வழக்கமாக எல்லா பண்டிகைகளுக்கும், தலைவர்கள் மக்களுக்கு வாழ்த்து சொல்வார்கள். ஒரு மாற்றத்திற்காக நாம் இந்த ஆண்டு தலைவர்களுக்கு வாழ்த்து சொல்லுவோம்.
ஜெயலலிதா.
இந்தத் தைத் திருநாளில், நாட்டு நடப்புக்களை குறைந்தபட்சம் செய்தித்தாள்களைப் பார்த்தாவதோ அல்லது, ஜெயா தொலைக்காட்சி தவிர்த்த மற்ற செய்திச் சேனல்களைப் பார்த்தோ தெரிந்து கொள்ள வேண்டும் என்று உறுதி மொழி எடுங்கள். கருணாநிதி கட்டிய எந்தக் கட்டிடங்களை இடிக்கலாம் என்று கங்கணம் கட்டிக் கொண்டு அதே சிந்தனையில் இருக்காமல், உங்களை நம்பி வாக்களித்த முட்டாள் மக்களுக்கு குறைந்தபட்ச நன்மையாவது செய்ய முயற்சி செய்யுங்கள். மத்திய அரசுக்கு எதிராக அறிக்கை விடுவது, மத்திய அரசை குறை சொல்லுவது, மத்திய அரசு தமிழகத்தை வஞ்சித்துள்ளது என்பதை மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருக்காமல் உங்கள் கட்டுப்பாட்டுக்குள் உள்ள விவகாரங்களிலாவது, மக்களுக்கு நன்மை பயக்கும் முடிவெடுக்க முயற்சி செய்யுங்கள். மக்களின் வயிற்றில் அடிப்பது போல பேருந்து கட்டணம், மின் கட்டணம், பால் விலை ஆகியவற்றை ஒரே நாளில் உயர்த்தி விட்டு, மத்திய அரசு ரயில் கட்டணத்தை ஏற்றினால் குய்யோ முறையோ என்று கூக்குரலிடுவது போன்ற நாடகங்களை நடத்துவதை தவிர்த்து, ஆட்சி நிர்வாகத்தில் கவனம் செலுத்துங்கள். உங்கள் வசதிக்காக கொடநாட்டில் வேண்டுமானால் தலைமைச் செயலகத்தை மாற்றிக் கொள்ளுங்கள். அதற்கு பதிலாக ஆறு மாதத்திற்கு ஒரு முறை, நீங்கள் கொடநாட்டில் ஓய்வெடுப்பதும், தலைமைச் செயலக அதிகாரிகள், விமானத்தில் பறந்து பறந்து கோப்புகளில் கையெழுத்து பெற்று வருவதும், எங்கள் தலையில்தான் விடிகிறது. இந்தத் தைத் திருநாளில் மக்களைப் பற்றி கொஞ்சமாவது சிந்திக்கலாம் என்று முடிவெடுங்கள்.
கருணாநிதி
எத்தனையோ பேர் எத்தனையோ முறை சொன்னாலும் உங்களுக்கு ஒரு நாளும் உறைக்காது. நீங்கள் ஓய்வெடுக்கும் வயதைக் கடந்தே பல ஆண்டுகள் ஆகி விட்டது. ஆனால், இன்றும் நீங்கள் உங்கள் மகன்களுக்கிடையே அரசியல் செய்து கொண்டிருக்கிறீர்கள். கட்சித் தலைமையை கைவிட்டால், உங்களுக்கு இப்போது இருக்கும் மதிப்பும் மரியாதையும் இருக்காது என்பது உண்மைதான். ஆனால், கட்சித் தலைவர் என்பதற்காகவும், உங்களுக்கு ஜால்ரா போட்டால் பதவி கிடைக்கும் என்பதற்காகவும், தொடர்ந்து உங்களைப் புகழ்ந்து பொய்யுரைக்கும் ஜால்ராக்களின் குரலில் இன்னும் எத்தனை நாட்களுக்கு இன்புற்று இருக்கப் போகிறீர்கள் ? கிரிக்கெட் உலகில் ஈடு இணையில்லா வீரரான டெண்டுல்கர் கூட ஓய்வு பெறாமல் விளையாடிக்கொண்டே இருந்தால் மரியாதை இழப்பார் என்பதை கண்கூடாகப் பார்த்தீர்கள் அல்லவா ?
தலைவர் பதவியை விடாப்பிடியாக பிடித்துக் கொண்டிருப்பதால், நீங்கள் பெற்ற பிள்ளைகளே உங்களை வெறுக்கிறார்கள் என்பது உங்களுக்கு ஏன் இன்னும் புரியமாட்டேன்கிறது ? கட்சித் தலைமையை, பெரும்பாலான தொண்டர்களின் ஆதரவு பெற்ற ஸ்டாலினிடம் ஒப்படைத்து விட்டு, உங்களுக்கு மிகவும் பிடித்த இலக்கியப்பணிக்கு நீங்கள் ஏன் செல்லக் கூடாது ? உங்களின் தூக்கு மேடை, பராசக்தி ஆகிய நாடகங்களை மீண்டும் அரங்கேற்றினால், நாடகம் என்பதையே மறந்து போயிருக்கும் இன்றைய தலைமுறைக்கு அவற்றை அறிமுகப்படுத்திய வகையில் நீங்கள் தமிழுக்கு செய்யும் அளப்பறியா சேவையாக இருக்குமல்லவா ? இந்தத் தைத் திருநாளிலாவது அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதைப் பற்றி நாடகமாடாமல், ஊருக்காக சிந்திக்காமல், உங்கள் மனசாட்சிப்படி சிந்தித்து முடிவெடுங்கள்.
வைகோ
அன்பார்ந்த வைகோ அவர்களே. எம்.ஜி.ஆர் திமுகவை பிளவுபடுத்தி தனிக்கட்சி தொடங்கியபோது கூட இல்லாத ஆதரவு உங்களுக்கு இருந்தது. இளைஞர்களின் ஆதர்சமாக உருவாகியிருந்தீர்கள். தமிழகத்தின் மிகப்பெரிய நம்பிக்கை நட்சத்திரமாக உருவாக வேண்டியவர் இன்று திராவிட அரசியலின் ஒரு துணுக்காக மாறியிருக்கிறீர்கள். இந்த நிலைக்கு வேறு யாரும் காரணம் அல்ல, நீங்கள் மட்டுமே என்பதை கற்றறிந்த அரசியல் தலைவரான உங்களுக்கு வேறு யாரும் சொல்ல வேண்டியதில்லை. திராவிட அரசியல் வரலாற்றில், அறிஞர் அண்ணா, ஈவேகி.சம்பத்துக்கு இணையான ஒரு பேச்சாளர் நீங்கள் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஒரு அரசியல் தலைவருக்கு பேச்சாற்றல் மட்டும் போதாது, ஆளுமைப் பண்பும், தொண்டர்களைக் கட்டிக் காக்கும் ஆற்றலும் வேண்டும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். மதிமுக என்ற கட்சி நீங்கள் மட்டுமே என்று நினைத்துக் கொண்டிருப்பதே உங்கள் பிரச்சினை. உங்கள் கட்சியில் உங்களைத் தவிர்த்து பெயர் சொல்லும்படி ஒரு தலைவரைச் சொல்ல முடியுமா இன்று ? இந்தச் சிக்கல்களைப் புரிந்து கொண்டு, நீங்கள் மீண்டெழுந்து வர வேண்டும், தமிழகத்தில் ஒரு வலுவான அரசியல் சக்தியாக மறுமலர்ச்சி திமுக உருவாக வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். இந்தத் தைத்திருநாளில் நீங்கள் அவ்வாறே உருவாக வேண்டும் என்று வாழ்த்துகிறோம்.
விஜயகாந்த்
ஒரு நம்பிக்கை அளிக்கக் கூடிய மாற்று சக்தியாக உருவாகி வந்தீர்கள். தமிழகத்தின் இளைஞர்களின் ஆதரவு உங்களுக்கு இருந்தது. சினிமா வசனங்களை நம்பி வாக்களிக்கும் இம்மக்கள், நீங்கள் பேசிய வசனங்களை நம்பி, உங்களை திராவிட இயக்கங்களுக்கு மாற்று சக்தியாக பார்த்தார்கள் என்பது உண்மைதான். ஆனால் தனது இருபது ஆண்டு பொதுவாழ்வுக்குப் பிறகு கருணாநிதி செய்ததை நீங்கள் முதல் ஆண்டிலேயே செய்தீர்கள். தேமுதிக என்றாலே உங்கள் மனைவியும், மைத்துனருமே என்ற நிலையை தொடக்க காலம் முதலே உருவாக்கி விட்டீர்கள். சினிமா ஷுட்டிங்கில் தொடர்ந்து நடித்த பிறகு, புதிய படங்களை ஒப்புக் கொள்ளாமல், ஓய்வெடுப்பது போல அரசியலில் ஓய்வெடுக்க முடியாது என்பதை நீங்கள் உணர மறுக்கிறீர்கள். மாதத்துக்கு ஒரு முறை, திடீரென்று உறக்கம் கலைந்து எழுந்து மக்கள் பிரச்சினைகளுக்காக அறிக்கை விடுகிறீர்கள். சட்டசபைக்கு போவதையே மக்களுக்காக செய்யும் மிகப்பெரிய சேவையாக கருதிக் கொள்கிறீர்கள். சட்டசபையில் பேசுவதற்கு வாய்ப்பு வழங்கப்படாவிட்டாலும், தொடர்ந்து சட்டசபை சென்று, விடாமல் மக்கள் பிரச்சினைகளை பேச முயற்சித்து, அதிமுக அரசை அம்பலப்படுத்துவதே, ஜெயலலிதாவுக்கும் கருணாநிதிக்கும் எதிராக உங்களை வளர்த்துக் கொள்ள உதவும். எப்படியும் ஏதாவது ஒரு திராவிடக் கட்சி கூட்டணிக்காக உங்களை நாடி வரத்தான் வேண்டும். அது போதும் என்று இருப்பீர்களேயானால், உங்கள் வளர்ச்சிக்கு அது நிச்சயம் உதவாது. இந்தத் தைத் திருநாளிலாவது, ஒரு அரசியல் தலைவராக உருவாக முயற்சிப்பீர்கள் என்று வாழ்த்துகிறோம்.
மருத்துவர் ராமதாஸ்.
தமிழகத்தின் மிகப்பெரிய பிற்போக்கு சக்தியாக உருவெடுத்திருக்கிறீர்கள். தமிழகம் உங்களைக் கண்டு அஞ்சி, தமிழகத்தின் அமைதிக்காக பல்வேறு இயக்கங்கள் நடத்த வேண்டிய கட்டாயத்திற்கு தமிழக மக்களைத் தள்ளியிருக்கிறீர்கள். தந்தை பெரியாரும், திராவிட இயக்கங்களும் ஐம்பது ஆண்டுகளாக சாதித்ததை ஒரே நாளில் பின்னுக்கு தள்ளியிருக்கிறீர்கள். திராவிட இயக்கங்கள் உங்களை நம்பி இருக்க வேண்டிய அளவுக்கு பிரம்மாண்டமாக வளர்ந்த நீங்கள், தொடர்ந்து கட்சி மாறிக் கொண்டிருந்த காரணத்தால் அம்பலப்பட்டுப் போய் மக்கள் ஆதரவை இழந்து நிற்கிறீர்கள். ஆதரவை இழந்த காரணத்தால், மிக மிக ஆபத்தான சாதிய வெறியைத் தூண்டும் வேலையைச் செய்து கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் கையில் எடுத்துள்ள இந்த மோசமான ஆயுதம் உங்களையே அழித்து விடும் என்பதை உணர மறுக்கிறீர்கள். இந்த சாதி அரசியல் உங்களை வளர்ப்பதற்கு பதிலாக, குறுக்கி, ஒரு சாதிச் சங்கத் தலைவராக மாற்றியுள்ளது. ஜெயலலிதா, கருணாநிதி போன்ற மூத்த தலைவர்களோடு அரசியல் செய்த நீங்கள் இன்று பி.டி.அரசக்குமார் போன்ற மனவளர்ச்சி குன்றிய சாதிக் கட்சித் தலைவரோடு அரசியல் செய்ய வேண்டிய அளவுக்கு வீழ்ந்திருக்கிறீர்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள். தந்தைப் பெரியாருக்குப் பிறகு ஒரு பெரிய அரசியல் தலைவராக உங்களை நீங்கள் கருதிக் கொண்டிருந்த காலம் உண்டு. அப்படி ஒரு ஆசை உங்களுக்கு இருந்தால், உங்களின் பிற்போக்கு அரசியலை கைவிட்டு, மீண்டும் தமிழுக்காகவும், தமிழர்களுக்காகவும் பாடுபடுவேன் என்று இந்தத் தைத் திருநாளில் சூளுரை எடுங்கள்.
தொல் திருமாவளவன்.
தலித்துகளை கருவேப்பிலை போன்று பயன்படுத்தி வந்த திராவிடக் கட்சிகளை நிமிர்ந்து பார்க்க வைத்த பெருமை உங்களுக்கு உண்டு. இது நாள் வரை தமிழகத்தில் வளர்ந்த தலித் இயக்கங்களும், அதன் தலைவர்களும், தங்களுக்கு ஒரு எம்.எல்.ஏ சீட் கிடைப்பதையே அதிகபட்ச இலக்காக வைத்துச் செயல்பட்டு வந்ததே தமிழக தலித் இயக்கங்களின் வரலாறு. அந்த காரணத்தினாலேயே, தமிழகத்தில் தலித் இயக்கங்கள் ஒரு கட்டத்தைத் தாண்டி வளர்ந்ததில்லை. ஆனால், நீங்கள், அது போன்ற சிறிய வட்டத்திற்குள் சிக்கிக் கொள்ளாமல், தொடர்ந்து உங்கள் இயக்கத்தை வளர்த்து வருகிறீர்கள். தலித்துகளின் மீது வெளிப்படையான தாக்குதல்கள் நடக்கும் இந்தச் சூழலில் உங்களின் பொறுப்புகள் அதிகமாகியிருக்கிறது. ராமதாஸ் வெளிப்படையாக உங்களை தூண்டி விட முயற்சி செய்தபோதெல்லாம், மிகவும் பொறுப்புணர்ச்சியோடு, பொறுமை காத்து பக்குவமாக நடந்து கொண்டிருக்கிறீர்கள். உங்கள் கட்சியினர் மீது தொடர்ந்து சொல்லப்பட்டு வரும் குற்றச்சாட்டு, அவர்கள் கட்டப்பஞ்சாயத்துகளில் ஈடுபடுகிறார்கள், நிலத் தகராறுகளில் ஈடுபடுகிறார்கள், நிலங்களை அபகரிக்கிறார்கள் என்பதே. இந்தக் குற்றச்சாட்டுகளில் உண்மை உள்ளது என்பது மற்ற எல்லோரையும் விட, உங்களுக்கு நன்றாகத் தெரியும். இந்தக் குற்றச்சாட்டுகளுக்கெல்லாம் இடம் தராமல், ஒரு வலுவான தலித் இயக்கத்தைக் கட்டமைத்து, தலித்துகளுக்கு அரசியல் அதிகாரம் பெற்றுத் தர வேண்டும் என்பதே, பெரும்பாலானோரின் விருப்பம். இந்தத் தைத்திருநாளில், இந்த திசையில் பயணம் செய்யத் தொடங்க வேண்டும் என்று வாழ்த்துகிறோம்.
ஜி.ராமகிருஷ்ணன்.
தமிழகத்தை சாதி ரீதியாக பிளவுபடுத்த, ராமதாஸ் போன்றவர்கள் முயற்சி எடுத்தபோது, ஊசலாட்டம் இல்லாமல், தெளிவாக, சாதி இந்துக்களுக்கு எதிராகவும், தலித்துகளுக்கு ஆதரவாகவும் நிலைபாடு எடுத்த உங்களுக்கு வாழ்த்துக்கள். முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இடது சாரி இயக்கங்களின் பொறுப்பு, தற்போதைய மாறிய சூழலில் மிகவும் அதிகமாகியிருக்கிறது. தாராளமய பொருளாதாரக் கொள்கைகளை, அது அறிமுகப்படுத்தப்பட்ட நாள் முதலாக தீவிரமாக எதிர்த்து வந்த இடதுசாரி இயக்கங்கள், மேற்குவங்கத்தில் அதே தாராளமய பொருளாதாரக் கொள்கைகளை அமல்படுத்தி, ரத்தன் டாட்டா என்ற தரகு முதலாளிக்கு ஆதரவாக உழைப்பாளி மக்களை அடித்து நொறுக்கி, மக்கள் விரோத அரசாக மாறியது. ஆனால், ஆட்சி மாற்றம் தற்போது மறந்து போன உங்கள் கொள்கைகளை நினைவுபடுத்திக் கொள்ள உதவும் என்று நம்புகிறேன்.
மக்களுக்கு எதிரான எந்த திட்டத்தையும் ஒரு கம்யூனிஸ்ட் எதிர்த்தே ஆக வேண்டும். அது ரஷ்யாவிலிருந்து வந்த திட்டமாக இருந்தாலும் கூட. கடந்த காலத்தில் கூடங்குளம் அணு உலைக்கு ஆதரவு தெரிவித்து தவறு செய்த நீங்கள், அம்மக்களின் போராட்டத்தில் இருக்கும் உண்மையை உணர்ந்தும், அணு உலை என்பது, மனித இனத்திற்கே எதிரானது என்பதை உணர்ந்தும் செயல்பட வேண்டும் என்பதே உங்களுக்காக பொங்கல் வாழ்த்து.
தா.பாண்டியன்.
தமிழகத்தில் உள்ள தலைச்சிறந்த பேச்சாளர்களில் முதல் பத்து இடங்களில் உங்களுக்கு ஒரு இடம் நிச்சயமாக உண்டு. அந்த அளவுக்கு ஒரு சிறந்த பேச்சாளர் நீங்கள். திராவிட இயக்க பேச்சாளர்களுக்கு கிடைக்கும் முக்கியத்துவம் உங்களுக்கு கிடைக்காமல் போனது வருத்தத்திற்குரிய விஷயமே. ஆனால் உங்கள் பேச்சாற்றலை நீங்கள் எதற்கப் பயன்படுத்துகிறீர்கள் ? ஜெயலலிதாவுக்கு லாவணி பாடுவதற்கா ? ராமதாஸ் போன்ற நபர்கள் பரப்பும் விஷத்தை நேரடியாக எதிர்க்கும் நீங்கள், ஜெயலலிதாவின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்க்கையில் மட்டும் பம்முவது வருத்தத்திற்குரியது. சாதீய இந்துக்களுக்கு ஆதரவாக நிலைபாடு எடுத்த உங்களுக்கு, அம்பேத்கர் விருது வழங்கி அம்பேத்கரை அவமானப்படுத்தியுள்ளார் ஜெயலலிதா. கம்யூனிஸ்ட் என்று அழைத்துக் கொண்டாலும், உங்கள் மனதில் சாதி உணர்வு இன்னும் அற்றுப் போகவில்லை. ஜெயலலிதாவின் தவறான ஆட்சியினால், தமிழக மக்கள் அவதிப்பட்டுக் கொண்டிருக்கையில், கடுமையாக ஜெயலலிதாவை எதிர்க்க வேண்டிய நீங்கள், உங்கள் கட்சி எம்.எல்.ஏ ராமச்சந்திரனை வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும் என்பதற்காகவும், உங்களுக்கு ராஜ்ய சபா எம்.பி சீட் வேண்டுமென்பதற்காகவும், ஜெயலலிதாவிடம் பம்முவதோடு அல்லாமல், அதிமுக அடிமைகளில் ஒருவராக மாறி விடும் நிலையில் இருக்கிறீர்கள்.
உங்களின் அற்புதமான பேச்சுத் திறனை, ஜெயலலிதாவின் மோசமான ஆட்சியை சாடவும், விமர்சிக்கவும், கம்யூனிசக் கொள்கைகளை தமிழகமெங்கும் பரப்பவும் பயன்படுத்த வேண்டும் என்பதே உங்களுக்கான பொங்கல் வாழ்த்து.
குறிப்பு :சில வாசகர்கள், காங்கிரஸ் கட்சித் தலைவர்களுக்கு ஏன் வாழ்த்து தெரிவிக்கவில்லை என்று கேள்வி எழுப்பியிருந்தனர். அவர்கள் இதுக்கு சரிப்பட்டு வரமாட்டார்கள்.