மேல்மருவத்தூர். கடந்த முப்பது முப்பத்தைந்து ஆண்டுகளாக இந்த இடம் ஒரு ஆன்மீகத் தலமாக உருவாகியிருக்கிறது. தமிழகத்தில் புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கு போட்டியாக ஒரு அம்மா இருக்கிறார் என்றால் அது பங்காரு அடிகளார் என்கிற அம்மாதான். ஆணாக இருந்தாலும், இவரை அனைவரும் அம்மா என்றுதான் அழைப்பார்கள். ஏனென்றால் இவர் ஆதிபராசக்தி அம்மனின் வடிவமாம்.
ஒருவேளை பாலின மாற்று அறுவை சிகிச்சை ஏதாவது செய்திருக்கிறாரா என்பது தெரியவில்லை. ஆனால் அப்படியே பாலியல் அறுவை சிகிச்சை செய்திருந்தாலும், நான்கு குழந்தைகள் பிறந்த பிறகே செய்திருக்க வேண்டும். ஏனென்றால் இவருக்கு இரண்டு மகன் மற்றும் இரண்டு மகள்கள். இதில் கொடுமை என்னவென்றால், அவர்களின் மகன்களையும் அம்மா என்று அழைக்க வேண்டுமாம். பெரிய மகனை சின்னம்மா என்று அழைக்க வேண்டுமாம். சின்ன மகனை, மருவூர் முருகன் என்று அழைக்க வேண்டுமாம்.
பங்காரு அடிகளார் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர். கோபால நாயக்கர் மற்றும் மீனாட்சி என்ற தம்பதியினருக்கு 1941ம் ஆண்டு பிறந்தவர்தான் பங்காரு. இந்த பங்காரு சோத்துப்பாக்கத்தில் உள்ள பள்ளியில் படித்து விட்டு, பின்னர் செங்கல்பட்டு அரசு ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் படிக்கிறார். பின்னர், ஆசிரியர் வேலை பார்த்துக் கொண்டிருக்கையில், அப்போது இந்த பங்காரு குடியிருந்த வீட்டின் பின்புறத்தில், மேல்மருவத்தூரில், ஒரு வேப்பமரத்தடியில் ஒரு சிறிய அம்மன் கோயிலை உருவாக்குகிறார்.
வேப்பமரத்தில் கோயில் எப்படி உருவாகும் என்பதை உங்களுக்குச் சொல்ல வேண்டியதில்லை. வேப்ப மரத்தின் அடியில் ஒரு ரூபாய்க்கு மஞ்சளை வாங்க தண்ணீரில் கரைத்து, அந்த மரத்தின் அடிப்பகுதியில் முழுமையாகத் தடவி விட்டு, நடுவே குங்குமம் வைத்து, ஒரே ஒரு திரிசூலத்தை நட்டு விட்டால் அம்மன் கோயில் தயார். ஒவ்வொரு வருடமும் ஆடி மாதத்தில், அம்மனுக்கு கூழ் ஊற்றப் போகிறோம் என்று வசூலில் ஈடுபட்டு, கொஞ்சம் கூழ் ஊற்றி விட்டு, இசைக் கச்சேரி நடத்துகிறேன் என்று அதற்கும் சேர்த்து வசூல் செய்து, இசைக் கச்சேரியும் நடத்தினால், உங்கள் அம்மன் கோயில் புகழடைந்து வருகிறது என்று பொருள். அப்படித்தான் பங்காரு, வேப்பமரத்தடியில் அமர்ந்து கொண்டு வருகை தரும் பக்தர்களுக்கு குறி சொல்வதில் தன் தொழிலை தொடங்குகிறார். நாளடைவில், இவர் குறி சொல்வது குறித்த புகழ் பரவத் தொடங்குகிறது. இப்படியாக படிப்படியாக வளர்ச்சியடைந்த பங்காரு, தனது மடத்தை விரிவாக்குகிறார்.
அந்த காலத்தில் ஸ்விஸ் வங்கியில் பணத்தைப் பதுக்கும் வழக்கம் பரவலாக இல்லாத காரணத்தால், பல அரசியல் புள்ளிகள் தங்களின் கருப்புப் பணத்தை பங்காருவிடம் கொடுத்து வைத்ததாக கூறப்படுகிறது. இந்த அடிப்படையில், இந்திரா பிரதமராக இருந்தபோது, 1980ம் ஆண்டு, ஒரு முறை இவர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடந்துள்ளது.
தற்போது இந்த வழக்கம் மறைந்துள்ளது. ஒரு பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால், சென்னை நகரின் நடைபாதைகளில் கருப்பு வெள்ளைப் புகைப்படங்களை அடுக்கி வைத்து ஜோசியம் பார்ப்பவர்கள் இருப்பார்கள். அந்த கருப்பு வெள்ளைப் புகைப்படங்களில் அந்த ஜோசியம் பார்ப்பவர், கமல் ரஜினி, ஜெய்சங்கர் என்று பிரபல நடிகர்களில் தொடங்கி பலரோடு கை ரேகை பார்ப்பது போல எடுக்கப்பட்ட புகைப்படங்களை வைத்திருப்பார். அதைப் பார்க்கும் அப்பாவிகள், ரஜினி கமலுக்கே ஜோசியம் பார்ப்பவர் என்று நினைத்து அவரிடம் கைரேகை பார்த்து விட்டு செல்லுவார்கள். தற்போது இந்த கைரேகை வியாபாரிகள் ஒழிந்து விட்டார்கள்.
இதைப் போலவே, மேல்மருவத்தூரிலும், பிரபலமானவர்கள், பங்காருவோடு எடுத்த புகைப்படங்களை மாட்டி வைத்திருப்பார்களாம். அதைப் பார்க்கும் பாமர மக்கள் பங்காரு இவ்வளவு பெரிய ஆளா என்று மலைத்துப் போவார்கள். பல பிரபலங்களின் கருப்புப் பணத்தை வைத்திருந்த பங்காரு, மேல்மருவத்தூர் மற்றும் அதையொட்டியுள்ள நிலங்களை வளைத்துப் போட்டார். கருப்புப் பணத்தை பதுக்கி வைத்ததன் காரணமாக பல முக்கியப் பிரமுகர்களின் நெருக்கம் தொடர்ந்து கிடைத்து வந்தது.
மற்ற சாமியார்களை விட, இந்த பங்காருவின் மீது கடுமையான கோபம் வருவதற்கு காரணம், கம்யூனிஸ்டுகளின் சிகப்பு நிறத்தை தனது ஆன்மீக வியாபாரத்திற்கு அபகரித்த அயோக்கியன் இந்த பங்காரு.
முக்கியப் புள்ளிகளோடு தொடர்பு, கணக்கிலடங்கா கருப்புப் பணம் இவை இரண்டும் இருப்பவர்கள் என்ன செய்வார்கள் ? கல்வித் தந்தை ஆவார்கள். அதைத்தான் செய்தார் பங்காரு. வரிசையாக கல்வி நிறுவனங்களைத் தொடங்குகிறார்.
ஆதிபராசக்தி மெட்ரிகுலேஷன் உயர்நிலைப் பள்ளி
ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரி
ஆதிபராசக்தி பாலிடெக்னிக்
ஆதிபராசக்தி செவிலியல் கல்லூரி
ஆதிபராசக்தி பிசியோதெரபி கல்லூரி
ஆதிபராசக்தி மருந்தியல் கல்லூரி
ஆதிபராசக்தி பல் மருத்துவக் கல்லூரி
இவை மேல்மருவத்தூரில் மட்டும்
கலவையில் ஆதிபராசக்தி கலை அறிவியல் கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரி இயங்குகிறது.
இந்த பங்காருவுக்கு அன்பழகன் மற்றும் செந்தில் குமார் ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த இரண்டு மகன்களும், கணக்கிலங்கா சொத்துக்களையும், கருப்புப் பணத்தையும், தங்களைச் சுற்றியுள்ள தொண்டர் அடிப்பொடிகளோடு இனிமையாக நிர்வகித்து வந்தனர். சொத்துக்களை சமமாக பிரித்துக் கொள்ளலாம் என்று நிம்மதியாக இருந்து வந்தனர். இப்படி இவர்கள் நிம்மதியாக இருந்து வந்த வேளையில்தான், பிரச்சினை திருமண வடிவில் வந்தது. பங்காருவின் பெரிய மகன் அன்பழகனின் மைத்துனரை, பங்காருவின் மகளுக்கு திருமணம் செய்கின்றனர். இதனால் இளைய மகன் செந்தில் கடும் கோபமடைகிறார். எப்படியென்றால், மகன் மகள் ஆகியோருக்கு சொத்துக்கள் சமமாக பிரிக்கப்பட்டால், மைத்துனரை திருமணம் செய்த வகையில் அன்பழகனுக்கு கூடுதலாக சொத்து போய் விடும் என்று, செந்தில் கடும் கோபமடைகிறார்.
அன்பழகன் பெரியம்மா
செந்தில் சின்னம்மா..
சின்னம்மாவின் டெர்ரர் லுக்
அதுவரையில் பெரிய மகன் அன்பழகன் மக்கள் தொண்டு இயக்கம் என்று ஒரு அமைப்பைத் தொடங்கி, அம்மா அவர்களின் (பங்காரு) தொடங்கி பெயரில் நற்பணிகள் செய்வது என்று நாடகம் ஆடிக்கொண்டிருந்தார். பிரச்சினைகள் இல்லாத வரை சிறப்பாக நடந்து கொண்டிருந்த இந்த தொண்டு இயக்கம், மனைவிகளால் பிரச்சினை வந்ததும் தம்பி செந்தில் கண்ணை உறுத்த ஆரம்பித்தது. இதனால் செந்தில் ஆதிபராசக்தி, ஆன்மீக இளைஞர் அணி என்று ஒரு தனி அமைப்பை தொடங்குகிறார். இவர்கள் இருவருக்குள்ளே நடைபெற்று வரும் மோதல், அழகிரி ஸ்டாலின் மோதலுக்கு சற்றும் குறைந்ததல்ல. இந்த மோதலின் வெளிப்பாடாகவே, மூத்த மகன் அன்பழகன் தன் தம்பியின் மனைவி வழக்கில் சிக்கட்டும் என்று சிபிஐ அதிகாரிகளிடம் போட்டுக் கொடுத்தள்ளதாகவும் ஒரு தகவல் உலவுகிறது.
இவரது கல்விப்பணிகள் மிகச் சிறப்பாக நடைபெற்றதால் கடநத் 2010ல், இவர் கல்லுரி வளாகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். சோதனையின்போது, 100 கிலோவுக்கும் மேற்பட்ட தங்கம், மற்றும் 12 கோடி ரூபாய் ரொக்கப்பணம் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்போது இந்தச் செய்தியை பதிவு செய்யச் சென்ற பத்திரிக்கையாளர்கள் மீது பங்காருவின் ரவுடிகள் தாக்குதல் நடத்தினர்.
கருணாநிதி மற்றும் ஸ்டாலினோடு பெரியம்மா
பங்காரு சந்தித்த முதல் சோதனை சிபிஐ வடிவில் வந்தது. மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரிக்கு ஒரு குறிப்பிட்ட ஆண்டுக்கான அனுமதி பெறுகையில் அகில இந்திய மருத்துவக் கழக (Medical Council of InidaIndia) அதிகாரிகள் ஆய்வு நடத்துகையில் பிற மருத்துவமனைகளில் பணியாற்றிக் கொண்டிருந்த மருத்துவர்களை, ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றியது போல நடித்ததாக சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இதன் அடிப்படையில், பேராசிரியர்களாக நடித்த 32 மருத்துவர்களும், இவர்களுக்கு பேராசிரியராக போலி நியமன ஆணைகளை வழங்கிய ஆதி பராசக்தி மருத்துவக் கல்லூரியின் 3 மருத்துவர்களின் அங்கீகாரத்தை ரத்து செய்து இந்திய மருத்தவக் கழகம் உத்தரவு பிறப்பித்தது. இது குறித்து மரணித்த கடவுள்கள் என்ற கட்டுரையில் சவுக்கு விரிவாக எழுதியிருக்கிறது. இது தொடர்பாக சிபிஐ தொடர்ந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, அது எழும்பூர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. தற்போது இந்த வழக்கிலிருந்து தப்பிப்பதற்காக, சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள ஒரு நீதிபதியை, மேல்மருவத்தூர் திருடர்கள் அணுகியிருப்பதாக தகவல் வந்துள்ளது.
இந்நிலையில், நேற்று இரவு, எட்டு மணிக்கு, மேல்மருவத்தூர் பல் மருத்துவக் கல்லூரியில், முதுகலைப் படிப்பு தொடங்குவதற்காக, அகில இந்திய பல்மருத்துவக் கவுன்சில் உறுப்பினர் டாக்டர் முருகேசன் என்பவரைச் சந்தித்து, 25 லட்ச ரூபாய் லஞ்சம் கொடுத்தபோது, சிபிஐ போலீசார் கையும் களவுமாக பிடித்துள்ளனர். பல்மருத்துவக் கவுன்சிலின் உறுப்பினர் டாக்டர் முருகேசன், அக்கல்லூரி நிர்வாகத்தின் செயலர் கருணாநிதி, நிர்வாக அலுவலர் ராமபத்ரன் மற்றும் பங்காருவுக்கு நெருக்கமானவரும், ஆற்காடு தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏவுமான பழனி ஆகியோரை சிபிஐ கைது செய்துள்ளது.
நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்படும் கருணாநிதி
பல் மருத்துவத்தில் முதுகலை பட்டப் படிப்பு தொடங்குவதற்காக அகில இந்திய பல் மருத்துவக் கவுன்சிலை, இக்கல்லூரி நிர்வாகம் அணுகியிருக்கிறது. முதுகலை படிப்பு நடத்தவதற்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் உங்கள் கல்லூரியில் இல்லாததால், உங்கள் கல்லூரிக்கு முதுகலை படிப்புக்கான அனுமதி வழங்கப்படாது என்றே முதலில் மறுக்கப்பட்டுள்ளது. ஆனால் இக்கல்லூரியின் மேலாண் இயக்குநர் ஸ்ரீலேகா, உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தாமல், ஒப்புதல் பெற என்ன வழி என்று கேட்கிறார். ஸ்ரீலேகா உட்கட்டமைப்பை மேம்படுத்தாமல் ஒப்புதல் பெற என்ன வழி என்று கேட்பதற்கு காரணம், ஒரு முறை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தினால் பின்னர் அதுவே பழக்கமாகி விடும். எப்போது பார்த்தாலும் விதிகளை பின்பற்றத் தொடங்கி விடுவார்கள் என்பதால், யாரைப் பிடித்தால் உட்டகட்டமைப்பு வசதி என்ன…. எந்த வசதியுமே இல்லாமல் அனுமதி பெறலாம் என்று அவர் திட்டமிடுகையில் அவர் திட்டத்துக்கு ஏற்ற வகையில் சிக்கிய ஆடுதான் டாக்டர் முருகேசன்.
டாக்டர் முருகேசனின் பல் மருத்துவமனை
ஆதிபராசக்தி பல் மருத்துவக் கல்லூரியின் மேலாண்மை இயக்குநராக இருக்கும் ஸ்ரீலேகா இப்படி குறுக்கு வழியில் லஞ்சம் கொடுத்து காரியம் சாதிக்கும் எண்ணத்தோடு இருப்பது ஒன்றும் வியப்பை அளிக்கும் விஷயம் அல்ல. அவர் வளர்ந்த விதம் அப்படி..
ஸ்ரீலேகாவின் தந்தை இளங்கோவன், தமிழக காவல்துறையில் ஐஜியாக ஓய்வு பெற்றவர். அவர் ஒரு ஐபிஎஸ் அதிகாரி. 1999ம் ஆண்டு உதவி ஆய்வாளர் தேர்வு நடக்கையில் அவர் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலராக இருந்தார். அந்த வருடம் உதவி ஆய்வாளர்கள் தேர்ச்சியின் போது, 3 லட்ச ரூபாய் கொடுத்தால் உதவி ஆய்வாளர் பணி என்று வெளிப்படையாக ஏலம் விடப்பட்டது. அவரோடு சேர்ந்து லஞ்சம் வாங்கிக் கொழுத்தவர்கள் அப்போது ஐ.ஜிக்களாக இருந்த சுப்பையா மற்றும் ஜெகந்நாதன். லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி, ஜெகந்நாதன், சுப்பையா, இளங்கோவன் மற்றும் ஒரு நேர்முக உதவியாளர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. அந்த வழக்கின் விசாரணை தொடங்கும்போதே, ஐபிஎஸ் அதிகாரிகளான சுப்பையா, ஜெகந்நாதன் மற்றும் இளங்கோவனுக்கு இந்த ஊழலில் எந்த தொடர்பும் இல்லை என்று அவர்கள் மூவரையும் விடுவித்தார் ஒரு நீதிபதி. ஆனால் இவர்கள் மூவருக்கும் கீழே க்ளெர்க்காக பணியாற்றியவர் மட்டும் இந்த ஊழலை நடத்தினார் என்று அவரை விடுவிக்க மறுத்தார் அந்த நீதிபதி. அவர் மீதான வழக்கு இன்னும் நடைபெற்று வருகிறது.
ஐ.ஜி இளங்கோவன்
1999 உதவி ஆய்வாளர் தேர்வு நடக்கையில் இளங்கோவன், பணத்தை வசூல் செய்தது, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அருணா இன் ஹோட்டலில் வைத்தே. அதன் முதலாளி, இளங்கோவனுக்கு வசூல் செய்து தரும் ப்ரோக்கராக செயல்பட்டார். இந்த இளங்கோவனின் மகள்தான் ஸ்ரீலேகா. புலிக்கு பிறந்தது பூனையாகுமா என்ன ?
தலைமறைவாக உள்ள ஸ்ரீலேகா
சென்னை ராயப்பேட்டையில் பல் மருத்துவமனை நடத்தி வரும் முருகேசன், அகில இந்திய பல் மருத்துவ கவுன்சிலின் உறுப்பினர். இவருக்கு பல் மருத்துவராக தொழில் செய்வதை விட விருப்பமான தொழில், அங்கீகாரம் வேண்டும் பல் மருத்துவக் கல்லூரிகளுக்கு லஞ்சம் வாங்கிக் கொண்டு, அங்கீகாரம் வழங்குவது. ஒரு கல்லூரியில் உட்கட்டமைப்பு வசதிகள் இருந்தால் என்ன.. இல்லா விட்டால் என்ன ?
அங்கீகாரம் வழங்க இவர் நிர்ணயித்திருக்கும் கட்டணம், அங்கீகாரம் வேண்டும் கல்லூரியில் உள்ள மொத்த மாணவர் சீட்டுக்கு ஒரு சீட்டுக்கு 10 லட்ச ரூபாய் விகிதத்தில் லஞ்சம் தர வேண்டும். ஆதிபராசக்தி பல் மருத்துவக் கல்லூரியில் முதுகலை பல் மருத்துவப் படிப்புக்கு அங்கீகாரம் வேண்டி, கல்லூரி நிர்வாகம் இவரை அணுகிய போது இவர் நிர்ணயித்த தொகை 2 கோடி ரூபாய். இந்த லஞ்சத் தொகையை ஸ்ரீலேகா பேரம் பேசி ஒரு கோடி ரூபாயாக குறைத்துள்ளார்.
இவ்வாறு இவர் லஞ்சம் வாங்கிக் கொண்டு அங்கீகாரம் வழங்கி வந்ததை சிபிஐ அதிகாரிகள் நீண்ட நாட்களாகவே கண்காணித்து வந்தனர். அந்த கண்காணிப்பின் விளைவு, முருகேசன் லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாக சிக்கியது.
திங்களன்று இரவு, முருகேசனிடம் லஞ்சத் தொகையின் முதல் தவணையாக 25 லட்சத்தை ஆதிபராசக்தி பல்மருத்துவக் கல்லூரியின் நிர்வாகிகன் கொடுக்கும் போது, சிபிஐ அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்தனர். கல்லூரி சார்பில் இந்த பணத்தைத் தருவதற்கு, பங்காருவுக்கு மிகவும் நெருக்கமானவராக கருதப்படும் முன்னாள் எம்.எல்.ஏ சக்தி பழனி, அக்கல்லூரியின் செயலாளர் சக்தி கருணாநிதி, மற்றும் அக்கல்லூரியின் நிர்வாக அலுவலர் சக்தி ராமபத்ரன்.
என்னடா எல்லார் பெயர்கள் முன்பும் சக்தி என்று ஒரு வார்த்தை சேர்த்துக் கொள்ளப்படுகிறதே என்று வியப்பாக இருக்கிறதா…. பெரிய திருடன் பங்காருவுக்கு விசுவாசமாக இருப்பவர்களுக்கு, பிரிட்டிஷார் வழங்கும் சர் பட்டத்தை விட மதிப்பு அதிகமான சக்தி பட்டம் வழங்கப்படும். அப்படிப் பட்டம் பெற்றவர்கள்தான் இவர்கள்.
கைது செய்யப்பட்ட நால்வரும், சென்னையில் உயர்நீதிமன்ற வளாகத்துக்குள் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பப் பட்டனர். இவர்களை நீதிமன்றத்துக்கு எடுத்து வருகையில் டாக்டர் முருகேசனை மட்டும் வழக்கறிஞர்கள் படமெடுக்க விடவில்லை. வழக்கறிஞர்கள் அணியும் கருப்பு அங்கியை முருகேசன் தலையில் போட்டு படமெடுக்கவிடாமல் தடுத்தனர். ஒரு கருப்பு ஆடை கருப்பு அங்கியை வைத்து மறைத்தது பொருத்தம்தானே… ?
டாக்டர் முருகேசனின் சகோதரர் யஸ்வந்த் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருக்கிறாராம். மற்ற குற்றவாளிகளை புகைப்படம் எடுக்கலாம்… வழக்கறிஞரின் சகோதரரை புகைப்படம் எடுக்கலாமா… ?
வழக்கறிஞர்கள் படமெடுக்க விடாமல் தடுத்த முருகேசன் இவர்தான்
இதுதான் முருகேசனின் பிஎம்டபிள்யூ கார்
இந்த வழக்கு குறித்து சிபிஐ விரிவான புலன் விசாரணை நடத்தி வருகிறது. டாக்டர் இளங்கோவன் பல் மருத்துவ கவுன்சிலின் உறுப்பினரான நாள் முதல், அங்கீகாரம் வழங்கப்பட்ட பல் மருத்துவ கல்லூரிகளின் உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து விரிவான விசாரணை நடைபெற உள்ளதாகவும் தெரிகிறது. ஸ்டார்ட் ம்யூசிக்.
ஒவ்வொரு நாளும் லஞ்சம் வாங்கியதாக இவர் மாட்டினார், அவர் மாட்டினார் என்ற ஆயிரம் செய்திகளைப் படித்தாலும், பல் மருத்துவ மேல் படிப்பு நடத்துவதற்காக அங்கீகாரம் பெற்றதில் நடைபெற்ற ஊழலை அம்பலப்படுத்தியுள்ள சிபிஐ அதிகாரிகள் மிகவும் பாராட்டுக்குறியவர்கள். ஒரு சான்றிதழ் வழங்க 500 ரூபாய் லஞ்சம் வாங்கும் விஏஓ, போக்குவரத்து விதிகளை மீறியவரிடம் 200 ரூபாய் லஞ்சம் வாங்கும் கான்ஸ்டபிள் இந்த சமுதாயத்திற்கு ஏற்படுத்தும் தீமையை விட, இந்த கல்வித்தந்தைகள் சமுதாயத்திற்கு ஏற்படுத்தும் தீமைகள் அளவிட முடியாதது.
ஊழலில் திளைக்கும் இந்தக் கல்லூரிகளில் படித்து வெளி வரும் மருத்துவர்களும், பல் மருத்துவர்களும் இந்த சமுதாயத்தில் ஏற்படுத்தும் தீய விளைவுகள் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாததது. ஜெகதரட்சகனின் லட்சுமி நாராயணா மருத்துவக் கல்லூரி, சத்ய சாய் மருத்துவக் கல்லூரி, ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரி, ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி, பாலாஜி மருத்துவக் கல்லூரி, ஆதிபராசக்தி பல் மருத்துவக் கல்லூரி என்று வரிசையாக கல்வித் தந்தைகளின் முகத்திரையைக் கிழிக்கும் சிபிஐ அதிகாரிகளுக்கு இந்தச் சமுதாயம் மிகவும் கடமைப்பட்டுள்ளது. அந்த அதிகாரிகள் வாழ்த்துக்குரியவர்கள்.
எப்போது பார்த்தாலும், விஏஓக்களையே கைது செய்து வரும் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள், தமிழகத்தில் விஏஓக்கள் மட்டுமே லஞ்சம் வாங்குகிறார்களா என்பதை விளக்க வேண்டும்.
இந்தக் கல்வித்தந்தைகளின் முகத்திரையை சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்து கிழிக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த சமுதாயத்தின் எதிர்ப்பார்ப்பு. அனைவரும் சேர்ந்து சிபிஐ அதிகாரிகளை வாழ்த்துவோம்.
Oomm sakthi….. Para sakthi…..!
Melmaruvathuril Yamaha bike il nootru kanakil adiyatkalai kanbathum senthil (son) kattalai iduvathum vadikaiyana ondruthan.. P.M.K virkum periya amount transfer agudhu.. pusumai thayagam sonthamana college and melmaruvathur college rendum udanpadikaiyudan seyalpadugirathu external visayathil. onnu nichayam PANAM mattume nallavan kettavan ena theermanikirathu.. Melmaruvathuril nirayave marmangal ullathu.. -old student.
பா ம க இவர்களுக்கு பயங்கரமாக சப்போர்ட் செய்கிறது.
ராமதாசும் அடிக்கடி விசிட் அடிக்கிறார்.
சின்னய்யா தமிழ்நாடு பூராவும் சுற்றிச் சுற்றி நல்ல பெயர் வாங்கினாலும் பாமக தொண்டர்களும் அய்யாவும் நொடியில் நொறுக்கி விடுவார்கள்
Virivaana,thelivaanan vilakkam
//மற்ற சாமியார்களை விட, இந்த பங்காருவின் மீது கடுமையான கோபம் வருவதற்கு காரணம், கம்யூனிஸ்டுகளின் சிகப்பு நிறத்தை// அருமையான கட்டுரை ஆனால் அது என்ன கம்யூனிஸ்ட்ககளின் சிகப்பு என்று ஒரு நிறத்தை வளைத்துப்போடும் மனப்போக்கு, கம்யூனிஸ்ட்கள் மட்டுமே சிகப்பு வண்ணத்துக்கு உரிமையானவர்கள் என்று பத்திரம் வாங்கி இருக்கிறீர்களா, பங்காரு பச்சை நிறத்தை உபயோகப் படுத்தியிருந்தால் இந்தப் பதிவை எழுதியிருக்க மாட்டீர்களா?
தங்களுடைய தகவல்கள் தெளிவாக உள்ளது. இதனை வெகுஜன மக்களிடம் பரப்புவதற்கு உரிய வழியை கண்டுபிடிக்கவும். உதவுகிறேன்.
விரிவாக சொல்லியிருக்கிறீர்கள்! மிகவும் நன்றி. பார்க்கலாம், நீதி வெல்கிறதா என்று! நம்முடைய ஜனநாயகம் தான் எத்தனை எத்தனை ஊழல்வாதிகளை உருவாக்கியிருக்கிறது?
உஙகள் கட்டுரைக்காக காத்திருந்தேன் உடனே படித்துவிட்டேன் சமூக அவலங்களை தட்டி்கேட்கும் திரு ச….. அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி……