மெக்கன்னாஸ் கோல்ட் என்ற திரைப்படம், 1969ம் ஆண்டில் வெளிவந்த ஹாலிவுட் திரைப்படம். தங்கத்தின் மீதான வெறி, மனிதர்களை எப்படியெல்லாம் மாற்றுகிறது என்பதை அற்புதமாக விளக்கும் படம் அது. க்ரெகரி பெக் மற்றும் ஓமர் ஷெரீஃப் மிகச் சிறப்பாக நடித்திருப்பார்கள் அத்திரைப்படத்தில்.
நாம் இப்போது பார்க்கப் போவது மெக்கன்னாஸ் கோல்ட் படத்தைப் பற்றியல்ல. இது சுரானாஸ் கோல்ட் பற்றியது. ஏற்கனவே சுரானாஸ் கோல்ட் பற்றி, சவுக்கில் ஓபனிங் நல்லாத்தான் இருக்கு… ஆனா ஃபினிஷிங் என்ற தலைப்பில் கட்டுரை வெளிவந்திருந்தது. நீதியரசர் கர்ணன் அந்த வழக்கை எப்படி சிறப்பாக விசாரித்தார் என்ற விபரங்கள் அந்தக் கட்டுரையில் எடுத்துரைக்கப்பட்டிருந்தது.
சுரானா கார்ப்பரேஷன் என்ற நிறுவனம், தங்க வியாபாரம் செய்து வரும் ஒரு நிறுவனம். ஜிஆர்டி தங்க மாளிகை, பிரின்ஸ் ஜுவல்லரி, சரவணா செல்வரத்தினம் என்று விதம் விதமாக நகைக் கடைகள் உள்ளன அல்லவா ? இந்த நிறுவனங்களுக்கெல்லாம் தங்கப் பாளங்களாக வழங்கும் நிறுவனம் சுரானா கார்ப்பரேஷன். மெட்டல்ஸ் அன்ட் மினெரல் ட்ரேடிங் கார்ப்பரேஷன் என்ற மத்திய அரசு நிறுவனம், 2009ம் ஆண்டு வரை இந்தியாவில் தங்கம் இறக்குமதி செய்ய ஏகபோக நிறுவனமாக இருந்து வந்தது. இந்த மத்திய அரசு நிறுவனத்திடமிருந்து, தங்கத்தை மொத்தமாக வாங்கும் சுரானா கார்ப்பரேஷன் போன்ற நிறுவனங்கள் அந்தத் தங்கப்பாளங்களில் இருந்து வளையல், மோதிரம், ஒட்டியானம், செயின் போன்றவற்றை செய்து, மற்ற நகைக்கடைகளுக்கு விற்பனை செய்ய, அந்த நிறுவனங்கள் செய்கூலி, சேதாரம், போன்ற எல்லாவற்றையும் சேர்த்து, நம் குடும்பத்துப் பெண்களுக்கு தொலைக்காட்சி விளம்பரங்கள் மூலமாக ஆசைக் காட்டி, ஆண்களின் பர்ஸ்களை காலி செய்ய வைக்கும்.
2009ம் ஆண்டு வரை, மத்திய அரசு நிறுவனமான எம்எம்டிசி மூலமாகத்தான் சுரானா நிறுவனம் தங்கம் வாங்கி வந்தது. அது வரை மொத்தமாக தங்கம் இறக்குமதி செய்வது என்பதால், சுரானா நிறுவனத்துக்கும், எம்எம்டிசி நிறுவனத்துக்கும் கோடிக்கணக்கில் கொடுக்கல் வாங்கல் இருக்கும். சுரானா நிறுவனத்தை நடத்தும் மார்வாடிகளான விஜய்ராஜ் சுரானா சாந்திலால் சுரானா ஆகிய மார்வாடிகள், மத்திய அரசு நிறுவனத்தை தங்கள் கைப்பிடிக்குள் வைத்திருந்தனர். இவர்கள் வைத்தது மட்டுமே சட்டமாக இருந்தது. இந்த வியாபாரம் ஒரு வித்தியாசமான வியாபாரம். ரொம்பவும் விளக்கினால் குழப்பமாக இருக்கும் என்பதால் எளிமையாகச் சொல்வதானால், தங்கத்துக்கான ஆர்டர் வழங்கும் நாளுக்கும், தங்கம் கைக்கு வந்து சேரும் நாளுக்கும் உள்ள இடைவெளிக்குள் ஏற்படும் ஏற்ற இறக்கங்களைப் பயன்படுத்தி, கோடிக்கணக்கில் லாபம் பார்த்து வந்தனர் சுரானா மார்வாடிகள்.
விதிமுறைகளின்படி, தங்க விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களில் ஏற்படும் மொத்த லாபமும், நஷ்டமும், எம்.எம்.டிசியையே சாரும். எந்த தேதியில் தங்கத்துக்கான ஆர்டர் பிறப்பிக்கப்படுகிறதோ, அந்த தேதியில் உள்ள விலையைக் கணக்கிட்டு, தங்கம் வழங்கப்படும் நாளன்று உள்ள விலையையும் கணக்கிட்டு, அதில் லாபமோ, நஷ்டமோ, அதை எம்எம்டிசி நிறுவனமே ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆனால், நடைமுறையில் எப்படி வியாபாரம் நடந்து வந்ததென்றால், இந்த நாள் இடைவெளியில் ஏற்படும், தங்க விலை ஏற்ற இறக்கத்தில், லாபம் ஏற்பட்டால் அது மார்வாடிகளுக்கும், நஷ்டம் ஏற்பட்டால் அது மத்திய அரசு நிறுவனத்துக்கும் ஏற்படுமாறு வியாபாரம் நடந்து வந்தது. பல ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வந்த இந்த மோசடிகளை யாருமே கண்டுபிடிக்கவில்லை. எம்எம்டிசி நிறுவனத்தை வருடந்தோறும் ஆய்வு செய்யும் ஆடிட் குழுவினரும், சுரானா மார்வாடிகளின் சட்டைப்பைக்குள் இருந்ததால், யாருமே இதைக் கேள்வி கேட்கவில்லை. எம்.எம்.டி.சி அதிகாரிகளோ, பணி ஓய்வுக்குப் பிறகு, சுரானா நிறுவனத்தில் கிடைக்கும் வேலையை மனதில் வைத்து, பணியாற்றும் மத்திய அரசு நிறுவனத்தை விட, சுரானா நிறுவனத்துக்கு விசுவாசமாக பணியாற்றினர். நீதிபதி பதவியிலிருந்து ஓய்வு பெற்றபின், எந்தத் தீர்ப்பாயத்தின் நீதிபதியாகலாம், எந்த விசாரணைக் கமிஷன் அமையும், அதன் நீதிபதியாகலாம் என்று நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு, உயர்நீதிமன்ற நீதிபதிகளே அலைகையில், சாதாரண அரசு அதிகாரிகளுக்கு மார்வாடிகளின் கைக்கூலிகளாகக் கசக்குமா என்ன ?
இப்படி நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக நடைபெற்று வந்த இந்த மோசடியை சிபிஐ கண்டுபிடித்து, கடந்த ஜுன் 2012 அன்று எம்எம்டிசி நிறுவனத்தின் பொது மேலாளர்களாக இருந்த குருசாமி, குருமூர்த்தி, மற்றும் சுரானா நிறுவனத்தின் விஜய்ராஜ் சுரானா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்கிறது. 2007 முதல் 2009 வரையிலான காலக்கட்டத்தில், எம்எம்டிசி அதிகாரிகள் கூட்டுச் சதியில் ஈடுபட்டு, சுரானா கார்ப்பரேஷன் என்ற தனியார் நிறுவனத்துக்கு ஆதரவாக, மோசடிகளில் ஈடுபட்டு, மத்திய அரசு நிறுவனத்துக்கு 18 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுத்தியுள்ளனர் என்று வழக்கு பதிவு செய்கின்றனர். இந்த வழக்கைத் தொடர்ந்து சிபிஐ சுரானா கார்ப்பரேஷன் அலுவலகம், சேட்டின் பல அடுக்கு மாடி வீடு ஆகிய இடங்களில் சோதனைகளை மேற்கொள்கிறது. இப்படி சோதனைகள் நடக்கும்போது, சிக்கியதுதான் 400 கிலோ தங்கம். இந்த 400 கிலோ தங்கத்துக்கு உரிய ஆவணங்களை சேட் தரவில்லை என்பதால், 400 கிலோ தங்கத்தையும் பறிமுதல் செய்கிறது சிபிஐ.
400 கிலோ தங்கத்தைப் பறிமுதல் செய்த பிறகுதான் சுரானா சேட் செய்து வந்த மற்றொரு தில்லுமுல்லு வெளிச்சத்துக்கு வந்தது. இந்த தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட பின், சேட்டுகள் அனலில் இட்ட புழு போல துடித்தார்கள். தையா தக்கா என்று குதித்தார்கள். எப்படியாவது அந்த 400 கிலோ தங்கத்தை விடுவித்து விட வேண்டும் என்று தவியாய்த் தவித்தார்கள். 400 கிலோ தங்கதை விடுவிக்க வேண்டும் என்று முதலில் சிபிஐ நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்கள். சிபிஐ நீதிமன்றத்தில் இந்த 400 கிலோ தங்கத்துக்கும், சிபிஐ பதிவு செய்துள்ள வழக்குக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, சிபிஐ உள்நோக்கத்தோடு தங்கத்தை பறிமுதல் செய்துள்ளது என்று வாதிட்டார்கள். வழக்கு விபரங்களை முழுமையாக கேட்ட நீதிபதி, விசாரணை ஆரம்பக் கட்டத்தில் உள்ளதால் தங்கத்தை விடுவித்து உத்தரவிட முடியாது என்று முடிவு செய்தார்.
இந்த நேரத்தில்தான் நீதிபதி கர்ணன் வருகிறார். நீதிபதி கர்ணன் முன்பு நடைபெற்ற வழக்கு விவரங்கள்தான் ஓபனிங் நல்லாத்தான் இருக்கு… ஆனா ஃபினிஷிங் என்ற கட்டுரையில் எழுதப்பட்டது. ஆனால் நீதிபதி கர்ணனின் ஃபினிஷிங்கும் நன்றாகத்தான் இருந்தது. தங்கத்தை விடுவிக்க வேண்டும் என்று கோரிய சேட்டின் மனுவைத் தள்ளுபடி செய்தார் கர்ணன். நீதிபதி கர்ணன் தனது உத்தரவில் சிபிஐயின் வழக்கு தொடக்கக் கட்டத்தில் உள்ளது, இந்த நேரத்தில் மனுதாரர்களின் தங்கத்தையும் பாஸ்போர்டையும் விடுவித்தால், விசாரணைக்கு இடையூறு நேரும், மத்திய அரசிடமிருந்து நேரடியாக தங்கம் இறக்குமதி செய்ய அனுமதி பெற்றுற்ள்தாக மனுதாரர்கள் கூறும் விபரங்களை சிபிஐ முழுமையாக ஆராய வேண்டியதுள்ளது. இந்த வழக்கில் ஏற்பட்டுள்ள மொத்த நஷ்டத் தொகைக்கு ஈடாக, மனுதாரர்கள் அளித்துள்ள 18 கோடி ரூபாயை தற்போது ஏற்றுக் கொள்வது, மனுதாரர்கள் ஈடுபட்டுள்ள மொத்த ஊழலில் தொகை தெரியாத நிலையில் பொருத்தமானதாக இராது. இதனால், இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன் என்று அற்புதமான தீர்ப்பு வழங்கியிருந்தார் நீதியரசர்.
உயர்நீதிமன்றம்தான் தள்ளுபடி செய்துள்ளதே என்று சேட் விடுவார்களா என்ன… உடனே உச்சநீதிமன்றம் சென்றார்கள். உச்சநீதிமன்றத்தில் கடந்த செப்டம்பர் 2012ல் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் ஸ்வதந்தர் குமார் மற்றும் முக்கோபாத்யாய் ஆகியோர் முன்னிலையில் இவ்வழக்கு விசாரணைக்கு வந்த போது,
… a request can be made by the petitioner to the authorities concerned or to the trial Court as regards its intention to deposit the entire alleged amount involved in the crime for releasing all the seized articles and properties. If such a request is made by the petitioner, the concerned authority or trial Court is directed to consider the same in accordance with law.
இவ்வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள மொத்த நஷ்டத் தொகையையும் செலுத்தி அதற்குப் பதிலாக சம்பந்தப்பட்ட பொருட்களை விடுவிக்க வேண்டும் என்ற மனுதாரர்களின் கோரிக்கையை, விசாரணை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவும். விசாரணை நீதிமன்றம், அந்தக் கோரிக்கையை பரிசீலித்து, உரிய முடிவை எடுக்கலாம் என்று உத்தரவிட்டது.
அதாவது எளிமையாகச் சொன்னால்…. மொதல்லேர்ந்து ஆரம்பிக்கணும்.
உங்களைப் போலவும், என்னைப் போலவும் மார்வாடிகள் ஏழைகளா என்ன… ? ராஜஸ்தானிலிருந்து தமிழகம் வந்து, வரி ஏய்ப்பு செய்து, தமிழர்களை ஏய்த்து, கோடிக்கணக்கில் பதுக்கி வைத்திருக்கும் மார்வாடிகளிடம் பணமா இல்லை. மீண்டும் மொதல்லேர்ந்து ஆரம்பித்தனர்.
ஒரு முறை டெல்லியிலிருந்து சென்னை வந்தால் 50 லட்சம் செலவு பிடிக்கும் வழக்கறிஞர்களை மீண்டும் அழைத்து வந்தனர். மீண்டும் விசாரணை நீதிமன்றத்தில் மனு. அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு, கடந்த வாரம் விசாரணை நடந்தது. டெல்லியிலிருந்து மல்ஹோத்ரா என்ற மூத்த வழக்கறிஞர் வந்து விசாரணை நடத்தினார். தற்போது இவ்வழக்கின் தீர்ப்பு ஒத்தி வைக்ககப்பட்டுள்ளது.
இந்த சுரானா சேட் சார்பாக வாதிடும் வழக்கறிஞர்கள் தொடர்ந்து எடுத்து வரும் வாதம் என்ன தெரியுமா ? வழக்கின் முதல் தகவல் அறிக்கைப் படி மொத்தமாக மத்திய அரசு நிறுவனத்துக்கு ஏற்பட்ட இழப்பு 18 கோடி. எதற்காக சம்பந்தம் இல்லாமல் 400 கிலோ தங்கத்தைப் பிடித்து வைத்திருக்கிறார்கள் ? நாங்கள் நேரடியாக தங்கம் இறக்குமதி செய்ய அனுமதி பெற்றவர்கள். அந்த அடிப்படையில் நாங்கள் தங்கம் இறக்குமதி செய்து வைத்திருந்தோம். அதை எப்படி சிபிஐ பறிமுதல் செய்யலாம் என்பதே.
சுரானா நிறுவனத்துக்கு நேரடியாக தங்கம் இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது என்பது உண்மையே. ஆனால் எங்கே இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது என்பதில்தான் விஷயமே அடங்கியிருக்கிறது.
சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் என்ற வார்த்தைப் பிரயோகத்தைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். Special Economic Zone என்று அழைக்கப்படும் இந்த மண்டலங்கள் என்றால் என்ன என்று தெரியுமா ? நீங்கள் வெளிநாட்டில் இருக்கிறீர்கள். உங்களுக்கு இந்தியாவில் தொழில் தொடங்க வேண்டும் என்று ஆசை. ஆனால், இந்தியாவில் தொழில் தொடங்க வந்தால், சிவாஜி படத்தில் காட்டுவது போல 78 லைசென்சுகள், 87 தடையில்லா சான்றிதழ்கள், 68 முன் அனுமதிகள், 89 பின் அனுமதிகள் ஆகியவற்றை வாங்க வேண்டும் என்று கூறுவார்கள். நீங்கள் ஒரு மனை வாங்கி வீடு கட்ட வேண்டுமென்றால், இந்த அனுமதிகளைப் பெறுவதற்கு எத்தனை இடங்களுக்கு அலைந்திருப்பீர்கள் என்று தெரியும். ஒரு சாதாரண நபர் இப்படி அலையலாம். பல கோடி ரூபாய்களை வைத்திருக்கும் தொழில் அதிபர்கள் அலையலாமா ? அவர்கள் நடத்தும் அரசே அவர்களை அலையவிட்டால் ஜனநாயகம் எப்படித் தழைக்கும் ? இதனால் மத்திய அரசு உருவாக்கியதுதான் சிறப்பு பொருளாதார மண்டலங்கள்.
ஏழை தலித் மக்களின் நிலங்களை, அடிமாட்டு விலைக்கு வாங்கி, விற்க மறுப்பவர்களை போலீசை விட்டு அடித்து, அந்த இடத்திலிருந்து காலி செய்து, 2000 அல்லது அதற்கு மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் சிறப்பு பொருளாதார மண்டலங்களை அமைப்பார்கள். அந்த மண்டலத்தில் தொழில் நடத்துபவர்களுக்கு ஏற்றுமதி செய்ய மட்டுமே அனுமதி. அந்த மண்டலத்தில் தொழில் தொடங்க அனுமதிக்கப்பட்ட நிறுவனம், உள்நாட்டில் வியாபாரம் செய்ய அனுமதி கிடையாது. உள்நாட்டில் வியாபாரம் செய்வதென்றால், முன் அனுமதி, பின் அனுமதியெல்லாம் தனியாகப் பெற வேண்டும்.
உதாரணமாக, நீங்கள் ஒரு கார் உற்பத்தி தொழிற்சாலை நிறுவுகிறீர்கள் என்றால், அந்த சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் உள்ள அதிகாரியிடம் விண்ணப்பித்தீர்கள் என்றால், உடனே உங்களுக்கான இடத்தை சிறப்புப் பொருளாதார மண்டலத்துக்குள் சகாய விலையில் ஒதுக்குவார் ஒரு தொழிற்சாலைக்கு தேவையான தடையில்லா மின் இணைப்பு, தண்ணீர் இணைப்பு, கழிவு நீர் வசதி, ஆகிய அனைத்தும் ஒரே நாளில் வழங்கப்படும். அங்கிருந்து தொழில் நடத்தி, உற்பத்தியாகும் கார்கள், ஏற்றுமதி மட்டுமே செய்ய வேண்டும். உள்நாட்டில் விற்கக் கூடாது. இதனால், இந்தியாவுக்கு அந்நியச் செலாவணி பெருகி, இந்தியா பொருளாதார வல்லரசாகும் என்று ஒரு “நம்பிக்கை”.
இந்த அடிப்படையில்தான் சுரானா சேட்டுக்கு நேரடி தங்கம் இறக்குமதி செய்ய லைசென்ஸ் வழங்கப்பட்டது. சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் தொழில் செய்ய லைசென்ஸ் வழங்கப்பட்டால் சுரானா என்ன செய்திருக்க வேண்டும் ? தங்கப்பாளங்களை சுவிட்சர்லாந்து நாட்டிலிருந்து இறக்குமதி செய்து, அதை வளையல்களாகவும், மோதிரங்களாகவும், ஒட்டியானங்களாகவும் செய்து, தங்க நகைகளுக்கு அதிக கிராக்கி இருக்கும் துபாய், அபுதாபி, துபாய் குறுக்கு சந்து போன்ற இடங்களுக்கு ஏற்றுமதி செய்திருக்க வேண்டும். ஆனால், சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் தங்கம் இறக்குமதி செய்ய வழங்கப்பட்ட லைசென்ஸை வைத்துக் கொண்டு, லிங்கிச் செட்டித் தெருவில் எப்படி வியபாரம் செய்ய முடியும் ? இதைத்தான் செய்திருக்கிறார்கள் சுரானா சகோதரர்கள்.
அந்த 400 கிலோ தங்கமும் சுரானாவின் அலுவலகம் அமைந்துள்ள லிங்கிச் செட்டித் தெருவில்தான் கைப்பற்றப்பட்டன. இந்தத் தங்கத்தைப் பறிமுதல் செய்த சிபிஐ அதிகாரிகள், சுரானாவிடம் கேட்பது, உனக்கு லைசென்ஸ் கொடுத்தது, சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் தொழில் செய்ய.. அங்கிருந்து தங்கத்தை ஏற்றுமதி மட்டுமே செய்ய முடியும். உள்நாட்டில் தொழில் செய்வதற்கான நடைமுறையே வேறு. அதனால்தான் பறிமுதல் செய்தோம் என்று சொன்னால், சுரானா சகோதரர்கள் எங்களுக்கு லைசென்ஸ் இருக்கிறது என்கிறார்கள். டேய்… பச்சிலை புடுங்கி… நான் எஸ்எஸ்எல்சி பெயிலுடா என்றால், அண்ணே நான் ஏழாவது பாஸ்னே… பாஸ் பெருசா… பெயில் பெருசா என்கிறார்கள்.
உரிய அனுமதி இல்லாமல் சுரானா சகோதரர்கள் உள்நாட்டில் தங்க வியாபாரம் செய்வதால், என்ன பெரிதாக குறைந்து விடப்போகிறது… தேவையான வரியை அவர்கள் கட்டி விடுவார்கள் என்று சுரானா சேட் தரப்பு வாதாடுகிறது. ஆனால், அனுமதியில்லாமல் உள்நாட்டில் இந்த மார்வாடிகள் செய்யும் வியாபாரத்தால், அரசு நிறுவனமான எம்.எம்.டி.சிக்கு போக வேண்டிய வியாபாரம் நஷ்டப்படுகிறதா இல்லையா ? ஒரு பொதுத்துறை நிறுவனத்தின் வயிற்றில் அடித்து, அதை நொண்ட வைத்து, முடமாக்கி, அதை மரணப் படுக்கையில் தள்ளி விட்டு, கொள்ளை லாபம் சம்பாதிக்கும் சுரானா சகோதரர்கள் சட்டத்தின் பார்வையில் தங்கக் கடத்தல் காரர்களே… அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 400 கிலோ தங்கமும் கடத்தப்பட்ட தங்கமே.
எப்படியாவது 400 கிலோ தங்கத்தை விடுவித்து விட வேண்டும் என்று, தமிழகத்தில் பணியாற்றும் இரண்டு வட இந்திய அதிகாரிகளை அணுகியிருக்கிறார்கள் சுரானா சேட்டுகள். ஒருவர் ராஜஸ்தானைச் சேர்ந்த அதிகாரி. அந்த அதிகாரி மூலமாக ஹரியானாவைச் சேர்ந்த மற்றொரு அதிகாரியை அணுகி, எப்படியாவது தங்க வேட்டையில் தங்களை வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டிருக்கிறார்கள். ஆனால் அந்த இரண்டு அதிகாரிகளும் எடுத்த முயற்சி வெற்றி பெறவில்லை.
மெக்கன்னாஸ் கோல்ட் படத்தில் க்ளைமாக்ஸ் காட்சி வரை, முடிவில்லாமல் நீண்டு கொண்டே செல்லும் தங்க வேட்டை போல, சுரானா சேட்டுகளின் தங்க வேட்டை நீதிமன்றங்களில் நடந்து கொண்டிருக்கிறது.
எப்போது முடிகிறது என்று பார்ப்போம்.
Any Update on this subject