என்னடா இது சவுக்கு திடீரென்று யாரோ ஒரு பாலகிருஷ்ணனை ராஜினாமா செய்யச் சொல்கிறதே…. யார் இந்த பாலகிருஷ்ணன், எதற்காக ராஜினாமா செய்ய வேண்டும் என்று விளம்புகிறீர்களா ?
அந்த பாலகிருஷ்ணன் வேறு யாரும் அல்ல…. இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தான் அது.
இந்த பாலகிருஷ்ணன் இந்தியாவின் தலைமை நீதிபதியான பொழுது, இந்தியாவில் உள்ள அனைத்து தலித்துகளோடு சேர்ந்து, சவுக்கும் மகிழ்ந்தது. மகிழ்ச்சி ஏனென்றால் சாதி ஆதிக்கம் மிகுந்த இந்தியாவின் போலி ஜனநாயக சூழலில் ஒரு தலித் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாவது மிக மிக போராட்டம் மிகுந்த ஒரு விஷயமாகவே சவுக்கு பார்த்தது.
இந்த கோனக்குப்பக்காட்டில் கோபிநாதனின் மகன் இந்தியாவின் தலைமை நீதிபதி ஆகும் போது, தலித்துகளின் தோழன் வி.ஆர்.கிருஷ்ணய்யர் பெருமை பட்டார். அறிக்கை வெளியிட்டார். நீ தலித்துகளை பெருமைப் படுத்துகிறாய் என்றார். ஆனால், இந்தக் கோபிநாதனின் மகன், தலித்துகளை அவமானப் படுத்தி விட்டார். சிறுமைப் படுத்தி விட்டார்.
இந்த கே.ஜி.பாலகிருஷ்ணனைப் பற்றி வரக்கூடிய ஊழல் செய்திகள் ஏராளம் என்றால் ஏராளம். இந்தியாவின் மோசமான தலைமை நீதிபதியாக பாலகிருஷ்ணன் பெயரெடுத்திருக்கிறார்.
பாலகிருஷ்ணனுக்கு, தென் ஆப்ரிக்கா, கென்யா, மொரீஷியஸ் போன்ற நாடுகளில் வங்கிக் கணக்கு இருப்பதாகவும், பல கோடி ரூபாய் மதிப்பிலான 4 சொகுசு கார்களை ஓய்வு பெற்ற பிறகு, சென்னையைச் சேர்ந்த ஒரு தரகர் மூலமாக விற்றிருப்பதாகவும் தெரிகிறது.
இவர் தலைமை நீதிபதியாக இருந்த காலத்தில் கருணாநிதியும், திமுகவும், காங்கிரசும், நீதிமன்றத்தை கண்டு துளி கூட அஞ்சியதில்லை. பாலகிருஷ்ணன் தலைமை நீதிபதியாக இருக்கும் போது, இந்த ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணைக்கு வந்திருந்தால், அந்த வழக்கு 20 அடி ஆழத்தில் குழி தோண்டி புதைக்கப் பட்டிருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.
இப்போது பாலகிருஷ்ணன் சிக்கியிருக்கும் சர்ச்சையைப் பற்றிப் பார்ப்போம்.
2009ம் ஆண்டு ஜுன் 26ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ரகுபதி முன்பாக முன்ஜாமீன் கேட்டு ஒரு வழக்கு விசாரணைக்கு வருகிறது. முன்ஜாமீன் கேட்ட நபர் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி.
பாண்டிச்சேரியில் அறுபடைவீடு மருத்துவக் கல்லூரி என்று ஒரு கல்லூரி உள்ளது. அந்தக் கல்லூரியில் படித்து வந்த மாணவரின் பெயர் கிருபா ஸ்ரீதர். பாண்டிச்சேரி பல்கலைகழகத்தில் மதிப்பெண்களில் மோசடி நடைபெறுகிறது என்ற தகவலை அடுத்து, சிபிஐ அதிரடி சோதனைகளை மேற்கொள்கிறது. அவ்வாறு மேற்கொள்ளும் போது, பாண்டிச்சேரி பல்கலைகழகத்தின் செக்ஷன் ஆபீசர் கன்னியப்பன் என்பவர் கையில் கிருபா ஸ்ரீதர் என்ற மாணவரின் மதிப்பெண் சான்றிதழ் சிக்குகிறது. அந்த மாணவர் கண் மருத்துவ பாடத்தில் 40க்கு 9 மதிப்பெண் பெற்றிருந்ததும், அந்த மதிப்பெண் திருத்தப் பட்டதும் தெரிய வருகிறது. கிருபா ஸ்ரீதரின் தந்தை பெயர் டாக்டர்.கிருஷ்ணமூர்த்தி. இவர் ஆ.ராசாவின் மாவட்டமான பெரம்பலூரைச் சேர்ந்தவர். ராசாவுக்கு சொந்தமான கோவை ஷெல்டர்ஸ் நிறுவனத்தில் பங்குதாரர். ராசா வழக்கறிஞராக இருந்த போது தொழில் செய்த அறையை ராசாவுக்கு வாடகைக்கு விட்டவர்.
கன்னியப்பனின் வங்கிக் கணக்குகளை சோதனை செய்ததில், டாக்டர்.கிருஷ்ணமூர்த்தி கன்னியப்பனுக்கு பெரும் தொகையை மதிப்பெண்ணைத் திருத்துவதற்காக கொடுத்திருப்பது சிபிஐக்கு தெரிய வந்தது. இதையடுத்து சிபிஐ, கிருஷ்ணமூர்த்தியையும், கிருபா ஸ்ரீதரையும் கண்காணிப்பு வளையத்தில் கொண்டு வருகிறது.
கைது செய்யப் படுவோமோ என்று அஞ்சிய கிருஷ்ணமூர்த்தி, தனக்கும் தனது மகனுக்கும் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோருகிறார்.
அந்த வழக்குதான் நீதிபதி ரகுபதி முன்னிலையில் விசாரணைக்கு வருகிறது. டாக்டர்.கிருஷ்ணமூர்த்திக்காக ஆஜரான வழக்கறிஞர், தமிழ்நாடு பார் கவுன்சில் தலைவர் சந்திரமோகன், நீதிபதி முன்ஜாமீன் மறுக்கப் போகிறார் என்று தெரிந்ததும், உரத்த குரலில் சத்தம் போடத் தொடங்குகிறார். “நீங்கள் எப்போது பார்த்தாலும் அரசுத் தரப்பு சொல்வதைத் தான் கேட்கிறீர்கள். “ என்று கூறுகிறார்.
நீதிபதி ரகுபதி “மிஸ்டர்.சந்திரமோகன், காலையிலிருந்து பல வழக்குகளில் பிணை வழங்கியுள்ளேன். நீங்கள் சொல்வது அபாண்டமான குற்றச் சாட்டு. பார் கவுன்சிலின் தலைவராக உள்ள நீங்கள், இளம் வழக்கறிஞர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். இப்படி நாகரீகமில்லாமல் நடந்து சொள்ளக் கூடாது“ என்று கூறுகிறார். மீண்டும் அதே தொனியில் சந்திரமோகன் பேசவும், பொறுமை இழந்த நீதிபதி ரகுபதி “மிஸ்டர்.சந்திரமோகன்… இதே வழக்கு விஷயமாக மத்திய மந்திரி ஒருவரின் பெயரை பயன்படுத்தி நீதிமன்றத்தின் மீது நிர்பந்தம் ஏற்படுத்திய நீங்கள் இவ்வாறு நடந்து கொள்ள உரிமை இல்லை. இதை அனுமதிக்க முடியாது“ என்று கூறி, அந்த வழக்கை வேறு நீதிமன்றத்துக்கு மாற்றிடுமாறு, உயர்நிதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிட்டார்.
பார் கவுன்சில் தலைவர் சந்திரமோகன்
இந்த விஷயம், டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழலில் தலைப்புச் செய்தியாக வந்தது. தேசிய ஊடகங்களும், இந்த விஷயத்தை பெரிய அளவில் செய்தியாக்கின. ஜெயலலிதா இந்த வழக்கு குறித்த பல்வேறு விபரங்களை அறிக்கையாக வெளியிட்டு, அந்த அறிக்கையில், நீதிமன்றத்தை மிரட்டிய மத்திய அமைச்சர் ஆ.ராசா தான் என்பது குழந்தைக்கு கூட தெரியும். இவ்வாறு நீதிமன்றத்தை மிரட்டிய ஒருவர் அமைச்சரவையில் நீடிக்கக் கூடாது என்றும் அறிக்கையில் கூறினார்.
தேசிய அளவில் பல்வேறு விவாதங்கள் கிளம்பின. அது ராசாவா…. ராசா இல்லையா… ராசா என்றால் பிரதமர் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று பெரும் விவாதங்கள் கிளம்பின.
இந்த விவாதங்களுக்கு முற்றுப் புள்ளி வைத்தது கோனக்குப்பக் காட்டில் கோபிநாதன் பாலகிருஷ்ணன் தான். 2009 ஜுலை 5ம் தேதி, செய்தியாளர்களை சந்தித்த கே.ஜி.பாலகிருஷ்ணன், எந்த அமைச்சரும் நீதிபதியிடம் பேசவில்லை என்று தெரிவித்தார். இது குறித்து கருத்து தெரிவித்த ஆண்டிமுத்து ராசா, “இது ஒரு அரசியல் சதி“ என்றார்.
கே.ஜி.பாலகிருஷ்ணன் எந்த அமைச்சரும் நீதிபதியிடம் பேசவில்லை, எந்த அமைச்சர் பெயரையும் குறிப்பிடவில்லை என்று கூறியதோடு இந்த சர்ச்சைக்கு முற்றுப் புள்ளி வைக்கப் பட்டது.
ஏறக்குறைய ஒன்றரை ஆண்டு கழித்து, சென்னை உயர்நீதிமன்றத்தின் ஒரு வழக்கறிஞர், பார் கவுன்சில் தலைவராக சந்திரமோகன் நீடிக்கக் கூடாது, அவர் நீதிமன்ற அவமதிப்பு குற்றத்தை புரிந்துள்ளார் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடர்ந்த வழக்கில் கடந்த வாரம் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
அந்தத் தீர்ப்பில், நீதிபதி ரகுபதி அப்போதைய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஹேமந்த் லட்சுமண கோகலேவுக்கு எழுதிய கடிதத்தை தனது தீர்ப்பில் சென்னை உயர்நீதிமன்றம் மறுபதிப்பு செய்துள்ளது.
அந்தக் கடிதத்தில், நீதிபதி ரகுபதி, ஆ.ராசா என்ற மத்திய அமைச்சர் உங்களிடம் பேச விரும்புகிறார் என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து, தற்போது, தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவராக உள்ள கே.ஜி.பாலகிருஷ்ணனிடம் கருத்து கேட்கப் பட்ட போது, மீண்டும் எந்த அமைச்சரின் பெயரும் குறிப்பிடப் படவில்லை என்று சாதித்தார்.
கே.ஜி.பாலகிருஷ்ணனின் இந்த அண்டப் புளுகை அடுத்து, மரபை மீறி, வேறு வழியின்றி, தனது நேர்மைத் தன்மையை காக்க வேண்டும் என்பதற்காக எச்.எல்.கோகலே, தற்போது உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருப்பதையும் மீறி, பத்திரிக்கைகளுக்கு ஒரு அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையில், நீதிபதி ரகுபதி தனக்கு எழுதிய கடிதத்தில், அமைச்சர் ஆ.ராசாவின் பெயரை குறிப்பிட்டிருந்ததாகவும், அந்தக் கடிதத்தையும் அவர் கே.ஜி.பாலகிருஷ்ணனுக்கு அனுப்பி வைத்ததாகவும், தெரிவித்திருந்தார்.
கோகலே அறிக்கையைத் தொடர்ந்து, நீதிபதி ரகுபதியும், தான் தனது கடிதத்தில் ஆ.ராசாவின் பெயரை குறிப்பிட்டிருந்ததாகவும், அந்தக் கடிதமும், கே.ஜி.பாலகிருஷ்ணனுக்கு அனுப்பி வைக்கப் பட்டதாகவும் தெளிவு படுத்தினார்.
இத்தனை தெளிவுகளுக்குப் பிறகும், கோபிநாதன் பாலகிருஷ்ணன் அமைச்சர் பெயர் குறிப்பிடப் படவில்லை என்று மறுக்கிறார் என்றால் இவர் என்ன மனிதராக இருப்பார் என்று கூறுங்கள்.
இதே பாலகிருஷ்ணன் தான், நீதிபதிகள் சொத்துக் கணக்கை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த போது, “சுயமரியாதை உள்ள எந்த நீதிபதியும் தனது சொத்துக் கணக்கை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க மாட்டார்“ என்று கூறினார். எப்படி இருக்கிறது ?
அம்பானி சகோதரர்களுக்குள்ளான மோதல் விளைவாக இயற்கை வாயுவை பங்கிடுவது தொடர்பாக நடந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தடை விதித்ததில் பல கோடிகள் விளையாண்டிருப்ப தாகவும், இதில் பாலகிருஷ்ணனுக்கு பெரும் பங்கு இருப்பதாகவும், டெல்லி வழக்கறிஞர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அண்ணா பல்கலைகழகத்தில் மதிப்பெண் பெறாத படிக்காத மக்கு மாணவர்கள் அரசு கோட்டாவில் சீட் பெறுகிறார்கள் என்று ஒரு ஊழல் வந்ததல்லவா…. ? அந்த அரசு கோட்டாவை சென்னை உயர்நீதிமன்றம் 2007ல் தடை செய்தது. இதை எதிர்த்து அண்ணா பல்கலைகழகம் உச்ச நீதிமன்றம் சென்றது.
இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு தடை விதித்தது இதே புண்ணியவான் தான். இந்த தடையின் விளைவால், இந்த ஆண்டு, லட்சக் கணக்கில் அண்ணா பல்கலைகழக இடங்கள் ஏலம் போடப்பட்டு, ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளின் பிள்ளைகளுக்கு வழங்கப் பட்டன.
இப்படிப் பட்ட ஒரு நிதிபதி, மனிதனாகவே இருக்க தகுதி இல்லாத போது, தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவராக எப்படி இருக்க முடியும் ?
அதனால்தான் சவுக்கு சொல்கிறது…..
கோனப்குப்பக் காட்டில் கோபிநாதன் பாலகிருஷ்ணா..! ராஜினாமா செய் !