2013ம் ஆண்டை நீதித்துறை ஆண்டாக அறிவித்து விட்டு, முதல் கட்டுரை நீதித்துறையைப் பற்றி இல்லாமல் இருந்தால் சவுக்கு வாசகர்கள் என்ன நினைப்பார்கள்…. ?
முதல் கட்டுரையே நீதித்துறையைப் பற்றித்தான். தலைப்பைப் பார்த்ததும், ஏதோ தெலுங்குக் கட்டுரை என்று நினைத்து விடாதீர்கள். இது தெலுங்குக் கட்டுரை கிடையாது. சுந்தரத் தெலுங்கு தேசத்திலிருந்து இங்கே வந்து நீதிபதியாக உள்ள தேவுடுவைப் பற்றித்தான் இந்தக் கட்டுரை. நேனே தேவுடு என்றால் என்ன, இந்தக் கட்டுரைக்கு எதற்காக இந்தத் தலைப்பு என்பதை கடைசியில் பார்க்கலாம்.
ஏற்கனவே அய்யய்யோ… ஆனந்தமே… என்ற கட்டுரையில், பொறுப்பு தலைமை நீதிபதியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் இரண்டாவது நீதிபதியாக இருந்த எலிப்பி தர்மாராவ் எப்படித் துடித்துக் கொண்டிருந்தார் என்பதை பார்த்திருப்பீர்கள். கிறித்துமஸ் விடுமுறை முடிந்து இன்று முதல் வேலை நாள். பொறுப்பு தலைமை நீதிபதியாக எலிப்பி தர்மாராவ் இன்று தலைமை நீதிபதி நீதிமன்றமான முதல் நீதிமன்றத்தில் (First Court) சட்டை போடாத அய்யர் ஒருவரை வரவழைத்து, பூஜை நடத்தி, தேங்காய் உடைத்து, தலைமை நீதிபதியாக அமர்ந்து, தன் பணிகளைத் தொடங்கினார் நீதிபதி எலிப்பி தர்மாராவ். தலைமை நீதிபதி அறையில் இவர் சொல்லியபடி புனரமைப்புப் பணிகளைச் செய்ய பொதுப்பணித் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவர் சொல்லிய புனரமைப்புப் பணிகளுக்கு மட்டும் பொதுப்பணித் துறை உத்தேசித்துள்ள தொகை 20 லட்சம்.
இன்று முதல் நீதிமன்றம் அருகே பூஜை செய்து உடைக்கப்பட்டிருந்த தேங்காய்
நீதிபதியாக நீதிமன்றத்தில் அமர்ந்து வழக்கு விசாரணையை இன்று தொடங்கினாரே தவிர, பொறுப்பு தலைமை நீதிதியாக தனது பணியை மிகவும் பொறுப்பாக, கடந்த ஞாயிற்றுக் கிழமையன்றே தொடங்கி விட்டார். ஞாயிற்றுக்கிழமை அவ்வளவு பொறுப்பாக வந்து என்ன வேலையை செய்திருக்கிறார் என்று பார்த்தால், அவரது அந்தரங்க காரியதரிசியாக இருக்கும் தனஞ்செய ராவ் மற்றும், மற்றொரு காரியதரிசியாக இருக்கும் சுப்புலட்சுமி ஆகிய இருவருக்கும் உதவிப் பதிவாளராக பதவி உயர்வு வழங்கும் உத்தரவில் கையொப்பமிட்டுள்ளார். அதுவும், 2010 முதல் பதவி உயர்வு வழங்குவதாக பின்தேதியிட்டு அந்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தனஞ்செய ராவ், நீதிபதி தர்மாராவின் அந்தரங்க காரியதரிசியாக கடந்த ஐந்து ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். சுப்புலட்சுமி என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஆர்.பாலசுப்ரமணியன் என்பவரின் அந்தரங்கக் காரியதரிசியாக பணியாற்றியவர். சுப்புலட்சுமி என்பவர். இவருக்கும் தற்போது பின்தேதியிட்டு பதவி உயர்வு வழங்கப்பட்டள்ளது. தனஞ்செய ராவ், நீதிபதி தர்மாராவின் அந்தரங்கக் காரியதரிசியாக இருந்தவர். அவருக்காக விடுமுறை நாளில் நீதிபதி தர்மாராவ் வந்து பதவி உயர்வு ஆணையில் கையெழுத்திட்டது சரி. சுப்புலட்சுமி என்பவருக்கு ஏன் இத்தனை அக்கறையாக பதவி உயர்வு பின்தேதியிட்டு அளித்தார் என்று விசாரித்தால், ஓய்வு பெற்ற நீதிபதி பாலசுப்ரமணியம், உச்சநீதிமன்றத்தில் பணியாற்றும் நீதிபதி சதாசிவத்திடம் சொல்லி, அவர் எலிப்பி தர்மாராவிடம் சொல்லி, இந்தப் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் பரபரப்பாக பேசிக்கொள்கிறார்கள். இதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்பது சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டுமே தெரியும். அவர்கள் உண்மையைச் சொல்வார்களா என்ன ? இருப்பினும், இவர்கள் இருவருக்கும் பின்தேதியிட்டு பதவி உயர்வு வழங்கப்பட்டதன் பின்னணியில் ஒரு சுவையான கதை இருக்கிறது.
நீதிபதி ஆர்.பாலசுப்ரமணியம்
தலைமை நீதிபதியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பணியாற்றி, தற்போது உச்சநீதிமன்றத்தில் நீதிபதியாக உள்ள நீதிபதி கோகலே 2010ம் ஆண்டு, உச்ச நீதிமன்றத்துக்கு பதவி உயர்வில் சென்றார். அப்போது சில நாட்கள், இதே போல பொறுப்பு தலைமை நீதிபதியாக எலிப்பி தர்மாராவ் நியமிக்கப்பட்டார். அந்த சில நாட்களில் பிறப்பித்த உத்தரவுதான், தனஞ்செய ராவ் மற்றும் சுப்புலட்சுமி ஆகியோரின் பதவி உயர்வு. பின்னர், சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இக்பால் பொறுப்பேற்ற பின்னர். அந்த இரண்டு சட்டவிரோத பதவி உயர்வுகளும் ரத்து செய்யப்பட்டன.
ரத்து செய்யப்பட்ட அந்த நாளைக் கணக்கில் கொண்டே தற்போது இவர்கள் இருவருக்கும் பின்தேதியிட்டு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அந்தரங்கக் காரியதரிசி (P.A to Judge) பதவி என்பது சுருக்கெழுத்தர் தகுதியின் அடிப்படையில் நியமிக்கப்படுவது. அந்தப் பதவியில் உள்ளவர்கள், அடுத்த பதவி உயர்வான உதவிப் பதிவாளர் பதவி உயர்வுக்கு வரவேண்டும் என்றால் சட்டப் படிப்பு அவசியம் என்பது போன்ற விபரங்கள் அய்யய்யோ… ஆனந்தமே… என்ற கட்டுரையில் எழுதப்பட்டிருந்தது. தற்போது இவர்கள் இருவருக்கும் முன்தேதியிட்டு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதால், கடந்த இரண்டு ஆண்டுகளாக உதவிப் பதிவாளர்களாக (Assistant Registrar) நியமிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் மூத்தவர்களாக மாறி விடுவார்கள். இதனால் இவர்களுக்கு அடுத்த பதவி உயர்வான துணைப் பதிவாளர் (Deputy Registrar) பதவி உயர்வு விரைவாக வரும். அதற்காகவே பின்தேதி.
உதவிப் பதிவாளர் பணி என்பது, தீர்ப்பு நகல்களில் கையெழுத்திடுவது, மற்ற நிர்வாகப் பணிகளை கவனிப்பது போன்ற பணிகளைக் கொண்டது. நீதிபதிகளிடம் அந்தரங்கக் காரியதரிசியாக பணியாற்றி விட்டு, உதவிப் பதிவாளர்களாக பதவி உயர்வு பெறுபவர்கள், இந்தப் பணிகளையும் செய்யமாட்டார்கள். பதவி உயர்வுக்குப் பிறகும், அந்தரங்கக் காரியதரிசிப் பணியையே தொடர்ந்து செய்து வருவார்கள். பதவி உயர்வு பெற்று விட்டார்கள், அவர்களை நிர்வாகப் பணிகளுக்கு அனுப்புங்கள் என்று யார் நீதிபதிகளிடம் சென்று கேட்பது… ? தற்போது நீதிபதி எலிப்பி தர்மாராவின் அந்தரங்கக் காரியதரிசியாக இருக்கும் தனஞ்செய ராவையே எடுத்துக் கொள்ளுங்கள். இவர் தற்போது உதவிப் பதிவாளராக நியமிக்கப்பட்டு விட்டதால் நிர்வாகப் பணியை கவனிப்பார் என்று நினைக்கிறீர்களா ? தொடர்ந்து நீதிபதி எலிப்பி தர்மாராவின் பணிகளையே கவனித்து வருவார். மீறிப் போய் யாராவது கேட்டால், ‘கொட்டேஸ்தானு…. வெள்ளுவையா…’ என்று தெலுங்கிலேயே அர்ச்சனை கிடைக்கும்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் 2008ம் ஆண்டில் இதே போல ஒரு வழக்கு வந்தது. ஷேக் சர்தார் என்பவர், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார். அவர் 1965ம் ஆண்டில் பத்தாம் வகுப்பு படித்து விட்டு, ஆசிரியராக சேர்கிறார். பின்னர், எம்.ஏ படிப்பு முடித்து விட்டு, சேலம் சட்டக் கல்லூரியில் மாலை நேரக் கல்லூரியில் மூன்றாண்டு சட்டப்படிப்பு முடிக்கிறார். சட்டப்படிப்பையும் முடித்து விட்டு, தமிழ்நாடு பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்ய விண்ணப்பிக்கிறார். அவர் விண்ணப்பம் நிராகரிக்கப்படுகிறது. முழு நேர அரசு ஊழியராக பணியாற்றி விட்டு, எப்படி மாலை நேரக் கல்லூரியில் சட்டப்படிப்பு முடிக்க இயலும் என்பதால் அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்படுகிறது.
இந்த நிராகரிப்பு உத்தரவை எதிர்த்து, ஷேக் சர்தார் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்கிறார். அந்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்கிறார். அதை எதிர்த்து, ஷேக் சர்தார் சென்னை உயர்நீதிமன்ற டிவிஷன் பென்ச் முன்பு மனுத் தாக்கல் செய்கிறார்.
அந்த ரிட் மனுவின் மீது சென்னை உயர்நீதிமன்ற டிவிஷன் பென்ச் கீழ்க்கண்டவாறு தீர்ப்பளிக்கிறது.
“.. … … it is very clear that the appellant was actually employed from January 1995 to May 1999 even as per the proceedings of the Director of Elementary Education. Therefore, during this period the appellant could not have attended the law college. If really the attendance of the appellant in the law college for 119 days during 1995-1996. 99 days during 1996-97 and 93 days during 1997-98 are true, then he could not have attended to his duty as Headmaster of the school. Therefore, either the attendance in the law college is fabricated or the appellant had not attended his duties as Headmaster. Therefore, taking into consideration the statement made by the appellant in the affidavit filed in support of the writ petition that his study period he has attended the school as teacher and Headmaster during working hours and also attended the classes from 6.30 pm to 8.30 pm in all working days from the place of work i.e. 100 km which could cover in 2 ½ housrs travel. It is practically not possible for the appellant to attend the school and law college in all working days after completion of his school duties.
பள்ளிக் கல்வி இயக்குநர் அளித்துள்ள அறிக்கையின் படி, மனுதாரர் ஜனவரி 1995 முதல் மே 1999 வரையிலான ஆண்டில் தலைமை ஆசிரியராக பணியாற்றியுள்ளார் என்பது தெரியவந்துள்து. ஆகையால் இந்தக் காலகட்டத்தில் அவர் சட்டக்கல்லூரியில் பயின்றிருக்க முடியாது. சட்டக் கல்லூரியில் பயின்றதாக கூறப்படும் 1995-1996 ஆண்டில் 119 நாட்கள், 1996-97 ஆண்டில் 119 நாட்கள் மற்றும் 1997-98 ஆண்டில் 99 நாட்கள் ஆகியவற்றை கணக்கில் எடுத்துக் கொண்டால், இவர் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றியிருக்க முடியாது. ஆகையால், ஒன்று இவரது சட்டக்கல்லூரி வருகை போலியானதாக இருக்க வேண்டும் அல்லது, இவர் தலைமை ஆசிரியராக பணியாற்றியிருக்க இயலாது. மனுதாரர் தாக்கல் செய்துள்ள வாக்குமூலத்தின்படி, இவர் காலை முதல் மாலை வரை தலைமை ஆசிரியராக பணியாற்றி விட்டு, மாலை 6.30 மணி முதல் 8.30 மணி வரை நடக்கும் சட்டக்கல்லூரி வகுப்புகளில் கலந்து கொண்டார் என்றும், பணியாற்றும் இடத்திலிருந்து சட்டக்கல்லூரி 100 கிலோ மீட்டர் என்றும், அந்த தூரத்தை இரண்டரை மணி நேரத்தில் கடந்து விடலாம் என்றும் கூறுகிறார். பள்ளியில் தலைமை ஆசிரியர் பணியை முடித்து விட்டு, எல்லா வேலை நாட்களிலும் அவர் சட்டக் கல்லூரி வகுப்புகளில் கலந்து கொண்டார் என்பதை ஏற்றுக் கொள்வதற்கில்லை.
We have considered the entire materials placed on record, When we put a question to the learned Government Pleader with regard to the distance from the place of work viz. Nedumannur, Sankarapuram Taluk, Villupuram District to the place of Central Law College, he has submitted that it is more than 400 kms. Therefore, we are satisfied that it is humanly impossible for the appellant to go to the college after attending his duties. The contention of the appellant that the distance is 100 kms cannot be believed as seen from the affidavit that he had attended his duties daily as teacher and headmaster and then he attended the classes of law college between 6.30 pm and 8.30 pm. Therefore the Bar Council of Inida has rightly rejected the application of enrollment on the ground that he could not have had requisite attendance in the law college and how it is possible for the Central Law College, Salem in allowing him to appear for the examination.
எங்கள் முன் வைக்கப்பட்ட அனைத்து ஆவணங்களையும் பரிசீலித்துப் பார்த்தோம். அரசு வழக்கறிஞரிடம் விழுப்புரத்தில் மனுதாரர் பணியாற்றும் சங்கராபுரம் தாலுகா, நெடுமானூர், என்ற இடத்திலிருந்து சேலம் சட்டக் கல்லூரி எத்தனை தூரம் என்று கேட்டதற்கு 400 கிலோ மீட்டர் என்று பதிலளித்தார். ஆகையால், ஒருவர் தனது அரசுப் பணிகளை முடித்து விட்டு, சேலம் சட்டக்கல்லூரியில் படிப்பை தொடர்ந்தது என்பது மனித சக்தியால் இயலாத காரியம். தூரம் வெறும் 100 கிலோ மீட்டர் மட்டுமே என்றும், அவர் மனுவில் குறிப்பிட்டுள்ளவாறு, தலைமை ஆசிரியர் பணிகளை முடித்து விட்டு மாலை 6.30 மணி முதல் 8.30 மணி வரை நடக்கும் சட்டக்கல்லூரி வகுப்புகளில் கலந்து கொண்டார் என்றும் கூறுவதை நம்புவதற்கில்லை. முழுமையான வருகை இல்லாத ஒரு நபரை, சட்டக்கல்லூரி எப்படி தேர்வெழுத அனுமதித்தது என்ற அடிப்படையில், அவர் வழக்கறிஞராக பதிவு செய்யக்கூடாது என்று பார் கவுன்சில் ஆப் இந்தியா எடுத்த முடிவு சரியே” என்று சென்னை உயர்நீதிமன்ற டிவிஷன் பென்ச் தீர்ப்பளித்துள்ளது.
தீர்ப்பு தெளிவாக இருக்கிறதல்லவா ? இந்தத் தீர்ப்பை எழுதியவர் யார் தெரியுமா ? நீதிபதி எலிப்பி தர்மாராவேதான்.
அடடே…. பெரிய ஆச்சர்யக்குறி….. !
சரி… நீதிபதி அந்தத் தீர்ப்பில் விழுப்புரத்துக்கும், சேலத்துக்கும் எவ்வளவு தூரம், ஒரு நபர், இப்படி விழுப்புரத்தில் தனது பணியை முடித்து விட்டு சேலம் சென்று மாலையில் படிக்க முடியுமா என்று தூரத்தை கிலோ மீட்டர் கணக்கில் அளந்து தீர்ப்பளித்துள்ளார். சிறப்பான தீர்ப்பாகத்தான் இருக்கிறது.
தற்போது பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ள தனஞ்செய ராவ் மற்றும், சுப்புலட்சுமி ஆகியோர் திருப்பதியில் சட்டப்படிப்பு படித்துள்ளனர். தற்போது மாலை நேரக்கல்லூரி முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது என்பதை கடந்த கட்டுரையிலேயே பார்த்தோம். திருப்பதியில் படித்திருந்தாலும், முழு நேரக்கல்லூரியிலேயே படித்திருக்க வேண்டும்.
உயர்நீதிமன்றத்தில் நீதிபதியின் அந்தரங்கக் காரியதரிசியாக இருப்பவர்களுக்கு பணி மாலை 5.45க்குத்தான் முடிவடையும். ஆண் காரியதரிசியாக இருந்தால், இரவு ஏழு எட்டு கூட ஆகும். நாம் அப்படியெல்லாம் கணக்கிட வேண்டாம். மாலை 5.45க்கே இருவருக்கும் வேலை முடிந்து விட்டது என்று வைத்துக் கொள்வோம். சென்னை, பாரிமுனையில் அமைந்துள்ள நீதிமன்றத்திலிருந்து திருப்பதி 140 கிலோ மீட்டர். சென்னையிலிருந்து திருப்பதிக்கு இரண்டு வழிகள். ஒன்று மாநில நெடுஞ்சாலை. மற்றொன்று தேசிய நெடுஞ்சாலை. தேசிய நெடுஞ்சாலையில் சென்றால் மேலும் 9 கிலோ மீட்டர்கள் தூரம் அதிகம். எவ்வளவு வேகமான வாகனத்தில் சென்றாலும் 3 மணி நேரம் ஆகும்.
மாலை 5.45 மணிக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில், பணியை முடித்து விட்டு, தனஞ்செயராவ் படிக்கக் கிளம்பியிருந்தாரென்றால் இரவு 8.45 மணிக்குத்தான் திருப்பதியை அடைந்திருப்பார். இரவு 9 மணிக்கு அந்தக் கல்லூரியில் சட்டப் படிப்பு சொல்லிக் கொடுத்ததாக எந்தத் தகவலும் இல்லை.
நீதிபதி எலிப்பி தர்மாராவ் வார்த்தைகளிலேயே சொல்வதென்றால் இவர்கள் இருவரும், சென்னை உயர்நீதிமன்றத்தில் இவர்களின் அரசுப் பணிகளை முடித்து விட்டு, திருப்பதி சட்டக்கல்லூரியில் படிப்பை தொடர்ந்தது என்பது மனித சக்தியால் இயலாத காரியம் அல்லவா ? பிறகு எப்படி இவர்கள் இருவருக்கும் பதவி உயர்வு அளித்தார்…. ?
கடந்த கட்டுரையிலேயே, சென்னை உயர்நீதிமன்ற ஊழியர்கள் பலர், ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் சட்டப்படிப்பு படித்து விட்டு, பதவி உயர்வு பெறத் திட்டமிட்டுள்ளார்கள் என்று எழுதப்பட்டிருந்தது. இது தொடர்பாக உயர்நீதிமன்றப் பதிவாளருக்கு, புகாரும் அனுப்பப்பட்டிருந்த விபரம் தெரியப்பட்டிருந்தது.
இந்தப் புகார், நீதிபதி எலிப்பி தர்மாராவின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. இந்தப் புகார் மனுவை உதாசீனப்படுத்தி விட்டு, நீதிபதி எலிப்பி தர்மாராவ் ஒரு விடுமுறை நாளில் வந்து, சட்டவிரோதமான பதவி உயர்வு ஆணைகளில் கையொப்பம் இட்டுள்ளார் என்றால் அவர் தன்னை நேனே தேவுடு என்று கருதிக் கொள்கிறார் என்றல்லவா பொருள் ? நேனே தேவுடு என்றால் நானே கடவுள்.
சட்டப்படிப்பு தொடர்பாக அவர் அளித்துள்ள தீர்ப்பை அவரே மதிக்கிறாரா… அவர் மதிக்கவில்லை என்றால் மற்றவர்கள் எப்படி மதிப்பார்கள் ? அரசு அதிகாரிகள் எப்படி மதிப்பார்கள் ? அரசு எப்படி மதிக்கும் ?
சென்னை உயர்நீதிமன்ற டிவிஷன் பென்ச் தீர்ப்பை மதிக்காமல், தவறான பதவி உயர்வு அளித்து, நீதிமன்ற அவமதிப்புச் செயலில் ஈடுபட்டுள்ளதாக, சென்னை உயர்நீதிமன்றப் பதிவாளருக்கு இன்று ஃபேக்ஸ் மூலம், ஒரு வழக்கறிஞர் அறிவிக்கை அனுப்பப்பட்டுள்ளது என்பதை சவுக்கு மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறது.
மூன்று நாட்களில், இந்த சட்டவிரோதப் பதவி உயர்வுகள் திரும்பப்பெறப்படாவிட்டால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்படும் என்பதை மேலும் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறது.