கூடங்குளம் அணு உலையை எதிர்த்து அப்பகுதி மக்கள் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக, தொடர்ந்து சளைக்காமல் போராடி வருவதை, சவுக்கு வாசர்கள் அறிவீர்கள். இது தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டதையும், அவ்வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததையும் அறிவீர்கள். தற்போது உச்சநீதிமன்றத்தில் இத்தீர்ப்பினை எதிர்த்து செய்யப்பட்ட மேல்முறையீடு வழக்கு விசாரணைக்குப் பின், தீர்ப்புக்காக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் 150வது ஆண்டு விழா அழைப்பிதழை வழங்கும் நீதிபதி சித்ரா வெங்கட்ராமன் மற்றும் ஜோதி Money
அணு சக்தி கழகம், அணு சக்தி முன்னேற்றக் கழகம், அணு சக்தி மறுமலர்ச்சிக் கழகம், அணு சக்தி அரைவேக்காட்டுக் கழகம், அணுசக்தி முற்போக்கு கழகம் என்று ஏகப்பட்ட துறைகளை வைத்திருக்கிறார்கள் அல்லவா…… அணு உலை தொடர்பாக இவர்கள் ஆளாளுக்கு சில விதிகளை வைத்திருக்கிறார்கள். இந்த விதிமுறைகளை இவர்கள் ஒழுங்காக கடைபிடிக்காமலேயே அணு உலைகளைத் திறக்க வேண்டும் என்று துடியாகத் துடித்து வருகிறார்கள்.
இப்படி இவர்கள் வகுத்துள்ள விதிமுறைகளை ஒழுங்காக பின்பற்ற உத்தரவிடுங்கள் என்றுதான் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கின் விவாதங்கள் மற்றும் தீர்ப்பு குறித்து கூடங்குளம் அணுமின் திட்ட உயர்நீதிமன்றத் தீர்ப்பும் முற்றுப் பெறாத விவாதங்களும் என்ற தலைப்பில் வழக்கறிஞர் வெற்றிச்செல்வன் என்பவர் விரிவாக கீற்று தளத்தில் எழுதியிருக்கிறார். அதனால் வழக்கு விபரங்களுக்குள் செல்ல விரும்பவில்லை.
நமக்கு எது முக்கியம்… ? தீர்ப்பு எழுதிய நீதிபதிதான் நமக்கு முக்கியம். இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய உயர்நீதிமன்ற அமர்வு நீதிபதிகள் ஜோதி Money மற்றும் தேவதாஸ் தலைமையிலானது. நீதிபதி தேவதாஸ், இளைய நீதிபதி. அவரால் அந்த அமர்வில் எந்த முடிவும் எடுக்க முடியாது. ஆகையால், அந்த தீர்ப்பு முழுக்க முழுக்க நீதிபதி ஜோதி Moneyயுடையது. மற்றொரு வழக்கில் ஜோதி Moneyயோடு சேர்ந்து விசாரணை மேற்கொண்டவர், நீதிபதி துரைசாமி. இவரும் பணியில் இளையவர்.
அந்த வழக்கின் தீர்ப்பு மொத்தம் 133 பக்கங்கள். 133 பக்கங்கள் என்றதும் நீதிபதி இவ்வளவு விரிவாக ஆராய்ந்து தீர்ப்பு எழுதியிருக்கிறாரே…. என்று வியக்காதீர்கள். அந்த 133 பக்கங்களில், 130 பக்கங்களுக்கு என்ன இருக்கிறது தெரியுமா ? இந்த வழக்கில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட மனுதாரர்கள் தங்கள் மனுவில் என்னென்ன சொல்லியிருக்கிறார்கள், அதற்கு பதிலாக மேலே சொன்ன அணு கழகங்கள், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், மத்திய அரசு, மாநில அரசு, என்று ஒவ்வொருவரும் என்னென்ன சொன்னார்கள், சுற்றுச் சூழல் தொடர்பாக உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் ஒரு பத்து பதினைந்து எடுத்துக் கொண்டு, அதில் முக்கிய பத்திகளை எழுதி முடித்தபோது 130 பக்கங்கள் வந்தன. 135வது பக்கத்தில்தான் தனது தீர்ப்பை ஜோதி Money தொடங்குகிறார்.
சரி 130 பக்கம் கழித்தாவது தீர்ப்பைத் தொடங்குகிறாரா என்று பார்த்தால், ஜோதி Money அப்துல் கலாமே, கூடங்குளம் அணு உலை ஒரு அலாவுதீனின் அற்புத விளக்கு என்று சொல்லி விட்டார் என்று தொடங்குகிறார். அப்துல் கலாம், கூடங்குளம் அணு உலைத் திட்டம் கடவுளின் திட்டம் என்று கூறியிருக்கிறார் என்று கூறி விட்டு, ஜோதி Money தொடர்ந்து அப்துல் கலாம் அணு உலையைத் திறப்பதற்கு கைமாறாக அப்பகுதி மக்களுக்கு 200 கோடி ரூபாய்க்கு சாலை போடுதல், மருத்துவமனை கட்டுதல், ப்ராட் பேண்ட் வசதி, பள்ளிக்கூடம் கட்டுதல், என்று லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று கூறியதை கோடிட்டுக் காட்டுகிறார். (ஒரு பக்கம் முடிந்தது) அப்துல் கலாமுக்குத்தான் அறிவில்லை என்றால், ஜோதி Money அதை விட மோசமாக இருக்கிறார். அணு உலையில் விபத்து ஏற்பட்டால் உயிரே போய் விடும் என்று அப்பகுதி மக்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் ப்ராட்பேண்ட் கொடுங்கள் ரப்பர் பேண்ட் கொடுங்கள் என்று அரசியல்வாதி போல பேசிய அப்துல் கலாமின் ஆலோசனைகளைப் பற்றி ஜோதி Money சிலாகிக்கிறார்.
அதையடுத்து தமிழக அரசு கூடங்குளத்தில் மருத்துவமனை கட்ட, வீடுகள் கட்ட, என்று பிச்சை போட்ட 500 கோடியைப் பற்றி சிலாகிக்கிறார் (அரை பக்கம் முடிந்தது.)
இதையடுத்து பின் வரும் பத்தியை தீர்ப்பாகக் கூறுகிறார்.
By taking note of the overall situation explained in detail, we are of the view that the KKNPP in respect of Units 1 and 2 do not suffer from any infirmities either for want of any clearance from any of the authorities, including the MoEF, AERB, TNPCB, and the Department of Atomic Energy, and there is absolutely no impediment for the NPCIL to proceed with the project. However, it is made clear that all the above said regulatory authorities shall periodically oversee the compliance and maintenance of standards of pollution, etc., as contemplated under law. It is also made clear that the Government of Tamil Nadu, through the District Collector, Tirunelveli, shall take appropriate steps for the purpose of conducting off-shore drill periodically in all villages by involving not only the officials, but also public and also create awareness among the people.
மேற்கூறிய காரணங்களால், ஒட்டு மொத்த விவரங்களையும் சூழலையும் கணக்கிலெடுத்து கூடங்குளம் அணு உலை தொடங்குவதற்கு எந்தத் தடையும் இல்லை. ஆனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அணு உலை பாதுகாப்பாக இயங்குகிறதா என்பதை அவ்வப்போது ஆய்வு செய்து கவனித்துக் கொள்ள வேண்டும், தமிழக அரசு அடிக்கடி பாதுகாப்பு சோதனை பயிற்சி நடத்த வேண்டும் (விபத்து நடந்தால் எப்படி ஓடுவது என்று) என்று கூறுகிறார். (இன்னொரு அரைப் பக்கம் முடிந்தது)
இறுதியாக, மீண்டும் அப்துல் கலாம் கூறியவற்றையும், தமிழக அரசின் திட்டங்களையும் விவரித்து இவை அத்தனையையும் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்று கூறி முடிக்கிறார். இவ்வளவுதான் மொத்தத் தீர்ப்பு.
பொதுநல வழக்கைத் தாக்கல் செய்திருந்த பூவுலகின் நண்பர்கள், அணு உலைகள் தொடர்பாக விரிவான ஆராய்ச்சியில் ஈடுபட்டு, பல்வேறு விவகாரங்களை நீதிமன்றத்தின் பார்வைக்கு வைத்திருந்தனர். மத்திய அரசின் அணு உலை முன்னேற்றக் கழகங்கள் எத்தனை இடங்களில் பாதுகாப்பு அம்சங்களை உதாசீனப்படுத்தியுள்ளன, உலகில் பல்வேறு இடங்களில் உள்ள அணு உலைகளில் கடைபிடிக்கப்படும் பாதுகாப்பு அம்சங்கள் எதுவுமே கூடங்குளம் விவகாரத்தில் கடைபிடிக்கப்படவில்லை, உலகில் உள்ள பெரும்பாலான நாடுகளில் உள்ள அணு உலைகளை கண்காணிக்க, தனிப்பட்ட, சுதந்திரமான அரசுக் கட்டுப்பாட்டில் இல்லாத அமைப்புகள் உள்ளன, ஆனால் இந்தியாவில் உள்ள அணுக் கழகங்கள் அனைத்துமே அரசுக் கட்டுப்பாட்டில் உள்ளன என்று பல்வேறு விவகாரங்களை விரிவாகக் கூறியிருந்தனர்.
ஆனால் இவை எதையுமே விவாதிக்கவில்லை ஜோதி Money, அப்துல் கலாமே சொல்லி விட்டார். இதுதான் அவரின் தீர்ப்பின் அடிப்படை. அப்துல் கலாம் அணு விஞ்ஞானியே அல்ல என்று பல்வேறு விஞ்ஞானிகள் கூறியிருக்கின்றனர். இதை கவனத்தில் கொள்ள ஜோதி Money தவறி விட்டார். இதையெல்லாம் விட மோசமான அயோக்கியத்தனம், கூடங்குளம் அணு உலைத் திட்டம் கடவுளின் திட்டம் என்று அப்துல் கலாம் கூறியுள்ளதை தனது தீர்ப்பில் ஜோதி Money எடுத்தாண்டிருப்பதுதான்.
ஒரு நீதிபதி என்பவர் மனுதாரர் கூறும் எல்லா விஷயத்தையும் மறுக்கலாம். ஆனால் அவ்வாறு மறுப்பதற்கான விரிவான காரணங்களை தனது தீர்ப்பில் குறிப்பிட வேண்டும். அதுதான் ஒரு நீதிபதிக்கு அழகு…. ஆனால் ஜோதி Money….
இதே விவகாரம் தொடர்பாக மற்றொரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த வழக்கில், புகுஷிமா விபத்துக்குப் பிறகு, அனைத்து அணு உலைகளின் பாதுகாப்பு குறித்து மேலே குறிப்பிடப்பட்ட அணுக் கழகங்கள் ஒரு நிபுணர் குழு அமைத்து 17 பரிந்துரைகளை கொடுத்துள்ளன. இந்த பரிந்துரைகள் அனைத்து அணு உலைகளுக்கும் பொருந்தும். ஆனால் கூடங்குளம் அணு உலையில் இந்த பரிந்துரைகள் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை எனவே, கூடங்குளம் அணு உலை செயல்படுத்தப்படுவதற்கு முன்பாக, அந்தப் பரிந்துரைகளை முழுமையாக செயல்படுத்த உத்தரவிட வேண்டும் என்று இந்த வழக்கில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் தீர்ப்பளித்த ஜோதி Money என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா ? புகுஷிமா விபத்துக்குப் பின்னர் அமைக்கப்பட்ட குழு 17 பரிந்துரைகள் அளித்திருப்பது உண்மைதான். அவற்றில் சில நடைமுறைப் படுத்தப்பட்டிருப்பதும், சில நடைமுறைப் படுத்தப்படாமல் இருப்பதும் உண்மைதான். விஞ்ஞானிகளுக்கு எதை எப்போது நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது தெரியும். அதை முடிவு செய்ய வேண்டியது நீதிமன்றத்தின் வேலை அல்ல என்று கூறியுள்ளார். எதை எப்போது நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை விஞ்ஞானிகள்தான் முடிவு செய்யவேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அரசியல் அமைப்புச் சட்டப் பிரிவு 21 உத்தரவாதப்படுத்தியுள்ள வாழும் உரிமையை நிலை நாட்டுவது நீதிமன்றத்தின் வேலை மட்டுமல்ல… …. கடமை. அந்த வாழும் உரிமைக்கு ஆபத்து வருகையில்தான் மக்கள் நீதிமன்றங்களை அணுகுகிறார்கள்.
கூடங்குளம் அணு உலை பாதுகாப்பானது, எவ்வித ஆபத்தும் இல்லை என்று குரல் கொடுக்கும் அறிவாளிகள் யாரும், இந்த அச்சத்தைப் போக்க நான் கூடங்குளம் அணு உலை அருகிலேயே குடியேறுகிறேன் என்று ஏன் சொல்லத் தயாராக இல்லை என்பதை ஜோதி Money யோசிக்க மறந்து விட்டார். கூடங்குளம் மக்களுக்கு ப்ராட்பேண்ட் வழங்க வேண்டும் என்று பரிந்துரை அப்துல் கலாம் ஏன் கூடங்குளத்திலேயே குடியேறக் கூடாது… ? மற்றவர்களைப் போல அவருக்கு என்ன பிள்ளையா குட்டியா… ? பட்டாபட்டி அண்டர்வேரோடு கிளம்பி, கூடங்குளத்திலேயே குடியேறலாமே… அவருக்கு தேவையான பாதுகாப்புகளை முன்னாள் குடியரசுத் தலைவர் என்ற முறையில் அரசு செய்து தர தயாராக இருக்கும் அல்லவா ? இவையெல்லாம் ஏன் நடக்கவில்லை என்பதை ஜோதி Money சற்றும் யோசிக்கத் தயாராக இல்லை.
வன்கொடுமைக்கு ஆளாகும் ஒரு தலித்தின் வேதனையை எப்படி யாரும் புரிந்து கொள்ள முடியாதோ…. பாலியல் வன்முறைக்கு உள்ளாகும் ஒரு பெண்ணின் வலியை எப்படி யாரும் புரிந்து கொள்ள முடியாதோ…. அதோ போலத்தான் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் சூழலில் இருக்கும் கூடங்குளம் மக்களின் வேதனையையும் யாரும் புரிந்து கொள்ள இயலவில்லை. இதற்கு ஜோதி Moneyயும் விதி விலக்கல்ல.
அணு உலையை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று இடிந்தகரை மக்களுக்கு அறிவுரை சொல்லும் அத்தனைபேரும் ஒரு உட்காரணத்தோடுதான் (Hidden Agenda) பேசுகிறார்கள், அப்துல் கலாம் உட்பட. நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் குஜராத்தில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டபோது வாயைத் திறக்காத கலாம், நாடெங்கிலும் தலித்துகள் மீது வன்கொடுமைகள் கட்டவிழ்த்து விடப்பட்டபோது வாய்த்திறக்காத கலாம், ஈழத்தில் நடந்த படுகொலைகளுக்கு இந்தியா ஆயுதம் வழங்கிக் கொண்டிருந்தபோது வாய்த்திறக்காத கலாம், ஒரு அணு உலையை இயக்குவதற்கு லஞ்சமாக, ப்ராட் பேண்ட் உள்ளிட்ட வசதிகளை வழங்குங்கள் என்று சொல்வது வியப்பாக இருக்கிறது.
இடிந்தகரை மக்களின் வேதனையை சற்றும் புரிந்து கொள்ளாமல் பேசும் அனைத்து முக்கிய பிரமுகர்களைப் போலத்தான் ஜோதி Moneyயும் இந்தத் தீர்ப்புகளை வழங்கியிருக்கிறார்.
கூடங்குளம் அணு உலையை எப்படியாவது திறந்து விட வேண்டும், ஆயிரம் பிணங்களின் மீதாவது அந்த அணு உலையை நடத்தி விட வேண்டும் என்று மத்திய அரசு முனைப்பாக இருப்பது வெளிப்படையான உண்மை. மத்திய அரசு தும்மினால் கூட, அது தமிழகத்துக்கு எதிரான தும்மல் என்று கடும் கோபத்தோடு விமர்சனம் செய்யும் ஜெயலலிதாவைக் கூட, இந்த விஷயத்தில் மத்திய அரசு வளைத்துப் போட்டுள்ளதை இதற்கு சிறந்த உதாரணமாக சொல்லலாம். கூடங்குளத்தை நோக்கி எந்த மனித உரிமை ஆர்வலர் வந்தாலும் அவர்களை காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை என்ற பெயரில் வதைப்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழக வரலாற்றிலேயே இல்லாத வகையில் 144 தடைச்சட்டம் தொடர்ந்து அமல்ப்படுத்தப்பட்டு வருவதும் இதற்கு சிறந்த எடுத்துக் காட்டு.
அப்படி முழு முனைப்பாக கூடங்குளம் அணு உலையைத் திறக்க வேண்டும் என்ற மத்திய அரசின் முயற்சியின் ஒரு பகுதியே, கூடங்குளம் அணு உலை தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு ‘லஞ்சம் கொடுத்து வாங்கிய’ தீர்ப்பு. இப்படி லஞ்சம் பெற்று அணு உலைக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியவர்தான் நீதிபதி ஜோதி Money.
நீதித்துறையில் லஞ்சம் பெற்றுக் கொண்டு தீர்ப்பு வழங்குவது பல நேர்வுகளில் நடைபெற்றுத்தான் இருக்கிறது என்றாலும், இவை எதற்குமே ஆதாரங்களோ சாட்சிகளோ இருக்காது. ஆனால் இந்த கூடங்குளம் அணு உலை தொடர்பான விவகாரத்தில் லஞ்சம் பெற்றதற்கான ஆதாரத்தை நீதிபதி ஜோதி Moneyயே உருவாக்கியிருக்கிறார்.
கூடங்குளம் அணு உலைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்ய ஜோதி Money பெற்ற லஞ்சம், தேசிய சுற்றுச்சூழல் தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் பதவி.
2010ம் ஆண்டில், தேசியத் சுற்றுச் சூழல் தீர்ப்பாயச் சட்டம் அமலுக்கு வந்தது. சுற்றுச் சூழல் தொடர்பான பல்வேறு வழக்குகள் பல்வேறு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளதால், அந்த வழக்குகளை விரைவாக விசாரித்து தீர்ப்பளித்து, சுற்றுச் சூழலைப் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இத்தீர்ப்பாயம் உருவாக்கப்பட்டதாக மத்திய அரசு பசப்பினாலும், இத்தீர்ப்பாயம் உருவாக்கப்பட்டதற்கான உண்மையான காரணம் வேறு. இந்தியா முழுவதும் உள்ள இயற்கை வளங்களை பன்னாட்டு நிறுவனங்கள் சூறையாடுவதற்கு தெரிந்தோ தெரியாமலோ, உயர்நீதிமன்றங்களும், உச்ச நீதிமன்றங்களும் தடையாக உள்ளன. பெரும்பாலான நீதிபதிகள் ஜோதி Money போல தங்களை விலைக்கு விற்பனை செய்பவர்களாக இருந்தாலும், சில நேர்மையான நீதிபதிகள், விதிகளை மீறி, இயற்சை வளங்களை சுரண்டுவதை பல நேர்வுகளில் தடை செய்திருக்கின்றனர். இப்படி சில சமயங்களில் முக்கியமான வழக்குகள் இப்படிப்பட்ட நேர்மையான நீதிபதிகளிடம் மாட்டிக் கொள்வதால், தங்களுக்கு ஊதியம் வழங்கும் எஜமானர்களான பன்னாட்டு நிறுவனங்களிடம் அமைச்சர்களாக இருப்பவர்களால் பதில் சொல்ல முடிவதில்லை. வேதாந்தா நிறுவனத்திடம் பணம் வாங்கிய பிறகு ஒரு நீதிமன்றம் ஒரிஸ்ஸாவில் சுரங்கம் வெட்டுவதை தடை செய்தால், வேதாந்தாவுக்கு சிதம்பரம் என்ன பதில் சொல்வார் ? இப்படிப்பட்ட சிக்கல்களைத் தவிர்க்க, சுற்றுச் சூழல் தொடர்பாக உள்ள அத்தனை வழக்குகளையும் ஒரு தீர்ப்பாயத்தை உருவாக்கி அந்தத் தீர்ப்பாயத்திற்கு அவ்வழக்குகளை மாற்றி, அத்தீர்ப்பாயத்தின் நீதிபதிகளாக, பணியிலிருந்து ஓய்வு பெற்று, நாய் எலும்புத்துண்டுக்காக காத்திருப்பது போல, எங்காவது கலவரம் நடக்காதா…. எவனாவது ரகசிய டேப்பை வெளியிட மாட்டானா, விசாரணை கமிஷன் அமைக்கப்படாதா என்று காத்திருக்கும் நீதிபதிகளை அந்தத் தீர்ப்பாயத்திற்கு நீதிபதிகளாகப் போட்டால், பாவ்லாவின் க்ளாசிக்கல் கண்டிஷனிங் படி பழக்கப்படுத்தப்பட்டு, சொன்னபடியெல்லாம் கேட்பார்கள் என்ற எதிர்ப்பார்ப்பிலேயே மத்திய அரசு இந்த பசுமை தீர்ப்பாயத்தை உருவாக்கியுள்ளது.
இத்தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர்கள் மற்றும் தொழில்நுட்ப உறுப்பினர்கள் (Expert Member) ஆகியோரை தேர்ந்தெடுப்பதற்கு ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் தலைவராக உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியால், சட்ட அமைச்சகத்தோடு கலந்தாலோசிக்கப்பட்டு பரிந்துரைக்கப்பட்ட ஒரு உச்சநீதிமன்ற நீதிபதி இருப்பார். இதன் உறுப்பினர்களாக, பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவர், மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகத்தின் செயலர், கான்ப்பூர் ஐஐடியின் இயக்குநர், அகமதாபாத் மேலாண்மை நிறுவனத்தின் இயக்குநர், மத்திய கொள்கை ஆராய்ச்சி மையத்தின் தலைவர், ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பர். இந்தத் தேர்வுக்குழு, நீதித்துறை மற்றும் தொழில்நுட்ப நிபுணர் பதவிகளுக்கு வந்திருக்கும் விண்ணப்பங்களை பரிசீலித்து உரிய நபரைத் தேர்ந்தெடுக்கும்.
இத்தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் பதவிக்கு நியமனம் வேண்டுபவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மத்திய அரசு 9 ஆகஸ்ட் 2012 அன்று விளம்பரம் வெளியிடுகிறது. இந்தப் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் 27 ஆகஸ்ட் 2012.
இந்த விளம்பரத்தைப் பார்த்து விட்டு, விண்ணப்பம் அனுப்புகிறார் ஜோதி Money. கடைசி நாள் முடிவதற்குள் விண்ணப்பம் அனுப்பி விட்டு, 31.08.2012 அன்று கூடங்குளம் அணு உலை தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்குகிறார் ஜோதி Money.
ஏற்கனவே குறிப்பிட்டது போல, பசுமைத் தீர்ப்பாயத்திற்கான உறுப்பினர்களைத் தேர்வு செய்யும் தேர்வுக்குழுவில் உறுப்பினராக இருப்பவர், மத்திய சுற்றுச் சூழல் துறையின் செயலாளர். இவர், கூடங்குளம் அணு உலை தொடர்பாக தொடரப்பட்ட அத்தனை வழக்குகளிலும், எதிர் மனுதாரராக சேர்க்கப்பட்டு, பல்வேறு பதில் மனுக்களைத் தாக்கல் செய்திருந்தவர்.
டெல்லி நீதிமன்றத்தில் 2ஜி வழக்குகளை விசாரித்து வருகிறாரல்லவா நீதிபதி ஓ.பி.சைனி. அவர் கனிமொழி நிரபராதி என்று தீர்ப்பளித்து விட்டு, கலைஞர் டிவியில் சட்ட ஆலோசகராக சேர்வதற்கும், ஜோதி Money தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டதற்கும் பெரிய வேறுபாடு இல்லை.
24 அக்டோபர் 2012 அன்று ஓய்வு பெற்ற ஜோதி Money, நவம்பர் முதல் வாரத்திலிருந்து டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்திலேயே தங்கியிருந்து, தனக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாய உறுப்பினராக நியமன ஆணை வழங்கப்படும் வரை, அந்தக் கோப்பின் பின்னாலேயே அலைந்தார் என்று கூறுகிறார்கள் விபரமறிந்தவர்கள். பசுமைத் தீர்ப்பாயத்தின் உறுப்பினர் பதவிக்கான விண்ணப்பத்தில், சுற்றுச் சூழல் தொடர்பான வழக்குகளை விசாரித்த அனுபவம் என்ற பகுதியில் ஜோதி Money கூடங்குளம் அணு உலை தொடர்பான வழக்கை குறிப்பிட்டிருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தின் உறுப்பினர் பதவி என்பது உயர்நீதிமன்ற நீதிபதிக்கு சமமான பதவி. மாதந்தோறும் ஒன்றரை லட்சம் ஊதியம், விமானத்தில் இருவருக்கு முதல் வகுப்பு பயண வசதி, சிகப்பு சுழல் விளக்கு பொறுத்திய வாகனம், வீட்டில் மீன் குழம்பு உள்ளிட்ட அனைத்து வகை சமையல்கள் மற்றும் இதர வேலைகளைச் செய்ய 8 பணியாட்கள் என்று இவர்களின் சொகுசுகள் சற்றும் குறையாது. இந்த லஞ்சத்துக்கு கைமாறாகத்தான் ஜோதி Money அப்துல் கலாமே சொல்லி விட்டார், அதனால் அணு உலை ஆபத்தானது இல்லை என்ற அபத்தமான தீர்ப்பை வழங்கியிருக்கிறார்.
சரி… இப்போது என்ன செய்வது …. ? தமிழக மக்கள் உரிமைக் கழகம் எதற்குத்தான் இருக்கிறது… ? ஜோதி Moneyயின் பசுமைத் தீர்ப்பாய உறுப்பினர் நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் என்று, சென்னை உயர்நீதிமன்ற்த்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பதை சவுக்கு மகிழ்ச்சியுடன் அறிவித்துக் கொள்கிறது. இவ்வழக்கு வரும் வாரத்தில் விசாரணைக்கு வரவிருக்கிறது.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பிள்ளை குட்டிகளோடு போலீசிடம் அடி வாங்கிக் கொண்டு, பொய்க் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி, ஒட்டு மொத்த ஊரும் பேசும் வசவுகளை தாங்கிக் கொண்டு, ஒரு சிலரைத் தவிர, ஒட்டு மொத்த உலகமே கைவிட்ட நிலையிலும், மனம் தளராமல், தங்களுக்காக மட்டுமல்லாமல் தமிழகத்துக்காக தோழர் உதயக்குமார் தலைமையில் சளைக்காமல் போராடும் இடிந்தகரை மக்களையும், ஜோதி Moneyயையும் சற்றே ஒப்பிட்டுப் பாருங்கள்.
ஜோதி Money அவர்களே.. உங்களைப் போன்ற நபர்களுக்காவே அய்யன் வள்ளுவன் எழுதியிருக்கிறான்.
பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர்
கழிநல் குரவே தலை.
பழிக்கு அஞ்சாமல் இழிவான செயல்களைப் புரிந்து செல்வந்தராக வாழ்வதைவிட, கொடிய வறுமை தாக்கினாலும் கவலைப்படாமல் நேர்மையாளராக வாழ்வதே மேலானதாகும்.