ஜனவரி முதல் வாரத்தில் ஸ்டாலின்தான் எனது அடுத்த வாரிசு என்று அறிவித்து, திமுகவில் மட்டுமல்லாது தமிழக அரசியல் வானிலேயே பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் கருணாநிதி.
பாட்டாளி மக்கள் கட்சியிலிருந்து விலகி, திமுகவில் ஜனவரி முதல் வாரத்தில் சேர்ந்தவர்களிடைய உரையாற்றியபோது, பேசிய கருணாநிதி “சமுதாயத்தின் மேன்மைக்காகவும், எழுச்சிக்காகவும் எனது ஆயுள் முடியும் வரை பாடுபடுவேன். அப்படியானால் எனக்குப்பிறகு என்ற கேள்விக்கு பதில் தான் இங்கு அமர்ந்திருக்கும் தம்பி ஸ்டாலின். அவர் எனது பணியை தொடர்ந்து செய்வார்” என்று பேசினார். இதைத் தொடர்ந்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஸ்டாலினை தனது வாரிசாக அறிவித்து விட்டார் என்று ஊடகங்கள் எழுதின.
மூன்று நாட்கள் கழித்து ஜனவரி 6 அன்று செய்தியாளர்களைச் சந்தித்த கருணாநிதி “தலைவர் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும் உரியமுறைப்படியே தேர்ந்தெடுக்கப்படவேண்டும், அவ்வகையில் அடுத்த தலைவரை முன்மொழியும் வாய்ப்பு தனக்குக் கிடைக்குமானால் ஸ்டாலினைத் தான் முன் மொழிவேன்” என்றார்.
அவ்வாறு ஸ்டாலின் அடுத்த தலைவராகவேண்டுமென ஏற்கெனவே கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகன் ஆலோசனை கூறியிருப்பதாகவும் கருணாநிதி தெரிவித்தார்.
ஆனால் தற்போது நடைபெறவிருக்கிற உட்கட்சித் தேர்தல்களிலேயே ஸ்டாலின் தலைவராக்கப்படுவாரா என்ற கேள்விக்கு அவர் நேரடியாக பதிலளிக்க மறுத்து “கட்சி முடிவுசெய்யும்” என்று மட்டும் கூறினார். 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றப் பொதுத் தேர்தல்களுக்கு முன்பு உட்கட்சித் தேர்தல்கள் நடைபெறுமா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன என கருணாநிதி கூறினார்.
கருணாநிதி முதல் முறை ஸ்டாலின் தனக்குப் பின் தன் பணிகளைத் தொடர்வார் என்ற அறிவிப்பு வெளியானதுமே, அழகிரி, “திமுக ஒன்றும் சங்கரமடமல்ல வாரிசுகள் நியமிக்கப்பட” என்று கூறியிருந்தார்.
இதே பொருள் தொடர்பாக அழகிரி, திமுக சங்கர மடமல்ல என்று கூறியிருக்கிறாரே என்று கேட்டதற்கு, விரும்பினால் அழகிரியும் தலைவர் பதவிக்குப் போட்டியிடலாம் என்று கூறிய கருணாநிதி திமுக சர்வாதிகார கட்சி இல்லை. ஸ்டாலினை நான் முன்மொழிந்தால், ஒரு கிளைக் கழகத்தில் இருக்கும் ஓர் உறுப்பினர்கூட ஸ்டாலினை எதிர்த்து நிற்க உரிமை உண்டு என்று கூறினார். கிளைக் கழகத்தில் உள்ள ஒரு உறுப்பினர் ஸ்டாலினையோ அழகிரியையோ எதிர்த்துப் போட்டியிட்டால் விட்டு விடுவார்களா என்ன ?
உட்கட்சித் தேர்தலில் தலைவர் பதவிக்கு நீங்கள் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு, “உள்கட்சித் தேர்தல் முடியும் வரை நான் உயிரோடு இருப்பேனா என்பது தெரியாததால், நான் போட்டியிடுவது தொடர்பாக எதுவும் சொல்ல முடியாது.” என்றுதான் கூறினாரே தவிர, நான் போட்டியிட மாட்டேன் என்று கருணாநிதி சொல்லவில்லை.
மதுரையில் தினகரன் நாளிதழ் அலுவலகம் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு தமிழக முதல்வர் மு கருணாநிதி கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்ட கருணாநிதி இத்தகைய தாக்குதலை தன்னால் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும், திமுக ஜனநாயக முறைப்படி இயங்கும் ஒரு கட்சி என்றும், எனவே தனக்கு யார் வாரிசு என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் கருணாநிதி கூறியிருந்தார் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
கருணாநிதி எது பேசினாலும் அதில் ஆயிரம் அர்த்தங்கள் ஒளிந்திருக்கும். என்ன பேசினாலும், அதை அப்படியே திரித்து, அதற்கு வேறு பொருள் கற்பிப்பதில், கருணாநிதியைப் போன்ற விற்பன்னர் யாருமே கிடையாது. கருணாநிதிக்கு இருக்கும் அந்த வாக்கு சாதுர்யம், இந்திய அரசியலில் வேறு எந்த தலைவருக்காவது உள்ளதா என்பது அய்யமே… ஈழப் போர் நடந்து கொண்டிருந்த சமயத்தில் கருணாநிதி எப்படியெல்லாம் மாற்றிப் பேசினார் என்பது வரலாறு. அப்படிப்பட்ட வரலாறு கொண்டவர் கருணாநிதி.
அத்தகைய சாதுர்யமும், கூர்நோக்கும் கொண்ட கருணாநிதி, திடீரென்று ஸ்டாலினை ஆதரித்து, அடுத்த வாரிசு என்று அறிவிக்கிறாரே என்று பலர் ஆச்சர்யமடைந்துள்ளார்கள். கருணாநிதி உலகத்தில் யாரையாவது நேசிக்கிறாரா என்றால் அது தன்னை மட்டுமே. கல்யாண வீட்டுக்குப் போனால் நான்தான் மாப்பிள்ளை, சாவு வீட்டுக்குப் போனால் நான்தான் பிணம் என்ற வரையறை கருணாநிதிக்கு முழுமையாகப் பொருந்தும். நூறு சதவிகித நார்சிஸ்ட் யாரென்றால் அது கருணாநிதிதான். அப்படிப்பட்ட கருணாநிதி தலைமைப் பொறுப்புக்கு யாரரென்று வெளிப்படையாக அறிவிக்கிறார் என்றால் காரணம் இல்லாமல் இல்லை.
வழக்கமாக பத்திரிக்கையாளர்கள் யாராவது தளபதி ஸ்டாலின் தலைவராக அறிவிக்கப்படுவாரா என்று கேட்டால், அதற்கு இப்போது என்ன அவசரம்.. நான் ஓய்வு பெற வேண்டும் என்று விரும்புகிறீர்களா.. மக்கள் எனக்கு ஓய்வு கொடுத்தால் ஓய்வு பெற்று விடுவேன்… நான் இன்னும் இளைஞன்தான், ஒரு நாளைக்கு 17 மணி நேரம் உழைக்கிறேன்… நான் மிகவும் பிற்படுத்தப்பட்ட, முற்படுத்தப்படாமல் விடப்பட்ட, முற்படுத்தப்படும்போது தடுக்கப்பட்ட, வகுப்பைச் சேர்ந்தததால் நான் அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்று விரும்புகிறீர்களா என்றெல்லாம் கேட்பார். ஒரு முறை, ஓ பக்கங்களில் ஞானி, கலைஞருக்கு ஓய்வு கொடுங்கள், உங்கள் வீட்டில் உள்ள முதியவரை வேலை செய்யச் சொல்லி இது போல கொடுமைப் படுத்துவீர்களா என்று கேட்டதற்கு, தியாகராய நகர் அரங்கத்தில், ஒரு தனிக் கூட்டம் போட்டு, ஞானியை நான்கு மணி நேரம் தாளித்தார்கள். அந்த கூட்டத்தில் ஞானியை மிகச் சிறப்பாக தாளித்ததற்காகத்தான் எழுத்தாளர் தமிழச்சி தங்கபாண்டியன், அதன் பிறகு நடந்த திமுக பெண்கள் மாநாட்டில் திமுக கொடியேற்ற வைத்து கவுரவப்படுத்தப்பட்டார். இப்படிப்பட்டவர்தான் கருணாநிதி. இவர் ஏன் திடீரென்று ஸ்டாலின்தான் அடுத்த வாரிசு என்று பேசுகிறார் ?
கருணாநிதி இப்படிப் பேசுவதன் பின்னணியை ஆராய, அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு நடந்தவற்றைப் பார்க்க வேண்டும். திமுக ஆட்சியில் இருந்தவரை, அழகிரியின் செல்வாக்கு, திருச்சியைத் தாண்டியதிலிருந்து இருந்தது. வட தமிழ்நாட்டில் உள்ள திமுக மட்டுமே ஸ்டாலின் கட்டுப்பாட்டில் இருந்தது. திருச்சிக்கு தெற்கே உள்ள அத்தனை மாவட்டங்களும், அழகிரியின் கட்டுப்பாட்டில் இருந்தன. எப்போது தேர்தல் வைத்து, அழகரியிடம் பொறுப்பை ஒப்படைத்தாலும் அவர் தேர்தலில் திமுகவை வெற்றி பெற வைப்பார் என்ற பிம்பம் கட்டமைக்கப்பட்டது. திருமங்கலம் இடைத்தேர்தலில் அழகிரி கடைபிடித்த பணம் விநியோகிக்கும் முறை, திருமங்கலம் ஃபார்முலா என்று பின்னாளில் அறியப்படும் வகையில் பிரபலமடைந்தது. எந்த தேர்தலிலும் இல்லாத அளவுக்கு 88.9 சதவிகித வாக்குப் பதிவு நடந்தது. அந்தத் தேர்தலில் திமுக அடைந்த வெற்றியால் பேருவகை அடைந்தார் கருணாநிதி.
அதையொட்டி அழகிரி பற்றிய மிகப் பெரிய பிம்பம் கட்டமைக்கப்பட்டது. அழகிரி மனது வைத்தால் வேறு எந்த கட்சியும் தேர்தலில் வெல்ல முடியாது என்ற மாயை உருவாக்கப்பட்டது. அழகிரி, கருணாநிதிக்கு அடுத்து திமுகவில் பலம் பொருந்திய ஒரு சக்தி என்ற கருத்து திட்டமிட்டு பரப்பப்பட்டது. இந்த காலகட்டத்தில் மு.க.ஸ்டாலினே அடக்கி வாசித்து, அழகிரியோடு சமாதானப் போக்கை கடைபிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. திமுகவின் அமைச்சர்களும், மாவட்டச் செயலாளர்களும், அழகிரியைப் பகைத்துக் கொண்டால் அதோ கதி என்ற முடிவுக்கு வந்தார்கள். 2009 பாராளுமன்றத் தேர்தலில், ஈழப் போரின் காரணமாக, திமுகவின் துரோகத்தால், திமுக அந்த தேர்தலில் பெரும் தோல்வியடையும் என்று எதிர்ப்பார்த்திருந்த நிலையில், கணிசமான பாராளுமன்ற இடங்களில் திமுக வெல்வதற்கு அழகிரி காரணமாக இருந்தார், அதற்கு திருமங்கலம் ஃபார்முலாவே காரணம் என்றும் கூறப்பட்டது. மைனாரிட்டி அரசு என்பதால், காங்கிரஸ் கட்சி திமுகவுக்கு நெருக்கடி கொடுத்த போதெல்லாம் அடுத்த மாதம் தேர்தலை வையுங்கள். 200 இடங்களில் வென்று காட்டுகிறேன் என்று வெளிப்படையாகவே சவால் விட்டார் அழகிரி.
தினகரன் நாளிதழ் அலுவலகத்தில் நடந்த கொலைகளுக்குப் பிறகு, அழகிரிக்கு கருணாநிதி வழங்கிய ஆதரவு குறிப்பிடத்தக்கது. அந்தக் கொலைகள் நடந்த இரண்டொரு நாளில், சன் டிவி செய்தியாளர் கருணாநிதியிடம், அழகிரி இப்படியொரு கொலை செய்திருக்கிறாரே என்று கேட்டதற்கு, “நீ பாத்தியாய்யா… நான் சொல்றேன்… நீதான் கொலை செஞ்சே” என்று கோபப்பட்டார் கருணாநிதி. அதுதான் கருணாநிதி அழகரி மீது வைத்துள்ள அன்பின் அளவுகோல். கொலை செய்த மகனை சற்றும் கண் சிமிட்டாமல் காப்பாற்றுபவர்தான் கருணாநிதி. அப்படிப்பட்ட கருணாநிதி இன்று அழகிரிக்கு நேரெதிரான ஒரு நிலைப்பாட்டை எடுத்துள்ளார் என்றால் அதற்கு அழகிரியின் செயல்பாடுகளே காரணம்.
அஞ்சா நெஞ்சன், திமுகவின் எதிர்காலம் என்றெல்லாம் புகழப்பட்ட அழகிரி, சட்டமன்றத் தேர்தலில், திமுக படுதோல்வி அடைந்தபிறகு, கல்லெறிக்குப் பயந்து, வாலை கால்களுக்கிடையே சுருட்டிக் கொண்டு ஓடும் நாயைப் போல ஓடி ஒளிந்தார். ஜெயலலிதா அரசு, நில அபகரிப்பு வழக்குகளைப் பதிவு செய்து, அழகிரியின் கைத்தடிகளாக இருந்த அட்டாக் பாண்டி, பொட்டு சுரேஷ் போன்றவர்களை கைது செய்தது அறிந்த அழகிரி, குடும்பத்தோடு சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் ஓடி ஒளிந்தார். டெல்லிக்குப் பக்கத்தில் உள்ள பண்ணை வீட்டில் பதுங்கியிருந்தார். 2009 தேர்தலுக்குப் பிறகு, மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில், திமுகவுக்கு பழைய செல்வாக்கு இல்லை என்பது கருணாநிதிக்கு கடுமையான எரிச்சலை ஏற்படுத்தியது. தான் போட்ட பிச்சை ஆதரவில் ஐந்தாண்டுகள் ஆட்சி நடத்திய ஒரு கட்சி, தன் மகளையே சிறையில் அடைக்கிறதே என்று கடுமையான எரிச்சலில் இருந்தார் கருணாநிதி. டி.ஆர்.பாலுவை என்ன ஆனாலும் அமைச்சரவையில் சேர்க்க முடியாத என்றார்கள். ஆ.ராசாவை பதவி இழக்கச் செய்தார்கள். அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தார்கள். பெற்ற மகளையே சிறையில் அடைத்தார்கள். பேரனைப் பதவி விலகச் செய்தார்கள். கூட்டணி அமைப்பதற்காக, உத்தரப்பிரதேரசத்தில் உள்ள ஒரு மாநிலக் கட்சியின் தலைவர் மாயாவதியை சிபிஐ பிடியிலிருந்து காப்பாற்ற முடிந்த காங்கிரஸ் கட்சியால், அந்த மாயாவதியை விட விசுவாசமாக, தமிழின விரோதி என்ற அடைமொழியை நிரந்தரமாக தன் பெயரோடு ஒட்ட வைத்தாலும், சளைக்காமல் ஆதரவு அளித்தும், நான் பெற்ற மகளைக் காப்பாற்ற மறுத்து விட்டார்களே என்று கடுமையான கோபத்தில் இருந்தார் கருணாநிதி.
இந்தக் கோபத்தையெல்லாம் மனதில் வைத்து, அமைச்சரவைப் பதவிகளை ராஜினாமா செய்து விட்டு, வெளியிலிருந்து ஆதரவு தரலாம் என்று கருணாநிதி எடுத்த முடிவுகளையெல்லாம் தடுத்து, அமைச்சரவையில் தொடர வேண்டும் என்ற வலியுறுத்தியது அழகிரியே. 2011 சட்டமன்றத் தேர்தலில் திமுக காங்கிரஸூக்கு 60 இடங்கள் தர முன்வந்தாலும், காங்கிரஸ் 63 இடங்களைத் தந்தே ஆக வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தபோதும், கூட்டணியை விட்டு வெளியேறலாம் என்று கருணாநிதி முடிவெடுத்தபோது, நான் மந்திரி பதவியை ராஜினாமா செய்யத் தயாராக இல்லை என்று அழகிரி கூறியதாலேயே கருணாநிதி அந்தர் பல்டி அடித்து 63 நாயன்மார்கள் என்று கூறி, காங்கிரஸ் கேட்ட அதே 63 இடங்களை வழங்கினார்.
அழகிரிக்கு ஆங்கிலம் பேசத் தெரியவில்லை என்று ஒட்டுமொத்த டெல்லியும் அவமானப்படுத்தியும், கொஞ்சம் கூடக் கூச்சப்படாமல் அந்த அமைச்சர் பதவியில் அழகிரி ஒட்டிக் கொண்டிருந்ததற்கு காரணம் பயம். இந்த பயம், ஜெயலலிதா அரசின் காவல்துறையைக் கண்டதும் அதிகமானது. தன் கைத்தடிகளைக் கைது செய்தபோதே டெல்லியில் குடும்பத்தோடு பதுங்கிய அழகிரி, தன் மகன் மீது எப்ஐஆர் பதிவு செய்ததும், ஏறக்குறைய படுக்கையில் சிறுநீர் கழிக்கும் அளவுக்கு பயந்து போனார். தன் மகனை தலைமறைவாகச் சொல்லி விட்டு, இவர் டெல்லியில் பதுங்கினார். காவல்துறையினர் அவர் வீட்டை சோதனை போட்டபோதும், மருமகளை காவல்நிலையத்துக்கு சம்மன் தந்து விசாரித்தபோதும் கூட, தன் மகனை சரணடையச் சொல்லவில்லை அழகிரி. மாறாக, எப்போது தனக்கு சாதகமான நீதிபதி வருவார் என்று காத்திருந்து, அது வரை தன் மகனை சந்து சந்தாக ஓடி ஒளியச் செய்தார். அழகிரி மற்றும் அவரது மகனின் இந்த நடவடிக்கைகளால் மனம் வெறுத்த கருணாநிதி வெளிப்படையாகவே காவல்துறையினர் அவர்களைக் கைது செய்யலாம் என்று கூறினார்.
மாறாக, மு.க.ஸ்டாலினோ, அவர் மீது நில அபகரிப்புப் புகார் கொடுக்கப்பட்டபோது, “இன்ஸ்பெக்டர் அரெஸ்ட் மீ” என்று சினிமா ஹீரோக்கள் பேசுவது போல, நேரடியாக டிஜிபி அலுவலகம் சென்று, என்னைக் கைது செய்யுங்கள் என்றார். அவர் வந்ததைப் பார்த்து, காவல்துறை அதிகாரிகள்தான் ஓடி ஒளிந்தார்கள்.
ஒரு அரசியல்வாதியின் திறமையும், சாதுர்யமும், எதிர்க்கட்சியாக இருக்கும்போதுதான் வெளிப்பட வேண்டும். ஆளுங்கட்சியாக இருக்கையில், ஆமை கூட கூட வீரம் பேசும். ஆனால் எதிர்க்கட்சியாக இருக்கையில், ஆளுங்கட்சி தரும் நெருக்கடிகளை எப்படி எதிர்கொள்கிறாரோ, அதை வைத்துத்தான் ஒரு தலைவரின் எதிர்காலம் நிர்ணயிக்கப்படும். இந்த வகையில் மு.க.ஸ்டாலின் கடந்த ஒன்றரை வருட அதிமுக ஆட்சியை சிறப்பாகவே எதிர்கொண்டுள்ளார்.
இந்த நிலையில், எப்போது தலைவராக அறிவிப்பீர்கள் என்று நீண்ட நாட்களாக வற்புறுத்தி வரும் ஸ்டாலின் வாயையும் அடைக்க வேண்டும், அழகிரியையும் வழிக்குக் கொண்டு வர வேண்டும். இதற்கு என்ன வழி ?
அரசியலை கவனித்து, பத்திரிக்கைகளில் எழுதும் ஒரு பத்திரிக்கையாளரே அழகிரி அடுத்து இப்படி முடிவெடுப்பார், இப்படி நடந்து கொள்வார் என்று தெரிந்து வைத்திருக்கையில், தான் பெற்ற மகன், தான் 62 வருடங்களாக பார்க்கும் மகன், ஒரு விஷயத்தை எப்படி அணுகுவான், எப்படி நடந்து கொள்வான் என்பது ஒரு தந்தைக்குத் தெரியாதா ? அப்படித் தெரிந்ததால்தான், கருணாநிதி இப்படி ஒரு தந்திரத்தைக் கையாண்டிருக்கிறார்.
கருணாநிதிக்கு 2014 பாராளுமன்றத் தேர்தலில் திமுக கணிசமான இடங்களில் வெற்றி பெற்று, 2009 முதல் தன்னைப் பழிவாங்கிய காங்கிரஸ் கட்சியை பழிக்குப் பழி வாங்க வேண்டும் என்று ஆசை. 2004 ஆண்டு தேர்தல் முடிவுகளைப் போல 2014 முடிவுகளும் அமைந்தால், கோபாலபுரத்துக்கு சோனியாவை வரவழைத்து, ஆதரவு கேட்டு கெஞ்ச வைக்க வேண்டும் என்று விருப்பம். அப்படி சோனியா வந்தால், 2ஜி வழக்கை கைவிடுங்கள், கேட்ட மந்திரி இலாக்காக்களை கொடுங்கள் என்ற பேரம் பேச முடியும். அது போல பிரம்மாண்டமான வெற்றி பெற்றால்தான் மகளைக் காப்பாற்ற முடியும். அந்த பிரம்மாண்டமான வெற்றி சாதாரணமாக உழைத்தால் கிடைக்காது. வெறி பிடித்தார்ப்போல வேலை செய்தால்தான் கிடைக்கும். ஒரு கோழையை எப்படி வீரனாக்குவது ?
அழகிரி என்ற கோழையை வீரனாக்கி பாராளுமன்றத் தேர்தலில் பணியாற்ற வைக்க கருணாநிதி வகுத்த திட்டமே ஸ்டாலின்தான் எனது வாரிசு என்ற அறிவிப்பு. இந்த அறிவிப்பை கருணாநிதி வெளியிட்டதும் அழகிரி கடும் கோபம் கொள்வார் என்று கருணாநிதிக்கு தெரியும். கோபமடைந்த அழகிரி முதல் வேலையாக என்ன செய்வார் ? தன் தாயார் தயாளு அம்மாளை அணுகி, “உன் புருஷன்கிட்ட சொல்லி வையி” என்று சலம்புவார். அங்கேயும் கதை நடக்கவில்லை என்றால் என்ன செய்வார்… ? ஸ்டாலினையா வாரிசு என்கிறீர்கள்…. நான் யாரென்று காட்டுகிறேன் பார் என்று தன் முழு பலத்தையும் பிரயோகித்து, பாராளுமன்றத் தேர்தலில் தன் பலத்தைக் காட்ட முயல்வார். திமுக அறிவிக்கும் வேட்பாளர்களுக்குப் போட்டியாக வேட்பாளர்களை நிறுத்தி அவர்களை ஜெயிக்க வைக்க கடும் முயற்சி எடுப்பார். ஆனால் இந்த முறை, கருணாநிதி வேட்பாளர் தேர்வில், அழகிரிக்கு முழு சுதந்திரம் கொடுப்பார். அழகிரியின் தேர்வை அங்கீகரிப்பார். ஸ்டாலினா நானா என்று பார்த்து விடுவோம்… தென் மண்டலத்தில் அனைத்துத் தொகுதிகளிலும், திமுகவை ஜெயிக்க வைத்துக் காட்டுகிறேன் பார் என்று ஒரு வெறியோடு பணியாற்றுவார். இதற்கான நடவடிக்கைகள், பாராளுமன்றத் தேர்தலுக்கு நிதி திரட்டுவதிலிருந்து தொடங்கும். ஸ்டாலினை விட, அதிக நிதி வசூல் செய்து காட்டுகிறேன் பார் என்று பரபரப்பாக செயல்படுவார் அழகிரி.
தேர்தலுக்கான நிதி வசூல் என்றாலும் சரி…. தேர்தல் பணியாற்றி பெரும் வெற்றியை ஈட்டித் தந்தாலும் சரி. இரண்டுமே, காங்கிரஸை பணிய வைக்க வேண்டும் என்ற கருணாநிதியின் கனவை நனவாக்கவே உதவும். இந்த முயற்சி வெற்றி பெறும் என்று கருணாநிதி கருதியதன் விளைவே, ஸ்டாலின் குறித்த அறிவிப்பு.
பாராளுமன்றத் தேர்தலில், திமுக கணிசமான இடங்களில் வெற்றி பெற்று, திமுக தயவில்லாமல் எந்தக் கட்சியும் மத்தியில் ஆட்சி அமைக்க முடியாது என்ற நிலை வந்தால், அது காங்கிரசாக இருந்தாலும் சரி, பிஜேபியாக இருந்தாலும் சரி… கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் அந்த அரசாங்கத்தில் பங்கேற்று தன் குடும்பத்தின் நலன்களை பாதுகாத்து, இறப்பதற்குள் எப்படியாவது பாரத ரத்னா பட்டம் பெற்று, அந்தப் பட்டம் பெற்றதற்காக தமிழகம் முழுக்க தனக்கு பாராட்டு விழாக்களை ஏற்பாடு செய்ய உத்தரவிட்டு, அதில் கலந்து கொள்ள வேண்டும் என்பதைத் தவிர கருணாநிதிக்கு வேறு ஆசைகள் இருக்க முடியாது. ஸ்னூக்கர் விளையாட்டில் ஒரு பந்தை அடித்தால், அது இன்னொரு பந்தை தாக்கி, எந்தப் பந்து குழியில் விழும் என்பதை நன்கு உணர்ந்தவர் கருணாநிதி.
ஆனால், அழகரியை வைத்து, அவர் விளையாடும் இந்த விளையாட்டில் இறுதி வெற்றி யாருக்கு என்பற்கு காலம்தான் விடை சொல்லும்.
இந்த மோதலில் கருணாநிதி ஸ்டாலின் பக்கமும் கிடையாது, அழகிரி பக்கமும் கிடையாது. அவர் உயிரோடு இருக்கும் வரை, திமுகவின் தலைமை அவரை விட்டு வேறு எங்கும் செல்லாது என்பதே யதார்த்தம்.