நமது வாழ்க்கையில் பல சமயங்களில் நமக்கு வேதனையும் விரக்தியும் ஏற்படுவது இயல்பு. நம் வாழ்வில் அனுதினமும் ஏற்படும் பல்வேறு சம்பவங்கள் நமக்கு விரக்தியை ஏற்படுத்துகின்றன. பல நேரங்களில், இந்த விரக்தி நம்மை ஆட்கொண்டு நமது செயல்பாடுகளையே முடக்கும் வல்லமை படைத்தது. இவையெல்லாவற்றையும் கடந்தே நாம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறோம்.
கடந்த வாரம் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் எலிப்பி தர்மாராவ் மற்றும் அருணா ஜெகதீசன் முன்னிலையில் ஒரு பொதுநல வழக்கு விசாரணைக்கு வந்தது. அய்யய்யோ ஆனந்தமே… மற்றும் நேனே தேவுடு என்ற கட்டுரைகளில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முழு நேர ஊழியர்களாக பணியாற்றிக் கொண்டு, ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் சட்டப் படிப்பு படித்து பட்டம் பெற்று, அந்தப் பட்டத்தை வைத்து பதவி உயர்வு பெறுவதற்கு சில ஊழியர்கள் எடுக்கும் முயற்சியையும், அந்த பட்டப்படிப்புகளை அங்கீகரிக்க, பொறுப்பு தலைமை நீதிபதியாக உள்ள எலிப்பி தர்மாராவ் அவர்கள் எடுத்த வரும் நடவடிக்கை குறித்தும் விரிவாக எழுதப்பட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக எலிப்பி தர்மாராவின் அந்தரங்கக் காரியதரிசியாக இருக்கும் நாக தனஞ்செய ராவ் மற்றும் சுப்புலட்சுமி என்பவருக்கு உதவிப் பதிவாளராக பதவி உயர்வு வழங்கப்பட்டது குறித்தும் அக்கட்டுரையில் விவரிக்கப்பட்டருந்தது.
நாக தனஞ்செய ராவ் மற்றும் சுப்புலட்சுமி ஆகிய இருவருக்கும் கொடுக்கப்பட்ட பதவி உயர்வுகளை ரத்து செய்யக் கோரி, தமிழக மக்கள் உரிமைக் கழகம் சார்பில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கு கடந்த வியாழனன்று நீதிபதிகள் எலிப்பி தர்மாராவ் மற்றும் அருணா ஜெகதீசன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
வேதனை
வழக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டதும் எடுத்த எடுப்பிலேயே மனுதாரர் புகழேந்தி இதனால் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார் என்றார் நீதிபதி எலிப்பி தர்மாராவ். தொடர்ந்து நீதிபதி “நாங்கள் ஏற்கனவே ஒரு பொது நல வழக்கை தள்ளுபடி செய்துள்ளோம். எதற்கெடுத்தாலும் பொது நல வழக்கு தாக்கல் செய்வீர்களா ? உங்களுக்கு நீங்களே ஒரு சுயக்கட்டுப்பாடு விதித்துக் கொள்ளுங்கள்” என்றார்.
மனுதாரர் சார்பில் ஆஜரான ராதாகிருஷ்ணன், உச்ச நீதிமன்றத்தின் ஒன்பது நீதிபதிகள் அமர்வு S.P.Gupta என்ற வழக்கில் வழங்கிய தீர்ப்பின் பகுதியை சுட்டிக் காட்டினார்.
The first petitioner is a member of the Bombay Bar Association, petitioners, Nos. 2 and 3 are members of the Advocates Association of Western India and petitioner No. 4 is the President of the Incorporated Law Society. There can be no doubt that the petitioners have a vital interest in the independence of the judiciary and if an unconstitutional or illegal action is taken by the State or any public authority which has the effect of impairing the independence of the judiciary, the petitioners would certainly be interested in challenging the constitutionality or legality of such action. The profession of lawyers is an essential and integral part of the judicial system and lawyers may figuratively be described as priests in the temple of justice. They assist the court in dispensing justice and it can hardly be disputed that without their help, it would be well nigh impossible for the Court to administer justice. They are really and truly officers of the Court in which they daily sit and practice. They have, therefore, a special interest in preserving the integrity and independence of the judicial system and if the integrity or independence of the judiciary is threatened by any act of the State or any public authority, they would naturally be concerned about it, because, they are equal partners with the Judges in the administration of justice.
இவ்வழக்கின் முதல் மனுதாரர் பாம்பே வழக்கறிஞர் சங்கத்தின் உறுப்பினர். இரண்டு மற்றும் மூன்றாம் மனுதாரர்கள் மேற்கு இந்தியா வழக்கறிஞர் சங்கத்தின் உறுப்பினர்கள். நான்காம் மனுதாரர் ஒருங்கிணைந்த வழக்கறிஞர் சங்கத்தின் உறுப்பினர். மனுதாரர்கள் நீதிபரிபாலனத்தில் அக்கறை கொண்டுள்ளவர்கள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஒரு அரசோ, ஒரு அரசு அமைப்போ நீதித்துறையின் சுதந்திரத்தை பாதிக்கும் வகையிலான ஒரு சட்டவிரோதமான காரியத்தையோ, அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரான காரியத்தையோ செய்தால், அந்த நடவடிக்கையை கேள்விக்குள்ளாக்கும் உரிமை மனுதாரர்களுக்கு உள்ளது. வழக்கறிஞர் தொழில் என்பது நீதித்துறையின் இன்றியமையாத ஒரு பாகம் மட்டுமல்ல, வழக்கறிஞர்கள் நீதித்துறை என்ற கோவிலின் அர்ச்சகர்கள் என்று சொல்லலாம். நீதிமன்றத்தின் நீதிபரிபாலனத்தில் அவர்கள் பெரும்பங்கு ஆற்றுகிறார்கள் என்பது மட்டுமல்ல, அவர்கள் இல்லாவிட்டால் நீதிமன்றங்கள் நீதி வழங்கவே இயலாது. தினமும் நீதிமன்றத்தில் அமர்ந்து தொழில் செய்யும் வழக்கறிஞர்களே நீதிமன்றத்தின் உண்மையான அதிகாரிகள். இதனால், நீதித்துறையின் நேர்மையையும், சுதந்திரத்தையும், பாதுகாப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் அவர்கள், ஒரு அரசாலோ, அரசு அமைப்பாலோ நீதித்துறையின் சுதந்திரம் பாதிக்கப்படுகையில் கவலைப்படுவது இயல்பே. ஏனென்றால் வழக்கறிஞர்கள் நீதி பரிபாலனத்தில் நீதிபதிகளோடு சம பங்கு உள்ள பங்குதாரர்கள்.
இந்தத் தீர்ப்பை சுட்டிக்காட்டிய ராதாகிருஷ்ணன் இந்த விவகாரத்தில் வழக்கறிஞரான புகழேந்திக்கு அக்கறை உள்ளது என்றார்.
நீதிபதி எலிப்பி, புகழேந்திக்கு வேறு வேலையே இல்லையா என்றார். ராதாகிருஷ்ணன், புகழேந்திக்கு இதுதான் வேலை. உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் படி, இதுதான் வழக்கறிஞருக்கு வேலையாக இருக்க வேண்டும் என்றார்.
நீதிமன்றத்தையும், நீதிபதிகளையும் பகைத்துக் கொள்வது ஒரு வழக்கறிஞரின் எதிர்காலத்தையே சூன்யமாக்கும். நீதிமன்றத்தையே கேள்வி கேட்கிறாயா… என்ன திமிர் உனக்கு… என்று தங்களைக் கடவுள்களாகக் கருதிக் கொள்ளும் நீதிபதிகள், சம்பந்தப்பட்ட வழக்கறிஞரின் பெயரில் தாக்கல் செய்யப்படும் அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்து, அவர் எதிர்காலத்தையே பாழாக்கும் வாய்ப்பு உள்ளது. ஒரு வழக்கறிஞர் தாக்கல் செய்யும் அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டால், அவர் தன் பிழைப்புக்கு என்ன செய்வார் ? அந்த வக்கீல் நீதிபதியோடு சண்டை போடுவான்… அவனை வழக்கறிஞராக வைத்தால் நமது வழக்கு தள்ளுபடி ஆகும் என்று எந்த கட்சிக்காரரும், அந்த வழக்கறிஞரிடம் செல்ல மாட்டார்கள். அந்த வழக்கறிஞர் தன் வாழ்வாதாரத்தையே இழக்கும் சூழல் ஏற்படும். இந்த ஒரே காரணத்துக்காகத்தான், நீதிபதிகள் செய்யும் தவறுகளை யாருமே கேள்வி கேட்பதில்லை. நீதிபதிகளின் தவறுகளைச் சுட்டிக்காட்ட வழக்கறிஞர்களே அஞ்சினால், பொதுமக்கள் எப்படி வருவார்கள் ? இப்படி யாருமே கேள்வி கேட்காததால்தான், நீதிபதிகள், கேள்வி கேட்க யாருமே இல்லாத சக்ரவர்த்திகளாக தங்களைக் கருதிக் கொண்டு ஆட்சி நடத்தி வருகிறார்கள்.
சட்டத்தை மதிக்க வேண்டிய, சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட வேண்டிய நீதிமன்றத்தில் நடக்கும் ஒரு தவறை சுட்டிக்காட்ட ஒரு வழக்கறிஞர் ஒரு பொதுநல வழக்கு தாக்கல் செய்கிறார். அவருக்கு வேறு வேலையே இல்லையா என்று கேட்கும் நீதிபதி எப்படிப்பட்ட நீதிபதியாக இருப்பார் ? தவறாக, சட்டவிரோதமாக ஒரு நீதிமன்ற ஊழியருக்கு கொடுக்கப்படும் பதவி உயர்வை ரத்து செய்யுங்கள் என்று வழக்கறிஞர் போது நல வழக்கு மூலமாக கேள்வி கேட்டால், அவருக்கு என்ன பாதிப்பு என்று கேட்கும் நீதிபதி என்ன விதமான நீதிபரிபாலனம் செய்வார் ? நீதிபதி எலிப்பி தர்மாராவின் இந்த அணுகுமுறை ஏற்படுத்தியது வேதனை.
விரக்தி
அடுத்ததாக நீதிபதி எலிப்பி தர்மாராவ் ஒரு கேள்வி கேட்டார். யாருடைய பதவி உயர்வுக்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளீர்கள் தெரியுமா ? அவர் எனது அந்தரங்கக் காரியதரிசி (He is my PA). என்னுடைய அந்தரங்கக் காரியதரிசி என்ற ஒரே காரணத்துக்காக அவருக்கு ஒன்றைரை வருடமாக பதவி உயர்வு நிறுத்தப்பட்டிருந்தது உங்களுக்குத் தெரியுமா ? தனிப்பட்ட நபர்களை குறிவைத்து இந்த வழக்கு தாக்கல் செய்யப்படவில்லை என்றார் ராதாகிருஷ்ணன். ஆனால் இதையெல்லாம் காதில் வாங்கும் மனநிலையில் இல்லை எலிப்பி. ஒன்றரை வருடமாக பதவி உயர்வு பெறாத ஒரு நபருக்கு ஏற்பட்ட மன உளைச்சல் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா ? என்றார். இந்த சட்டப் படிப்பு மோசடியாக வாங்கப்பட்டது என்றார் ராதாகிருஷ்ணன். அந்த சட்டப்படிப்புக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. நாங்கள் அங்கீகாரம் வழங்கிய பிறகு அது எப்படி மோசடியாக வாங்கப்பட்ட பட்டப்படிப்பாக இருக்க முடியும் ? என்றார் எலிப்பி.
மனுதாரருக்கு வேறு வேலையே இல்லை. இதே வேலையாக இருக்கிறார். இது பொது நலன் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கா ? நளினியின் வழக்கு தவிர வேறு எந்த வழக்கையும் அவர் பொதுநல வழக்காக தாக்கல் செய்யவில்லை. எனது அந்தரங்கக் காரியதரிசியாக இருக்கும் ஒருவருக்கு எதிராக இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளீர்கள். மேலும் கோ வாரண்டோ வழக்கு எப்படி தாக்கல் செய்ய முடியும் ? அவர்கள் ஏற்கனவே பதவி ஏற்று விட்டார்கள். சென்னை உயர்நீதிமன்றத்திலேயே பணியாற்றும் சிலரின் தூண்டுதலால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பது எங்களுக்குத் தெரியும் என்று விட்டு, அங்கே இருந்த உயர்நீதிமன்றப் பதிவாளரைப் பார்த்து, கடந்த சில ஆண்டுகளில் இது போன்ற பதவி உயர்வு எத்தனை பேருக்கு வழங்கப்பட்டுள்ளது என்றார். அவர் எட்டு பேருக்கு என்றார். எட்டு பேருக்கு பதவி உயர்வு வழங்கப்படும் வரை என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்றார் எலிப்பி. என்னுடைய அந்தரங்கக் காரியதரிசி என்று எலிப்பி தர்மாராவ் சொன்னதும், இந்த வழக்கை வேறு அமர்வுக்கு மாற்றுங்கள் என்று ராதாகிருஷ்ணன் சொன்னதை நீதிபதி காதில் வாங்கிக் கொள்ளத் தயாராக இல்லை.
நீதிபதி எலிப்பி தர்மாராவ் மனுதாரர் புகழேந்தி வேறு எந்த பொதுநல வழக்கையும் தாக்கல் செய்வதில்லை என்று சொன்னது அறியாமையிலா, வேண்டுமென்றாவா என்று தெரியவில்லை. ஒரு மாதத்துக்கு குறைந்தபட்சம் ஒரு புதிய பொதுநல வழக்காவது மனுதாரர் புகழேந்தி பெயரில் தாக்கல் செய்யப்படுகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் இது வரை ஏறக்குறைய 60 பொதுநல வழக்குகளுக்கும் மேல் புகழேந்தி தாக்கல் செய்துள்ளார். இந்த பொதுநல வழக்குகள் குறித்து, ஒவ்வொரு முறையும் நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளது. சுப்ரமணிய சுவாமியின் வழக்கறிஞர் ராஜகோபால் ஒரு முறை இன்றைய செய்தித்தாளை பார்க்கவில்லை என்று கூறியதற்காக அவரை பகடி செய்த எலிப்பி தர்மாராவ், செய்தித்தாள்களில் புகழேந்தி தாக்கல் செய்த வழக்கு குறித்த செய்திகளை எப்படி பார்க்கத் தவறினார் என்று புரியவில்லை. 2009ம் ஆண்டு வேலூர் சிறையில் ஒரு சம்பவம். ஒரு திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்டதாக கைது செய்யப்பட்டு கைது செய்யப்பட்ட சாரதா என்ற பெண்மணி சிறையினுள்ளே 5 ஆயிரம் பணத்தை மறைத்து எடுத்துச் சென்று விட்டார் என்பதற்காக 2009ம் ஆண்டு, பெண் சிறைக் காவலர்களாலும், சக கைதிகளாலும் கடுமையாக அடித்துச் சித்திரவதை செய்யப்பட்டார். வேலூர் சிறைக்கு, ராஜீவ் கொலை வழக்கில் சிறையிலுள்ள நளினியைப் பார்க்கச் சென்ற புகழேந்திக்கு நளினி மூலமாக இத்தகவல் தெரிந்து உடனடியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் 17.07.2009 அன்று பாதிக்கப்பட்ட அந்த பெண்மணிக்கு 50 ஆயிரம் நஷ்ட ஈடு வழங்கி தீர்ப்பளித்தது. அந்தத் தீர்ப்பில் சென்னை உயர்நீதிமன்றம் “We place on record our patting for the petitioner, for bringing to light such a ghastly incident and fighting for the cause of a poor and illiterate woman prisoner.” ஒரு மோசமான சம்பவத்தை இந்த நீதிமன்றத்தின் கவனத்துக்கு எடுத்து வந்ததற்காகவும், ஏழை அபலைப் பெண்ணுக்கு ஏற்பட்ட அநீதிக்காக போராடியதற்காகவும் மனுதாரருக்கு எங்கள் பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்கிறோம் என்று சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது. அந்தத் தீர்ப்பை எழுதியவர் நீதிபதி எலிப்பி தர்மாராவ் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒன்றரை வருடமாக பதவி உயர்வு வழங்கப்படாமல் மன உளைச்சலுக்கு ஆளானார் எனது அந்தரங்கக் காரியதரிசி என்கிறாரே எலிப்பி தர்மாராவ் !!! இதே நாக தனஞ்செயராவுக்கு நியாயமான பதவி உயர்வு வழங்கியிருக்கிறாரா ? சென்னை உயர்நீதிமன்றத்தில் பணியாற்றிக் கொண்டே ஆந்திராவில் சட்டப்படிப்பு படித்துப் பட்டம் பெற்ற 33 ஊழியர்கள் நாக தனஞ்செயராவை விட பணியில் மூத்தவர்களாக இருக்கிறார்களே…. அவர்களின் மன உளைச்சல் என்ன என்பது எலிப்பிக்குத் தெரியுமா ? தனக்கு எஞ்சியிருக்கும் பதவிக்காலமான அடுத்த ஆறு மாதங்களுக்கு எப்படியாவது பொறுப்பு தலைமை நீதிபதியாக நீடிக்க வேண்டும் என்று பகீரதப் பிரயத்தனம் செய்து வருகிறாரே எலிப்பி தர்மாராவ்…. இதே போலத்தானே அந்த 33 பேரும் பதவி உயர்வு இல்லாமல் மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பார்கள் ? தன்னுடைய அந்தரங்கக் காரியதரிசியின் பறிபோன பதவி உயர்வுக்காக கண்ணீர் வடிக்கும் நீதிபதி எலிப்பி, அவரை விட பணியில் மூத்தவர்களான 33 பேரின் மனநிலையையும் சிந்தித்துப் பார்த்திருக்க வேண்டுமா வேண்டாமா ? அவருடைய அந்தரங்கக் காரியதரிசயாகவே இருந்தாலும், திருட்டுத்தனமாக பெற்ற ஒரு பட்டத்தின் அடிப்படையில் நான் பதவி உயர்வு வழங்குவேன், அதை யாரும் கேட்கக் கூடாது என்று பேசும் ஒருவர் என்ன நீதிபதியாக இருப்பார் ? அவர் எனது அந்தரங்கக் காரியதரிசி என்று ஆணவத்தோடு சொல்லும் எலிப்பி தர்மாராவ், நீதிபரிபாலனத்தின் அடிப்படைகளைத் தெரியாமல் இருப்பது விந்தையே. ஒரு நீதிபதி, தான் சம்பந்தப்பட்ட வழக்குகளை விசாரிக்காமல் வேறு நீதிபதியின் முன் அவ்வழக்கை மாற்றுவது, இந்திய நீதித்துறையின் மரபு மட்டுமல்ல.. உலகெங்கும் கடைபிடிக்கப்பட்டு வரும் மரபு. இந்த மரபை பின்பற்றாமல், அவர் எனது அந்தரங்கக் காரியதரிசி என்று பெருமையாக மார்தட்டிக் கொண்டு, அந்த வழக்கை தானே விசாரிப்பது எந்தவகையான நீதிபரிபாலனத்தில் சேரும் ?
பதவி ஏற்றுக் கொண்டால் கோ வாரண்டோ வழக்கு தாக்கல் செய்ய முடியாது என்று நீதிபதி எலிப்பி தர்மாராவுக்கு சொல்லிக் கொடுத்தவர் யார் ? இப்படி அடிப்படை சட்ட அறிவு கூட இல்லாமல் ஒருவர் பொறுப்பு தலைமை நீதிபதியாக இருக்கும் அவலத்தை நினைத்து ஏற்படும் உணர்வு விரக்தி.
பரிதாபம்
அடுத்ததாக நீதிபதி எலிப்பி தர்மாராவ், இப்போது வழக்கு தாக்கல் செய்துள்ளீர்களே… இத்தனை நாட்களாக என்ன செய்து கொண்டிருந்தீர்கள் ? சின்னையா நாயுடு என்பவருக்கு பதவி உயர்வு வழங்கினார்களே… அப்போது என்ன செய்து கொண்டிருந்தீர்கள் ? இத்தனை நாட்களாக புகழேந்தி உறங்கிக் கொண்டிருந்தாரா ? சின்னையா நாயுடுவுக்கு ஏன் பதவி உயர்வு கொடுத்தார்கள் என்று போய் அவரைக் கேளுங்கள். இதே போல பட்டப்படிப்பு படித்ததன் அடிப்படையில்தான் சின்னையா நாயுடுவுக்கு பதவி உயர்வு கொடுக்கப்பட்டது. அங்கிருந்து தொடங்குங்கள். திடீரென்று எனது அந்தரங்கக் காரியதரிசிக்குக் கொடுத்த பதவி உயர்வைப் பற்றிக் கேள்வி கேட்காதீர்கள்…
இந்தப் பதவி உயர்வு இப்போதுதான் வழங்கப்பட்டுள்ளது. அதனால்தான் நாங்கள் இப்போது வருகிறோம். இந்த பதவி உயர்வு மோசடியாக பெற்ற பட்டப்படிப்பின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது. போலி சாதிச் சான்றிதழ் கொடுத்து அரசுப் பணி பெற்றதற்கும் இதற்கும் வித்தியாசம் இல்லை. அதனால்தான் நாங்கள் கேட்கிறோம் என்றார் ராதாகிருஷ்ணன்.
அந்தப் பட்டப்படிப்பை நாங்கள் அங்கீகரித்து விட்டோம். இது வேறு விஷயம் என்றார் எலிப்பி தர்மாராவ். இறுதியாக நாங்கள் தீர்ப்பை ஒத்தி வைக்கிறோம் என்றார்.
ஒரு தவறான பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது என்று வழக்கு தொடர்ந்தால், “கூலி ஜாஸ்தி கேட்ட ஒரு யூனியன் லீடர். அவர நாய் சுட்ற மாதிரி சுட்டுக் கொன்னட்டு, அடுத்தநாள் மெடல் குத்திக்கிட்டு நின்னான் பார்… அவன நிறுத்தச் சொல்… நான் நிறுத்தறேன்.
ஒரு அப்பாவிக் கெழவன்.. அவன ஜெயிலுக்குக் கூட்டிட்டுப் போயி அடிச்சுக் கொன்னுட்டு தற்கொலைன்னு சொன்னான் பார்… அவன நிறுத்தச் சொல்…. நான் நிறுத்தறேன்…
கோணியும் தகர டப்பாவையும் கூரையா வச்சு வாழ்ந்துக்கிட்ருக்கற ஜனங்க மத்தியில புல்டோசர விட்டு இடிச்சான் பார்.. சேட் கம்னாட்டி.. அவன நிறுத்தச் சொல்… நான் நிறுத்தறேன்… என்று வேலு நாயக்கர் போலப் பேசுகிறார் எலிப்பி தர்மாராவ்.
இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் பிரிவு 229, ஒரு உயர்நீதிமன்றத்தின் ஊழியர்களை நியமித்துக் கொள்ள அளவில்லாத அதிகாரத்தை உயர்நீதிமன்றங்களுக்கு வழங்குகிறது. இப்படி வழங்கப்பட்டிருப்பதற்கான காரணம், தனது ஊழியர்களை நியமிப்பதற்காகக் கூட, நீதிமன்றம் அரசைச் சார்ந்து இருக்கக் கூடாது என்பதற்காகவே. ஆனால், அந்த அதிகாரத்தை தான்தோன்றித்தனமாக, தன் இஷ்டத்துக்குப் பயன்படுத்தலாம் என்பது பொருளல்ல. H.C.Puttaswamy Vs the Chie Justice of the High Court of Karnataka என்ற வழக்கில் உச்சநீதிமன்றம் ஒரு அற்புதமான தீர்ப்பை வழங்கியிருக்கிறது. உயர்நீதிமன்றத்தில் ஊழியர்கள் நியமனம் தொடர்பான அந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இப்படிக் கூறியிருக்கிறது.
The Judiciary is the custodian of constitutional principles which are essential to the maintenance of rule of law. It is the vehicle for the protection of a set of values which are integral part of our social and political philosophy. Judges are the most visible actors in the administration of justice. Their case decisions are the most publicly visible outcome. But the administration of justice is just not deciding disputed cases. It involves great deal more than that.
சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவதற்கு அவசியமான அரசியல் அமைப்புச் சட்டத்தின் பாதுகாவலனாக விளங்குகிறது நீதித்துறை. நமது சமூக மற்றும் அரசியல் தத்துவார்த்தத்தின் ஒரு பகுதியாக விளங்கும் மதிப்பீடுகளை பாதுகாக்கும் வாகனமாக அது விளங்குகிறது. நீதிபரிபாலனத்தில் வெளிப்படையாகத் தெரியும் நாயகர்களாக நீதிபதிகள் விளங்குகிறார்கள். பொதுமக்களுக்கு வெளிப்படையாகத் தெரிபவை, அவர்கள் வழங்கும் தீர்ப்புகள். நீதி நிர்வாகம் என்பது வழக்குகளில் வெறுமனே தீர்ப்பு வழங்குவது மட்டுமல்ல. அதற்கும் மேல்.
Any realistic analysis of the administration of justice in the courts must also take account of the totality of the Judges’ behaviour and their administrative roles. They may appear to be only minor aspects of the administration of justice, but collectively they are not trivial. They constitute in our opinion, a substantial part of the mosaic which represents the ordinary man’s perception of what the courts are and how the Judges go about their work. The Chief Justice is the prime force in the High Court. Article 229 of the Constitution provides that appointment of officers and servants of the High Court shall be made by the Chief Justice or such other Judge or Officer of the Court as may be directed by the Chief Justice. The object of this Article was to secure the independence of the High Court which cannot be regarded as fully secured unless the authority to appoint supporting staff with complete control over them is vested in the Chief Justice.
ஒரு நீதிமன்றத்தில் வழங்கப்படும் நீதிபரிபாலமானம் குறித்த ஆய்வானது, அந்த நீதிமன்றத்தின் நீதிபதிகளின் நடத்தை மற்றும் நிர்வாக ரீதியாக அவர்கள் எடுக்கும் நடவடிக்கையையும் சேர்த்தே செய்யப்படும். பார்ப்பதற்கு அந்த நிர்வாக நடவடிக்கைகள் சாதாரணமானவையாகத் தெரியலாம். ஆனால் ஒட்டுமொத்தமாகப் பார்கையில் அவை சாதாரணமானவை அல்ல. நீதிமன்றங்கள் என்றால் என்ன, நீதிபதிகள் எப்படிப் பணியாற்றகிறார்கள் என்பது குறித்த ஒரு சாமான்யனின் பார்வையில் அந்த நிர்வாக நடவடிக்கைகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஒரு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியே இதில் முக்கியப் பங்கு வகிக்கிறார். அரசியல் அமைப்புச் சட்டத்தின் பிரிவு 229 ஒரு உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியோ, அல்லது அவரால் நியமிக்கப்பட்டவரோ, நீதித்துறையின் ஊழியர்கள் தொடர்பான அனைத்து முடிவுகளையும் எடுக்கும் அதிகாரத்தை வழங்குகிறது. ஒரு நீதிமன்றத்தின் அனைத்து அம்சங்களையும் கவனிக்கும் பொறுப்பு நீதிமன்றத்தின் வசமே இருந்தால்தான் நீதிமன்றத்தின் சுதந்திரம் பாதுகாக்கப்படும் என்ற அடிப்படையில் இந்த ஷரத்து உருவாக்கப்பட்டு அதன் அதிகாரம் தலைமை நீதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது.
There can be no disagreement on this matter. There is imperative need for total and absolute administrative independence of the High Court but the Chief Justice or any other Administrative Judge is not an absolute ruler. Nor he is a free wheeler. He must operate in the clean world of law, not in the neighbourhood of sordid atmosphere. He has a duty to ensure that in carrying out the administrative functions, he is actuated by same principles and values as those of the Court he is serving. He cannot depart from and indeed must remain committed to the constitutional ethos and traditions of his calling. We need hardly say that those who are expected to oversee the conduct of others, must necessarily maintain a higher standards of ethical and intellectual rectitude. The public expectations do not seem to be less exacting.”
இதில் இருவேறு கருத்துக்கள் இருக்க முடியாது. நிர்வாக ரீதியாக நீதிமன்றத்துக்கு முழுமையான சுதந்திரம் இருக்க வேண்டும் என்பது எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்கு தலைமை நீதிபதியோ, அல்லது அவரால் நியமிக்கப்பட்டவரோ, கேள்வி கேட்க முடியாத ஒரு மன்னர் அல்ல என்பதும் உண்மை. அவர் கட்டுப்பாடற்றவரும் கிடையாது. அவர் சட்டத்தின் உலகத்தில் செயலாற்ற வேண்டுமே ஒழிய, மாசுபாடுள்ள சூழலில் பணியாற்றக் கூடாது. நீதிபதி நீதி வழங்கும் ஒரு நீதிமன்றத்தில் என்னென்ன கொள்கைகளைக் கடைபிடிக்க வேண்டுமோ, அதே கொள்கைகளை அவரின் நிர்வாக முடிவுகளிலும் கடைபிடிக்க வேண்டும். அவர் கடைபிடித்து வந்துள்ள மரபுகளை மீறாமல், அரசியல் அமைப்புச் சட்டத்தின் விழுமியங்களை மீறாமல் அவர் செயல்பட வேண்டும். மற்றவர்களின் செயல்பாடுகளை மேற்பார்வை செய்து, அவற்றில் குறை கண்டுபிடிக்கும் நீதிபதிகள், மிக மிக உயர்வான விழுமியங்களை கடைபிடிக்க வேண்டும் என்பதை நாங்கள் சொல்ல வேண்டியதில்லை. பொதுமக்களின் இந்த எதிர்ப்பார்ப்பு அதிகப்படியானது அல்ல.
இதுதான் உச்சநீதிமன்றத்தின் அந்தத் தீர்ப்பு. இந்தத் தீர்ப்பை வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், நீதிபதி எலிப்பி தர்மாராவிடம் படித்துக் காட்டியும், அவர் அதைக் காதில் வாங்கிக் கொண்டதாகவே தெரியவில்லை. நீ எந்த வழக்கு தாக்கல் செய்தால் என்ன…. அந்த வழக்கை தள்ளுபடி செய்யும் அதிகாரம் என்னிடம் உள்ளது…. என்ன செய்கிறேன் பார் என்ற அணுகுமுறையே அவரிடம் தெரிந்தது.
ஒரு சட்டவிரோதமான காரியம் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றுள்ளது என்பதைச் சுட்டிக்காட்டி, அது குறித்து பொதுநல வழக்கு தாக்கல் செய்தால், ஏற்கனவே சட்டவிரோதமான காரியம் நடைபெறவில்லையா… அதைக் கேட்காமல் இதைக் கேட்கிறாயே.. என்று வறட்டு நியாயம் பேசும் எலிப்பி தர்மாராவைப் பார்த்தால் பரிதாபமாகத்தான் இருக்கிறது. ஒரு உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்து கொண்டு, இப்படி குழாயடியில் பேசுவது போல பேசலாமா ? 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த, பாரம்பரியம் மிக்க ஒரு உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி, இப்படி வறட்டுத்தனமாக வாதிடுவதைப் பார்க்கையில், இப்படிச் சிறுமை அடைந்து விட்டாரே என்று அவரைப் பார்த்து பரிதாபம்தான் ஏற்படுகிறது.
நீதிபதி எலிப்பி தர்மாராவ் குறிப்பிடும் அந்த சின்னையா நாயுடு எப்வர், சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்த ரத்னம் என்ற நீதிபதியின் அந்தரங்கக் காரியதரிசியாக இருந்தார். தொண்ணூறுகளின் தொடக்கத்தில் அவர் மாலை நேர சட்டக்கல்லூரியில் சேர்ந்து படிப்பதற்காக நுழைவுத் தேர்வு எழுதுகிறார். அந்த நுழைவுத் தேர்வில் அவரால் தேர்ச்சியடைய முடியவில்லை. இதனால், கர்நாடக மாநிலம், பெங்களுரில் உள்ள ராஜீவ் காந்தி சட்டக் கல்லூரியில் சட்டப்படிப்பு படித்து துணைப் பதிவாளராகவும், பின்னர் பதிவாளராகவும் பதவி உயர்வு பெறுகிறார். பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர், வழக்கறிஞராக தொழில் செய்ய, தமிழ்நாடு பார் கவுன்சிலில் அவர் பதிவு செய்யச் சென்றபோது, அவர் திருட்டுத்தனமாக பட்டம் பெற்ற விபரம் தெரிந்ததால் அவருக்கு பதிவு மறுக்கப்பட்டது.
தற்போது இந்த சின்னையா நாயுடு எங்கே இருக்கிறார் தெரியுமா ? சென்னை உயர்நீதிமன்றத்தின் மாஸ்டர் கோர்ட் என்று அழைக்கப்படும் நீதிமன்றத்தில் நீதிபதியாக இருக்கிறார். வழக்கறிஞராக இருக்கவே தகுதியற்ற ஒரு நபர், நீதிபதியாக இருக்கும் அவலத்தை எங்காவது பார்த்திருக்கிறீர்களா ? இதே சென்னை உயர்நீதிமன்றத்தில்தான் இந்த சின்னையா நாயுடு அடிஷனல் மாஸ்டர் கோர்ட் 1ன் நீதிபதியா இன்றும் பணியாற்றி வருகிறார்.
வேலு நாயக்கர் போல, சின்னையா நாயுடுவைப் போய்க் கேள் என்று கோபப்படும் எலிப்பி தர்மாராவ், சின்னையா நாயுடுவை நீதிபதியாக நியமிக்கும் நியமனக் குழுவில் இருந்தாரே… சின்னையா நாயுடுவை நீதிபதியாக நியமிக்கும்போதே எலிப்பி தர்மாராவ் தடுத்திருக்க வேண்டுமா இல்லையா ? அந்த நியமனத்தை மவுனமாக இருந்து ஒப்புதல் அளித்து விட்டு, தற்போது அவனைக் கேள், இவனைக் கேள் என்று பேசுவது ஒரு நீதிபதிக்கு அழகா ?
உங்களுக்கு என்ன வேண்டும்… சின்னையா நாயுடுவைக் கேள்வி கேட்க வேண்டும். அவ்வளவுதானே.. விடுமுறைக்குப் பின் நீதிமன்றம் திறக்கும் 17.01.2013 அன்று காலை, சின்னையா நாயுடு நீதிபதியாக நியமிக்கப்பட்டதை எதிர்த்து ஒரு பொது நல வழக்கு தயாராக இருக்கும். போதுமா ?
பரிதாபத்திற்குரிய எலிப்பி தர்மாராவ் அவர்களே…. உங்களைப் போன்றவர்களுக்குத்தான் அய்யன் வள்ளுவன் இந்தக் குறளைச் சொல்லியிருக்கிறான்.
எற்றென்று இரங்குவ செய்யற்க செய்வானேல்
மற்றன்ன செய்யாமை நன்று.
என்ன தவறு செய்துவிட்டோம் என நினைத்துக் கவலைப்படுவதற்குரிய காரியங்களைச் செய்யக்கூடாது. ஒருகால் அப்படிச் செய்து விட்டாலும் அச்செயலை மீண்டும் தொடராதிருப்பதே நன்று.