தற்போதைய தலைமுறைக்கு டார்க்ரூம் என்றால் என்னவென்றே தெரியாது. புகைப்படக் கலை முழுமையாக டிஜிட்டல் மயமாகி விட்ட இன்றைய சூழலில் டார்க் ரூம் என்ற பிரயோகம், அதன் முக்கியத்துவத்தையும் பொருளையும் இழந்து விட்டது. புகைப்படக் கலை டிஜிட்டல் மயமாவதற்கு முன், புகைப்படம் பிலிம் சுருளில் எடுக்கப்பட்டு, நெகட்டீவாக டெவலப் செய்யப்படும் இடம்தான் டார்க் ரூம். டிக் டிக் டிக் படத்தில், பாரதிராஜா அந்த இருட்டான அறையில் ஒரு பாடல் காட்சியைப் படமாக்கியிருப்பார்.
1919ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம்
இன்று நாம் பார்க்கப்போவது டார்க் ரூம் குறித்த வரலாறை அல்ல. சென்னை உயர்நீதிமன்றத்தில் டார்க் ரூமாக இருக்கும் ப்ரெஸ் ரூமைப் பற்றியதே அது. சிறிய வயதிலிருந்தே பத்திரிக்கையாளர்களைப் பார்த்தால் ஒரு பிரமிப்பு உண்டு. அச்சில் வருவதெல்லாம் உண்மை என்ற பிம்பம் மிக உறுதியாக மனதுக்குள் கட்டப்பட்டு இருந்தது. இந்த பிம்பம் காரணமாக பத்திரிக்கையாளர்கள் சமுதாயத்தின் மிகப்பெரிய தூண்கள் என்ற எண்ணம் இருந்ததுண்டு. மறைந்த எழுத்தாளர் சு.சமுத்திரத்தின் சத்திய ஆவேசம் என்ற நாவலில், பத்திரிக்கையாளர்கள் கவர் வாங்கிக் கொண்டு, செய்திகளைத் திரித்து வெளியிட்டார்கள் என்று படித்தபோது சு.சமுத்திரத்தின் மீது இருந்த நம்பிக்கையால் பத்திரிக்கையாளர்கள் மீது இருந்த பிம்பம் உடைந்தது. அதன் பிறகு, பத்திரிக்கை உலகத்தோடு இருந்த நட்பு தொடர்ந்து கொண்டே வந்தாலும், பல நல்ல பத்திரிக்கையாளர்களோடு கிடைத்த சிநேகம், இத்துறையின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ள வைத்தது.
பத்திரிக்கை உலகில் நெருங்கிப் பழகப் பழக, அரசு நிர்வாகம், காவல்துறை, நீதித்துறை போன்ற துறைகளில் நிலவும் ஊழல், போட்டி, பொறாமை, கயமை ஆகிய எதுவுமே, பத்திரிக்கைத்துறையில் சற்றும் குறையாமல் இருக்கிறது என்பது உறைத்தது. மோசமான நீதித்துறை என்று தெரிந்தாலும், சளைக்காமல் தொடர்ந்து போராடுவது போல, ஊடகத்தின் ஈரலும் கெடத் தொடங்கியிருந்தாலும், சமுதாயத்தில் புரையோடிப் போயிருக்கும் நெடுநாள் பிணிகளுக்கான சிகிச்சை அளிக்கவும், புதிய பிணிகள் தாக்காமல் தடுக்கவும், ஊடகத்தைப் போன்ற சிறந்த மருத்துவம் இல்லை.
இன்று டைம்ஸ் ஆப் இந்தியாவில் ஒரு செய்தி. ஈரல் செயலிழந்து போன ஒரு நோயாளிக்கு, ஈரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய விதிகளைத் தளர்த்தி, உடனடியாக அனுமதி கொடுக்க அவசர உத்தரவு ஒன்றை சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்தது குறித்த செய்தி. பெரம்பலூர் மாவட்டம், துரைமங்கலத்தைச் சேர்ந்த அன்பரசி என்பவரின் கணவர் சிவப்பிரகாசம், ஈரல் பழுதுபட்டதாக மருத்துவர்களால் அறிவிக்கப்பட்டார். ஜனவரி 16 அன்று பெங்களுரில் நடந்த ஈரல் மாற்று அறுவை சிகிச்சை வெற்றி பெறாமல் போனதால், மீண்டும் ஒரு ஈரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு அதற்குண்டான சட்டத்தின் படி, அமைக்கப்பட்ட குழு அனுமதி தந்தால்தான் செய்ய முடியும் என்ற நிலை. நோயாளிக்கு ஈரல் முழுமையாக செயலிழந்து போனதால், அவர் உடனடியாக அறுவை சிகிச்சை செய்யாவிட்டால் அவர் உயிரிழக்கும் அபாயம். இந்த நிலையில் அரசு அமைக்க வேண்டிய குழு உடனடியாக அனுமதி தந்து, தன் கணவர் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்று அன்பரசி தாக்கல் செய்த மனுவில், நீதிபதி பால் வசந்தகுமார், உடனடியாக பிறப்பித்த உத்தரவின் காரணமாக நடந்த அறுவை சிகிச்சையினால், நோயாளி உயிர் பிழைத்தார் என்பதே அந்தச் செய்தி. அந்த செய்தியில், நோயாளியின் மனைவி அன்பரசி, நீதமன்றத்தில் தானே வாதாடி இந்த உத்தரவைப் பெற்றார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இங்கேதான் சிக்கல் எழுகிறது. இந்த வழக்கை தாக்கல் செய்தவர் ஸ்டாலின் என்ற இளம் வழக்கறிஞர். இந்த வழக்கறிஞரிடம் காலை பத்து மணிக்கு இந்த நோயாளி குறித்த விபரமும், உடனடியாக வழக்கு தாக்கல் செய்ய வேண்டிய விபரமும் தெரிவிக்கப்படுகிறது. தன் உதவியாளர்களை வழக்குக்கான மனுவை தயாரிக்கச் சொல்லி விட்டு, காலை 10.30 மணிக்கு நீதிபதி முன் இந்த வழக்கை சிறப்பு வழக்காக எடுத்து விசாரிக்குமாறு கோருகிறார் ஸ்டாலின். உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கென அமைக்கப்பட்டுள்ள கமிட்டியிடம் விண்ணப்பம் அளித்து விட்டீர்களா என்று கேட்கிறார் நீதிபதி. இன்னும் அளிக்கவில்லை என்றதும், விண்ணப்மே அளிக்காமல் நான் எப்படி அவசர வழக்காக விசாரிக்க முடியும் என்று நீதிபதி கேட்கிறார். இன்று காலை நோயாளியை பரிசோதித்த மருத்துவர்கள், இன்று இரவுக்குள் அறுவை சிகிச்சை செய்யாவிட்டால் அவர் உயிரிழப்பார் என்று கூறியிருக்கிறார்கள். இந்த வழக்கை மதியம் 2.15க்கு விசாரணைக்கு எடுங்கள், அதற்குள் கமிட்டிக்கு விண்ணப்பம் கொடுக்கப்படும். நீதிமன்றம் மனது வைத்தால் அந்த நபர் உயிர் பிழைப்பார் என்கிறார்.
அதை ஏற்ற நீதிபதி, மதியம் இவ்வழக்கை எடுத்து வருமாறு உத்தரவிடுகிறார். ஒரு ரிட் மனு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தால், அதற்கு ரிட் மனு எண் கொடுத்து, விசாரணைக்கு வருவதற்கு இரண்டு நாட்கள் ஆகும். குறைந்தபட்சம் ஒரு நாளாவது ஆகும். ஏனென்றால் அதற்கு ரிட் மனு எண் கொடுப்பதில் அவ்வளவு வேலைகள் அடங்கியிருக்கிறது. அவசர வழக்காக கருதும் வழக்குகள் இது போல உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
உடனடியாக சம்பந்தப்பட்ட கமிட்டியிடம் இந்த உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான விண்ணப்பம் அளிக்கப்பட்டு, அதன் நகல் எடுத்து வரப்பட்டு, ரிட் மனுவோடு இணைக்கப்பட்டு, அவசர அவசரமாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு ஒரு நபரின் உயிர் சம்பந்தப்பட்டது என்பதால், உயர்நீதிமன்ற ஊழியர்கள், மதிய உணவு இடைவேளையில் கூட தங்கள் உணவை மறந்து பணியாற்றி, இந்த வழக்கை 2.30 மணிக்கு நீதிபதி முன் எடுத்து வந்தனர். அந்த ஊழியர்களின் சிறப்பான பணிக்கு சவுக்கின் பாராட்டுக்கள்.
வழக்கறிஞர் ஸ்டாலின்
இப்படி அவசரமாக எடுத்து வரப்பட்ட வழக்கிலேயே, இப்படி ஒரு உத்தரவை நீதிபதி பிறப்பித்து, அன்று இரவு 12 மணிக்கு அறுவை சிகிச்சை நடந்து, சிவப்பிரகாசத்தின் உயிர் காப்பாற்றப்பட்டது. இவரின் உயிர் காப்பாற்றப்பட்டதில், வழக்கறிஞர் ஸ்டாலினின் பங்கு மகத்தானது. அவர் மட்டும் அந்த கமிட்டியிடம் விண்ணப்பம் வழங்குவதில் தாமதம் செய்திருந்தாலோ, வழக்கை தாக்கல் செய்வதில் தாமதம் செய்திருந்தாலோ, இன்று சிவப்பிரகாசம் உயிரோடு இருந்திருப்பாரா என்பது சந்தேகமே. இப்படி கடுமையாக உழைத்த ஒரு வழக்கறிஞரின், உழைப்பை புறந்தள்ளி, பாதிக்கப்பட்டவரின் மனைவி நீதிபதி முன்பு வாதாடினார் என்று செய்தி வெளியிடுகிறார். இன்னும் 24 மணி நேரத்தில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யாவிட்டால் தன் கணவர் இறந்து விடுவார் எனும் சூழலில், ஒரு மனைவி தன் கணவன் அருகில் இருக்காமல் நீதிமன்றத்தில் “தேரா மன்னா, செப்புவதுடையேன்” என்று நீதிபதி முன் வாதாடிக் கொண்டிருந்தார் என்று செய்தியை சரிபார்க்காமல் எழுதும் ஒரு நபரை பத்திரிக்கையாளர் என்று அழைப்பீர்களா ?
டைம்ஸ் ஆப் இந்தியாவில் இன்று வந்த செய்தி ஒரு உதாரணம் மட்டுமே. ப்ரெஸ் ரூம் என்ற பெயரில் உயர்நீதிமன்ற வளாகத்தில் அமைந்திருக்கும் டார்க் ரூமில் அமர்ந்திருக்கும் பத்திரிக்கையாளர்கள் என்று தங்களை அழைத்துக் கொள்பவர்கள் செய்யும் அக்கிரமங்களுக்கு அளவே இல்லை.
பத்திரிக்கையாளர்கள் வழக்கமாக க்ரைம் பீட், எஜுகேஷன் பீட், கோர்ட் பீட் என்று பிரித்து அனுப்பப் படுவார்கள். கோர்ட் பீட் பார்க்கும் பத்திரிக்கையாளர்களை தேர்ந்தெடுக்கையில், அனுபவம் வாய்ந்தவர்களாகப் பார்த்தே அனுப்புவார்கள். அச்சு ஊடகங்களில் இது போன்ற அனுபவம் வாய்ந்த பத்திரிக்கையாளர்கள் இருப்பதால் அச்சு ஊடகங்களுக்குப் பிரச்சினை இல்லை. ஆனால், காட்சி ஊடகங்களுக்கு இது போன்ற அனுபவம் வாய்ந்த பத்திரிக்கையாளர்களை நீதிமன்றத்துக்கென தனியாக அனுப்ப இயலாது என்பதால் இளம் பத்திரிக்கையாளர்களை அனுப்புவார்கள். ஆனால் இந்த இளம் பத்திரிக்கையாளர்களை, அச்சு ஊடகத்தைச் சேர்ந்த மூத்த பத்திரிக்கையாளர்கள் படுத்தும் பாடு இருக்கிறதே…. அதை வார்த்தைகளால் வடிக்க இயலாது.
சென்னை உயர்நீதிமன்றம், பாம்பே, கொல்கத்தா மற்றும் டெல்லி நீதிமன்றத்துக்கு இணையாக, செய்திகளை அள்ளித்தரும் ஒரு நீதிமன்றம். பொது நல வழக்குகள் தாக்கல் செய்வதிலாகட்டும், மற்ற சட்ட நுணுக்கம் வாய்ந்த வழக்குகளைத் தாக்கல் செய்வதாகட்டும், சென்னை உயர்நீதிமன்றத்தில் செய்திகளுக்குப் பஞ்சமே இருக்காது. இந்நீதிமன்றத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்த அச்சு ஊடகங்கள், அனுபவம் வாய்ந்த பத்திரிக்கையாளர்களை சென்னை உயர்நீதிமன்றத்துக்கென பிரத்யேகமாக நியமித்திருக்கிறார்கள். இந்து, டைம்ஸ் ஆப் இந்தியா, இந்தியன் எக்ஸ்பிரஸ், டெக்கான் க்ரானிக்கிள் என்ற ஆங்கில ஊடகங்கள் மற்றும், தினமணி, தினத்தந்தி, தினமலரின் இரு பிரிவுகள், தினகரன் மற்றும் மாலை நாளிதழ்களுக்கென்று தனித்தனியே செய்தியாளர்கள் உண்டு. தெலுங்குப் பத்திரிக்கையான ஈநாடுக்குக் கூட தனியாக ஒரு செய்தியாளர் உண்டு.
இந்த அச்சு ஊடகங்களின் மூத்த பத்திரிக்கையாளர்கள், பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பிரிவில் பணியாற்றி வருகிறார்கள். தொடர்ந்து இவர்கள் இதே பிரிவில் பல ஆண்டுகளாக பணியாற்றி வருவதால், இவர்கள் தங்களை சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவே கருதிக் கொள்கிறார்கள் என்பதில்தான் சிக்கலே தொடங்குகிறது.
இந்த மூத்த பத்திரிக்கையாளர்கள் நினைத்தால்தான் செய்தி வெளி வரும். இவர்கள் ஒரு செய்தியை வெளியிடக் கூடாது என்று முடிவெடுத்தால், அந்த செய்தி எந்த ஊடகத்திலும் வெளி வராது. தனிக்காட்டு ராஜாக்களாக இவர்கள் ராஜ்ஜியம் நடத்தி வந்தார்கள். செய்தி வெளியிடுவதற்கு பணம் கொடுத்தால் மட்டுமே செய்தி வெளி வரும் என்ற நிலைமை உருவாகியது. வேறு வழியின்றி, தங்கள் செய்தி வெளியாக வேண்டுமே என்ற நிலையில் வழக்கறிஞர்களும் இவர்களுக்குப் பணம் கொடுத்தே தீர வேண்டும் என்று அழுது தொலைப்பார்கள்.
இவர்களின் தனிக்காட்டு ராஜ்ஜியத்திற்கு முதன் முதலில் ஆபத்து வந்தது, காட்சி ஊடகங்கள், சென்னை உயர்நீதிமன்றத்துக்கென பிரத்யேக நிருபர்களை நியமித்தபோதுதான். 2010 ஆண்டு முதல்தான் காட்சி ஊடகங்கள், சென்னை உயர்நீதிமனறத்துக்கென செய்தியாளர்களை நியமித்தார்கள். அதற்கு முன், எப்போதாவது உயர்நீதிமன்றத்தில் முக்கிய செய்திகள் இருந்தால் மட்டுமே யூனிட்டையும், செய்தியாளரையும் காட்சி ஊடகங்கள் அனுப்பி வைக்கும். அதன் பிறகு, புதிய தலைமுறை போன்ற ஊடகங்கள், உயர்நீதிமன்றத்துக்கு பிரத்யேகமாக செய்தியாளர்களை நியமித்ததும், சன் டிவி உள்ளிட்ட மற்ற ஊடகங்கள் நிரந்தரமாக ஒரு யூனிட்களை உயர்நீதிமன்றத்துக்கென நியமித்தன.
இந்த காட்சி ஊடகங்கள் வந்ததால், அச்சு ஊடகங்களின் ராஜாவாக இருந்த மூத்த பத்திரிக்கையாளர்கள் பீதியடைந்தார்கள். வழக்கறிஞர்களும், நம் முகம் தொலைக்காட்சியில் தெரிகிறதே என்று காட்சி ஊடகங்களையே விரும்பி பேட்டியளித்தார்கள். இந்த புதிய தாக்குதலால் அச்சு ஊடகத்தின் செய்தியாளர்கள் கவலையடைந்தார்கள். ஆனால் நாளடைவில் மீண்டும் நாங்கள்தான் ராஜா என்று பழையபடியே தங்கள் வேலையை தொடங்கி விட்டார்கள்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் நீங்கள் ஒரு வழக்கு தொடுக்கிறீர்கள். செய்தி முக்கியத்துவம் வாய்ந்த ஒரு வழக்கு அது. அந்த வழக்கு குறித்து பொதுமக்களுக்குத் தெரிய வேண்டும் என்று நீங்கள் விரும்பினீர்கள் என்றால் அது மறுநாள் செய்தித்தாளில் வந்து விடாது. உங்கள் மனுவை 20 நகல்கள் எடுத்து டார்க் ரூமுக்கு மன்னிக்கவும், ப்ரெஸ் ரூமுக்குச் சென்று கொடுக்க வேண்டும். அதை அவர்கள் வாங்கிப் பார்ப்பார்கள். எந்த கோர்டில் வந்தது என்று கேட்பார்கள். பதில் சொன்னதும், எந்த ஜட்ஜ் முன்னிலையில் வந்தது என்று கேட்பார்கள். அதற்கும் பதில் சொன்னதும், எத்தனையாவது ஐட்டம் ? (வழக்கின் வரிசை எண்) என்று கேட்பார்கள். அனைத்தையும் சொன்னதும், நீங்கள் அளிக்கும் நகலை வாங்கி வைத்து விட்டு, நீங்கள் கிளம்புங்கள். நாங்கள் என்ன உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பதை சரிபார்த்து விட்டு போடுகிறோம் என்பார்கள். மறுநாள் செய்தித்தாளில் அந்த செய்தி வரும் என்று நீங்கள் எதிர்ப்பார்த்தீர்களேயானால் வராது. அது எப்படித் தானாக வரும் ? அந்த டார்க் ரூமில் உள்ள உரிய நபரைப் பார்த்து மொத்தம் எத்தனை செய்தியாளர்கள் என்று கணக்கிட்டு, அதற்கேற்றார்ப் போல, செலுத்த வேண்டிய தொகையை செலுத்தினால், அந்தச் செய்தி மறுநாள் வெளி வரும். நீங்கள் கொடுக்கும் தொகை, உங்கள் வழக்கறிஞர் கொடுக்கும் தொகை, உங்கள் வழக்கறிஞரின் செல்வாக்கு, செய்தியின் முக்கியத்துவம் ஆகிய அனைத்தும் அலசி ஆராயப்பட்டு, உங்கள் செய்தி சிங்கிள் காலமா, மூன்று காலமா என்பதை முடிவு செய்து வெளியிடுவார்கள். பணம் கொடுத்தாலும் சமயத்தில் செய்தி வராமல் போகலாம். அதற்கு அடுத்த செய்தியில் சரி செய்து விடுகிறோம் என்ற சமாதானம் கூறப்படும்.
தினமும் மாலையில் நான்கு அல்லது ஐந்து மணிக்கு, மூத்த பத்திரிக்கையாளர்களான பழம் பெருச்சாளிகள் ஒன்றாகக் கூடுவார்கள். அது பல்கலைக்கழகத்தின் செனட் கூட்டம் போன்றது. அது செனட். இது சின்டிகேட். அந்த சின்டிகேட் கூட்டத்தில், நாளை எதை செய்தியாக்கலாம் என்று விவாதிப்பார்கள். பெயருக்குதான் விவாதமே தவிர, சின்டிக்கேட்டின் தலைமைக் குழு உறுப்பினர்களாக இருக்கும் நால்வர் குழுதான் அனைத்தையும் தீர்மானிக்கும். இன்று நீதிபதி பால் வசந்தகுமார் நீதிமன்றத்தில், ஒரு காவல் ஆய்வாளரை நேரில் வரச்சொல்லி உத்தரவிட்டிருக்கிறார் என்று கூறுவார் ஒரு பத்திரிக்கையாளர். அது உண்மையிலேயே முக்கியச் செய்தி என்றால் பரவாயில்லை. அவ்வளவாக முக்கியத்துவம் இல்லாத செய்தியை அவர் முன்மொழிகிறார் என்றால், அந்த வழக்கைத் தொடுத்த வழக்கறிஞர் அவரை சரியாக கவனித்திருக்கிறார் என்று பொருள். சின்டிக்கேட்டுக்கு அந்த செய்தி ஏற்புடையதாக இருந்தால் எடுத்துக் கொள்வார்கள். இல்லையென்றால், அது ரிஜெக்டட். அடுத்த செய்தி என்று ஒவ்வொரு செய்தியாக ஆராய்ந்து, இன்று இந்த நான்கு செய்திகளை மட்டும் போடலாம் என்று முடிவெடுப்பார்கள். இந்த சின்டிக்கேட் கூட்டத்துக்கு முன்பாக எந்த செய்தி முக்கியமானதோ அந்த வழக்கு குறித்து நீதிபதி என்ன உத்தரவு பிறப்பித்துள்ளார் என்பதை குறிப்பெடுத்து வர, சின்டிக்கேட்டின் தலைமைக்குழு உறுப்பினர் நீதிபதிகளின் செயலர் அறைக்குச் செல்வார். அவர் சென்று குறிப்பெடுத்துக் கொண்டு சின்டிக்கேட் முன்னிலையில் அந்த உத்தரவை படிப்பார். அவர் படிப்பதை மற்ற சின்டிக்கேட் உறுப்பினர்கள் குறிப்பெடுத்துக் கொள்வார்கள். எந்த செய்தி அன்றைய ஒப்புதல் அளிக்கப்பட்ட பட்டியலில் உள்ளதோ, அந்த உத்தரவுகளை மட்டுமே படிப்பார். இது வழக்கு விசாரணை குறித்த நடைமுறை.
நீதிபதிகளின் தீர்ப்புகள் குறித்த நடைமுறை வேறு. தனது தீர்ப்பு ஊடகங்களில் வெளியாகி, நம்மை ஒரு அப்பாடக்கர் நீதிபதி என்று கூற வேண்டும் என்று சில நீதிபதிகள் விரும்புவார்கள். சில நீதிபதிகள், உண்மையிலேயே, பொது மக்களுக்கு இத்தீர்ப்பு தெரிய வேண்டும் என்று விரும்புவார்கள். அந்த இரண்டு பிரிவு நீதிபதிகளுமே, தங்களது தீர்ப்பை ஒரே ஒரு நகலெடுத்து, டார்க் ரூமுக்கு அனுப்புவார்கள். டார்க் ரூமுக்கு வரும் அத்தீர்ப்பு, மூத்த பத்திரிக்கையாளர்களிடம் மட்டுமே போய்ச் சேரும். அதுவும் சில நீதிபதிகள் இந்து செய்தியாளருக்கு என்று சொல்லியே கொடுத்தனுப்புவார்கள். இந்து நாளேட்டில் தீர்ப்பு குறித்து செய்தி வந்தால் அந்த நீதிபதியை 70 வயது வரை நீதிபதியாக இருக்க வைப்பார்கள் என்பது போல நடந்து கொள்வார்கள்.
நீங்கள் ஒரு பத்திரிக்கையாளராக இருந்து ஒரு முக்கியமான தீர்ப்போ, அல்லது வழக்கு குறித்தோ அந்த சின்டிக்கேட்டின் முடிவை மீறி செய்தி வெளியிட்டீர்கள் என்றால் தொலைந்தீர்கள். அடுத்த நாள் முதல் உங்களுக்கு எந்த செய்தியும் கிடைக்காமல் பார்த்துக் கொள்வார்கள். முக்கியமான செய்தியை உங்களுக்குத் தெரியாமல் மறைத்து, மற்ற ஊடகங்களில் வருமாறு செய்து விடுவார்கள். நீங்கள் பணியாற்றும் நிறுவனம் ஏன் இந்தச் செய்தி வரவில்லை என்று கிடுக்கிப்பிடி போடும். உங்கள் வேலையே ஆட்டம் கண்டு விடும். சின்டிக்கேட்டை மீறியவர்கள், மீண்டும் சின்டிக்கேட்டின் காலடியில் விழுந்து கதறினாலே ஒழிய அவருக்கு பாப விமாசனம் கிடையாது.
புதிதாக வரும் செய்தியாளர்கள் யாராவது, நான் நீதிபதியின் செயலர் அறைக்குச் சென்று தீர்ப்பின் நகலை பெற்று வருகிறேன் என்று முயற்சித்தாரென்றால், அவரை அழைத்து, “அந்த ஜட்ஜ் ரொம்ப மோசமானவருப்பா….. அவரு பி.ஏகிட்ட போயி ஆர்டர் காப்பி கேட்டன்னு தெரிஞ்சா கன்டெம்ப்ட் எடுத்துடுவாரு” என்று மிரட்டுவார்கள். ஓபன் கோர்டில் படிக்கப்பட்ட ஒரு தீர்ப்பின் நகலை, பத்திரிக்கையில் வெளியிடுவதற்காகக் கேட்டால் எப்படி கன்டெம்ப்ட் வரும் என்று ஒருவருக்குமே தோன்றாது.
இந்த சின்டிக்கேட்டை சரி வர கவனிக்காத வழக்கறிஞர்களின் வழக்கு குறித்த செய்தி வெளியிடுகையில், அந்த வழக்கறிஞரின் பெயர் எந்த இடத்திலும் வராதவாறு பார்த்துக் கொள்வார்கள். பெயர் வெளியிட வேண்டிய நெருக்கடி ஏற்பட்டாலும், உங்கள் பெயர் கணேஷ் குமார் என்றால், வழக்கறிஞர் சுரேஷ் குமார் வாதாடினார் என்று போடுவார்கள். வேறு வழியே இல்லாமல் நீங்கள் அடுத்த முறை சென்று கவனித்து விடுவீர்கள்.
வழக்கறிஞர்களுக்கும், இந்த சின்டிக்கேட்டுக்குமான உறவு அலாதியானது. சில வழக்கறிஞர்கள், பத்திரிக்கைகளில் தங்கள் பெயர் வர வேண்டும் என்பதற்காகவே வழக்கு போடுவார்கள். அவர்கள்தான் இந்த சின்டிக்கேட்டின் பிரத்யேக க்ளையன்டுகள். அது போன்ற விளம்பர வழக்கறிஞர்கள், இந்த சின்டிக்கேட்டின் தலைமைக் குழு உறுப்பினர்கள் மற்றும் இதர உறுப்பினர்களுக்கு மதிய உணவு வாங்கித் தருதல், மாலை நேரத்தில் சிற்றுண்டி வாங்கித் தருதல், புத்தாண்டுக்கு டைரி தருதல், தீபாவளிக்கு பட்டாசு மற்றும் இனிப்புகள் வாங்கித் தருதல் போன்று தொடர்ந்த கவனிப்புகளில் ஈடுபட்டு வருவார்கள். சில வழக்கறிஞர்கள், நீதிமன்றத்தில் செலவிடும் நேரத்தை விட, டார்க் ரூமில் செலவிடும் நேரமே அதிகம்.
எல்லோருக்கும் நீதிமன்றம் காலை 10.30க்கு தொடங்குகிறதென்றால் சின்டிக்கேட்டின் தலைமைக்குழு உறுப்பினர்கள் அலுவலகம் வரும் நேரமே மதியம் 12. மதியம் வந்த பிறகு, மதிய உணவு. 2.30க்கு மேல், டார்க் ரூமில் குளிரூட்டப்பட்ட வசதி இருப்பதால் கண்ணயரலாம். அந்த நேரத்திலும் கண்ணயர்வது பிடிக்காத சின்டிக்கேட் உறுப்பினர்கள், தங்கள் க்ளையன்டுகளான வழக்கறிஞர்களோடு உரையாடி, எந்த நீதிபதி செட்டிங்குக்கு ஒத்து வருவார், யார் எவ்வளவு வாங்குகிறார்கள், செட்டிங் செய்தால் நமக்கு என்ன கிடைக்கும் என்பது போன்ற அறிவியல்பூர்வமான விவாதங்களில் ஈடுபடுவார்கள்.
மாலை 4.30 அல்லது 5 மணிக்கு சின்டிக்கேட் கூட்டம் முடிந்ததும் கிளம்பிச் சென்று விடுவார்கள். சின்டிக்கேட்டின் தலைமைக் குழு உறுப்பினர்கள், சில நீதிபதிகளை மாலை 5 மணிக்கு மேல் சந்தித்து, இன்னும் எப்படி சிறப்பாக நீதிபரிபாலனம் செய்வது என்று விவாதிப்பார்கள். அப்படி விவாதிக்கையில், நீதிபதிகள் தங்களுக்கு பிடிக்காத நீதிபதிகளைப் பற்றி, நீதிபதிகளின் அரசியலையும் விவாதிப்பது வழக்கம். அந்த நீதிபதிகளுக்கு பிடிக்காத நீதிபதிகள் வழங்கும் முக்கியத் தீர்ப்புகள், சின்டிக்கேட்டின் கூட்டத்தில் ரிஜெக்ட் செய்யப்படும்.
சின்டிக்கேட்டின் தலைமைக் குழு உறுப்பினர்களை மலேசியா, சீனா போன்ற நாடுகளுக்கு சுற்றுப்பயணம் அழைத்துச் சென்றாலோ, அவர்கள் மனம் குளிரும்படி கவனித்தாலோ, யாரோ போட்ட வழக்கு குறித்து செய்தி வெளியிடுகையில் கூட, சட்ட நிபுணர் (Jurist) என்று அவர் கூறியதாக கருத்துக்களை சேர்ப்பார்கள்.
ஆங்கில ஊடகங்களில் தங்களின் தீர்ப்புகள் வந்தால்தான் நம்மை மதிப்பார்கள் என்று பல நீதிபதிகளே இந்த சின்டிக்கேட்டைக் கண்டால் அஞ்சுகிறார்கள் என்பதே உண்மை. சின்டிக்கேட் உறுப்பினர்கள், குறிப்பாக தலைமைக் குழு உறுப்பினர்களின் ஆதரவு பெறப்படாவிட்டால், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற முடியாது என்ற விஷயம், சின்டிக்கேட் எந்த அளவு சக்திவாய்ந்தது என்பதை உணர்த்தும். உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தேர்தலைத் தவிர்த்து, பெண் வழக்கறிஞர் சங்கத் தேர்தல் போன்ற மற்ற வழக்கறிஞர் சங்கத் தேர்தல்களில் போட்டியிட்டு ஜெயிக்க நினைப்பவர்களும், சின்டிக்கேட்டின் தயவோடுதான் அதைச் செய்ய முடியும்.
சவுக்கில் எழுதிய கட்டுரையில், உயர்நீதிமன்ற நீதிபதிகள் விதிகளைப் பின்பற்றாமல் எப்படி 55 அலுவலக உதவியாளர்களை நியமித்திருக்கிறார்கள் என்று விரிவாக எழுதப்பட்டிருந்தது. ஒரு சின்டிக்கேட்டின் தலைமைக் குழு உறுப்பினர், தன் உறவினர்கள் மூன்று பேரை தலைமை நீதிபதியிடம் பேசி அலுவலக உதவியாளர்களாக நியமித்திருக்கிறார் என்பது சின்டிக்கேட்டின் தலைமைக் குழு எத்தகைய செல்வாக்கு மிக்கது என்பதை உணர்த்தும். இந்த சின்டிக்கேட்டின் தலைமைக் குழு, கம்யூனிஸ்ட் கட்சிகளின் பொலிட் ப்யூரோவைப் போன்ற சக்தி படைத்தது.
தற்போது சின்டிக்கேட் உறுப்பினர்கள், சில நீதிபதிகளைச் சந்தித்து, வழக்கின் தீர்ப்புகள் குறித்தும் விவாதிக்கின்றனர் என்ற செய்தியும் உலவுகிறது.
எந்த நீதிமன்றத்தில் என்ன வழக்கு நடக்கிறது என்பதைப் பற்றி சற்றும் கவலைப்படாமல், சாவகாசமாக 12 மணிக்கு நீதிமன்றம் வந்து, யார் தங்களைத் தேடி வந்து வழக்கு நகல்களையும் தீர்ப்புகளையும் தருகிறார்களே, அதை மட்டுமே செய்தியாக வெளியிடும் இந்த பத்திரிக்கையாளர்கள் பத்திரிக்கையாளர்களா ?
ஒரு பத்திரிக்கையாளன் என்பவன், செய்தியைத் தேடி ஓட வேண்டும். செய்தி தன்னைத் தேடி வர வேண்டும் என்று காத்திருப்பவன், அரசு அலுவலக க்ளர்க். பத்திரிக்கையாளன் அல்ல. காலை 10.30 மணிக்குத் தொடங்கும் நீதிமன்றத்தில் எத்தனை செய்திகள் இருக்கும் ? பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய எத்தனை வழக்குகள் இருக்கும் ? அவற்றை பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டியது இந்தப் பத்திரிக்கையாளர்களின் கடமை இல்லையா ? அதற்காகத்தானே அவர்கள் பணியாற்றும் நிறுவனங்கள் அவர்களுக்கு ஊதியம் கொடுக்கின்றன ? ஒரு நீதிமன்றத்தில் நீதிபதி, ஒரு முக்கிய வழக்கின் விசாரணையின் போது என்ன பேசுகிறார் என்பதும் செய்தியல்லவா ? முக்கியமான வழக்குகளைத் தவிர்த்து, வேறு எந்த விசாரணைக்கும் நீதிமன்றத்துக்கு வராத செய்தியாளர்கள் என்ன செய்தியாளர்கள்… ? இவர்களையெல்லாம் மூன்றாவது தூண் என்று அழைக்கிறார்களே என்று வேதனையாக இருக்கிறது.
இந்த சின்டிக்கேட்டின் தலைமைக் குழு உறுப்பினர்கள், சின்டிக்கேட் உறுப்பினர்கள் ஆகிய அனைவரும் சவுக்கின் நண்பர்கள். இந்தக் கட்டுரை அவர்களை இழிவுபடுத்துவதற்காக அல்ல. அவர்களின் தவறை சுட்டிக் காட்டுவதற்காக. உங்களிடம் பணம் கொடுக்கும் வழக்கறிஞர்கள் அத்தனைபேரும், உங்களைப் பற்றி பின்னால் என்ன பேசுகிறார்கள் என்று உங்களுக்குத் தெரியாது. மூத்த வழக்கறிஞர்கள், உங்களிடம் பேசுவதையே தவிர்ப்பது ஏன் என்பதை யோசித்துப் பாருங்கள். இந்தக் கட்டுரைக்காக பல்வேறு வழக்கறிஞர்களிடம் பேசியபோது, அனைவரும் ஒட்டுமொத்தமாக இந்த சின்டிக்கேட்டின் உறுப்பினர்களை வெறுப்பதும், இவர்கள் நீதிமன்றத்தையே குட்டிச்சுவராக்குகிறார்கள் என்றும் கூறுகிறார்கள். ஒரு பத்திரிக்கையாளரைப் பற்றி வழக்கறிஞர் இப்படிப் பேசுகையில் உள்ளபடியே வருத்தம் ஏற்படுகிறது.
நண்பர்கள் என்ற காரணத்தாலேயே, சின்டிக்கேட்டின் தலைமைக் குழு உறுப்பினர்களின் பெயரையோ, சின்டிக்கேட்டின் உறுப்பினர்கள் பெயரையோ வெளியிடவில்லை. நண்பர்கள் தங்கள் தவறுகளைத் திருத்திக் கொள்வார்கள் என்று நம்புகிறோம். தவறுகள் தொடர்ந்தால், சம்பவங்கள் குறிப்பிடப்பட்டு, பெயர்களோடு அடுத்த கட்டுரை வெளிவரும் என்பதையும் அன்போடு தெரிவித்துக் கொள்கிறோம்.
உயர்நீதிமன்ற நீதிபதிகள், நீதிபதிகளின் உத்தரவுகளையும், தீர்ப்புகளையும் ஊடகங்களுக்கு அளிப்பதற்கு ஒரு முறையை உருவாக்க வேண்டும். இந்து நாளேட்டின் செய்தியாளர் கேட்டால் மட்டும்தான் உத்தரவு விபரங்களை வழங்கலாம் என்பது போன்ற நடைமுறைகளை மாற்ற வேண்டும். இந்து பத்திரிக்கை எவ்வளவு முக்கியமானதோ, தினத்தந்தியும் அதே அளவு முக்கியமானதே. நீதிபதிகள் எப்படி தங்கள் பணிகளைச் செய்கிறார்களோ, அதே போல ஒவ்வொரு பத்திரிக்கையாளரும் தங்கள் பணிகளைத்தான் செய்கிறார்கள் என்பதை நீதிபதிகள் உணர வேண்டும்.
அந்த அடிப்படையில், நீதிபதிகளின் காரியதரிசிகளில் ஒருவரை, மக்கள் தொடர்பு அலுவலர் (Public Relation Officer) போன்ற பதவியை உருவாக்கி அன்றாடம் பத்திரிக்கையாளர்களுக்கு தேவைப்படும் முக்கியத்துவம் வாய்ந்த உத்தரவுகளை, அந்த அதிகாரி மூலமாக நீதிபதிகளின் காரியதரிசிகளிடமிருந்து பெற்று வழங்க வழிவகை செய்யலாம். இந்த முறையால், உத்தரவுகளில் தவறு ஏற்படாமலும் தடுக்க முடியும். தீர்ப்புகளின் நகல்களையும் இதே முறையில் வழங்கலாம். குறைந்தபட்சம், தீர்ப்புகளை அன்று இரவே இணையத்தில் ஏற்றும் முறையையாவது கையாளலாம். உச்சநீதிமன்றத்திலேயே தீர்ப்புகள் அன்றைய இரவே இணையத்தில் ஏற்றப்படுகின்றன.
சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள டார்க் ரூம், ப்ரெஸ் ரூமாக மாற வேண்டும் என்பதே நமது விருப்பம். நம்பிக்கையோடு இருப்போம்.