2012 நிறைவுக்கு வந்து 2013 தொடங்கியுள்ளது. 2012 பலர் வாழ்வில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கக் கூடும். பலருக்கு இது சிறப்பான ஆண்டாக அமைந்திருக்கலாம். பலருக்கு இது ஏமாற்றம் தரும் ஆண்டாகவோ, பின்னடைவைத் தந்த ஆண்டாகவோ அமைந்திருக்கலாம். எத்தனை பின்னடைவுகளைச் சந்தித்தாலும், தளராது போராடும் மனித இனமான நாம், வரும் ஆண்டை முழுமையான நம்பிக்கையோடு சந்திப்போம். புதிய ஆண்டை வரவேற்கும் அதே வேளையில், நிறைவடையும் 2012ல் நாம் என்ன சாதித்திருக்கிறோம், மன நிறைவைத் தரும் வகையில் சாதித்திருக்கிறோமா என்ற அலசல், வரும் ஆண்டில் மேலும் சிறப்பாக பணி புரிய நமக்கு உதவும் என்ற வகையில், 2012ல் என்ன செய்தோம் என்பதை சற்றே அலசலாம்.
சவுக்கு தளத்தைப் பொறுத்தவரை வாசகர்களால் அதிகம் படிக்கப்பட்ட கட்டுரைகள் பின்வருமாறு.
நக்கீரன் பத்திரிக்கையில், மாட்டுக்கறி சாப்பிடும் மாமி நான் என்று எழுதப்பட்ட கட்டுரையும், அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அதிமுக ரத்தத்தின் ரத்தங்கள், நக்கீரன் அலுவலகத்தை அடித்து நொறுக்க முற்பட்டதையும் குறித்து, எழுதப்பட்ட நக்கீரன் விரித்த வலையில் சிக்கிய ஜெயலலிதா கட்டுரை 35,185 வாசகர்களால் படிக்கப்பட்டுள்ளது.
அதற்கு அடுத்தபடியாக சின்மயி குறித்து எழுதப்பட்ட கட்டுரை 30,522 வாசர்களால் படிக்கப்பட்டுள்ளது. நக்கீரன் கட்டுரை ஜனவரி மாதம் எழுதப்பட்டது. ஆனால் சின்மயி குறித்த கட்டுரை அக்டோபர் 23 அன்று எழுதப்பட்டு குறுகிய காலத்தில் பலரால் படிக்கப்பட்டது.
விஜயகாந்துக்கும், ஜெயலலிதாவுக்கும் சட்டப்பேரவையில் பிப்ரவரி மாதம் நடைபெற்ற வார்த்தை மோதல் குறித்து எழுதப்பட்ட தப்புத் தாளங்கள் மூன்றாவது இடத்தில், 18,637 வாசகர்களால் படிக்கப்பட்டுள்ளது.
நக்கீரன் கோபால் அவர்களுக்கு ஜனவரி மாதத்தில் எழுதப்பட்ட அன்பார்ந்த திரு.கோபால் அவர்களே என்ற திறந்த மடல் 17432 வாசகர்களால் பார்க்கப்பட்டுள்ளது.
கார்ட்டூனிஸ்ட் மதன் அவர்களை, விகடன் குழுமத்திலிருந்து நீக்கியது குறித்து எழுதிய நடுநிலை பற்றி நீங்கள் பேசலாமா என்ற விமர்சனக் கட்டுரை, 14963 வாசர்கள் படித்துள்ளார்கள்.
வேளச்சேரி என்கவுன்டர் தொடர்பாக எழுதிய நிஜமல்ல கதை என்ற கட்டுரை, 14894 வாசகர்களால் படிக்கப்பட்டுள்ளது.
இது தவிரவும், செல்லமுத்து நல்லவர், இன்னும் எவ்வளவுதான் வேண்டும் என்ற கட்டுரைகள் நெற்குன்றம் வீட்டு வசதித் திட்டத்தில் நடந்த முறைகேடுகளைப் பற்றி எடுத்துரைத்தன.
தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பள்ளர்கள், பறையர்கள் மீது, தீண்டாமையைக் கடைபிடிப்பதை, பேசக்கூடாத பொருள் என்ற கட்டுரை விளக்கியது.
ஊழல் செய்வதில், பாரதீய ஜனதா கட்சி, காங்கிரஸுக்கு கொஞ்சமும் சளைத்ததில்லை என்பதை ஊழலில் பேதமில்லை என்ற கட்டுரை விளக்கியது.
பணத்துக்காக, மருத்தவக் கல்லூரி பேராசிரியர்களாக நடித்த மருத்துவர்களை விமர்சித்து எழுதப்பட்ட மரணித்த கடவுள்கள் என்ற கட்டுரையும் முக்கியமானதே.
மருத்துவமனையில் ஒரு நாள் என்ற கட்டுரையில், தனியார் மருத்துவமனைகளில், நோயாளிகளின் பட்டாபட்டி அண்டர்வேர் வரை எப்படி கழற்றுகிறார்கள் என்பதை நேரடி அனுபவம் மூலமாக விளக்க முடிந்தது.
போலிப்பத்திரம் மூலம் நில அபகரிப்பில் ஈடுபட்ட துக்கையாண்டி ஐபிஎஸ் என்ற அதிகாரியை சரிபாதி பெற்றாரா திரிபாதி என்ற கட்டுரையின் மூலம் அம்பலப்படுத்தி, அவரை ஓய்வு நாளன்று பணி இடைநீக்கம் செய்ய வைக்க முடிந்தது.
தோழர் உதயக்குமார் மீது அபாண்டமாக சுமத்திய குற்றச்சாட்டுகளை கண்டித்தும், அவர் எப்படிப்பட்ட மனிதர் என்பதை விளக்கியும் எழுதப்பட்ட ஒரு கைக்கூலியின் கதையும், வாசகர்களிடையே பரவலான வரவேற்பை பெற்றது.
தருமபுரியில் தலித்துகள் மீது நடந்த தாக்குதல் குறித்து நேரில் சென்று ஆய்வு நடத்தியபிறகு, அவள் பெயர் அம்பிகா மற்றும், காதல் டாக்டர் ஆகிய கட்டுரைகள் எழுதப்பட்டன.
அஜ்மல் கசாப்புக்கு ரகசியமாகவும், அவசரமாகவும் நிறைவேற்றப்பட்ட தூக்கு தண்டனையை கடுமையாக கண்டித்து எழுதப்பட்ட தேசிய அவமானம் வாசகர்களிடையே கடுமையாக விமர்சிக்கப்பட்டது. ஆனாலும், மனித உரிமையாளர்கள் மத்தியில் இக்கட்டுரை வரவேற்பை பெற்றது.
பசுத்தோல் போர்த்திய குள்ளநரியாக வலம் வந்து கொண்டிருக்கும், சைதை துரைசாமி என்ற நயவஞ்சக அரசியல்வாதியை அம்பலப்படுத்தியது, அலிபாபாவும், ஆயிரம் திருடர்களும் என்ற கட்டுரை.
சென்னையில் ஏற்பட்ட பெட்ரோல் தட்டுப்பாட்டுக்கு ஜெயலலிதாவின் பொறுப்பின்மையே காரணம் என்று வெந்த புண்ணில் மற்றும் பொறுப்பின்மையின் உச்சகட்டம் ஆகிய கட்டுரைகளில் எழுதப்பட்டது. பழங்குடியினத்தைச் சேர்ந்தவர் என்ற அடிப்படையில், பி.ஏ.சங்மாவுக்கு ஜெயலலிதா அளித்த ஆதரவின் போலித்தன்மையை நீங்கள் வெட்கப்பட வேண்டும் என்ற கட்டுரை விரித்துக் கூறியது. ஜோசியத்தை நம்பிக் கொண்டு, மக்கள் வரிப்பணத்தில் திருமணம் நடத்தி வைத்த ஜெயலலிதாவின் நடவடிக்கையை இது அரசின் வேலையா என்ற கட்டுரை விமர்சித்தது. நக்கீரன் இதழ் சார்பாக சென்னை எல்எல்ஏ கட்டிடத்தில் நடக்கவிருந்த நிகழ்ச்சியை இறுதி நேரத்தில் தடை செய்த ஜெயலலிதாவின் அற்பத்தனத்தை கண்டிக்கப்பட வேண்டியதே என்ற கட்டுரை கண்டித்தது. கருணாநிதி பார்க்கச் செல்கிறார் என்ற ஒரே காரணத்துக்காக, வீரபாண்டி ஆறுமுகத்தை சிறை மாற்றம் செய்ததை, உச்சகட்ட சிறுபிள்ளைத்தனம் என்ற கட்டுரை விமர்சித்தது. சதுரங்க விளையாட்டு வீரர் விஸ்வநாதன் ஆனந்துக்கு, இரண்டு கோடி ரூபாய் மக்கள் வரிப்பணத்திலிருந்து விருது வழங்கிய ஜெயலலிதாவை ஊரான் வீட்டு நெய் என்ற கட்டுரை இடித்துரைத்தது. சராமாரியாக மான நஷ்ட வழக்கு போட்டு, ஊடகங்களை மிரட்டும் ஜெயலலிதாவை, ஆணவ மணி என்ற கட்டுரை விமர்சித்தது. டெசோ மாநாடு என்ற பெயரில், அதிமுகவும், திமுகவும் போட்டி போட்டுக் கொண்டு, ஈழத் தமிழர்களை ஏளனம் செய்ததை அவர்களை நிம்மதியாக வாழ விடுங்கள் என்ற கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்டது. கூடங்குளம் போராட்ட மக்களை ஒடுக்கிய ஜெயலலிதாவை எம்மிடம் இழப்பதற்கு எதுவுமில்லை என்ற கட்டுரை கண்டித்தது.
அமைந்தகரையில் அமைந்துள்ள அண்ணா நினைவு வளைவை இடிக்கக் கூடாது என்று அதற்குப் பதிலாக சித்த மருத்துவமனையை இடிக்க உத்தேசித்துள்ள ஜெயலலிதாவை முட்டாள் அரசு என்ற கட்டுரை கண்டித்தது. ஜெயலலிதாவின் முட்டாள்த்தனங்கள் தொடர்நது கொண்டே இருந்ததால், முட்டாள் அரசு என்ற கட்டுரை தொடர் கட்டுரையாக்கப்பட்டு, தமிழ்நாடு இளைஞர் காவல்படை என்ற ஒரு புதிய படையை அறிவித்த ஜெயலலிதாவின் அறிவீனத்தை கண்டித்து முட்டாள் அரசு 2 என்ற கட்டுரை எழுதப்பட்டது. சைபர் கிரைம் குற்றங்களுக்கு குண்டர் சட்டம் என்ற திருத்தம் கொண்டு வரப்படும் என்ற ஜெயலலிதாவின் அறிவிப்பை விமர்சித்தது முட்டாள் அரசு 3 என்ற கட்டுரை. தேசிய வளர்ச்சிக் குழுக் கூட்டத்திலிருந்து மணியடித்தார்கள் என்ற காரணத்துக்காக வெளியேறிய, ஜெயலலிதாவின் முட்டாள்த்தனத்தை குறை கூறியது, அரைவேக்காட்டுத்தனம் என்ற கட்டுரை.
2012 வருடத்தில், ஜெயலலிதாவின் செயல்பாடுகளைப் பார்க்கையில், அவரை விமர்சனம் செய்வதில் ஊடகங்கள் பெரிய அளவில் தயக்கம் காட்டவது அப்பட்டமாக தெரிகிறது. திமுக ஊடகங்கள், செய்யும் விமர்சனங்கள், நடுநிலை இழந்து கட்சி சார்பாக உள்ளன. கட்சி சார்பற்ற ஊடகங்களில், ஜெயலலிதா அரசின் தவறுகளை விமர்சிப்பதில் பெரும் சுணக்கம் காணப்படுகிறது.
விளம்பர வருவாய், மான நஷ்ட வழக்கு ஆகியவை இந்த சுணக்கத்தின் பின்னணியில் உள்ளன. இந்த சுணக்கம் 2013லும் தொடரும் என்றே தோன்றுகிறது. இந்தச் சூழலில் நமது பொறுப்பு பல மடங்கு கூடியுள்ளது. ஜெயலலிதா அரசின் தவறுகளையும், மக்கள் விரோத கொள்கைகளையும் செயல்பாடுகளையும் விமர்சிக்கவும், கண்டிக்கவும், நடுநிலை ஊடகங்கள் தயக்கம் காட்டுகையில் நாம் இன்னும் கவனத்தோடு இந்த அரசை கூர்ந்து கவனிக்க வேண்டிய நிலையில் உள்ளோம்.
நீதித்துறையை விமர்சித்து,
உயர்நீதிமன்ற வீட்டுவசதி வாரியம்,
ஓபனிங் நல்லாத்தான் இருக்கு, ஆனா ஃபினிஷிங் ?,
கோமாளிகளின் கூத்து ஆகிய கட்டுரைகள் எழுதப்பட்டன. சட்டவிரோதமாக அலுவலக உதவியாளர்களை நியமித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் குறித்து, அவ்வாறு நியமிக்கப்பட்ட சில அலுவலக உதவியாளர்களின் பெயர்களையும் வெளியிட்டு, நிலை தடுமாறும் நீதி என்ற கட்டுரை எழுதப்பட்டது. என்கவுன்டர்கள் தொடர்ந்து நடைபெறுவதற்கு, நீதித்துறையின் அலட்சியமே காரணம் என்று விமர்சித்த கட்டுரையான, கொலைகார நீதிமன்றங்கள் என்ற கட்டுரை, என்கவுன்டர்கள் தொடர்வதற்கு நீதிமன்றங்களே காரணம் என்று குற்றம் சாட்டியது. அலுவலக உதவியாளர்கள் நியமனத்தில் நடந்த முறைகேடுகளை முழுமையாக பட்டியலிட்டு, நீதியரசர் சந்துருவைத் தவிர அத்தனை நீதிபதிகளும் எப்படி அலுவலக உதவியாளர் நியமனங்களை பங்கு போட்டுக் கொண்டார்கள் என்று, நிலை குலைந்த நீதி என்ற கட்டுரை விவரித்தது. உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றுள்ள இக்பால், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக எப்படி செயலிழந்து இருந்தார் என்பதை விரித்துரைத்து Caesar’s wife should be beyond reproach Mr.Chief Justice என்ற கட்டுரை. மீன் குழம்பு சரியாக வைக்காததற்காக ஒரு அலுவலக உதவியாளரை பணி இடைநீக்கம் செய்த நீதித்துறை நடுவரை கடுமையாக விமர்சித்தது நமக்கு வாய்த்த அடிமைகள் என்ற கட்டுரை.
நீதிமன்ற நடவடிக்கைகளைப் பொறுத்தவரை, இந்த ஆண்டு தொடக்கத்திலேயே உயர் உயர் அதிகாரிகளுக்கென்று, சகாய விலையில், சந்தை விலைக்கு பாதி விலையில் வழங்கப்பட்ட நெற்குன்றம் வீட்டு வசதித் திட்டத்தை ரத்து செய்யக் கோரி தமிழக மக்கள் உரிமைக் கழகம் சார்பில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.
திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி பஞ்சாயத்தில் உள்ள அம்மாப்பாளையம் என்ற கிராமத்தில், மற்ற சாதியினர் தலித்துகளை தங்கள் சுடுகாட்டில் அனுமதிக்காததால் தலித்துகளுக்கு சுடுகாடு இல்லாமல் சாலையோரம் புதைக்கின்றனர் என்று தினமணி நாளேட்டில் வந்த செய்தியை அடுத்து, பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கையடுத்து, திருப்பூர் மாவட்ட ஆட்சியர், நிலம் ஒதுக்கப்பட்டதாக பதில் மனு தாக்கல் செய்தார். இதையடுத்து இவ்வழக்கு முடிவுக்கு வந்தது.
திமுக எம்.பி. வசந்தி ஸ்டான்லி போலி ஆவணங்களை தாக்கல் செய்து, முன் ஜாமீன் பெற்றது தொடர்பாக அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, தாக்கல் செய்த பொது நல வழக்கை, தலைமை நீதிபதி இக்பால், இதிலெல்லாம் நடவடிக்கை எடுப்பது எங்கள் வேலை இல்லை என்று தள்ளுபடி செய்தார்.
வேளச்சேரியில் நடைபெற்ற ஐந்து பேர் சுட்டுக் கொல்லப்பட்ட என்கவுன்டரை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
கூடங்குளத்தில் ஒட்டு மொத்த ராதாபுரம் தாலுகாவையும் 144 தடைச் சட்டத்தின் கீழ் கொண்டு வந்த நெல்லை மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட பொது நல வழக்கில், தலைமை நீதிபதி இக்பால், 144 தடைச் சட்டம் சரியாக பிறப்பிக்கப்பட்டிருக்கிறது என்று வழக்கை தள்ளுபடி செய்தார்.
தருமபுரியில் ஆசிரியை ஒருவரை, நடு ரோட்டில் அடித்த சந்தனபாண்டியன் என்ற டிஎஸ்பி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொது நல வழக்கில், அந்த டிஎஸ்பி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக டிஜிபி தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் முடித்து வைக்கப்ப்டடது.
டெக்கான் க்ரானிக்கிள் நாளிதழில் 12 ஏப்ரல் 2012 அன்று ஒரு செய்தி வெளியானது. அச்செய்தியில், ஒரு தாயும் மகனும் சேர்ந்து குடித்து விட்டு தகராறு செய்த தந்தையை கொலை செய்துள்ளனர். தற்காப்புக்காக கொலை செய்தனர் என்று அவர்களை கைது செய்யாமல் காவல்துறை அனுப்பியதையும், அது போல மேலும் இரண்டு சம்பவங்களையும் அச்செய்தி குறிப்பிட்டிருந்தது. அச்செய்தியின் அடிப்படையில், தற்காப்புக்காக கொலை செய்தவர்களை விடுவிப்பதற்கான அதிகாரம், நீதிமன்றத்துக்கு மட்டுமே உள்ளது, காவல்துறைக்கு அந்த அதிகாரம் கிடையாது என்று அறிவிக்கக் கோரி தொடரப்பட்ட பொது நல வழக்கு நிலுவையில் உள்ளது.
திண்டுக்கல் காவல்நிலையத்தில், ராஜா என்பவரை ஜுலை 2012 அன்று அடித்துக் கொலை செய்த காவல்துறையினர் மீது வழக்கு பதிவு செய்து, அவ்வழக்கை சிபிஐக்கு மாற்றம் செய்ய வேண்டும் என்று தொடர்ந்த வழக்கு, இன்னும் நிலுவையில் உள்ளது.
ஸீயோன் மெட்ரிகுலேஷன் பள்ளிப் பேருந்தில் சிறுமி ஸ்ருதி விழுந்து இறந்த சம்பவத்தை தொடர்ந்து, ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, அனைத்துப் பேருந்துகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனவா என்று ஆய்வு செய்யுமாறு உத்தரவிடுமாறு கோரி போடப்பட்டுள்ள வழக்கு நிலுவையில் உள்ளது.
பத்மா சேஷாத்ரி பள்ளி நீச்சல் குளத்தில் சிறுவன் ரஞ்சன் விழுந்து இறந்தது தொடர்பாக, பள்ளியின் நிறுவனர் ராஜலட்சுமி பார்த்தசாரதியை அவ்வழக்கில் குற்றவாளியாக சேர்க்க வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது.
கைதி ஒருவரை அடித்துக் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ள நிலையில், கருப்பண்ணன் என்ற சிறைக் கண்காணிப்பாளருக்கு பதவி உயர்வு கொடுத்துள்ள நிலையில், அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள கொலை வழக்கில் விசாரணை நடத்துமாறு தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது.
சென்னை புழல் சிறையில், நான்கு நைஜீரிய கைதிகளை அடித்து, துன்புறுத்திய சிறை அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது.
சென்னை அயனாவரம் காவல் நிலையத்தில், நித்யராஜ் என்ற கைதியை அடித்து குற்றுயிராக புழல் சிறையில் அடைத்தனர் காவல்துறையினர். அந்த நித்யராஜ் மறுநாளே இறந்து போனார். இதில் சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தாக்கல் செய்த வழக்கு நிலுவையில் உள்ளது.
தருமபுரியில் தலித்துகள் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதலை தடுக்கத் தவறிய, மாவட்ட எஸ்.பி. அஸ்ரா கர்க் மற்றும், மாவட்ட ஆட்சியர் லில்லி ஆகியோரை பணி இடைநீக்கம் செய்ய வேண்டும் என்று கோரி தொடர்ந்த பொது நல வழக்கு நிலுவையில் உள்ளது.
ஜெயலலிதா அறிவித்த, சிறப்புக் காவல் இளைஞர் படை அறிவிப்பின் அடிப்படையில் இளைஞர் படை அறிவிக்கக் கூடாது என்று தொடர்ந்த பொதுநல வழக்கு, இது குறித்த அரசாணை பிறப்பிக்கப்படும் முன்னரே தாக்கல் செய்யப்பட்டதாக கூறி தள்ளுபடி செய்யப்பட்டது. இதற்கான அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை என்பது மகிழ்ச்சியான செய்தி.
மானாமதுரையில், வெள்ளத்துரை என்ற காவல்துறை அதிகாரியால் கார்த்திக், பாரதி என்ற இரண்டு பேர் கொல்லப்பட்டது குறித்து தாக்கல் செய்த பொதுநல வழக்கு, நிலுவையில் உள்ளது.
நெல்லை மாவட்டம் மருக்கால்குறிச்சியில் கோபமாக பேசியதற்காக ஒருவரை சுட்டுக் கொலை செய்த காவல் ஆய்வாளர் மீது கொலை வழக்கு பதிவு செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
திருக்கழுக்குன்றத்தில் உள்ள ஒரு பள்ளி விளையாட்டு மைதானத்தில் கழிவுநீர் வருவதைத் தடுக்கக் கோரி தொடர்ந்த பொதுநல வழக்கு நிலுவையில் உள்ளது.
திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில், நிலத்தின் அடியிலிருந்து மீத்தேன் வாயு எடுப்பதற்காக போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தை செயல்படுத்தினால், ஒட்டு மொத்தமாக விவசாயம் பாழ்படும் என்பதால் அதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது.
கூடங்குளம் அணு உலை நிறுவவுவதில் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யவில்லை என்று தொடரப்பட்ட மூன்றுக்கும் மேற்பட்ட பொதுநல வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன. அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
மீன் குழம்பு வைத்தற்காக அலுவலக உதவியாளரை பணி இடைநீக்கம் செய்த நீதித்துறை நடுவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தாக்கல் செய்த பொதுநல வழக்கு, பழைய தலைமை நீதிபதி இக்பாலில் உத்தரவின்படி, இன்னமும் ரிட் மனு எண் வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதே போல சட்டவிரோதமாக நியமனம் செய்யப்பட்ட அலுவலக உதவியாளர்கள் நியமனத்தை எதிர்த்து தொடரப்பட்ட இரண்டு பொதுநல வழக்குகளும், , பழைய தலைமை நீதிபதி இக்பாலின் உத்தரவின்படி, இன்னமும் ரிட் மனு எண் வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
2012ல் ஏராளமாக உழைத்துள்ளோம் என்றாலும், இன்னும் கூடுதலாக செயல்பட்டிருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது. மத்தியிலும், மாநிலத்திலும் இருக்கும் அரசுகள், மக்கள் விரோத அரசுகளாக இருப்பதால், நமது பணி கூடிக்கொண்டே போகிறது. என்கவுன்டர்களுக்கு எதிராக பொதுநல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு, அவை நிலுவையில் இருக்கும் நிலையில், தமிழகத்தில் என்கவுன்டர்கள் தொடர்ந்து நடைபெறுவதற்கான ஒரே காரணம், நீதித்துறையின் மீது காவல்துறை அதிகாரிகளுக்கு துளியும் பயம் இல்லை என்பதே. நீதிமன்றங்கள் நம்மை ஒன்றும் செய்து விடாது என்ற துணிச்சலே என்கவுன்டர்கள் தொடர்வதற்கான காரணமாக இருக்கிறது. என்கவுன்டர்கள், மனித உரிமை மீறல்கள் எல்லை மீறி நடந்து கொண்டிருப்பதன் முக்கிய காரணம், நீதிமன்றங்கள், பொறுப்பற்று, செயலிழந்து இருப்பதே. நீதித்துறைக்குள்ளே நடைபெறும் அநியாயங்களை, எந்த ஊடகமும் எழுத முன்வராத காரணத்தாலேயே நீதிமன்றங்கள் கேள்வி கேட்பாரின்றி மீளா உறக்கத்தில் ஆழ்ந்துள்ளன.
இந்தப் போக்கு இப்படியே தொடர்வது, ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய ஆபத்தாக முடியும். காவல்துறையில் நடைபெறும் ஊழல்களை வெளிக்கொணர்வதை விட, நீதித்துறையில் நிலவும் அவலங்களை அம்பலப்படுத்துவது, அவசியமாகி இருக்கிறது. இதை நம்மை விட்டால் வேறு யாரும் செய்யத்தயாராக இல்லை என்பது வருத்தத்திற்குரிய உண்மை.
வரும் ஆண்டில் நீதித்துறையில் கூடுதல் கவனம் செலுத்துவது என்று முடிவெடுக்கப்பட்டு, 2013ம் ஆண்டை நீதித்துறை ஆண்டாக சவுக்கு அறிவிக்கிறது.
அன்பு உறவுகள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தொடர்ந்து பணியாற்றுவோம் தோழர்களே…