உங்களுக்குத் தமிழ் தெரியாது. அப்புறம் ஏன் இப்படி ஒரு கடிதம்? வெட்டிவேலைதான். ஆங்கிலத்தில் எழுதினால் மட்டும் நீங்கள் படித்துவிடப்போகிறீர்களா, படித்தாலும் உணர்ந்து செயல்படப்போகிறீர்களா என்ன?. நேரம் கிடைக்கும்போது உங்களை வறுத்தெடுத்தால் ஒரு திருப்தி அவ்வளவுதான்.
(தமிழ் தெரிந்த உங்கள் கட்சிக்காரர்கள் கூட இதைப்படிக்கமாட்டார்கள் அவர்களுக்கு தத்தம் தரகுப்பணிக்கே நேரம் சரியாயிருக்குமே.)
முதலில் ‘பாரம்பரியம்’ மிக்க காங்கிரசின் துணைத்தலைவராக ‘தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு’ மனங்கனிந்த வாழ்த்துக்கள் தெரிவிக்கவேண்டியது மரபுதானென்றாலும் நீங்கள். என்ன சாதிக்கபோகிறீர்கள் என்று விளங்கவில்லை
சரி இதுவரை என்ன சாதித்தீர்கள்?:
இந்த இணையதளத்தைப் பாருங்கள். http://rahulgandhiachievements.com/
புதுடில்லி நாளேடு ஒன்றின் கருத்துக்கணிப்பு இப்படிப்போனது http://polldaddy.com/poll/6843586/?view=results&msg=voted
85 சதமானோர் உங்களால் ஒன்றும் ஆவப்போவதில்லை என்கின்றனர்.
அப்புறம் சர்வாதிகாரநாடான வடகொரியாவை ஒப்பிட்டு
உங்களை சாடி, நையாண்டி செய்து எத்தனை எத்தனை பதிவுகள் இணையத்தில் ! நீங்கள் எதுவும் உருப்படியாகச் செய்யப்போவதில்லை, என்று நினைக்கும் என்னைப் போன்றோர்கூட பரிதாபப்படும் அளவுக்கு உங்கள் மீது தாக்குதல்கள். ஆனால் இதற்காக யாரை நொந்துகொள்வது?
மஹாராஜா வீட்டுப்பிள்ளையாய் பிறப்பதில் சில லாபங்கள் இருக்கின்றன. சிக்கல்களும் இருக்கின்றன. சிக்கல்களெல்லாம் உங்களை ஒரேயடியாய் ஒன்று சேர்ந்து உங்களை மூச்சுத்திணறச் செய்யும் நேரத்தில் நீங்கள் துணைத்தலைவராக முடிவு செய்திருக்கிறீர்கள். 2009ல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தபோதே நீங்கள் பிரதமராகும் வாய்ப்பிருந்தது. என்ன காரணத்தாலோ தவறவிட்டுவிட்டீர்கள். மீண்டும் அப்படி ஒரு வாய்ப்பு கிடைக்குமா என்பது அய்யமே. அவ்வாறு நீங்கள் பிரதமராகாமல் இருப்பது நாட்டுக்கு நல்லதா என்பது யார் அடுத்த பிரதமர் என்பதைப் பொறுத்தே!
தொடக்கத்திலிருந்தே உங்கள் வாழ்க்கை உங்களுடையதாக இல்லை எனச் சொல்லுவார்கள். உங்கள் தந்தையும் அரசியலுக்கு வரவிரும்பவில்லைதான். அவர் உண்டு விமானங்கள் உண்டு உங்கள் தாயார் உண்டு என்றிருக்கத்தான் நினைத்தார். உங்கள் தடாலடி சித்தப்பாதான் இதற்கெல்லாம் சரி என்றிருந்தார். ஆனால் என்ன செய்ய ? அவர் விபத்தில் இறக்க, உங்கள் பாட்டியும் கொல்லப்பட, காங்கிரசிற்கு நேரு குடும்பத்தைவிட்டால் வேறு ஆளே இல்லை பரிதாபகரமான நிலையில், ராஜீவ் பிரதமரானார்.
கம்ப்யூட்டர் யுகத்தைத் துவங்கப்போகிறேன் என்று முழங்கியவர் பீரங்கி ஊழலில் சிக்கி, பதவியையும் இழந்து பின்னர் ஆட்சிக்கு வரக்கூடிய வாய்ப்பிருந்த நேரத்தில் எங்கள் தமிழ்நாட்டில் மனித வெடிகுண்டுக்கு இரையானார்.
உடன் பாட்மிண்டன் விளையாடியவர் பாட்டியை சுட்டுத் தள்ளுவதும், பிரச்சாரம் முடித்துவிட்டுத் திரும்பவேண்டிய தந்தை அங்கம் அங்கமாகப் பிய்ந்து போவதும் எல்லாமே கொடுமைதான். பெரும் அதிர்ச்சியாகத்தான் இருந்திருக்கும்.
அதனால்தானோ என்னவோ உங்களால் பள்ளியிலும் கல்லூரியிலும் சரிவரப் படிக்க இயலவில்லை, மற்றவர்களுடன் கலந்து பழகமுடியவில்லை. ஒரு கட்டத்தில் படிப்பிற்கே முற்றுப் புள்ளி வைக்க வேண்டியதாயிற்று.
உங்கள் பாட்டியார் கூட வீட்டில் கற்றவர்தான். ஆனால் அவர் வளர்ந்த சூழலே வேறு. பெற்றோரின் அருகாமையில்லாவிடினும், தாயை இளம் வயதிலேயே இழந்தாலும், அவர் பெரிய அளவில் அதிர்ச்சிகளுக்குள்ளானார் என்று கூறமுடியாது.
மாறாக உங்களைப் பொறுத்தவரை, முதலில் பாட்டி, பின்னர் தந்தை, படுகொலை செய்யப்படுகின்றனர்.
இன்னொரு புறம் இந்நாட்டுச் சூழலுக்கேற்பத் தன்னை மாற்றிக்கொள்வதில் படாதபாடு பட்ட தாய், பிறகு காதலிக்கும் பெண்ணைக் கூடத் திருமணம் செய்துகொள்ள முடியாத சூழல் – செய்தால் இத்தாலி நாட்டுப் பெண்ணின் மகன் தானே, வெளிநாட்டுப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டுவிட்டான் இவன் எப்படி இந்தியாவிற்கு விசுவாசமாயிருப்பான் என பரிவாரம் அலறும், எல்லாவற்றிற்கும் மேலாக எப்போதுமே பாதுகாப்பு அதிகாரிகள் புடைசூழ நடமாடவேண்டிய கட்டாயம். பாவம்தான் நீங்கள்.
விருப்பமில்லாமலேயே உங்கள் பெற்றோரிருவரும் அரசியலுக்குள் நுழைந்தனர். உங்களுக்கும் அரைமனதுதான். அதுதான் மிகப்பெரிய சிக்கல். ஆனால் இளைய ராஜா என்ற ஒளிவட்டம் வேண்டும், ஆள், அம்பு, சேனை என்று எல்லாவித வசதிகளும் ஆர்ப்பாட்டங்களும் வேண்டுமென்றால் அதற்கு நீங்கள் தயார்படுத்திக் கொள்ளவேண்டும். செய்யத் தவறிவிட்டீர்கள்
2004லிருந்தே நீங்கள் ஒரு முக்கிய புள்ளியாகப் பார்க்கப்பட்டீர்கள். 2009ல் காங்கிரஸ் உங்களுக்கே அடுத்து முடி சூட்டவிருக்கிறது என்பது தெளிவாகியது. இருந்தும் பிரதமராக மறுத்தீர்கள்,
அரசிலும் எவ்விதப் பொறுப்பும் ஏற்கவில்லை. ஏதோ வேண்டாவெறுப்பாக கட்சியின் பொதுச் செயலாளரானீர்கள். குறைந்த பட்சம் கட்சிக்குப் புத்துயிரூட்ட முயன்றீர்களா என்றால் இல்லை. ஏதோ இளைஞர் காங்கிரசை மாற்றிக்காட்டுகிறேன் என சூளுரைத்து களத்தில் இறங்கிய உங்களால் என்ன சாதிக்கமுடிந்தது. நீங்களே தேர்ந்தெடுக்கப்பட்டவரல்ல. போகட்டும் மற்ற மட்டங்களில் எப்படித் தேர்தல்கள் நடந்தன, எம்மாதிரியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்?
எம் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை வாசன் அணிக்கும் சிதம்பரம் அணிக்குமிடையே குடுமிப்பிடி சண்டை. லட்சக்கணக்கில் செலவழித்தனர். நீங்களெல்லாம் ஜெயித்திருப்பது என்னால்தான் ஜாக்கிரதை என்று கார்த்தி தன் ஆதரவில் வென்றவர்களை மிரட்டினார். இவர்கள் எப்படி புதிய காங்கிரசிற்கு வித்திடமுடியும்
(நீங்கள் இங்கே செய்த ஒரே நல்ல செயல் கார்த்தி போன்ற படு அராத்துப் பேர்வழிகளை உங்கள் பிரதிநிதியாக அறிவிக்காததுதான்)
மூன்றாண்டுகளுக்கு முன் சென்னையில் ஒரு கலந்துரையாடலின்போது உங்களிடம் கேட்கப்பட்டது: ”1985ல் அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில் உங்கள் தந்தையார் கட்சியைத் தூய்மைப் படுத்தப்போவதாகவும், அரசியல் தரகர்கள் அகற்றப்படப்போவதாகவும் சூளுரைத்தார், ஆனால் அவர் இறுதியில் அத்தகைய தரகர்களுக்கு பலியானார். நீங்களும் இப்போது கட்சிக்கு மக்களுக்குமிடையேயான இடைவெளியைக் குறைக்கப்போவதாகக் கூறுகிறீர்கள், மக்கள் விரும்புவதை நிறைவேற்றும் ஒரு கருவியாக மாற்றப்போவதாகக் கூறுகிறீர்கள். உங்கள் தந்தை தோல்விகண்ட ஒரு விஷயத்தில் வெல்லமுடியும் என்று எப்படி எதிர்பார்க்கிறீர்கள் ?”
அதற்கு ஹா ஹூ என்று நீங்கள் குதிக்கவில்லை என்பது உண்மை. ஆனால் உங்கள் பதில் தெளிவாக இல்லை என்பதும் உண்மை. தந்தை தோல்வியடைந்துவிட்டதாகக் கூறமுடியாது எனப் பூசி மெழுகினீர்கள். கட்சி எப்படி இயங்குகிறதென்பதை சரிவர நீங்கள் உணராத நிலையிலேயே மேலும் மேலும் பொறுப்புக்கள் உங்கள் மீது குவிகின்றன.
உட்கட்சித் தேர்தல் நடத்தும்போது எந்த அளவு உண்மைத் தொண்டர்கள் இருக்கின்றனர், அவர்கள் என்ன நோக்கில் கட்சிக்கு வருகிறார்கள், தன்னெழுச்சியாக வருகின்றனரா இல்லை எல்லாமே ஆட்கடத்தல் வேலையா என்பதைப்பற்றியெல்லாம் நீங்கள் சரிவர விவாதித்ததாகத் தெரியவில்லை.
உங்கள் புரிதலில் இருக்கும் கோளாறின் ஆபத்துக்களை உத்திரபிரதேசத்தில் கண்டீர்களே
அங்கே உங்கள் உழைப்பிற்கு ஓரளவு பலன் இருந்திருக்கிறது என்பது உண்மையே. ஆனால் தொடர்ந்து செல்வாக்கைத் தக்கவைத்துக்கொள்ள முடியவில்லையே.
மாயாவதிக்கெதிரான உங்கள் போர்க்குரலால் மிக அதிகப் பயன்பெற்றது முலாயம்சிங் குடும்பம்தான். அதற்கு மிக முக்கியக் காரணம் அவர்களுக்கு கட்சி அமைப்பு வலுவாக இருந்தது. உங்களுக்கு ஓரளவு கவர்ச்சியிருந்தும் அதை சரியாகப் பயன்படுத்திக்கொள்ள தொண்டர்களில்லை என்பதை நீங்கள் எக்கட்டத்திலும் உணரவேயில்லை.
மாநில மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் தொண்டர்களை மதிப்பதேயில்லை என்று பகிரங்கமாகவே பலர் வருந்தினர், விளைவு படு தோல்வி.
இன்னமுமே நீங்கள் என்ன செய்கிறீர்கள், செய்யவிரும்புகிறீர்கள் என்று புரியவில்லை. கடந்த ஐந்தாண்டுகளில் மக்களை பாதிக்கக்கூடிய முடிவுகளில் நிகழ்வுகளில் தலையிட்டு உங்கள் நிலைப்பாடு இது என்று தெளிவாகச் சொல்ல முன்வரவே இல்லை. ஒரே முறை லோக்பால் விவாதத்தின்போதுதான் மற்றபடி மௌனமே.
2009ன் முற்பகுதியில் இலங்கையில் உள்நாட்டுப்போர் உச்சகட்டத்தை எட்டியபோது மஹிந்த அரசு விடுதலைப்புலிகளுடன் மோதுவதாகக் கூறிக்கொண்டு அப்பாவித் தமிழர்களையும் கொன்று குவித்துக்கொண்டிருந்த நேரத்தில் பல முறை உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது, கொடுமையை நிறுத்துங்கள், உங்கள் சகோதரி நளினியை சிறையில் சந்திக்கமுடிகிறது, அவரது மரணதண்டனை ஆயுள்தண்டனையாக குறைக்கப்படலாம் என உங்கள் தாயே பரிந்துரை செய்கிறார். அதைப்போலவே நீங்களும் பெருந்தன்மையுடன் செயல்படவேண்டும். விடுதலைப்புலிகள் மீது உங்களுக்கும் ஆயிரம் விமர்சனங்கள் இருக்கலாம் ஆனால் பொதுமக்கள் மடிவதைப் பார்த்துக்கொண்டிருக்கக்கூடாது என மன்றாடப்பட்டது. ஆனால் நீங்கள் செவி மடுக்கவே இல்லையே. விளைவு காங்கிரஸ் தமிழர்களின் மோசமான எதிரி என்ற உணர்வு தமிழர்களிடையே வேரூன்றி விட்டது. திமுககூட தப்பிவிட்டது, நீங்கள் சிக்கினீர்கள்.
தமிழக மீனவர்கள் தொடர்ந்து சிங்களக் கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்படும் விஷயம் பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்டபோதும் கூட, நீங்கள் உங்கள் மவுனத்தைக் கலைக்கவேயில்லை. நாளை இந்தியாவின் பிரதமராகும் கனவில் இருக்கும் நபர் இப்படி மவுனமாக இருக்கக் கூடாது.
மறுபடி மறுபடி நீங்கள் உங்கள் கட்சியையும் சரிவர புரிந்துகொள்ளவில்லை இந்த சமூகத்தையும்தான் என்பதே புலனாகிறது.
தவிரவும் ஸ்பெக்ட்ரத்திலிருந்து, நிலக்கரி சுரங்கப் பிரச்சினை உங்கள் அன்பு சகோதரியின் கணவர் மாட்டிய டிஎல்எஃப் விவகாரம் இப்படியாக பல்வேறு பெரிய சிறிய ஊழல்களில் உங்களுக்கும் பங்கில்லை என்று சொல்லிவிடமுடியாது. இந்த ஊழல்கள் நடைபெற்ற போதும், அவை பொதுவெளியில் வெளிவந்தபோதும் அதற்கு உரிய விசாரணை நடத்த உத்தரவிடுவதற்காகவே, பாராளுமன்றத்தை பல நாட்கள் நடத்த விடாமல் ஸ்தம்பிக்க வைக்க வேண்டியிருந்தது. ஆனால், நீங்கள் இவையெல்லாம் நடைபெற்ற போது மௌனகுருவாக இருந்தீர்களே ஒழிய, தற்போது ஏற்றிருக்கும் துணைத் தலைவர் பதவிக்கு தகுதியான நபராக அப்போது நடந்து கொள்ளவில்லை.
இவ்வாறாக பலவழிகளிலும் உங்கள் பிம்பங்கள் உடைந்து சுக்குநூறாகியிருக்கும் வேளையில், மன்மோகன் சிங்கின் பொருளாதாரக் கொள்கைகளினால் ஏதோ ஒருவகையில் பாதிக்கப்பட்டு மக்கள் மனம் கொதித்திருக்கும் நிலையில் தனது நிர்வாகத் திறமையினால் பலரின் மனம் கவர்ந்திருக்கும் நரேந்திர மோடி பாரதீய ஜனதாவின் பிரச்சாரத்திற்குத் தலைமை தாங்க இருக்கும் நிலையில் நீங்கள் காங்கிரசை வழிநடத்த முன் வருகிறீர்கள்.
ஆழ்ந்த அனுதாபங்கள். ஆனால் நீங்கள் தோல்வியுற்று மாற்று தலைமையினை காங்கிரஸ் தேடுமானால் அது நாட்டிற்கு நல்லதே. வாரிசு அரசியல் முடிவுக்கு வரலாம்.
என் போன்றோரின் ஆரூடங்களைப் பொய்ப்பித்து உங்கள் கட்சிக்கும் நாட்டிற்கும் நீங்கள் புதிய வழிகாட்டிவிட்டால், தனியாக சவுக்கு என் தலைமையிலேயே பாராட்டு விழா நடத்தும்.
இப்படிக்கு
இந்திய ஜனநாயகத்தால் ஏமாற்றப்பட்ட பல கோடி மக்களில்
ஒருவன்