ஜாபர் சேட். தமிழகத்தின் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்தவர். கருணாநிதியின் செல்லப்பிள்ளை. தமிழகத்தின் டிஜிபியாக இருந்த காலம் சென்ற துரை என்ற அதிகாரியை விட, அதிக அதிகாரத்தோடு தமிழகத்தை ஆட்டிப் படைத்தவர். அவரைப் பற்றி ஏராளமான கட்டுரைகள் சவுக்கில் வெளிவந்திருப்பதால், அந்த விபரங்களை மீண்டும் குறிப்பிட வேண்டியதில்லை.
வீட்டு வசதி வாரிய மனையை முறைகேடாக முதலில் தன் பெயரிலும், பின்னர் தன் மகள் பெயரிலும், இறுதியாக தன் மனைவி பெயரிலும் தன் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து ஒதுக்கீடு பெற்று, அந்த மனையை லேன்ட் மார்க் கன்ஸ்ட்ரக்ஸன்ஸ் என்ற தனியார் நிறுவனத்துக்கு விற்பனை செய்து பல கோடி ரூபாய் லாபம் ஈட்டியதாக அவர் மீது புகார்.
மே 2011 அன்று இவர் மீது புதிதாக பதவியேற்ற அதிமுக அரசின் தலைமைச் செயலாளரிடம் புகார் அளிக்கப்பட்டது. அந்தப் புகார் தலைமைச் செயலாளரால் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு அளிக்கப்பட்டு, முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு ஜாபர் சேட்டின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. சோதனைகளைத் தொடர்ந்து ஜாபர் சேட் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டதும், திமுக தலைவர் கருணாநிதி, கருணையோடு வெளியிட்ட அறிக்கை குறிப்பிடத்தக்கது..
“பழிவாங்கும் பொய் வழக்கு நடவடிக்கைகளில் அதிமுக அரசு எந்த அளவிற்கு ஈடுபடுகிறது என்பதற்கு மற்றும் ஓர் உதாரணத்தை விளக்கிட விரும்புகிறேன். கடந்த கால திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலத்தில் புலனாய்வுத் துறையில் கூடுதல் டி.ஜி.பி.யாகப் பணியாற்றியவர் தான் இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த ஜாபர்சேட், ஐ.பி.எஸ்.
அரசுக்கு எந்த அளவிற்கு உண்மையாக, விசுவாசமாக பணியாற்ற வேண்டுமோ அந்த அளவிற்கு அவர் பணியாற்றினார் என்பது உண்மை. ஆனால் தற்போதுள்ள ஆட்சியினர் நேர்மையாகவும், திறமையாகவும் பணி புரிந்ததையே ஒரு குற்றமாக எடுத்துக் கொண்டு, நீ எப்படி அரசுக்கு விசுவாசமாகப் பணியாற்றலாம் ? அது தவறல்லவா ? அதனால் நீ இருக்க வேண்டிய இடம் மண்டபம் முகாம் தான் ! எனவே உன்னை அங்கே மாற்றுகிறேன் என்று அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது; பழி வாங்கும் அஸ்திரம் பாய்ந்துள்ளது. கூடுதல் டி.ஜி.பி. நிலையிலே பணியாற்றும் அந்த அதிகாரியின் மீதான குற்றச்சாட்டு தமிழக அரசின் வீட்டு வசதி வாரிய மனை ஒதுக்கீட்டினைப் பெற்று அதன் மூலமாக பல கோடி ரூபாயைச் சம்பாதித்துவிட்டார் என்பதுதானாம் !
இந்த வீட்டு வசதி வாரிய மனைகள் ஒதுக்கீடு என்பதில் – அரசு விருப்புரிமை அடிப்படையில் வழங்கலாம் என்று முடிவெடுத்ததே அதிமுக ஆட்சியிலேதான். அதற்கான அரசாணை 25-1-1979-ல் பிறப்பிக்கப்பட்டுள்ளது. வீட்டு வசதி வாரியத்தின் வீடுகள் அல்லது மனைகளில் 85 சதவிகிதத்தை குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்வதும் – மீதியுள்ள 15 சதவிகிதத்தை அரசு, தனது விருப்புரிமையின் கீழ் ஒதுக்கீடு செய்வதும் தொடர்ந்து நீண்ட காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் முறையாகும். அரசு விருப்புரிமை ஒதுக்கீட்டின்கீழ் தரப்படும் வீடுகள் அல்லது மனைகள் சலுகை விலையிலே தரப்படுவதில்லை. குலுக்கல் முறையிலே விற்கப்படுபவர்களிடம் பெறப்படும் அதே தொகைதான் – அதாவது சந்தை மதிப்பைத்தான், விருப்புரிமை அடிப்படையில் பெறுபவர்களிடமும் வசூலிக்கப்படுகிறது. அதிலும் தற்போது தி.மு.கழக அரசின் ஆட்சிக் காலத்தில் விருப்புரிமை ஒதுக்கீட்டின்கீழ் வீட்டுமனை பெற்றவர்கள், அவர்கள் மனையின் விலையாகக் கட்ட வேண்டிய தொகை மிக அதிகமாக இருப்பதாகக் கூறி, அந்தத் தொகையை கட்ட முடியாத நிலையில் வீட்டு வசதி வாரியத்திற்கே மீண்டும் அந்த வீட்டுமனைகளை ஒப்படைத்து விட்டார்கள் என்பதற்கு பல எடுத்துக் காட்டுகள் உண்டு. எந்த விதிமுறைகளையும் மீறி இந்த வீட்டுமனைகள் கழக ஆட்சிக்காலத்தில் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. அதிமுக ஆட்சியிலே என்ன நடைமுறைகள் பின்பற்றப்பட்டனவோ, அவற்றில் ஒன்றைக்கூட கழக ஆட்சிக் காலத்திலே மாற்றவில்லை.
இந்த அரசாங்கம் பழி வாங்கும் நடவடிக்கைக்கு உச்சக் கட்டமாகச் சென்று, இந்தக் குறிப்பிட்ட அதிகாரியைத் தற்காலிகப் பணி நீக்கம் செய்ததோடு, அவர் மண்டபம் முகாமிலேதான் பணி நீக்கக் காலத்திலே இருக்க வேண்டும், சென்னையிலே உள்ள அவரது குடும்பத்தினரோடு இருக்கக் கூடாது என்றால் அதற்கு என்ன பெயர்? அதிலும் சிறுபான்மை சமுதாயமான இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்தவர் அவர். தற்போது அவர்களுக்கு நோன்பு காலமாகும். இந்த நேரத்தில் அவர் குடும்பத்தினரைக் காணக் கூடாது என்றெல்லாம் உத்தரவிடுவது எந்த அளவிற்கு நெறிக்குட்பட்டது? ஏன் இப்படிப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கைகள் ? அரசுக்கு விசுவாசமான அதிகாரிகளையெல்லாம் பழி வாங்கினால், மற்ற அதிகாரிகள் எல்லாம் ஒரு அரசுக்கு விசுவாசமாக நாம் பணியாற்றினால், அடுத்து வரும் ஆட்சியிலே தாங்கள் பழி வாங்கப்பட நேரிடும் என்று நினைத்தால், தங்கள் பணியினை முறையாகவும் நிறைவாகவும் ஆற்ற முடியுமா? ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கெல்லாம் சங்கங்கள் எல்லாம் இருப்பதாகச் சொல்கிறார்களே ? அந்தச் சங்கங்கள் எல்லாம் இதுபோன்ற நடவடிக்கைகளை அனுமதிக்கிறதா ? ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள் எல்லாம் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குரிய அதிகாரிகள் என்று சொல்லப்படுகிறதே, அந்த மத்திய அரசாவது இதுபோன்ற நிலைமைகளில் கவனம் செலுத்துமா ? இப்படிப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி எப்போது? பழிவாங்குவதிலே நிர்வாகத்திறனைக் காட்ட முயற்சிப்பதை, நிர்வாக வரலாறு நிச்சயமாக ஏற்காது !”
இந்த வழக்கின் விசாரணையை லஞ்ச ஒழிப்புத் துறை துரிதமாக மேற்கொண்டது. விசாரணையின்போது, வீட்டு வசதித் துறையின் செயலாளராக இருந்து, ஓய்வு பெற்ற பிறகு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட செல்லமுத்து, ஜாபர் சேட்டோடு கூட்டுச் சதியில் ஈடுபட்டது தெரியவந்தது. ஜாபர் சேட் எப்படியெல்லாம் வீட்டு மனை ஒதுக்குங்கள் என்று கேட்கிறாரோ, அப்படியெல்லாம் அவர் மனம் விரும்பியபடி ஒதுக்கீடு செய்த நல்லவர் செல்லமுத்து ஐஏஎஸ் என்பவர். திருவான்மியூரில் வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான 4800 சதுர அடி கொண்ட வீட்டு மனை எண் 540. இந்த வீட்டு மனையை ஜாபர் சேட் பெயருக்கு “அப்பழுக்கற்ற அரசு ஊழியர்” என்ற பிரிவில் ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடுகிறார் செல்லமுத்து. திடீரென்று ஜாபர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை, எனக்கு இந்த வீட்டு மனை வேண்டாம் என்று எழுதிக் கொடுத்து விடுகிறார். ஜாபரின் மகள் ஜெனிஃபர், “சமூக சேவகர்” என்ற பெயரில் வீட்டு மனை ஒதுக்கீடு செய்யுமாறு கேட்கிறார். ஜாபரின் அடிமை செல்லமுத்து, அவர் மகளுக்கு அதே 540 என்ற மனையை ஒதுக்கீடு செய்து உத்தரவிடுகிறார். அவர் மகள், வீட்டு மனைக்கான ஒன்றரை கோடி ரூபாய் தொகையையும் முழுமையாக செலுத்தி விடுகிறார். கல்லூரியில் படிக்கும் பெண்ணுக்கு ஒன்றரை கோடி ரூபாய் எப்படி வந்தது என்று கேள்வி எழுமே என்று, அவர் மகள் பெயருக்கு ஒதுக்கப்பட்ட வீட்டு மனையையும் சரண்டர் செய்கிறார் ஜாபர்.
மீண்டும் தனது மனைவி பர்வீன் ஜாபர் பெயரில் “சமூக சேவகர்” என்ற பிரிவின் கீழ் வீட்டு மனை ஒதுக்கீடு செய்யுமாறு கேட்கப்படுகிறது. இந்த மனுவையும் ஏற்றுக் கொண்ட செல்லமுத்து, ஜாபர் சேட்டுக்கு கொடுக்கப்பட்ட அதே 540 எண் கொண்ட வீட்டு மனையை ஒதுக்கீடு செய்து அரசாணை பிறப்பிக்கிறார்.
இந்த விபரங்களையெல்லாம் கவனமாக விசாரித்த, லஞ்ச ஒழிப்புத் துறையின் கூடுதல் எஸ்.பி. சுப்பையா, ஜாபர் சேட், அவர் மனைவி பர்வீன் ஜாபர், வீட்டு மனை ஒதுக்கீட்டில் கையெழுத்திட்ட அப்போதைய வீட்டு வசதித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும், வீட்டு வசதித்துறை செயலராக இருந்த செல்லமுத்து ஐஏஎஸ் ஆகியோரின் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யலாம் என்று அறிக்கை அளிக்கிறார். இந்த அறிக்கையின் அடிப்படையில் முடிவெடுக்கப்பட்டு, மத்திய உள்துறைக்கு ஜாபர் சேட் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய அனுமதி கேட்டு அறிக்கை அனுப்பப்படுகிறது.
இவ்வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள செல்லமுத்து உடையார் சாதியைச் சேர்ந்தவர். அப்போது லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநராக இருந்த டி.கே.ராஜேந்திரன் ஐபிஎஸ், உடையார் சாதியைச் சேர்ந்தவர். தண்ணீரை விட ரத்தம் அடர்த்தியானதா இல்லையா ? அடர்த்தியானதே என்பதை வரலாறு தொடர்ந்து நிரூபித்தே வந்திருக்கிறது.
விசாரணை அறிக்கை உள்ளிட்ட இதர ஆவணங்கள் அனைத்தும் மத்திய உள்துறைக்கு அனுப்பப்பட்ட பிறகு, செல்லமுத்துவை காப்பாற்ற வேண்டும் என்று முடிவெடுக்கிறார் டி.கே.ராஜேந்திரன். செல்லமுத்துவை குற்றவாளியாகச் சேர்த்த பிறகு எப்படிக் காப்பாற்றுவது… இந்த நேரத்தில் செல்லமுத்து மீது, டிஎன்பிஎஸ்சி ஊழல் குறித்து மற்றொரு வழக்கு லஞ்ச ஒழிப்புத் துறையால் பதிவு செய்யப்படுகிறது. பாவம் மனிதர் எவ்வளவுதான் தாங்குவார்…
செல்லமுத்துவை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று முடிவெடுத்த டி.கே.ராஜேந்திரன், செல்லமுத்துவை அப்ரூவராக மாறச் சொல்கிறார். செல்லமுத்துவும் அப்ரூவராக மாற விருப்பம் தெரிவிக்கிறார். செல்லமுத்துவை அப்ரூவராக மாறச்சொன்னதே டி.கே.ராஜேந்திரன்தான் என்றாலும், லஞ்ச ஒழிப்புத் துறையில் உள்ள அந்த கோப்பைப் பார்த்தால், முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி மீது உள்ள ஆதாரங்களை வலுப்படுத்துவதற்காக, செல்லமுத்துவை அப்ரூவராக எடுத்துக் கொள்ளலாம் என்று எழுதப்பட்டிருக்கிறது.
இதையடுத்து செல்லமுத்து நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளிக்கிறார். அந்த வாக்குமூலத்தில் செல்லமுத்து, அமைச்சர் ஐ.பெரியசாமியும் ஜாபர் சேட்டும் கூட்டுச்சதியில் ஈடுபட்டே இந்த ஒதுக்கீட்டை ஜாபர் பெற்றார், நான் ஒரு பச்ச மண்ணு என்று வாக்குமூலம் கொடுத்தார்.
ஏற்கனவே மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு வழக்கு தொடர அனுமதி கேட்டு கடிதம் அனுப்பி மூன்று மாதங்கள் ஆகி விட்டதா…. நாங்கள் மீண்டும் விசாரணை செய்து, செல்லமுத்துவை அப்ரூவர் ஆக்கி விட்டோம்… அதனால் வேறு விசாரணை அறிக்கை அளிக்கிறோம் என்று புதிதாக ஒரு அறிக்கையை ஆகஸ்ட் மாதம் மத்திய அரசுக்கு அளிக்கிறார்கள்.
கடந்த ஆட்சியில் பல பேருக்கு பரம்பொருளாக இருந்த ஜாபர் சேட்டுக்கு தற்போது நட்பான அதிகாரிகள் இல்லாமலா போய் விடுவார்கள்… ? நிர்வாகத் துறை கூடுதல் டிஜிபியாக இருக்கும் சஞ்சீவ் குமார் மற்றும் ஏற்கனவே மத்திய உள்துறையில் பணியாற்றிய முகம்மது ஷகீல் அக்தர் ஆகியோர் ஜாபருக்காக களம் இறங்குகிறார்கள். புதுதில்லியில் உள்ள மத்திய உள்துறை அமைச்சகத்தில், தங்களுக்கு உள்ள செல்வாக்கை பயன்படுத்தி, ஜாபர் மீது வழக்கு தொடுக்க தரப்பட வேண்டிய அனுமதியை தாமதப்படுத்துகிறார்கள்.
ஜெயின் ஹவாலா டைரி தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வினீத் நாராயண் என்பவர் தொடுத்த வழக்கில் உச்ச நீதிமன்றம்
Time limit of three months for grant of sanction for prosecution must be strictly adhered to. However, additional time of one month may be allowed where consultation is required with the Attorney General (AG) or any other law officer in the AG’s office. என்று கூறியுள்ளது. அதாவது, வழக்கு தொடுக்க அனுமதி கேட்டால், மூன்று மாதத்துக்குள் தர வேண்டும். அரசு வழக்கறிஞரை கலந்து ஆலோசிக்க வேண்டியிருந்தால், கூடுதலாக ஒரு மாதம் எடுத்துக் கொள்ளலாம் என்று உத்தரவிடப்பட்டிருக்கிறது. இந்தத் தீர்ப்பு டிசம்பர் 1997ல் வெளியானது. இந்தத் தீர்ப்பு வெளியாகி, சரியாக 15 வருடங்கள் முடிந்து விட்டன. ஆனால், இந்தத் தீர்ப்பின் அடிப்படையில், விஏஓ, வருவாய் ஆய்வாளர், மின்சாரத் துறை ஆய்வாளர் போன்றவர்களின் மீது வழக்கு தொடர 2 மாதங்களில் அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால் உயர் உயர் அதிகாரிகளுக்கு, ஏதாவது ஒரு காரணத்தைக் காட்டி காலதாமதம் மட்டுமே செய்யப்படுகிறது.
ஜாபர் சேட் உயர் உயர் அதிகாரி மட்டுமல்ல.. செல்வாக்கு படைத்த அதிகாரி. அவருக்கு உதவ, மத்திய அரசின் உள்துறையில் பல்வேறு தொடர்புகளை உடைய சஞ்சீவ் குமார் மற்றும் முகம்மது ஷகீல் அக்தர் ஆகியோர் இருக்கையில் ஜாபர் சேட் மீது வழக்கு தொடுக்க அவ்வளவு எளிதாக அனுமதி கிடைத்து விடுமா என்ன ? ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் மத்திய உள்துறைக்கு மீண்டும் அனுப்பப்பட்ட வழக்கு தொடர அனுமதி கேட்டு எழுதிய கடிதத்தின்படி அனுமதி வழங்காமல் காலம் கடத்தப்பட்டது. இந்த நான்கு மாதங்கள் முடிய பத்து நாட்கள் இருக்கையில் மத்திய உள்துறையிலிருந்து ஒரு கடிதம். ஜாபர் சேட் கூட்டுச் சதியில் ஈடுபட்டார் என்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது என்று கேட்டு. லஞ்ச ஒழிப்புத் துறைக்கு அனுப்பப்பட்டது.
வழக்கு தொடர அனுமதி வழங்குவது தொடர்பாக உச்சநீதிமன்றம் சமீபதில் 2ஜி வழக்கல் வழங்கிய தீர்ப்பு குறிப்பிடத்தக்கது.
If we look at Section 19 of the P.C. Act which bars a Court from taking cognizance of cases of corruption against a public servant under Sections 7, 10, 11, 13 and 15 of the Act, unless the Central or the State Government, as the case may be, has accorded sanction, virtually imposes fetters on private citizens and also on prosecutors from approaching Court against corrupt public servants. These protections are not available to other citizens. Public servants are treated as a special class of persons enjoying the said protection so that they can perform their duties without fear and favour and without threats of malicious prosecution. However, the said protection against malicious prosecution which was extended in public interest cannot become a shield to protect corrupt officials. These provisions being exceptions to the equality provision of Article 14 are analogous to provisions of protective discrimination and these protections must be construed very narrowly. These procedural provisions relating to sanction must be construed in such a manner as to advance the causes of honesty and justice and good governance as opposed to escalation of corruption.
லஞ்ச ஒழிப்புச் சட்டப் பிரிவுகள் 7, 10, 11, 13 மற்றும் 15 ஆகியவற்றின் கீழ் தொடரப்படும் வழக்குகளை, மத்திய அரசோ அல்லது மாநில அரசோ வழக்கு தொடுக்க அனுமதி வழங்கிய பிறகே ஒரு நீதிமன்றம் அவ்வழக்கை விசாரிக்க முடியும் என்ற கட்டுப்பாடு, ஊழல் புரியும் ஒரு பொது ஊழியருக்கு (Public Servant) எதிராக ஒரு குடிமகனோ, அரசுத்துறையோ நீதிமன்றத்தை அணுகுவதற்கு கட்டப்பாடுகளை விதிக்கிறது. இந்தப் பாதுகாப்பு, பொது ஊழியர் அல்லாதவர்களுக்கு கிடையாது- இது போன்ற சிறப்புப் பாதுகாப்பு அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுவதற்கான காரணம், அவர்கள் பொய்வழக்கு தாக்கல் செய்யப்படும் என்பது போன்ற எவ்வித அச்சமும் இன்றி சுதந்திரமாக பணியாற்ற வேண்டும் என்பதற்காகத்தான். ஆனால், ஒரு பொது நலனுக்காக பொய் வழக்குகளுக்கு எதிராக உருவாக்கப்பட்ட இப்படிப்பட்ட பாதுகாப்பு ஊழல் அதிகாரிகளை பாதுகாக்கும் கேடயமாக பயன்படுத்தப்படக் கூடாது. இந்தப் பாதுகாப்பு அரசியல் அமைப்புச் சட்டப் பிரிவு 14 (சம உரிமை)க்கு எதிரானதாக இருப்பதால், இந்தப் பிரிவை மிகக் குறுகலாகவே பயன்படுத்த வேண்டும். அதிகரித்து வரும் ஊழலுக்கு எதிராகவும், பொதுவாழ்வில் நேர்மையையும், நீதியையும், சிறந்த நிர்வாகத்தையும் வழங்குவது அவசியம் என்ற அடிப்படையிலேயே இந்தப் பாதுகாப்புப் பிரிவை புரிந்து கொள்ள வேண்டும்.
Therefore, in every case where an application is made to an appropriate authority for grant of prosecution in connection with an offence under P.C. Act it is the bounden duty of such authority to apply its mind urgently to the situation and decide the issue without being influenced by any extraneous consideration. In doing so, the authority must make a conscious effort to ensure the rule of law and cause of justice is advanced. In considering the question of granting or refusing such sanction, the authority is answerable to law and law alone. Therefore, the requirement to take the decision with a reasonable dispatch is of the essence in such a situation. Delay in granting sanction proposal thwarts a very valid social purpose, namely, the purpose of a speedy trial with the requirement to bring the culprit to book. Therefore, in this case the right of the sanctioning authority, while either sanctioning or refusing to grant sanction, is coupled with a duty.
ஆக லஞ்ச ஒழிப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடர அனுமதி கேட்டு வரும் ஒவ்வொரு விண்ணப்பத்திலும், அனுமதி வழங்கும் அதிகாரி தன் அறிவைப் பயன்படுத்தி, சூழ்நிலையின் அடிப்படையில் விரைவாகவும், எவ்வித புறக்காரணிகளாலும் பாதிக்கப்படாமல் அனுமதி வழங்க வேண்டியது அவரது கடமை. அப்படிச் செய்கையில் சட்டத்தின் ஆட்சி நிலைநாட்டப்பட்டு, நீதி பரிபாலனம் செய்யப்படுவதை அந்த அதிகாரி உறுதி செய்ய வேண்டும். வழக்கு தொடர அனுமதி வழங்குகையிலோ மறுக்கையிலோ, அந்த அதிகாரி சட்டத்திற்கு மட்டுமே பதில் சொல்லக் கடமைப் பட்டுள்ளார் என்பதை உணர வேண்டும். ஆக, நியாயமான வகையில் ஒரு முடிவெடுக்க வேண்டியது இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையின் தேவை. வழக்கு தொடர அனுமதி வழங்குகையில் ஏற்படும் தாமதம், குற்றவாளிக்கு தண்டனை வழங்குவதிலும், நீதிபரிபாலனம் செய்வதிலும், விரைவான வழக்கு விசாரணையிலும் உள்ள சமூகத் தேவையை அழித்து விடுகிறது. ஆகையால் இப்படிப்பட்ட வழக்கில் வழக்கு தொடர அனுமதி வழங்கும் அல்லது மறுக்கும் உரிமை, கடமையோடு இணைந்ததாகிறது.
Delay in granting such sanction has spoilt many valid prosecution and is adversely viewed in public mind that in the name of considering a prayer for sanction, a protection is given to a corrupt public official as a quid pro quo for services rendered by the public official in the past or may be in the future and the sanctioning authority and the corrupt officials were or are partners in the same misdeeds. I may hasten to add that this may not be factual position in this but the general demoralizing effect of such a popular perception is profound and pernicious.
வழக்கு தொடர அனுமதி வழங்கும் விவகாரத்தில் பொதுமக்களுக்கு நிர்வாகத்தின் மீது உள்ள நம்பிக்கை, நீதிபரிபாலனத்தின் அடிப்படையான சட்டத்தின் ஆட்சி ஆகியவை தீர்மானிக்கப்டுகிறது என்பதை அனுமதி வழங்கும் அதிகாரி தன் கவனத்தில் கொள்ள வேண்டும். வழக்கு தொடர அனுமதி வழங்குவதில் ஏற்படும் தாமதம், பல நியாயமான வழக்குகளை நாசப்படுத்தியுள்ளது என்பதையும், இதை பார்க்கும் பொதுமக்கள், வழக்கு தொடர அனுமதி வழங்குவது என்ற பெயரில் செய்யப்படும் தாமதம், கடந்த காலத்தில் செய்தவற்றுக்கோ அல்லது எதிர்காலத்தில் செய்யப்போகும் காரியத்திற்கோ உண்டான கைமாறாகவும், ஊழல் அதிகாரிகளை பாதுகாப்பதன் மூலம் ஊழல் அதிகாரியும், வழக்கு தொடர அனுமதி வழங்கும் அதிகாரியும், ஊழலின் பங்குதாரர்கள் என்ற எண்ணத்தை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தும். நான் இங்கே கூறியது தற்போதுள்ள வழக்கில் உள்ள யதார்த்தமாக இல்லாது போகலாம், ஆனால் இப்படிப் பொதுவாக நிலவி வரும் இதுபோன்ற கருத்து நாசம் விளைவிக்கக் கூடியது.
By causing delay in considering the request for sanction, the sanctioning authority stultifies judicial scrutiny and determination of the allegations against corrupt official and thus the legitimacy of the judicial institutions is eroded. It, thus, deprives a citizen of his legitimate and fundamental right to get justice by setting the criminal law in motion and thereby frustrates his right to access judicial remedy which is a constitutionally protected right. In this connection, if we look at Section 19 of the P.C. Act, we find that no time limit is mentioned therein. This has virtually armed the sanctioning authority with unbridled power which has often resulted in protecting the guilty and perpetuating criminality and injustice in society.
வழக்கு தொடர அனுமதி வழங்குவதில் தாமதம் ஏற்படுத்துவதன் மூலம், அந்த அதிகாரி, ஒரு ஊழல் அதிகாரியின் குற்றத்தின் உண்மைத் தன்மையை விசாரித்து தீர்ப்பு வழங்கும் நீதிமன்றத்தின் பணியில் குறுக்கிட்டு, நீதித்துறையின் நேர்மையையே கேள்விக்குள்ளாக்குகிறார். இவ்வாறு தாமதம் செய்வதன் மூலம், ஒரு குடிமகன் நீதிமன்றத்தில் ஊழல் வழக்கு தொடர்ந்து நீதி பெறுவதற்கு அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமை மறுக்கப்படுகிறது. வழக்கு தொடர அனுமதி பெற வேண்டும் என்று வரையறுத்துள்ள லஞ்சஒழிப்புச் சட்டப் பிரிவு 19ஐ பார்த்தோமேயானால் அதில் எந்த காலவரையறையும் கொடுக்கப்படவில்லை என்பது புரியும். இது அனுமதி வழங்கும் அதிகாரிக்கு வரைமுறையற்ற அதிகாரத்தை வழங்கி, அதன் மூலம் ஊழல் அதிகாரிகளைப் பாதுகாப்பதற்கும், ஊழலைத் தொடர்வதற்கும், சமுதாயத்தில் அநீதியை வளர்ப்பதற்குமே பயன்பட்டுள்ளது.
இதுதான் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கங்குலி மற்றும் சிங்வி வழங்கிய தீர்ப்பு.
இந்தத் தீர்ப்பு, மத்திய உள்துறையில், ஜாபர் சேட்டுக்கு அனுமதி வழங்கும் கோப்பை கவனித்து வரும், தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த அந்த துணைச் செயலாளருக்குத் தெரியாதா ? சவுக்கைப் போன்ற மரமண்டைகளுக்கே விளங்கும்போது, மத்திய உள்துறையில் பணியாற்றும் உயர் அதிகாரிகளுக்குத் தெரியாதா ? தெரியும். நிச்சயம் தெரியும். தெரிந்தும், நான்கு மாதங்களைக் கடந்தும், வழக்கு தொடர அனுமதி வழங்காமல் காலம் தாழ்த்துவதற்கு காரணம், யார் என்ன செய்து விட முடியும் என்ற இறுமாப்பு. ஜாபர் சேட்டுக்கு நெருக்கமான அதிகாரிகளும், கருணாநிதியும் கொடுத்த அழுத்தத்தால், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையே மதிக்காமல் காற்றில் பறக்க விடுகிறார்களே…. இதை யார் கண்டு கொள்ளப்போகிறார்கள்…. இப்படியே சில மாதங்கள் காலம் தாழ்த்தி இந்த வழக்கை மீளா உறக்கத்தில் ஆழ்த்தி விடலாம் என்ற அகம்பாவம்.
ஜாபர் சேட் மீது வழக்கு தொடுக்க வழங்க வேண்டிய அனுமதிக்கு ஏற்படும் தாமதத்தை அவருக்கு ஆதரவாக கருணாநிதி ஜுலை 2011ல் வெளியிட்ட அறிக்கையின் வரிகளோடு சேர்த்துப் பார்க்க வேண்டும்.
“ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள் எல்லாம் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குரிய அதிகாரிகள் என்று சொல்லப்படுகிறதே, அந்த மத்திய அரசாவது இதுபோன்ற நிலைமைகளில் கவனம் செலுத்துமா ?”
இப்போது புரிகிறதா… கருணாநிதி எதிர்ப்பார்த்தது போல மத்திய அரசு கவனம் செலுத்தி விட்டது என்பது இப்போது புரிகிறதா… ?
தாமதத்துக்கான காரணம் இப்போது விளங்குகிறதா … ?
இந்த தாமதம் தொடர்கதையாகி விடும். ஜாபர் சேட் மீதான வழக்கு காலாவதியாகி விடும் என்று கருணாநிதி மற்றும் அவரது தொண்டர் அடிப்பொடியாக இருக்கும் அதிகாரிகளின் ஆதரவினால் இந்த வழக்கிலிருந்து தப்பித்து விடலாம் என்று உற்சாகமாக இருக்கிறார் ஜாபர் சேட்.
ஆனால் அப்படியெல்லாம் நடக்காது போலிருக்கிறதே…. ஜாபர் சேட் மீது புகார் கொடுத்தவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடுத்துள்ளார். அந்த வழக்கில் அவர் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு மாறாக, நான்கு மாதங்கள் கடந்தும், வழக்கு தொடர அனுமதி வழங்காமல் தாமதம் செய்யப்படுகிறது என்று தொடர்ந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி பால் வசந்தகுமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
விசாரணையின்போது, மத்திய அரசு வழக்கறிஞரைப் பார்த்து நீதிபதி பால் வசந்தகுமார், எப்போது அனுமதி வழங்குவீர்கள் என்று கேட்டார் ? வழக்கறிஞர் இரண்டு வாரங்கள் என்றதும், இரண்டு வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்யுங்கள் என்று உத்தரவிட்டார். இரண்டு வாரங்கள் கழித்து இவ்வழக்கு விசாரணைக்கு வருவதற்குள், ஜாபர் சேட் மீது வழக்கு தொடர அனுமதி வழங்கும் ஆணை மத்திய அரசிடமிருந்து வந்து விடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஆணை வந்துவிட்டால், ஒரே வாரத்தில், லஞ்ச ஒழிப்புத் துறை, சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் இருக்கும், லஞ்ச ஒழிப்பு வழக்குகளுக்கான பிரத்யேக நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து விடுமே…!!!
அடடே….!!!!
ஆச்சர்யக்குறி…!!!!
புகார் அளித்தவர் என்ற முறையில், ஜாபர் சேட் மீதான வழக்கில் முதல் சாட்சி….. ….. ….
சவுக்கு. அப்போது நீதிமன்றத்துக்கு வரும் ஜாபர் சேட்டும் சவுக்கும் சந்தித்துக் கொள்வார்கள்.
சந்திக்கும் போது….
மந்தையில் இருந்து பிரிந்த ஆடுகள் மீண்டும் சேரும்போது…..
பேசமுடியவில்லையே……