுட்டிக் காட்டியுள்ளது. கலப்புத் திருமணம் செய்து கொள்வோருக்குப் பிறக்கும் குழந்தைகளுக்குக் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீடு அளிக்க சட்டம் கொண்டு வர அரசு பரிசீலிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.
அரசியல் கட்சிகள் சமூகத்தை முன்னெடுத்துச் செல்ல முயற்சிக்க வேண்டும். பின்னுக்கு இழுக்கக் கூடாது. நமக்கு முந்தைய தலைமுறையினர் நமக்கு அளித்த சமூகத்தைவிட ஒரு சிறந்த சமூகத்தை எதிர்காலத் தலைமுறைக்கு நாம் அளித்திட வேண்டும். பாமக மற்றும் சாதி அமைப்புகள் சமூகத்தைப் பல நூற்றாண்டுகள் பின்னுக்கு இழுத்து சாதீய, நிலப்பிரபுத்துவ உறவு முறையை நிலைநிறுத்த முயல்கின்றன.
தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் இதற்கு எதிர்ப்பு எழுந்திருப்பது ஆறுதல் அளிக்கக்கூடியது. சாதீயத்திற்கு எதிரான போராட்டத்தை சமரசமின்றி தொடர்ந்து பல்வேறு தளங்களில் நடத்த வேண்டியதுள்ளது என்பதையே தர்மபுரி தாக்குதல் உணர்த்துகிறது.
நன்றி தினமணி