இப்படி யார் பாடுவார் என்றால் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக இருக்கும் நீதியரசர் எலிப்பி தர்மாராவ் அவர்கள் பாடுவார். ஏன் அப்படிப் பாடுவார்… ? இருக்காதா பின்னே. அண்ணன் எப்போ சாவான்… திண்ணை எப்போ காலியாகும் என்றல்லவா இருந்தார். தலைமை நீதிபதியாக இருந்த இக்பால் எப்போது உச்சநீதிமன்றத்துக்கு செல்வார், நாம் எப்போது தலைமை பொறுப்பு தலைமை நீதிபதியாவது என்றல்லவா காத்துக் கொண்டிருந்தார்.
இதோ… …. அதோ என்று இழுத்தடித்துக் கொண்டிருந்த தலைமை நீதிபதி இக்பாலின் உச்ச நீதிமன்ற நியமன உத்தரவு ஒரு வழியாக கடந்த வெள்ளியன்று மாலை வந்தது. யாருக்கு மகிழ்ச்சியோ இல்லையோ… …. இக்பாலுக்கு மிகுந்த மகிழ்ச்சி. பொதுநல வழக்கு என்ற பெயரில் தொல்லை செய்து கொண்டிருந்தவர்களிடமிருந்து விடுதலை கிடைத்த மகிழ்ச்சி. மகிழ்ச்சியடைந்த மற்றொருவர், சென்னை உயர்நீதிமன்றத்தின் இரண்டாவது மூத்த நீதிபதி எலிப்பி தர்மாராவ்.
அரசல் மற்றும் புரசலாக நீதிமன்றத்தில் பேசப்படும் விவகாரம், நீதிபதி எலிப்பி தர்மாராவ் அவர்கள் பொறுப்பு தலைமை நீதிபதியாகக் கூடாது என்பதற்காகவே, சென்னை உயர்நீதிமன்றம் கிறிஸ்துமஸ் விடுமுறையில் செல்லும் கடைசி நாளன்று, தலைமை நீதிபதிக்கு பதவி உயர்வு ஆணை வழங்கப்பட்டது என்றும், எலிப்பி தர்மாராவ் ஒரு நாள் கூட, தலைமை நீதிபதியாக உட்காரக் கூடாது என்பதற்காகவே இப்படி தாமதமாக உத்தரவு வழங்கப்பட்டது என்றும் பேசிக்கொள்கிறார்கள். அப்படித் தாமதமாக உத்தரவு வழங்கப்பட்டதன் பின்னணி என்ன என்பது குறித்து நமக்குத் தெரியாது.
ஆனால், இதன் காரணமாக நீதிபதி எலிப்பி தர்மாராவ் கடும் கோபத்தில் உள்ளார் என்பதை மட்டும் உறுதியாகச் சொல்ல முடியும். நேற்று தலைமை நீதிபதி இக்பாலுக்கு பிரிவு உபச்சார விழா நடைபெற்றது. விழாவில் பேசிய அனைவரும், நீதிபதி இக்பால், வானத்தை இரண்டாகப் பிளந்தவர், சரிந்து கொண்டிருந்த நீதித்துறைக்கு முட்டுக் கொடுத்து தூக்கி நிறுத்தினார், இவர் இல்லையென்றால், நீதித்துறை நிலைகுலைந்திருக்கும் என்றெல்லாம் கூசாமல் பொய் சொல்லிக் கொண்டிருந்தார்கள். இந்த பிரிவு உபச்சார விழாவுக்கு, நீதிபதி எலிப்பி தர்மாராவ் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவர் கஷ்டம் அவருக்கு… பாவம்….
சரி.. விஷயத்துக்கு வருவோம். ஏற்கனவே எழுதியிருந்த நிலைகுலைந்த நீதி என்ற கட்டுரையில், ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் சட்டப் படிப்பு படித்த நீதிமன்ற ஊழியர்கள் தற்போது தங்களின் சட்டப்படிப்புக்கு அங்கீகாரம் பெற இருக்கிறார்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த விஷயத்தை விரிவாக ஆராய வேண்டிய நேரம் வந்து விட்டது.
மற்ற துறைகளில் இளநிலை உதவியாளர்களாக பணியில் சேர்வது போல நீதித்துறையில் ரீடர் என்ற பதவியில் ஊழியர்கள் சேர்கிறார்கள். இவ்வாறு சேரும் ஊழியர்களுக்கு அடுத்த பதவி உயர்வு, உதவியாளர். இதற்குப் பிறகு பதவி உயர்வு பெறுவதற்கு துறைத்தேர்வுகள் எழுத வேண்டும். தமிழக அரசின் ஒவ்வொரு துறையிலும் ஒவ்வொரு தேர்வுகள் இருக்கும். காவல்துறையில், District Office Manual, Police Standing Order மற்றும் Account Test for Subordinate Officers Part.I ஆகிய தேர்வுகளை எழுத வேண்டும். நீதித்துறையில் வேறு தேர்வுகள். அதற்கு அடுத்த பதவி உயர்வு பிரிவு அலுவலர் (Section Officer)
இதற்கு அடுத்த பதவி உயர்வில்தான் சிக்கல் வருகிறது. நீதித்துறை ஊழியர்களாக இருப்பவர்கள், சட்டப்படிப்பு படித்திருந்தால், உதவிப் பதிவாளர் (Assistant Registrar), துணைப் பதிவாளர் (Deputy Registrar), இணைப் பதிவாளர் (Joint Registrar) மற்றும் பதிவாளர் (Registrar) ஆகிய பதவி உயர்வுகளைப் பெறலாம். சட்டப்படிப்பு படிக்கவில்லை என்றால், Sub-Assistant Registrar என்ற ஒரே பதவி உயர்வுதான்.
சரி.. இன்று ஒரு சாதாரண பட்டப்படிப்பு படித்த ஒருவர் நீதித்துறையில் சேர்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவருக்கு அதிகபட்ச பதவி உயர்வு, Sub-Assistant Registrar வரைதான். அவர் அதற்கு மேல் பதவி உயர்வு பெற முடியாது. ஆனால் சட்டம் படித்தவர்களுக்கு, பல பதவி உயர்வுகளைப் பெற வாய்ப்பு இருக்கிறது. ஆனால் தற்போத ஒருவர் சட்டப்படிப்பு படிக்க முடியுமா என்றால் முடியாது. இந்தியாவைப் பொறுத்தவரை, சட்டப் படிப்பை நிர்மாணிப்பது, வழிநடத்துவது, பார் கவுன்சில் ஆப் இந்தியா மட்டுமே. பார் கவுன்சில் ஆப் இந்தியா அங்கீகரிக்காத எந்த சட்டப்படிப்பும் செல்லாது.
1999ம் ஆண்டுக்கு முன், சட்டக்கல்லூரிகளில் மாலை நேர சட்டப்படிப்புகள் உண்டு. அலுவலகத்துக்கு சென்று, வேலையை முடித்து விட்டு, மாலை 5.30 மணிக்கு வந்து சட்டப்படிப்பை படிக்கும் வசதி இருந்தது. பெரும்பாலான அரசு ஊழியர்கள், இது போல மாலை நேரக் கல்லூரிகளில் படித்து, தங்கள் வேலைகளைப் பறித்துக் கொள்கிறார்கள் என்று நினைத்த வழக்கறிஞர்கள், இந்த மாலை நேர சட்டப்படிப்பை முற்றிலும் ரத்து செய்கிறார்கள். 24.10.1999 அன்று பார் கவுன்சில் ஆப் இந்தியா இந்தத் திருத்தத்தை வெளியிடுகிறது.
RESOLUTION No- 68/1999.- Dt. 24.10.99
The amended rule will read as follows :-
2(1). That the Law Education under Section B may be through whole-time colleges. All Law Colleges which are exclusively running evening sessions shall switch over to “Day” sessions during the academic year 2000-2001 failing which they will not be entitled to approval of affiliation by the Bar Council of India. Provided that wherever the college is running evening course, the students who were admitted to the first year in the evening sessions during the academic year 1999-2000 shall be allowed to complete the course.”
இந்தத் திருத்தத்தின் படி மாலை நேர சட்டப் படிப்புகள் முற்றிலும் ரத்து செய்யப்படுகின்றன.
தற்போது முழு நேர சட்டப் படிப்புகளைத் தவிர்த்து, வேறு எந்த வகையிலும் சட்டப்படிப்பு படித்து பட்டம் பெற இயலாது.
சரி… நீதிமன்ற ஊழியர்களின் பதவி உயர்வுக்கு என்னதான் வழி என்றால் எந்த வழியும் இல்லை. அவர்கள் தலைமை நீதிபதியிடம் முறையிட்டோ, அல்லது வழக்கு தொடர்ந்தோ, அல்லது போராட்டம் நடத்தியோ பதவி உயர்வுக்கான நிவாரணம் பெற வேண்டியது ஒன்றுதான் வழி.
ஆந்திராவிலும், கர்நாடகாவிலும் முழு நேர சட்டப்படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த இரு மாநிலங்களிலும் உள்ள யதார்த்த நிலைமை என்னவென்றால், கல்லூரிக்கே செல்லாமல் சட்டப் படிப்பு படித்து பட்டம் பெறலாம். இது வெளிப்படையாக அனைவருக்கும் தெரியும் என்றாலும், யாரும் இதைக் கேள்வி கேட்பதில்லை. ஏன் கேள்வி கேட்பதில்லை என்றால், பார் கவுன்சில் ஆப் இந்தியாவின் உறுப்பினர்களாக இருப்பவர்கள்தான் இந்தக் கல்லூரிகளை மேற்பார்வை செய்து, அங்கீகாரம் வழங்கவோ, ரத்து செய்யவோ வேண்டும். அவர்களை கவனிக்க வேண்டிய விதத்தில் கவனித்தால் ஏன் கேள்வி கேட்கப்போகிறார்கள்… அப்படித்தான் இந்த ஆந்திரா மற்றும் கர்நாடகா சட்டப்படிப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன.
ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் உள்ள சட்டக்கல்லூரிகளில் “முழு நேர“ சட்டப்படிப்பு படித்த 130 ஊழியர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ளார்கள் என்பது ஒரு அதிர்ச்சிகரமான உண்மை. சென்னை உயர்நீதிமன்றத்தில் முழு நேர ஊழியர்களாக உள்ள இவர்கள் ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் எப்படி முழுநேர சட்டப்படிப்பு படித்தார்கள், என்பது, மு.க.ஸ்டாலின் எப்போது திமுக தலைவராவார் என்பதைப் போன்ற விடை தெரியாத கேள்வி.
சரி.. அவர்களுக்கு ஏதோ சட்டப்படிப்பில் ஆர்வம்… படித்துத் தொலைகிறார்கள் என்று விட்டு விடலாம் என்று பார்த்தால், தாங்கள் படித்த சட்டப்படிப்பை, தங்களின் பணிப்பதிவேட்டில் பதிவு செய்து, அந்த சட்டப்படிப்பின் அடிப்படையில், தங்களுக்கு பதவி உயர்வு வேண்டும் என்று கேட்கிறார்கள் என்றால் எத்தனை துணிச்சல் இருக்கும் இவர்களுக்கு…. ? ஆந்திராவில் சட்டம் படித்தேன் என்று இவர்கள் பட்டத்தை நீட்டியவுடன், இங்கே முழு நேர ஊழியராக இருந்து கொண்டு எப்படி ஆந்திராவில் படித்து பட்டம் வாங்கினாய் என்பதை… இதேமிட்டி… ? நூவு இக்கட காம் சேஸ்தாவு… ஈ டிகிரி ஒத்து என்று நீதிபதி எலிப்பி தர்மாராவ் சொல்லியிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யவில்லை. அந்தப் பட்டப்படிப்பை நீட்டியவர், எலிப்பி தர்மாராவின் உதவியாளர் தனஞ்செய ராவ் ஆயிற்றே…
ச்சால மன்ச்சி பணி… நேனு மீரு ப்ரமோட் சேஸ்துந்தி. என்று சொல்லி, சென்னை உயர்நீதிமன்றத்தில் முழு நேர ஊழியராக இருந்து கொண்டு, ஆந்திராவில் முழு நேர சட்டப் படிப்பு படித்து பெற்ற பட்டத்தை அங்கீகாரம் செய்து உத்தரவிட்டார்.
சென்னை உயர்நீதிமன்றத்துக்கு நீதிபதி இக்பால் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டதும் உடனடியாக இந்த அங்கீகாரத்தை ரத்து செய்தார்.
எலிப்பியோடு நெருக்கமாக இருக்கும் தனஞ்செய ராவ் ஆந்திராவில் பெற்ற பட்டப்படிப்பின் அடிப்படையில், தங்களின் பட்டப்படிப்பையும் அங்கீகாரம் செய்து பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று 130 நீதிமன்ற ஊழியர்கள் தற்போது வரிசையில் நிற்கிறார்கள். என்ன கொடுமை சரவணன் இது… ?
அடுத்த தலைமை நீதிபதி நியமிக்கப்படும் வரை, நீதிபதி எலிப்பி தர்மாராவ் அவர்கள் பொறுப்பு தலைமை நீதிபதியாக இருப்பார் என்பதால், நிர்வாகம் தொடர்பான உத்தரவுகள் அத்தனையையும் பிறப்பிக்கலாம்.
நேற்று தலைமை நீதிபதி இக்பால், கிளம்பியதும், அவசர அவசரமாக 130 ஊழியர்களின் சட்டப் படிப்பை அங்கீகாரம் செய்யும் கோப்பு தயார் செய்யப்பட்டு, திங்களன்று நீதிபதி எலிப்பி தர்மாராவின் ஒப்புதலுக்காக வைக்கப்பட இருக்கிறது என்று தெரிகிறது.
அச்சச்சோ… இப்படி சட்டவிரோதமான உத்தரவு பிறப்பிக்கப்பட இருக்கிறதே…. என்ன செய்வது…. ?
எங்கே குட்டை குழம்பும்… அந்தக் குட்டையை மேலும் நன்றாகக் குழப்பலாம் என்றுதான் ஒரு கூட்டம் அலைகிறதே… என்ன செய்வது… ?
தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் செயலாளர் புகழேந்தி, சென்னை உயர்நீதிமன்றப் பதிவாளருக்கு ஒரு புகார் கடிதம் அனுப்பியுள்ளார். அவர் அனுப்பியுள்ள அந்தப் புகார் கடிதத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் சில ஊழியர்கள் முழு நேரப் பணி செய்து கொண்டு, ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் சட்டப்படிப்பு படித்து பட்டம் பெற்றுள்ளார்கள். பார் கவுன்சில் ஆப் இந்தியா, மாலை நேர சட்டப்படிப்பை முழுமையாக ரத்து செய்து விட்ட நிலையில், இவர்கள் சட்டப்படிப்பு படித்து பட்டம் பெற வாய்ப்பில்லை. இப்படிப் பட்டம் பெற்றுள்ளவர்களை அடையாளம் கண்டறிந்து அவர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.
ஒழுங்கு நடவடிக்கை எடுக்காமல், இதற்கும் உயர்நீதிமன்றத்தை அணுகி உயர்நீதிமன்றத்துக்கு எதிராகவே உத்தரவு பெறவேண்டிய தர்மசங்கடமான நிலைக்கு என்னை ஆளாக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன் என்று பேக்ஸ் மூலமாக உயர்நீதிமன்றப் பதிவாளருக்கு ஒரு கடிதம் அனுப்பியிருக்கிறார்.
இதையும் மீறி இந்தப் பட்டப்படிப்புகள் அங்கீகாரம் செய்யப்பட்டால், புதிதாக வரப்போகும் தலைமை நீதிபதி முன் விசாரணைக்கு வரும் முதல் வழக்காக இந்த வழக்குதான் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இப்போது நாம் பாடுவோம்.
அய்யய்யய்யோ… ஆனந்தமே…..
நெஞ்சுக்குள்ளே ஆரம்பமே….
என்ன கொடுமை சரவணன் இது… ?