அலிபாபாவும் நாற்பது திருடர்களும் கேள்விப்பட்டிருப்பீர்கள். அது என்ன ஆயிரம் திருடர்கள்… ? நாற்பது திருடர்கள் இருந்தாலே நாடு தாங்காது… ஆயிரம் அல்லது அதற்கு மேற்பட்ட திருடர்கள் இருந்தால்… என்ன ஆகும்… ?
ஆயிரத்துக்கும் மேற்பட்ட திருடர்களை உருவாக்கி வைத்து, அதன் தலைவராக இருந்து வருபவர் வேறு யாருமல்ல… மகாத்மா காந்தியை விட புனிதர் என்றும், மகாபாரதக் கர்ணனை விட கொடை வள்ளல் என்றும் தனக்கென்று ஒரு பிம்பத்தைக் கட்டியமைத்து, ஊரையே ஏமாற்றி வரும் சைதை துரைசாமிதான் அந்த அலிபாபா.
யார் இந்த சைதை துரைசாமி ? கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த சைதை துரைசாமி ஒரு சாதாரண நபராகத்தான் வாழ்கையைத் தொடங்குகிறார். சென்னை வந்த துரைசாமி, சைதாப்பேட்டை பகுதியில் ஒரு சிறு ரவுடியாக ஃபார்ம் ஆகிறார். இவரது ரவுடித்தனம் வீடுகளைக் காலி செய்வதில்தான் தொடங்குகிறது. சைதாப்பேட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் வீட்டை காலி செய்வதில் நிபுணர் என்ற பெயரை எடுக்கிறார். ஆரம்பகாலத்தில் காவல்துறையினரை எப்படி கைக்குள் வைத்திருப்பது என்ற விபரங்கள் சரி வரத் தெரியாததால், அவர்களுக்கு மாமூல் கொடுக்காமல் இருக்கிறார். யாரடா அது.. நமக்கு மாமூல் கொடுக்காமல் ரவுடித்தனம் செய்வது என்று வெகுண்டெழுந்த காவல்துறையினர், சைதை துரைசாமியை பிக்பாக்கெட் அடித்ததாக கைது செய்துள்ளதாக ஒரு தகவல், அதிமுக வட்டாரங்களிலேயே உலா வருகிறது. இதந்குப் பிறகுதான் காவல்துறையினருக்கு மாமூல் கொடுத்து தன் வசமாக்கினார் சைதை.
சென்னையில் துரைசாமி ஒரு ரவுடியாக ஃபார்ம் ஆவதற்கு முன், அவருக்கு பணம் கொடுத்து உதவி செய்தவர், ஈரோட்டைச் சேர்ந்த தொழில் அதிபர் ஆறுமுகம் என்பவர். சோழி ஒயின்ஸ், சோழி காம்ப்ளெக்ஸ் போன்ற சொத்துக்களுக்குச் சொந்தமானவர் இந்த ஆறுமுகம். அதிமுகவில் சேர்ந்த துரைசாமி, தனக்கு பெரிய செல்வாக்கு இருப்பது போல காண்பித்துக் கொண்டு, இந்த ஆறுமுகத்திடம் தொடர்ந்து வசூல் செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
வீடு காலி செய்யும் தொழிலில் போதுமான வருமானம் இல்லாததால் காலியாக உள்ள பழைய இடங்களை அபகரித்து, அதை விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபடத் தொடங்குகிறார். நில அபகரிப்பிலும் வீடு காலி செய்வதிலும் தலைச்சிறந்த ரவுடி என்று பெயரெடுத்த துரைசாமிக்கு எம்.ஜி.ஆரின் அறிமுகம் கிடைக்கிறது. எம்.ஜி.ஆரின் அறிமுகம் கிடைத்ததும், அவரிடம் நல்ல பெயர் வாங்கி, எம்.எல்.ஏ ஆகிறார் சைதை துரைசாமி. இதன் பிறகு, 1987ல் எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு, அதிமுக ஜெயலலிதா மற்றும் ஜானகி தலைமையில் இரண்டாகப் பிரிகிறது. அப்போது ஜெயலலிதாவின் அணிக்கு எதிராக, ஜானகி அணிக்கு ஆதரவு தருகிறார் துரைசாமி. ஜானகி தலைமையில் செயல்பட்ட அதிமுக அணியின் அலுவலகமே சைதை துரைசாமியின் இல்லத்திலிருந்துதான் செயல்பட்டது.
1989ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில், அதிமுக இரண்டாகப் பிரிந்து அதன் சின்னம் இரட்டை இலைக்கு போட்டி போட்டதால், சின்னம் முடக்கப்பட்டு, இரண்டு அணிகளும், இரட்டைப் புறா, மற்றும் சேவல் சின்னத்தில் போட்டியிட்டன. அந்தத் தேர்தலில் ஜானகி அணி 2 இடங்களும், ஜெயலலிதா அணி 27 இடங்களிலும் வெற்றி பெற்றன. திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இதையடுத்து, ஜெயலலிதா மற்றும் ஜானகி தலைமயிலான அணிகள் இணைந்தன. இந்த இணைப்பை சைதை துரைசாமி சற்றும் விரும்பவில்லை. இதனால் அரசியலை விட்டே ஒதுங்கி இருந்தார்.
1991ல் ராஜீவ் கொலையினால் ஏற்பட்ட அனுதாப அலையில், அதிமுக பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்றது. அந்த வெற்றியை தக்கவைத்துக் கொள்ளத் தெரியாத ஜெயலலிதா தனது அகம்பாவத்தினால், பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை சந்தித்தார்.
இதையடுத்து 1996ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில், அதிமுக படுதோல்வி அடைந்தது. இந்தத் தேர்தலுக்கு ஜெயலலிதாவே முழுப்பொறுப்பேற்க வேண்டும் என்று அதிமுகவின் மூத்த தலைவர்கள் குரல் எழுப்பினர். எதிர்ப்புக் குரல் என்பது ஜெயலலிதாவுக்கு எட்டிக்காய் என்பதால், உடனடியாக அதற்கு முந்தைய ஆட்சியில் அமைச்சர்களாக இருந்த அரங்கநாயகம், எஸ்.டி.சோமசுந்தரம், கண்ணப்பன், முத்துசாமி போன்றவர்களை நீக்கினார் ஜெயலலிதா. ஜெயலலிதாவின் ஊழல்களைச் சுட்டிக்காட்டி பதவிக்கு வந்த திமுக அரசு, ஜெயலலிதாவின் மீது சராமாரியாக ஊழல் வழக்குகளை பதிவு செய்ய பூர்வாங்க வேலைகளைத் தொடங்கியிருந்தது. ஜெயலலிதா பலவீனமாக இருந்த இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, உள்ளே நுழைந்தார் சைதை துரைசாமி. அது வரை அரசியலில் இருந்து ஓய்வு பெற்று ஒதுங்கி இருந்தவர், அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவர்களோடு சேர்ந்து போட்டி அதிமுகவை தொடங்கினார்.
போட்டி அதிமுகவை தொடங்கி நாங்கள்தான் உண்மையான அதிமுக என்று அறிவித்து, ஜெயலலிதாவை அதிமுகவிலிருந்து நீக்குவதாக அறிவித்தனர். அதிமுகவின் வங்கிக் கணக்கை முடக்க நடவடிக்கை எடுத்தனர். அதிமுகவின் இரட்டை இலைச் சின்னத்தை முடக்கவும் டெல்லிக்கு சென்று தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்தனர். இந்த நடவடிக்கைகளை முன்னின்று நடத்தியவர் சைதை துரைசாமி.
சைதை துரைசாமி நடத்திய அதிமுகவை மக்கள் ஏற்கவில்லை. ஜெயலலிதாவே உண்மையான அதிமுக என்பது, 1998ல் நடந்த தேர்தலில் நிரூபணம் ஆனது. இதையடுத்து மீண்டும் அரசியலில் இருந்து ஒதுங்கினார் துரைசாமி.
ஒதுங்கியே இருந்த துரைசாமிக்கு மீண்டும் 2006ல் அரசியல் ஆசை வந்தது. எப்படியாவது சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று கடும் முயற்சியை எடுக்கிறார். ஆனால், சைதை துரைசாமியின் கடந்த கால நடவடிக்கைகளைக் கருத்தில் கொண்டு, அவருக்கு அந்த வாய்ப்பை வழங்க ஜெயலலிதா மறுக்கிறார். 2006ல், தனக்கு அதிமுகவில் சீட் கிடைக்கவில்லை என்பதால், பாட்டாளி மக்கள் கட்சியிடம் சென்று தனக்கு அந்த சீட்டை ஒதுக்குமாறு பேசியவர் சைதை துரைசாமி.
2006 தேர்தலில் தனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றதும், வேறு நல்ல திருட்டுத் தொழிலாக தேர்ந்தெடுக்கலாம் என்று சைதை துரைசாமி தேர்ந்தெடுத்த தொழில்தான் ஐஏஎஸ், ஐபிஎஸ் பயிற்சி மையம் என்று தொடங்கப்பட்ட மனிதநேய அறக்கட்டளை. இந்த அறக்கட்டளைக்கு மூளையாக இருந்து செயல்பட்டவர்கள், முன்னாள் உள்துறைச் செயலாளர் பூர்ணலிங்கம் ஐஏஎஸ், அபுல் ஹஸன் ஐஏஎஸ் மற்றும் அலெக்சாண்டர் ஐபிஎஸ். எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் எம்.எல்.ஏவாக இருந்தபோதே இந்த அதிகாரிகளோடு சைதை துரைசாமிக்கு தொடர்பு உண்டு. பின்னாளில் சைதை துரைசாமி கிழக்கு கடற்கரைச் சாலையில் 200 ஏக்கர் நிலத்தை அபகரித்து கபளீகரம் செய்ததில் பின்னணியாக இருந்து செயல்பட்டவர்கள், இந்த அதிகாரிகள். அலெக்சாண்டர், தான் ஓய்வு பெறும்வரை, சர்வ வல்லமை படைத்த அதிகாரியாக விளங்கினார். அப்படிப்பட்ட அதிகாரி, சைதை துரைசாமிக்கு பின்புலமாக இருக்கையில், நில அபகரிப்பு செய்வதை யார் தடுக்க முடியும் ?
இந்த மூன்று அதிகாரிகளும் ஓய்வு பெற்றதும், வேலையில்லாத ஆண்டிகள் போல உட்கார்ந்து யோசித்ததில் உருவான திட்டம்தான் மனிதநேய அறக்கட்டளை. இந்த அறக்கட்டளைக்கு ஆலோசனைக் குழும உறுப்பினர்களாக இந்த மூன்று அதிகாரிகளும், முன்னாள் பல்கலைக்கழக துணை வேந்தர் வா.செ.குழந்தைசாமியும் நியமிக்கப்படுகின்றனர்.
இந்த மனிதநேய அறக்கட்டளையில் முக்கியப் பொறுப்பில் சட்ட ஆலோசகராக தான் மரணமடையும் வரையில் செயல்பட்டவர் முன்னாள் நீதிபதி எஸ்.சம்பந்தம். இந்த சம்பந்தம், 1996ல், திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதியாக இருந்து, ஜெயலலிதாவையும், சசிகலாவையும் கதற வைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. சம்பந்தத்தின் இந்த செய்கைக்கு கைமாறாக, கருணாநிதி 2000ம் ஆண்டில், மனித உரிமை ஆணையத்தின் தலைவராக சம்பந்தத்தை நியமித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த சம்பந்தத்தை தனது மனித நேய அறக்கட்டளைக்கு சட்ட ஆலோசகராக நியமித்தார் சைதை துரைசாமி.
மனிதநேய அறக்கட்டளையைத் தொடங்கி, ஏழை மாணவர்களுக்கு இலவசமாக போட்டித் தேர்வுகளில் பயிற்சி அளித்து, அதன் மூலம் இழந்த தனது செல்வாக்கை தூக்கி நிறுத்த வேண்டும் என்று முயற்சி செய்தார் துரைசாமி. இந்த அறக்கட்டளையின் ஆலோசனைக் குழு உறுப்பினர்களாக அதிகாரிகள் இருக்க சம்மதித்ததன் பின்னணியைக் கேட்டால் ரொம்ப அற்பமானது. பதவியில் இருந்து ஓய்வு பெற்ற இந்த அதிகாரிகளுக்கு வாகனமும், ஓட்டுனரும் யார் கொடுப்பார்கள். பதவியில் இருக்கும்போது, அரசு வாகனம் கிடைக்கும்… பார்ப்பவரெல்லாம் சல்யூட் அடிப்பார்கள். ஆனால் ஓய்வு பெற்ற பிறகு, இந்த வசதிகள் கிடைக்காதல்லவா ? உயர் அதிகாரிகள் ஓசி வாகனமும், ஓட்டுனரும் இல்லையென்றால் செத்துவிட மாட்டார்களா… ? அதற்காகத்தான் இந்த அதிகாரிகள், சைதை செலவில் வாகனத்தை வாங்கிக்கொண்டு, துரைசாமி நடத்திய பயிற்சி மையத்தில், ஆலோசனைக் குழு உறுப்பினர்களாக இருந்து வருகின்றனர். எவ்வளவு அற்ப மனிதர்களாக இருக்கிறார்கள் பாருங்கள்… ?
2006ம் ஆண்டில், இலவசம் என்று தொடங்கப்பட்ட இந்த பயிற்சி மையம் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. இலவசம் என்றாலே, அந்த இடத்தில் ஒழுங்காக பயிற்சி அளிக்கமாட்டார்கள் என்று பரவலாக மாணவர்கள் மத்தியில் செய்தி பரவியதே அதற்குக் காரணம். டிசம்பர் 2006ல் தொடங்கப்பட்ட இந்த மையத்தில் முதன் முறையாக ஐஏஎஸ் தேர்வுப் பயிற்சிக்காக சேர்ந்தவர்கள் வெறும் 50 பேர் மட்டுமே.
இந்த மையத்தை எப்படியாவது பிரபலமாக்க வேண்டும் என்ற நோக்கத்தில், முக்கிய பிரமுகர்களை அழைத்து மாணவர்களிடம் ஊக்கம் கொடுக்கும் வகையில் பேச வைத்து, அதை பத்திரிக்கையில் செய்தியாக வரவைத்துப் பார்த்தார். ஆனால் எதிர்ப்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இவ்வாறு சைதை துரைசாமி சிரமப்பட்டுக் கொண்டிருந்த வேளையில்தான் வாராது வந்த மாமணியாக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக காசி விஸ்வநாதன் நியமிக்கப்பட்டார். காசி விஸ்வநாதன் ஒரு கரைவேட்டி கட்டாத திமுக பிரமுகர். 2007ல் ஓய்வு பெறும்போத காசி விஸ்வநாதன் முதலமைச்சரின் செயலாளர் பதவியில் இருந்தார். ஓய்வு பெற்ற ஒரு சில நாட்களிலேயே டிஎன்பிஎஸ்சியின் தலைவராக கருணாநிதியால் நியமிக்கப்பட்டார்.
காசி விஸ்வநாதன் ஐஏஎஸ்
இந்தக் காசி விஸ்வநாதன் டின்பிஎஸ்சியின் தலைவராக நியமிக்கப்பட்ட பிறகுதான், துரைசாமியின் கவனம், டிஎன்பிஎஸ்சியின் பக்கம் திரும்பத் தொடங்குகிறது. அதன் பிறகு, துரைசாமிக்கு தொடர்ந்து சுக்கிர திசைதான். நடப்பதோ திமுக ஆட்சி. ஆனால், அதிமுக பிரமுகரான சைதை துரைசாமி நடத்தும் பயிற்சி மையத்தில் படித்தவர்கள், டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் எளிதாக தேர்ச்சியடைவார்கள்.
அது வரை பயிற்சி மட்டும் அளித்துக் கொண்டிருந்த மனிதநேய மையம், காசி விஸ்வநாதன் டிஎன்பிஎஸ்சி தலைவராக பதவியேற்ற பிறகு, தாறுமாறாக விளையாடத் தொடங்கியது. அந்த காலகட்டத்தில் மனித நேய மையத்தில் பயிற்சி எடுத்த மாணவர்கள், ஒவ்வொரு தேர்வாணைய உறுப்பினருக்கும், நேர்முகத்தேர்வில் முழு மதிப்பெண் போடுவதற்கு ஒன்று முதல் இரண்டு லட்சம் வரை தர வேண்டும் என்று நேரடியாகவே பேசி அவரே பணத்தை வாங்கினார் என்கிறார்கள்.
இப்படி பணம் கொடுத்த மாணவர்களில் பெரும்பாலானோர், போட்டித் தேர்வுகளில் தேர்ச்சியடைந்த விபரம் போட்டித் தேர்வு எழுதுவோரிடையே பரவத் தொடங்குகிறது. இச்செய்தி பரவத் தொடங்கியதும், மனிதநேய அறக்கட்டளையில் சேர்ந்து படித்தால், நிச்சயம் அரசுப் பதவி என்ற நிலை உருவாகிறது. மனிதநேய அறக்கட்டளைக்கு முன்பாகவே, பல ஆண்டுகளாக பயிற்சி நிலையங்களை நடத்தி வரும் பல நிறுவனங்கள், டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்களின் தொடர்பு இல்லாததால், வேறு வழியின்றி, முதல் நிலைத் தேர்வு, மெயின் தேர்வு முடிந்ததும், நேர்முகத் தேர்வுக்கு, துரைசாமியின் பயிற்சி மையத்திற்கு அனுப்பத் தொடங்கினர்.
ஒரு கட்டத்தில் பணம் கொடுத்து, தேர்வாணைய உறுப்பினர்களை சரி செய்யக் கூட அவசியம் இல்லாமல் போய் விட்டது. நேர்முகத் தேர்வின் போது, எங்கே படித்தீர்கள் என்று தேர்வாணைய உறுப்பினர் கேட்டால், சைதாப்பேட்டையில் என்று சொன்னாலே, அவருக்கு முழு மதிப்பெண்கள் வழங்கப்படும் நிலை உருவானது. துரைசாமியின் இந்த மையம், தேர்வாணைய உறுப்பினர்களுக்கும் மிகுந்த வசதியாகப் போய் விட்டது. 50 லட்சம், ஒரு கோடி என்று, ராசாத்தி அம்மாள், அழகிரி என்று கட்டணம் செலுத்தி உறுப்பினர்களானவர்கள், என்னிடம் வாருங்கள், இவ்விடத்தில் சகாய விலையில், செய்கூலி, சேதாரம் இல்லாமல், நியாயமான முறையில், அரசு வேலை வழங்கப்படும் என்றா விளம்பரம் கொடுக்க முடியும் ? மனித நேய அறக்கட்டளை போன்ற ஒரு மையத்தோடு தொடர்பு ஏற்படுத்திக் கொண்டால், மொத்தமாக தொகை கைக்கு வந்து விடும் அல்லவா ?
காசி விஸ்வநாதனுக்குப் பிறகு டிஎன்பிஎஸ்சி தலைவரான செல்லமுத்து
இப்படி நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வந்த மனிதநேய அறக்கட்டளையின் நிறுவனர் துரைசாமிக்கு, மாணவர்களின் தொல்லை அதிகமாகத் தொடங்கியது. எப்படிப்பட்ட தொல்லையென்றால், துரைசாமியை நேரில் பார்த்து, ஒரு முறை பேசி விட்டால், உறுதியாக பணம் கொடுத்து வேலை வாங்கி விடலாம் என்ற செய்தி பரவி விட்டதால், வரும் அத்தனை மாணவர்களும், சேர்மேனை சந்திக்க வேண்டும் என்று பிடிவாதமாக நிற்கத் தொடங்கினர். இது 2010 காலகட்டம். இந்தக் கட்டத்தில் நாம் நேரடியாக இதைச் செய்ய முடியாது என்பதை துரைசாமி உணர்கிறார். இது தவிரவும், தேர்தல் நெருங்குவதால், தேர்தலில் இம்முறை சீட் வாங்க ஜெயலலிதாவை அணுகுவதற்கும் முயற்சிகள் எடுத்து வருகிறார் துரைசாமி.
இந்த இடத்தில்தான் இருவர் உள்ளே நுழைகிறார்கள். இதே போல போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையம் நடத்தும், ரேடியன் ஐஏஎஸ் மற்றும், அப்போல்லோ பயிற்சி மையத்தைச் சேர்ந்த ராஜபூபதி மற்றும் ஷ்யாம் ஆகியோருக்கு துரைசாமியோடு தொடர்பு ஏற்படுகிறது.
இந்த பயிற்சி மையங்கள் நடத்துவதில் பெரிய சிரமம் என்னவென்றால், ஏகப்பட்ட மையங்கள் இருப்பதால், மாணவர்களை வளைத்து, தங்களுடைய பயிற்சி மையத்தில் சேர வைப்பது மிக மிக சிரமம். சின்ன பயிற்சி மையங்களில் மாணவர்கள் சேர மாட்டார்கள். மனிதநேய அறக்கட்டளையின் பயிற்சி மையத்தில் மாணவர்கள் ஆயிரக்கணக்கில் குவிந்ததால், இந்த இரண்டு பயிற்சி மையங்களின் நிறுவனர்களுக்கு துரைசாமியோடு தொழில் கூட்டு அமைப்பது எளிதாகவும், வசதியாகவும் இருந்தது. இந்த தொழில் கூட்டு ஒப்பந்தத்தின் படி, மனிதநேய அறக்கட்டளை மையத்தின் பயிற்சி வகுப்புகளுக்கு, ஆசிரியர்கள், இதர உதவிகளை அப்போல்லோ மற்றும் ரேடியன் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் செய்வார்கள். பதிலுக்கு, மனிதநேய அறக்கட்டளையின் ஒரு பகுதி மாணவர்களை இவர்களின் மையத்துக்கு அனுப்ப வேண்டும். இந்த ஒப்பந்தம் அனைவருக்கும் வசதியாகப் போய் விட்டது.
மனிதநேய அறக்கட்டளைக்கும் டிஎன்பிஎஸ்சிக்கும் இருந்த நெருக்கம் வெளியானது, 2010ல் நடந்த மெயின் தேர்வுகளின்போது. பல ஆண்டுகளாக டிஎன்பிஎஸ்சி மெயின் தேர்வுகளுக்கென்று, ஒரு வடிவம் இருந்தது. 2009ம் ஆண்டில், பல தேர்வர்கள், டிஎன்பிஎஸ்சிக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் பல வழக்குகளைத் தொடுத்திருந்தனர். எங்கள் மீதா வழக்கு தொடுக்கிறீர்கள்… பாருங்கள் என்ன செய்கிறோம் என்று, அந்த ஆண்டு தேர்வில், கேள்வித்தாள் வடிவத்தை தலைகீழாக மாற்றுகிறார்கள்.
அது வரை, மெயின் தேர்வில், 5 கேள்விகள் 15 மதிப்பெண்களுக்கு, 5 கேள்விகள் 20 மதிப்பெண்களுக்கு என்று விரிவான விடை எழுத வேண்டிய வகையில் இருக்கும். ஆனால், அந்த ஆண்டு 40 கேள்விகள 1 மதிப்பெண். 3 மதிப்பெண்களுக்கு சில கேள்விகள், 5 மதிப்பெண்களுக்கு சில கேள்விகள் மொத்தம் 104 கேள்விகள். தலைகீழ் மாற்றம். பல ஆண்டுகளாக தேர்வுக்காக பயிற்சி எடுத்து, தயாரித்து வந்தவர்களுக்கு அந்த மாற்றம் ஏற்படுத்திய அதிர்ச்சியை வார்த்தையில் வடிக்க இயலாது. ஒரு பயிற்சி மையம் நடத்தி வரும் ஒருவர் சொன்னது… அவரிடம் 35 வயதான ஒருவர் இந்தத் தேர்வுக்காக சிறப்பாக தயாரிப்பு வேலை செய்திருந்தார். அவருக்கு அதுவே இறுதி வாய்ப்பு. ஏற்கனவே க்ரூப் 4ல் பணிபுரிந்து வந்த அவர், அந்த வேலையை ராஜினாமா செய்து விட்டு, க்ரூப் 1 தேர்வுக்காக தயாரித்து வந்தார். அந்த தேர்வு அவருக்கு ஏற்படுத்திய அதிர்ச்சியை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது என்றார் அந்த நண்பர். அவரை என்ன சொல்லி ஆறுதல் படுத்தவது என்றே எனக்குத் தெரியவில்லை என்றார். விரிவான பதில் எழுத வேண்டிய கேள்விகளை எதிர்ப்பார்த்து, நன்கு பயிற்சி எடுத்து தேர்வெழுத சென்றவருக்கு, தலைகீழ் மாற்றங்கள் ஏற்படுத்தும் அதிர்ச்சியில் இருந்து மீளவே அரை மணி நேரத்திற்கும் மேல் ஆகி விடும். அந்த அதிர்ச்சியில் தெரிந்த விடைகள் கூட மறந்து விடும்.
ஆனால் அந்த புதிய கேள்வி முறையின்படி, மனித நேய அறக்கட்டளையில் மட்டும் மூன்று மாதிரித் தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளன என்பதுதான் அதிர்ச்சிகரமான உண்மை. தமிழகத்தில் யாருக்குமே தெரியாத அந்த மாற்றம், மனித நேய பயிற்சி மையத்தின் மாணவர்களுக்கு மட்டும் தெரிந்தது, மிகப்பெரிய ஆச்சர்யத்தை உண்டு பண்ணியது. இது மனிதநேய பயிற்சி மையத்தில் சேர்ந்தால், அரசு வேலை உறுதி என்று நிலவி வந்த கருத்தை உறுதிப்படுத்தியது. அந்தத் தேர்வில் மனிதநேய அறக்கட்டளையில் படித்த மாணவர்கள் 68 பேர் தேர்ச்சி பெற்றனர். மொத்தம் உள்ள 128 பணியிடங்களில் ஒரே பயிற்சி மையத்திலிருந்து 68 பேர் தேர்ச்சியடைந்தது இயற்கைக்கு மாறான நிகழ்வு.
அதன் பிறகு, மனிதநேய அறக்கட்டளையின் பயிற்சி மையங்கள், தமிழகமெங்கும் விரிவடைந்தன. தொடக்க காலத்தில் வெறும் 50 பேர் சேர்ந்த பயிற்சி மையத்தில் ஒரு தேர்வுக்கு 15 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பிக்கத் தொடங்கினர். தமிழகமெங்கும் 10 கிளைகள் உருவாக்கப்பட்டன. சின்ன பயிற்சி மையங்கள் வைத்து நடதியவர்கள், மனித நேய அறக்கட்டளையில் முழு நேர ஊழியர்களாகவும், இடைத் தரகர்களாகவும் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.
போட்டித் தேர்வில் மோசடியை அரங்கேற்றிய பின்னர், அடுத்த கட்டத்திற்கு நுழைந்தார் துரைசாமி. அடுத்த கட்டம் என்னவென்றால், போட்டித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு நல்ல பதவியை வாங்கித் தருவது. உதாரணத்திற்கு, நீங்கள் க்ரூப் 2 தேர்வில் வெற்றி பெறுகிறீர்கள். உங்களுக்கு தலைமைச் செயலகத்தில் உதவிப் பிரிவு அலுவலர் (Assistant Section Officer) பணி கிடைக்கிறதென்றால், அதை பெரும்பாலானோர் விரும்பமாட்டார்கள். ஏனென்றால் வருமானம் இல்லாத பதவி அது. அதற்குப் பதிலாக, அதே க்ரூப் 2 தேர்வில் உள்ள நகராட்சி ஆணையர் (Municipal Commissioner) பதவி கிடைத்தால் செல்வச் செழிப்போடு வாழலாம் என்பதால் இது போன்ற பதவிகளுக்கு போட்டி அதிகம். வெற்றி பெற்றவர்களை அழைத்து, பதவிகள் ஒதுக்கப்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பாகவே, உங்களுக்கு இன்ன பதவி ஒதுக்கப்பட்டள்ளது என்று அறிவிப்பார்கள். சம்பந்தப்பட்டவர்கள் எனக்கு இந்தப் பதவி வேண்டும் என்று கூறினால், அதற்கு ஒரு தொகை வசூல் செய்யப்பட்டு உரிய பதவி பெற்றுத் தரப்படும்.
இதிலும் ஒரு கூடுதல் திருட்டுத் தனம் செய்யப்பட்டது. உதாரணத்திற்கு உங்களுக்கு க்ரூப் 1 தேர்வில், மாவட்ட பதிவாளர் (District Registrar) பணி கிடைத்திருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்களேன். உங்களை அழைத்து, உங்களுக்கு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் (District Employment Officer) ஒதுக்கப்பட்டுள்ளது என்று கூறுவார்கள். சார்… எப்படியாவது எனக்கு வேறு பதவி பெற்றுத் தாருங்கள் என்று கூறியதும் அவரிடம் 10 முதல் 12 லட்ச ரூபாய் வசூல் செய்யப்பட்டு அவர் கேட்ட பதவியை பெற்றுத் தந்ததாக கூறுவார்கள்.
கடந்த க்ரூப் 1 தேர்வில் ஒரு கால்நடை மருத்துவர் இதே போல மாவட்ட பதிவாளராக தேர்ச்சியடைந்தார். அவர் எஸ்.சி பிரிவைச் சேர்ந்தவர். அவரிடம் உங்களுக்கு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் பதவி ஒதுக்கப்பட்டுள்ளது என்று கூறியதும், அவர் 12 லட்ச ரூபாயை துரைசாமியிடம் கொடுக்கிறார். அவருக்கு தன் செல்வாக்கை பயன்படுத்தி மாவட்டப் பதிவாளர் வேலை பெற்றுத் தந்ததாக கூறினார் துரைசாமி. ஆனால் உண்மையில், அந்த மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் பதவி, எம்.பி.சி பிரிவுக்கானது. இந்த கால்நடை மருத்துவர் கேட்டாலும், அந்தப் பதவியை ஒதுக்க இயலாது. இதுதான் துரைசாமியின் தந்திரம்.
தற்போது என்ன நிலைமை என்றால், போட்டித் தேர்வுகள் என்றால், அதற்கு பயிற்சி அளிக்கும் ஒரே மையம் மனிதநேய அறக்கட்டளை மட்டுமே என்ற நிலை உருவாகி விட்டது. தற்போது துரைசாமி இந்த பயிற்சி மையத்தின் நிர்வாகத்தில் பெரிய அளவில் தலையிடுவது இல்லை. அப்போல்லோ பயிற்சி நிறுவனத்தின் ஷ்யாம் மட்டுமே முழுமையாக இதை நிர்வகிக்கிறார். ஷ்யாம், தற்போது இந்த தொழிலை விரிவு படுத்தியிருக்கிறார்.
உதாரணத்துக்கு நீங்கள் ஒரு பயிற்சி மையம் நடத்துகிறீர்கள் என்றால், உங்கள் மையத்தில் படித்து ஒருவர் க்ரூப் 1 தேர்வில் பெற்றி பெறுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர், மனிதநேயம் பயிற்சி மையத்தில் படித்தேன் என்று விளம்பரப்படுத்த ஒப்புக் கொண்டால், ஒரு தேர்வருக்கு 10 ஆயிரம் ரூபாய் ஷ்யாம் உங்களுக்கு கொடுப்பார். க்ருப் 2 தேர்வுக்கு இது 5 ஆயிரம். விஏஓ தேர்வுக்கு 3 ஆயிரம் என்ற வகையில் தற்போது வசூல் செய்யப்படுகிறது.
துரைசாமியின் பயிற்சி மையத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட நீதிபதிகள்
கூடுதலாக ஷ்யாம், மற்ற பயிற்சி மையங்களை தொடர்பு கொண்டு, வகுப்புக்கு மாணவர்களை அனுப்புகிறேன். ஒரு மாணவருக்கு 500 ரூபாய் கொடுங்கள். குறைந்தபட்சம் 400 முதல் 500 மாணவர்களை அனுப்புகிறேன் என்று பேரம் பேசி வருகிறார். இது போக, தனியார் தங்கும் விடுதிகள் வைத்திருப்பவர்களிடமும் பேரம் பேசி, படிக்கும் மாணவர்களை அந்த விடுதியில் தங்க வைப்பதற்கு தலைக்கு இவ்வளவு என்று பேரம் மனித நேய அறக்கட்டளையால் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஊழல், முறைகேடு, மோசடி போன்ற விவகாரங்களையெல்லாம் விலக்கி விட்டுப் பார்த்தால், ஏதோ துரைசாமி ஒரு நல்ல பணியை செய்து வருகிறாரே என்று தோன்றும். அவரைக் குறை சொல்லாதீர்கள்…. குறைந்தது 200 பேருக்காவது, தங்கும் இட வசதியோடு படிக்க வைக்கிறாரே என்று துரைசாமி தரப்பினர் வாதிடக் கூடும்.
ரமணா திரைப்படம் பார்த்திருப்பீர்கள். அதில் விஜயகாந்த் ஏசிஎஃப் ஆன்டி கரப்ஷன் போர்ஸ் என்ற ஒரு படையை உருவாக்கி, அதன் மூலம் ஊழலை ஒழிப்பதாக வரும். சைதை துரைசாமியும் ஒரு டிசிஎஃப் வைத்திருக்கிறார். இது துரைசாமி கரப்ஷன் போர்ஸ் (Duraisamy corruption force) துரைசாமி ஊழல் படை. துரைசாமியின் பயிற்சி மையத்தில் படித்தவர்களில் பெரும்பாலானோரை, தனது அடிமைகளாகவே மாற்றி வைத்திருக்கிறார் துரைசாமி. அரசியல் அறிவோடு, விஷயங்களை அலசி ஆராய்ந்து பார்க்கும் சிலரைத் தவிர, பெரும்பாலானோர், துரைசாமியை கடவுளாகவே வழிபடுகின்றனர்.
ஏற்கனவே சொன்ன கால்நடை மருத்துவருக்கு மாவட்டப் பதிவாளர் பதவி வாங்கித் தருவதற்காக துரைசாமி பெற்ற தொகை 12 லட்சம். மாவட்டப் பதிவாளர் பதவி கிடைத்ததும், 2 லட்சத்தை துரைசாமி அந்த கால்நடை மருத்துவரை அழைத்துத் திருப்பிக் கொடுத்தார். என்ன சார்… என்று கேட்டதற்கு, டிஎன்பிஎஸ்சியில் ஒரு உறுப்பினர் பணம் வாங்கவில்லை என்று கூறி விட்டார். அந்த கால்நடை மருத்துவர்….. உடனே துரைசாமி காலில் விழுந்தார். சார்… உங்களைப் போல ஒரு நேர்மையான மனிதரை பார்க்கவே இயலாது. உங்களால்தான் தமிழகத்தில் குறிப்பாக சைதாப்பேட்டையில் மழை பெய்கிறது என்ற ரேஞ்சுக்கு பெரிய ஐஸாக வைத்து விட்டு வந்தார். கால்நடை மருத்துவம் படித்த இந்த முட்டாளுக்கு, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் பணியிடம் எம்.பி.சிக்கு ஒதுக்கப்பட்டது, இவர் பெற்ற மதிப்பெண்ணுக்கு இயல்பாகவே மாவட்டப் பதிவாளர் பதவி கிடைத்திருக்கும் என்பது உறைக்கவேயில்லை. இவரைப் போன்ற அடிமைகளை தமிழகமெங்கும் உள்ள பல்வேறு அரசுத் துறைகளில் உருவாக்கி வைத்திருக்கிறார் துரைசாமி. இவர்கள் துரைசாமியின் அடிமைகள். துரைசாமி கேட்டால், இவர்கள், அரசு ரகசியத்தை கண்ணை மூடிக் கொண்டு எடுத்து துரைசாமியிடம் கொடுத்து விடுவார்கள்.
முதன் முதலில் ஐஏஎஸ், ஐபிஎஸ் பயிற்சி மையமாகவே மனித நேய அறக்கட்டளை தொடங்கப்பட்டது என்பது நினைவிருக்கும். இந்தத் தேர்வில் தேர்ச்சியடைபவர்களையும் வளைத்துப் போடவதற்கு துரைசாமி பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளார். மனிதநேய அறக்கட்டளையில் படிக்காமல், வெளி பயிற்சி மையங்களில் படித்து, ஐஏஎஸ் தேர்ச்சியடைந்த இரண்டு அதிகாரிகளை துரைசாமி அழைத்தார். எங்கள் மாணவர்களுக்கு உங்கள் தேர்வு அனுபவங்களை சொல்லுங்கள் என்று கூறினார். இவர்களும், மாணவர்களுக்கு உதவலாமே என்று செல்கிறார்கள். அவர்களிடம், நீங்கள்தான் இந்த நாட்டையே தூக்கி நிறுத்தப்போகிறீர்கள், நீங்கள் ஜனநாயகத்தின் தூண் என்று ஏகப்பட்ட பில்டப் கொடுத்திருக்கிறார். இவர்களைப் போல துரைசாமியை சந்திக்கச் செல்லும் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற மற்ற தேர்வர்களுக்கு உங்களுக்கு டெல்லி செல்வதற்கு விமான டிக்கெட் எடுத்துத் தருகிறேன், ஒரு த்ரீ பீஸ் சூட் எடுத்துத் தருகிறேன் என்று தனது லஞ்ச லாவணியை பாடுவது துரைசாமியின் வழக்கம் என்று கூறுகிறார்கள். துரைசாமியை சந்தித்த இரண்டு அதிகாரிகளும் புத்திசாலி அதிகாரிகள். சம்பந்தம் இல்லாமல் இவன் எதற்கு நம்மை இந்தத் தாங்கு தாங்குகிறான் என்று சந்தேகப்பட்டு அளவோடு பேசி விடை பெறுகிறார்கள், ஆனால் அந்த இரண்டு அதிகாரிகளுக்கும் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. சைதையின் வீச்சு சைதாப்பேட்டையோடு முடிந்து விட்டது என்று நினைத்திருந்தார்கள். ஆனால் உண்மை அதுவல்ல… ….
இரண்டு அதிகாரிகளும் பயிற்சிக்காக மசூரி பயிற்சி மையத்தில் உள்ளார்கள். அப்போது அந்த மையத்தில், இந்தியா டே என்ற நிகழ்ச்சி நடக்கிறது. ஒவ்வொரு மாநிலத்தைச் சேர்ந்தவர்களும், தங்கள் மாநிலத்தின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் கலை நிகழ்ச்சியோ, அல்லது வேறு ஏதாவதோ செய்ய வேண்டும் என்று அறிவிப்பு. இதையடுத்து ஒவ்வொரு மாநிலத்தைச் சேர்ந்தவர்களும், தங்கள் மாநிலத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், ரங்கோலி கோலம், நடனம், கலை நிகழ்ச்சிகள் என்று செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த இரண்டு அதிகாரிகளும், கலை நிகழ்ச்சிக்கான இறுதிக்கட்ட பயிற்சியில் இருக்கையில் திடீரென்று அவர்களுக்கு அழைப்பு. முதல் தளத்திற்கு சென்று பார்த்தால், காஞ்சி காமாட்சியம்மன் கோயிலை அப்படியே சினிமா செட்டாகப் போட்டிருக்கிறார்கள். தமிழகத்திலிருந்து வரவழைக்கப்பட்ட கரகாட்ட கோஷ்டியினர் நடனமாடிக் கொண்டிருக்கின்றனர். தமிழகத்தில் இருந்து தேர்வான அதிகாரிகள் ஒவ்வொருவரும் தலா 1000 ரூபாய் போட்டு, 29 ஆயிரம் வசூல் ஆகியிருந்தது. இந்தத் தொகையில் எப்படி இவ்வளவு ஆடம்பரமாக செய்ய முடியும் என்று கேட்டால், மற்ற அதிகாரிகள், அய்யாதான் கொடுத்தார் என்று கை காட்டுகிறார்கள். அவர்கள் கை காட்டிய இடத்தில் பார்த்தால், சைதை துரைசாமி தனது நயவஞ்சக புன்னகையை வீசிக் கொண்டிருக்கிறார். இரண்டு அதிகாரிகளும் கடும் எரிச்சலடைந்து பணத்தை பெற்ற மற்ற அதிகாரிகளிடம் விசாரித்தால், துரைசாமியிடம் 50 ஆயிரம் பெற்ற விபரத்தை சொல்லியிருக்கிறார்கள். கடும் எரிச்சலடைந்த இரண்டு அதிகாரிகளும், கடுமையாக சத்தம் போட்டு, பணத்தை திருப்பிக் கொடுக்கச் சொல்லியிருக்கிறார்கள். சரி என்று சொன்ன மற்ற அதிகாரிகள், பணத்தை திருப்பிக் கொடுத்தார்களா, இல்லை ஐயா கோபித்துக் கொள்வார் என்று திருப்பிக் கொடுக்காமல் இவர்களே கபளீகரம் செய்து விட்டார்களா என்பது குறித்த விபரங்கள் இல்லை. ஆனால் நிச்சயம் திருப்பிக் கொடுத்தார்கள் என்பதற்கான ஆதாரங்கள் இல்லை.
2007 முதல் ஒவ்வொரு ஆண்டும், துரைசாமி மசூரி சென்று கரகாட்டம் ஆடி வருவதாக உயர் அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர்.
பயிற்சிக்காக, மசூரிக்கு செல்லும் அத்தனை அதிகாரிகளுக்கும், மத்திய அரசு முழுமையான தொகையை அளிக்கும். ஆனால், துரைசாமி இவர்களுக்கான விமான டிக்கெட்டை எடுத்துக் கொடுத்து, இவர்களை போலிப் பயணப்பட்டியல் தயாரிக்க சொல்லிக் கொடுத்து, பணியில் சேரும் நாள் முதலாகவே ஊழல் அதிகாரிகளாக இவர்களை மாற்றுகிறார். துரைசாமியின் பயிற்சி மையத்தில் படிக்காத அதிகாரிகளாக இருந்தாலும், தேர்வில் வெற்றி பெற்றதும், அவர்களை அழைத்து, மேலே சொன்ன இரண்டு அதிகாரிகளுக்கு விமான டிக்கெட் எடுத்துத் தருகிறேன் என்று சொன்னது போல, மற்றவர்களுக்கு எடுத்துக் கொடுத்து, துரைசாமி கரப்ஷன் போர்ஸில் சேர்த்து விடுவார் துரைசாமி. அந்த இரண்டு அதிகாரிகளைப் போல, சுயமரியாதையோடு இந்த லஞ்சத்தை மறுக்கும் அதிகாரிகள் வெகு குறைவு. துரைசாமியிடம் கை நீட்டி, அதன் மூலம், துரைசாமி கரப்ஷன் போர்ஸில் உறுப்பினராகும் அதிகாரிகள், இன்று இந்தியா முழுவதும் மட்டுமல்லாமல், இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகளாக (Indian Foreign Service) பணியாற்றி வருகிறார்கள். தமிழகமெங்கும் துரைசாமி கரப்ஷன் போர்ஸ் உறுப்பினர்கள், 5 ஆயிரத்திற்கும் மேல் உள்ளார்கள்.
இந்த துரைசாமி கரப்ஷன் போர்ஸ், சைதை துரைசாமியை இந்தியாவிலேயே சக்தி வாய்ந்த நபராக மாற்றியிருக்கிறது. காவல்துறையிலும், பத்திரிக்கை துறையிலும் இருப்பவர்களுக்கு தெரியும். தகவல் என்பது எவ்வளவு முக்கியம் என்பது. அரசுத் துறைகளில் நடக்கும் விவகாரங்களைப் பற்றிய தகவல்கள் தெரிந்தால், ஒரு நல்ல பத்திரிக்கையாளர், அற்புதமான செய்திகளை வெளியிட முடியும். பல்வேறு ஊழல்களை வெளிக்கொணர முடியும். ஆனால், ஒரு திருட்டு அரசியல்வாதிக்கு இந்தத் தகவல்கள் தெரிந்தால், அவர் தன்னையும், தன் குடும்பத்தையும் மேம்படுத்திக் கொள்வதற்கே அதைப் பயன்படுத்துவார். அப்படிப்பட்டவர்தான் இந்த துரைசாமி.
சென்னை மாநகராட்சியின் மேயரானதும் துரைசாமியின் வசூல் களை கட்டுகிறது. சென்னை மாநகரப் பொறுத்தவரை, அதிமுகவில் தனது எதிரிகள் அத்தனை பேரையும் ஒழித்து விட்டார் துரைசாமி. இன்று துரைசாமியைப் பகைத்துக் கொண்டால், சென்னை அதிமுகவில் இருக்க முடியாது என்கிற நிலைமையை உருவாக்கி விட்டார். இவரைக் கண்டு பலரும் அஞ்சுகிறார்கள்.
எந்த ஊடகத்திலும், துரைசாமிக்கு எதிராக ஒரு வரிச் செய்தியைக் கூட கொண்டு வர முடியாது. அத்தனை ஊடகங்களையும் வளைத்துப் போட்டிருக்கிறார் துரைசாமி. இது திமுக ஊடகங்களுக்கும் பொருந்தும். சர்வ வல்லமை படைத்த சக்ரவர்த்தியாக உருவாகியிருக்கிறார் துரைசாமி. தனது இந்த வலிமையை, சென்னை நகரில் உள்ள கட்டிட உரிமையாளர்கள், பள்ளி உரிமையாளர்கள், ஓட்டல் உரிமையாளர்கள் ஆகியவர்களிடம் வசூலிக்கப் பயன்படுத்தி வருகிறார்.
தற்பொது சென்னை நகரில் உள்ள தனியார் பள்ளிகள் அனைத்துக்கும் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் இடிக்கப்படப் போவதாக மாநகராட்சியின் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்தத் தனியார் பள்ளியின் உரிமையாளர்கள் துரைசாமியைப் பார்த்து கட்ட வேண்டியதை கட்ட வேண்டும் என்று இவரது தொண்டர் அடிப்பொடி கடும்பாடி மூலமாக செய்தி அனுப்பப் பட்டுள்ளது. பள்ளிகளிடமிருந்து மட்டும் இது வரை 120 கோடி வசூலாகியிருப்பதாக கூறப்படுகிறது. கேஎப்சி, மெக் டொனால்ட்ஸ் போன்ற பன்னாட்டு உணவு விடுதிகளும், பெரிய ஹோட்டல்களும், திடீர் சோதனை நடத்தப்படும் என்ற அடிப்படையில் மிரட்டல் மற்றும் வசூலுக்கு உள்ளாகியிருக்கின்றன. விதிகளை மீறிக் கட்டியுள்ள கட்டிடங்களுக்கும், குறிப்பாக அண்ணா நகர் சாந்தி காலனியில் பல கோடி ரூபாய் வசூல், நடைபெற்று வருகிறது.
சென்னை வேளச்சேரியில் 18 ஆயிரம் சதுர அடி பரப்பில் புரட்சித் தலைவி அம்மா திருமண மண்டபம் என்ற ஒன்றைத் தொடங்கி, அதில் ஏழைகளுக்கு இலவச திருமணம் என்று அறிவித்து, அதை ஜெயலலிதாவை வைத்து திறக்க வைத்தார் துரைசாமி. அந்த திருமண மண்டபத்துக்கான அனுமதி பெறுகையில், குடிசைத் தொழில் பயிற்சி மையம் நடத்துவதற்கு என்றும், கீழ் தளத்தில் வணிக வளாகம் அமைக்க வேண்டும் என்றும் 5 ஆயிரம் சதுர அடியில் கட்டிடம் கட்டப் போவதாகவும் அனுமதி பெற்றார் துரைசாமி. ஆனால் 18 ஆயிரம் சதுர அடியில், விதிமுறைகளை மீறி மண்டபம் கட்டி, அதை ஜெயலலிதாவை வைத்தே திறக்கச் செய்தார் துரைசாமி. இது துரைசாமியின் சாமர்த்தியத்துக்கு மற்றொரு உதாரணம்.
துரைசாமிக்கு தொந்தரவு தருபவர்களோ, அல்லது அவரை பகைத்துக் கொள்பவர்களோ, ஓரங்கட்டப்படுவார்கள் அல்லது ஒழித்துக் கட்டப்படுவார்கள். சைதை துரைசாமியின் நயவஞ்சக திட்டத்துக்கு இடையூறாக இருந்தவர், உதயச்சந்திரன் ஐஏஎஸ். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைத்தில் நடந்த ஊழல்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்ததும், அதில் பல்வேறு சீர்திருத்தங்களைக் கொண்டு வந்ததற்கும் உதயச்சந்திரன் வகித்த பங்கு சிறப்பானது. லஞ்ச ஒழிப்புத் துறை, டிஎன்பிஎஸ்சியின் அத்தனை உறுப்பினர்கள் மற்றும் தலைவர்கள் மீது வழக்கு பதிவு செய்த பிறகும் கூட, துரைசாமியின் ஏஜென்டுகளாகவே தொடர்ந்து செயல்பட்டு வந்தனர். க்ரூப் 1 தேர்வுகளில், நேர்முகத் தேர்வுகளின் போது, சைதாப்பேட்டையில் படித்தேன் என்றால், அந்த தேர்வருக்கு முழு மதிப்பெண்கள் வழங்குவது என்ற வழக்கம் தொடர்ந்து நடைபெற்று வந்தது. நேர்முகத் தேர்வை முழுமையாக வீடியோ பதிவு செய்யும் நடைமுறையை கொண்டு வந்தார் உதயச்சந்திரன். இதன் காரணமாக, ஒரு உறுப்பினர், ஒரு தேர்வருக்கு முழுமையான மதிப்பெண்கள் வழங்கினால், அந்த வீடியோ பதிவோடு ஒப்பிட்டு, அந்த உறுப்பினரின் மதிப்பெண்களை கேள்விக்குள்ளாக்க முடிந்தது. தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பதவிகளை வழங்குவதில் கலந்தாய்வு முறையைக் கொண்டு வந்தார் உதயச்சந்திரன். இவரின் இந்த முயற்சிகளுக்கு தேர்வாணைய தலைவர் நட்ராஜ் முழு ஒத்துழைப்பு நல்கினார்.
இவையெல்லாம் துரைசாமியின் கண்களையும், காதுகளையும் உறுத்த, ஜெயலலிதாவிடம் சொல்லி, உதயச்சந்திரனை, அவரது பணி மூப்புக்கு பொறுந்தாத, அதை விடக் கீழான தேயிலை தொடர்பான பணியில் நியமித்தார் ஜெயலலிதா. நட்ராஜ் எவ்வளவோ முயன்றும், அவரால் இந்த மாறுதல் உத்தரவை ரத்து செய்ய முடியவில்லை. துரைசாமியின் செல்வாக்கு அத்தகையது. தற்போது துரைசாமியின் வசூல் வேட்டைக்கு ஒத்துழைக்காத, கார்த்திகேயன் என்ற ஐஏஎஸ் அதிகாரியையும், சென்னை மாநகராட்சியிலிருந்து தூக்கியடித்த பெருமை துரைசாமியையே சேரும்.
எல்லோருக்கும் எழக் கூடிய ஒரு கேள்வி…. ஜெயலலிதா ஏன் துரைசாமியைப் போன்ற ஒரு கபட வேடதாரியை, அதுவும், ஜெயலலிதாவை அதிமுகவை விட்டு நீக்கிய ஒரு நபருக்கு இத்தனை ஆதரவு அளிக்கிறார் என்பதுதான்….
ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு உதவிகள் செய்து, அவர்களை எப்படி வளைக்கிறாரோ, அதே போலத்தான் ஜெயலலிதாவையும் வளைத்துள்ளார் துரைசாமி. ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமாருக்கு, தீபக், தீபா என்று இரண்டு பிள்ளைகள் உண்டு. கடந்த 15 ஆண்டுகளாக இவர்களுக்கு பணம் கொடுத்து இவர்களைப் பார்த்துக் கொள்வது சைதை துரைசாமிதான். இந்த அடிப்படையில்தான், துரைசாமி, தன்னை கட்சியை விட்டு நீக்கியவர் என்பதையும் மறந்து, 2011 தேர்தலில் துரைசாமிக்கு அதிமுக சார்பில் போட்டியிட இடம் கொடுத்தார் ஜெயலலிதா.
கடந்த ஆண்டு, சசிகலா உள்ளிட்ட மன்னார்குடி மாபியாவை ஜெயலலிதா போயஸ் தோட்டத்திலிருந்து விரட்டியடித்த பிறகு, ஜெயலலிதாவை தனிமை மிகவும் வாட்டியது. அந்த நேரத்தில், அவரது அண்ணன் பிள்ளைகளைப் பற்றி அவரிடம் கூறி, ஜெயலலிதாவின் அபிமானத்தைப் பெற்றார் துரைசாமி. வெளிப்படையாக தன் அண்ணன் பிள்ளைகளோடு உறவாட, ஜெயலலிதாவின் ஈகோவும் தடுத்தது, மன்னார்குடி மாபியாவும் தடுத்தது. அதே நேரத்தில் பாசமும் விடவில்லை. ஜெயலலிதாவும் மனிதர்தானே…. அந்த நேரத்தில் கச்சிதமாக காய் நகர்த்திய துரைசாமி, ஜெயலலிதாவுக்கு தவிர்க்க முடியாத ஒரு நபராகி விட்டார். இதுவே ஜெயலலிதா துரைசாமியின் அட்டகாசங்களை தொடர்ந்து அனுமதித்துக் கொண்டிருப்பதன் மர்மம்.
ஆனால், துரைசாமி ஒரு கடைந்தெடுத்த நயவஞ்சகமான அரசியல்வாதி என்பதை உணர மறுக்கிறார். துரைசாமியிடம் உள்ள, துரைசாமி கரப்ஷன் போர்ஸ் மூலமாக, துரைசாமி எதை நினைத்தாலும் சாதிக்க முடியும் என்பதை உணர மறுக்கிறார். இப்படி ஒரு நயவஞ்சகமான நபரிடம், இத்தனை அதிகாரங்கள் குவிவது, எப்போதுமே நல்லதல்ல. அது நாளை ஜெயலலிதாவுக்கே ஆபத்தாக முடியும். இதை ஜெயலலிதா உடனடியாக உணர்ந்து, துரைசாமியின் வாலை ஒட்ட நறுக்கினால் மட்டுமே, அவருக்கும் விடிவு. தமிழகத்துக்கும் விடிவு. அப்படி ஜெயலலிதா செய்யத் தவறினாரேயானால், அதற்கான கடுமையான விலையை ஜெயலலிதா கொடுக்க வேண்டியிருக்கும்.
Na admission podalanu irukan sir…..!
Intha pathivai parkkum varai pala kelvikal thondri kondu irunthathu tharppothu adhil thelivadainthen….mikka nandri… unmaiyai urakka sollungal….