இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த இரண்டு வழக்குகளின் விசாரணை, குறித்து விரிவாகப் பார்ப்போம்.
நேற்று எழுதப்பட்ட நேனே தேவுடு கட்டுரை படித்திருப்பீர்கள். அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தபடி நேற்று மாலையே ஃபேக்ஸ் மூலமாக வெளி மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் முழு நேர சட்டப்படிப்பு படித்த இரண்டு ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்கியதன் மூலம், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை அவமதிப்பு செய்த குற்றத்துக்கு ஆளாகியுள்ளதால், வழக்கறிஞர் அறிவிக்கை கிடைத்த மூன்று நாட்களுக்குள், சட்டவிரோதமாக வழங்கப்பட்ட பதவி உயர்வுகளை ரத்து செய்து, வெளி மாநிலங்களில் சட்டம் படித்த முழு நேர நீதிமன்ற ஊழியர்கள் மீது துறை நடவடிக்கை எடுக்கக் கோரி அனுப்பிய அறிவிக்கையை, பொறுப்பு தலைமை நீதிபதியான எலிப்பி தர்மாராவ் படித்திருப்பார் போலிருக்கிறது. அதன் தாக்கம் இன்று தமிழக மக்கள் உரிமைக் கழகம் தாக்கல் செய்திருந்த வழக்கு விசாரணையின் போது நன்றாக வெளிப்பட்டது.
முதல் வழக்கு மறுக்கால் குறிச்சியில் கடந்த ஜுலை மாதம் நடந்த ஒரு போலி என்கவுன்டர் குறித்த வழக்கு. இது குறித்து சவுக்கு தளத்தில் பட்டப்பகலில் ஒரு படுகொலை மற்றும் ஒரு கொலை ஓராயிரம் பொய்கள் ஆகிய கட்டுரைகளிலும் விரிவாக எழுதப்பட்டிருந்தது. இந்தப் படுகொலையில் சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர் மீது கொலை வழக்கு பதிவு செய்து, இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என்று தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கு விசாரணைக்கு வந்தது.
நீதிபதிகள் எலிப்பி தர்மாராவ் மற்றும் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
முதல் நாள் அனுப்பிய ஃபேக்ஸ் செய்தியைப் பார்த்து நீதிபதி எலிப்பி தர்மாராவ் கடும் வெறுப்பில் இருந்திருக்க வேண்டும். எடுத்த எடுப்பிலேயே, மனுதாரர் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று சந்தித்தாரா… ? என்று கேட்டார். இல்லை என்றதும் வெறும் செய்தித்தாளின் அடிப்படையில் எப்படி பொது நல வழக்கு தாக்கல் செய்கிறீர்கள் என்று கேட்டார். செய்தித்தாளின் அடிப்படையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யலாம் என்பதை உச்சநீதிமன்றம் பல வழக்குகளில் சுட்டிக்காட்டியுள்ளது என்றார் தமிழக மக்கள் உரிமைக் கழகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன். பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களோ, குடும்பத்தினரோதான் வர முடியும். ஒரு வழக்கறிஞர் வர முடியாது என்றார். இதனால் மனுவை தள்ளுபடி செய்கிறோம் என்றார்.
தள்ளுபடி செய்வதாக இருந்தால், இந்த போலி என்கவுன்டர் தொடர்பாக ஒரு புகார் அனுப்பப்பட்டுள்ளது. அந்தப் புகாரின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை அரசுத் தரப்பு சொல்ல வேண்டும். சொன்ன பிறகுதான் இந்த வழக்கில் முடிவெடுக்க முடியும். இது போன்ற வழக்குகளில் செய்தித்தாளை வைத்து, பொதுநல வழக்கு தாக்கல் செய்யக்கூடாது என்றால், காவல்துறையினர் யாரை வேண்டுமானாலும் சுட்டுக் கொலை செய்வார்கள் என்றார் ராதாகிருஷ்ணன். அரசுத்தரப்பைப் பார்த்து என்ன செய்திருக்கிறீர்கள் என்றார் எலிப்பி தர்மாராவ். வண்டு முருகன் தயாராக இருந்தார். மை லார்ட். சிபி சிஐடி விசாரணை நடைபெற்று வருகிறது. 4 அக்டோபர் 2012 அன்று சிபி சிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. 52 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு வருகிறார்கள் என்றார்.
உடனே திரும்பவும் எலிப்பி தர்மாராவ் முருங்கை மரத்தில் ஏறி விட்டார். நாங்கள் தள்ளுபடி செய்கிறோம். விசாரணை நடைபெற்று வருகிறது என்றார். உடனே ராதாகிருஷ்ணன், “நீங்கள் தள்ளுபடி செய்யுங்கள், அது குறித்து கவலை இல்லை. முதலில் என்னை வாதிட அனுமதியுங்கள். அதன் பிறகு தள்ளுபடி செய்யுங்கள்” என்றார். வேண்டா வெறுப்பாக சரி வாதிடுங்கள் என்றார்.
என்கவுன்டர் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் முக்கிய தீர்ப்புகளை எடுத்துரைத்த ராதாகிருஷ்ணன் என்கவுன்டர்கள் போன்ற விவகாரங்களில், மாநில காவல்துறை விசாரித்தால் அது நம்பிக்கை அளிக்காது என்று உச்சநீதிமன்றம் தெளிவாக சொல்லியிருந்ததை சுட்டிக் காட்டி வாதிட்டார். வேளச்சேரி என்கவுன்டர் வழக்கில் இந்தத் தீர்ப்புகள் உள்ளிட்ட பல்வேறு தீர்ப்புகள் இதே டிவிஷன் பென்ச் முன்னால் வாதிடப்பட்டதையும், அந்த வழக்கில் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதையும் சுட்டிக் காட்டினார். அந்த வழக்கில் உள்ள அதே அடிப்படைகள் இந்த வழக்குக்கும் பொறுந்தும் என்பதால், இதில் வேறு மாதிரியான முடிவு எடுக்க முடியாது என்பதையும் குறிப்பிட்டார்.
வண்டு முருகனைப் பார்த்து என்ன சொல்கிறீர்கள் என்றார். வண்டு முருகன் இந்திய தண்டனைச் சட்டம் 353 மற்றும் 307ன் கீழ் ஏற்கனவே வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. சம்பவத்திற்கு பிறகு அது 176 பிரிவாக மாற்றப்பட்டது என்றார்.
353 ஒரு பொது ஊழியரை ஆயுதத்தோடு தாக்குவது. 307 கொலை முயற்சி. சம்பவத்திற்கு பின்னர் 176. 176 என்பது, காவல் நிலையத்திலோ அல்லது சிறையிலோ ஒருவர் இறந்தால் நடக்கும் விசாரணை குறித்த பிரிவு.
நாங்குநேரி காவல்நிலையத்தைச் சேர்ந்த காவல்துறையினர், என்றைக்கு வழக்கை பதிவு செய்தார்கள், அந்த வழக்கு எப்போது 176ஆக மாற்றப்பட்டது, இறந்து போனவர் காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருந்தால்தானே இந்தப் பிரிவு பொறுந்தும் என்பன போன்ற கேள்விகள், அடிப்படை சட்ட அறிவு இருந்தாலே எழக்கூடிய கேள்விகள்… இதையெல்லாம் அரசு பதில் மனுத்தாக்கல் செய்த பிறகுதானே ஆராய முடியும் ? அதற்குள் வழக்கை ஏன் தள்ளுபடி செய்ய வேண்டும் ? அப்படி என்ன அவசரம் ?
பிறகு என்ன நினைத்தாரோ தெரியவில்லை. அரசுத் தரப்பை திங்களன்று பதில் மனுத்தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டார்.
வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் வாதிடாமல் விட்ட ஒரு விஷயம், கடந்த டிசம்பர் 13 அன்று மானாமதுரையில் ரவுடி வெள்ளத்துரை காக்கி உடை அணிந்து கொண்டு இரண்டு ரவுடிகளை சுட்டுக் கொன்ற போலி என்கவுன்டர் தொடர்பாக தொடரப்பட்ட பொதுநல வழக்கில், இதே எலிப்பி தர்மாராவ்தான், அரசுத் தரப்பை பதில் மனுத்தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டார். அந்த வழக்கும், செய்தித்தாளின் அடிப்படையிலேயே, இதே வழக்கறிஞர் புகழேந்தியால் தாக்கல் செய்யப்பட்டது. அன்றைக்கும், இன்றைக்கும் என்ன மாற்றம் வந்து விட்டது ?
அடுத்த வழக்கு மீன் குழம்பு வைப்பது பற்றியது. முன் விபரம் தெரியாத வாசகர்கள், நமக்கு வாய்த்த அடிமைகள் என்ற கட்டுரையைப் படிக்கவும்.
எடுத்த எடுப்பிலேயே பொதுநல வழக்கு என்ற போர்வையில், அரசுப் பணிகள் (Service Matter) தொடர்பாக தொடரப்பட்டட வழக்கு என்றார் எலிப்பி தர்மாராவ். இது சர்வீஸ் மேட்டர் அல்ல… சம்பந்தப்பட்டவரின் பணி இடைநீக்கம் ரத்து செய்யப்பட்டு விட்டது. அதற்காக இந்த வழக்கு தொடரப்படவில்லை என்றார் ராதாகிருஷ்ணன்.
பாதிக்கப்பட்டவர்தானே வந்திருக்க வேண்டும்… ? ஒரு வழக்கறிஞர் எப்படி இந்த வழக்கை எடுத்து வரலாம் ? என்றார் எலிப்பி. வழக்கறிஞர்களுக்கு கீழமை நீதிமன்றங்களிலும், உயர்நீதிமன்றத்திலும் நடப்பவற்றை சீர் செய்யும் பொறுப்பு இருக்கிறது என்றார். நீதித்துறையில் வழக்கறிஞர்களுக்கு சம அந்தஸ்தும் பொறுப்பும் உள்ளது என்றார். மேலும், நீதித்துறையில் இது போன்ற அடிமைத்தனங்கள் நடப்பதை வழக்கறிஞர்கள் கேட்காமல் வேறு யார் கேட்பது என்றார்.
உடனே எலிப்பி தர்மாராவ், இந்த நியமனங்கள் (அலுவலக உதவியாளர்கள்) எல்லாம் எப்படி நடக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா ? எப்படி வேலைக்கு வருகிறார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா என்றார்.
ராதாகிருஷ்ணன், அலுவலக உதவியாளர் நியமனங்கள் எப்படி நடைபெறுகின்றன என்பது எங்களுக்கு நன்றாகத் தெரியும் என்றார், தெரியும் என்பதில் ஒரு அழுத்தத்தோடு.
வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன்
உடனே எலிப்பி தர்மாராவ், வேலை கிடைக்கும் வரை அவர்கள் எங்கள் பாதங்களைத் தொடுகிறார்கள், கிடைத்ததும் சரிவர வேலை பார்ப்பதில்லை (Do you know till they get appointment they touch our feet… but after getting appointment they behave like this)
எங்களுக்கு பழம் வேண்டுமென்றால் கூட, நாங்களே சந்தைக்குச் சென்று பழம் வாங்க வேண்டுமா ? (If we want to have fruit, should we go to the market and get fruit ?)
அருகில் இவ்வளவு நேரம் பேசாமல் இருந்த நீதிபதி அருணா ஜெகதீசன் நீதிபதிகள் நீதிமன்றத்துக்கு வந்து விட்டால் வீட்டில் யார் சமைப்பது என்றார்.
வலது ஓரத்தில் இருப்பவர் நீதிபதி அருணா ஜெகதீசன்
மீண்டும் குறுக்கிட்ட எலிப்பி தர்மாராவ், அவர்கள் அடிப்படை பணியாளர்கள், சேவை செய்வதற்காகவே அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள் சேவை செய்ய வேண்டிய நேரத்தில் அவர்கள் சேவை செய்ய வேண்டும். இந்த பொதுநல வழக்கு அதிகப்படியானது என்றார். (They belong to basic service. They are here to serve. When they are required to serve, they have to serve. This is too much).
பிறகு, பாதிக்கப்பட்டவர் ஏன் இந்த மனுவை தாக்கல் செய்யவில்லை என்று கேள்வி எழுப்பினார்.
உடனே ராதாகிருஷ்ணன், நீதிமன்றத்தைப் பொறுத்தவரை நியமன அதிகாரியும். (Appointing authority) ஒழுங்கு நடவடிக்கை அதிகாரியும், (Disciplinary Authority) நீதிபதியும் (Judge) ஒரே நபராக இருந்தால், பாதிக்கப்பட்டவர் எப்படி நீதிமன்றத்தை அணுக முடியும் என்றார்.
அதெல்லாம் சரி. பாதிக்கப்பட்டவர் தாக்கல் செய்யவில்லை, அதனால் இந்த மனுவை தள்ளுபடி செய்கிறோம் என்றார். உடனே ராதாகிருஷ்ணன், இந்த மனுவில் பொதுவான கோரிக்கை எழுப்பப்பட்டுள்ளது. பணி தொடர்பானது அல்ல. தமிழகத்தில் எந்த நீதிபதியும் வீட்டு வேலைக்கு அலுவலக உதவியாளரை பயன்படுத்தக் கூடாது என்று சுற்றறிக்கை அனுப்பவேண்டும் என்று கோரப்பட்டுள்ளது, தவிரவும் அந்த நீதித்துறை நடுவர் மீது துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது, அது குறித்து வாதிட வேண்டும் என்றார்.
உடனே எலிப்பி தர்மாராவ், இது குறித்து நிர்வாக ரீதியாக நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம் (We will take action in the administrative side) என்று கூறி, வழக்கை முடித்து வைத்ததாக கூறினார். இது திறந்தவெளி நீதிமன்றத்தில், அனைவர் முன்னிலையிலும் நடந்தது.
ஆனால் மாலையில், எலிப்பி தர்மாராவ் கொடுத்த தீர்ப்பில் இருந்த வாசகங்கள், Siince the party affected by the suspension has not filed this Writ Petition and the same has been filed by a practicing advocate, we are not inclined to entertain this petition.
பாதிக்கப்பட்ட நபர் இந்த வழக்கை தாக்கல் செய்யாமல், ஒரு வழக்கறிஞர் தாக்கல் செய்திருப்பதால், இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறோம்.
நீதிமன்றத்தில் அனைவர் முன்னிலையிலும் கொடுக்கப்பட்ட ஒரு தீர்ப்பை எப்படி மாற்றியிருக்கிறார் பார்த்தீர்களா…
சரி இப்போது தலைப்புக்கு வருவோம்.
இந்த வழக்கு நடக்கையில், எலிப்பி தர்மாராவ் உதிர்த்த முத்துக்கள், பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியன.
“வேலை கிடைக்கும் வரை அவர்கள் எங்கள் பாதங்களைத் தொடுகிறார்கள், கிடைத்ததும் சரிவர வேலை பார்ப்பதில்லை”
ஒரு மனிதன், இன்னொரு மனிதனின் காலில் விழுவதைப் போன்ற இழிவான காரியம் இருக்க முடியுமா ? பெரியவர்களின் காலில் மரியாதையோடு விழுவதை விட்டு விடுங்கள். தனக்கு ஒரு காரியம் ஆக வேண்டும் என்பதற்காக மற்றொருவர் காலில் விழுவதையும், அதை ஒருவர் அங்கீகரிப்பதும் நாகரீகமான மனிதன் செய்யும் செயலா ? அதிமுகவில் உள்ள அடிமைகள் எதற்காக ஜெயலலிதாவின் காலில் விழுகிறார்கள் ? ஜெயலலிதா ஒரு ஜென் தத்துவ ஞானி என்பதற்காகவா ? காலில் விழுந்தால் தங்களுக்கு ஆதாயம் என்பதற்காகத்தானே விழுகிறார்கள் ? அப்படி காலில் விழுபவர்களுக்கு பதவியை வழங்கி கொள்ளையடிக்க விட்டு வேடிக்கைப் பார்ப்பவர்தானே ஜெயலலிதா.
அதைப்போன்றதுதானே எலிப்பி தர்மாராவ் இன்று நீதிமன்றத்தில் சொன்னதும் ?‘ ஒரு மனிதன் காலில் விழுகிறானே, அப்படி விழும் நிலையில் அவன் வாழ்நிலை உள்ளதே என்று வெட்கப்பட வேண்டாமா ? அதுபோன்ற காட்டுமிராண்டித்தனமான அடிமை வழக்குககளை ஒழித்துக் கட்ட வேண்டாமா ? சுயமரியாதை உள்ள ஒரு மனிதன் காலில் விழுவானா ? அப்படி விழுந்தாலும் சுயமரியாதை உள்ள எந்த மனிதனாவது அதை அங்கீகரித்து ஊக்குவிப்பானா ?
அரசு வேலையை காலில் விழுவதால் வழங்கப்படுகிறது என்பதை தலைமை நீதிபதி அந்தஸ்தில் உள்ள ஒருவர் சொல்லலாமா ? விதிமுறைகளின்படி, அரசு வேலை வழங்கப்பட வேண்டும் என்று நூற்றுக்கணக்கான தீர்ப்புகள் உள்ள நிலையில், ஒரு நீதிபதி காலில் விழுந்து வேலை வாங்குகிறார்கள் என்று பேசுவதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும் ? இப்படிக் காலில் விழுந்ததால்தான் 55 அலுவலக உதவியாளர்களை சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழங்குகிறார்களா ? பாலியல் வன்முறைக் குற்றவாளி நீதிபதியின் காலில் விழுந்தால் அவனை விட்டு விடுவாரா எலிப்பி தர்மாராவ் ?
அப்படியே காலில் விழுந்து வேலை பெற்றதாகவே வைத்துக் கொள்ளலாம். அலுவலக உதவியாளராக வேலை பெற்ற ஒருவன், காலம் முழுவதும், நீதிபதியின் வீட்டில் கக்கூஸ் கழுவிக் கொண்டிருக்க வேண்டுமா ?
இந்த நீதிபதிகள் கூடத்தான் “ நீதிபதியாக நியமிக்கப்பட்ட நான், மனசாட்சிப்படி, இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் பால் உறுதியாகவும், உளச்சான்றோடும் பணியாற்றுவேன், எனது பணிகளை விருப்பு வெறுப்பின்றி, பாகுபாடின்றி, பயமின்றி, சட்டத்தின் மேன்மையைக் காக்க பாடுபடுவேன்” என்று பதவியேற்கையில் உறுதிமொழி எடுத்துக் கொள்கிறார்கள். அதன்படிதான் நடந்து கொள்கிறார்களா ?
காலில் விழுந்து வேலை வாங்கியதால் ஒருவன், காலம் முழுவதும் அடிமையாக இருக்க வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பது எப்படிப்பட்ட ஒரு எதேச்சதிகாரம் ? ஆணவம் ? காலில் விழுந்து வேலை வாங்கிய ஒருவனை கொத்தடிமையாக வைத்திருக்க வேண்டும் என்று நினைக்கும் எலிப்பி தர்மாராவ் போன்ற நீதிபதிகள்தான் அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கிய உரிமைகளை காப்பாற்றுவார்கள் என்று நீதிபதிகளாக நியமிக்கிறார்கள்…. இப்படிக் காலில் விழும் அடிமை மனோபாவத்தை வளர்த்தெடுக்கவா அம்பேத்கர் அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கினார் ?
காலில் விழுந்து வேலை வாங்குவதை சுயமரியாதைக்கு இழுக்கு, அடிமைத்தனம் என்று நினைக்காத எலிப்பி தர்மாராவ் போன்ற நீதிபதிகள், யார் காலிலாவது விழுந்து நீதிபதியாகியிருக்க மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம் ?
அடுத்ததாக எலிப்பி தர்மாராவ் சொன்னது அகம்பாவத்தின் உச்சம்.
“எங்களுக்கு பழம் வேண்டுமென்றால் கூட, நாங்களே சந்தைக்குச் சென்று பழம் வாங்க வேண்டுமா ?”
ஒரு சந்தைக்குச் சென்று பழம் வாங்குவதைக் கூட இழுக்கு என்று கருதும் எலிப்பி தர்மாராவ் என்ன வானத்தில் இருந்து குதித்தவரா ? இறைத்தூதரா ? சாகாவரம் பெற்றவரா அல்லது தெய்வப் பிறவியா ? அவரும் மனிதர்தானே…. அவருக்கும் மரணம் என்பது உண்டுதானே ?
கடையில் சென்று பழம் வாங்குவதை இழுக்காகக் கருதும் எலிப்பி தர்மாராவ், இதே உயர்நீதிமன்றத்தின் எதிரில் உள்ள சந்துகளில் 30 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வரும் மனிதர்களைப் பார்த்திருக்கிறாரா ? அவர்கள் எப்படிப்பட்ட சூழலில், கழிப்பிடம் கூட இல்லாமல் வாழ்ந்து வருகிறார்கள் என்பது எலிப்பிக்கு தெரியுமா ? 30 ஆண்டுகளுக்கும் மேலாக அவர்கள் வாழ்க்கை மேம்படாமல் இன்னும் நடைபாதையிலேயே வறுமையின் கோரப்பிடியில் வாழ்ந்து வருகிறார்கள் என்பது அவருக்குத் தெரியுமா ?
அவர் சார்ந்து சமூகத்தையே சேர்ந்த, லட்சக்கணக்கான மக்கள் எப்படிப்பட்ட மோசமான வறுமையில், சேரிகளில் உழன்று வருகிறார்கள் என்பது எலிப்பிக்குத் தெரியுமா ? அந்த சேரி மனிதர்களின் வாழும் உரிமைகளைப் பாதுகாத்து, அவர்களுக்கான உரிமைகளை வழங்க வேண்டிய நிலையில் இருக்கும் ஒரு நீதிபதி, கடையில் சென்று பழம் வாங்குவது இழுக்கு என்று கருதுவாரேயானால், இவரைப்போன்ற நீதிபதிகள், ஏழைகள், உழைப்பாளிகள், தலித்துகளை என்ன மனநிலையோடு பார்ப்பார்கள் என்பதை உங்கள் ஊகத்துக்கே விட்டு விடுகிறேன்.
திறந்த நீதிமன்றத்தில் ஒரு தீர்ப்பைக் கூறியதும் அந்த அடிப்படையில் தொலைக்காட்சி ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. மாலையில் உத்தரவை பார்த்தால், சம்பந்தப்பட்டவர் வழக்குக்காக வரவில்லை, வழக்கறிஞர் வந்திருக்கிறார் என்பதால், மனுவை தள்ளுபடி செய்கிறேன் என்று தீர்ப்பெழுதுவது எந்த விதமான நீதி ? இதுதான் உளச்சான்றின்படி எழுதப்படும் நீதியா ?
நீதிபதி அருணா ஜெகதீசன் கேட்ட கேள்வியும் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியதே. நீதிபதிகள் நீதிமன்றத்துக்கு வந்தால் வீட்டில் யார் சமைப்பது.
நீதிபதி அருணா ஜெகதீசன் அவர்களே…. இதே சென்னை உயர்நீதிமன்றத்தில் நூற்றுக்கணக்கான பெண் ஊழியர்கள் இருக்கிறார்கள். அவர்கள் காலையில் எழுந்து, சமைத்து, பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி, கணவருக்கு உணவு கட்டி, தங்களுக்கும் உணவு கட்டி, உரிய நேரத்தில் வருகைப் பதிவேட்டைப் பிடிக்க, பேருந்துக் கூட்ட நெரிசலில் சிக்கி சக்கையாக பிழியப்பட்டு, நீதிமன்றம் வந்து, திமிர் பிடித்த வழக்கறிஞர்களிடம் ஏச்சு வாங்கி, மாலை ஆறு மணிக்கு வேலையை முடித்து, மீண்டும் அதே கூட்ட நெரிசலில் சிக்கி, வீடு சென்று, மீண்டும் இரவு உணவு சமைத்து, வார இறுதியில் வரும் அந்த ஞாயிற்றுக்கிழமைக்காக ஏங்கியபடி தங்கள் வாழ்க்கையை ஓட்டுவது உங்களுக்குத் தெரியுமா ? அவர்களிடம் கேட்டுப்பாருங்கள்… நீதிமன்றத்துக்கு வந்தாலும் எப்படி சமைப்பது என்பதை சொல்வார்கள். நீதிபதியாகி விட்டால் சமையல் செய்வது கூட இழிவான செயலாக எப்படி மாறிப்போகிறது என்பது உண்மையிலேயே புரியவில்லை.
உங்களைப் போன்ற நீதிபதிகளுக்கு வேலைக்கு ஒன்பது பேர் இருக்கிறார்கள். தும்மினால் மூக்கு துடைத்து விடக் கூட ஆட்களை வைத்திருக்கிறீர்கள். நீங்கள் நடக்கையில் உஸ்ஸு சொல்லக் கூட ஆட்கள் இருக்கிறார்கள். உங்களோடு பணியாற்றும் உழைக்கும் பெண்களைப் பற்றி யோசித்திருக்கிறீர்களா ? இதே தமிழ்நாட்டின் சேரிகளில் வசிக்கும் தாய்மார்கள், கூலி வேலை செய்துகொண்டே, குடும்பத்தை எப்படிப் பார்த்துக் கொள்கிறார்கள் என்பதைப் பற்றி எப்போதாவது சிந்தித்திருக்கிறீர்களா ? அந்த உழைப்பாளி மக்களின் வரிப்பணத்தில்தான் உங்களுக்கு இந்த சொகுசு வாழ்க்கை என்பதை ஒரு நிமிடமாவது யோசித்திருக்கிறீர்களா ?
அன்பார்ந்த நீதிபதிகளே… …. நீதிபதியாகிய மறுநாளே உங்களுக்கெல்லாம் தலையில் கொம்பு முளைத்து விடுவதாக நீங்கள் நினைத்துக் கொள்கிறீர்கள். அப்படிக் கொம்பு முளைத்ததாக நினைத்துக் கொள்வதால்தான், கொத்தடிமைகளை வளர்க்க விரும்புகிறீர்கள். இது போன்ற வழக்குகளை உங்களிடம் எடுத்து வந்தால் நீங்கள் உடனே உரிமைகளை நிலைநாட்டி விடுவீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கும் இல்லை. ஏனென்றால், உயர்நீதிமன்ற நீதிபதிகளாகிய நீங்கள் உங்கள் வீட்டில் இதை விட மோசமான கொத்தடிமைகளை வைத்திருக்கிறீர்கள் என்பது தெரியும். வள்ளியூர் நீதித்துறை நடுவருக்காவது ஒரே ஒரு கொத்தடிமை. உங்கள் ஒவ்வொருவருக்கும் வீட்டில் 9 கொத்தடிமைகள் என்பது எங்களுக்கும் நன்றாகத் தெரியும். கொத்தடிமைகள் வேண்டும் என்பதால்தான், விதிகளைப் பின்பற்றாமல் காலில் விழும் நபர்களை சட்டவிரோதமாக நியமிக்கிறீர்கள். இந்த கொத்தடிமைத்தனத்தை ஒழிக்க ஒரு நாளும் நீங்கள் சம்மதிக்க மாட்டீர்கள் என்பதும் எங்களுக்குத் தெரியும்.
ஆனால், இப்படி ஒரு வழக்கை தாக்கல் செய்ததால்தான், உங்கள் மனதில் உள்ள அழுக்குகள் இன்று வெளித்தெரிந்தது. எப்படிப்பட்ட எதேச்சாதிகாரிகளாகவும், மனிதத் தன்மையற்றவர்களாகவும், பிரபுத்துத்துவ மனப்பான்மையோடு நீங்கள் இருக்கிறீர்கள் என்பதை உங்கள் தீர்ப்புகள் மூலமாக வெளிக் கொண்டு வருவதற்காகவே இப்படிப்பட்ட பொதுநல வழக்குகளைத் தாக்கல் செய்கிறோம். இந்த வழக்குகளைத் தள்ளுபடி செய்வதால் எங்களுக்கு வருத்தமோ அவமானமோ இல்லை.
மனித உரிமைகளைக் காக்க மறுத்து, கொத்தடிமைத்தனத்துக்கு உரம் போட்டு வளர்க்கும் கொம்பு முளைத்த நீதிபதிகளாகிய உங்களுக்குத்தான் அவமானம்.