சவுக்கில் எப்போதுமே ஜெயலலிதா காவல்துறையை நம்பியே ஆட்சி நடத்துவார்… ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால், காவல்துறை அதிகாரிகளுக்கு கொண்டாட்டமாகப் போய் விடும், தமிழகத்தில் அதிகாரம் மிக்க வர்க்கமாகவும், மக்களை ஒடுக்கும் துறையாகவும் காவல்துறை மாறிவிடும் என்று எழுதப்பட்டு வந்திருக்கிறது. அது மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டு வருகிறது.
கடந்த புதனன்று கலெக்டர்கள் மற்றும் மாவட்ட எஸ்.பிகளுக்கான மாநாட்டின் இறுதி உரையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறார். மொத்தம் 343 அறிவிப்புகள். இவற்றில் பெரும்பாலான அறிவிப்புகள் காவல்துறை தொடர்பானவை.
வழக்கமாக நிர்வாகத்துறையிலும், காவல்துறையிலும் சீர்திருத்தங்கள், புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரில் வெளியிடப்படும். காவல்துறை குறித்த அறிவிப்புகள், காவல்துறை மானியக் கோரிக்கையின் போது வெளியிடப்படும். ஆனால், ஜெயலலிதாவுக்கு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்களை விட, ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளே உயர்ந்தவர்கள். சட்டப்பேரவை உறுப்பினர்களின் மீது ஆயிரம் குறைகளைச் சொன்னாலும், அவர்கள் நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். சட்டப்பேரவையில் அவர்கள் முன்பாக, அறிவிப்பு வெளியிடப்பட்டால்தான், அந்த அறிவிப்புகளில் ஏதாவது குறைகள் இருந்தால், விவாதிக்கப்பட்டு அவை திருத்தப்படும். தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிவிப்புகளில், சிவகாசி, கோவில்பட்டி மற்றும் காரிமங்கலத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரித் தொடக்கம், ராமநாதபுரத்தில் சூரியஒளி மின் சக்திப் பூங்கா, கொடைக்கானல் கீழ்க்குண்டாறு அணை, ராமநாதபுரம் வைகை ஆற்றில் நான்கு தடுப்பணைகள், போன்ற முக்கிய அறிவிப்புகளும், சத்துணவுக் கூடங்களுக்கு கரண்டி வாணலி வாங்குவது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
இவையெல்லாம் சட்டப்பேரவையில் வெளியிடுவதுதான் முறை. ஆனால், ஜெயலலிதாவைப் பொறுத்தவரை, சட்டப்பேரவையும், அதன் உறுப்பினர்களும், மேசையைத் தட்டி, அவரைப் பாராட்டுவதற்காகவே உருவாக்கப்பட்ட அடிமைகள். பாராட்டாதவர்கள் அடிமைகள் சங்கத்தில் சேர்த்துக் கொள்ளப்படாமல், பேசவும் வாய்ப்பு வழங்கப்படாமல் வெளியேற்றப்படுவர். அதனால்தான், சட்டப்பேரவையை ஒரு பொருட்டாகவே கருதாமல் 343 அறிவிப்புகளை அதிகாரிகள் மாநாட்டில் வெளியிட்டிருக்கிறார் ஜெயலலிதா.
அந்த 343 அறிவிப்புகளில், சில அறிவிப்புகள் மிக மிக ஆபத்தானவையும், சட்டவிரோதமானவையும் ஆகும். அந்த அறிவிப்புகள் குறித்து ஆராய்வோம்.
116. Funds will be sanctioned to District S.Ps for engaging lawyers in private cases filed against Police Personnel.
116வது அறிவிப்பு, ஒவ்வொரு மாவட்டக் கண்காணிப்பாளர்களுக்கும் நிதி ஒதுக்கப்படும். காவல்துறையினர் மீது தனிப்பட்ட புகார் கொடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டால், அவர்கள் வழக்கறிஞர்கள் வைத்து வாதாடுவதற்கு அந்த நிதி பயன்படும்.
தனிப்பட்ட வழக்கு என்றால் என்ன என்பது குறித்து பலருக்குத் தெரியாது. குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 200ன் படி, தனிப்பட்ட முறையில் ஒருவர் நீதிபதி முன்பு புகார் கொடுக்கலாம். உதாரணத்திற்கு, காவல் நிலையம் செல்கிறீர்கள். அங்கே உங்களை ஒரு காவல் ஆய்வாளர் அடித்து விடுகிறார். அவர் மீது புகார் கொடுத்தால் யாராவது நடவடிக்கை எடுப்பார்களா ? அப்படிப்பட்ட நேர்வில், பாதிக்கப்பட்ட நபர், நீதிபதி முன்பு பிரிவு 200ன் கீழ் புகார் கொடுக்கலாம். உங்கள் புகாரின் மீது விசாரணை நடத்த போதுமான ஆதாரங்கள் உள்ளன என்று நீதிபதி கருதினால், அவர் விசாரணையை நடத்துவார். வழக்கம் போல, சாட்சி விசாரணை குறுக்கு விசாரணை ஆகியவை நடைபெறும். அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் சாட்சிகளை விசாரிப்பது போல, புகார் கொடுத்தவரின் வழக்கறிஞர் விசாரிப்பார். குற்றவாளியின் தரப்பு வழக்கறிஞர் சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்வார். இதர நடைமுறைகள் மற்ற வழக்குகளைப் போலத்தான்.
இப்படி தனிப்பட்ட முறையில் தொடரப்படும் வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள், அவர்கள் அரசு ஊழியர்களாக இருந்தாலும், தங்கள் சொந்த செலவில் வழக்கறிஞர்களை வைத்துக் கொள்ள வேண்டும். காவல்துறை அதிகாரிகளால் பாதிக்கப்பட்டவர்கள், தனக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று பிடிவாதமாக இருப்பவர்கள், மிரட்டலுக்குப் பணியாதவர்கள், உறுதியாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வார்கள்.
இது போன்ற வழக்குகளில் பாதிக்கப்படும் காவல்துறை அதிகாரிகள், வழக்கறிஞர்களை அமர்த்தி தங்களை தற்காத்துக் கொள்ள, மாவட்ட எஸ்.பிக்களுக்கு நிதி வழங்கப்படுமாம். எத்தனை பெரிய அயோக்கியத்தனம் தெரியுமா இது ? ஒரு காவல்துறை அதிகாரி திமிரெடுத்து செய்யும் தவறுக்கு, பாதிக்கப்பட்டவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தால், அவருக்காக வாதாட வரும் வழக்கறிஞர்களுக்கு மக்கள் வரிப்பணத்தில் கட்டணம் செலுத்துவது என்ற ஜெயலலிதாவின் முடிவு உச்சகட்ட அயோக்கியத்தனம். உயர்நீதிமன்றத்தில், அதிகாரிகளின் தனிப்பட்ட செயல்களுக்காக வழக்கு தொடுத்து, அவர்களை பெயரிட்டு எதிர் மனுதாரராக சேர்க்கப்படும் நேர்வுகளில், அரசு வழக்கறிஞர்கள் அவர்களுக்காக வாதாட மாட்டார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகள், தனியாக, சொந்த செலவில் வழக்கறிஞர்களை வைத்துக் கொள்ள வேண்டும். உயர்நீதிமன்றத்தில் கூட இல்லாத சலுகையை காவல்துறை அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளார் ஜெயலலிதா.
காவல்துறை அதிகாரிகள், தங்களுக்கு தங்க கக்கூஸ் வேண்டுமென்றாலும், உடனடியாக கட்டித்தர உத்தரவிடும் மனநிலையில் ஜெயலலிதா இருக்கிறார். சட்டவிரோதமாக பதவியில் நீடிக்கும் ஒரு டிஜிபி காவல்துறைக்கு தலைமை வகிக்கையில், தங்க கக்கூஸ் வேண்டுமென்று அதிகாரிகள் கேட்டால் ஆச்சர்யப்படுவதற்கில்லை.
அடுத்த அறிவிப்பு, மிக மிக ஆபத்தானது.
225. Following amendments will be made to the Goondas Act
i. Instead of habitual offenders, single offence which has the propensity to disturb public order
ii. Cyber Crime
iii. Confiscation of vehicles
226. The amount for preparation of cases under Goondas Act will be increased from Rs.3,000/- to Rs. 8,000/-
குண்டர் தடுப்புச் சட்டம் என்றால், உடல் இளைப்பதற்காக அரசாங்கம் கொண்டு வந்த சட்டம் என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். குண்டர் தடுப்புச் சட்டம் என்பது ஒரு தடுப்புக் காவல் சட்டம்.
வழக்கமாக ஒரு வழக்கில், கொலை வழக்கு உட்பட, ஒரு குற்றவாளி கைது செய்யப்பட்டால், வழக்கின் தன்மையைப் பொறுத்து அதிகபட்சமாக அவரை 60 நாட்கள் காவலில் வைத்திருக்க இயலும். அந்த 60 நாட்களுக்குள் அவர் மீதான வழக்கில் புலன் விசாரணை முடிந்து, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவேண்டும். அப்படி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விட்டால், வழக்கின் தன்மையைப் பொறுத்து, அவரைத் தொடர்ந்து சிறையிலேயே வைத்திருக்க இயலும். அப்படி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யத் தவறினால், ஒரு நீதிமன்ற நடுவரே (Magistrate) அவருக்கு ஜாமீன் வழங்க இயலும்.
பெரும்பாலான வழக்குகளில், ஏறக்குறைய 95 சதவிகித வழக்குகளில் காவல்துறையினர் உரிய நேரத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வதில்லை. காவல்துறையினருக்கு இருக்கும் கடுமையான பணிப்பளுவின் காரணமாகவும், புலனாய்வில் ஏற்படும் தாமதத்தினாலும் இது நேர்கிறது. இதன் காரணமாக குற்றவாளிகள், கீழ் நீதிமன்ற ஜாமீனிலோ, உயர்நீதிமன்ற ஜாமீனிலோ வெளி வந்து விடுவார்கள்.
இப்படி குற்றவாளிகள் ஜாமீனில் வெளிவருவதைத் தடுக்கவே குண்டர் சட்டம் பயன்படுத்தப்படுகிறது.
குண்டர் சட்டத்தின் முழுப் பெயர், Tamil Nadu Prevention of Dangerous Activities of Bootleggers, Drug Offenders, Forest Offenders, Goondas, Immoral Traffic Offenders, Sand Offenders, Slum Grabbers and Video Pirates Act, 1982.
சாராயம் காய்ச்சுவோர், போதைப் பொருள் கடத்துவோர், மரம் கடத்துவோர், குண்டர்கள், விபச்சாரக் குற்றத்தில் ஈடுபடுவோர், மணல் கடத்துவோர், சேரி மக்கள் இடங்களை அபகரிப்பவர்கள் மற்றும் வீடியோ திருட்டில் ஈடுபடுபவர்கள் ஆகியோரைத் தடுப்புக் காவலில் ஒரு ஆண்டுக்கு வைப்பதற்காக இச்சட்டம் பயன்படுகிறது.
சாராயம் காய்ச்சுவோர், நில அபகரிப்பு செய்வோர், மணல் கடத்துவோரை தடுப்புக் காவலில் வைப்பதை ஏற்றுக் கொள்ளலாம். திருட்டு வீடியோ டிவிடி தயாரிப்பவர்கள் எப்படி பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர் ஆவார்கள்… ? இந்தச் சட்டத்தின் கீழ் சினிமா வீடியோ தயாரிப்பவர்களையும் கொண்டு வந்த அறிவாளியும் ஜெயலலிதாதான்.
திருட்டு வீடியோ தயாரிப்பது, சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டிய குற்றம் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால், அதற்காக….. பொது அமைதியைக் குலைத்ததாக எப்படி இதைக் கருத முடியும்… ? நியாயப்படிப் பார்க்கப்போனால், மாற்றான் போன்ற படங்களை தியேட்டர்களில் பார்த்தவர்கள் அய்யோ குய்யோ என்று அடித்துப் பிடித்துக் கொண்டு தியேட்டரை விட்டு வெளியே வருவதால்தான் பொது அமைதி குலைகிறது. தனது அரசியல்வாழ்வுக்கு அடிப்படை அமைத்துத் தந்தவர்கள் என்ற அடிப்படையில், திரையுலகம் மீது உள்ள பாசத்தால், பட அதிபர்கள் வைத்த கோரிக்கையை ஏற்று இந்த குற்றத்தையும் குண்டர் சட்டத்தில் சேர்த்தார் மனித உரிமைக் காவலர் ஜெயலலிதா.
குண்டர் சட்டத்தின் கீழ் ஒருவரை தடுப்புக் காவலில் வைப்பதற்கு, அவரை ஏன் தடுப்புக் காவலில் வைக்கிறோம் என்பதற்கான காரணத்தை அந்த ஆணையில் சொல்ல வேண்டும். அவருக்கு எதிராக என்னென்ன ஆவணங்கள் உள்ளனவோ, அத்தனை ஆவணங்களையும், அவருக்கு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தர வேண்டும். மாநகராட்சி அல்லாத மாவட்டங்களில், ஒருவரை குண்டர் சட்டத்தின் கீழ் அடைப்பதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சியர் பிறப்பிப்பார். மாநகராட்சிகளில், இந்த உத்தரவை காவல்துறை ஆணையர் பிறப்பிப்பார். அந்த உத்தரவில் கையெழுத்துப் போடும் அதிகாரி, சம்பந்தப்பட்டவரை குண்டர் சட்டத்தில் அடைப்பதற்கு போதுமான முகாந்திரம் உள்ளதா, அவர் ஜாமீனில் வெளியே வந்தால், சமூகத்திற்கு ஆபத்தா, அவருக்கு வழங்கப்பட்டுள்ள ஆவணங்கள் முழுமையாகவும், சரியாகவும் உள்ளதா என்பது போன்ற அத்தனை விபரங்களையும் சரிபார்த்த பின்னரே கையெழுத்திட வேண்டும். ஆனால், நடைமுறையில் என்ன நடக்கிறதென்றால், ஏதோ ஒரு நாயை குண்டர் சட்டத்தில் அடைக்கும் ஆவணத்தை நான் எதற்கு என் நேரத்தை செலவிட்டு படிக்க வேண்டும் என்ற மனோபாவத்திலேயே அத்தனை தடுப்பாணைகளிலும் கையெழுத்திடுகிறார்கள் அதிகாரிகள். ஒரே ஒரு அதிகாரி கூட, அந்த ஆவணங்களை முழுமையாக சரிபார்ப்பதில்லை என்று மிக மிக உறுதியாகச் சொல்ல முடியும். ஏனென்றால், மாவட்ட ஆட்சியரோ, காவல்துறை ஆணையரோ, அவர்களுக்கு உள்ள ஏராளமான பணிகளில், 400 பக்கம் இருக்கும் ஒரு ஆவணத்தை சரிபார்ப்பது என்பது நடைமுறையில் இயலவே இயலாத காரியம். இதனால்தான் பல நேரங்களில், தமிழ் மொழிபெயர்ப்பு வழங்கப்படவில்லை என்ற காரணங்களுக்கெல்லாம் குண்டர் தடுப்புச் சட்டம் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.
சிறையில் உள்ள கைதிகளை பொறுத்தவரை குண்டர் சட்டத்தைக் கண்டு அஞ்சுகிறார்கள் என்பதே உண்மை. என்ன காரணமென்றால், குண்டர் சட்டம் இல்லை என்றால், சாதாரண வழக்கறிஞரை வைத்து, ஜாமீனில் வெளியே வந்து விடலாம். ஆனால் குண்டர் சட்டம் என்றால், உயர்நீதிமன்றத்தில் மட்டும வழக்கு தாக்கல் செய்ய முடியும். குண்டர் சட்டத்திலிருந்து வெளியே வருவதற்கு, 10 ஆயிரம் முதல் 5 லட்சம் வரை கட்டணமாக வழக்கறிஞர்கள் வசூலிக்கிறார்கள். குண்டர் சட்ட வழக்குகளைக் கையாள்வதில் சென்னை உயர்நீதிமன்றத்தைப் பொறுத்தவரை நிபுணர் என்று அறியப்படுபவர் வழக்கறிஞர் பி.குமார். ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்கும் மேல், குண்டர் சட்ட வழக்குகளை கையாண்டு வருகிறார். இந்த பி.குமார்தான் தற்போது, ஜெயலலிதா மீதான பெங்களுரில் உள்ள சொத்துக் குவிப்பு வழக்கையும் கையாண்டு வருகிறார். நமது வழக்கறிஞருக்கு மேலும் பல வழக்குகள் வந்து அவர் நன்றாகச் சம்பாதிக்கட்டும் என்ற நோக்கத்தோடு ஜெயலலிதா இந்தக் குண்டர் தடுப்புச் சட்ட திருத்தத்தைக் கொண்டு வந்திருக்கிறாரா என்பது நமக்குத் தெரியாது.
மூத்த வழக்கறிஞர் பி.குமார்.
ஒரே ஒரு குற்றம் செய்தாலும், அது பொது அமைதியை குலைக்கும் என்றால், குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கலாம் என்ற திருத்தத்தைக் கொண்டு வந்திருக்கிறார் ஜெயலலிதா. இந்தத் திருத்தம் மிக மிக ஆபத்தானது. பொது அமைதி குலைந்தது என்றால் என்ன என்பதற்கு தெளிவான வரையறைகள் இல்லை. ரவுடிகளை குண்டர் சட்டத்தில் அடைக்கும் ஆணைகளில் என்ன போடுவார்கள் தெரியுமா ? 90 சதவிகித வழக்குகளில் இப்படித்தான் இருக்கும்.
“நான் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்தேன். அப்போது ஆட்டோவில் வந்த, பின்னால் அடையாளம் தெரிந்த முதலாம் எதிரி திடீரென்று என் முன்னால் வந்து, ….. த்தா…. ……………………. பையா…… பாக்கெட்டில் இருக்கும் பணத்தை எடுடா என்று கத்தியைக் காட்டி, மிரட்டினான். நான் அச்சத்தோடு பணத்தை எடுத்துக் கொடுத்தேன். எதிரியும் அவனோடு வந்தவர்களும், அருகே இருந்த பெட்டிக்கடையிலிருந்த சோடா பாட்டில்களை எடுத்து சாலையில் உடைத்தனர். பொதுமக்கள் அச்சத்தோடு சிதறி ஓடினர்” இதுதான் 90 சதவிகித குண்டர் சட்டத் தடுப்பாணைகளில் இதுதான் இருக்கும்.
“பொதுமக்கள் அச்சத்தோடு சிதறி ஓடினர்” என்ற வாசகம் எதற்கென்றால் “பொது அமைதி“ கெட்டு விட்டதாம். இப்படித்தான் குண்டர் தடுப்புச் சட்டத்தில் ஒருவரை அடைக்கிறார்கள். இவ்வாறு அடைப்பதற்கு ஒரு நபரின் மீது குறைந்தது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வழக்குகள் இருக்க வேண்டும். அந்த விதிமுறையைத்தான் தளர்த்தி, ஒரே வழக்கு இருந்தாலும் போதும் என்று மாற்றியுள்ளார் ஜெயலலிதா.
இது எவ்வளவு ஆபத்தானது என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஒரு நபரின் மீது புகார் கொடுத்து எப்ஐஆர் பதிவு செய்வதென்பது அவ்வளவு சிரமமான காரியம் அல்ல. யாரோ ஒரு அதிகாரியை பகைத்துக் கொண்டீர்கள் என்றால், வீட்டில் இருக்கும் ஒருவரை காவல்நிலையம் அழைத்து வந்து, என்ன வழக்கில் வேண்டுமானாலும் கைது செய்ய முடியும். அந்த வழக்கிலிருந்து அவர் ஜாமீனில் வெளிவருவதற்கு முன்பே, குண்டர் சட்டத்தில் அடைத்து அவரை ஒரு வருடத்திற்கு வெளிவராமல் தடுத்து வைத்து மிரட்ட வேண்டும் என்பதே இந்த திருத்தத்தின் நோக்கம்.
அடுத்த திருத்தம் மிகவும் ஆபத்தானது. சைபர் கிரைம் குற்றங்களில் ஈடுபடுவோரும், குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைக்கப்படுவர் என்ற திருத்தம். இந்தத் திருத்தமே ஜெயலலிதாவை முழுமையான பாசிஸ்டாக்குகிறது. சைபர் கிரைமில் ட்விட்டர் மற்றும் முகநூல் பயன்படுத்துபவர்கள் யாரை வேண்டுமானாலும் கைது செய்ய இயலும். 66A என்ற தகவல் தொழில் நுட்பச் சட்டம் எவ்வளவு ஆபத்தானது என்பது குறித்த விபரங்கள் ஏராளமாக விவாதிக்கப்பட்டுள்ளன. முகநூலில் நீங்கள் போட்ட ஒரு பதிவுக்காக உங்களை கைதும் செய்து, உங்களை குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைக்க வழி வகை செய்யும் சட்டத்திருத்தம், வெள்ளைக்காரன் கொண்டு வந்த ரவுலட் சட்டத்தை விடக் கொடியது.
காவல்துறையில் சேர்ந்து காக்கிச் சட்டையைப் போட்டவுடனேயே, மனித நேயத்தையும், மனித உரிமைகளையும், தங்கள் பெண்டாட்டி மற்றும் பிள்ளைகளுக்கு மட்டும் சொந்தமானது என்று குறுக்கிக் கொள்கிறார்கள் காவல்துறை அதிகாரிகள். எனக்கும், என் குடும்பத்துக்கும் மட்டுமே மனித உரிமை, மற்றவர்கள் மனிதர்களே அல்ல என்ற நினைப்பிலேயே இருக்கிறார்கள் இந்த அதிகாரிகள். இப்படிப்பட்ட அதிகாரிகள் கொடுத்த ஆலோசனையை, கண்ணை மூடிக்கொண்டு ஏற்றுக் கொண்டிருக்கிறார் ஜெயலலிதா.
அன்பார்ந்த தோழர்களே…. சைபர் கிரைம் குற்றங்களை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சேர்த்திருப்பது, இத்தனை நாளாக போற்றிப் பாதுகாத்து வந்திருக்கும் இணைய சுதந்திரத்திற்கு வந்திருக்கும் மிகப்பெரிய ஆபத்து. ஒரு சிலரைத் தவிர, மற்ற அனைவரும், இந்த இணைய சுதந்திரத்தை பொறுப்பாகவே பயன்படுத்தி வந்திருக்கிறோம். போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டிய இந்த இணைய சுதந்திரத்துக்கு மிகப்பெரிய ஆபத்தாக ஜெயலலிதாவின் இந்த அறிவிப்பு வந்திருக்கிறது.
இன்றைய பத்திரிக்கை உலகம் முழுமையாக நிறுவனமயமாகி (Corporatized) விட்டது. மற்ற அனைத்துத் தொழில்களையும் போல, லாபம் ஒன்றே குறிக்கோள் என்று பத்திரிக்கை உலகமும் மாறி விட்டது. இப்படிப்பட்ட ஒரு சூழலில், நியாய உணர்வோடு, ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று, மக்களை நேசிக்கும் ஒரு ஊடக நிறுவனம் அறுகிப் போய் விட்ட நிலையில், இணையம் மிகப்பெரிய வரமாக அமைந்துள்ளது. இன்று இணையத்தில் பல்வேறு ஊழல்களை வெளிக்கொணர முடிகிறது. அரசியல்வாதிகள், அதிகாரிகள் என்று தவறு செய்பவர்களை அம்பலப்படுத்த முடிகிறது.
இணையம் என்ற ஒன்று இல்லாவிட்டால், சர்வ வல்லமை கொண்ட அதிகாரியாக இருந்த ஜாபர் சேட் போன்ற அதிகாரிகளின் ஊழல்களை அம்பலப்படுத்தியிருக்க முடியுமா ? தமிழகத்தில் உள்ள கொள்ளைக்கார காவல்துறை அதிகாரிகளின் முகத்திரையைக் கிழிக்க முடியுமா ? இவை அனைத்தையும் சாத்தியப்படுத்தும் இணையதள சுதந்திரம்தான் இன்று இந்த அதிகாரிகளின் கண்ணை உறுத்துகிறது. வரதராஜு ஐபிஎஸ், கப்பலோட்டிய தமிழனாக ஆனால், நம்மால் எழுத முடிகிறது. நீதித்துறை நடுவர் மீன் குழம்புக்கு ஆசைப்பட்டால் நம்மால் எழுத முடிகிறது. இந்த சுதந்திரத்தைப் பறிக்க வேண்டும் என்பதற்காகவே இந்த மிரட்டல் மிரட்டும் சட்டம் கொண்டு வரப்படுகிறது.
சவுக்கு சிறையில் இருந்தபோது, கேட்டரிங் சர்வீஸ் நடத்தும் ஒரு இளம் தொழில் அதிபர் சிறைக்கு வந்தார். அவர் செய்த குற்றம், கிண்டி ரயில் நிலையத்தில் வெடிகுண்டு உள்ளதாக எஸ்எம்எஸ் அனுப்பியது. தினத்தந்தியில், வெடிகுண்டு உள்ளதாக புரளி கிளப்பியவர் கைது என்று செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அந்த நபரிடம் என்ன நடந்தது என்று கேட்டால், அன்று கிண்டி ரயில் நிலையத்தில், வெடிகுண்டு உள்ளதாக மிரட்டல் விடுக்கப்பட்டதாக செய்தி பரவியுள்ளது. இந்த நபர், தனது நண்பர்கள் கிண்டி ரயில் நிலையம் செல்லவேண்டாம் என்றும், அங்கே வெடிகுண்டு உள்ளதாக தகவல் வந்துள்ளது என்றும், குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். அவர் கேட்டரிங் சர்வீஸ் பிசினெஸ் நடத்தி வரும் ஒரு வெற்றிகரமான தொழில் அதிபர். ஏன் இப்படிச் செய்தீர்கள் என்று அவரிடம் கேட்டதற்கு, வேறு எந்த உள்நோக்கமும் இல்லை. எனக்குத் தெரிந்தவர்கள் யாரும் அங்கே சென்று சிக்கிவிடக் கூடாது என்பதற்காகத்தான் செய்தேன் என்று கூறினார்.
அவரைக் கைது செய்த காவல்துறை அதிகாரிகள், விசாரணை நடத்தி, அவரின் பின்புலத்தை விசாரித்து, உள்நோக்கத்தோடு அனுப்பினாரா அல்லது நல்ல எண்ணத்தில் அனுப்பினாரா என்பதை எளிதாகக் கண்டு பிடித்திருக்க முடியும். ஆனால் என்ன செய்தார்கள் காவல்துறையினர்… ? அந்த நபரைக் கைது செய்து, அவரது காரிலேயே புழல் சிறைக்கு அழைத்து வந்து உள்ளே தள்ளினார்கள். அவரது காரில் அழைத்து வருவதற்கு மட்டும் 10 ஆயிரம் ரூபாய் வாங்கியிருக்கிறார்கள்.
சின்மயி விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இருவரின் கதையைப் பற்றி விரிவாக விவாதித்தாகி விட்டது. அந்த விவகாரத்திலும் காவல்துறை எப்படி நடந்து கொண்டது என்பது உங்களுக்குத் தெரியும்.
இந்த இரு சம்பவங்களிலும் கைது செய்யப்பட்டவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்து ஒரு வருட தடுப்புக் காவலில் வைக்க வகை செய்கிறது ஜெயலலிதா தற்போது கொண்டு வந்துள்ள திருத்தம். இந்தத் திருத்தம் நாளை பேஸ்புக்கிலும், ட்விட்டரிலும், இணையதளத்திலும் அரசை விமர்சித்து எழுதுபவர்களை குறிவைத்தே கொண்டு வரப்பட்டிருக்கிறது. குறிப்பாக, காவல்துறை அதிகாரிகளின் ஊழல்கள் அம்பலப்படுத்தப்படுவதே இந்த அதிகாரிகளின் கோபத்துக்கு காரணமாக அமைந்துள்ளது. எங்களைப் பற்றி விமர்சித்தால் சிறை செல்லத் தயாராகுங்கள் என்ற எச்சரிக்கை ஒலியே இந்த சட்டத்திருத்தம். (இதெல்லாம் பத்தாது என்று சிலர் நீதிபதிகளையும் விமர்சித்து எழுதுகிறார்கள். அவர்களுக்கெல்லாம் “கடல்லையே இல்லையாம்” என்பதுதான் பதில்)
இந்த சட்டத் திருத்தத்தையெல்லாம் நாம் முகநூலிலும், ட்விட்டரிலும் எழுதும் விமர்சனங்களைப் படித்து விட்டு ஜெயலலிதா எடுத்து வருகிறார் என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். ஜெயலலிதா நமது எம்.ஜி.ஆரைத் தவிர வேறு எதையும் படிக்க மாட்டார். அதுவும், மாதத்துக்கு ஒரு முறை படித்தால் பெரிய விஷயம். இப்படிப்பட்ட மோசமான திட்டங்களையெல்லாம் ஜெயலலிதாவுக்கு ஆலோசனையாக சொல்லி உத்தரவு பெறுபவர்கள் அதிகாரிகள் மட்டுமே. அதிலும் காவல்துறை அதிகாரிகளே இதற்கு முழுப் பொறுப்பு.
குண்டர் சட்டத்தில் அடைக்கப்படுபவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்யும் சட்டத்திருத்தமும் மிக மிக ஆபத்தானது. வெளிப்படையாகப் பார்க்கும்போது, அரிசிக் கடத்தலில் ஈடுபடும் லாரிகள் போன்ற வாகனங்களை பறிமுதல் செய்வதற்காக என்று சொன்னாலும், இந்தப் பிரிவும் துஷ்பிரயோகம் செய்வதற்கு மட்டுமே பயன்படும். சின்மயி புகாரின் மீதான கைது விவகாரத்தையே எடுத்துக் கொண்டால், கைது செய்யப்பட்ட இருவரும் கார் வைத்திருக்கிறார்கள் என்ற வைத்துக் கொள்ளலாம்.
இவர்களின் காரைப் பறிமுதல் செய்ய காவல்துறையினர் என்ன செய்வார்கள் தெரியுமா ? “நான் புரசைவாக்கத்திலிருந்து பெசன்ட் நகருக்கு எனது சொந்தக் காரில் சென்றேன். காற்று வாங்கலாம் என்று பெசன்ட் நகர் கடற்கரையில் காரை நிறுத்தி லேப்டாப்பை திறந்து பார்த்ததும் சின்மயி எழுதியிருந்த ட்வீட் என்னை கடுமையாக கோபப்படுத்தியது. காரின் பின் சீட்டில் அமர்ந்து சின்மயியின் தாயார் குறித்து ட்விட்டரில் தரக்குறைவாக எழுதினேன்” என்று ஒரு ஒப்புதல் வாக்குமூலம் அளித்ததாக இவர்களே எழுதிக் கொள்வார்கள். எழுதிக் கொண்டு, எதிரி ட்வீட் செய்யப் பயன்படுத்தப்பட்ட கார் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது என்று ஆவணங்களைத் தயார் செய்து காரை பறிமுதல் செய்வார்கள். ஏண்டா வௌக்கெண்ணைகளா…. ட்வீட் செய்வதற்கு மொபைல் போன் போதுமே, கார் எதற்கு என்று எந்த நீதிபதியும் கேட்கமாட்டார். ராஜன் ட்வீட் செய்யும்பொழுது அணிந்திருந்த ஜட்டி மகஜர் மூலம் கைப்பற்றப்பட்டது என்று ஆவணத்தை சமர்ப்பித்தால், நீதிபதிகள் கண்ணை மூடிக்கொண்டு கையெழுத்திடுவார்கள். நீதிபதிகளுக்கு இந்த ஆவணங்களையெல்லாம் படிப்பதற்கு எங்கே நேரம் இருக்கிறது… அலுவலக உதவியாளன் மீனை ஒழுங்காக கழுவுகிறானா… கருவாடை சரியாக வறுக்கிறானா என்பதில் அல்லவா அவர்கள் கவனம் இருக்கிறது….
அந்தக் கார் சம்பந்தப்பட்டவர்களிடம் திருப்பி வழங்கப்படுவதற்குள் ஒரு மாமாங்கம் ஆகி விடும். அதற்குள் அந்தக் காரில் என்ஜின் உட்பட அத்தனையும் திருடப்பட்டிருக்கும். வெறும் கூடு மட்டும் நின்று கொண்டிருக்கும். அந்தக் கூட்டையும் பறிமுதல் செய்வதற்காகவே, இப்படி ஒரு திருத்தம் கொண்டு வரப்பட்டிருக்கிறது.
அடுத்ததாக குண்டர் சட்டத்தில் ஒரு நபர் அடைக்கப்படுகையில் அந்த ஆவணங்களைத் தயாரிப்பதற்கு வழங்கப்படும் தொகை 3 ஆயிரத்திலிருந்து 8 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்திலிருந்து 50 ரூபாய் கிடைக்க வேண்டும் என்றாலும், அடித்துப் பிடித்துக் கொண்டு, அந்த 50 ரூபாய்க்காக நாய் போல அலைவது அரசு ஊழியர்களின் இயல்பு. அதிலும், காவல்துறையினரைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். நடைபாதைகளில் கடை வைத்திருப்பவர்களிடம் 10 ரூபாய் மாமூல் வாங்கும் காவலர்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள். சாலையில் போக்குவரத்து விதிகளை மீறும் நபர்களிடம் எப்படி வசூல் செய்கிறார்கள் என்பதையும் பார்த்திருப்பீர்கள்.
இப்படிப்பட்ட காவல்துறையினரிடம் குண்டர் சட்டத்தில் ஒருவரை அடைத்தால், அந்த தயாரிப்புச் செலவுகளுக்கு 8 ஆயிரம் ரூபாய் என்றால் என்ன ஆகும் என்பதை யோசித்துப் பாருங்கள். ஒரு சாதாரண அடிதடி வழக்கில் ஒருவன் கைதானால் கூட, இவனை குண்டர் சட்டத்தில் அடைத்தால், நமக்கு 8 ஆயிரம் கிடைக்குமே என்று அடிப்படையிலேயே இனி காவல் நிலையங்களில் வேலை நடக்கும். இந்த 8 ஆயிரம் ரூபாய்க்காக, எத்தனை பேர் தடுப்புக் காவலில் அடைக்கப்படப் போகிறார்களோ என்பதை நினைத்தாலே அச்சமாக இருக்கிறது. இந்த குண்டர் சட்ட தடுப்பாணைகள், நீதிமன்றத்தால் தூக்கி எறியப்படும் என்பதைப் பற்றியெல்லாம் இந்த காவல்துறையினருக்கு கவலையில்லை நமக்கு 8 ஆயிரம் ரூபாய் கிடைக்கப்போகிறது என்பதை மட்டுமே கவனத்தில் வைத்திருப்பார்கள்.
தடுப்பாணை தயாரிக்க 8 ஆயிரம் ரூபாய் வழங்கும் ஜெயலலிதா, நீதிமன்றம் குண்டர் சட்டத் தடுப்பாணைகளை ரத்து செய்தால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை என்று அறிவிக்கச் சொல்லுங்கள் பார்ப்போம். ஒரு பயல் குண்டர் சட்ட ஆணையை தயாரிக்க மாட்டான். ஏனென்றால் இவர்களுக்கு தாங்கள் தயாரிக்கும் அத்தனை தடுப்பாணைகளும் ஜோடிக்கப்பட்டவை என்பது நன்கு தெரியும்.
தமிழகத்தில் மிக மோசமான மனித உரிமை மீறல்கள் நடப்பதற்கு ரத்தினக் கம்பளம் விரித்துள்ளார் ஜெயலலிதா.
சில காவல்துறை அதிகாரிகளிடம் பேசியபோது, இந்தச் சட்டங்கள் பொறுப்போடு பயன்படுத்தப்படும். தவறாகவோ, முறைகேடாகவோ பயன்படுத்தப்படாது என்று கூறுகிறார்கள்.
ஜெயலலிதாவின் வரலாறு என்ன என்பதை தமிழகம் 1991 முதல் பார்த்து வருகிறது. 1991-1995 முதல் ஜெயலலிதா ஆட்சியில் என்ன நடந்தது என்பதை தமிழகம் அறியும். சமீபத்தில் காரைக்காலில் ஒரு பெண்ணின் மீது ஆசிட் வீசிய விவகாரத்தைக் கேள்விப்பட்ட தமிழகமே கொதித்துப் போனது… தமிழகமெங்கும் கடுமையான கண்டனங்கள் எழுந்தன. ஆனால், ஜெயலலிதாவின் பேச்சைக் கேட்காத காரணத்தால், ஒரு ஐஏஎஸ் அதிகாரியின் மீதே ஆசிட் ஊற்றப்பட்டது இதே ஜெயலலிதா ஆட்சியில்தான். அந்த ஆசிட் வீச்சு சம்பவத்தில் ஜெயலலிதாவுக்கு நேரடியாகத் தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் இல்லையென்றாலும், சந்திரலேகா மீது ஆசிட் வீசும் அளவுக்கு யாருக்குக் கோபம் இருந்தது என்பதை நாடறியும்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் விஜயன் என்பவர், நமக்கு நேரெதிரான கொள்கைகளை உடையவர் என்றாலும் தன் கொள்கையில் பிடிவாதமாக இருப்பவர். இட ஒதுக்கீடு தவறான கொள்கை என்று கருதுபவர். ஒரு ஜனநாயக நாட்டில் அப்படி ஒரு கொள்கை வைத்திருக்க அவருக்கு உரிமை உண்டு. அந்த உரிமையை நாம் மதிக்க வேண்டும். அவர் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார் என்பதற்காக, ரவுடிகளை அனுப்பி அவரை வெட்ட வைத்தவர் இதே ஜெயலலிதாதான். ஜெயலலிதாவின் ஊழலுக்கு எதிராக வழக்கு தொடுத்தார் என்பதற்காக, மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம் அவர் அலுவலகத்திலேயே ரவுடிகளால் வெட்டப்பட்டதும் இதே ஜெயலலிதா ஆட்சியில்தான்.
தடா என்ற கொடுங்கோல் சட்டம் 1991ல் கொண்டு வரப்பட்டது. அந்த ஆள்தூக்கிச் சட்டத்தை துஷ்பிரயோகம் செய்து, தன் எதிரிகளைக் கூட இல்லை, தன்னை எதிர்த்துப் பேசியவர்கள் அனைவரையும் தடா சட்டத்தின் கீழ் கைது செய்தவர் இதே ஜெயலலிதாதான். தடா சட்டத்தின் கீழ், சுப்புலட்சுமி ஜெகதீசன், பழ.நெடுமாறன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். இன்று ஜெயலலிதாவுக்கு எதிராக வீர வசனம் பேசும் குஞ்சாமணி, இந்த தடா சட்டத்திற்கு பயந்துதான் ஜெயலலிதாவை இடஒதுக்கீட்டை பாதுகாத்த வீராங்கனை என்று, அவருக்கு வீரவாள் பரிசளித்தார். அந்த வீரவாள் போயஸ் தோட்டத்து சமையலறையில், வெங்காயம் நறுக்குவதற்குக் கூட பயன்படாது.
2001ல் மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட மற்றொரு கொடுங்கோல் ஆள்தூக்கிச் சட்டம் போடா சட்டம். இந்த போடா சட்டத்தின் கீழ், சுப.வீரபாண்டியன், பழ.நெடுமாறன் வைகோ உள்ளிட்டவர்கள் ஒன்றரை ஆண்டுக்கும் மேலாக சிறையில் இருந்தனர். உச்ச நீதிமன்றம் தலையிட்ட பின்னரே அவர்களால் சிறையிலிருந்து வெளி வர முடிந்தது.
ஆகையால், ஜெயலலிதா ஆட்சியில் சட்டத்தின் ஆட்சி நிலைநாட்டப்படும் என்பது போன்ற, மொக்கையான வாதங்களை குழந்தை கூட நம்பாது. ஜெயலலிதாவின் வரலாறே பாசிசம்தான். காவல்துறையை வைத்து, மக்களை அடக்கி ஒடுக்க வேண்டும் என்று நினைப்பதில், ஜெயலலிதா ஹிட்லருக்கோ, முசோலினிக்கோ சற்றும் சளைத்தவர் கிடையாது.
இந்தத் திருத்தங்களின் மூலம் இணைய தள சுதந்திரத்தை கட்டுப்படுத்தி விடலாம் என்று ஜெயலலிதா நினைப்பாரேயானால், தவறு செய்கிறார். ஒரு சிலரை மிரட்டலாம். ஒரு சிலரைக் கைது செய்யலாம். ஒரு சிலரை குண்டர் சட்டத்தில் அடைக்கலாம். ஆனால், இந்த மிரட்டல்களால் கருத்துச் சுதந்திரத்தை பறித்து விடலாம், எதிர்க்கருத்துக்களை ஒடுக்கி விடலாம் என்று ஜெயலலிதா நினைப்பாரேயானால் … …. ….. அது நிறைவேறாத பகல்கனவே.
கடவுளாக வழிபடப்பட்ட இந்திரா காந்தியையே தூக்கி எறிந்தவர்கள் இந்திய மக்கள். ஓரளவுக்கு நியாயமான ஆட்சி தந்த கருணாநிதியை எந்தக் காரணமும் இல்லாமல் 2001ல் தூக்கி எறிந்தவர்கள் தமிழக மக்கள். காவல்துறையை வைத்து, மீண்டும் தமிழக மக்களை அடக்கி ஒடுக்க நினைக்கும் ஜெயலதாவுக்கு, சரியான பாடத்தை வழங்க மக்கள் தவற மாட்டார்கள். இதை ஜெயலலிதா உணரவில்லை என்றால், 2014ல் இந்தத் தவறுகளுக்கான பலனை அனுபவிப்பார். 2009ல் நாற்பதும் நமதே என்று பேசிய ஜெயலலிதாவுக்கு நாற்பதிலும் நாமம் போட்டவர்கள், எம்மக்கள். தன்னை ஜெயலலிதா திருத்திக் கொள்ளவில்லையென்றால் 2014 தேர்தலிலும், நாற்பதிலும் நாமம் உறுதி.
மேலும் சில அறிவிப்புகள் குறித்து அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.