இன்று தேசிய வளர்ச்சிக் கழகக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக டெல்லி சென்ற ஜெயலலிதா, கூட்டம் தொடங்கிய 10வது நிமிடத்தில் தன் பேச்சுக்கு இடையூறு செய்யும் விதமாக, மணியடித்ததால், தன் பேச்சை முழுவதுமாக படித்ததாக கருதிக் கொள்ளுங்கள் என்று எரிச்சலோடு கூறிவிட்டு வெளிநடப்பு செய்தார்.
இந்தியாவின் ஒட்டு மொத்த வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு 1952ம் ஆண்டு, உருவாக்கப்பட்டதே தேசிய வளர்ச்சிக் குழு. இந்தக் குழுவின் தலைவராக பிரதமர் இருப்பார். 1950ம் ஆண்டு உருவாக்கப்பட்ட திட்டக் குழுவின், திட்டங்களில் மாநிலங்களின் பங்கேற்பை அதிகப்படுத்துவதற்காகவும், மாநிலங்களின் உரிமைகளை பாதுகாத்து, தேசிய வளர்ச்சியில் அவர்களை ஒருங்கிணைப்பதற்காகவும் ஏற்படுத்தப்பட்டது. திட்டக்குழு வடிவமைக்கும் திட்டங்கள், இந்தியா முழுமையிலும் உள்ள மாநிலங்களின் நிலப்பரப்பு மற்றும் மக்கள் தொகைக்கு ஏற்றவாறு அமைந்துள்ளதா என்பதையும், சம்பந்தப்பட்ட மாநிலங்களின் கருத்த என்ன என்பதை அறிந்து கொள்வதற்காகவுமே, உருவாக்கப்பட்டது. ஒரு மாநிலத்தின் முதல்வர், இதில் கலந்து கொண்டு தங்கள் மாநிலத்தின் தேவைகள், ஏற்கனவே விடுபட்டுப் போனவை, புதிய திட்டங்களின் அவசியம், மற்ற மாநிலங்களோட ஒப்பிடுகையில் பாரபட்சமாக ஏதாவது நடந்திருந்தால் அதை கவனத்துக்கு கொண்டு வருவது போன்றவற்றை செய்ய வேண்டும். அப்படித்தான் அத்தனை மாநில முதல்வர்களும் செய்து வருகிறார்கள்.
இது தொடர்பாக இந்த ஆண்டுக்காக ஜெயலலிதா தயாரித்து எடுத்துச் சென்ற பேச்சைப் பார்த்தீர்களென்றால் கேட்கும் யாருக்குமே எரிச்சல் வரும். முதல் வரியே என்ன தெரியுமா ? “உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், இந்தக் கூட்டம் எதற்காக நடத்தப்படுகிறது என்பதே எனக்குப் புரியவில்லை” கேட்கிறவர்களுக்கு எப்படி இருக்கும் ?
NDC meeting would find their way into the final Plan Document. Unfortunately, when I read the draft Plan Document, I found that no reasonable and legitimate suggestion from the States has been accepted and the big brotherly and undemocratic approach of superimposing on elected State Governments the dubious policies, priorities and programmes of a minority ruling coterie in Delhi has prevailed.
அதையடுத்து, 12வது திட்ட ஆவணத்தின் மீது கருத்து சொல்வது ஏதாவது பயன் தருமா என்பதே சந்தேகமாக இருக்கிறது என்று தொடங்கிய ஜெயலலிதா, மாநில அரசுகளின் ஆலோசனைகளை ஏற்காமல், ஜனநாயகமற்ற வகையில், பெரிய அண்ணனின் தோரணையோடு, தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளின் மீது, சந்தேகத்திற்கு இடமளிக்கும் கொள்கைகளையும், விருப்பங்களையும், திட்டங்களையும், டெல்லியில் ஆளும் ஒரு கூட்டம் திணிக்கிறது.
இதுதான் ஜெயலலிதா பேசிய உரையின் முதல் பத்தி. மத்தியில் ஆள்வது கூட்டமோ… குழுவோ…. அதுதானே மத்திய அரசு… ? இதை யாராவது மாற்ற முடியுமா ? மத்தியில் ஆளும் அரசை, பேஸ் புக்கிலும், ட்விட்டரிலும் விமர்சிப்பது போல, ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் “கூட்டம்” என்று விமர்சிக்கலாமா ? சர்ச் பார்க் கான்வென்டில் “படித்த” ஒரு அதிமேதாவி முதல்வர் பேசும் பேச்சா இது ? சந்தேகத்திற்கு இடமளிக்கும் கொள்கைகளைத் திணிக்கிறது என்றால் எதைச் சொல்கிறார்… ? உள்ளபடியே சந்தேகத்திற்கு உரிய திட்டமாகவும், மத்திய அரசு திணிக்கும் திட்டமுமாக விளங்குவது, கூடங்குளம் அணு உலைத் திட்டம். அந்தத் திட்டத்தை மனமுவந்து ஏற்றுக் கொண்டு, மக்களை ஒடுக்கும் மத்திய அரசின் அடியாள் போலத்தானே ஜெயலலிதா செயல்பட்டு வருகிறார்… ? அப்படி இருக்கையில், திடீரென்று என்ன சந்தேகம் வந்து விட்டது இவருக்கு ?
இரண்டாவது பத்தி… … மத்திய அரசுக்கு வறுமையை ஒழிப்பதில் அக்கறையே இல்லை. மத்திய அரசு வகுக்கும் ஒவ்வொரு திட்டத்தாலும், பெரிய அளவில் வறுமையும், வேற்றுமையும் வளர்கிறது.
The regime at the Centre, caught up in the daily squabbles of its constituents, in merely trying to survive from day to day, has neither the time nor the inclination to pay attention to the problems of the people of this country.
மத்தியில் ஆளும் அரசு அதன் கூட்டணிக் கட்சிகள் ஏற்படுத்தும் பிரச்சினைகளை சமாளித்து, தினம் தினம் காலம் தள்ளுவதிலேயே கவனமாக இருக்கிறதே ஒழிய, சாதாரண மக்களின் பிரச்சினைகளில் கவனம் செலுத்துவதும் கிடையாது, அது குறித்த அக்கறையும் கிடையாது.
ஒன்பதாவது பத்தியில் நான் விஷன் 2023 என்று ஒரு திட்டத்தை தமிழ்நாட்டுக்காக வகுத்துள்ளேன். அதன்படி, தமிழகத்தின் குடிமகனின் ஆண்டு வருவாய் 10 ஆயிரம் அமெரிக்க டாலர்களாக மாறும். (எல்லாம் சரிதான்…. 2023லயாவது கரண்ட் இருக்குமா ?)
இப்படி பேசிக்கொண்டிருந்தால் இதை யார் கேட்டுக் கொண்டிருப்பார்கள்… நியாயப்படி முதல் நிமிடம் முடிந்ததுமே மணியடித்திருக்க வேண்டும். விட்டு விட்டார்கள்.
ஒரு வளர்ச்சிக் குழுக் கூட்டத்தில் பேச வேண்டிய முதலமைச்சர், மத்திய அரசை “கூட்டம்” என்று வர்ணிப்பதும், கூட்டணிக் கட்சியின் பிரச்சினைகளை தீர்க்க முடியாமல் திண்டாடும் அரசு என்று கூறுவதும், ஒரு மாநில முதல்வருக்கு அழகா… ? அரசியல் பேசும் இடமா அது… ? தான் ஒரு அரைவேக்காட்டு அரசியல்வாதி என்பதை அப்பட்டமாக நிரூபித்துள்ளார் ஜெயலலிதா.
கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்த ஜெயலலிதா, பத்திரிக்கையாளர்களை சந்தித்து, “ஒரு முதலமைச்சருக்கு தங்கள் தரப்பு விளக்கங்கள் கருத்துகளைக் கூறுவதற்கு 10 நிமிடங்கள் என்பது போதுமானதல்ல. நான் என் பேச்சைத் தொடங்கி 10 நிமிடங்களில் முடிப்பதற்குள் மணி அடித்து நிறுத்திவிடச் சொன்னார்கள். இதனால் பெரிதும் அவமானப்படுத்தப்பட்டேன்.
நான் பிரதமர் தலைமையிலான எத்தனையோ கருத்தரங்குகளில் கூட்டங்களில் கலந்து கொண்டிருக்கிறேன். இது போன்று இதுவரை நிகழ்ந்ததில்லை என்று கூறிய ஜெயலலிதா, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் குரல்வளையை அரசு நெரிக்கப்பார்க்கிறது” என்று பேசியுள்ளார்.
இன்று நடந்த தேசிய வளர்ச்சிக் குழுக் கூட்டத்தில் 35 முதலமைச்சர்கள் பேச வேண்டும். இதைத் தவிர்த்து, பிரதமர், நிதி அமைச்சர், திட்டக் குழுத் துணைத் தலைவர் ஆகியோர் பேச வேண்டும். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய பாராளுமன்ற விவகாரங்களுக்கான இணை அமைச்சர் ராஜீவ் சுக்லா, அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் 10 நிமிடங்களே ஒதுக்கப்பட்டன. காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள் பேசும்போதும், 10 நிமிடங்கள் கடந்ததும் மணி ஒலிக்கப்பட்டது, இதில் பாரபட்சம் எங்கே உள்ளது…. ஒன்றுமில்லாத விஷயத்தை பெரிதுபடுத்துவதற்கு பதிலாக, மாநில முதலமைச்சர்கள் தேசிய வளர்ச்சிக் குழுக் கூட்டத்தில் தங்கள் மாநில மக்களுக்காக எதையாவது பெறுவதற்காக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளது நியாயமானதே. தமிழகத்தின் தேவைகள் அதிகம், தமிழகம் புறக்கணிக்கப்படுகிறது, தமிழகத்திற்கு இத்தனை பற்றாக்குறைகள் உள்ளன என்று பேசுவதை விடுத்து, மத்திய அரசை “கூட்டம்” என்று வர்ணிப்பதாலும், மைனாரிட்டி அரசு என்று ஏசுவதாலும் என்ன பலன் கிடைக்கப்போகிறது தமிழகத்துக்கு ?
தேசிய வளர்ச்சிக் குழுக் கூட்டத்தில் பேச வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்று வீராவேசமாக முழங்கும் ஜெயலலிதா, கடந்த ஆண்டு 22 அக்டோபர் 2011 அன்று நடைபெற்ற கூட்டத்தில் ஏன் கலந்து கொள்ளவில்லை ? அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள, தன் அமைச்சரவையின் தலைமை அடிமை ஓ.பன்னீர் செல்வத்தை ஏன் அனுப்பினார்… ? டைப் செய்யப்பட்ட பேச்சை அனுப்புவதற்கு பதிலாக, அப்போது டெல்லி சென்று முழங்கியிருக்கலாமே…. அப்போது தமிழகத்தின் மீது அக்கறை இல்லையா ஜெயலலிதாவுக்கு… ?
பத்து நிமிடம் பேசியதும் மணியடித்து அவமானப்படுத்தி விட்டார்கள் என்று குய்யோ முறையோ என்று புலம்பும் ஜெயலலிதா, தமிழக சட்டசபையை எப்படி நடத்தி வருகிறார் என்பதை சற்று யோசித்துப் பார்க்க வேண்டும். அதிமுக அடிமைகளைத் தவிர்த்து வேறு யாருக்காவது பேச வாய்ப்பு அளிக்கப்படுகிறதா என்பது ஊரறிந்த உண்மை. திமுக ஆட்சியில் ஆயிரம் குறைகள் இருந்தாலும், சட்டசபையில் விதி எண் 110ன் கீழ் அறிக்கை அளிக்கும் வழக்கம் மிக மிகக்குறைவு. வருடத்துக்கு 10 அல்லது 12 முறை மட்டுமே இந்த முறையின் கீழ் அறிக்கை படிக்கப்படும்.
உறுப்பினர்கள் யாராவது கேள்வி கேட்டு, அவர்களை தனது வாக்கு சாதுர்யத்தால் மடக்கி, நகைச்சுவையோடு பதிலளித்து, அந்தக் கேள்வியையே திசை மாற்றுவது கருணாநிதிக்கு கை வந்த கலை. அது சரியோ தவறோ… ஜனநாயகபூர்வமானது. ஒரு சட்டசபை அப்படித்தான் நடக்க வேண்டும். ஆனால் ஜெயலலிதா எப்படி நடத்துகிறார்… ?
ஆனால், ஜெயலலிதா பதவியேற்ற பிறகு, 2011ம் ஆண்டில் 20 முறையும், 2012ம் ஆண்டில் 43 முறையும், சட்டசபையில் 110 விதியின் கீழ் அறிக்கை படித்துள்ளார் ஜெயலலிதா. 110 விதியின் கீழ் அறிக்கை படிப்பதன் நோக்கமே, அந்தப் பொருளின் மீது யாரும் விவாதம் நடத்தக் கூடாது என்பதுதானே…. தன்னைத் தவிர வேறு யாருமே பேசக் கூடாது என்று ஜெயலலிதா விரும்பினால், அவ்வை சண்முகம் சாலையில் உள்ள, அதிமுக அலுவலகத்துக்கு சென்று, அவர் கட்சியின் அடிமைகளை அமர வைத்துப் பேசினால், யாருமே கேள்வி கேட்க மாட்டார்கள். குறுக்கே பேச மாட்டார்கள். அந்த இடம் போரடித்தால் சட்டசபையில் 110 விதியின் கீழ் அறிக்கை என்றால் எதிர்க்கட்சியினர் எவ்வளவு மொக்கையான அறிக்கையாக இருந்தாலும் கேட்டுத்தானே ஆக வேண்டும்… அதை எதிர்த்து எப்படிப் பேச முடியும் ? அதையும் மீறி யாராவது பேசினால், அவைக்காவலர்களை விட்டு வெளியேற்றி விட முடியாதா என்ன ?
ஜெயலலிதா தும்மினாலும், அதை மேசையை தட்டி வரவேற்க இருக்கவே இருக்கிறார்கள் அதிமுக அடிமைகள். கூட்டணிக் கட்சி என்ற பெயரில், தற்போது சரத்குமார், செ.கு.தமிழரசன் என்ற புதிய அடிமைகள் வேறு கிடைத்துள்ளார்கள். பிறகு ஜெயலலிதாவுக்கு என்ன குறை…. ?
சமீபத்தில் நடந்த ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளின் மாநாட்டில் கூட, ஜெயலலிதா பேசுகையில் யாருமே குறுக்கே பேசவில்லை. அது படித்த அடிமைகளின் கூட்டமல்லவா ? ஜெயலலிதாவும், மனம் போன போக்கில், தனது அரசின் சாதனைகளை அள்ளி அள்ளி விட்டார். “எனது அரசு“, “நான் உத்தரவிட்டேன்“ “நான் ஆணையிட்டேன்“ என்று வாய்க்கு வந்தபடி, தனது புகழைத் தானே பாடிக்கெண்டிருந்தார். படித்த அடிமைகளும், புளகாங்கிதம் அடைந்து, பூரித்து, அம்மாவின் புகழைப் பாடினார்கள்.
வேலூர் மாவட்ட ஆட்சியர் சங்கர், ‘அரசின் விலையில்லா அரிசியால் பசி என்ற வார்த்தையே இப்போது இல்லாமல் போய்விட்டது. இந்தப் புண்ணியம் அம்மாவைத்தான் சேரும். பழைய சாதத்தையும் ஊறுகாயையும் கல்லூரிக்கு எடுத்துச்சென்ற மாணவர்கள், அம்மாவின் இலவச கிரைண்டர், மிக்ஸியால் இட்லி, தோசை கொண்டு செல்கிறார்கள். இது, அம்மாவின் ஆட்சியில் நடந்த அதிசயம்’ என்று பேசியிருக்கிறார்.
‘சங்கத் தமிழ் வளர்த்த மதுரையை மீட்ட அம்மா அவர்களே’ என்று மற்றொரு படித்த அடிமையான மதுரை எஸ்.பி பாலகிருஷ்ணன் பேசியிருக்கிறார்.
பாலகிருஷ்ணன் ஐபிஎஸ்
இப்படி அடிமைகள் மத்தியிலேயே வாழ்ந்து பழக்கப்பட்டுப் போன ஜெயலலிதாவுக்கு, அவர் பேசுகையில் குறுக்கே மணியடித்ததால் எரிச்சலாகத்தான் இருந்திருக்கும். இப்படி மணியடித்ததைக் கண்டித்து, நாளை தினமணியில் தலையங்கம் வரலாம், மாநில முதல்வரை இப்படியா இழிவு படுத்துவது என்று ஆதங்கப்படலாம்… இதை கடுமையாக கண்டித்து, தினமலரில் செய்திக் கட்டுரை வரலாம்….. துக்ளக்கில் சோ கண்ணீர் வடிக்கலாம். ஆனால் இதனால் என்ன பயன் ஏற்படப்போகிறது… ?
அடிமைகள் கொடுத்த உற்சாகத்தில் பிரதமர் கனவோடு இருக்கும் ஜெயலலிதாவுக்கு அவரது இந்த அரைவேக்காட்டுத்தனம் எந்த விதத்தில் உதவப்போகிறது என்று தெரியவில்லை. ஜெயலலிதாவின் அரைவேக்காட்டுத்தனத்தால், ஏற்படும் இழப்பு, அவரது அரசியல் எதிர்காலத்திற்கு மட்டும் என்று இருந்தால் கண்டுகொள்ளாமல் விட்டு விடலாம். ஆனால், இழப்பு தமிழகத்திற்கும் சேர்த்துதானே….